கடவுளுடைய ராஜரீகத்தின் மகிமையைக் குறித்துப் பேசுங்கள்
“உமது ராஜரீகத்தின் மகிமையைக் குறித்தும் உமது வல்லமையைக் குறித்தும் அவர்கள் பேசுவார்கள்.”—சங்கீதம் 145:11
பேசும் திறமையை நமக்கு அளித்திருப்பதில் யெகோவா ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தார். (யாத்திராகமம் 4:11) நம்முடைய உதடுகளில் அவருடைய “துதி பொங்கிவழிய” வேண்டும் என்பதே அந்த நோக்கம். (சங்கீதம் 119:171, 172, NW) சங்கீதக்காரனாகிய தாவீது சொன்னான்: “யெகோவாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும், உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்தரிப்பார்கள். மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும் உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு உமது ராஜ்யத்தின் [ராஜரீகத்தின், NW] மகிமையை அறிவித்து உமது வல்லமையைக் குறித்து பேசுவார்கள். உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.”—சங்கீதம் 145:10-13.
2 இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களும் “திரள் கூட்டமான” அவர்களுடைய தோழர்களும் “நித்தியத்தின் ராஜாவாகிய” யெகோவாவைத் துதிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9; 15:3, NW) காவற்கோபுரம் பத்திரிகையையும் மற்ற கிறிஸ்தவ பிரசுரங்களையும் உதவி நூல்களாகப் பயன்படுத்தி பைபிளை ஊக்கத்தோடு படிப்பதன் மூலம் தூய்மையான புத்துயிரளிக்கும் ஜீவ தண்ணீரைப் போன்ற கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இப்படியாக, நம்முடைய காரியத்தில் “ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப் போலிருக்கும்.” (நீதிமொழிகள் 18:4) வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் மற்ற வகை வெளி ஊழியத்திலும் “துதி பொங்கி வழிய” உந்தப்படுகிறோம். ஆனால் சந்தர்ப்ப சாட்சியத்திற்கு வேதப்பூர்வமான காரணமும் உண்டு.
வேதப்பூர்வமான முற்சான்றுகள்
3 பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட பின்பு இயேசு செய்த முதல் பிரசங்க வேலை தாம் தங்கியிருந்த இடத்திலாகும். அங்கு அவர் யோவானையும் அந்திரேயாவையும் பேதுருவையும் அழைத்திருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவர்கள் அநேகமாய் ஏராளமான சாட்சியைப் பெறுவதில் அந்த நாளை அங்கு செலவழித்தார்கள். (யோவான் 1:35-42) மற்றும் இயல்பான சூழ்நிலையில்தான்—“புறப்பட்டுப்போகையில்”—இயேசு ஆயத்துறையில் மத்தேயுவைப் பார்த்து, “எனக்குப் பின்சென்று வா,” என்று சொன்னபோது நல்ல பலன்களைக் கண்டார்.— மத்தேயு 9:9.
4 “ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல்” இருப்பதில் இயேசு தாமே மிகச் சிறந்த முன்மாதிரி. அவர் சீகார் என்னப்பட்ட ஊருக்கு அருகாமையிலிருந்த யாக்கோபுடைய கிணற்றருகே பசியாகவும் களைப்பாகவும் உட்கார்ந்தபோதிலும். தண்ணீர் மொள்ள வந்த ஒரு சமாரிய பெண்ணிடம் சாட்சி கொடுத்தார். “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது,” என்றார் இயேசு, “நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்.” இயல்பான சூழ்நிலையில் கொடுக்கப்பட்ட இந்தச் சந்தர்ப்ப சாட்சியம், அவர் சொல்வதைக் கேட்க கூடிவரும்படி அந்தப் பெண் ஊக்குவித்த ஒரு தொகுதியிடமாக இயேசு பிரசங்கிப்பதற்கு வழிவகுத்தது.—யோவான் 4:6-42.
5 சுவிசேஷகனாகிய பிலிப்பு, கடந்துபோய்க்கொண்டிருந்த ஓர் இரதத்தைச் சந்தித்து அதில் ஏசாயா தீர்க்கதரிசனத்தை வாசித்துக் கொண்டிருந்தவனிடம் இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சியம் கொடுத்தான். இரதத்தில் உடன்வர அழைப்பைப் பெற்ற பிலிப்பு, அந்த எத்தியோப்பியனிடம் “இயேசுவைக் குறித்த நற்செய்தியை” விவரித்துச் சொன்னான். அவன் போற்றுதல் மனப்பான்மையுடன் பிரதிபலித்தது அவன் முழுக்காட்டுதல் பெறுவதில் விளைவடைந்தது. (அப்போஸ்தலர் 8:26-38) பிலிப்பியில் அப்போஸ்தலனாகிய பவுலின் சிறைக் கட்டுகள் ஒரு பூமியதிர்ச்சியால் அவிழ்க்கப்பட்ட சமயத்தில் அவன் சிறைக் காவலனிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தான். பலன் என்ன? அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.”—அப்போஸ்தலர் 16:19-34.
6 நம்முடைய கிறிஸ்தவ வேலைக்குத் தடை இருக்கும் இடங்களில் சந்தர்ப்ப சாட்சியம் நற்செய்தியை அறிவிப்பதற்கு ஒரு வழியாக இருக்கிறது. நாம் துன்புறுத்தப்பட்டாலுங்கூட கடவுளுடைய ராஜரீகத்தின் மகிமையைக் குறித்துப் பேச நம்முடைய இருதயங்கள் நம்மை ஏவுகின்றன. ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு துன்புறுத்தப்பட்ட சீஷர்களில் பலர் வெவ்வேறு இடங்களுக்குச் சிதறிச் சென்றார்கள். என்றபோதிலும் அவர்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கித்து வந்தார்கள். அவர்களுடைய ராஜ்ய பிரசங்கிப்பு முயற்சிகளில் சந்தர்ப்ப சாட்சியம் உட்பட்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை.—அப்போஸ்தலர் 8:4-8; 11:19-21.
7 நாம் சிறையில் வைக்கப்பட்டால் அல்லது சுகவீனம் அல்லது உடலூனம் காரணத்தால் நம்முடைய வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டால் கடவுளுடைய ராஜரீகத்தின் மகிமையைக் குறித்துப் பேசுவதற்கு ஒரு சிறந்த வழி சந்தர்ப்ப சாட்சியம். பவுல் இரண்டு வருடங்களுக்கு ரோமில் காவலில் வைக்கப்பட்டான். அவன் நேரத்தை வீணாகக் கழித்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக மற்றவர்களை அன்புடன் வரவழைத்து “இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.” (அப்போஸ்தலர் 28:16-21) எப்பேர்ப்பட்ட ஓர் அருமையான முன்மாதிரி! நீங்கள் வெளியே செல்லமுடியாத நிலையிலிருக்கும் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பீர்களானால், இதுபோன்ற ஒன்றை நீங்கள் செய்யக்கூடுமா?
8 பவுலைக் காவல் காத்த சேவகர்கள் அவ்வப்போது மாறின போது, கடவுளுடைய ராஜரீகத்தின் மகிமையைக் குறித்து பவுல் மற்றவர்களிடம் பேசுவதை அவர்கள் கேட்டு வந்தார்கள். பவுல் அந்தச் சேவகர்களிடையே நேரடியாக சாட்சி கொடுத்தான் என்பது குறித்தும் நாம் நிச்சயமாயிருக்கலாம். அவன் கொடுத்த சந்தர்ப்ப சாட்சியம் நல்ல பலனுடையதாய் இருந்ததால் பவுல் பின்வருமாறு எழுத முடிந்தது: “எனக்குச் சம்பவித்தவைகள் சுவிஷேசம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று . . . அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன் கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.” (பிலிப்பியர் 1:12-14) பவுலைப்போல நாம் சிறையில் போடப்பட்டாலும் வெளியே சென்று சாட்சி சொல்லும் வாய்ப்பை இழந்தவர்களாகவும் இருப்போமானால் நாம் தொடர்ந்து கடவுளுடைய ராஜரீகத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கலாம். இது நம்முடைய சகோதரர்களில் எவ்வளவு தைரியத்தை ஊட்டுவதாயிருக்கும்!
9 பூர்வீக கிறிஸ்தவர்களின் மத்தியில் சந்தர்ப்ப சாட்சியம் கொடுப்பது அவ்வளவு அதிகமாகக் காணப்பட்டதால், அதற்குப் பின்னான ஆண்டுகளைக் குறித்தும் இப்படியாகச் சொல்ல முடிந்தது: “அநேகமாய்க் கார்த்தேஜில் 200-ம் ஆண்டுபோல் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவ எழுத்தாளரிடமிருந்து உயர்ந்த கல்வியறிவு பெற்ற ஆட்களைப் பற்றி தெரியவருகிறது . . . மூன்று இளம் வழக்கறிஞர்கள், மிக நெருங்கிய நண்பர்கள், கடற்பகுதியில் ஒரு நாள் விடுமுறையைக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் கிறிஸ்தவர்கள், மூன்றாவது நபர் புறமதத்தைச் சேர்ந்தவர். அவர்களுடைய உறையாடல் மதத்தின் பக்கமாக திரும்புகிறது . . . அவர்களுடைய நீண்ட விவாதம் முடிவடைகிறது, ‘நாங்கள் மூவருமே மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம். தான் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்ததுகுறித்து ஒருவர் மகிழ்ச்சியடைகிறார், மற்றவர்கள் அவரை அதற்கு வழிநடத்தியது குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.’ அந்த எழுத்துக்கள் உண்மை சரித்திரம் என்று பாசாங்கு செய்வதில்லை, அது மினுஸியஸ் பெலிக்ஸின் ஒரு வாத விளக்க ஆதாரமே. ஆனால் அதிக வாய்ப்புகளைக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் நடந்த காரியத்தை அது எடுத்துக் காட்டுகிறது.” (ஜான் ஃபாஸ்டர் எழுதிய சர்ச் சரித்திரம்—முதல் முன்னேற்றம்: கி.பி. 29-500) ஆம், அந்தச் சமயத்தில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்களிடையே இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சியம் கொடுப்பது மரித்துவிடவில்லை என்பதை இந்தப் பதிவு காண்பிக்கிறது.
10 பூர்வ கிறிஸ்தவர்களைக் குறித்து பின்வருமாறும் கூறப்பட்டிருக்கிறது: “தனிப்பட்ட கிறிஸ்தவ விசுவாசிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிப்பு இருந்து கொண்டுவந்தது. அவர்கள் எங்கு சென்றாலும், தங்கள் சொந்த வேலையாகச் சென்றாலும் அல்லது துன்புறுத்தலினால் துரத்தப்பட்டபோதிலும் கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்கள் . . . தங்களுடைய வியாபாரத்தை, தங்களுடைய தொழிலை, தங்களுடைய அநுதின வேலையை, விசுவாசத்தை விஸ்தரிப்பதற்குப் பயன்படுத்தியவர்கள் ஏராளமானவர்களாக இருந்தனர்.” (எட்வின் முன்செவ் பிலிஸ் எழுதிய தி மிஷனரி என்டர்ப்பரைஸ், பக்கம் 14) ஆம், பூர்வ ராஜ்ய பிரசங்கிகள் இயல்பான சூழ்நிலைகளிலும் மற்ற வகைகளிலும் சாட்சி கொடுத்து வந்தனர்.
முன்யோசனையும் ஆயத்தமும்
11 இயேசுவைப் போலவும் அவருடைய பூர்வ சீஷர்கள் போலவும் நாம் கிரமமான முறையிலும் இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதும் சாட்சி கொடுக்க வேண்டும். அதைத் திறம்பட்ட விதத்தில் செய்வதற்கு முன்யோசனையும் ஆயத்தமும் அவசியம். சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது அல்லது புத்திமதிகளைக் கொடுக்கும்போது, இயேசு, பிள்ளைகள், உணவு, உடை, பறவைகள், பூக்கள், சீதோஷ்ண நிலைகள், மற்றும் தொழில் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். (மத்தேயு 4:18, 19; 6:25-34; 11:16-19; 13:3-8; 16:1-4) நாமுங்கூட கடவுளுடைய சத்தியத்தினிடமாகப் பிறர் கவனத்தைத் திருப்புவதற்கு எந்த ஒரு பொருளிலும் பேசலாம்.
12 பூங்காக்களில் உட்கார்ந்திருக்கும் மக்களிடமும், கடைகளில் வரிசையில் நிற்பவர்களிடமும் நாம் சாட்சி கொடுக்கலாம். அத்தேனே பட்டணத்தில் பவுல் “சந்தை வெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணை பண்ணினான்.” ஆனால் சந்தர்ப்ப சாட்சியத்திற்கு நாம் ஆயத்தம் செய்ய வேண்டும். உதாரணமாக விமானம், ரயில் அல்லது பஸ் மூலம் பயணம் செய்வதற்கு திட்டமிடுகிறீர்களா? அப்படியென்றால் ஒரு பைபிளையும் சில துண்டுபிரதிகளையும், பத்திரிகைகளையும் அல்லது புரோஷூர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செய்யும் போது அல்லது மற்ற இடங்களில் கிறிஸ்தவ பிரசுரங்களை வாசிப்பது ஒரு சம்பாஷணையை துவக்க ஏதுவாக இருக்கிறது.
13 முதல் வருவது நட்பான ஒரு முன்னுரை வேதவசனங்களில் நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் [Reasoning From the Scriptures] என்ற ஆங்கில கைப் புத்தகம், வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கான முன்னுரைகளை சிபாரிசு செய்கிறது. உதாரணமாக, பயணம் செய்யும்போது நீங்கள் வயதான ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்திருப்பீர்களானால், நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “என்னுடைய பெயர்———. வாழ்க்கையின் நோக்கத்தைக் குறித்து நான் அதிகமாக சிந்தனை செய்து வந்திருக்கிறேன். அநேகர் பணம் சம்பாதிப்பதிலேயே அவ்வளவாக ஈடுபாடுடையவர்களாயிருப்பதால், வாழ்க்கையின் நோக்கம் குறித்து சிந்தித்து பார்க்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நாமோ வயதாக ஆக, வாழ்க்கை மிக குறுகியதாயிருப்பதை உணர்ந்து இப்படியாக யோசிக்கக்கூடும்: ‘வாழ்க்கைக்கு இருக்கும் அர்த்தம் இதுதானா? நாம் உயிரோடிருப்பதற்குக் கடவுள் ஒரு நோக்கத்தையுடையவராய் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” அவர்கள் விடையளிக்க அனுமதியுங்கள். பின்பு மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய நோக்கத்தைக் குறித்துப் பேசலாம், மற்றும் வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் வாக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மகத்தான காரியங்களைக் குறித்து பேசலாம். சந்தர்ப்ப சாட்சியம் பலனுள்ளதாக இருப்பதற்கு சபைக் கூட்டங்களிலும் கிறிஸ்தவ பிரசுரங்களிலும் நீங்கள் கற்றுக் கொள்ளும் அருமையான குறிப்புகளையும் பயன்படுத்தலாம்
நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்
14 இயேசுவையும் அவருடைய பூர்வீக சீஷர்களையும் போல நாமும்கூட சந்தர்ப்ப சாட்சியம் கொடுப்பதில் வெற்றி காணலாம். உதாரணமாக: விமான பயணத்தின்போது ஒரு சாட்சி ஓர் இராணுவ அதிகாரியிடம் பேசினார். அவர் விவாகமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. அவருடைய மனைவி போதை மருந்துகளை உட்கொள்பவளாகவும், பலமுறை தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டவளாகவும் ஓர் இளம் மனிதனுக்காக இவரை விட்டுவிடும் நிலையை அடைந்தவளாகவும் இருந்தாள். காவற்கோபுரம் பத்திரிகையிலிருந்தும் அதன் கூட்டு பத்திரிகையாகிய விழித்தெழு!-விலிருந்தும் தான் பெற்றுவரும் வேதப்பூர்வமான உதவி குறித்து இந்தச் சாட்சி எடுத்துச் சொன்னபோது, அந்த அதிகாரி இந்தப் பத்திரிகைகளுக்கு சந்தா எடுத்து, அவற்றைத் தன் மனைவிக்கு அனுப்ப வேண்டுமென்று விருப்பந் தெரிவித்தார். இந்தச் சாட்சி சொன்னதை மற்ற பயணிகளும் கேட்டார்கள். பலன்? அந்தச் சமயத்தில் சாட்சி கொடுத்ததால் இவர் 22 சந்தாக்களைப் பெற்றார், 45 பத்திரிகைகளையும் 21 புத்தகங்களையும் அளித்தார்!
15 உடன் வேலை செய்யும் ஆட்களிடம் சாட்சி கொடுப்பதைப் பற்றியதென்ன? ஒரு சகோதரர் தான் வேலை செய்த இடத்திலுள்ள துப்புறவு அறையில் நம்முடைய பத்திரிகைகளின் பிரதிகளை விட்டுச் சென்றார். உடன் வேலை செய்யும் ஒருவர் அந்தப் பத்திரிகைகளை வாசித்து, பின்பு அந்தச் சகோதரரை சந்தித்து அவற்றிற்குச் சந்தா எடுத்தார். அவர் ஒரு பைபிள் படிப்பையும் ஏற்று, தன்னுடைய ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை விட்டொழித்தார், ஆனால் கடவுளுடைய பெயர் சொல்லப்பட்ட ஒவ்வொரு முறையும் அவருடைய மனைவி வீட்டைவிட்டு வெளியேறினாள். அவர் சர்ச்சிலிருந்து விலகிவிட தீர்மானித்தபோது, அந்தச் சர்ச் பாதிரி இதைக் குறித்து கலந்துபேச வீட்டுக்கு வந்தார். வீட்டிலோ அவருடைய மனைவி மட்டும்தான் இருந்தாள். அந்தப் பாதிரியின் விசுவாசமின்மையும், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவர் சொன்ன பொய்யான காரியங்களும் அவளுக்கு அதிர்ச்சியாயிருந்தன, ஏனென்றால், தன்னுடைய கணவன் நல்லவனாக மாறினதை அவள் கண்டாள். அவள் அந்தப் பாதிரியிடம்: “நீர் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சேர்த்து ஒரு விலக்கல் சான்றிதழைப் பூர்த்தி செய்யலாம்!” என்றாள். காலப்போக்கில் இந்த மனிதனும் இவருடைய மனைவியும் முழுக்காட்டுதல் பெற்ற சாட்சிகளானார்கள்.
16 தற்போது ஐக்கிய மாகாணங்களில் வாழும் ஒரு சகோதரர், பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் ஓர் உடன் தொழிலாளியிடம் இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார். மற்றும் யெகோவாவின் சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு படக்காட்சியைப் பார்க்க அந்த இளம் மனிதனை அழைத்துச் சென்றார். முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பின்பு, அந்தச் சகோதரர் பின்வருமாறு எழுதப்பட்ட ஒரு கடிதத்தைப் பெற்றார்: “நீர் [அந்த இளம் மனிதனுக்குக்] கொடுத்த சாட்சி பலன் தந்து விட்டது. ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு அவரிடம் இன்னொரு சகோதரர் பேசி பத்திரிக்கைகள் அளித்து, அந்தப் பிராந்தியத்திலிருந்த ராஜ்ய மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார் . . . அவர் ஒரு சாட்சியானார், 1959-ல் முழுக்காட்டுதல் பெற்றார், இப்பொழுது அவருடைய சபையில் ஒரு மூப்பராக இருக்கிறார் . . . பதினான்கு வருடங்களுக்குப் பின்பு அவருடைய மனைவியும் ஒரு சாட்சியாக ஆனாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு அவருடைய மகள் முழுக்காட்டுதல் பெற்று இப்பொழுது வடக்கு டெர்பிஷயாரில் ஒரு ஒழுங்கான பயனியராக இருக்கிறாள். . . . அப்பொழுது ஆஷ்போர்டில் நீர் கொடுத்த சாட்சியால் அதைக் கேட்ட அந்த நபரும் அவருடைய மனைவியும், மகளும், ஒன்றுவிட்ட சகோதரியும் அவளுடைய மகளும், அவளுடைய கணவனும், ஐந்து பிள்ளைகளும், அந்த ஒன்றுவிட்ட சகோதரியின் இன்னொரு மகளின் ஒரு பிள்ளையும் சாட்சிகளாகியிருக்கின்றனர் . . . நான் உமக்கு அதிக நன்றி சொல்ல விரும்புகிறேன், டெட், ஏனென்றால் நான்தான் அந்த இரும்புக் கம்பங்களை அமைப்பவன். நான் இப்பொழுது சொன்ன கதை நீர் எப்படி எனக்குச் சாட்சி சொன்னீர், அதன் பலன் என்ன என்பதை விளக்கிடும் என்னுடைய சொந்த கதை.”
17 யெகோவாவின் இளம் ஊழியர்களாகிய நீங்களுங்கூட சாட்சி கொடுப்பதற்கு ஒரு நல்ல பிராந்தியத்தைக் கொண்டிருக்கிறீர்கள்—உங்களுடைய பள்ளித் தோழர்களும் ஆசிரியர்களும். கட்டுரைகள் எழுதும்போதும், கருத்துப் பரிமாற்றங்களின்போதும், மற்ற சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிறீர்களா? பைபிள் படிப்பு நடத்தப்பட்டு வந்த ஈக்வடோரியன் உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன் ஆகஸ்ட் 22, 1985 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்த “ஹிரோஷிமா—அதன் பாடங்கள் மறக்கப்பட்டுவிட்டனவா?” என்ற தொடர் கட்டுரைகளைப் பள்ளியில் ஒரு கட்டுரை எழுத பயன்படுத்தினான். ஒரு சர்வதேச கட்டுரைப் போட்டியில் அவனுடைய கட்டுரை நீதிபதிகளின் போற்றுதலைப் பெற்று ஜப்பானுக்கு ஓர் இலவச பயணத்தையும் பெற்றுத் தந்தது. உண்மைதான், போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது கிறிஸ்தவ பிரசுரங்களின் நோக்கம் அல்ல, ஆனால் அப்படிப்பட்ட பிரசுரங்களின் மதிப்பையும், பள்ளியில் கடவுளுக்கு துதியுண்டாக்கும் வகையில் சாட்சி கொடுப்பதன் பலனையும் இது விளக்கிக் காட்டுகிறது.
18 பொருளாதார காரணங்களினிமித்தம் ஒரு சகோதரி தன்னுடைய வீட்டில் ஓர் அறையை வாடகைக்கு விட வேண்டியதாக இருந்தது. அது குறித்து ஒரு பெண் தொலைப்பேசியில் அவரிடம் தொடர்பு கொண்டபோது, தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்றும், தன்னுடைய வீட்டில் ஒழுக்கங்கெட்ட நடத்தை அனுமதிக்கப்படாது என்றும் கூறினாள். விருந்தினர்கள் நேரம் கழித்து செல்லக்கூடாது, மற்றும் சந்திக்க வரும் ஆண்கள் எல்லா சமயத்திலும் மற்றவர்கள் பார்வையில் இருக்கவேண்டும். தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அந்தப் பெண் சற்று தாமதித்து பின்வருமாறு சொன்னாள்: “நான் இளம் பெண்ணாக இருக்கும்போது படித்தேன், ஆனால் அது எனக்கு அக்கறைத்தூண்டுவதாயில்லை. எனவே நான் கல்லூரிக்குப் போனேன்.” அவள் பைபிளைத் திரும்ப படிக்க விரும்புகிறாளா என்று கேட்கப்பட்ட சமயத்தில், அவள் “ஆம்” என்றாள். காலப்போக்கில் அவளும் அவளுடைய தாயும் அவளுடைய சகோதரியும் யெகோவாவுக்கு ஒப்புக் கொடுத்த ஊழியர்களாக ஆனார்கள்—இதெல்லாம் ஒரு சகோதரி இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் பலன்.
19 பாஹாமாஸில் ஒரு கத்தோலிக்கப் பெண் ஐந்து வருடங்களாக சர்ச்சுக்குப் போகாமலிருந்ததால் அவளுடைய மனச்சாட்சி அவளை அதிகமாக உறுத்திக்கொண்டிருந்தது. எனவே மழைபெய்து கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை சர்ச்சுக்குப் போய்க்கொண்டிருந்தாள். அந்தச் சமயம் மூன்று சாட்சிகள் அந்தப் பக்கமாக அவளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்—சாட்சியும் கொடுத்தனர். சர்ச் வந்தது, அவளோ இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினாள், மற்றும் பைபிளைப் படித்துக்கொண்டிருந்த மற்றொருவரைக் கூட்டிச்செல்வதற்காக அவர் வீட்டிற்கு போகும்வரை அவள் அவர்களுடனே இருந்தாள். திரும்பிச் செல்லும்போதும் அந்தச் சர்ச்சைக் கடந்தனர், ஆனால் அவள் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினாள், எனவே அப்படியே ராஜ்ய மன்றத்துக்குச் சென்றனர். காரில் என்ன பொருளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்களோ, அதே பொருளில் தான் பொதுப்பேச்சும் கொடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணோடு ஒரு பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. தான் விவாகமின்றி வாழ்ந்துகொண்டுவந்த மனிதனை (தன்னுடைய நான்கு பிள்ளைகளின் தகப்பனை) விலக்கினாள். அவள் 1986-ல் நாஸாவில் நடந்த ஒரு மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றாள். ஒருவர் தனக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததற்காக அவள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாள்!
கடவுளுடைய ராஜரீகத்தைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருங்கள்
20 இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சியம், யெகோவாவின் சாட்சிகள் ஒழுங்காக செய்து வரும் வெளி ஊழியத்திற்கு பதில் ஊழியமாக இருக்க முடியாது. வீட்டுக்கு வீடு பிரசங்கித்தல் வேதப்பூர்வமானதும் பலன் மிகுந்ததுமான ஒன்று. (அப்போஸ்தலர் 5:42; 20:20, 21) என்றபோதிலும், சந்தர்ப்ப சாட்சியம் பலன் தரக்கூடியது, யெகோவாவின் ஊழியர்கள் இதில் பங்குபெறவேண்டும். எங்கெல்லாம் ஆட்கள்—உறவினர்கள், உடன் மாணவர்கள், உடன் வேலையாட்கள், மற்றவர்கள்—இருக்கிறார்களோ அங்கெல்லாம் கடவுளுடைய ராஜரீகத்தின் மகிமையைக் குறித்து பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே பயமோ அல்லது வெட்கமோ உங்களை தடை செய்ய வேண்டாம். (நீதிமொழிகள் 29:25; 2 தீமோத்தேயு 1:6-8) சந்தர்ப்ப சாட்சி கொடுக்க நீங்கள் தயங்குகிறீர்களென்றால் இயேசுவின் துன்புறுத்தப்பட்ட சீஷர்கள் ஜெபித்ததுபோன்று நீங்கள் ஏன் ஜெபிக்கக்கூடாது? அவர்கள் இப்படியாக மன்றாடினார்கள்: “யெகோவாவே . . . உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அநுக்கிரகஞ் செய்தருளும்.” அவர்களுடைய ஜெபம் கேட்கப்பட்டதா? ஆம், “அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.”—அப்போஸ்தலர் 4:23-31.
21 எனவே, இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சியம் குறித்து நம்பிக்கையான மனநிலையை வளருங்கள். கடவுள் பேரிலான அன்பு எல்லா விதமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் ஒரு சாட்சி கொடுப்பதற்கு உங்களைத் தூண்டக்கடவது. உற்சாகமுள்ளவர்களாய், எல்லா சந்தர்ப்பத்திலும் சத்தியத்தால் பொங்கி வழிகிறவர்களாய் இருங்கள். ஆம், கடவுளுடைய ராஜரீகத்தின் மகிமையைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருங்கள்.
(w87 10⁄15)
உங்களுடைய விடைகள் என்ன?
◻ இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு என்ன வேதப்பூர்வமான ஆதாரம் இருக்கிறது?
◻ சந்தர்ப்ப சாட்சியத்திற்கு ஆயத்தம் செய்ய என்ன சில வழிகள் இருக்கின்றன?
◻ நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தால் என்ன பலன்களை எதிர்பார்க்கலாம்?
◻ ஒழுங்காக செய்யப்படும் வெளி ஊழியத்துடன் சம்பந்தப்படுத்துகையில் சந்தர்ப்ப சாட்சியத்தை நாம் எப்படி நோக்கவேண்டும்?
[கேள்விகள்]
1. மிக முக்கியமாக, யெகோவா ஏன் நமக்கு பேசும் திறமையைக் கொடுத்திருக்கிறார்?
2. கடவுளுக்கு எந்த வழிகளில் நாம் நம்முடைய உதடுகளில் “துதி பொங்கி வழிய” உந்துவிக்கப்படுகிறோம்?
3. இயல்பான சூழ்நிலையில் இயேசு கிறிஸ்து சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததற்கு ஓர் உதாரணம் காட்டுங்கள்.
4. சமாரியப் பெண்ணிடம் சாட்சி கொடுக்கும்போது இயேசு என்ன சொன்னார்?
5. சுவிசேஷகனாகிய பிலிப்புவும் அப்போஸ்தலனாகிய பவுலும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் என்ன முன்மாதிரியை வைத்தார்கள்?
6. ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டதற்குப் பின்பு இயேசுவின் சீஷர்களுடைய என்ன நடவடிக்கைகளில் சந்தர்ப்ப சாட்சியம் இடம் பெற்றது?
7. காவலில் வைக்கப்பட்டபோது பவுல் என்ன செய்தான்? இது என்ன கேள்வியை எழுப்புகிறது?
8. பவுலின் சந்தர்ப்ப சாட்சியம் எந்தளவுக்கு பலனுள்ளதாயிருந்தது?
9, 10. பூர்வ கிறிஸ்தவர்கள் சந்தர்ப்ப சாட்சி பகிர்ந்தனர் என்பதற்கு என்ன உலகப்பிரகாரமான அத்தாட்சி இருக்கிறது?
11. கடவுளுடைய சத்தியத்தினிடமாக பிறர் கவனத்தைத் திருப்புவது சம்பந்தமாக நாம் இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
12. பயணம் செய்ய திட்டமிடும்போது, ஒருவர் சந்தர்ப்ப சாட்சியத்திற்கு எப்படித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்?
13. பயணம் செய்யும்போது வயதான ஒருவரிடம் நீங்கள் எப்படிச் சாட்சி கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதை விளக்குங்கள்.
14. ஒரு பயணத்தின்போது இளம் சகோதரர் ஒருவர் சந்தர்ப்ப சாட்சியத்தில் என்ன வெற்றியைக் கண்டார்?
15, 16. (எ) உடன் வேலை செய்பவர்களிடம் சந்தர்ப்ப சாட்சியத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டுகள் கொடுங்கள். (பி) இந்தப் பலன்கள் உங்களுக்கு எதைக் காண்பிக்கிறது?
17. யெகோவாவின் இளம் ஊழியர்களுக்கு சந்தர்ப்ப சாட்சியத்தில் பங்குகொள்வதற்கு என்ன வாய்ப்பு இருக்கின்றன?
18. வாடகைக்கு அறை தேடிக்கொண்டிருந்த ஒருவரிடம் சுருக்கமாக சாட்சி கொடுத்ததன் பலன் என்ன?
19. பாஹாமாஸில் வாழும் ஒரு பெண்ணைக் குறித்ததில் சந்தர்ப்ப சாட்சியம் எப்படிப் பலனளித்தது?
20. (எ) வெளி ஊழியத்துடன் சம்பந்தப்படுத்துகையில் சந்தர்ப்ப சாட்சியம் எப்படி நோக்கப்படவேண்டும்? (பி) இயல்பான சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க ஒருவர் தயங்குவாரானால், என்ன ஆலோசனை கொடுக்கப்படுகிறது?
21. எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் சாட்சி கொடுக்க ஒருவரை எது தூண்டிவிடும்?
[பக்கம் 22-ன் படம்]
நீங்கள் வெளியே செல்ல முடியாதவர்களாயிருந்தால், காவலில் வைக்கப்பட்டிருந்த பவுலைப்போல நீங்கள் சாட்சி கொடுக்கிறீர்களா?
[பக்கம் 24-ன் படம்]
முன்னதாகவே ஆயத்தமாயிருத்தல் திறம்பட்ட விதத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க நமக்கு ஏதுவாக இருக்கும்