ஒரு தீர்மானம்
“தெய்வீக நீதி” மாநாடு ஆஜர் எண்ணிக்கை இதற்கு முந்தைய ஆண்டினுடையதைவிட அதிகமாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆண்டில் உலகம் முழுவதிலும் 1,098 இடங்களில் 64,43,597 பேர் கூடியிருந்தார்கள். 93,822 பேர் முழுக்காட்டப்பட்டார்கள். எல்லாத் “தெய்வீக நீதி” மாநாடுகளிலும் “இழிவான பெயர்பெற்ற அந்த ‘வேசி’” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட பேச்சைத் தொடர்ந்து வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற 320 பக்க அழகிய படங்களுடன்கூடிய பவுண்டு புத்தகம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. பேச்சாளர் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் சொன்னதாவது: “இந்தப் புதிய புத்தகத்தை உங்கள் தனிப்பட்ட படிப்பிலும் சபை படிப்புகளிலும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மகா பாபிலோன் அழிவுக்காக வைக்கப்பட்டிருக்கிறது, தேசங்கள் இப்பொழுது அர்மகெதோனை எதிர்ப்படுகின்றன, கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும் ஆளுகை செய்யும் யெகோவாவின் மகத்துவமுள்ள ராஜ்யத்தில் மகத்தான உச்சக்கட்டம் எய்தப்பெறும் என்று உலகத்துக்கு அறிவிப்பதிலும்கூட இதைப் பயன்படுத்துங்கள். இந்தக் காரியங்களைக் கேட்டு கைக்கொள்ளுகையில் நீங்கள் சந்தோஷமாயிருப்பீர்கள். ‘ஏனென்றால் குறித்த காலம் சமீபமாயிருக்கிறது!’”—வெளிப்படுத்துதல் 1:3.
1914 முதற்கொண்டு “கர்த்தருடைய நாளிலும்” தெய்வீக நியாயத்தீர்ப்பின் இந்தச் சமயத்திலும் வாழ்ந்துவரும் நாங்கள், பேரரசரும் ஆண்டவருமாகிய யெகோவாவை அவருடைய ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் சேவிக்கும் மிக மகத்தான சிலாக்கியத்தில் நாங்கள் களிகூருகிறோம். (வெளிப்படுத்துதல் 1:10) யெகோவாவின் சாட்சிகளாக நாங்கள் உறுதியளிப்பதாவது:
(1) ஒரே மெய்யான ஜீவனுள்ள தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் மீது மகா பாபிலோன், குறிப்பாக கிறிஸ்தவமண்டலம் கொண்டுவந்திருக்கும் நிந்தனையை நாங்கள் அருவருக்கிறோம். எங்கள் பங்கில், “யெகோவாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்கிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்” என்ற வெளிப்படுத்துதல் 4:11-லுள்ள வார்த்தைகளை நாங்கள் முழு இருதயத்தோடு உறுதி செய்கிறோம்.
(2) பாபிலோனிய போதகங்களை, குறிப்பாக திரித்துவக் கடவுள், மனித ஆத்துமா அழியாமை, நரகத்தில் நித்திய வாதனை, அக்கினியாலான உத்தரிக்கும் ஸ்தலம், உருவ வழிபாடு—மரியாளின் சிலை மற்றும் சிலுவை—ஆகியவற்றைக் கிறிஸ்தவ மண்டலம் பற்றிக் கொண்டிருப்பதை நாங்கள் அருவருக்கிறோம். வெளிப்படுத்துதல் 22:18, 19-க்கு இசைவாக, கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையையும் அதில் அடங்கியுள்ள அனைத்தையும் நாங்கள் உறுதியாக பின்பற்றுவோம்.
(3) கிறிஸ்தவ மண்டலத்தில் மிகச் சாதாரணமாகக் காணப்படும் பரிணாமம், இரத்தமேற்றுதல், கருச்சிதைவு, பொய் சொல்வது, பேராசை மற்றும் நேர்மையற்றத்தன்மை போன்ற கடவுள் எதிர்ப்பு தத்துவங்களையும் பழக்க வழக்கங்களையும் நாங்கள் அருவருக்கிறோம். எங்கள் வணக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் எங்களுடைய சிருஷ்டிகராகிய சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவனை நாங்கள் கனப்படுத்துவோம். வெளிப்படுத்துதல் 15:3-ன்படி அவருடைய வழிகள் “நீதியும் சத்தியமுமானவைகள்.”
(4) மதப்பிரிவுகள், விக்கிரகாராதனை, வேசித்தனம், யேசபேல் செல்வாக்கு, வெதுவெதுப்பான நிலை, விழிப்பில்லாமைப் போன்ற விஷயங்களில் வெளிப்படுத்துதல் 2, 3 அதிகாரங்களில் ஏழு சபைகளுக்கும் கொடுக்கப்பட்ட இயேசுவின் செய்திகளைக் கவனிக்க கிறிஸ்தவமண்டலம் தவறியிருப்பதை நாங்கள் அருவருக்கிறோம். நாங்களோ “ஆவி சபைகளுக்குச் சொல்கிறதை” கேட்டுக் கீழ்ப்படிவோம்.
(5) கிறிஸ்தவமண்டலத்திலும் குருவர்க்கத்தின் மத்தியிலும் காணப்படும் ஒழுக்கயீனத்தையும் கட்டுபாடற்ற பாலுறவு ஈடுபாட்டையும் நாங்கள் அருவருக்கிறோம். தொடர்ந்து தங்கள் அசுத்தத்தில்—விபசாரக்காரரும் பொய்யரும் இதுபோன்றவர்களுமாக—வாழ்பவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவர் என்ற வெளிப்படுத்துதல் 21:8-லுள்ள யெகோவாவின் தெளிவான நியாயத்தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பாலுறவு, விவாகம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பைபிள் தராதரங்களை நாங்கள் முழு இருதயத்தோடு ஆதரிக்கிறோம்.
(6) அதிகாரத்தையும் செல்வத்தையும் பெற்று பாமர மக்கள் மீது கொடுமையாக ஆதிக்கம் செலுத்தும்படிக்கு உலகத் தலைவர்களுக்கு உட்கையாயிருக்கும் மகா பாபிலோனின் குருவர்க்கத்தினுடைய நூற்றாண்டுகளாக நீடித்திருக்கும் ஆவிக்குரிய வேசித்தனத்தை நாங்கள் அருவருக்கிறோம். வெளிப்படுத்துதல் 18:4-ல் “என் ஜனங்களே . . . அவளை விட்டு வெளியே வாருங்கள்” என்ற தேவதூதனின் அழைப்புக்குக் கீழ்ப்படிய நேர்மையான இருதயமுள்ள ஆட்களுக்கு உதவி செய்ய நாங்கள் தீர்மானமாயிருக்கிறோம்.
(7) பெரும் அளவில் அரசியல் அதிகாரங்களோடு மகா வேசியின் வேசித்தனத்தின் காரணமாகவே இந்த நூற்றாண்டில் மாத்திரம் உயிரிழந்திருக்கும் 10 கோடிப் பேரின் மிகக் கடுமையான இரத்தப்பழியை நாங்கள் அருவருக்கிறோம். வெளிப்படுத்துதல் 18:21–24-ல் தெளிவாகச் சொல்லப்பட்டபடியே, மகா பாபிலோனின் மீது நியாயத்தீர்ப்பு தண்டனையை நிறைவேற்றுவதற்குரிய கடவுளின் குறிக்கப்பட்ட காலம் சமீபித்துவிட்டதைக் குறித்து நாங்கள் களிகூருகிறோம்.
யெகோவாவின் சாட்சிகளாக, 1914-ல் “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவா] அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின” என்று உலகுக்கு அறிவிப்பதை நாங்கள் ஒரு சந்தோஷமாகவும் சிலாக்கியமாகவும் கருதுகிறோம். (வெளிப்படுத்துதல் 11:15) மகா பாபிலோனின் மீது யெகோவாவின் அறிவிக்கப்பட்ட நியாயத்தீர்ப்புகளைத் தெரிவிப்பதிலும் கடவுளுடைய யுத்தமாகிய அர்மகெதோன் சமீபித்துவிட்டதைக் குறித்து எச்சரிப்பதிலும் தொடர்ந்து தைரியமாக முன்னேறிச் செல்ல நாங்கள் தீர்மானமாயிருக்கிறோம். “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” உரத்த சத்தத்தில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்கின் ஆசீர்வாதத்துக்காக “புதிய வானமும் புதிய பூமியும்” அருகாமையில் இருக்கின்றன என்ற நித்திய சுவிசேஷத்தை எதிரொலிக்க நாங்கள் தீர்மானமாயிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 14:6; 21:1) இந்த அறிவிப்பின் காரணமாக எல்லாத் தேசங்களிலுமிருந்து வரும் 30 இலட்சத்துக்கும் அதிகமான திரள் கூட்டமான ஜனங்கள் இப்பொழுது உலகம் முழுவதிலும் நம்மோடு ஐக்கியப்பட்டிருப்பதில் நாங்கள் களிகூருகிறோம். வானத்தின் மத்தியில் பறக்கும் தூதனோடு சேர்ந்து நாங்கள் அனைவரும் சொல்வதாவது: “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்.”—வெளிப்படுத்துதல் 14:7.
“ஒரு தீர்மானம்”—படிப்புக்குக் கேள்விகள்:
1. யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுது எதில் களிகூருகிறார்கள்?
2. தீர்மானத்தின் ஏழு குறிப்புகள் ஒவ்வொன்றிலும் இதை எடுத்துரைக்கவும்: (எ) யெகோவாவின் சாட்சிகள் அருவருப்பது என்ன? (பி) ஆக்கமுறையாக சாட்சிகள் என்ன உறுதிபூண்டிருக்கிறார்கள்?
3. (எ) யெகோவாவின் சாட்சிகளுக்கிருக்கும் சந்தோஷமும் சிலாக்கியமும் என்ன? (பி) சாட்சிகளுடைய தீர்மானம் என்ன? (சி) நாம் வேறு எதைச் செய்யவும் தீர்மானமாயிருக்கிறோம்? (டி) என்ன களிகூருதலிலும் அறிவிப்பிலும் யெகோவாவின் சாட்சிகள் பங்கு கொள்கிறார்கள்?