மகா பாபிலோன் விழுந்தது, நியாயந்தீர்க்கப்பட்டது
“பாபிலோன் மகா நகரம் விழந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே!” “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.”—வெளிப்படுத்துதல் 14:8; 18:2.
என்னே திடுக்கிடச் செய்யும் ஒரு தீர்க்கதரிசனம்! “மகா பாபிலோன் விழந்தது!” இந்த அடையாள அர்த்தமுள்ள கூற்று பைபிள் மாணாக்கருக்குப் பல நூற்றாண்டுகளாக மறைபொருளாயிருந்துவந்திருக்கிறது. அது உங்களுக்கு ஏன் அக்கறைக்குரிய ஒன்றாய் இருக்க வேண்டும்? ஏனென்றால், பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, மகா பாபிலோனின் முடிவு விரைவில் மனிதவர்க்கம் முழுவதையும் பாதிக்கும். இந்தப் பத்திரிகையின் ஏப்ரல், மே இதழ்களில் நாம் பார்த்தபடி, செல்வாக்கு மிகுந்த இந்த வேசி பொய் மத உலக பேரரசு என்று தெளிவாக அடையாளங்காட்டப்பட்டிருக்கிறது.a
ஆனால் அவள் எந்தவிதத்தில் விழுந்தாள்? எப்பொழுது?
பாபிலோன் விழுந்தது, ஆனால் அழிக்கப்படவில்லை
மகா பாபிலோனின் வீழ்ச்சி எதைக் குறிக்கிறது என்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள, பொ.ச.மு 539-ல் பூர்வீக பாபிலோன் விழுந்தபோது என்ன நடந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில் கடவுளுடைய ஜனமாகிய இஸ்ரவேலர் ஏறக்குறைய 70 ஆண்டுகள் சிறையிருப்பில் இருந்தனர். அவர்களுடைய தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளின்படி அவர்கள் விடுதலையை எதிர்நோக்கியிருந்தனர். (எரேமியா 25:11, 12; 29:10) பெர்சிய மன்னன் கோரேசு பாபிலோனின் வீழ்ச்சியை ஏற்படுத்தி, யூதர்களைத் தங்களுடைய பரிசுத்த நகரமாகிய எருசலேமுக்குத் திரும்பிச் செல்லும்படி அவர்களை விடுவித்த சமயம் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட கிளர்ச்சியூட்டும் சமயமாயிருந்திருக்கும்!—ஏசாயா 45:1–4.
என்றபோதிலும், யூதர்கள் மீது பாபிலோன் கொண்டிருந்த ஆதிக்கம் முறிக்கப்பட்ட போதிலும், அது பூர்வீக பாபிலோனின் முடிவைக் குறிக்கவில்லை. சரித்திராசிரியரான ஜோன் ஓட்ஸ் பாபிலோன் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு எழுதுகிறாள்: “கோரேசு பாபிலோனில் வெற்றிசிறந்தவனாய்ப் பிரவேசித்தான், பொருட்களைக் கொள்ளைகொள்வதைத் தடை செய்தான், ஓர் ஆளுநரை நியமித்தான், மத நிறுவனங்களையும் குடிமுறை நிர்வாகத்தையும் விட்டுவைத்தான். . . . பாபிலோனிய குடிமக்களின் வாழ்க்கை பெர்சிய ஆட்சியின் கீழ் மிகக் குறைந்த மாற்றத்தையே கண்டது என்பது உண்மைதான். மத முறைமைகள் காக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் செழித்தது.” இப்படியாக, அவளுடைய வீழ்ச்சியின் மத்தியிலும், பாபிலோன் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது, ஆனால் ஒரு பெரிய வித்தியாசத்துடன்—கடவுளுடைய ஜனமாகிய இஸ்ரவேலர் இனிமேலும் சிறையிருப்பில் இல்லை. உண்மை வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவதற்காக அவர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
பொ.ச.மு 331 போல் கிரேக்க தளபதி மகா அலெக்சாந்தர் பாபிலோனில் பிரவேசித்தபோது, அதன் குடிமக்கள் அவனுக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். அதைத் தன்னுடைய கிழக்குத் தலைநகராகக் கொண்டிருக்கத் தீர்மானித்தான், ஆனால் தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு முன் அவன் மரித்துவிட்டான். அவ்வளவு காலத்துக்குப் பாபிலோன் தொடர்ந்து செழித்தோங்கியது என்பதை இது காட்டுகிறது.
இப்படியாக, பொ.ச.மு 539-ல் பாபிலோன் விழுந்தபோது, அது இல்லாமற் போய்விட்டது என்பதைக் குறிக்கவில்லை. அது பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டுவந்தது. இது மகா பாபிலோனை உட்படுத்தும் தீர்க்கதரிசனங்களின் நவீன நிறைவேற்றத்தில் எப்படி பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது?
மகா பாபிலோன் விழுகிறது
அது பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் வீழ்ச்சியில் இணைபொருத்தத்தைக் காண்கிறது. 1919-க்கு முன் நம்முடைய 20-வது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில், பைபிள் மாணாக்கர்கள் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் பொய் மதக் கருத்துக்கள் மற்றும் வழக்கங்களின் ஒரு வகை ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டியதாயிருந்தது. திரித்துவம், ஆத்துமா அழியாமை போன்ற பொய்ப் போதகங்களை அவர்கள் ஏற்க மறுத்தபோதிலும், பாபிலோனிய பழக்கவழக்கங்களால் கறைபட்டவர்களாக இருந்தனர். தனிப்பட்ட குணங்களை விருத்திசெய்வதில் பலர் சுய-நீதிக்கடுத்த மனநிலையை விருத்திசெய்தனர். சிலர் சிருஷ்டிகளை உயர்த்தி, காவற்கோபுர பைபிள் சங்கத்தின் முதல் தலைவராயிருந்த சார்ல்ஸ் T. ரஸல் பேரில் கவனத்தைத் திருப்புவதாயிருந்த காரியங்களில் ஈடுபடுகிறவர்களாயிருந்தனர். எந்த ஒரு பைபிள் ஆதாரமுமின்றி, அவர்கள் பிறந்த நாட்களையும் கிறிஸ்மஸ் விழாக்களையும் கொண்டாடினர். சிலர் சிலுவை-கிரீடம் சின்னத்தையும் அணிந்தனர், மற்றவர்கள் கிறிஸ்தவமண்டலத்துக்கு வழங்கப்படும் மதிப்பு மரியாதையையும் நாடினர். பின்பு, 1917-ல், ரஸலின் மரணத்துக்குச் சற்று பின்பு, ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாயிற்று.
அந்த ஆண்டில் காவற்கோபுர சங்கம் முடிந்த இரகசியம் (The Finished Mystery) என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தில் வெளிப்படுத்துதலின் பேரில் விளக்கவுரையை வெளியிட்டது. இந்தப் புத்தகம் கிறிஸ்தவமண்டலத்தின் குருவர்க்கத்தின் வேடத்தைக் கலைப்பதாயிருந்தது. அப்பொழுது ஐரோப்பாவில் மூர்க்கமாய் மூண்டுகொண்டிருந்த மகா யுத்தத்தில் அவர்களுடைய ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதாயிருந்தது. புராட்டஸ்டண்டு குருவர்க்கத்தினரில் சிலர், மகா பாபிலோனின் ஒரு பகுதிப் பிரதிநிதிகள், இந்த விளக்கக் கூற்றுகளைக் கானடா தேசத்து அரசாங்கத்திலுள்ள தங்களுடைய பழைய அரசியல் நண்பர்களிடம் எடுத்துச்சென்று, இந்தப் பைபிள் மாணாக்கர்களை அரசியல் துரோகிகள் என்று குற்றஞ்சாட்டினர். கானடா தேசத்தில் பிப்ரவரி 12, 1918-ல் காவற்கோபுர சங்கம் மீது தடைவிதிக்கப்பட்டது.
ஐக்கிய மாகாணங்களிலுள்ள குருமார்கள் இதில் தங்களுடைய கானடா தேசத்து சகாக்களைப் பின்பற்ற தாமதிக்கவில்லை. ஒரு சில நாட்களுக்குள், கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஆன்ஜலீஸில் காவற்கோபுர பைபிள் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. பின்பு, மே 1918-ல் காவற்கோபுர சங்கத்தின் புதிய தலைவராயிருந்த J.F. ரதர்ஃபோர்டு என்பவரையும் சங்கத்தின் மற்ற ஏழு கூட்டாளிகளையும் கைது செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஜுன் மாதத்தில், இந்த மனிதர்கள் ஆச்சரியமான வேகத்தில் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர். ஏழு பேருக்கு 20 ஆண்டும் ஒருவருக்கு 10 ஆண்டும் திருத்தியல் சிறைதண்டனை தீர்ப்பாயிற்று. குருவர்க்கத்தினரின் பிரதிபலிப்பு என்னவாயிருந்தது? நவீன அமெரிக்க மதம்: அவை அனைத்திலும் காணப்படும் வஞ்சப்புகழ்ச்சி (Modern American Religion: The Irony of It All) என்ற தன்னுடைய புத்தகத்தில் மார்ட்டின் மார்ட்டி குறிப்பிடுவதாவது: “குருவர்க்கம் (யெகோவாவின் சாட்சிகள் என்று பின்பு அழைக்கப்பட்ட) ரசலைட்களுக்கு எதிராகத் திரும்பினது மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் தலைவர்களுக்கு விரோதமாக இருபது ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு களிகூர்ந்தது.” மகா பாபிலோனின் பிரதிநிதிகள் சிரித்தார்கள். கடைசியாக சிரிப்பவர்கள்தானே நன்கு சிரிப்பவர்கள் என்பதை அவர்கள் கவனத்திற்கொள்ளவில்லை.
இப்படியாக, 1918-ல், யெகோவாவின் ஜனங்களில் சிலருக்கு அடையாள அர்த்தத்தில் பாபிலோனுக்குச் சிறைபட்டிருத்தல் சொல்லர்த்தமான சிறையிருப்பாக மாறினது. பைபிள் மாணாக்கர்களைத் துன்புறுத்துதலின் அலை ஐக்கிய மாகாணங்கள், கானடா போன்ற நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. அவர்களை நகரங்களிலிருந்து துரத்திவிடுவதற்காக தேசிய குருவர்க்கம் கலகக் கும்பல்களை ஏற்படித்தியது. பைபிள் மாணாக்கர்கள் மீது தார் பூசப்பட்டது, அவர்கள் தடியால் அடிக்கப்பட்டனர். உண்மையான கிறிஸ்தவர்களாகிய இந்த சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வெட்கங்கெட்ட அநீதியின் பதிவு ஏற்படுத்தப்பட்டது.b
பின்பு 1919-ல் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்பட்டது. உலக மகா யுத்தம் நவம்பர் 1918-ல் முடிவுக்கு வந்தது. காவற்கோபுர சங்கத்தின் அதிகாரிகள் சிறைவைக்கப்பட்டிருப்பது நீதிக்குப் புறம்பானது என்று மேல்முறையீடு செய்யப்பட்டது. அவர்களுடைய மத விரோதிகளுக்குக் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ரதர்ஃபோர்டும் அவருடைய தோழர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மார்ட்டி கூறியபடி: “ஆர்த்தடாக்ஸ் சர்ச் அங்கத்தினர் மத்தியில் மகிழ்ச்சி காணப்படவில்லை.” கடைசியாக, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் பழியும் முழுமையாக துடைக்கப்பட்டது. அவர்கள்மீது பொறாமை கொண்ட கத்தோலிக்க நீதிபதி மார்ட்டின் T. மான்டன், பின்பு போப் பயஸ் XI என்பவரால் “புனித மகா கிரிகோரியின் வீரத் திருத்தகையாக” ஏற்படுத்தப்பட்ட இவர் அந்த எட்டு சாட்சிகளையும் ஜாமினில் விடுதலை செய்ய மறுத்தார், இப்படியாக அவர்கள் ஒன்பது மாதங்களுக்கு அநியாயமாக சிறைவைக்கப்பட்டதற்குக் காரணமாயிருந்தார். அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது பின்னால் வெளிப்பட்டது, அதாவது, 1939-ல் இலஞ்சம் வாங்கியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார்!
1919-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது ரதர்ஃபோர்டும் அவருடன்கூட இருந்தவர்களும் காவற்கோபுர சங்கத்தின் புரூக்ளின் தலைமைக்காரியலயத்திற்குத் திரும்பினர். அப்பொழுது அவர்கள் உலகம் கண்டிராத மிகப் பெரிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்காகத் தங்களை ஆயத்தப்படுத்தினர். பைபிள் மாணாக்கர்கள் மனிதனுக்குப் பயப்படும் பயத்தை முறித்துக்கொண்டனர். அனைத்து பொய் மதங்களுடன் தங்களை வைத்துப் பார்த்தபோது தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காண்பவர்களாயிருந்தனர். விழுந்த நிலையில் இருக்கும் தங்களுடைய தீரா விரோதியாகிய மகா பாபிலோனின் வேடத்தைக் கலைக்க வேண்டியதாயிருந்தது. தேசங்களில் உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படவேண்டியதாயிருந்தது.
அஞ்சா நெஞ்சம் கொண்ட அந்தக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தின் வேகத்தைத் துரிதப்படுத்தினர். “மதம் ஒரு கண்ணி, ஓர் ஏய்ப்பு,” “கடவுளையும் கிறிஸ்து ராஜனையும் சேவியுங்கள்,” என்று எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கியவர்களாய் ஊர்வலம் சென்று பொய் மதத்தின் வேடத்தைக் கலைத்தனர். பூர்வீக பாபிலோனில் இருந்ததுபோலவே பொய் மதம் தொடர்ந்து செழித்தது, செயல்பட்டுவந்தது, ஆனால் யெகோவாவின் சாட்சிகளைப் பொறுத்ததில், மகா பாபிலோன் 1919-ல் விழுந்தது. அவர்கள் பாபிலோனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்!
பாபிலோனின் செல்வாக்கு குறைகிறது
இப்பொழுது, 70 ஆண்டுகளுக்குப் பின்னர், பூமியின் பல பாகங்களில் மகா பாபிலோனின் செல்வாக்குக் குறைந்துவிட்டிருக்கிறது. உண்மைதான், ஐக்கிய மாகாணங்களில் மதம் செழித்தோங்குவதாகத் தெரிகிறது. அங்கு தொலைக்காட்சி சுவிசேஷகர்களாலும் மத உளநூலராலும் உணர்ச்சிவசமடையும் ஒரு மக்கள் தொகுதி கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், பொருளாசை மிகுந்த இந்தப் போலியாட்களின் வேடம் அண்மையில் கலைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் அரசியலில் ஆழ்ந்து உட்பட்டிருக்கும் கொரியா குடியரசில் மதம் செழித்தோங்குவதாகத் தெரிகிறது. தெளிவாகவே, மகா பாபிலோன் “விழுந்தது” என்றாலும், தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
என்றபோதிலும், உலக மகா யுத்தங்களைத் தொடர்ந்து ஆர்த்தடாக்ஸ் மதம் ஜெர்மனி, டென்மார்க், சுவீடன், பிரிட்டன் போன்ற நாடுகளில் தன்னுடைய பெரும்பகுதியான மக்களை இழந்துவிட்டிருக்கிறது. இத்தாலி, ஸ்பேய்ன், ஃபிரான்ஸ் போன்ற கத்தோலிக்க நாடுகளுங்கூட பாவ அறிக்கை போன்ற பரம்பரைப் பழக்கத்திலிருந்தும் பூசைக்குச் செல்வதிலிருந்தும் சரிவதைக் காண்கின்றன. பாதிரி பட்டம் பெறுவதற்காகப் படிப்பவர்களின் எண்ணிக்கையுங்கூட வேகமாகச் சரிந்துவிட்டது. சரித்திரத்தில் வேறு எந்த ஒரு போப்பும் மேற்கொள்ளாதளவுக்கு இன்றுள்ள போப் உலக பயணத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணருகிறார் என்ற உண்மைதானே சர்ச் இக்கட்டான நிலையிலிருக்கிறது என்பதற்கு அறிகுறியாக இருக்கிறது.
மேலும், 1917 முதல், அநேக சோஷியலிச நாடுகள் மதம் வகிக்கும் பாகத்தை மட்டுப்படுத்தியிருக்கின்றன, அது அரசியலில் கொண்டிருந்த செல்வாக்கை துண்டித்துவிட்டிருக்கின்றன. உலக ரீதியில், பாரம்பரிய மதம்தானே இவ்வளவு விரோதத்துக்கும் இரத்தஞ்சிந்துதலுக்கும் காரணமாக இருந்துவருவதால், சிந்திக்கும் ஆட்கள் மேற்கத்திய மதமாயிருந்தாலுஞ்சரி அல்லது கிழக்கத்திய மதமாயிருந்தாலுஞ்சரி, அனைத்து மதத்திலிருந்தும் விலகிவிட்டிருக்கின்றனர். ஆம், மகா பாபிலோன் உட்கார்ந்திருக்கிற அடையாள அர்த்தமுள்ள தண்ணீர்கள், அவளுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் மக்கள், வற்றிக்கொண்டிருக்கின்றனர். மகா பாபிலோன் நியாயந்தீர்க்கப்படுகிறாள், அவளுடைய அழிவு அண்மையிலிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 16:12; 17:1, 15.
பாபிலோன்—ஏன் நியாயந்தீர்க்கப்பட்டது
பொய் மத உலகப் பேரரசை நியாயந்தீர்ப்பதற்கு யெகோவா என்ன ஆதாரத்தைக் கொண்டிருக்கிறார்? வித்தியாசமான மதங்கள் உருவாக்கியிருக்கும் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், அறத் தொண்டுகளையும் அவர் நிச்சயமாகவே தயவுடன் நோக்க வேண்டும் என்று சிலர் கருதக்கூடும். ஆனால் யெகோவா உலக மதங்களுக்கு எதிராகச் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவை எந்த நிலையில் இருக்கின்றன? அந்தக் குற்றச்சாட்டுகளையும் மதத்தின் பதிவையும் நாம் சுருக்கமாக ஆராய்வோமாக.c
“ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே, அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னான்.” (வெளிப்படுத்துதல் 17:1, 2) எமது 1989 ஏப்ரல், மே இதழ்களில் தெளிவாகக் காண்பித்திருப்பதுபோல, மக்களுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் தேசிய ஆட்சியாளர்களுடன், “பூமியின் ராஜாக்களுடன்” மதம் இணங்கிச்செல்வதைத் தன்னலம் நாடும் வேசியின் நடத்தைக்கு ஒப்பிடப்படலாம். ஆனால் குற்றச்சாட்டுகள் தொடருகின்றன.
“அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்.” “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவன்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 17:6; 18:24) மகா பாபிலோனுக்கு எதிராக இரத்தப்பழி குற்றச்சாட்டு தொடரப்படவேண்டும், ஏனென்றால் கடந்த நூற்றாண்டுகளினூடே அவள் உண்மையான கிறிஸ்தவர்களைக் கொன்றிருக்கிறாள்; பைபிளை பொது மக்களுடைய மொழியில் மொழிபெயர்க்க அஞ்சாதவர்களையும், பைபிளைக் கொண்டிருக்கவும் அதை வாசிக்கவும் அஞ்சாதவர்களையும் இது உட்படுத்தியது. உண்மை கிறிஸ்தவர்கள் சம்பந்தமாகவும் மகா பாபிலோன் இரத்தப்பழிக்குரியவளானாள். இவர்கள் அண்மையில் நாசிசம், பாசிசம், அல்லது மற்ற சர்வாதிகாரிகளின் கீழ் சிறைகளிலும் கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும் இரத்தசாட்சிகளாய் மரித்திருக்கின்றனர். அந்தக் குற்றப்பதிவு “பூமியில் கொல்லப்பட்ட அனைவரையும்” குறிப்பிடுகிறது என்பதைக் கவனியுங்கள். இது சரித்திரத்தினூடே மதபக்தி இருப்பதாக உரிமைபாராட்டிய மக்கள் புரிந்த போர்களிலும் போராட்டங்களிலும் உலகமுழுவதும் மாண்டிருக்கும் இலட்சக்கணக்கானவர்களையும் உட்படுத்தும்.—மத்தேயு 23:34-36; 2 தீமோத்தேயு 3:5-ஐ ஒப்பிடவும்.
கடவுள் மகா பாபிலோனை நியாயந்தீர்ப்பது அவளுடைய குற்றத்தின் மற்றொரு அம்சத்தைக் குறிப்பிடுவதாயிருக்கிறது. அந்தத் தீர்ப்பு குறிப்பிடுவதாவது: “உன் சூனியத்தால் [ஆவியுலகத் தொடர்பு சார்ந்த செயல்கள், NW] எல்லா ஜாதிகளும் மோசம்போனார்கள்.” (வெளிப்படுத்துதல் 18:23) அக்கறைக்குரிய காரியம் என்னவென்றால், “ஆவியுலகத் தொடர்பு சார்ந்த செயல்கள்” பார்மேக்கியா [pharmakiʹa] என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாக இருக்கிறது. இது “அடிப்படையில் மருந்து, போதை வஸ்து, வசியம்; பின்பு விஷம் வைத்தல்; பின்பு சூனியம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.”d ஆவிக்குரிய கருத்தில், பொய் மதம் தேசங்களை விஷப்படுத்தியிருக்கிறது, பொய்க் கடவுட்களை நம்பவும் யெகோவாவிடமிருந்தும் சர்வலோக அரசுரிமை விவாதத்திலிருந்தும் அவர்களுடைய கவனத்தைத் திருப்பியிருக்கும் போதனைகளை நம்பவும் செய்திருக்கிறது. ஆத்துமா அழியாமை என்ற தவறான போதனையின் மூலம், பொய் மதம் எல்லா விதமான ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட காரியத்துக்கும் சூனியத்துக்கும் அஸ்திபாரம் போட்டிருப்பதுடன், மரித்தோருக்குப் பயப்படுதலையும் முன்னோர் வணக்கத்தையும் ஏவியிருக்கிறது. கடவுள் மகா பாபிலோனைக் கண்டனம் செய்திருப்பது முற்றிலும் நியாயமானது. யோவான் எழுதினான்: “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.”—வெளிப்படுத்துதல் 18:5.
நாம் என்ன செய்ய வேண்டும்?
மகா பாபிலோனின் விழுந்த நிலையையும் அவள் நியாயந்தீர்க்கப்பட்ட நிலையையும் கவனிக்குமிடத்து, சத்தியத்தை உண்மையிலேயே நேசிப்பவர்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? பூர்வ பாபிலோன் சம்பந்தமான ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இன்றைய பொய் மதம் சார்பாக இன்னும் அதிக பலமான பொருத்தத்தை உடையதாய் இருக்கிறது: “அகலுங்கள், அகலுங்கள், அவ்விடம் விட்டுப் போங்கள்; அசுத்தமான எதையும் தொடாதிருங்கள்; யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.” (ஏசாயா 52:11) இந்த அவசரமான அழைப்பு வெளிப்படுத்துதல் 18:4-க்கு இணையாக இருக்கிறது: “பின்பு வானத்திலிருந்து வேறொரு சத்தம் உண்டாகக் கேட்டேன். அது என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய [மகா பாபிலோன்] பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்.”
ஆம், பொய் மதத்துடன் கொண்டிருக்கும் எல்லா தொடர்புகளையும் அறுத்துக்கொள்வதற்கு இது காலம். ஆனால் நாம் மகா பாபிலோனை விட்டு வெளியேறுவோமானால், நாம் எங்கே திரும்புவோம்? யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவுகொள்கிறவர்களாய் அவருடைய உண்மை வணக்கத்தினிடமாகத் திரும்புவோம். ஏற்கெனவே, பூமியின் எல்லா தேசங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் அடையாள அர்த்தமுள்ள “யெகோவாவின் பர்வதத்துக்கு” ஓடி வருகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்து பைபிளைப் படிக்கும்படியாகவும் இந்த உண்மை வணக்கத்துடன் சேர்ந்துகொள்ளும்படியாகவும் நீங்களுங்கூட அழைக்கப்படுகிறீர்கள்.—ஏசாயா 2:2–4; 43:10–12.
இப்பொழுது இருக்கும் கேள்வி, மகா பாபிலோன் விழுந்தது, நியாயந்தீர்க்கப்பட்டது என்றால், தெய்வீக செயல் திட்டத்தில் அடுத்து இருப்பது என்ன? சாத்தானின் பொய் மத உலகப் பேரரசுக்கு என்ன நேரிடப்போகிறது? எமது அடுத்த இதழ், ஜூலை 1, பைபிள் தீர்க்கதரிசனத்தின் வெளிச்சத்தில் அந்தக் கேள்வியை ஆராயும். (w89 5⁄1)
[அடிக்குறிப்புகள்]
a மகா பாபிலோன் அரசியலையும் மாபெரும் வியாபாரத்தையும் அடையாளப்படுத்த முடியாது, ஏனென்றால் அவை அவளுடைய வீழ்ச்சியின்பேரில் புலம்புவதாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 18:9–11) சாத்தானுடைய உலக ஒழுங்குமுறையின் எஞ்சியுள்ள ஒரே பெரிய அடிப்படைக் கூறு மதமாகும். ஆவியுலகத் தொடர்பு சம்பந்தமாக அவளுடைய பிணைப்பு அவளுடைய மத அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 18:23.
b இந்தத் துன்புறுத்துதல் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 1975 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம் (1975 Yearbook of Jehovah’s Witnesses), பக்கங்கள் 94–119-ஐ பார்க்கவும்.
c இந்தப் பொருளின் பேரில் விளக்கத்துக்கு 1988-ல் உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் அண்மையிலிருக்கிறது! (Revelation—Its Grand Climax At Hand!), என்ற புத்தகத்தில் பக்கங்கள் 235–71-ஐப் பார்க்கவும்.
d W.E. வைன் என்பவரின் புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் விளக்க அகராதி (Expository Dictionary of New Testament Words), தொகுப்பு VI, பக்கங்கள் 51–2.
[பக்கம் 7-ன் படம்]
பாபிலோன் 539-ல் விழுந்தது என்றாலும், ஒரு நகரமாக அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிவந்தது