உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • es26 பக். 57-70
  • மே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே
  • சிந்திக்க தினம் ஒரு வசனம்—2026
  • துணை தலைப்புகள்
  • வெள்ளி, மே 1
  • சனி, மே 2
  • ஞாயிறு, மே 3
  • திங்கள், மே 4
  • செவ்வாய், மே 5
  • புதன், மே 6
  • வியாழன், மே 7
  • வெள்ளி, மே 8
  • சனி, மே 9
  • ஞாயிறு, மே 10
  • திங்கள், மே 11
  • செவ்வாய், மே 12
  • புதன், மே 13
  • வியாழன், மே 14
  • வெள்ளி, மே 15
  • சனி, மே 16
  • ஞாயிறு, மே 17
  • திங்கள், மே 18
  • செவ்வாய், மே 19
  • புதன், மே 20
  • வியாழன், மே 21
  • வெள்ளி, மே 22
  • சனி, மே 23
  • ஞாயிறு, மே 24
  • திங்கள், மே 25
  • செவ்வாய், மே 26
  • புதன், மே 27
  • வியாழன், மே 28
  • வெள்ளி, மே 29
  • சனி, மே 30
  • ஞாயிறு, மே 31
சிந்திக்க தினம் ஒரு வசனம்—2026
es26 பக். 57-70

மே

வெள்ளி, மே 1

கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.—ரோ. 2:11.

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை யெகோவா விடுதலை செய்த பிறகு, வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய குருமார்களை நியமித்தார். அந்தப் பரிசுத்த கூடாரத்தில் இருந்த மற்ற வேலைகளைச் செய்ய லேவியர்களை அவர் நியமித்தார். அப்படியென்றால், வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்தவர்களை அல்லது அதற்குப் பக்கத்தில் தங்கியிருந்தவர்களை மட்டும்தான் யெகோவா விசேஷமாகக் கவனித்துக்கொண்டாரா? இல்லை! யெகோவா பாரபட்சம் காட்டாதவர். இஸ்ரவேலர்கள் ஒவ்வொருவராலும் யெகோவாவின் நெருக்கமான நண்பராக ஆக முடிந்தது. உதாரணத்துக்கு, வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகத் தூணையும் நெருப்புத் தூணையும் யெகோவா அற்புதமாக வரவைத்தபோது முழு தேசத்துக்கும் அவை தெரியும்படி பார்த்துக்கொண்டார். (யாத். 40:38) அந்த மேகம் புதிய திசையில் நகர ஆரம்பித்தபோது, வழிபாட்டுக் கூடாரத்திலிருந்து ரொம்பத் தூரத்தில் தங்கியிருந்தவர்களால்கூட அதைப் பார்க்க முடிந்தது; உடனே அவர்கள் தங்கள் பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தையும் பிரித்து எடுத்துக்கொண்டு, மற்ற எல்லாரோடும் சேர்ந்து அங்கிருந்து கிளம்ப முடிந்தது. (எண். 9:15-23) அதேபோல் இன்றும், இந்த உலகத்தில் நாம் எங்கே இருந்தாலும் சரி, யெகோவா நம்மேல் அன்பு காட்டுகிறார்... நம்மைக் கவனித்துக்கொள்கிறார்... நம்மைப் பாதுகாக்கிறார். w24.06 4 ¶10-12

சனி, மே 2

எழுந்திருங்கள், இங்கிருந்து ஓடிவிடலாம். இல்லாவிட்டால் அப்சலோமிடமிருந்து ஒருவர்கூட தப்பிக்க முடியாது!—2 சா. 15:14.

தாவீதுடைய மகன் அப்சலோம் ஆட்சியைப் பறிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தான். அந்தச் சமயத்தில், தாவீதின் உயிர் ஆபத்தில் இருந்தது. (2 சா. 15:12, 13) அதனால், தாவீது உடனடியாக எருசலேமிலிருந்து கிளம்ப வேண்டியிருந்தது. தாவீதும் அவருடைய ஊழியர்களும் எருசலேமை விட்டு போய்க்கொண்டிருந்தபோது தாவீதுக்கு ஒரு யோசனை வந்தது. யாராவது ஒருவர் எருசலேமிலேயே இருந்து அப்சலோம் போடுகிற திட்டங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அதனால், சாதோக்கையும் மற்ற குருமார்களையும் எருசலேமுக்கு அனுப்பினார். அங்கே தங்கி அப்சலோமுடைய திட்டங்களைத் தனக்குத் தெரியப்படுத்தும்படி சொன்னார். (2 சா. 15:27-29) இந்த வேலை ரொம்ப ரொம்ப ஆபத்தானது. சாதோக்கையும் இன்னொரு நண்பரான ஊசாயையும் பயன்படுத்தி தாவீது ஒரு திட்டம் தீட்டினார். (2 சா. 15:32-37) தாவீதின் திட்டத்துக்கு ஏற்ற மாதிரி ஊசாய் அப்சலோமிடம் போனார், அவனுடைய நம்பிக்கையைச் சம்பாதித்தார்; தாவீதைத் தாக்குவதற்கு ஒரு ஆலோசனையைக் கொடுத்தார். இந்த ஆலோசனையால், தாக்குதலுக்குத் தயாராக தாவீதுக்குக் கொஞ்ச நேரம் கிடைத்தது. அதற்குப் பிறகு, ஊசாய் சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் இந்தத் திட்டத்தைப் பற்றிச் சொன்னார். (2 சா. 17:8-16) அவர்கள் இரண்டு பேரும் இதைப் பற்றி தாவீதுக்குச் செய்தி அனுப்பினார்கள். அதனால், தாவீதின் உயிரைப் பாதுகாக்க முடிந்தது.—2 சா. 17:21, 22. w24.07 4-5 ¶9-10

ஞாயிறு, மே 3

‘யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்” என்கிறார்.’—ஏசா. 1:18, 20.

முன்பு செய்த தவறுகளை நினைத்து நாம் சிலசமயங்களில் வேதனைப்படலாம். அது ஞானஸ்நானத்துக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு செய்த தவறுகளாக இருக்கலாம். ஆனால், நம்மேல் இருக்கிற அன்பால்தான் யெகோவா மீட்புவிலை என்ற பரிசைக் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. அந்தப் பரிசை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். யெகோவா நம்மிடம் “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்” என்று கூப்பிடுகிறார். அப்படிச் சரி செய்த பிறகு யெகோவா நம்முடைய பாவங்களை மனதிலேயே வைத்துக்கொண்டிருப்பது இல்லை. நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையுமே அவர் மறந்துவிடுகிறார். அதேசமயத்தில், நாம் செய்த நல்ல விஷயங்களை அவர் மறப்பதே கிடையாது. யெகோவாவுக்கு நம்மேல் எவ்வளவு அன்பு! (சங். 103:9, 12; எபி. 6:10) கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறை நினைத்து தவித்துக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், இப்போது வாழ்கிற வாழ்க்கையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் யோசியுங்கள். உங்களால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால், இப்போது இருக்கிற சூழ்நிலையில் உங்களால் யெகோவாவை மகிமைப்படுத்த முடியும். அவர் வாக்கு கொடுத்திருக்கிற எதிர்காலத்துக்காக காத்திருக்கவும் முடியும். w24.10 8 ¶8-9

திங்கள், மே 4

புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.—கொலோ. 3:10.

பைபிளைப் படித்து யோசித்துப் பார்க்கும்போது, முன்னேறுவதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதை நினைத்து நீங்கள் சோர்ந்துபோகலாம். இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: இன்றைக்கு நீங்கள் பைபிள் வாசிக்கிறீர்கள். அதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று ஒரு ஆலோசனை இருக்கிறது. (யாக். 2:1-8) அதைப் படித்ததும், ‘ஆமாம், மற்றவர்களை நான் இன்னும் நன்றாக நடத்த வேண்டும்’ என்று உங்களுக்குத் தோன்றுகிறது. அதனால், சில மாற்றங்கள் செய்ய முடிவெடுக்கிறீர்கள். அடுத்த நாள் வாசிக்கும்போது, பேச்சைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்ற ஆலோசனையைப் பார்க்கிறீர்கள். (யாக். 3:1-12) நீங்கள் பேசுகிற விதம் சிலசமயங்களில் அன்பில்லாமலும் நோகடிக்கிற மாதிரியும் இருப்பதை உணர்கிறீர்கள். அதனால், பேசுகிற விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறீர்கள். அடுத்த நாள் பைபிள் வாசிக்கும்போது, உலக நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதைப் பற்றிப் படிக்கிறீர்கள். (யாக். 4:4-12) இப்போது, உங்களுடைய பொழுதுபோக்கைப் பற்றி யோசித்துப் பார்க்கிறீர்கள். அதிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. நான்காவது நாள் படிக்கும்போது, கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் ஏற்கெனவே நிறைய இருக்கிறதே என்று நினைத்து உங்களுக்குத் தலையே சுற்றலாம்! ஆனால், அதை நினைத்து சோர்ந்துபோகாதீர்கள். “புதிய சுபாவத்தை” போட்டுக்கொள்வது தொடர்ச்சியாக நடக்கிற ஒரு விஷயம் என்பதை மறந்துவிடாதீர்கள். w24.09 5-6 ¶11-12

செவ்வாய், மே 5

கிறிஸ்துவை எஜமானாகவும், பரிசுத்தமானவராகவும் உங்கள் இதயங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள்.—1 பே. 3:15.

தனக்கு நடக்கிற அநியாயத்தையெல்லாம் யெகோவா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது இயேசுவுக்குத் தெரியும். சரியான சமயத்தில் அவர் இந்த எல்லா அநியாயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் இயேசு நம்பினார். இயேசு மாதிரியே நாமும், என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை, அது அவ்வளவு பெரிய அநியாயம் இல்லையென்றால் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லது பேசாமல் அமைதியாக இருந்துவிடலாம். எதையாவது பேசிவிட்டால் பிரச்சினை பெரிதாக வாய்ப்பிருக்கிறது. (பிர. 3:7; யாக். 1:19, 20) ஆனால் சிலசமயங்களில், மற்றவர்கள் அநியாயமாக நடத்தப்படும்போது அவர்களுக்காக நாம் பேச வேண்டியிருக்கலாம். அல்லது, நம்முடைய நம்பிக்கைகளை ஆதரித்துப் பேச வேண்டியிருக்கலாம். (அப். 6:1, 2) அப்படிப் பேசும்போது, நிதானமாகவும் மரியாதையாகவும் பேசுவதற்கு நாம் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும். “நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம்” விஷயங்களை விட்டுவிடுவதன் மூலமும், நாம் இயேசு மாதிரியே நடந்துகொள்ளலாம்.—1 பே. 2:23. w24.11 5-6 ¶10-12

புதன், மே 6

பாவிகளில் ஒருவன் மனம் திருந்தும்போது கடவுளுடைய தூதர்கள் எல்லாரும் சந்தோஷப்படுவார்கள்.—லூக். 15:10.

பாவம் செய்தவர் மனம் திருந்தும்போது நமக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. (லூக். 15:7) அதற்கான புகழ் யாருக்குப் போய்ச் சேர வேண்டும்? மூப்பர்களுக்கா? பாவம் செய்தவர்களைப் பற்றிப் அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதினார் என்று பாருங்கள்: ‘மனம் திருந்த . . . கடவுள் ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.’ (2 தீ. 2:25) அப்படியென்றால், ஒருவருடைய யோசனையும் மனப்பான்மையும் மாறுவதற்கு யெகோவாதான் உதவுகிறார், எந்த மனிதனும் அல்ல! ஒருவர் மனம் திருந்திய பிறகு, அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கிறது என்று பவுல் விளக்குகிறார். அதாவது, சத்தியத்தைப் பற்றி அவரால் இன்னும் திருத்தமாகத் தெரிந்துகொள்ள முடியும், அவருடைய புத்தி தெளியும், சாத்தானுடைய கண்ணியில் இருந்தும் அவர் விடுபடலாம். (2 தீ. 2:26) பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தும்போது, அந்தக் குழு அவருக்கு மேய்ப்புச் சந்திப்புகளைச் செய்ய ஏற்பாடு செய்வார்கள். இப்படி, சாத்தானுடைய கண்ணிகளை எதிர்த்துப் போராடுவதற்கும், தன்னுடைய பாதையை நேராக்குவதற்கும் அவருக்கு உதவி கிடைத்துக்கொண்டே இருக்கும்.—எபி. 12:12, 13. w24.08 23 ¶14-15

வியாழன், மே 7

அற்புதங்களைப் பார்த்ததால் அல்ல, ரொட்டிகளைச் சாப்பிட்டுத் திருப்தியானதால்தான் நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்.—யோவா. 6:26.

இயேசு எந்த இடத்தில் சாப்பாடு கொடுத்தாரோ அதே இடத்துக்கு அவரைத் தேடி மக்கள் அடுத்த நாளும் வந்தார்கள். ஆனால் இயேசுவும் அப்போஸ்தலர்களும் அங்கே இல்லை. அதனால், திபேரியாவிலிருந்து வந்த படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு இயேசுவைத் தேடி வந்தார்கள். (யோவா. 6:22-24) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தார்களா? இல்லை. தங்கள் வயிற்றை நிரப்புவதற்காகத்தான் வந்தார்கள். அவர்கள் சாப்பாட்டைத் தேடித்தான் அவரிடம் வந்திருக்கிறார்கள் என்பதை இயேசு வெளிப்படையாகச் சொன்னார். அதாவது, முந்தின நாள் அவர்கள் “ரொட்டிகளைச் சாப்பிட்டுத் திருப்தியானதால்தான்” தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். “அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (யோவா. 6:26, 27) முடிவில்லாத வாழ்வைத் தரும் அந்த உணவை தன் தகப்பன் கொடுப்பார் என்று இயேசு சொன்னார். w24.12 5 ¶8-9

வெள்ளி, மே 8

ஞானமுள்ளவனின் இதயம் அவனை விவேகமாகப் பேச வைக்கிறது. பக்குவமாகப் பேசி மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமையைக் கொடுக்கிறது.—நீதி. 16:23.

சகோதரர்களே, நீங்கள் மேடையிலிருந்து கற்றுக்கொடுத்தாலும் சரி, மற்றவர்களுக்குத் தனிப்பட்ட விதமாக ஆலோசனை கொடுத்தாலும் சரி, எப்போதும் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் திறமையாகக் கற்றுக்கொடுக்கிற ஒருவராக ஆக முடியும். பைபிளையும் அமைப்பு வெளியிட்டிருக்கும் பிரசுரங்களையும் நன்றாகப் படியுங்கள். (நீதி. 15:28) ஒரு வசனத்துக்கு நம்முடைய பிரசுரங்களில் என்ன விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்; அப்போதுதான் அதைச் சரியாகப் பொருத்திக் காட்ட முடியும். கற்றுக்கொடுக்கும்போது மற்றவர்களுடைய இதயத்தைத் தொடுவதற்குக் கடினமாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் எப்படி முன்னேறலாம் என்று அனுபவமுள்ள மூப்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள்; அதன்படி செய்யுங்கள். (1 தீ. 5:17) மூப்பர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சிலசமயத்தில், மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க அல்லது அவர்களை கண்டிக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், எப்போதுமே அன்பாக நடந்துகொள்ளுங்கள். மென்மையாகவும் அன்பாகவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சொல்லிக்கொடுத்தால், நீங்கள் சிறந்த விதத்தில் கற்றுக்கொடுக்கிறவராக ஆக முடியும். பெரிய போதகரான இயேசுவைப் பின்பற்ற முடியும்.—மத். 11:28-30; 2 தீ. 2:24. w24.11 24 ¶16

சனி, மே 9

அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்.—சங். 96:3.

யெகோவாவைப் பற்றிப் பேசுவதன் மூலம் அவரை மகிமைப்படுத்தலாம். “யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்,” “அவருடைய பெயரைப் புகழுங்கள்,” “அவர் தரும் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியை . . . அறிவியுங்கள்,” “அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்” என்றெல்லாம் பைபிள் சொல்கிறது. (சங். 96:1-3) இவையெல்லாமே நம்முடைய பேச்சில் யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கான வழிகள். (அப். 4:29) யெகோவாவை உண்மையாக வணங்கியவர்கள், மதிப்புமிக்க பொருள்களைக் கொடுத்து அவரை எப்போதுமே மகிமைப்படுத்தி இருக்கிறார்கள். (நீதி. 3:9) உதாரணத்துக்கு, ஆலயத்தைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் இஸ்ரவேலர்கள் காணிக்கை கொடுத்தார்கள். (2 ரா. 12:4, 5; 1 நா. 29:3-9) இயேசுவின் சீஷர்களில் சிலர், “தங்களுடைய உடைமைகளைக் கொண்டு” இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் பணிவிடை செய்தார்கள். (லூக். 8:1-3) முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள், சகோதர சகோதரிகளுக்காக நிவாரண உதவிகளைச் செய்தார்கள். (அப். 11:27-29) இன்று நாமும் மனதார நன்கொடைகள் கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்தலாம். w25.01 4 ¶8; 5 ¶11

ஞாயிறு, மே 10

இவர்கள் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதை யாராவது தடுக்க முடியுமா?—அப். 10:47.

ஞானஸ்நானம் எடுக்க கொர்நேலியுவுக்கு எது உதவியது? “வீட்டிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து [கொர்நேலியு] கடவுளுக்குப் பயந்து நடந்தார்” என்று பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, அவர் எப்போதும் கடவுளிடம் மன்றாடினார். (அப். 10:2) பேதுரு நல்ல செய்தியைச் சொன்னபோது கொர்நேலியுவும் அவருடைய வீட்டில் இருந்தவர்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். உடனடியாக ஞானஸ்நானமும் எடுத்தார்கள். (அப். 10:47, 48) குடும்பத்தோடு யெகோவாவை வணங்க என்னவெல்லாம் மாற்றங்களைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கொர்நேலியு தயாராக இருந்தார். (யோசு. 24:15; அப். 10:24, 33) சவுல் மாதிரியே கொர்நேலியுவும் ஒரு நல்ல அந்தஸ்தில் இருந்தார். அதைக் காரணம்காட்டி அவர் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஞானஸ்நானம் எடுக்க நீங்களும் பெரிய பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், கண்டிப்பாக யெகோவா உங்களுக்கு உதவுவார். பைபிள் சொல்வதுபோல் வாழ நீங்கள் உறுதியாக இருந்தால் அவர் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார். w25.03 5 ¶12-13

திங்கள், மே 11

‘கடவுளை அவமதிக்கிற கட்டுக்கதைகளை ஒதுக்கித்தள்ளு.’—1 தீ. 4:7.

அமைப்பைப் பற்றியோ நம்மை வழிநடத்துகிற சகோதரர்களைப் பற்றியோ நீங்கள் ஏதாவது தவறாக கேள்விப்பட்டால், முதல் நூற்றாண்டில் இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் எதிரிகள் எப்படி நடத்தினார்கள் என்று யோசியுங்கள். சொல்லப்போனால், யெகோவாவுடைய மக்கள் துன்புறுத்தப்படுவார்கள், அவர்களைப் பற்றி பொய்கள் பரப்பப்படும் என்று பைபிள் முன்பே சொன்னது. அதுதான் இன்றைக்கு நிறைவேறிக்கொண்டு வருகிறது. (மத். 5:11, 12) அதனால் இந்தப் பொய்களுக்குப் பின்னால் இருப்பவன் யார் என்பதைப் புரிந்துகொண்டு, தடுமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே செய்யுங்கள். அப்போது பொய்களை நம்பி ஏமாந்துவிட மாட்டீர்கள். அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? கட்டுக்கதைகளை ஒதுக்கித்தள்ளுங்கள். ‘கட்டுக்கதைகளுக்கு கவனம் செலுத்துகிறவர்களிடம்’ அப்படிச் ‘செய்யக் கூடாதென்று கட்டளையிட’ சொல்லி பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். அதுமட்டுமல்ல, ‘கடவுளை அவமதிக்கிற கட்டுக்கதைகளை . . . ஒதுக்கித்தள்ளுங்கள்’ என்றும் சொல்ல சொன்னார். (1 தீ. 1:3, 4) கட்டுக்கதைகளுக்கு பின்னால் இருப்பது யார் என்று புரிந்துகொண்டு அதை ஒதுக்கித்தள்ள வேண்டும். சத்தியத்தின் “பயனுள்ள வார்த்தைகளை” மட்டும்தான் நாம் கேட்க வேண்டும்.—2 தீ. 1:13. w24.04 11 ¶16; 13 ¶17

செவ்வாய், மே 12

கள்ளம்கபடம் இல்லாதவர்களுடைய உள்ளத்தைத் தங்கள் நயமான பேச்சினாலும் புகழ்ச்சியினாலும் ஏமாற்றுகிறார்கள்.—ரோ. 16:18.

யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களோடு எப்போதும் ஒற்றுமையாக இருங்கள். நாம் எல்லாரும் ஒற்றுமையாக தன்னை வணங்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். உண்மைகள் பக்கம் உறுதியாக நின்றால்தான் நம்மால் ஒற்றுமையாக இருக்க முடியும். பொய்யான தகவல்களைப் பரப்புகிறவர்கள் சபையில் பிரிவினைகளை ஏற்படுத்துவார்கள். அதனால் “அவர்களிடமிருந்து விலகியிருங்கள்” என்று கடவுள் எச்சரிக்கிறார். ஒருவேளை அப்படிச் செய்யாவிட்டால், நாமும் அந்தப் பொய்களை நம்பி யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போய்விடுவோம். (ரோ. 16:17) உண்மை எது என்பதைப் புரிந்துகொண்டு அதன் பக்கம் உறுதியாக நின்றால் யெகோவாவோடு நெருக்கமாக இருப்போம். நம்முடைய விசுவாசமும் பலமாக இருக்கும். (எபே. 4:15, 16) சாத்தான் பரப்புகிற பொய்யான போதனைகளையும் செய்திகளையும் நம்பி நாம் ஏமாந்துவிட மாட்டோம். மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவா நம்மைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார். அதனால் உண்மைகள் பக்கம் உறுதியாக நில்லுங்கள். “அப்போது, சமாதானத்தின் கடவுள் உங்களோடு இருப்பார்!”—பிலி. 4:8, 9. w24.07 13 ¶16-17

புதன், மே 13

‘இவர் நம்முடைய பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்தார்.’—எபி. 10:12.

தங்களுடைய பாவங்களால் நொந்துபோய் இருந்த ஆட்களுக்கு இயேசு விசேஷ கவனம் செலுத்தினார். தன்னுடைய சீஷர்களாக அவர்கள் ஆவதற்கு அழைப்பு கொடுத்தார். மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் பாவம்தான் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால், பாவிகள் என்று மக்களால் முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு இயேசு விசேஷமாக உதவி செய்தார். “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் தேவை” என்ற உதாரணத்தைப் பயன்படுத்தி, “நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று விளக்கினார். (மத். 9:12, 13) இயேசு சொன்ன மாதிரியே செய்தார். ஒருதடவை, இயேசுவின் பாதங்களை ஒரு பெண் தன்னுடைய கண்ணீரால் துடைத்தாள். அவளிடம் இயேசு மென்மையாகப் பேசினார். அவளுடைய பாவங்களை மன்னித்தார். (லூக். 7:37-50) ஒரு சமாரியப் பெண்ணுக்கு, ரொம்ப முக்கியமான விஷயங்களை இயேசு சொல்லிக்கொடுத்தார்; அவள் ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்கிறாள் என்று தெரிந்திருந்தும் அவர் அப்படிச் செய்தார். (யோவா. 4:7, 17-19, 25, 26) பாவத்தின் விளைவாக வரும் மரணத்தையும் ஒழித்துக்கட்ட, யெகோவா இயேசுவுக்குச் சக்தி கொடுத்திருந்தார். அதனால் ஆண்-பெண், பிள்ளைகள்-பெரியவர்கள் என வித்தியாசப்பட்ட ஆட்களை இயேசு உயிர்த்தெழுப்பினார்.—மத். 11:5. w24.08 4 ¶9-10

வியாழன், மே 14

அவர் இந்த உலகத்துக்கு நீதியாகத் தீர்ப்பு கொடுப்பார். மக்களுக்கு உண்மைத்தன்மையோடு தீர்ப்பு கொடுப்பார்.—சங். 96:13.

சீக்கிரத்தில் யெகோவா எப்படி அவருடைய பெயரை மகிமைப்படுத்துவார்? அவருடைய நீதியான நியாயத்தீர்ப்புகள் மூலம். யெகோவாவுடைய பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்திய மகா பாபிலோனை அவர் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார். (வெளி. 17:5, 16; 19:1, 2) அந்த அழிவைப் பார்க்கும் சிலர் நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்க ஆரம்பிக்கலாம். கடைசியாக, அர்மகெதோனில் சாத்தானுடைய இந்த மோசமான உலகத்தை யெகோவா அழிப்பார். அவரை எதிர்ப்பவர்களையும் அவருடைய பெயரைக் கெடுப்பவர்களையும் யெகோவா அழிப்பார். ஆனால், அவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களையும், அவரை மகிமைப்படுத்துவதைப் பெருமையாக நினைக்கிறவர்களையும் காப்பாற்றுவார். (மாற். 8:38; 2 தெ. 1:6-10) கிறிஸ்துவுடைய ஆயிர வருஷ ஆட்சிக்குப் பிறகு, ஒரு கடைசி சோதனை இருக்கும். அதெல்லாம் முடிந்த பின், யெகோவா அவருடைய பெயரை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தி இருப்பார். (வெளி. 20:7-10) அப்போது, “கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவின் மகிமையைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.” (ஆப. 2:14) யெகோவாவுக்குப் போய்ச் சேர வேண்டிய மகிமையை எல்லாரும் அவருக்குக் கொடுக்கிற அந்த நாள் எவ்வளவு அருமையாக இருக்கும்! w25.01 7 ¶15-16

வெள்ளி, மே 15

உங்களைத் திருத்துவதற்காகத்தான் கடவுள் உங்களைத் தண்டிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அதைச் சகித்துக்கொள்ளுங்கள்.—எபி. 12:7.

எதிர்ப்பைச் சகித்திருக்க எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எது உதவும்? எதிர்ப்பைச் சரியான விதத்தில் பார்ப்பது உதவும். இது அப்போஸ்தலன் பவுலுக்குத் தெரிந்திருந்ததால்தான், கஷ்டங்களை அனுமதிப்பதன் மூலம் கடவுள் பயிற்சி கொடுக்கிறார் என்று விளக்கினார். இந்தப் பயிற்சி கிடைக்கும்போது, ஒருவரால் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும். கஷ்டங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டு இல்லாமல், சகித்திருப்பதால் கிடைக்கிற பலன்களைப் பற்றி யோசித்தால், சகித்திருப்பது அவர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும். (எபி. 12:11) கஷ்டங்களைத் தைரியத்தோடு சகித்திருக்க வேண்டும் என்று பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். இதைச் சொல்வதற்கு பவுல் சரியான நபர் என்று சொல்லலாம்! ஏனென்றால், அவரே முன்பு கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியிருந்ததால், எதிரிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, கிறிஸ்தவராக மாறிய பிறகு அவரும் ஏகப்பட்ட துன்புறுத்தல்களைச் சந்தித்திருக்கிறார்.—2 கொ. 11:23-25. w24.09 12-13 ¶16-17

சனி, மே 16

விழிப்புடன் இருங்கள்.—மத். 25:13.

ஒவ்வொரு நாளும் கடந்து போகப் போக ஊழியத்தை இன்னும் அவசரமாக செய்ய வேண்டியிருக்கிறது. ஏன்? நமக்கு இருக்கிற நேரம் குறைந்துகொண்டே வருகிறது! கடைசி நாட்களில் நடக்கப்போகிற ஊழியத்தைப் பற்றி மாற்கு 13:10-ல் இயேசு என்ன சொன்னார் என்று யோசித்துப் பாருங்கள். “முடிவு” வருவதற்கு முன்பு நல்ல செய்தி எல்லாருக்கும் பிரசங்கிக்கப்படும் என்று சொன்னார். (மத். 24:14) “முடிவு” என்று சொன்னபோது, சாத்தானுடைய உலகத்துக்கு வரப்போகிற முடிவைப் பற்றி இயேசு சொன்னார். முடிவைக் கொண்டுவருவதற்கான ‘நாளையும்’ ‘நேரத்தையும்’ யெகோவா ஏற்கெனவே குறித்துவிட்டார். (மத். 24:36; அப். 1:7) ஒவ்வொரு நாளும் கடந்து போகப் போக நாம் அந்த நாளுக்குப் பக்கத்தில் போய் கொண்டிருக்கிறோம். (ரோ. 13:11) அந்த நாள் வரும்வரை நாம் சுறுசுறுப்பாக பிரசங்கிக்க வேண்டும். நாம் ஏன் ஊழியம் செய்கிறோம்? நேரடியாக சொன்னால், அன்பு இருப்பதால்தான் செய்கிறோம்! நாம் நல்ல செய்தியை நேசிக்கிறோம், மக்களை நேசிக்கிறோம், எல்லாவற்றுக்கும் மேல் யெகோவாவையும் அவருடைய பெயரையும் நேசிக்கிறோம். w24.05 14-15 ¶2-3

ஞாயிறு, மே 17

தான் படைத்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்தார், எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன.—ஆதி. 1:31.

பெற்றோர்களே, இயற்கையில் இருக்கிற அற்புதமான விஷயங்களைப் பற்றி உங்கள் பிள்ளைகளை யோசிக்க வையுங்கள். உங்கள் பிள்ளைகளைப் பூங்காவுக்குக் கூட்டிக்கொண்டு போகும்போது அல்லது அவர்களோடு சேர்ந்து தோட்ட வேலை செய்யும்போது, இயற்கையில் இருக்கிற வடிவங்களைக் காட்டுங்கள். ஏன்? உண்மையிலேயே ஞானமுள்ள ஒருவர் அவற்றைப் படைத்திருக்கிறார் என்பதற்கு அவை அத்தாட்சிகளாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, இயற்கையில் இருக்கிற சுருள் வடிவங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றைப் பற்றி விஞ்ஞானிகள் பல வருஷங்களாக ஆராய்ச்சி செய்கிறார்கள். சுருள் வடிவத்தில் இருக்கிற ஒரு விஷயத்தை எடுத்து அதில் எத்தனைச் சுருள்கள் இருக்கின்றன என்று எண்ணி பார்த்தால், அவை ஒரு குறிப்பிட்ட எண் வரிசையில் இருப்பதைப் பார்க்க முடியும் என்று நிகோலா ஃபெமிலி என்ற விஞ்ஞானி சொல்கிறார். அந்த எண் வரிசையின் பெயர் ஃபிபோனாச்சி வரிசைமுறை எண்கள் (Fibonacci sequence). இதுபோன்ற சுருள் வடிவங்களை இயற்கையில் அதிகமாகப் பார்க்க முடியும். உதாரணத்துக்கு, நட்சத்திர மண்டலங்களில், நாட்டிலஸ் என்ற ஒருவகை நத்தையின் ஓடுகளில், செடிகளில் இலைகள் அடுக்கப்பட்ட விதத்தில், சூரியகாந்தி பூக்களின் நடுவில் இந்தச் சுருள் வடிவத்தைப் பார்க்க முடியும். w24.12 16 ¶7

திங்கள், மே 18

‘யெகோவாதான் உங்களுக்கு வாழ்வு தருவார்.’—உபா. 30:20.

நம் காலத்துக்கும், மோசே, தாவீது, யோவான் வாழ்ந்த காலத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இருந்தாலும், நமக்கும் அவர்களுக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகின்றன. அவர்களும் உண்மை கடவுளுக்குச் சேவை செய்தார்கள். நாமும் அவருக்குச் சேவை செய்கிறோம். அவர்களைப் போலவே நாமும் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறோம், அவரை நம்பியிருக்கிறோம். வழிநடத்துதலுக்காக அவரையே எதிர்பார்த்திருக்கிறோம். அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களை அவர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கை அவர்களைப் போலவே நமக்கும் இருக்கிறது. இந்தப் பெரியவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியலாம். அப்படிச் செய்யும்போது உண்மையான வெற்றி நம் வசமாகும். ‘நீண்ட கால வாழ்க்கை’ நமக்குச் சொந்தமாகும். யெகோவாவைப் பிரியப்படுத்துகிற சந்தோஷம் நெஞ்சில் பூத்துக்குலுங்கும். யெகோவா தன்னுடைய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றும்போது நமக்குக் கிடைக்கிற சந்தோஷமும் ஆசீர்வாதமும் நம் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும்!—எபே. 3:20. w24.11 13 ¶20-21

செவ்வாய், மே 19

‘சபையில் கடவுள் அவர்களை ஏற்படுத்தியிருக்கிறார்.’—1 கொ. 12:28.

முதல் நூற்றாண்டில் சில சகோதரர்கள் உதவி ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்கள். (1 தீ. 3:8) மற்றவர்களுக்கு “உதவிகள் செய்கிறவர்கள்” என்று 1 கொரிந்தியர் 12:28-ல் அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது, இவர்களை மனதில் வைத்து எழுதியிருக்கலாம். அன்றிருந்த உதவி ஊழியர்கள், நிறைய முக்கியமான விஷயங்களில் உதவினார்கள் என்று தெரிகிறது. உதாரணத்துக்கு, வேதவசனங்களை நகல் எடுப்பதற்கு அல்லது அதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு உதவியிருக்கலாம். அதனால், மூப்பர்களால் கற்றுக்கொடுப்பதிலும் ஆடுகளைக் கவனித்துக்கொள்வதிலும் முழு கவனம் செலுத்த முடிந்திருக்கும். உங்கள் சபையில் இருக்கிற உதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். (1 பே. 4:10) சபையின் கணக்கு வழக்குகளைக் கவனித்துக்கொள்வது... ஊழியப் பகுதியை ஒழுங்கமைப்பது... பிரசுரங்களை ஆர்டர் செய்வது... அதைப் பிரஸ்தாபிகளுக்குக் கொடுப்பது... ஆடியோ வீடியோ இலாக்காவில் வேலை செய்வது... அட்டன்டண்டுகளாக வேலை செய்வது... ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பது... போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். இந்த வேலைகள் சபை ஒழுங்காகச் செயல்படுவதற்குக் கைகொடுக்கிறது.—1 கொ. 14:40. w24.10 19 ¶4-5

புதன், மே 20

என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.—பிலி. 4:13.

யெகோவா உயிருள்ள கடவுள் என்பதையும் நமக்கு உதவ தயாராக இருக்கிறார் என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொண்டால், எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதை நம்மால் சமாளிக்க முடியும். அவர் சர்வவல்லமையுள்ள கடவுள், நாம் சகித்திருக்க அவரால் சக்தி கொடுக்க முடியும். அதனால், எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதை நாம் நம்பிக்கையோடு சமாளிக்கலாம். சின்ன சின்ன சோதனைகளைச் சமாளிக்க யெகோவா நமக்கு உதவி செய்வதைப் பார்க்கும்போது, பெரிய சோதனைகளையும் சமாளிக்க அவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நம்பிக்கை கிடைக்கும். தாவீது ராஜாவுக்கு யெகோவாமேல் இருந்த நம்பிக்கையை அதிகமாக்கிய இரண்டு சம்பவங்களை இப்போது பார்க்கலாம். சின்ன வயதில் தன்னுடைய அப்பாவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு சமயம் ஒரு கரடியும் இன்னொரு சமயம் ஒரு சிங்கமும் வந்து ஆடுகளைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. தாவீது தைரியமாக அந்த மிருகங்களைத் துரத்திக்கொண்டுபோய் ஆடுகளைக் காப்பாற்றினார். தன்னுடைய சொந்த பலத்தில் இதையெல்லாம் சாதித்ததாக தாவீது சொல்லவே இல்லை; யெகோவாதான் தனக்கு உதவினார் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (1 சா. 17:34-37) இதையெல்லாம் யோசித்துப் பார்த்ததால்தான், உயிருள்ள கடவுளான யெகோவா தன்னை எதிர்காலத்திலும் தொடர்ந்து பலப்படுத்துவார் என்ற நம்பிக்கை அவருக்குக் கிடைத்தது. w24.06 21 ¶5-6

வியாழன், மே 21

ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம். அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.—நீதி. 18:13.

உங்களை ஒரு பார்ட்டிக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் போக வேண்டுமா? அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தவரைப் பற்றியோ அங்கே என்ன நடக்கும் என்பதைப் பற்றியோ உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றால், உங்களைக் கூப்பிட்டவரிடம் இந்த மாதிரி கேள்விகளைக் கேளுங்கள்: “இந்த பார்ட்டி எப்போது, எங்கே நடக்கிறது? அதற்கு எத்தனை பேர் வருவார்கள்? பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள அங்கே யாராவது இருப்பார்களா? யாரெல்லாம் அந்த பார்ட்டிக்கு வருவார்கள்? அங்கே என்னவெல்லாம் செய்வார்கள்? மதுபானம் இருக்குமா?” இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஞானமான முடிவு எடுக்க உங்களுக்கு உதவும். எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகு சூழ்நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, பைபிள் நியமங்களை மதிக்காத சிலபேர் அந்த பார்ட்டிக்கு வருகிறார்கள், அல்லது எல்லாரும் அளவாக குடிக்கிறார்களா என்று பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள அங்கே யாரும் இல்லை என்று உங்களுக்குத் தெரியவருகிறது. அப்படியென்றால், இந்த பார்ட்டி குடித்துக் கும்மாளம் போடுகிற அளவுக்குப் போக வாய்ப்பு இருக்கிறது என்று உங்களுக்குப் புரிகிறதா? (1 பே. 4:3) இப்படி எல்லா விவரங்களையும் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் நல்ல முடிவுகள் எடுப்பது சுலபமாக இருக்கும். w25.01 15 ¶4-5

வெள்ளி, மே 22

உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்.—ஏசா. 1:18.

மீட்புவிலையின் அடிப்படையில், மனம் திருந்துகிற ஒருவருடைய பாவத்தை யெகோவா எப்படி மன்னிக்கிறார் என்பதைக் காட்ட அவர் சில உதாரணங்களைச் சொல்கிறார். பொதுவாக, சிவப்பு நிறத்தில் இருக்கிற ஒரு சாயமோ கறையோ துணியில் பட்டால் அதை எடுப்பது ரொம்ப கஷ்டம். இந்த உதாரணத்தின் மூலம், நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதன் சுவடே தெரியாத அளவுக்கு அதைத் துடைத்தழிக்க முடியும் என்ற நம்பிக்கையை யெகோவா கொடுக்கிறார். பாவங்களை ‘கடன்களுக்கும்’ ஒப்பிட்டு பைபிள் பேசுகிறது. (மத். 6:12; லூக். 11:4) ஒவ்வொரு தடவை நாம் யெகோவாவுக்கு எதிராக பாவம் செய்யும்போது நம்முடைய கடன் அதிகமாகிக்கொண்டே போகிறது. சொல்லப்போனால், ஒரு பெரிய தொகையை அவரிடம் நாம் திரும்ப கொடுக்க வேண்டியது போல் ஆகிவிடுகிறது. ஆனால், யெகோவா நம்மை மன்னிக்கும்போது, ஒட்டுமொத்தமாக நம் கடன்களை ரத்து செய்வது போல் இருக்கிறது. ஏற்கெனவே மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கு அவர் நம்மிடம் கணக்குக் கேட்பதில்லை. w25.02 9-10 ¶9-10

சனி, மே 23

பெற்றோருக்குப் பிள்ளைகள் சேர்த்து வைக்க வேண்டியதில்லை, பெற்றோர்தான் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும்.—2 கொ. 12:14.

பெற்றோர்களுக்கு வயதாக வயதாக, பிள்ளைகளிடமிருந்து அவர்களுக்குச் சில உதவிகள் தேவைப்படலாம். அது எதார்த்தம்தான். அந்த மாதிரி உதவிகளை பிள்ளைகளும் சந்தோஷமாகச் செய்வார்கள். (1 தீ. 5:4) அதேசமயத்தில், கிறிஸ்தவ பெற்றோர்கள் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளிடமிருந்து பண உதவி கிடைக்கும் என்ற நோக்கத்தோடு பிள்ளைகளை வளர்த்தால் பெற்றோர்களுக்குச் சந்தோஷம் கிடைக்காது. அதற்குப் பதிலாக, தங்கள் பிள்ளைகள் யெகோவாவின் ஊழியர்களாக ஆவதற்கு உதவி செய்தால் உண்மையிலேயே அவர்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும். (3 யோ. 4) எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் எப்படித் தங்களையே கவனித்துக்கொள்ளலாம் என்பதைச் சொல்லிக்கொடுங்கள். அப்படி நீங்கள் சொல்லிக்கொடுக்கிற சமயத்தில், நீங்கள் யெகோவாமேல் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். கடினமாக உழைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை சின்ன வயதிலேயே சொல்லிக்கொடுங்கள். (நீதி. 29:21; எபே. 4:28) பள்ளியில் நன்றாகப் படிக்கவும் பிள்ளைகளுக்கு உதவுங்கள். கல்வியை ஞானமாகப் பயன்படுத்துவதற்கும் உதவுங்கள். இது சம்பந்தமான பைபிள் நியமங்களை நீங்கள் நன்றாக ஆராய்ச்சி செய்து பாருங்கள்; நல்ல முடிவுகளை எடுக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். அப்படிச் செய்தால், பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த கல்வியைப் பயன்படுத்தி, தங்களையே கவனித்துக்கொண்டு ஊழியம் செய்யவும், முடிந்தால் பயனியர் செய்யவும், கற்றுக்கொள்வார்கள். w25.03 30-31 ¶15-16

ஞாயிறு, மே 24

புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.—எபே. 4:24.

ஏசாயா 65-வது அதிகாரத்தில், ஆன்மீக பூஞ்சோலையில் இருக்கிறவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னார். அதன் முதல் நிறைவேற்றம் கி.மு. 537-ல் நடந்தது. அந்த சமயத்தில், பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள் தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள். பாழாய் கிடந்த எருசலேமை மறுபடியும் அழகான ஒரு இடமாக மாற்றுவதற்கு யெகோவா அவர்களுக்கு உதவினார். அதுமட்டுமல்ல, அங்கே இருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கும் உண்மை வணக்கத்தின் மையமாக அதை ஆக்குவதற்கும் அவர்களுக்கு உதவினார். (ஏசா. 51:11; சக. 8:3) ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இரண்டாவது நிறைவேற்றம் கி.பி. 1919-ல் ஆரம்பித்தது. அந்த சமயத்தில், மகா பாபிலோனின் கீழ் அடிமைகளாக இருந்த யெகோவாவின் மக்கள் விடுதலையானார்கள். அதற்குப் பிறகு, இந்த ஆன்மீக பூஞ்சோலை கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. நல்ல செய்தியை ஆர்வமாக பிரசங்கித்தவர்கள் புது சபைகளை உருவாக்கினார்கள்; கிறிஸ்தவ குணங்களைக் காட்டினார்கள். முன்பு கொடூரமாகவும் மிருகத்தனமாகவும் நடந்துகொண்ட மக்கள் ‘கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொண்டார்கள்.’ w24.04 20-21 ¶3-4

திங்கள், மே 25

ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை சுமப்பான்.—கலா. 6:5.

சில நாடுகளில், பிள்ளைகளுக்காக துணையைத் தேடும் பொறுப்பை அப்பா-அம்மா அல்லது பெரியவர்கள் செய்யலாம். வேறு சில நாடுகளில், கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைக்கும் ஒருவருக்கு, குடும்பத்தாரோ நண்பர்களோ ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இரண்டு பேரும் சந்தித்து பேச ஏற்பாடு செய்கிறார்கள். ஒருவேளை, ஒரு மாப்பிள்ளையோ பொண்ணையோ பார்த்துத் தர சொல்லி உங்களிடம் யாராவது கேட்டால், அந்த பையனுக்கும் பொண்ணுக்கும் இருக்கிற விருப்பங்களும், தேவைகளும் என்னென்ன என்று நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவர் பொருத்தமாக இருப்பார் என்று உங்களுக்குத் தோன்றினால், அவருடைய சுபாவம்... குணம்... முக்கியமாக யெகோவாவோடு அவருக்கு எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது... என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பணம், கல்வி, அந்தஸ்து போன்றவற்றைவிட யெகோவாவோடு அவருக்கு நெருக்கமான பந்தம் இருக்கிறதா என்பதுதான் ரொம்ப முக்கியம். எப்படியிருந்தாலும் சரி, கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்ற முக்கியமான முடிவை அந்த இரண்டு பேரும்தான் எடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். w24.05 23 ¶11

செவ்வாய், மே 26

உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்—நீதி. 17:17.

டேட்டிங் செய்கிறவர்களிடம் என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். சிலசமயம், நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும். (நீதி. 12:18) உதாரணத்துக்கு, நமக்குத் தெரிந்த இரண்டு பேர் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருந்தால், அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல நம் நாக்குத் துடிக்கலாம். ஆனால், அவர்களே அதை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். அவர்களைப் பற்றி நாம் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களைக் கிண்டல் செய்வதையோ தவிர்க்க வேண்டும். (நீதி. 20:19; ரோ. 14:10; 1 தெ. 4:11) அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்காமல் இருப்பதும் கருத்து சொல்லாமல் இருப்பதும் நல்லது. டேட்டிங் செய்துகொண்டிருக்கும் இரண்டு பேர் பிரிந்துபோக முடிவெடுத்தால் என்ன செய்வது? அவர்களுடைய தனிப்பட்ட தீர்மானத்தைப் பற்றி நாம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்றும் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது. (1 பே. 4:15) டேட்டிங் செய்கிற இரண்டு பேர் பிரிந்துபோக முடிவெடுத்தால் அவர்கள் ஏதோ தவறான முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. சொல்லப்போனால், டேட்டிங் செய்ததால்தான் அவர்கள் இரண்டு பேருக்கும் எது நல்லதோ அந்த முடிவை அவர்களால் எடுக்க முடிந்தது. பிரிந்துபோகலாம் என்று அவர்கள் எடுத்திருக்கிற முடிவு, அவர்களுக்குக் கண்டிப்பாக வலியைக் கொடுக்கும். அதனால், அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்று நாம் யோசிக்கலாம். w24.05 31 ¶15-16

புதன், மே 27

இக்கட்டில் தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால், உன் பலம் குறைந்துவிடும்.—நீதி. 24:10.

சில சோதனைகள் நம்மை ரொம்பவே சோர்வாக ஆக்கிவிடலாம். நம் குடும்பத்தில் இருக்கிறவரோ நெருங்கிய நண்பரோ யெகோவாவை விட்டு போகும்போது நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. (சங். 78:40) ஒருவேளை, அந்த நபர் நம்மோடு ரொம்ப நெருக்கமாக இருந்தால் இந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். இந்த வலியை சமாளிக்க சாதோக்கின் உதாரணம் உங்களுக்கு உதவும். சாதோக்கின் நெருங்கிய நண்பர் அபியத்தார் ஒருசமயத்தில் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போய்விட்டார். இது தாவீதுடைய ஆட்சியின் கடைசியில் நடந்தது. அப்போது தாவீது மரணப் படுக்கையில் இருந்தார். அவருடைய மகன் அதோனியா அடுத்த ராஜாவாக ஆவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தான். ஆனால் சாலொமோன்தான் ராஜாவாக ஆவார் என்று யெகோவா ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருந்தார். (1 நா. 22:9, 10) இந்தச் சமயத்தில்தான் சாதோக்கின் நண்பர் அபியத்தார் சாலொமோனை ஆதரிக்காமல் அதோனியாவை ஆதரித்தார். (1 ரா. 1:5-8) இப்படிச் செய்ததால் தாவீதுக்கும் சாதோக்குக்கும் மட்டுமல்ல, யெகோவாவுக்கே அவர் உண்மையில்லாமல் போய்விட்டார். பல வருஷங்களாக, சாதோக்கும் அபியத்தாரும் குருமார்களாக சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள்.—2 சா. 8:17; 15:29; 19:11-14. w24.07 6 ¶14-15

வியாழன், மே 28

எப்போதும் கவனமாக நடந்துகொள்கிறவன் சந்தோஷமானவன்.—நீதி. 28:14.

சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க நாம் எடுக்கும் முயற்சிகள் கண்டிப்பாக வீண்போகாது. பாவம் செய்வதால் கிடைக்கிற ‘தற்காலிகச் சந்தோஷத்தை’ யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதால் கிடைக்கிற சந்தோஷத்தோடு ஒப்பிடவே முடியாது. (எபி. 11:25; சங். 19:8) ஏனென்றால், அவருக்குப் பிடித்த மாதிரி வாழ்கிற விதத்தில்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதி. 1:27) அப்படி வாழும்போது நமக்குச் சுத்தமான மனசாட்சி இருக்கும், முடிவில்லாத வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கும். (1 தீ. 6:12; 2 தீ. 1:3; யூ. 20, 21) ‘உடல் பலவீனமாக இருப்பது’ உண்மைதான்; (மத். 26:41) அதற்காக, நம்மிடம் இருக்கும் பலவீனங்களை நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்று அர்த்தம் இல்லை. நமக்குத் தேவைப்படுகிற சக்தியைக் கொடுக்க யெகோவா தயாராக இருக்கிறார். (2 கொ. 4:7) ஆனால், ஒரு விஷயத்தைக் கவனியுங்கள்: இயல்புக்கு மிஞ்சிய சக்தியைத்தான் கடவுள் தருகிறார். அப்படியென்றால், நமக்கு இருக்கிற இயல்பான சக்தியைப் பயன்படுத்துவது நம்முடைய கையில்தான் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி சோதனையைச் சமாளிக்க ஒவ்வொரு நாளும் நாம் போராட வேண்டும். யெகோவா நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கொடுப்பார், நமக்கு இன்னும் நிறைய சக்தியைக் கொடுப்பார். (1 கொ. 10:13) யெகோவாவுடைய உதவியோடு சோதனையை நம்மால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்! w24.07 19 ¶19-21

வெள்ளி, மே 29

பாவம் செய்துகொண்டே இருக்கிறவர்களை எல்லாருக்கும் முன்னால் கண்டிக்க வேண்டும்.—1 தீ. 5:20.

இன்றைய தினவசனத்தில் பார்த்தபடி பாவம் செய்கிறவர்களை “எல்லாருக்கும் முன்னால்” கண்டிக்க வேண்டும் என்று தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அப்படியென்றால், பாவம் செய்தவரை எப்போதுமே சபையில் இருக்கும் எல்லார் முன்பும் கண்டிக்க வேண்டும் என்று பவுல் அர்த்தப்படுத்தினாரா? இல்லை. “எல்லாருக்கும்” என்று சொன்னபோது, அந்தப் பாவத்தைப் பற்றித் தெரிந்த எல்லாரையும்தான் பவுல் அர்த்தப்படுத்தினார். ஒருவேளை, அவர்கள் அதைக் கண்ணால் பார்த்தவர்களாக இருக்கலாம். அல்லது, பாவம் செய்தவர், தான் செய்த பாவத்தைப் பற்றி யாரிடம் சொன்னாரோ அவராக இருக்கலாம். இந்த விஷயம் கையாளப்பட்டுவிட்டதையும் பாவம் செய்தவருக்கு கண்டிப்பு கொடுக்கப்பட்டிருப்பதையும் மூப்பர்கள் அவர்களிடம் மட்டும் சொல்வார்கள். சில சந்தர்ப்பங்களில், ஒருவர் செய்த பாவம், சபையில் பரவலாகத் தெரியவந்திருக்கலாம். அல்லது, தெரியவர வாய்ப்பு இருக்கலாம். அந்த மாதிரி சமயத்தில் “எல்லாருக்கும்” என்று சொல்லும்போது அது முழு சபையையும் அர்த்தப்படுத்தும். அப்போது, ஒரு சகோதரரோ சகோதரியோ கண்டிக்கப்பட்டிருப்பதை ஒரு மூப்பர் சபைக்கு அறிவிப்பு செய்வார். ஏன்? பவுல் அதற்குப் பதில் சொல்கிறார்: பாவத்தில் விழாமல் இருக்க “அது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கும்.” w24.08 23-24 ¶16-17

சனி, மே 30

இவை கடவுளுடைய சத்திய வார்த்தைகள்.—வெளி. 19:9.

நாம் கடைசிவரை யெகோவாவுடைய சேவையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தொடர்ந்து விழிப்போடு இருந்தால்தான், இயேசு அவர்களைப் பரலோகத்துக்கு ‘அழைப்பார்.’ (மத். 24:40) பரலோகத்தில் இயேசுவோடு ‘கூட்டிச்சேர்க்கப்படுவதற்கு’ பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ரொம்ப ஆசையாகக் காத்திருக்கிறார்கள். அர்மகெதோன் போருக்குப் பிறகு நடக்கப்போகிற ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் அவர்கள் இயேசுவின் மணமகளாக இருப்பார்கள். (2 தெ. 2:1) நியாயத்தீர்ப்பு நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது; ஆனால் நாம் பயப்படத் தேவையில்லை. நாம் கடைசிவரை உண்மையாக இருந்தால், யெகோவா நமக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கொடுப்பார்; அழிவிலிருந்து ‘தப்பிக்கவும்’ “மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கவும்” அந்தச் சக்தி நமக்கு உதவும். (2 கொ. 4:7; லூக். 21:36) நமக்குப் பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, இயேசு சொன்ன உவமைகளிலிருந்து கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கலாம். அப்படிச் செய்தால், யெகோவாவை நாம் சந்தோஷப்படுத்துவோம். யெகோவா நம்மேல் அளவற்ற கருணை காட்டி நம்முடைய பெயர்களை வாழ்வின் புத்தகத்தில் எழுதுவார்.—தானி. 12:1; வெளி. 3:5. w24.09 24-25 ¶19-20

ஞாயிறு, மே 31

கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் எனக்கு நல்லது.—சங். 73:28.

உங்களுக்கும் கண்டிப்பாக மனநிம்மதி கிடைக்கும். எப்படி? யெகோவா உங்களை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால், இன்று உலகத்தில் இருக்கிறவர்களுக்கு அவருடைய உதவி கிடைப்பதில்லை. அவர்களுக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் இல்லை. அதனால்தான், இப்போதே வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்... நிறையச் சம்பாதிக்க வேண்டும்... என்று நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் பரலோகத்தில் நிறையப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்திருக்கிறீர்கள். கற்பனைக்கூட செய்ய முடியாத அளவுக்கு ஆசீர்வாதங்களைப் பொழியப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்! (சங். 145:16) இதையும் யோசித்துப் பாருங்கள்: ஒருவேளை, நீங்கள் வேறு தீர்மானங்களை எடுத்திருந்தால் உங்கள் வாழ்க்கை இப்போது எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயத்தில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்: யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் இருக்கிற அன்பால் தூண்டப்பட்டு தீர்மானங்கள் எடுக்கிறவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்! w24.10 27 ¶12-13

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்