நன்றியுள்ளவர்களாக இருக்க கூடுதலான காரணங்கள்
பூர்வ இஸ்ரவேல் ஜனங்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் சிருஷ்டிகருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க கூடுதலான காரணங்கள் இருந்தன. நாம் ஏன் இவ்விதமாகச் சொல்லமுடியும்?
ஆம், மற்ற எல்லா மனிதர்களையும் போலவே, கடவுள் சிருஷ்டித்த எல்லா அழகான மற்றும் வியப்புத்தரும் காரியங்களுக்காகவும் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு இஸ்ரவேலருக்கு காரணமிருந்தது. ஆனால் நன்றியுள்ளவர்களாக இருக்க அவர்களுக்குக் கூடுதலான காரணமிருந்தது. ஏனென்றால் சர்வ வல்லமையுள்ளவர் தம்முடைய விசேஷித்த ஜனமாக இருப்பதற்காக அவர்களைத் தெரிந்துகொண்டு அவர்களிடம் விசேஷித்த அக்கறையைக் காண்பித்திருந்தார். (ஆமோஸ் 3:1, 2) நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கு அவர்களுக்கிருந்த முக்கியமான சில காரணங்களை சிந்தித்துப் பாருங்கள்.
மரணத்திலிருந்து இரண்டு முறை தப்பினார்கள்
பொ.ச.மு. 1513, நிசான் 14-ம் நாளின் இரவில் எல்லா இஸ்ரவேல் பெற்றோர்களும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்! முக்கியமான அந்த இரவில், கடவுளுடைய தூதன் “எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகள்” அனைத்துக்கும் மரணத்தைக் கொண்டு வந்தான். ஆனால் பஸ்கா மிருகத்தின் இரத்தம் வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்களிலும் தெளிக்கப்பட்டிருந்த இஸ்ரவேலரின் வீடுகளை அவன் கடந்துபோனான். “சாவில்லாத ஒரு வீடும் இல்லாததால் எகிப்தியர் மத்தியில் மகா கூக்குரல் உண்டாக” அமைதி கலைக்கப்பட்டது. என்றபோதிலும், ஒவ்வொரு இஸ்ரவேல் வீட்டிலும் அதன் அருமையான முதல் பிள்ளை உயிரோடும் சுகமாயுமிருந்தது.—யாத்திராகமம் 12:12, 21–24, 30.
அதற்குப் பின்பு விரைவிலேயே, எகிப்தினுடைய பார்வோனின் சேனை வேகமாக துரத்திக் கொண்டுவர, சிவந்த சமுத்திரத்தின் கரையிலே அவர்கள் பிடிப்பட்டது போல தோன்றிய சமயத்தில், யெகோவா அற்புதமாக குறுக்கிட்டதைக் கண்கூடாக பார்த்த போது இஸ்ரவேலரின் இருதயங்களில் நன்றியுணர்வு பொங்கியிருக்க வேண்டும். முதலாவதாக, அவர்களை வழிநடத்தி வந்த மேகஸ்தம்பம் விலகி, அவர்கள் பின்னே நின்று, துரத்திக் கொண்டு வருபவர்களின் வேகத்தை நன்றாகவே குறைத்துவிட்டது. பின்னர், இஸ்ரவேலர், மோசே சமுத்திரத்தின் மேல் கையை நீட்டுவதைப் பார்த்தார்கள். அப்பொழுது கடவுள், இரா முழுவதும் பலத்த கீழ்க்காற்றை வீசச் செய்ய, தண்ணீர்கள் பிளந்து சமுத்திரம் வறண்ட நிலமாக மாறியது. தப்பியோட கடவுள் அருளிய இந்தப் பாதை வழியாக வேகமாக ஓடிப் போக இஸ்ரவேலரை துரிதப்படுத்த வேண்டிய அவசியமிருக்கவில்லை.
ஆனால் இப்பொழுது புதிய ஒரு காரணத்துக்காக அவர்களுக்குப் பீதி ஏற்பட்டது! இஸ்ரவேலரைத் தொடர்ந்து சென்று பிடித்துவிடலாம் என்ற உறுதியான நம்பிக்கையோடு எகிப்தியர்கள் சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். ஆனால் பாருங்கள்! எகிப்தியர் அனைவரும் மதிலாக நின்ற தண்ணீர் பாதைக்குள் வந்த போது, அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழல ஆரம்பித்தன. சீக்கிரத்தில் அங்கே பெருங்குழப்பம் உண்டானது. பின்னர் இஸ்ரவேலர் அனைவரும் அடுத்த கரையை பாதுகாப்பாக அடைந்தப் பின்பு யெகோவா மீண்டுமாக மோசேயை கையை நீட்டும்படியாகச் சொன்னார். அப்பொழுது “விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது.” விளைவு? உயர்வாக மதிக்கப்பட்ட பார்வோனின் இராணுவ சேனையில் ஒருவர்கூடவோ அல்லது மேட்டிமையான அரசன் தானேயும்கூட மூழ்கிப்போகாமல் உயிர் தப்பவில்லை. (யாத்திராகமம் 14:19–28; சங்கீதம் 136:15) மீட்கப்பட்ட இஸ்ரவேலர் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
கடவுளுடைய அசாதாரணமான போர் முறைகள்
எகிப்திலிருந்து விடுதலையானற்காகவும், சிவந்த சமுத்திரத்தினூடே கடந்து வந்த அவர்களுடைய மறக்க முடியாத அனுபவத்திற்காகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தபோதிலும், இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சென்றடைவதற்கு முன்பாக அநேக கடுஞ்சோதனையான அனுபவங்களை எதிர்ப்பட வேண்டிதாக இருந்தது. ஆனால் 40 ஆண்டு கால வனாந்தர பயணத்தின்போது ஏற்பட்ட ஒவ்வொரு அனுபவமும் யெகோவாவுக்கு விசேஷமாக நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு கூடுதலான ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும்.
கடைசியாக இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடந்து கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருந்த தேசத்துக்கு வந்து சேர்ந்தார்கள். வெகு சீக்கிரத்தில் அவர்களின் சார்பாக யெகோவாவின் அசாதாரணமான போர் முறைகளுக்கு ஓர் உதாரணத்தை நேரில் பார்த்தார்கள். எவ்விதமாக? ஏன், அவர்கள் எதிர்ப்பட்ட முதல் கானானிய பட்டணமாகிய எரிகோவை வியப்பூட்டும் வகையில் கைப்பற்றி அதை அழித்ததன் மூலம்! (யோசுவா அதிகாரம் 6) கடவுளுடைய கட்டளைப்படி, உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு எரிகோவைச் சுற்றி அணிவகுத்துச் சென்ற போர்திற நடவடிக்கை எத்தனை அசாதாரணமானது! வரிசையாக ஆறு நாட்கள் அவர்கள் மதிலைச் சுற்றி, ஒவ்வொரு நாளும் ஒரு முறை அணிவகுத்துவந்தார்கள். ஏழாம் நாளில் மதிலை அவர்கள் ஏழுதரம் சுற்றி வந்தார்கள். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை ஊதுகையில், இஸ்ரவேலர் “மகா ஆரவாரத்தோடே முழங்குகையில் அலங்கம் இடிந்து விழுந்தது!” (வசனம் 20) ராகாபின் வீடும் அதற்குக் கீழே இருந்த மதிலின் ஒரு பகுதியும் மாத்திரம் நின்று கொண்டிருந்தது. தகர்க்க முடியாததாக தோன்றிய இந்த நகரத்தின் மதில், யோசுவாவோ அவனுடைய சேனையோ ஓர் அம்பைக்கூட எறிய வேண்டிய அவசியமில்லாமலேயே வீழ்ந்துவிட்டது! நிச்சயமாகவே, எரிகோவில் ஏற்பட்ட அந்த அனுபவம், கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க குறிப்பிடத்தக்க கூடுதலான காரணமாக இருந்தது.
மற்றொரு சந்தர்ப்பத்தில், யெகோவாவின் அசாதாரணமான போர் முறைகளில் ஒன்று குறிப்பிடத்தக்க வகையில் காண்பிக்கப்பட்டது. கிபியோனின் குடிகள் இஸ்ரவேலரோடே சமாதானம் பண்ணியபோது, ஐந்து எமோரிய ராஜாக்கள் கிபியோனியர் மீது போர் தொடுத்தார்கள். யோசுவா அவர்களுடைய உதவிக்கு வர, தொடர்ந்து நடந்த யுத்தத்தில் யெகோவாவின் அற்புதமான கரம் இருந்தது திரும்பத் திரும்ப காட்டப்பட்டது. கடவுள் எமோரியர்களை கலங்கப்பண்ணின போது “அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப் போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள் மேல் யெகோவா வானத்திலிருந்து பெரிய கற்களை விழப் பண்ணினார், அவர்கள் செத்தார்கள்.” இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.—யோசுவா 10:1–11.
“யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள் என்றான்.” விளைவு? “அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டு மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது” என்று பதிவு சொல்லுகிறது.—யோசுவா 10:12, 13.
என்னே திகைப்படையச் செய்யும் சம்பவங்கள்! யெகோவாவின் மக்களின் பங்கில் நன்றியுள்ளவர்களாயிருக்கக் கூடுதலான என்னே முக்கியமான காரணங்கள்!
நன்றியுணர்வு குறுகிய காலமே இருந்தது
யெகோவா ஒவ்வொரு சமயம் குறுக்கிட்டதை வெளிப்படுத்திய போதும், இஸ்ரவேலர் நன்றியுணர்வால் நிறைந்திருந்தார்கள். ஒவ்வொரு இஸ்ரவேலனும் தான் பார்த்த காரியங்களை ஒருபோதும் மறக்க முடியாது என்பதாக தன் இருதயத்தில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட நன்றியுணர்வு நம்ப முடியாத அளவு குறுகிய காலமே நிலைத்திருந்தது. மறுபடியும் மறுபடியுமாக இஸ்ரவேலர் நன்றிகெட்ட மனநிலையை வெளிப்படுத்தினார்கள். இதன் காரணமாகவே கடவுள், “அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக் கொடுத்தார்; அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள்.”—சங்கீதம் 106:41.
என்றபோதிலும் இஸ்ரவேலர் பயங்கரமான தொந்தரவுக்குள்ளாகி, தங்களுடைய தவறான மற்றும் நன்றிகெட்ட போக்கிலிருந்து மனந்திரும்பி உதவிக்காக அவரை நோக்கி கூப்பிட்ட போது, அவர் தம்முடைய பெருந்தன்மையான மன்னிக்கும் ஆவியை அவர்களிடம் காட்டினார். “அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும் போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி, அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டார்.” (சங்கீதம் 106:44, 45) மறுபடியும் மறுபடியுமாக, மன்னிக்கின்ற அவர்களுடைய கடவுள், ஒடுக்குகிறவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து தம்முடைய தயவுக்குள் அவர்களை ஏற்றுக் கொண்டார்.
கடவுளுடைய நீடிய பொறுமையின் மத்தியிலும், அவர்களுடைய சிந்தனையை சரிசெய்ய அவர் மறுபடியும் மறுபடியுமாக தீர்க்கதரிசிகளை அனுப்பிய போதிலும், இஸ்ரவேலர் திருத்தப்பட முடியாதவர்களாக தங்களை நிரூபித்தனர். கடைசியாக யெகோவாவின் பொறுமை எல்லையை அடைய, பொ.ச.மு. 607-ல் யூதா தேசம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட அவர் அனுமதித்தார். நேபுகாத்நேச்சார் ராஜாவின் சேனைகளால் கொல்லப்படாதவர்கள் பாபிலோனுக்கு கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
கடவுளிடமாக திரும்பத் திரும்ப நன்றி கெட்டவர்களாகவும் உண்மை தவறினவர்களாகவும் இருந்ததற்காக என்னே அவலமான ஒரு முடிவு! நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தபோதிலும் இது சம்பவித்தது.
பொதுவாக மனிதவர்க்கத்திற்காக அவர் செய்திருக்கும் நன்மையான காரியங்களுக்கும் மேல் கூடுதலாக, யெகோவா தேவன் தங்களுக்காக செய்திருக்கும் எல்லாவற்றிற்காகவும் நன்றியுணர்வைக் காட்டத் தவறும் அதே தவறை கிறிஸ்தவர்கள் இன்று எவ்விதமாக தவிர்க்கக்கூடும்? “நன்றியறிதலுள்ளவர்களாக உங்களைக் காண்பியுங்கள்” என்ற கட்டுரையில் சிந்திப்பதற்காக இதை நாம் விட்டுவிடுகிறோம். (w88 7⁄1)