“பொய் நாவினால் சம்பாதிக்கும் பொக்கிஷம் . . . வெளியே விடுகிற சுவாசம் போன்றது”
இந்நாட்களிலே பொய் சொல்லுவதும் ஏமாற்றுவதும் சரியான—சிறந்த வெற்றிகரமான—வியாபார முறைகளாகக் கருதப்பட்டு வருகிறது. இது பைபிள் காலங்களிலும் உண்மையாயிருந்தது. சங்கீதக்காரனாகிய ஆசாப் ஏமாற்றும் முறைகளில் “ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிற”வர்களைக் குறித்து எழுதினான். அவர்களுடைய வஞ்சக வழிகள் அவர்களுக்கு சம்பாதித்துக் கொடுத்திருக்கும் ஆஸ்தியால் “என்றும் சுகஜீவிகளாயிருப்”பதாகக் காணப்படலாம்.—சங்கீதம் 73: 8, 12.
என்றபோதிலும் இன்று கிறிஸ்தவர்கள் ‘அவலட்சணமான ஆதாயத்தையும் நேர்மையற்ற வியாபார வழிமுறைகளையும் தவிர்க்க வேண்டும்.” (1 பேதுரு 5:2) நீதிமொழிகள் 21:6 [NW] பின்வருமாறு எச்சரிக்கிறது: “பொய் நாவினால் சம்பாதிக்கும் பொக்கிஷம் சாவைத் தேடுகிறவர்கள் வெளியே விடுகிற சுவாசம் போன்றது.” ஆம், பொய் சொல்லி ஏமாற்றி பெறப்படும் எந்தப் “பொக்கிஷமும்” “வெளியே விடுகிற சுவாசம்” போன்று, நிலையற்ற நீராவி போன்று தற்காலிகமானது. காலப்போக்கில் “அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது.” (நீதிமொழிகள் 10:2) உண்மை என்னவெனில், பொய் பேசுபவன் மரணத்துக்கேதுவான ஒரு போக்கைத் தொடருவதால் “சாவைத் தேடுகிறான்.” அவனுடைய பொய்யான வழிமுறைகள் தன்னையே சுடும்போது அவனுடைய வாழ்நாள் முன்னதாகவே குறைக்கப்படக்கூடும். (எஸ்தர் 7:10-ஐ ஒப்பிடவும்.) அல்லது அவனுடைய ஜீவன் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாளிலே முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
(w87 4⁄15)