சந்தர்ப்ப சாட்சி கொடுக்க நீங்கள் தயாரா?
1 சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது மிகுந்த பயனை அளிக்கலாம். சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததால் கிடைத்த நல்ல பலன்களுக்கு எண்ணற்ற உதாரணங்கள் பைபிளில் உள்ளன. (யோவா. 4:7-15) இத்தகைய ஊழியத்திற்குத் தயாரிப்பதற்காக நாம் என்ன செய்யலாம்?
2 உடையும் தோற்றமும்: நம்முடைய உடைக்கும் தோற்றத்திற்கும் எப்போதும் கவனம் செலுத்தினால், தயங்காமல் மற்றவர்களிடம் நம்முடைய மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேச முடியும். (1 தீ. 2:9, 10) நம்முடைய உடை அடக்கமானதல்ல என நினைத்தால், நற்செய்தியை அறிவிக்க நாம் தயங்குவோம். ஆனால், நம்முடைய உடை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தால் மற்றவர்கள் வலிய வந்து அதற்கான காரணத்தை நம்மிடம் கேட்பார்கள். உதாரணத்திற்கு, யெகோவாவின் சாட்சியாயிருக்கும் ஒரு தம்பதியர் பயணத்தின்போது, முஸ்லிம் ஒருவருடைய பக்கத்தில் உட்கார்ந்தார்கள். அவர்கள் நேர்த்தியாக உடுத்தியிருந்ததைப் பார்த்த அவர் “நீங்கள் கிறிஸ்தவர்களா?” என்று கேட்டார். இந்தக் கேள்வி, மூன்று மணிநேரம் சத்தியத்தைப் பற்றிப் பேச அவர்களுக்கு வாய்ப்பளித்தது.
3 உரையாடலைத் துவங்க வழிகள்: யாக்கோபின் கிணற்றருகே ஒரு சமாரியப் பெண்ணை இயேசு பார்த்தபோது, அவளிடம் வெறுமனே குடிக்கத் தண்ணீர் கேட்பதன் மூலம் அவர் உரையாடலைத் துவங்கினார். அதேபோல் நாமும், சுருக்கமாக ஒரு குறிப்பைச் சொல்வதன் மூலம் அல்லது ஓர் எளிய கேள்வியைக் கேட்பதன் மூலம் உரையாடலைத் துவங்க முடியும். சில சமயங்களில் நாம் தயங்கினாலும், உதவிக்காக யெகோவாவைச் சார்ந்திருப்பதன் மூலம், உரையாடலைத் துவங்க நாம் ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ளலாம்.’ ஒருவர் சொல்லும் பதிலைக் காதுகொடுத்துக் கேட்பது, அவருக்கு ஆர்வம் இருக்கிறதா, நாம் உரையாடலைத் தொடரலாமா என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவும்.—1 தெ. 2:2.
4 வாய்ப்புகளைக் கண்டுபிடியுங்கள்: சந்தர்ப்ப சாட்சி கொடுக்க அநேக பிரஸ்தாபிகள் பல வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். உங்கள் சூழ்நிலைகளை ஆராய்ந்து பாருங்கள், தினமும் யாரையெல்லாம் சந்திக்கிறீர்களென யோசித்துப் பாருங்கள். பொருத்தமான பிரசுரங்களையும் சிறிய பைபிளையும் எடுத்துச் செல்லுங்கள். வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க எப்போதும் கவனமாய் இருங்கள், உங்களைச் சுற்றியுள்ள ஆட்களிடம் அக்கறை காட்டுங்கள். தினமும் எத்தகைய வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கலாம் என்பதைக் குறித்து முன்னதாகவே யோசித்திருந்தால், சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள்.—பிலி. 1:12-14; 1 பே. 3:15.
5 சந்தர்ப்ப சாட்சி கொடுக்கக் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள நமக்கு இரண்டு நல்ல காரணங்கள் உள்ளன: ஒன்று, கடவுள் மீதுள்ள அன்பு, மற்றொன்று சக மனிதர் மீதுள்ள அன்பு. (மத். 22:37-39) நற்செய்தியை அவசர உணர்வோடு அறிவிக்க வேண்டியிருப்பதால், ‘வாய்ப்புக் கிடைக்கும்போது சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம்’ என்று இருந்துவிட முடியாது. காலம் இருக்கும்போதே, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்குக் கிடைக்கும் பொருத்தமான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள நாம் தயாராய் இருக்க வேண்டும்.—ரோ. 10:13, 14; 2 தீ. 4:2.
[கேள்விகள்]
1. சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது மிகுந்த பயனை அளிக்கலாம் என்பதை என்ன உதாரணம் காட்டுகிறது?
2. நம்முடைய உடையும் தோற்றமும் சத்தியத்தைப் பற்றிப் பேச நமக்கு எப்படி உதவலாம்?
3. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நீங்கள் எப்படி உரையாடலைத் துவங்கியிருக்கிறீர்கள்?
4. சந்தர்ப்ப சாட்சி கொடுக்க நாம் எப்படித் தயாராக இருக்கலாம்?
5. ‘வாய்ப்புக் கிடைக்கும்போது சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம்’ என்று ஏன் இருந்துவிடக் கூடாது?