‘இதழொன்று விண்மீன்போல் இருளை ஊடுருவிச் செல்லலாம்’
இன்று, பரிசுத்த வேதாகமங்களின் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் சர்வதேச அளவில் கிடைக்கின்றன. இருப்பினும், பைபிள்மீதான போரானது அடிக்கடி ஜீவன் அல்லது மரணத்தைக் குறிப்பதாக இருந்திருக்கிறது.
பதினைந்தாம் நூற்றாண்டு பைபிள்கள் (Fifteenth Century Bibles) என்ற புத்தகத்தில் வென்டல் ப்ரைம் இவ்வாறு எழுதினார்: “அச்சடிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பெய்னில் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை முற்றிலும் வெற்றிகரமான செயலில் இருந்தது. இதனால் தண்டிக்கப்பட்ட அந்நாட்டில் இருந்த 3,42,000 ஆட்களில், 32,000 பேர் உயிரோடே கொளுத்தப்பட்டனர். அவர்களுக்கு உயிர்தியாகத்தின் ஜூவாலைகளைக் கொண்டுவந்தது பைபிளே. இந்த அழிவுக்குரிய ஏதுவானது வடக்கு மற்றும் தெற்கு இத்தாலியிலும் அதேபோல பயங்கரமானதாக இருந்தது. கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையால் உதவியளிக்கப்பட்ட தலைமை பேராயர்கள், பைபிள்களுக்கும் அவற்றை வாசிப்பவர்களுக்கும் பட்சிக்கிற அக்கினியாக இருந்தனர். நீரோ, கிறிஸ்தவர்கள் சிலரை கோணிப்பைகளில் வைத்து தைத்து, நிலக்கீலால் மூடி, நெருப்பை பற்றவைத்து அவனுடைய சிற்றின்ப கேளிக்கை காட்சிக்கு ஒளிவிடும் மெழுகுவர்த்திகளாக பயன்படுத்துவதன்மூலம் இந்த உலகத்தில் அவர்களை ஒளிகளாகப் பிரகாசிக்கச் செய்தான். ஆனால் ஐரோப்பிய நகரங்களின் தெருக்கள் பைபிளை அழிக்கும் பெருந்தீயால் கொழுந்துவிட்டெரிந்தன. வறுமையாக்கப்படக்கூடிய, ஆடையை உரிக்கப்படக்கூடிய, சித்திரவதை செய்யப்படக்கூடிய, முடமாக்கப்படக்கூடிய, மற்றும் சமூகத்தைவிட்டு புறம்பாக்கப்பட்டவர்களாக நடத்தப்படக்கூடிய வாசகர்களைப்போல பைபிள்கள் இல்லை. தப்பிப்பிழைத்திருக்கிற இதழொன்றுகூட விண்மீன்போல் இருளின் அடர்த்தியை ஊடுருவிச் செல்லலாம்.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
இங்கு நகலெடுத்துக் காட்டப்பட்டுள்ள பைபிள் இதழைக் குறித்ததில் நூலாசிரியர் ப்ரைம் என்ன விவரிக்கிறாரோ அது உண்மையிலேயே சம்பவித்தது. அது பின்னணியுரை பக்கமாகும், அதாவது மொழிபெயர்ப்பாளரை அடையாளங்காட்டுகிற எழுத்துப்பொறிப்பைக்கொண்ட புத்தகத்தின் கடைசி பக்கமாகும். மேற்புறத்திலுள்ள இணையான இரண்டு பத்திகளில் திருவெளிப்பாடு, அல்லது வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முடிவுரை வசனங்கள் இருக்கின்றன.
இப்புத்தகத்தைக் குறித்து, பைபிளைப்பற்றி கேம்பிரிட்ஜ் வரலாறு (The Cambridge History of the Bible) இவ்வாறு குறிப்பிடுகிறது: “போனீஃபாசையோ ஃபெரர் என்பவருடைய கட்டலன் பைபிள் மொழிபெயர்ப்பு 1478-ல் வாலென்சியாவில் அச்சிடப்பட்டது; கிடைக்கக்கூடிய அனைத்து பிரதிகளும் 1500-க்கு முன்பாகவே கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையின்மூலம் அழிக்கப்பட்டுவிட்டன, ஆனால் அமெரிக்க நூலகத்தின் ஹிஸ்பானிய சொஸையிட்டியில் ஒரு தனி இதழ் தப்பிப்பிழைத்திருக்கிறது.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
வென்டல் ப்ரைம் மேலும் குறிப்பிட்டதாவது: “அச்சுறுத்தப்பட்ட குருமார்களுக்கு பைபிள்களை எரிப்பதே ஏற்கத்தக்கதாக இருந்தது. எரிப்பதற்கு அதிக பைபிள்கள் இருந்திருந்தால், இந்தப் புனிதத் தீ அடிக்கடியும் பிரகாசமாயும் இருந்திருக்கும். அநேக இடங்களில் பைபிளை அழிக்கும் எந்தவொரு பெருந்தீயும் இல்லை, ஏனென்றால் எரிப்பதற்கு எந்த பைபிள்களும் இல்லாதபடிக்கு அதிகாரம் அவ்வளவு விழிப்புடனிருந்தது.” பொதுமக்களுக்கான பைபிள்களை முற்றிலும் அழிப்பதற்கான இத்தகைய தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும், அநேக பிரதிகள் அழிவைத் தப்பிப்பிழைத்தன. ப்ரைம் மேலுமாக கூறியதாவது: “நாடுகடத்தப்பட்டவர்களால் பைபிள்கள் கொண்டுசெல்லப்பட்டதன்மூலம் அல்லது துயரமான, ஆபத்தான காலங்களில் விலையேறப்பெற்ற மணிக்கற்களைப்போலவும் உலோகங்களைப்போலவும் மறைக்கப்படுவதன்மூலம் பாதுகாக்கப்பட்டன.”
கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா எழுதினார்: “மாம்சமெல்லாம் புல் . . . புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.” (ஏசாயா 40:6, 8) நூற்றாண்டுகளினூடே, பைபிளை நேசிக்கிற திரளான மக்களும் தைரியமுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் கடவுளுடைய வார்த்தையின் நிமித்தமாக மிகவும் துணிந்து செயல்பட்டு, பேரளவில் துன்பம் அனுபவித்திருக்கிறார்கள். என்றபோதிலும், மனித முயற்சிகள் மாத்திரமே அதனுடைய பாதுகாப்பை ஒருபோதும் உறுதிப்படுத்தியிருக்க முடியாது. இப்படிக் காத்து வைத்ததற்காக, பைபிளின் ஆசிரியராகிய யெகோவாவுக்கு நாம் நன்றிசெலுத்துகிறோம்.