ஏப்ரல்
புதன், ஏப்ரல் 1
‘மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பது என் தகப்பனின் விருப்பம்.’—யோவா. 6:40.
மீட்புப் பலியில் விசுவாசம் வைத்தால்தான் நமக்கு முடிவில்லாத வாழ்க்கை கிடைக்கும். (எபே. 1:7) “வேறே ஆடுகள்” என்று இயேசு யாரைப் பற்றிச் சொன்னாரோ அவர்கள் எஜமானின் இரவு விருந்தில் ரொட்டியையும், திராட்சமதுவையும் சாப்பிடுவதில்லை, சாப்பிடவும் கூடாது! (யோவா. 10:16) இருந்தாலும், இயேசுவுடைய சதையில் இருந்தும், இரத்தத்தில் இருந்தும் அவர்களும் நன்மை அடைகிறார்கள். எப்படி? இயேசுவுடைய மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம்! (யோவா. 6:53) எஜமானின் இரவு விருந்தில் சாப்பிடுகிறவர்கள் புதிய ஒப்பந்தத்தின் பாகமாக இருப்பதைக் காட்டுகிறார்கள். இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. நாம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி, வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நாம் எல்லாருமே முடிவில்லாத வாழ்க்கையைப் பெற வேண்டுமென்றால் விசுவாசம் வைப்பது எவ்வளவு முக்கியம்! w24.12 13 ¶14, 16
நினைவுநாள் பைபிள் வாசிப்பு: (பகலில் நடந்தவை: நிசான் 12) மத்தேயு 26:1-5, 14-16; லூக்கா 22:1-6
நினைவுநாள் அனுசரிப்பு
சூரியன் மறைந்த பிறகு
வியாழன், ஏப்ரல் 2
பயப்படாதே சிறுமந்தையே, உங்களிடம் தன் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் பிரியமாக இருக்கிறார்.—லூக். 12:32.
எஜமானின் இரவு விருந்தில் இயேசு புளிப்பில்லாத ரொட்டியை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்து, அது தன்னுடைய உடலை குறிக்கிறது என்று சொன்னார். பிறகு, திராட்சமதுவைக் கொடுத்து “இது ‘ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை’ குறிக்கிறது” என்று சொன்னார். (மாற். 14:22-25; லூக். 22:20; 1 கொ. 11:24) இந்தப் புதிய ஒப்பந்தத்தை, “கடவுளுடைய அரசாங்கத்தில்” அவரோடு இருக்கப்போகிற ‘[ஆன்மீக] இஸ்ரவேலர்களோடு’ இயேசு செய்தார். (எபி. 8:6, 10; 9:15) எஜமானின் இரவு விருந்தில், ‘சிறுமந்தையின்’ பாகமாக இருந்தவர்களிடம் இயேசு பேசினார். அந்தச் சின்ன தொகுதியின் பாகமாக முதல்முதலில் ஆனது, அந்த அறையில் அவரோடு இருந்த உண்மையுள்ள அப்போஸ்தலர்கள்தான். அவர்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் ‘சிறுமந்தையின்’ பாகமாக ஆகப்போகிறவர்களும் இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள். w24.12 11 ¶9-10
நினைவுநாள் பைபிள் வாசிப்பு: (பகலில் நடந்தவை: நிசான் 13) மத்தேயு 26:17-19; மாற்கு 14:12-16; லூக்கா 22:7-13 (சூரியன் மறைந்த பிறகு நடந்தவை: நிசான் 14) யோவான் 13:1-5; 14:1-3
வெள்ளி, ஏப்ரல் 3
கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.—யோவா. 3:16.
இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார். கைது செய்யப்பட்டார். வார்த்தைகளால் குத்திக் கிழிக்கப்பட்டார். பழித்துப் பேசப்பட்டார். குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். சித்திரவதைச் செய்யப்பட்டார். கொல்லப்படும் இடத்துக்குப் படைவீரர்களால் இழுத்துக் கொண்டுபோகப்பட்டார். மரக்கம்பத்தில் வைத்து ஆணி அடிக்கப்பட்டார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத இவ்வளவு வலியையும், வேதனையையும் இயேசு உண்மையோடு சகித்துக்கொண்டார்! அந்தச் சமயத்தில், இன்னொருவரும் பயங்கரமான வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தார். அவர்தான் யெகோவா! எல்லையில்லாத சக்தி தனக்கு இருந்தபோதிலும், அத்தனை சக்தியையும் அந்தச் சமயத்தில் கட்டுப்படுத்திக்கொண்டார்; அவர் அதிலெல்லாம் தலையிடவில்லை. ஏன்? அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டுமென்றால், அன்புதான்! உங்கள்மேல் யெகோவாவுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை இயேசுவின் பலி நிரூபித்துக் காட்டுகிறது! பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் உங்களை மீட்பதற்கு அவர் கொடுமையான வலியைத் தாங்கிக்கொண்டார். (1 யோ. 4:9, 10) பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அதை ஜெயிப்பதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் உதவ அவர் ஆசையாக இருக்கிறார். w24.08 6 ¶13-14
நினைவுநாள் பைபிள் வாசிப்பு: (பகலில் நடந்தவை: நிசான் 14) யோவான் 19:1-42
சனி, ஏப்ரல் 4
‘கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டார்.’—1 பே. 2:21.
மீட்புவிலையைக் கொடுப்பதற்காக தன் பங்கில் யெகோவா எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தால் அவருடைய அன்பின் ஆழத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். கஷ்டம் வந்தால் கடவுளுடைய ஊழியர்கள் அவருக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று சாத்தான் குற்றம்சாட்டினான். ஆனால், அதைப் பொய் என்று நிரூபிப்பதற்காக யெகோவா தன்னுடைய மகன் இறப்பதற்கு முன்பு கஷ்டப்பட அனுமதித்தார். (யோபு 2:1-5) மத வெறிபிடித்தவர்கள் இயேசுவைக் கேலி செய்தார்கள், அவமானப்படுத்தினார்கள். இயேசுவின் சதை நார்நாராகக் கிழியும் அளவுக்குப் படைவீரர்கள் அவரைச் சாட்டையால் அடித்தார்கள். மரக் கம்பத்தில் வைத்து அவருடைய கைகளில் ஆணி அடித்தார்கள். இவை எல்லாவற்றையுமே யெகோவா பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகன் துடிதுடித்து சாவதையும் பார்த்தார். (மத். 27:28-31, 39) யெகோவா நினைத்திருந்தால் ஒரு கட்டத்தில் இவை எல்லாவற்றையுமே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அதற்கான சக்தி அவருக்கு இருந்தது. (மத். 27:42, 43) ஆனால், யெகோவா அந்த மாதிரி ஏதாவது செய்திருந்தால் இயேசுவால் மீட்புவிலையைக் கொடுக்க முடியாமல் போயிருக்கும். நமக்கு எந்த நம்பிக்கையுமே இருந்திருக்காது. அதனால்தான் தன் மகன், கடைசி மூச்சுவரை கஷ்டப்பட்டு சாவதற்கு யெகோவா அனுமதித்தார். w25.01 22 ¶7
நினைவுநாள் பைபிள் வாசிப்பு: (பகலில் நடந்தவை: நிசான் 15) மத்தேயு 27:62-66 (சூரியன் மறைந்த பிறகு நடந்தவை: நிசான் 16) யோவான் 20:1
ஞாயிறு, ஏப்ரல் 5
‘40 நாட்களாக அவர்களுக்குத் தோன்றினார்.’—அப். 1:3.
கி.பி. 33, நிசான் 16! இயேசுவின் சீஷர்கள் வேதனையில் துவண்டுபோயிருந்தார்கள்; பயத்தில் உறைந்துபோயிருந்தார்கள். அந்தச் சீஷர்களில் இரண்டு பேர் எருசலேமிலிருந்து எம்மாவு என்ற கிராமத்துக்குப் போய்கொண்டிருந்தார்கள். அவர்கள் போய்கொண்டிருந்தபோது ஒருவர் அவர்களோடு சேர்ந்துகொள்கிறார். தங்களுடைய எஜமானுக்கு நடந்த விஷயங்களைப் பற்றி அந்த இரண்டு சீஷர்கள் வேதனையோடு அவரிடம் சொல்கிறார்கள். அப்போது அந்த நபர் சில விஷயங்களைப் பேச ஆரம்பிக்கிறார். மேசியா ஏன் கஷ்டப்பட்டுச் சாக வேண்டியிருந்தது என்பதை அவர் விளக்குகிறார். “மோசேயின் புத்தகங்கள்முதல் எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்வரை” சொல்லப்பட்ட விஷயங்களிலிருந்து பேசுகிறார். அவர்கள் எம்மாவு ஊருக்கு வந்த உடனே, தான் யார் என்பதை அந்த நபர் வெளிப்படுத்துகிறார். அவர்தான் உயிர்தெழுப்பப்பட்ட இயேசு! அவர் அந்தச் சமயத்தில் சொன்ன விஷயங்களை அந்தச் சீஷர்கள் வாழ்நாள் முழுவதும் மறந்திருக்கவே மாட்டார்கள். (லூக். 24:13-35) இயேசு பூமியிலிருந்த கடைசி 40 நாட்களில் நிறையத் தடவை சீஷர்களுக்குத் தோன்றினார். வேதனையிலும் பயத்திலும் இருந்த சீஷர்களை உற்சாகப்படுத்தினார். சோகத்தில் உறைந்துபோயிருந்த சீஷர்கள், சந்தோஷமான தைரியமான ஒரு படையாக உருவெடுத்தார்கள்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கவும் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் தயாரானார்கள். w24.10 12 ¶1-3
நினைவுநாள் பைபிள் வாசிப்பு: (பகலில் நடந்தவை: நிசான் 16) யோவான் 20:2-18
திங்கள், ஏப்ரல் 6
உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.—யூ. 20.
நாட்கள் போகப்போக, ஒரு குழந்தை தானாகவே வளர்ந்து பெரிய ஆளாக ஆகும். ஆனால், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் வளர்வது அப்படி கிடையாது; அதற்கு முயற்சி தேவை! உதாரணத்துக்கு, கொரிந்துவிலிருந்த சகோதர சகோதரிகளை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்தார்கள். அவர்களுக்குக் கடவுளுடைய சக்தியும் கிடைத்தது. அப்போஸ்தலன் பவுலிடமிருந்தும் அவர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். (அப். 18:8-11) ஆனால், ஞானஸ்நானம் எடுத்து சில வருஷங்கள் ஆன பிறகும் அவர்களில் நிறைய பேர் முதிர்ச்சி இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள். (1 கொ. 3:2) முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக வேண்டுமென்றால், முதலில் அதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘அனுபவமில்லாமல் இருக்க ஆசைப்படுகிற’ ஒருவர் எந்த முன்னேற்றமும் செய்ய மாட்டார். (நீதி. 1:22) யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் ஒரு குழந்தை மாதிரிதான் இருப்பார். ஒரு நபர் வளர்ந்து பெரியவரான பிறகும், எந்த முடிவுகளும் எடுக்காமல் எல்லாவற்றுக்காகவும் அப்பா அம்மாவையே நம்பியிருந்தால் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அப்படிப்பட்ட ஒருவரை மாதிரி இருக்க நீங்கள் ஆசைப்படுவீர்களா? கண்டிப்பாக இல்லை. ஆன்மீக வளர்ச்சியும் அப்படித்தான். உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு! முதிர்ச்சியை நோக்கி வளர வேண்டும் என்ற குறிக்கோளை நீங்கள் வைத்திருந்தால், அதற்குத் தேவையான “ஆர்வத்தையும் வல்லமையையும்” கொடுக்க சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.—பிலி. 2:13. w24.04 4 ¶9-10
செவ்வாய், ஏப்ரல் 7
‘ஒருவரும் அழிந்துபோகக் கூடாது என்று யெகோவா விரும்புகிறார்.’—2 பே. 3:9.
மனிதர்களை நியாயந்தீர்ப்பதைப் பற்றி, தான் எப்படி உணருகிறார் என்று யெகோவா வெளிப்படையாக சொல்கிறார். (எசே. 33:11) நல்ல காரணம் இல்லாமல் யெகோவா யாரையும் நிரந்தரமாக அழிக்க மாட்டார் என்று நமக்குத் தெரியும். அவர் ரொம்ப இரக்கமுள்ளவர். அதனால், எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இரக்கத்தைக் காட்டுகிறார். யாரெல்லாம் உயிர்த்தெழுந்து வர மாட்டார்கள் என்பதைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அப்படிப்பட்டவர்களில் சிலரைப் பற்றித்தான் பைபிள் சொல்கிறது. யூதாஸ் இஸ்காரியோத்து உயிரோடு எழுப்பப்பட மாட்டான் என்று இயேசு சொன்னார். (மாற். 14:21; யோவா. 17:12) ஏனென்றால், யூதாஸ் தெரிந்தே, வேண்டுமென்றே யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் எதிராக செயல்பட்டான். (மாற். 3:29) அதேமாதிரி, தன்னை எதிர்த்த மதத் தலைவர்களில் சிலரும் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்று இயேசு சொன்னார். (மத். 23:33; யோவா. 19:11 மற்றும் “தி மேன்” என்ற ஆராய்ச்சிக் குறிப்பை ஆங்கில ஆராய்ச்சி பைபிளில் பாருங்கள்.) மனம் திருந்தாத விசுவாசதுரோகிகளும் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—எபி. 6:4-8; 10:29. w24.05 4 ¶10-11
புதன், ஏப்ரல் 8
உண்மையாக இருக்கிறவர்களை யெகோவா பாதுகாக்கிறார்.—சங். 31:23.
நாம் யெகோவாவோடு நெருக்கமாக இருக்கும்போது, நம்மை நிரந்தரமாகப் பாதிக்கும் எந்தவொரு கெடுதலையும் சாத்தானால் செய்ய முடியாது. (1 யோ. 3:8) புதிய உலகத்திலும் யெகோவா தன்னுடைய உண்மையுள்ள நண்பர்களைப் பாதுகாப்பார். அவரோடு இருக்கும் நட்பைப் பாதிக்கும் விஷயங்களிலிருந்து மட்டுமல்ல, மரணத்திலிருந்தும் பாதுகாப்பார். (வெளி. 21:4) யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட கௌரவம்! நம்மால் என்றென்றும் அவருடைய நெருக்கமான நண்பர்களாக இருக்க முடியும்! (எசே. 37:27) ஆனால், அவருடைய கூடாரத்தில் தொடர்ந்து விருந்தாளிகளாக இருப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? யெகோவா தன் விருந்தாளிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொண்டு அதன்படி நடக்க நாம் கண்டிப்பாக விரும்புவோம். யெகோவாமேல் நாம் அன்பு வைத்திருப்பதால் “அவரை முழுமையாகப் பிரியப்படுத்த” நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். (கொலோ. 1:10) எப்போதும் அவருக்குப் பயபக்தியைக் காட்ட வேண்டும். அந்தப் பயபக்தி, அவருடைய மனதைக் கஷ்டப்படுத்திவிடாமல் இருக்க நமக்கு உதவும். கடவுளுடைய வழியில் எப்போதும் ‘அடக்கத்தோடு நடக்க வேண்டும்’ என்றுதான் நாம் எப்போதும் ஆசைப்படுகிறோம்.—மீ. 6:8. w24.06 4 ¶8-9
வியாழன், ஏப்ரல் 9
குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்.—ஏசா. 53:12.
யெகோவா ஆபிரகாமிடம், அவருடைய சொந்த மகன் ஈசாக்கைப் பலியாகக் கொடுக்கச் சொன்னார். அது ஆபிரகாமுக்கு எவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்கும். இருந்தாலும், அவர் கீழ்ப்படியத் தயாராக இருந்தார். கடைசி நிமிஷத்தில், ஆபிரகாமை யெகோவா தடுத்தார். யெகோவா தன்னுடைய சொந்த மகனையே பலியாகக் கொடுக்கத் தயாராக இருந்ததை இந்தச் சம்பவம் காட்டுகிறது. மனிதர்கள்மேல் எந்தளவுக்கு அன்பு இருந்தால் யெகோவா இதைச் செய்வார்! (ஆதி. 22:1-18) பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, யெகோவா இஸ்ரவேல் தேசத்துக்குத் திருச்சட்டத்தை கொடுத்தார். பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் பலிகள் செலுத்தப்பட வேண்டும் என்பதை அந்தச் சட்டம் காட்டியது. (லேவி. 4:27-29; 17:11) இந்த எல்லா பலிகளும், பிற்பாடு கொடுக்கப்படவிருந்த ஒரு மிகப்பெரிய பலிக்கு அடையாளமாக இருந்தது. அந்தப் பலிதான் மனிதர்களைப் பாவத்திலிருந்து முழுமையாகக் காப்பாற்றும். கடவுள் தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலமாக, வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி கஷ்டத்தை அனுபவிப்பார், கடைசியில் கொல்லப்படுவார் என்று விளக்கினார். மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றுவதற்காக—உங்களைக் காப்பாற்றுவதற்காக தன் மகனை கொடுத்திருக்கிறார்!—ஏசா. 53:1-12. w24.08 4 ¶7-8
வெள்ளி, ஏப்ரல் 10
உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாளெல்லாம் அதைப் பற்றியே ஆழமாக யோசிக்கிறேன்.—சங். 119:97.
நீங்கள் பைபிளை எப்போது வாசித்தாலும் சரி படிக்கிற விஷயங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசித்துப் பார்ப்பது முக்கியம். படிக்கும்போது இந்தக் கேள்வியைக்கூட கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் படிக்கிற இந்த விஷயத்தை இன்றைக்கு அல்லது இன்னொரு சமயத்தில் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?’ ஒருவேளை, 1 தெசலோனிக்கேயர் 5:17, 18-ஐப் படிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். படித்த பிறகு, கொஞ்சம் நிறுத்தி, நீங்கள் எவ்வளவு அடிக்கடி ஜெபம் செய்கிறீர்கள்... எவ்வளவு உருக்கமாக செய்கிறீர்கள்... என்பதை யோசியுங்கள். எந்தெந்த விஷயங்களுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லலாம் என்பதைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, குறிப்பாக மூன்று விஷயங்களுக்கு நன்றி சொல்லலாம் என்று உங்களுக்குத் தோன்றலாம். இப்படி, ஒருசில நிமிஷங்கள் யோசித்துப் பார்த்தாலே கடவுளுடைய வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டுமல்ல அதைச் செய்கிறவர்களாகவும் இருப்பீர்கள். பைபிளைப் படிக்கும்போது, இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்! நாட்கள் போகப்போக யெகோவாவுக்குப் பிடித்த ஒரு நபராக ஆகிவிடுவீர்கள். w24.09 4-5 ¶9-10
சனி, ஏப்ரல் 11
நாங்கள் பாடுபட்டு உண்டாக்கியவற்றை நீங்கள் இழந்துவிடாமல் முழு பலனைப் பெற்றுக்கொள்வதற்கு விழிப்புடன் இருங்கள்.—2 யோ. 8.
வாங்குவதைவிட கொடுப்பதில் நிறையச் சந்தோஷம் கிடைக்கிற மாதிரிதான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். நம் சகோதர சகோதரிகளுக்கு ஏதாவது உதவி செய்யும்போது, நமக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. அவர்கள் நமக்கு நன்றி காட்டும்போதும் சந்தோஷமாக இருக்கிறது. அதேசமயத்தில், மற்றவர்கள் நமக்கு நன்றி காட்டுகிறார்களோ இல்லையோ, நாம் சரியானதைத்தான் செய்திருக்கிறோம் என்ற திருப்தி நமக்குக் கிடைக்கிறது. இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடாதீர்கள். நாம் எவ்வளவு கொடுத்தாலும் சரி, “யெகோவாவினால் அதைவிட அதிகமாக [நமக்கு] கொடுக்க முடியும்.” (2 நா. 25:9) உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட யெகோவா நமக்குக் கொடுப்பதுதான் ரொம்ப அதிகம். யெகோவாவே நமக்குத் திருப்பிக் கொடுக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! அதனால், கொடைவள்ளலான நம் அப்பா யெகோவா மாதிரியே நாம் எப்போதும் கொடுக்கலாம்! w24.09 31 ¶20-21
ஞாயிறு, ஏப்ரல் 12
என் கடவுளாகிய யெகோவாவே, முழு இதயத்தோடு உங்களைப் புகழ்கிறேன். உங்களுடைய பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.—சங். 86:12.
யெகோவா இரக்கம் உள்ளவர், கரிசனை உள்ளவர். (சங். 103:13; ஏசா. 49:15) யெகோவா நம்மை நன்றாகப் புரிந்துகொள்கிறார். நமக்கு வலிக்கும்போது அவருக்கும் வலிக்கிறது. (சக. 2:8) அதனால், எந்தத் தயக்கமும் இல்லாமல் நம்மால் அவரோடு நெருக்கமான நண்பராக முடிகிறது. (சங். 25:14; அப். 17:27) அதுமட்டுமல்ல, அவர் தாழ்மையானவர். “அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார். எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்.” (சங். 113:6, 7) இப்படிப்பட்ட ஒரு கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்று யாருக்குத்தான் தோன்றாது! யெகோவாவைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதால் அவரை மகிமைப்படுத்துகிறோம். நிறைய பேருக்கு யெகோவாவைப் பற்றிய உண்மைகள் தெரியவில்லை. ஏனென்றால், சாத்தான் அவரைப் பற்றிப் பொய்களைப் பரப்பி, மக்களுடைய மனக்கண்களைக் குருடாக்கி இருக்கிறான். (2 கொ. 4:4) யெகோவா பழிவாங்குகிற கடவுள், அக்கறை இல்லாதவர், இந்த உலகத்தில் இருக்கிற கஷ்டங்களுக்கு எல்லாம் அவர்தான் காரணம் என்று மக்களை நம்ப வைத்திருக்கிறான். ஆனால், நமக்கு யெகோவாவைப் பற்றிய உண்மைகள் தெரியும். சாத்தான் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி யெகோவாவை மகிமைப்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.—ஏசா. 43:10 w25.01 3 ¶6-7
திங்கள், ஏப்ரல் 13
‘சாத்தான் உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறான்.’—வெளி. 12:9.
கடவுளுடைய மகனாக இருந்த இயேசு, எந்தத் குறையும் இல்லாமல் பரிபூரணமாக இருந்தார்; பிரம்மாண்டமான அற்புதங்களை செய்தார். ஆனால், அப்படிப்பட்டவரை பற்றியே சாத்தான் பக்கம் இருந்தவர்கள் நிறையப் பொய்களைப் பரப்பினார்கள். உதாரணத்துக்கு, இயேசு பேய்களை விரட்டியபோது அவர் “பேய்களுடைய தலைவனின் உதவியால்தான்” அதை செய்கிறார் என்று மதத் தலைவர்கள் கதை கட்டினார்கள். (மாற். 3:22) பிறகு, இயேசு விசாரணை செய்யப்பட்ட சமயத்தில் அவர் கடவுளுடைய பெயரை நிந்தித்ததால் அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று சொல்லி மக்களைத் தூண்டிவிட்டார்கள். (மத். 27:20) இயேசுவின் சீஷர்கள் நல்ல செய்தியை சொன்னபோது, எதிரிகள் மக்களின் மனதைக் கெடுத்து அந்த சீஷர்களுக்கு “எதிராக அவர்களைத் தூண்டிவிட்டார்கள்,” அதனால் மக்கள் அவர்களைத் துன்புறுத்தினார்கள். (அப். 14:2, 19) டிசம்பர் 1, 1998-ல் வந்த காவற்கோபுரம் அப்போஸ்தலர் 14:2-ஐப் பற்றி இப்படி சொன்னது: “யூத எதிரிகள் அந்தச் செய்தியை தாங்கள் நிராகரித்ததோடு திருப்தியடைந்துவிடவில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிராக மற்ற தேசத்து மக்களிடம் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்தார்கள். கிறிஸ்தவத்துக்கு எதிராக அவர்களுடைய பகைமை எந்தளவுக்கு இருந்திருக்க வேண்டும்!” இன்றைக்கும் சாத்தான் ‘உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறான்.’ w24.04 11 ¶15-16
செவ்வாய், ஏப்ரல் 14
இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?—ஆதி. 18:25.
ஒரு நபருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் அவர் எப்போது இறக்கிறார் என்பதைப் பொறுத்தது கிடையாது. யெகோவாதான் நீதிபதி! அவர் எடுக்கிற முடிவுகள் நியாயமாகவும் நீதியாகவும் இருக்கும். (சங். 33:4, 5) “இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” கண்டிப்பாக சரியானதைத்தான் செய்வார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். ஒரு நபருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதும் கிடைக்காததும் அவர் எங்கே வாழ்கிறார் என்பதைப் பொறுத்தும் கிடையாது. நல்ல செய்தி போய் சேர முடியாத நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களை ‘வெள்ளாடுகளாக’ யெகோவா கண்டிப்பாக முத்திரை குத்த மாட்டார். (மத். 25:46) அந்த இடங்களில் வாழ்கிறவர்களைப் பற்றி நம்மைவிட அதிகமாக யெகோவா யோசிப்பார்; அவர் இந்த உலகத்துக்கே நீதிபதி! மிகுந்த உபத்திரவம் சமயத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை யெகோவா எப்படியெல்லாம் கொண்டுபோகப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, யெகோவா தன்னுடைய பெயரை எல்லா தேசங்களுக்கும் முன்பாக பரிசுத்தப்படுத்தும்போது, அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும்... அவர்மேல் விசுவாசம் வைப்பதற்கும்... அவர் பக்கம் நிற்பதற்கும்... அப்படிப்பட்ட இடங்களில் வாழ்கிற சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.—எசே. 38:16. w24.05 12 ¶14-15
புதன், ஏப்ரல் 15
ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும்.—யோவா. 15:12.
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது என்றால் யெகோவாவுடைய மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும். (2 கொ. 8:4) ஆனால் சில சமயங்களில், இதைச் செய்வதற்குத் தைரியம் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, திடீரென்று ஒரு போர் வெடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில் சகோதர சகோதரிகளுக்குச் சாப்பாடு, துணிமணி மற்றும் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் தேவைப்படலாம். பைபிளும் மற்ற பிரசுரங்களும்கூட கையில் இல்லாமல் போய்விடலாம். சகோதர சகோதரிகளுக்கு உற்சாகமும், ஆதரவும்கூட தேவைப்படும். அப்போது, ஆடுகள்மேல் இருக்கிற அன்பால் மூப்பர்கள் உயிரையே பணயம் வைத்து உதவி செய்யக் களத்தில் இறங்குகிறார்கள். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், நாம் ஒற்றுமையாக இருப்பது ரொம்ப முக்கியம். கிளை அலுவலகத்திலிருந்து வரக்கூடிய வழிநடத்துதலுக்கு ஒத்துழைப்பதும் ரொம்ப முக்கியம். (எபி. 13:17) ஒரு பேரழிவு வருவதற்கு முன்பு எப்படித் தயாராக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பேரழிவு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் அமைப்பு சொல்லியிருக்கிற அறிவுரைகளை மூப்பர்கள் அடிக்கடி மறுபார்வை செய்ய வேண்டும். (1 கொ. 14:33, 40) தைரியமாக இருங்கள்; அதேசமயத்தில் கவனமாகவும் இருங்கள். (நீதி. 22:3) செயல்படுவதற்கு முன்பு நன்றாக யோசியுங்கள். தேவையில்லாமல் ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள். யெகோவாவை நம்புங்கள். பாதுகாப்பாக மற்றவர்களுக்கு உதவ அவர் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார். w24.07 4 ¶8; 5 ¶11
வியாழன், ஏப்ரல் 16
‘இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன். என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.’—சங். 18:6.
தாவீது ராஜா யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்; அவரை நம்பினார். சவுல் ராஜாவும் மற்றவர்களும் தன்னைக் கொலை செய்ய துரத்திக்கொண்டிருந்த சமயத்தில், தாவீது யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார். அந்த ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்து, தன்னைக் காப்பாற்றியதைப் பார்த்தபோது, “யெகோவாதான் உயிருள்ள கடவுள்!” என்று சொன்னார். (சங். 18:46) யெகோவா வெறுமனே உயிரோடிருக்கிற கடவுள் என்று தாவீது இங்கே சொன்னாரா? இல்லை! இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி குறிப்பு இப்படி சொல்கிறது: யெகோவா “உயிருள்ள கடவுளாக இருந்து தன்னுடைய மக்கள் சார்பாக செயல்படுகிறார்” என்று உறுதியாக நம்பியதைத்தான் தாவீதின் வார்த்தைகள் காட்டுகின்றன. தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்று யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார் என்றும், தனக்கு உதவ அவர் தயாராக இருக்கிறார் என்றும் தாவீது புரிந்துவைத்திருந்தார். அதனால், அவரைத் தொடர்ந்து வணங்க வேண்டும்... அவரைப் புகழ வேண்டும்... என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். (சங். 18:28, 29, 49) யெகோவா உயிருள்ள கடவுள் என்பதில் நாமும் உறுதியாக இருந்தால், அவருக்குச் சுறுசுறுப்பாக சேவை செய்வோம். கஷ்டங்களையும் சோதனைகளையும் சமாளிப்பதற்கு நமக்குப் பலம் கிடைக்கும். யெகோவாவுக்காகத் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். அவரோடு எப்போதும் நெருங்கி இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்போம். w24.06 20-21 ¶3-4
வெள்ளி, ஏப்ரல் 17
யாரும் எந்த விதத்திலும் உங்களை மோசம்போக்குவதற்கு அனுமதிக்காதீர்கள்.—2 தெ. 2:3.
பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட உண்மைகளோடு ஒத்துப்போகாத ஒரு விஷயத்தையோ அதிர்ச்சி தரும் ஒரு வதந்தியையோ கேள்விப்பட்டால் அதை உடனே நம்பிவிடக் கூடாது. நம்முடைய யோசிக்கும் திறனைப் பயன்படுத்த வேண்டும். முன்னாள் சோவியத் யூனியனில், அமைப்பிடம் இருந்து வந்ததாக சொல்லி எதிரிகள் ஒரு கடிதத்தை சகோதரர்களிடம் கொடுத்தார்கள். அந்தக் கடிதத்தில், ‘பிரிந்துபோய் நீங்களே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருந்தது. அந்தக் கடிதம் பார்ப்பதற்கு உண்மையிலேயே அமைப்பிடமிருந்து வந்த மாதிரியே இருந்தது. ஆனால் உண்மையாக இருந்த சகோதரர்கள் அதைப் பார்த்து ஏமாந்துவிடவில்லை. ஏனென்றால், ஏற்கெனவே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயங்களோடு அந்தக் கடிதம் ஒத்துப்போகவில்லை. இன்றைக்குக்கூட எதிரிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தவும் நம்மைக் குழப்பவும் முயற்சி செய்யலாம். அந்த மாதிரி சமயங்களில் நாம் உடனே ‘நிதானத்தை இழந்துவிட’ கூடாது. அதற்குப் பதிலாக, நாம் ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்கிற உண்மைகளோடு அந்த விஷயம் ஒத்துப்போகிறதா என்று யோசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நாம் ஏமாந்துவிட மாட்டோம்.—2 தெ. 2:2; 1 யோ. 4:1. w24.07 12 ¶14-15
சனி, ஏப்ரல் 18
‘நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக இருப்பார்.’—1 யோ. 2:1.
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எடுக்கும் ரொம்ப முக்கியமான முடிவு யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்து அவருடைய குடும்பத்தில் ஒருவராக ஆவதுதான்! எல்லாருமே இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அவர்கள் தன்னோடு ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்ள வேண்டும்... என்றென்றும் வாழ வேண்டும்... என்றெல்லாம் ஆசைப்படுகிறார். (உபா. 30:19, 20; கலா. 6:7, 8) இருந்தாலும், தன்னை வணங்க வேண்டும் என்று யெகோவா யாரையுமே கட்டாயப்படுத்துவதில்லை; ஒவ்வொருவரும் சொந்தமாக முடிவெடுக்க அவர் அனுமதிக்கிறார். ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவுக்குச் சேவை செய்து வரும் ஒரு கிறிஸ்தவர், யெகோவாவுடைய கட்டளைகளை மீறி படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால் என்ன செய்வது? அவர் மனம் திருந்தவில்லை என்றால், அவரைச் சபையிலிருந்து நீக்கிவிட வேண்டும். (1 கொ. 5:13) ஆனாலும், தவறு செய்தவர் தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்று யெகோவா ஆசை ஆசையாக எதிர்பார்க்கிறார்! சொல்லப்போனால், அவர் மீட்புவிலையைக் கொடுத்ததற்கான காரணமே மனம் திருந்தும் பாவிகளை மன்னிப்பதற்குத்தான்! நம்முடைய பாசமான கடவுள், பாவம் செய்தவர்கள் மனம் திருந்த வேண்டுமென்று அவர்களை அன்பாகத் தூண்டுகிறார்.—சக. 1:3; ரோ. 2:4; யாக். 4:8. w24.08 14 ¶1-2
ஞாயிறு, ஏப்ரல் 19
உன் இதயம் ஞானமுள்ளதாக இருந்தால், என் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கும்.—நீதி. 23:15.
மூன்றாவது கடிதத்தை அப்போஸ்தலன் யோவான் எழுதிய சமயத்தில் சிலர் ஏற்கெனவே பொய் போதனைகளைப் பரப்பிக்கொண்டு இருந்தார்கள். அது சபைக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், மற்றவர்கள் ‘சத்தியத்தில் நடந்தார்கள்.’ யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து ‘அவருடைய கட்டளைகளின்படி நடந்தார்கள்.’ (2 யோ. 4, 6) அந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யோவானை மட்டுமல்ல யெகோவாவுடைய மனதையும் சந்தோஷப்படுத்தினார்கள். (நீதி. 27:11) யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் நமக்கும் சந்தோஷம் கிடைக்கும். (1 யோ. 5:3) நாம் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதையும் இந்த உலகத்திலிருந்து வருகிற சோதனைகளுக்கு இணங்கிவிடாமல் உறுதியாக இருப்பதையும் பார்த்து யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுகிறார். யெகோவாவைச் சந்தோஷப்படுத்தியிருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது. நம்மைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களும் சந்தோஷப்படுகிறார்கள். (லூக். 15:10) சகோதர சகோதரிகள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதைப் பார்க்கும்போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது. (2 தெ. 1:4) எதிர்காலத்தில், இந்த உலகம் அழியும்போது, சாத்தானுடைய கட்டுப்பாட்டிலிருந்த இந்த உலகத்திலேயே நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்திருக்கிறோம் என்ற திருப்தியும் சந்தோஷமும் நமக்குக் கிடைக்கும். w24.11 12 ¶17-18
திங்கள், ஏப்ரல் 20
ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.—1 கொ. 10:24.
ஒருவரிடம் உங்கள் விருப்பத்தை சொல்வதற்கு முன்பு அவரை எவ்வளவு காலம் கவனிக்க வேண்டும்? ஒருவேளை, ரொம்ப சீக்கிரமாகவே சொல்லிவிட்டால், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கிற ஒரு நபர் என்று அவர் நினைத்துவிடலாம். (நீதி. 29:20) அதேசமயத்தில், ரொம்ப நாள் எடுத்துக்கொண்டால், நீங்கள் முடிவெடுக்க தெரியாமல் திணறுகிற ஒரு நபர் என்று அவர் நினைக்கலாம்; அதுவும், நீங்கள் அவரை விரும்புவது அவருக்குத் தெரிந்திருந்தால் அவர் அப்படி நினைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. (பிர. 11:4) ஒருவரிடம் உங்கள் விருப்பத்தை சொல்வதற்கு முன்பே அவரைத்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டியதில்லை. அதேசமயத்தில், இந்த இரண்டு விஷயங்களில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்: (1) கல்யாணத்துக்குத் தயாராக இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். (2) அந்த நபர் உங்களுக்குப் பொருத்தமானவராக இருக்கலாம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். ஒருவேளை, ஒருவருக்கு உங்கள்மேல் விருப்பம் இருக்கிறது என்று தெரிய வருகிறது; ஆனால், உங்களுக்கு அவர்மேல் விருப்பமில்லை. இந்த சூழ்நிலையில் என்ன செய்வது? உங்களுக்கு விருப்பமில்லை என்பதை செயல்கள் மூலம் தெளிவாகக் காட்டுங்கள். அப்படி செய்வதுதான் சரியாக இருக்கும். இல்லையென்றால், அவர் ஆசையை வளர்த்துக்கொண்டு போகலாம். கடைசியில், அவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.—எபே. 4:25. w24.05 22-23 ¶9-10
செவ்வாய், ஏப்ரல் 21
மறுபடியும் வந்து என் வீட்டுக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன்.—யோவா. 14:3.
பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் யார் உண்மையிலேயே அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்களோ... யார் கடைசிவரை உண்மையாக இருக்கிறார்களோ... அவர்களைத்தான் இயேசு பரலோக அரசாங்கத்துக்குள் அழைப்பார். பரலோக நம்பிக்கையுள்ள ஒருவர் விழிப்போடு இல்லையென்றால் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு’ அவர் கூட்டிச்சேர்க்கப்பட மாட்டார். (மத். 24:31) இந்த எச்சரிப்பு அவர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய மக்கள் எல்லாருக்குமே பொருந்தும். பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிறவர்களும் இயேசுவின் இந்த எச்சரிப்பைக் கேட்டு, விழிப்போடு இருக்க வேண்டும்; கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். நமக்கு யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரியும்; அதனால் அவர் நீதியாக நியாயந்தீர்ப்பார் என்று நம்புகிறோம். ஒருவேளை, சமீப வருஷங்களில் ஒருவரை யெகோவா அபிஷேகம் செய்திருந்தால் அதைப் பற்றி நாம் கேள்வி கேட்பதில்லை. திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்கிறவர்களைப் பற்றி இயேசு சொன்னதை நாம் மனதில் வைத்திருக்கிறோம். (மத். 20:1-16) திராட்சைத் தோட்டத்தில் சிலர் காலையிலிருந்தே வேலை செய்தார்கள். ஆனால், சிலர் கடைசியாக 11-ஆம் மணிநேரத்தில் வேலைக்கு வந்தார்கள். இவர்கள் எல்லாருக்கும் ஒரே கூலிதான் கிடைத்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒருவர் எப்போது அபிஷேகம் செய்யப்பட்டாலும் சரி, அவர் உண்மையாக இருந்தால் பரலோகத்துக்குப் போவதற்கான பரிசைப் பெறுவார். w24.09 24 ¶15-17
புதன், ஏப்ரல் 22
கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.—1 பே. 2:21.
அநியாயத்தைச் சமாளிப்பது எப்படி என்பதற்கு இயேசு ஒரு நல்ல முன்மாதிரி. குடும்பத்தில் இருக்கிறவர்களும் மற்றவர்களும் அவரை அநியாயமாக நடத்தினார்கள். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவருடைய சொந்தக்காரர்கள் சொன்னார்கள். அவர் பேய்களோடு சம்பந்தம் வைத்திருக்கிறார் என்று மதத் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள். ரோமப் படைவீரர்கள் அவரைக் கேலி செய்தார்கள், அடித்துத் துன்புறுத்தினார்கள். கடைசியில், கொலையே செய்துவிட்டார்கள். (மாற். 3:21, 22; 14:55; 15:16-20, 35-37) இருந்தாலும், எல்லா அநியாயங்களையும் இயேசு சகித்துக்கொண்டார். பதிலுக்குப் பதில் செய்யவில்லை, பழிக்குப்பழி வாங்கவில்லை. (1 பே. 2:21-23) அநியாயம் நடக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இயேசு நல்ல முன்மாதிரி! எப்போது அமைதியாக இருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (மத். 26:62-64) தன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. (மத். 11:19) அவர் பேசும்போதும், தன்னைத் துன்புறுத்துகிறவர்களை அவமானப்படுத்துகிற விதத்தில் பேசவில்லை. அவர்களை மிரட்டவும் இல்லை. w24.11 4-5 ¶9-10
வியாழன், ஏப்ரல் 23
பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்.—1 தீ. 1:15.
ரொம்ப அழகான, பிரயோஜனமான ஒரு பரிசை நீங்கள் நேசிக்கும் ஒருவருக்குக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் அந்தப் பரிசை டப்பாக்குள் போட்டு அப்படியே வைத்துவிடுகிறார்; அதை மறந்தே போய்விடுகிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆனால், அவர் அந்தப் பரிசை நன்றாகப் பயன்படுத்தினால், அதற்காக நன்றியோடு இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நிச்சயம் சந்தோஷப்படுவீர்கள்! இந்த உதாரணத்திலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்? நம்மேல் அன்பு இருப்பதால், யெகோவா தன்னுடைய சொந்த மகனை நமக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அந்தப் பரிசுக்காகவும் அவர் காட்டிய அன்புக்காகவும் நாம் நன்றியோடு இருந்தால் யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார், இல்லையா? (யோவா. 3:16; ரோ. 5:7, 8) நாட்கள் போகப்போக, மீட்புவிலை என்ற பரிசின் மேல் நமக்கு இருக்கிற நன்றி குறைய ஆரம்பிக்கலாம். அப்படிக் குறைந்தால், கடவுள் கொடுத்த பரிசை டப்பாக்குள் போட்டு ஓரமாக வைப்பதுபோல் ஆகிவிடும். அப்படி நடக்கக் கூடாது என்றால், யெகோவாவும் கிறிஸ்துவும் நமக்காகச் செய்ததை அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும். மீட்புவிலைமேல் இருக்கிற நன்றி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். w25.01 26 ¶1-2
வெள்ளி, ஏப்ரல் 24
இவற்றைப் பற்றியே ஆழமாக யோசித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவரும்.—1 தீ. 4:15.
மூப்பராக ஆவதற்கு ஒருவர் சமீபத்தில் கிறிஸ்தவரானவராக இருக்கக் கூடாது. அதற்காக, நீங்கள் ஞானஸ்நானம் எடுத்து ரொம்ப வருஷங்கள் ஆகியிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இருந்தாலும், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தம் பலமாவதற்கும் பைபிளைப் பயன்படுத்தி ஞானமான முடிவுகளை எடுக்கப் பழகுவதற்கும் காலம் எடுக்கும். நீங்கள் ஒரு மூப்பராக நியமிக்கப்படுவதற்கு முன்பே இயேசு மாதிரி மனத்தாழ்மையாக இருப்பதைக் காட்ட வேண்டும். சபையில் உங்களுக்குப் பொறுப்புகள் கொடுக்கப்படும்வரை யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருப்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும். (மத். 20:23; பிலி. 2:5-8) நீங்கள் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும். அதாவது, யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும்; அவருடைய நீதியான நெறிமுறைகளின்படி வாழ வேண்டும். அதுமட்டுமல்ல, யெகோவாவுடைய அமைப்பு மூலமாகக் கொடுக்கப்படுகிற வழிநடத்துதல்களுக்கும் உண்மையோடு கீழ்ப்படிய வேண்டும். கண்காணியாக இருக்கிற ஒருவர் கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அப்படியென்றால், அவர் சிறந்த பேச்சாளராக இருக்க வேண்டும் என்று அர்த்தமா? இல்லை. இன்று நிறைய மூப்பர்கள் சிறந்த பேச்சாளர்களாக இல்லை என்றாலும், ஊழியம் செய்யும்போதும் மேய்ப்பு சந்திப்புகள் செய்யும்போதும் பைபிளிலிருந்து திறமையாகச் சொல்லிக்கொடுக்கிறார்கள். w24.11 23-24 ¶14-15
சனி, ஏப்ரல் 25
உங்களுடைய கட்டளைகளை நான் நேசிக்கிறேன். தங்கத்தைவிட, சொக்கத்தங்கத்தைவிட, அவற்றை அதிகமாக நேசிக்கிறேன்.—சங். 119:127.
யெகோவாவைப் பற்றி, இயேசுவைப் பற்றி, அவர்கள் நம்மேல் காட்டிய அன்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நாள் முழுக்க அசைபோட்டுப் பாருங்கள். (சங். 119:97, அடிக்குறிப்பு) ஆராய்ச்சி செய்து படிக்கும்போது புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் சோர்ந்துவிடாதீர்கள். தங்கத்தைத் தேடிப்போகிறவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கடுகளவு தங்கத்தைக் கண்டுபிடிக்கக்கூட அவர்கள் பல மணிநேரம் அல்லது பல நாட்கள் செலவு செய்ய வேண்டியிருக்கலாம். இருந்தாலும் அவர்கள் ஏன் இவ்வளவு விடாமுயற்சியோடு தேடுகிறார்கள்? ஏனென்றால், அவர்களுக்குத் தங்கத்தின் மதிப்பு தெரியும். தங்கத்தைவிட பைபிள் சத்தியங்கள் எவ்வளவு மதிப்புள்ளவை! (நீதி. 8:10) அதனால், தொடர்ந்து பொறுமையாகப் படியுங்கள், தேடலுக்கான முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்.—சங். 1:2. w25.01 25 ¶14-15
ஞாயிறு, ஏப்ரல் 26
யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.—கொலோ. 3:13.
நம்மைக் காயப்படுத்தியவர்களை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (சங். 86:5; லூக். 17:4; எபே. 4:32) ஒருவருடைய சொல்லோ செயலோ நம்மை ரொம்பவே காயப்படுத்திவிடலாம். அதுவும், அவர் நம் நண்பராகவோ குடும்பத்தில் ஒருவராகவோ இருந்தால் சொல்லவே வேண்டாம். (சங். 55:12-14) அது கத்தியால் குத்திய மாதிரி வலிக்கலாம். (நீதி. 12:18) அதுபோன்ற சமயங்களில், நம்முடைய வலியை வெறுமனே அடக்கிக்கொள்ளலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படிச் செய்வது, குத்தப்பட்ட கத்தியை அப்படியே விட்டுவிடுவது போலத்தான் இருக்கும். அதேமாதிரி, மனதில் ஏற்பட்ட காயத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் அது தானாக சரியாகும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒருவர் நம்மைக் காயப்படுத்தும்போது நமக்குச் சட்டென்று கோபம் வந்துவிடலாம். சொல்லப்போனால், நமக்குப் பயங்கர கோபம் வரலாம் என்று பைபிள்கூட ஒத்துக்கொள்கிறது. ஆனால், நாம் கோபமாகவே இருந்துவிடக் கூடாது என்றும் அது எச்சரிக்கிறது. (சங். 4:4; எபே. 4:26) ஏனென்றால், கோபமாகவே இருக்கும்போது தப்பு செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. (யாக். 1:20) இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: கோபப்படுவது சட்டென்று வருகிற ஒரு உணர்ச்சி. ஆனால், கோபத்தை வைத்துக்கொண்டே இருப்பது நாம் எடுக்கிற ஒரு முடிவு. w25.02 15 ¶4-6
திங்கள், ஏப்ரல் 27
‘ஞானம் ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.’—பிர. 7:12.
“கடவுளுடைய பார்வையில் பணக்காரனாக இல்லாமல்,” உலகத்தில் சொத்துகளைச் சேர்த்து வைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. (லூக். 12:16-21) நாளைக்கு என்ன நடக்கும் என்று நம் யாருக்குமே தெரியாது. (நீதி. 23:4, 5; யாக். 4:13-15) அதோடு, இயேசுவுடைய சீஷர்களாக இருப்பதால் நமக்கு வேறொரு பிரச்சினையும் வர வாய்ப்பிருக்கிறது. தன்னுடைய சீஷராக இருக்க விரும்புகிறவர்கள், தங்களுடைய உடைமைகள் எல்லாவற்றையும் “விட்டுவிட்டு” வருவதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். (லூக். 14:33) முதல் நூற்றாண்டில், யூதேயாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அதுபோன்ற ஒரு இழப்பைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். (எபி. 10:34) நம்முடைய காலத்தில்கூட அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்காததால், நிறைய பணம் பொருளை நம்முடைய சகோதர, சகோதரிகள் இழந்திருக்கிறார்கள். (வெளி. 13:16, 17) இந்த சூழ்நிலைகளைச் சமாளிக்க எது அவர்களுக்கு உதவியது? “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று கடவுள் சொல்லியிருக்கிற வாக்குறுதியின் மேல் நம்பிக்கை வைத்தது அவர்களுக்கு உதவியது. (எபி. 13:5) வயதான காலத்தில் நம்மையே நாம் பார்த்துக்கொள்வதற்காக திட்டங்கள் போடுவதில் தப்பில்லை. அதேசமயத்தில், எதிர்பாராத சம்பவங்கள் ஏதாவது நடந்துவிட்டால், யெகோவா நமக்கு உதவி செய்வார் என்று முழுமையாக நம்பியிருக்கலாம். w25.03 29 ¶13-14
செவ்வாய், ஏப்ரல் 28
‘கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை போதனைகளைக் கற்று முடித்திருக்கிற நாம், மறுபடியும் அஸ்திவாரம் போடாமல் முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும்.’—எபி. 6:1, 2.
நாம் தானாகவே ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. நமக்கு உதவ மேய்ப்பர்களையும் போதகர்களையும் கொடுத்திருக்கிறார். “கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு முழு வளர்ச்சி” அடைய அவர்கள் நமக்கு உதவுகிறார்கள். (எபே. 4:11-13) அதுமட்டுமல்ல, யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுக்கிறார்; ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்ள அது நமக்கு உதவுகிறது. (1 கொ. 2:14-16) யெகோவா நமக்கு நான்கு சுவிசேஷ புத்தகங்களையும் கொடுத்திருக்கிறார். இயேசு பூமியிலிருந்தபோது எப்படியெல்லாம் யோசித்தார், பேசினார், நடந்துகொண்டார் என்று அவற்றில் இருக்கிறது. இயேசுவை மாதிரியே யோசிக்கும்போதும் நடந்துகொள்ளும்போதும் நம்மால் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக முடியும். ஆனால் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆக, “கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை போதனைகளை” மட்டுமே, அதாவது அடிப்படை பைபிள் சத்தியங்களை மட்டுமே, கற்றுக்கொண்டால் போதாது. w24.04 4-5 ¶11-12
புதன், ஏப்ரல் 29
யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும், பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்.—நீதி. 2:11.
நாம் தினமும் நிறைய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. காலையில் என்ன சாப்பிடுவது, ராத்திரி எப்போது தூங்க போவது போன்ற சின்ன சின்ன முடிவுகளைச் சுலபமாக எடுத்துவிடுகிறோம். ஆனால், வேறு சில முடிவுகளை எடுப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நம் ஆரோக்கியத்தை, நம் சந்தோஷத்தை, நம் குடும்பத்தை, யெகோவாவுக்கு நாம் செய்கிற சேவையை அந்த முடிவுகள் பாதிக்கலாம். நமக்கும் நம் குடும்பத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கிற முடிவுகளை எடுக்கத்தான் நாம் ஆசைப்படுவோம். அதைவிட முக்கியமாக, நாம் எடுக்கும் முடிவுகள் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நாம் நிச்சயமாக நினைப்போம். (ரோ. 12:1, 2) நல்ல முடிவுகள் எடுப்பதற்கு ஒரு முக்கியமான படி, எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வது. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு மோசமான நோய் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர் டாக்டரிடம் போகிறார். இப்போது அந்த டாக்டர் நோயாளியிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல், எந்தப் பரிசோதனையும் செய்யாமல் எடுத்ததுமே சிகிச்சை கொடுத்துவிடுவாரா? கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டார். ஒரு நல்ல டாக்டர், சிகிச்சை கொடுப்பதற்கு முன்பு எப்படி எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வாரோ, அதேமாதிரி நாமும் முடிவு எடுப்பதற்கு முன்பு எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். w25.01 14 ¶1-3
வியாழன், ஏப்ரல் 30
யெகோவா உங்கள் பாவத்தை மன்னித்துவிட்டார். நீங்கள் சாக மாட்டீர்கள்.—2 சா. 12:13.
யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? யாரும் ‘அழிந்துபோவதை’ தான் விரும்புவதில்லை என்பதை அவர் எப்படிக் காட்டுகிறார்? (2 பே. 3:9) பயங்கர மோசமான பாவங்களை செய்த சிலருக்கு அவர் எப்படி இரக்கம் காட்டினார் என்று யோசித்துப் பாருங்கள். தாவீது ராஜா பாலியல் முறைகேடு, கொலை போன்ற படுமோசமான பாவங்களை செய்தார். ஆனாலும், அவர் மனம் திருந்தினார், அதனால் யெகோவா அவருக்கு இரக்கம் காட்டி அவரை மன்னித்தார். (2 சா. 12:1-12) மனாசே ராஜாவும் தன்னுடைய வாழ்நாளில் நிறைய மோசமான பாவங்களை செய்தார். இவ்வளவு மோசமான பாவங்களை செய்திருந்தாலும், அவர் மனம் திருந்தியதால் யெகோவா அவருக்கு இரக்கம் காட்டி அவரை மன்னித்தார். (2 நா. 33:9-16) இந்த உதாரணங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? இரக்கம் காட்டுவதற்கு நியாயமான காரணம் இருக்கும்போதெல்லாம் யெகோவா அதைக் காட்டுகிறார். தாங்கள் செய்த படுமோசமான பாவங்களை உணர்ந்து மனம் திருந்திய தாவீது, மனாசே மாதிரியான ஆட்களை யெகோவா மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார். w24.05 4 ¶12