மகா பாபிலோன் சாட்சியங்களுடன் குற்றஞ்சாட்டப்படுகிறது
உலகம் முழுவதிலும் 1988–89-ல் தொடர்ச்சியாக நடைபெற்ற மாநாடுகளில் யெகோவாவின் சாட்சிகள், விசேஷமாக கிறிஸ்தவமண்டலத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கும் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் நடத்தையை அருவருப்பதை வெளியிடும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். இது அளவுக்கு மிஞ்சிய கடுமையான ஒரு நிலைநிற்கை அல்லவா என்பதாக உண்மை மனதுள்ள சில ஆட்கள் கேட்கக்கூடும். இல்லை, நிச்சயமாக இல்லை! பூர்வ இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் அவர்களுடைய நாளில் விக்கிரகாராதனையை எவ்வளவு தைரியமாகக் கண்டனம் செய்தார்கள் என்பதையும், இயேசு அவருடைய நாளிலிருந்த மதசம்பந்தமான மாய்மாலத்தை எத்தனைக் கடுமையான வார்த்தைகளால் அம்பலப்படுத்தினார் என்பதையும் நாம் பார்க்கையில், யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், நம்முடைய நிலைநிற்கை முற்றிலும் நியாயமானதே என்று நம்புகிறோம். இது கடவுளால் கட்டளையிடப்பட்டுமிருக்கிறது.—ஏசாயா 24:1–6; எரேமியா 7:16–20; மத்தேயு 23:9–13, 27, 28, 37–39.
ஆகவே எதன் அடிப்படையில் மகா பாபிலோனின் நடத்தை நமக்கு அருவருப்பாயிருக்கிறது? சர்வலோகத்தின் மெய்யான பேரரசரும் ஆண்டவருமாகிய யெகோவாவை மதங்கள் கனம் பண்ண தவறியிருப்பதற்கு நமக்கு என்ன சரித்திர அத்தாட்சி இருக்கிறது?
நவீன பாபிலோன் அந்த நாமத்தை இழிவாகக் கருதுகிறது
சர்வலோகத்தின் பேரரசரும் ஆண்டவருமானவர் பெயரில்லாதவர் அல்ல. இவர் தம்மை யெகோவா என்பதாக பைபிளில் 7,000 தடவைகள் அடையாளங் காட்டியிருக்கிறார். தம்முடைய பெயர் இன்றியமையாத முக்கியத்துவத்துக்கு உரியதாக அவர் கருதுகிறார். பத்துக் கற்பனைகளில் மூன்றாவது சொல்வதாவது: “உன் கடவுளாகிய யெகோவாவின் திருநாமத்தை வீணிலே வழங்காதே; தமது நாமத்தை வீணிலே வழங்குகிறவனை யெகோவா தண்டியாமல் விடார்.” மேலும், இயேசு கர்த்தருடைய ஜெபத்தில் “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்பதாகச் சொல்லி தம்முடைய பிதாவின் நாமத்தை உயர்த்திக் காண்பித்தார்.—யாத்திராகமம் 20:7, தி.மொ.; மத்தேயு 6:9.
கடவுளுடைய நாமத்தை கனப்படுத்துவதில் கிறிஸ்தவமண்டலத்தின் பதிவு இருண்டதாக உள்ளது. 1611-ன் ஆங்கில கிங் ஜேம்ஸ் பைபிளும்கூட தனியாகவும் கூட்டாகவும் ஏழு தடவைகள் மாத்திரமே யெகோவாவின் நாமத்தை பயன்படுத்துகிறது.a மற்ற மொழிபெயர்ப்புகள் அந்த நாமத்தை முழுவதுமாக நீக்கிவிட்டிருக்கின்றன. பெரும்பாலான மதங்கள் அதைக் கனம் பண்ண தவறிவிட்டிருக்கின்றன. மாறாக அவர்களுடைய “பரிசுத்த” திரித்துவத்தையும் சில சந்தர்ப்பங்களில் கடவுளின் தாய் என்பதாக அழைக்கப்படும் மரியாளையும் பைபிளின் கடவுளுக்கு மேலாகவும் உயர்த்திவிட்டிருக்கிறார்கள். மதிப்புமிக்க யெகோவாவின் பெயர் வழங்கப்படாது படிப்படியாக மறைந்துவிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது.b
இஸ்லாம் மதம், அவர்களுடைய பரிசுத்த புத்தகமாகிய குரானின்படி அல்லா என்று அவர்கள் அழைக்கும் ஒரு கடவுளை ஒப்புக்கொள்வது பாராட்டுக்குரியதாகும். என்றபோதிலும் குரான் எழுதப்படுவதற்குக் குறைந்தபட்சம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்துவந்த பைபிளில் முதல் முதலாக வெளிப்படுத்தப்பட்டபடி யெகோவா என்ற அவருடைய நாமத்தை அவர்கள் பயன்படுத்துவது கிடையாது. இந்துக்கள் கோடிக்கணக்கான கடவுட்களையும் பெண் தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். ஆனால் அதில் யெகோவா இடம் பெறுவது இல்லை.
கடவுளுடைய நாமத்தின் சம்பந்தமாக குறிப்பிடத்தக்க வகையில் குற்றவாளியாக இருப்பது யூதேய மதமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யூதர்கள் கடவுளின் நாமந்தரித்த மக்களாகத் தங்களை உரிமைப் பாராட்டி வந்திருந்தும், அவர்களின் பாரம்பரியத்தின் காரணமாக கடவுளுடைய மெய்யான பெயர் முற்றிலுமாக வழக்கற்றுப் போகச் செய்திருக்கிறார்கள்.
ஆகவே பேரரசரும் ஆண்டவருமாகிய யெகோவாவின் சாட்சிகளாக நாம் மகா பாபிலோனின் பங்கில் கடவுளுடைய பரிசுத்த நாமம் அசட்டை செய்யப்பட்டிருப்பதைக் குறித்து நம்முடைய வெறுப்பை வெளியிட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பாபிலோனிய போதகங்களை நாம் ஏன் வெறுத்து ஒதுக்குகிறோம்
மனிதனுக்கு அழியாத ஓர் ஆத்துமா இருக்கிறது என்ற பாபிலோனிய போதகத்தின் அடிப்படையில் இலட்சக்கணக்கான ஆட்கள் ஏமாற்றப்பட்டு பயத்தில் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். பூர்வ காலங்களிலிருந்தே மரணத்துக்குப்பின் நரக அக்கினியில் ஆத்துமா வாதிக்கப்படக்கூடிய சாத்தியத்தின் பயத்தைப் பொய் மதம் தன்னலத்துக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறது. உத்தரிக்கும் ஸ்தலத்தின் அக்கினியில் தற்காலிக வேதனை என்பது அந்தப் போதனை அதிக தந்திரமாக மேம்படுத்தப்பட்டிருப்பதன் விளைவாகும். உண்மை மனதுள்ள ஆட்கள் மரித்தவரின் பூசைக்காகப் பணம் செலுத்த வேண்டும். ஆனால் எப்போது இது செலுத்தப்படுவது அவசியமற்றதாகும் என்பது அவர்களுக்கே ஒருபோதும் தெரியாது! தூஷணமான இந்த கோட்பாடுகளுக்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை.—எரேமியா 7:31-ஐ ஒப்பிடவும்.
உண்மையில் மனிதன் ஓர் உயிருள்ள சாகக்கூடிய ஆத்துமா என்பதாக பைபிள் கற்பிக்கிறது. தன்னுடைய கீழ்ப்படியாமைக்காக ஆதாம் நரக அக்கினிக்கோ அல்லது உத்தரிக்கும் ஸ்தலத்துக்கோ அல்ல, ஆனால் மரண தீர்ப்பே அளிக்கப்பட்டான். எளிதாகச் சொல்லவேண்டுமானால், “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23; ஆதியாகமம் 2:7,17; 3:19) மரித்தோருக்கு வேத ஆதாரமுள்ள நம்பிக்கை அழியாத ஆத்துமாவில் அல்ல, ஆனால் மாறாக, பரதீஸிய பூமியில் பரிபூரண வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட போவதாகக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியையே சார்ந்திருக்கிறது.—யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:1–4.
இன்னுமொரு பாபிலோனிய போதகமானது “பரிசுத்த” திரித்துவமாகும். ஒரே கடவுளில் மூன்று ஆட்கள் போதகமானது பூர்வ எபிரெயர்களின் விசுவாசத்தின் பாகமாக ஒருபோதும் இருந்தது கிடையாது. (உபாகமம் 5:6, 7; 6:4) ஒரு யூதனாக இருந்த இயேசுதாமேயும் தாம் சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று நிச்சயமாக நம்பவோ அல்லது கற்பிக்கவோ இல்லை. பாபிலோனிய கோட்பாடு அல்லது கொள்கை கற்பிக்கிறபடி திரித்துவத்தின் பாகமாக தாம் இருப்பதாக அவர் உரிமைப் பாராட்டவில்லை.—மாற்கு 12:29; 13:32; யோவான் 5:19, 30; 14:28; 20:17.
ஆகவே, உலகின் பொய் மதங்களில் கற்பிக்கப்படுகிறபடி பாபிலோனின் தூஷணமான கோட்பாடுகளை நாம் ஏற்பதில்லை. அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக மாத்திரமல்ல, முழு மனிதவர்க்க உலகத்தினுடையதற்காகவும் “கிருபாதாரபலியாக” ஆன அவருடைய குமாரன் மூலமாக நாம் ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவைத் தொழுது கொள்கிறோம்.—1 யோவான் 2:2.
கடவுள் எதிர்ப்புத் தத்துவங்களை நாம் ஏன் மறுக்கிறோம்
கிறிஸ்தவமண்டல போப்புகளும் குருமாரும் நாத்தீக எழுச்சியைக் குறித்து குறைப்பட்டுக் கொண்டு, அநேகர் வலதுசாரி அரசியலைத் தாங்கள் ஆதரிப்பதை நியாயமென காட்ட பயன்படுத்துகின்றனர். என்றபோதிலும் கேட்கப்படவேண்டிய கேள்வி: குறிப்பாகக் கடந்த நூற்றாண்டில் நாத்தீக எழுச்சிக்கு ஊக்கமளித்து, அநீதிகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் சகித்துக் கொண்டது யார்? இது கிறிஸ்தவமண்டலத்தின் ஆதிக்கம் இருந்த இடங்களில் குறிப்பிடத்தக்க வகையில் சம்பவித்தது. உதாரணமாக ரஷ்ய ஆத்தடாக்ஸ் சர்ச், மக்களைக் கொடூரமாக ஒடுக்கிய ரஷ்ய மன்னர்களோடு உடன்பாடு செய்துகொண்டது. கடவுளுடைய பிரதிநிதிகளாகத் தங்களை அளித்தவர்களின் பங்கில் மெய்யான கிறிஸ்தவ மதிப்பீடுகள் குறைப்பட்டது, நாத்திகம் வளருவதற்கு வாய்ப்பளிக்கும் நிலைமைகளுக்கு உதவி செய்தது.
கிறிஸ்தவமண்டல மதங்கள் சிருஷ்டிகரை கனவீனப்படுத்தும் பரிணாமப் போதகத்தையும்கூட ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான உயிரினங்களின் சிக்கலான தன்மைக்கும், வேறுபாடுகளுக்கும் இயற்கை சக்திகளைக் காரணம் காட்டுகின்றன. உண்மையில் இந்த வேறுபாடுகள் தொடர்ச்சியான பல நன்மைக்கேதுவான குருட்டு வெற்றிகளால் ஏற்பட்டதாகச் சொல்கின்றன. இப்படிப்பட்ட ஒரு தத்துவம் கடவுளைத் தேவையற்றவராகவும், மனிதனை எவருக்கும் பதில் சொல்லும் கடமையில்லாதவனாகவும் செய்கிறது. ஒழுக்கம் தனிப்பட்ட தெரிவின் ஒரு விஷயமாகிவிடுகிறது. (சங்கீதம் 14:1) மதப்பற்றுள்ளதாக உரிமைப் பாராட்டும் தேசங்களில் ஆண்டுதோறும், கருச்சிதைவுகளின் எண்ணிக்கை இப்பொழுது இலட்சக்கணக்கில் செல்வது இதனுடைய ஒரு விளைவாகும்!
இந்தக் கடவுள் எதிர்ப்புத் தத்துவங்களையும் பழக்க வழக்கங்களையும் நாம் ஏற்க மறுப்போம். “வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவருமான” யெகோவாவை வணங்குகிறோம்.—வெளிப்படுத்துதல் 10:6; 19:6.
மகா பாபிலோனின் கனியை நாம் ஏன் அருவருக்கிறோம்
வெளிப்படுத்துதல் 2 மற்றும் 3 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏழு சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்பின் செய்திகளுக்கு செவிக்கொடுக்க கிறிஸ்தவமண்டலம் தவறிவிட்டிருக்கிறது. இவை பிரிவினைகளுக்கும் விக்கிரகாராதனைக்கும் வேசித்தனப் பழக்கங்களுக்கும், வெதுவெதுப்பான நிலைக்கும் கவனக்குறைவுக்கும் எதிராக அறிவுரை வழங்குகின்றன.
எந்த வணக்கத்துக்குரிய இடத்தைச் சென்று பார்வையிட்டாலும், மதப்பற்றுள்ள அநேகர் எவ்விதமாக சிருஷ்டிகளை சிருஷ்டிகருக்கு மேலாக உயர்த்தியிருக்கின்றார்கள் என்பது வெளிப்படும். எவ்விதமாக? அவர்களுடைய விக்கிரக மற்றும் உருவ ஆராதனையினாலும் “புனிதர்கள்” மரியாள் சிலை மற்றும் சிலுவைகளுக்குச் செலுத்தப்படும் வணக்கத்தினாலும்.—சங்கீதம் 115:2–8; 1 கொரிந்தியர் 5:7; 1 யோவான் 5:21-ஐ ஒப்பிடவும்.
அவர்களுடைய விஷயத்தில் பவுலின் வார்த்தைகள் நிறைவேற்றம் காண்கின்றன: “அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும் . . . பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.”—ரோமர் 1:21–23.
பாபிலோனின் ஒழுக்கயீனத்தை நாம் ஏன் கண்டனம் செய்கிறோம்
கடந்த இருபது ஆண்டுகளாக ஆண்புணர்ச்சி மாற்று வாழ்க்கைப் பாணியாக அங்கீகரிக்கப்பட்டு அல்லது பொறுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான ஆண்புணர்ச்சிக்காரர்கள் “இரகசிய மறைவிடத்திலிருந்து வெளியேறி” தெருக்களில் இப்பொழுது உலா வந்து தங்கள் “ஒழுக்கக்கேடான செருக்கைக்” குறித்து வீம்படித்துவருகிறார்கள். அவர்களுடைய ஆண்புணர்ச்சியைக் கடவுள் எவ்விதமாக நோக்குகிறார்?
சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக பைபிள் தெளிவாகச் சொன்னதாவது: “பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறது போல ஆணோடே சம்யோகம் பண்ண வேண்டாம்; அது அருவருப்பானது.” (லேவியராகமம் 18:22) சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக, கடவுளின் தராதரங்கள் மாறவில்லை என்பதைப் பவுல் பின்வருமாறு எழுதுகையில் காண்பித்தான்: “இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர் மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.”—ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 6:9, 10; 1 தீமோத்தேயு 1:10.
என்றபோதிலும் கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் அநேகர் ஆண்புணர்ச்சிப் பழக்கமுள்ளவர்களாயிருப்பதால், உறுப்பினரின் ஆதரவைக் கோரி, முக்கிய மதங்கள் பலவற்றிலும் அவர்களால் வாக்குச் சேர்க்க முடிந்திருக்கிறது. அவர்களின் வாழ்க்கைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மத ஊழியரின் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருக்கிறது. ஓர் உதாரணம் கனடாவின் மிகப் பெரிய புராட்டஸ்டன்டு மதப்பிரிவாக இருக்கும் கானடாவின் யூனைடெட் சர்ச்சில் 1988, ஆகஸ்ட் 24-ம் தேதி, 205 தலைவர்களில் 160 பேர் ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கு மத ஊழியத்தில் இடங்கொடுப்பதை ஆதரித்து வாக்களித்தனர்.
பாபிலோனின் ஆவிக்குரிய வேசித்தனத்தை நாம் ஏன் அருவருக்கிறோம்
வெளிப்படுத்துதல், “பூமியின் ராஜாக்களோடு” அதன் அரசியல் ஆட்சியாளர்களோடு, பாபிலோனின் வேசித்தனத்தை வெளிப்படையாக கண்டனம் செய்கிறது. இந்த வேசி “ஜனங்களும், கூட்டங்களும், ஜாதிகளும் பாஷைக்காரருமான” “திரளான தண்ணீர்கள் மேல்” உட்கார்ந்திருப்பதாக வருணிக்கப்படுகிறாள். (வெளிப்படுத்துதல் 17:1, 2, 15) அரசியல் ஆட்சியாளர்களோடு சொகுசான ஓர் உறவை வைத்துக்கொள்வதன் மூலம், நூற்றாண்டுகள் பலவற்றினூடே பொய் மதம் பொது மக்களை கீழடக்கி வைக்கவும் சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்ளவும் திருட்டுத்தனமாகவோ வெளிப்படையாகவோ தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வந்திருக்கிறது.
இந்த இருபதாம் நூற்றாண்டில், வத்திக்கன் நாசியோடும் பாஸிஸ ஆட்சியாளர்களோடும் கையொப்பமிட்ட உடன்பாடுகள் அல்லது ஒப்பந்தங்கள் இந்த ஆதிக்கத்துக்கு உதாரணங்களாகும். இதன் ஒரு விளைவு, மந்தையின் மீது சர்ச்சின் செல்வாக்கு, இரக்கமற்ற ஆட்சியாளர்களுக்கு முழுமையாக அடிமைகளாகிவிடுவதற்கு வழிநடத்தியது. 1929-ல் வத்திக்கன் பாஸிஸ சர்வாதிகாரியான பெனிட்டோ முஸோலினியோடு ஓர் உடன்பாட்டை செய்திருந்தது. ஜெர்மனியில் இதைப் பின்தொடர்ந்தது என்ன? ஜெர்மன் கார்டினலான ஃபால்ஹாபர், பயஸ் XI என்பவரிடம் சொன்ன பின்வரும் வார்த்தைகள், ஹிட்லரைப் பற்றிய போப்பின் கருத்தைப் புரிந்துக் கொள்ளச் செய்கின்றது: “எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இவரே ருஷ்ய பொதுவுடைமைக் கொள்கையை எதிர்த்து பகிரங்கமாகப் பேசி இருக்கும் முதல் அரசியல் மேதையாவார்.” ஃபால்ஹாபர் பின்னால் குறிப்பிட்டதாவது: “நான் நீண்டகாலமாக சந்தேகித்து வந்த விஷயத்தை ரோமுக்கு நான் மேற்கொண்ட பயணம் ஊர்ஜிதப்படுத்திவிட்டது. ரோமில் தேசிய சோஷியலிஸமும் பாஸிஸமுமே, கம்யூனிஸத்திலிருந்தும் ருஷ்ய பொதுவுடைமைக் கொள்கையிலிருந்தும் மீண்டுவர ஒரே வழியாக இருக்கிறது.”
ஜெர்மனியின் கத்தோலிக்க பிஷப்புகள் 1933-க்கு முன்பாக நாசி தத்துவத்தை எதிர்த்து வந்தனர். ஆனால் ஜெர்மன் ஆசிரியர் க்ளாஸ் ஷோல்டர் சர்ச்சுகளும் நாசியர் ஆட்சிக்குரிய ஜெர்மன் குடியரசும் (The Churches and the Third Reich) என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறபடி, ஜெர்மனிக்கு வத்திக்கனின் தூதுவரான கார்டினல் பாஸல்லி, தேசிய சோஷியலிஸத்தினிடமாக அவர்களுடைய கருத்தை மறு ஆய்வு செய்யும்படியாக பிஷப்புகளுக்குக் கட்டளையிட்டார். இந்த மாற்றத்தைத் தூண்டியது என்ன? 1933, ஜுலை 20-ம் தேதி நாசியர் ஆட்சிக்குரிய ஜெர்மன் குடியரசுக்கும் வத்திக்கனுக்குமிடையே முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்பார்த்தே இவ்விதமாகச் சொல்லப்பட்டது.
க்ளாஸ் ஷோல்டர் அறிவிப்பதாவது: “தேர்தலின் போதும் [1933] நவம்பர் 12-ல் நடைபெற்ற குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கெடுப்பின் போதும், ஹிட்லர், ஜெர்மன் குடியரசும் வத்திக்கனும் செய்துகொண்ட உடன்பாட்டின் பலனைக் கண்டான். எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பான்மையான வாக்காளர்கள் கத்தோலிக்கர்களாக இருக்கும் வட்டாரங்களிலிருந்து எதிர்பாராத உச்ச அளவில் ஆதரவான வாக்குகளைப் பெற்றுக்கொண்டான்.”
1933-ல் நாசி பொறுப்பேற்றுக் கொண்டதற்கு ஒரு சில புராட்டஸ்டன்டு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் மொத்தமாக தேசப்பற்று ஆர்ப்பரிப்பில் இவர்களுடைய குரல்கள் விரைவில் அடங்கிவிட்டன. ஷோல்டர் விளக்குகிறார்: “கடந்த காலத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட முன் எச்சரிக்கையை கைவிடவும், இப்பொழுது கடைசியாக தேசிய உணர்ச்சிகளில் மயங்கிவிடவும் புராட்டஸ்டன்டு சர்ச்சில் தெளிவாகவே தடையில்லாத விருப்பம் அதிகமாகக் காணப்பட்டது . . . எந்தவித நிபந்தனையுமின்றி புதிய ஜெர்மன் குடியரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிகாரப்பூர்வமான சர்ச் வாக்குமூலம் முதல்முறையாக வெளியிடப்பட்டது.” உண்மையில் புராட்டஸ்டன்டு மதம் நாசி தேசிய கோட்பாட்டுக்குத் தன்னை விற்று கத்தோலிக்க சர்ச் செய்தது போலவே அதன் கைப்பாவையானது.
நூற்றாண்டுகளினூடாக, பொய் மதம் பொதுமக்களுக்குத் தீங்கு உண்டாகும் வகையில் பதவியிலுள்ள ஆட்சியாளர்களோடு உடன்பாடு செய்துகொண்டு தங்கள் அந்தஸ்து அழியாது பாதுகாத்துக் கொள்வதை சரித்திரப் பதிவு காண்பிக்கிறது. அதிகாரத்தையும், உடைமைகளையும், செல்வத்தையும் பேராசையுடன் நாடிச் செல்லும் உலகின் மதத் தலைவர்கள் “கிறிஸ்துவின் சிந்தை”யை பிரதிபலிப்பதில்லை. யெகோவாவின் சாட்சிகளாக நாம் இப்படிப்பட்ட ஆவிக்குரிய வேசித்தனத்தை அருவருக்கிறோம்.—யோவான் 17:6; ரோமர் 15:5; வெளிப்படுத்துதல் 18:3.
நாம் ஏன் பாபிலோனிய இரத்தப்பழியை வெறுத்துத் தள்ளுகிறோம்
வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மகா பாபிலோன் பெரும் இரத்தப் பழிக்காக குற்றஞ்சாட்டப்படுகிறாள்: “அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன்.”—வெளிப்படுத்துதல் 17:6; 18:24
பொய் மதத்தின் சரித்திரம் பகைமையும் இரத்தஞ்சிந்துதலுமாக இருக்கிறது, கிறிஸ்தவமண்டலம் அதிக இரத்தப்பழி குற்றமுள்ளதாக இருக்கிறது. இரண்டு உலகப் போர்களும் கிறிஸ்தவ தேசங்கள் என்றழைக்கப்படுகின்றவற்றில்தானே ஆரம்பமாயின. “கிறிஸ்தவ” அரசியல் தலைவர்கள் 1914-லும் 1939-லும் போர்ப்படையின் துணையை நாடினார்கள். போரில் ஈடுபட்ட எல்லா தேசங்களின் குருமாரும் அவர்களுடைய ஆசியை வழங்கினர். உலகின் கொலம்பியா சரித்திரம் (The Columbia History of the World) முதல் உலகப் போரைப் பற்றி சொல்வதாவது: “உயிரோடுகூட சத்தியத்தின் மதிப்பும் குறைக்கப்பட்டது. எதிர்ப்புக் குரல் எதுவும் எழுப்பப்படவில்லை. கடவுளுடைய வார்த்தையின் பாதுகாவலர்கள் யுத்தப் பாடலின் பல்லவியை முன்நின்று பாடினார்கள். முழு ஈடுபாட்டுப் போர் முழு பகைமையை அர்த்தப்படுத்தலாயிற்று.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) படைத்துறையின் தனிகுரு தேசாபிமான உணர்ச்சிகளைக் கொண்டு தங்கள் படைகளை ஊக்குவிக்க, இருபுறமுமிருந்த வாலிபர்கள் திருச்சபைக் கட்டளைக்குத் தீவனமானார்கள். அதே சரித்திர புத்தகம் சொல்வதாவது: “தேசப்பற்றின் திடீர் எழுச்சியினால் மனிதர்களின் மனங்களை திட்டமிட்டு நச்சுப்படுத்துவது . . . சமாதானத்துக்கான முயற்சிக்கு கூடுதலான இடையூறாகிவிட்டிருக்கிறது.”
யூதர்களுக்கும் முகமதியர்களுக்கும், இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டன்டினர்களுக்கும், முகமதியருக்கும் இந்துக்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்குமிடையேயும் மோதல்கள் ஏற்படுகையில், பொய் மதம் உலகம் முழுவதிலும் தொடர்ந்து பகைமை வளர காரணமாயிருந்து வருகிறது. ஆம், “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய” இரத்தக் குளியலுக்கும் பொய் மதம் தொடர்ந்து காரணமாயிருந்து வருகிறது.—வெளிப்படுத்துதல் 18:24.
மேலே கொடுக்கப்பட்ட அத்தாட்சிகள் அனைத்தையும் முன்னிட்டுப் பார்க்கையில், யெகோவாவின் சாட்சிகள் 1988-ம் ஆண்டு செய்த மாநாட்டுத் தீர்மானம் பொருத்தமாகவும் காலத்துக்கு ஏற்றதாயுமிருப்பதாக உணருகிறார்கள். சரியாகவே பொய் மதத்தை மகா பாபிலோனாகிய இரத்தப் பழிக்குற்றமுள்ள வேசியாக கண்டனம் செய்கிறோம். சமாதானத்துக்கும் மெய் வணக்கத்துக்கும் ஒரே மெய்யான வழியை நாம் உலகத்துக்கு அறிவிக்கிறோம்—சர்வலோகத்தின் பேரரசரும் ஆண்டவருமாகிய யெகோவாவிடம், அவர் பூமிக்கு அனுப்பி வைத்த கிறிஸ்து அல்லது இயேசுவாகிய மேசியாவின் மூலம் திரும்புவதே அந்த வழியாக இருக்கிறது. அது மனிதவர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரே நீதியுள்ள நித்திய அரசாங்கமாகக் கடவுளுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. பின்வரும் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கு இதுவே சமயமாக இருக்கிறது என்பதையும்கூட இது அர்த்தப்படுத்தும்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை [மகா பாபிலோனை] விட்டு வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:4; தானியேல் 2:44; யோவான் 17:3. (w89 4⁄15)
[அடிக்குறிப்புகள்]
b கடவுளுடைய நாமத்தின் முக்கியத்துவத்தையும் உட்பொருளையும் பற்றிய விவரமான ஒரு விளக்கத்துக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி வெளியிட்டிருக்கும் என்றுமாக நிலைத்திருக்கும் தெய்வீக நாமம் (The Divine Name That Will Endure Forever) என்ற 32 பக்க புரோஷூரைப் பார்க்கவும்.