உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • es26 பக். 31-44
  • மார்ச்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச்
  • சிந்திக்க தினம் ஒரு வசனம்—2026
  • துணை தலைப்புகள்
  • ஞாயிறு, மார்ச் 1
  • திங்கள், மார்ச் 2
  • செவ்வாய், மார்ச் 3
  • புதன், மார்ச் 4
  • வியாழன், மார்ச் 5
  • வெள்ளி, மார்ச் 6
  • சனி, மார்ச் 7
  • ஞாயிறு, மார்ச் 8
  • திங்கள், மார்ச் 9
  • செவ்வாய், மார்ச் 10
  • புதன், மார்ச் 11
  • வியாழன், மார்ச் 12
  • வெள்ளி, மார்ச் 13
  • சனி, மார்ச் 14
  • ஞாயிறு, மார்ச் 15
  • திங்கள், மார்ச் 16
  • செவ்வாய், மார்ச் 17
  • புதன், மார்ச் 18
  • வியாழன், மார்ச் 19
  • வெள்ளி, மார்ச் 20
  • சனி, மார்ச் 21
  • ஞாயிறு, மார்ச் 22
  • திங்கள், மார்ச் 23
  • செவ்வாய், மார்ச் 24
  • புதன், மார்ச் 25
  • வியாழன், மார்ச் 26
  • வெள்ளி, மார்ச் 27
  • சனி, மார்ச் 28
  • ஞாயிறு, மார்ச் 29
  • திங்கள், மார்ச் 30
  • செவ்வாய், மார்ச் 31
சிந்திக்க தினம் ஒரு வசனம்—2026
es26 பக். 31-44

மார்ச்

ஞாயிறு, மார்ச் 1

இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்.—ரோ. 6:7.

நீதிமான்களாக இருந்து பிற்பாடு அநீதிமான்களாக ஆனவர்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. அதற்கு சாலொமோன் ராஜா ஒரு உதாரணம். அவருக்கு கடவுளைப் பற்றியும் அவரை எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும் நன்றாக சொல்லித்தரப்பட்டது. யெகோவாவும் அவரை நன்றாக ஆசீர்வதித்திருந்தார். ஆனாலும், அவர் பொய்க் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார். அவர் அவ்வளவு பாவங்களை செய்ததால், யெகோவா அவர்மேல் ரொம்ப கோபப்பட்டார். சாலொமோன் செய்த பாவங்களுக்கான விளைவுகளை முழு இஸ்ரவேல் தேசமும் பல நூற்றாண்டுகளாக அனுபவித்தது. சாலொமோன் “தன் முன்னோர்களோடு” “அடக்கம் செய்யப்பட்டார்,” அதாவது, தாவீதைப் போன்ற உண்மையுள்ள ஆட்களோடு அடக்கம் செய்யப்பட்டார் என்பது உண்மைதான்! (1 ரா. 11:5-9, 43, அடிக்குறிப்பு; 2 ரா. 23:13) ஆனால், அவர் அடக்கம் செய்யப்பட்ட முறை அவர் உயிர்த்தெழுப்பப்படுவார் என்பதற்கு உறுதி அளிக்கிறதா? பைபிள் அப்படி சொல்வது கிடையாது. உயிர்த்தெழுதல் என்பது நம் கடவுளிடமிருந்து கிடைக்கிற பரிசு. தன்னை என்றென்றும் வணங்க யாருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அவர்களுக்கு அந்தப் பரிசை அவர் கொடுக்கிறார். (யோபு 14:13, 14; யோவா. 6:44) சாலொமோனுக்கு அந்தப் பரிசு கிடைக்குமா? நமக்குத் தெரியாது. ஆனால் நமக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்: யெகோவா எப்போதுமே சரியானதைத்தான் செய்வார்! w24.05 4 ¶9

திங்கள், மார்ச் 2

நான் என்றென்றும் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருப்பேன்.—சங். 61:4.

நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும்போது, அவருடைய கூடாரத்தில் விருந்தாளியாகத் தங்குகிறோம் என்று சொல்லலாம். யெகோவாவின் கூடாரத்தில் நமக்கு ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கிறது, அவருடைய மற்ற விருந்தாளிகளுடைய நட்பும் கிடைக்கிறது. யெகோவாவின் கூடாரம் ஒரேவொரு இடத்தில் மட்டும் இருப்பதாக நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்கிறவர்கள் எங்கே இருந்தாலும் சரி, அங்கே யெகோவாவின் கூடாரம் இருக்கிறது. (வெளி. 21:3) இறந்துபோன யெகோவாவின் ஊழியர்கள் இன்னமும் அவருடைய கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்கிறார்களா? இருக்கிறார்கள்! யெகோவா இன்னமும் அவர்களைத் தன்னுடைய ஞாபகத்தில் வைத்திருக்கிறார், அதனால் அவரைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இயேசு இப்படிச் சொன்னார்: “இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதை மோசேயும்கூட முட்புதரைப் பற்றிய தன் பதிவில் சொல்லியிருக்கிறார். அதில், யெகோவாவை ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று அவர் அழைத்திருக்கிறார். கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்.”—லூக். 20:37, 38. w24.06 3 ¶6-7

செவ்வாய், மார்ச் 3

யெகோவா என் பலம், என் கேடயம்.—சங். 28:7.

சாதோக் எப்ரோனுக்கு தன்னுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போர் செய்யத் தயாராக போயிருந்தார். (1 நா. 12:38) தாவீதோடு சேர்ந்து போருக்குப் போவதற்கும் இஸ்ரவேல் தேசத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கும் அவர் தயாராக இருந்தார். ஒரு போர் வீரராக சாதோக்குக்கு அனுபவமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் உண்மையிலேயே தைரியத்தைக் காட்டியிருக்கிறார். குருவாக இருந்த சாதோக்கு அவரைச் சுற்றியிருந்த தைரியசாலிகளைப் பார்த்து தைரியத்தை வளர்த்திருப்பார். உதாரணத்துக்கு, தாவீதை எடுத்துக்கொள்ளுங்கள். தாவீது ரொம்பத் தைரியமாக “இஸ்ரவேலின் படைக்குத் தலைமை தாங்கி” வழிநடத்தினார். அதைப் பார்த்து, இஸ்ரவேலில் இருந்த எல்லாருமே தாவீது ராஜாவாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். (1 நா. 11:1, 2) எதிரிகளைத் தோற்கடிப்பதற்கு தாவீது எப்போதும் யெகோவாவை நம்பியிருந்தார். (சங். 138:3) இவை எல்லாவற்றையுமே சாதோக் பார்த்திருப்பார். இன்னும் சிலரைப் பார்த்துக்கூட சாதோக் தைரியத்தை வளர்த்திருக்கலாம். யோய்தா, அவருடைய மகன் பெனாயா, தந்தை வழி குடும்பத் தலைவர்கள் 22 பேர் போன்றவர்களைப் பார்த்தும் அவர் தைரியத்தை வளர்த்திருப்பார். இவர்கள் எல்லாரும் தாவீது ராஜாவாக ஆவதற்கு ஆதரவாக இருந்தார்கள்.—1 நா. 11:22-25; 12:26-28. w24.07 3 ¶5-6

புதன், மார்ச் 4

கடவுள் தன்னுடைய கருணையால் உங்களை மனம் திருந்தத் தூண்டுகிறார்.—ரோ. 2:4.

தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுல், பெரும் பாவியாக இருந்தார். இயேசு கிறிஸ்துவின் அன்பு சீஷர்களைக் கொடூரமாகத் துன்புறுத்தினார். ‘அவரெல்லாம் மனம் திருந்த வாய்ப்பே இல்லை’ என்று அன்றிருந்த கிறிஸ்தவர்களில் நிறைய பேர் நினைத்திருப்பார்கள். ஆனால், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, மனிதர்கள் யோசிக்கிற மாதிரி தவறாக யோசிக்கவில்லை. அவரும் அவருடைய அப்பா யெகோவாவும் சவுலுடைய நல்ல குணங்களைப் பார்த்தார்கள். சொல்லப்போனால், சவுலை “ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (அப். 9:15) சவுலை மனம் திருந்த தூண்டுவதற்கு இயேசு அற்புதத்தையும் செய்தார். (அப். 7:58–8:3; 9:1-9, 17-20) ஒரு கிறிஸ்தவராக, அப்போஸ்தலன் பவுலாக ஆன பிறகு, தனக்குக் காட்டப்பட்ட இரக்கத்துக்காகவும் கருணைக்காகவும் ரொம்ப நன்றியோடு இருப்பதை அவர் அடிக்கடி சொன்னார். (1 தீ. 1:12-15) கொரிந்து சபையில், பாலியல் முறைகேடு பற்றி ஒரு பெரிய பிரச்சினை வந்ததை பவுல் கேள்விப்பட்டார். அவர் அதைக் கையாண்ட விதம் யெகோவா எப்படி அன்பாகக் கண்டித்து திருத்துகிறார் என்பதைப் பற்றியும், அவருடைய இரக்கத்தைப் பற்றியும் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது. w24.08 13 ¶15-16

வியாழன், மார்ச் 5

பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார்.—1 யோ. 3:8.

காலங்கள் போகப்போக, பாவமுள்ள மனிதர்கள் தன்னிடம் எப்படி நெருங்கி வரலாம் என்பதை யெகோவா தெளிவாகக் காட்டினார். ஏதேன் தோட்டத்தில் நடந்த பிரச்சினைக்குப் பிறகு யெகோவாமேல் முதல்முதலில் விசுவாசம் வைத்த நபர் ஆபேல். இவர் ஆதாம் ஏவாளின் இரண்டாவது மகன். ஆபேல், யெகோவாவை நேசித்தார். யெகோவாவுடைய பிரியத்தைச் சம்பாதிக்க வேண்டும்... அவரிடம் நெருங்கிப் போக வேண்டும்... என்று நினைத்தார். அதனால், யெகோவாவுக்குப் பலி செலுத்தினார். அவர் ஒரு மேய்ப்பராக இருந்ததால், தன்னுடைய ஆடுகளின் முதல் குட்டிகளில் சிலவற்றை யெகோவாவுக்குப் பலியாகக் கொடுத்தார். “ஆபேலையும் அவன் காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 4:4) அதேபோல், தன்மேல் அன்பையும் நம்பிக்கையையும் வைத்த மற்ற ஆட்கள் கொடுத்த பலிகளையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். அவர்களில் நோவாவும் ஒருவர். (ஆதி. 8:20, 21) இந்த மாதிரி பலிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், பாவமுள்ள மனிதர்கள்கூட தன்னைப் பிரியப்படுத்த முடியும், தன்னிடம் நெருங்கி வர முடியும் என்பதை யெகோவா காட்டினார். w24.08 3 ¶5-6

வெள்ளி, மார்ச் 6

கிட்டத்தட்ட வழிதவறிப் போய்விட்டேன். கால் சறுக்கி விழும் நிலைக்குப் போய்விட்டேன்.—சங். 73:2.

அநியாயம் நடக்கும்போது மனமுடைந்து போய்விடுவோம், கவலையில் மூழ்கிவிடுவோம். (பிர. 7:7) யோபு, ஆபகூக் மாதிரியான உண்மையுள்ள ஆட்களும் அப்படி உணர்ந்திருக்கிறார்கள். (யோபு 6:2, 3; ஆப. 1:1-3) இந்த உணர்ச்சிகள் இயல்பானதுதான். ஆனால் அதேசமயம், முட்டாள்தனமாக எதையாவது செய்துவிடாமல் இருக்க, பிரச்சினையை இன்னும் பெரிதாக்காமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். அநியாயம் செய்கிறவர்களுக்குத் தண்டனையே கிடைக்காத மாதிரி நமக்குத் தோன்றும்போது, ‘நான் மட்டும் சரியாக நடந்து என்ன பிரயோஜனம்?’ என்று யோசிக்கலாம். சங்கீதக்காரருக்கும் அப்படித்தான் இருந்தது. கெட்டவர்கள் ஓகோவென்று வாழ்வதுபோல் அவருக்குத் தெரிந்தது. “அப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிடுகிறது” என்று சலித்துக்கொண்டார். (சங். 73:12) சுற்றி நடக்கிற அநியாயத்தைப் பார்த்து சோர்ந்துபோனார். யெகோவாவுக்குச் சேவை செய்வதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்ற சந்தேகம்கூட அவருக்கு வந்துவிட்டது. “நான் அதைப் புரிந்துகொள்ள முயன்றபோது, வேதனைதான் மிஞ்சியது” என்றார்.—சங். 73:14, 16. w24.11 3 ¶5-7

சனி, மார்ச் 7

ஜனங்களின் வம்சங்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள். யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.—சங். 96:7.

யெகோவா புகழைப் பெறத் தகுதியானவராக இருப்பதால் அவரை மகிமைப்படுத்துகிறோம். யெகோவாவுக்கு எல்லையில்லாத சக்தி இருக்கிறது. அவரால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. (சங். 96:4-7) அவருடைய படைப்புகளிலிருந்து அவருக்கு இருக்கிற எல்லையில்லாத ஞானம் தெரிகிறது. நமக்கு உயிர் கொடுத்தவரும் அவர்தான், நம்மை வாழவைக்கிறவரும் அவர்தான். (வெளி. 4:11) அவர் உண்மையுள்ளவர். (வெளி. 15:4) அவருக்குத் தோல்வி என்பதே கிடையாது. அவர் சொன்னதைச் செய்யாமல்போனதும் கிடையாது. (யோசு. 23:14) அதனால்தான், எரேமியா தீர்க்கதரிசியும் யெகோவாவைப் பற்றி இப்படிச் சொன்னார்: “உலகமெங்கும் உள்ள தேசங்களில் எத்தனை ஞானிகள் இருந்தாலும் உங்களைப் போல் யாருமே இல்லை.” (எரே. 10:6, 7) யெகோவாவைப் புகழ்வதற்கும் அவருக்கு மதிப்பு மரியாதை காட்டுவதற்கும் இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. மரியாதை மட்டுமல்ல யெகோவாமேல் அன்பு காட்டுவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. யெகோவாமேல் நாம் உயிரையே வைத்திருப்பதால் அவரை மகிமைப்படுத்துகிறோம். w25.01 3 ¶5-6

ஞாயிறு, மார்ச் 8

அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்.—1 கொ. 5:13.

அமைப்பு செய்கிற நல்ல விஷயங்களை எதிரிகள் கெட்டது போல் காட்ட முயற்சி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, உடலளவிலும், ஒழுக்க விஷயத்திலும், வணக்க விஷயத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ஒருவேளை, யாராவது மனம் திருந்தாமல் தொடர்ந்து அருவருப்பான விஷயங்களை செய்துவந்தால், அந்த நபர் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அது சொல்கிறது. (1 கொ. 5:11,12; 6:9, 10) பைபிள் சொல்கிற இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோம். ஆனால், நம்முடைய எதிரிகள், நாம் மற்றவர்களோடு பொறுத்துப்போவதில்லை... மற்றவர்களை வெறுக்கிறோம்... அன்பு காட்டுவதில்லை... என்றெல்லாம் நம்மைக் குறை சொல்கிறார்கள். உண்மையான எதிரி யார் என்பதை மனதில் வையுங்கள். நம் அமைப்பைப் பற்றிய பொய்களையும் வதந்திகளையும் சாத்தான்தான் பரப்பி விடுகிறான். அவன் ‘பொய்க்குத் தகப்பன்’ என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 8:44; ஆதி. 3:1-5) அவன் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறவர்களைப் பயன்படுத்தி அமைப்பைப் பற்றிய கட்டுக்கதைகளைப் பரப்பி விடுகிறான். w24.04 10-11 ¶13-14

திங்கள், மார்ச் 9

நீ சொல்வது கண்டிப்பாக நடக்கும்.—எசே. 33:33.

மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு, “மகா பாபிலோன்” அழிவதை சிலர் பார்த்துவிட்டு, ‘யெகோவாவின் சாட்சிகள் இதைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்களே!’ என்று யோசிக்கலாம். அப்படி யோசிக்கிறவர்கள், யெகோவாமேல் விசுவாசம் வைக்க வாய்ப்பு இருக்கிறதா? (வெளி. 17:5) ஒருவேளை அப்படி நடந்தால், அது மோசே காலத்தில் நடந்த சம்பவத்தை மாதிரி இருக்கும். மோசேயும் இஸ்ரவேலர்களும் எகிப்தைவிட்டுக் கிளம்பியபோது “பலதரப்பட்ட ஜனங்களில் ஏராளமானோரும்” அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். மோசே சொன்ன பத்து தண்டனைகளும் நிறைவேறியதைப் பார்த்த பிறகு, இவர்கள் யெகோவாமேல் விசுவாசத்தை வளர்த்திருக்கலாம். (யாத். 12:38) இவர்களை மாதிரியே, மகா பாபிலோனின் அழிவைப் பார்த்த பிறகு, சிலர் நம்மோடு சேர்ந்துகொள்ள நினைத்தால், நாம் அவர்களை எப்படிப் பார்ப்போம்? அழிவுக்குக் கொஞ்சம் முன்பு வந்து சேர்ந்துவிட்டார்களே என்று எரிச்சல்படுவோமா? கண்டிப்பாக இல்லை! நம் அப்பா யெகோவா மாதிரியே நாமும் அந்த சமயத்தில் நடந்துகொள்வோம். அவர் எப்படிப்பட்டவர் என்று யோசியுங்கள். அவர் “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்!”—யாத். 34:6. w24.05 11 ¶12-13

செவ்வாய், மார்ச் 10

பயனுள்ள வார்த்தைகளை மாதிரியாக வைத்து, இவற்றைப் பின்பற்றிக்கொண்டே இரு.—2 தீ. 1:13.

ஒருவேளை நம்முடைய நம்பிக்கைகள் ‘பயனுள்ள வார்த்தைகளின்’ அடிப்படையில் இல்லாமல் போனால் என்ன ஆகும்? முதல் நூற்றாண்டில், யெகோவாவுடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டது என்று சில கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு வதந்தி பரவிக்கொண்டிருந்தது. பவுல் எழுதியதாக சொல்லி ஒரு கடிதம் அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம். அதை வைத்து அவர்கள் அப்படி நம்ப ஆரம்பித்திருக்கலாம். தெசலோனிக்கேயாவில் இருந்த சில கிறிஸ்தவர்கள் எதையுமே சோதித்துப் பார்க்காமல் அந்த வதந்தியை நம்பிவிட்டார்கள், அதை மற்றவர்களுக்கும் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். பவுல் அவர்களோடு இருந்த சமயத்தில் சொல்லிக்கொடுத்த விஷயங்களை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருந்தால் ஏமாந்துபோயிருக்க மாட்டார்கள். (2 தெ. 2:1-5) கேள்விப்படுகிற எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என்று பவுல் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். இனிமேலும் அவர்கள் குழம்பிப்போய்விடாமல் இருப்பதற்காக அவர்களுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தை இப்படிச் சொல்லி முடித்தார்: “பவுலாகிய நானே கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன். இதுதான் என்னுடைய ஒவ்வொரு கடிதத்துக்கும் அடையாளம், இதுதான் என் கையெழுத்து.”—2 தெ. 3:17. w24.07 12 ¶13-14

புதன், மார்ச் 11

சகித்திருப்பது அவசியம்.—எபி. 10:36.

யூதேயாவில் நிலைமை மோசம் ஆக ஆக எபிரெய கிறிஸ்தவர்கள் தொடர்ந்து சகித்திருக்க வேண்டியிருந்தது. அவர்களில் சிலர், ஏற்கெனவே பயங்கரமான துன்புறுத்தலைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், நிறையப் பேர் சமாதானமான சமயத்தில்தான் கிறிஸ்தவர்களாக மாறியிருந்தார்கள்; அவர்கள் அந்தளவுக்குத் துன்புறுத்தலை அனுபவித்திருக்க மாட்டார்கள். அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு இந்தக் கடிதத்தில், துன்புறுத்தலைச் சந்திக்கவும் இயேசு மாதிரி மரணம்வரை உண்மையாக இருக்கவும் தயாராக சொன்னார். (எபி. 12:4) கிறிஸ்தவ மதம் வளர வளர, மதவெறி பிடித்த யூதர்கள் வெறித்தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு, 40-க்கும் அதிகமான யூதர்கள், “‘பவுலைக் கொலை செய்யும்வரை சாப்பிடவோ குடிக்கவோ மாட்டோம்’ என்று சொல்லி” சபதம் எடுத்திருந்தார்கள். (அப். 22:22; 23:12-14) இவ்வளவு கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போக வேண்டியிருந்தது, தங்களுடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. w24.09 12 ¶15

வியாழன், மார்ச் 12

‘இயேசு தன்னுடைய அம்மாவிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று சொன்னார்.’—யோவா. 19:26.

யோவான் இயேசுவுடைய நெருங்கிய நண்பராகவும் அப்போஸ்தலராகவும் இருந்தார். (மத். 10:2) இயேசு ஊழியம் செய்த சமயத்தில் யோவான் அவர் கூடவே இருந்தார். அவர் செய்த அற்புதங்களைப் பார்த்தார். கஷ்டமான சமயங்களிலும் அவரோடு இருந்தார். இயேசு கொல்லப்பட்டதையும் பார்த்தார், உயிர்த்தெழுப்பப்பட்டதையும் பார்த்தார். முதல் நூற்றாண்டில் ஒரு சின்ன தொகுதியாக இருந்த கிறிஸ்தவர்கள் பிரமாண்டமாக வளர்வதைப் பார்த்தார். நல்ல செய்தி ‘வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டதை’ பார்த்தார். (கொலோ. 1:23) தன்னுடைய வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் பைபிளில் சில பகுதிகளை எழுதுவதற்கான வாய்ப்பு யோவானுக்குக் கிடைத்தது. ‘இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய’ விறுவிறுப்பான சம்பவங்களைப் பதிவு செய்தார். (வெளி. 1:1) தன்னுடைய பெயரில் ஒரு சுவிசேஷ புத்தகத்தையும் எழுதினார். மூன்று கடிதங்களையும் எழுதினார். கடைசிக் கடிதத்தை உண்மையுள்ள கிறிஸ்தவரான காயுவுக்கு எழுதினார். காயுவை தன்னுடைய சொந்த மகனாக யோவான் பார்த்தார். (3 யோ. 1) இந்த உண்மையுள்ள, வயதான கிறிஸ்தவர் சொன்ன விஷயங்கள் அன்றுமுதல் இன்றுவரை நம் எல்லாரையுமே உற்சாகப்படுத்துகிறது. w24.11 12 ¶15-16

வெள்ளி, மார்ச் 13

‘கணவர்களே, அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்.’—1 பே. 3:7.

மனைவிமேல் உயிரையே வைத்திருக்கிற ஒரு கணவர் அவளை முக்கியமானவளாக நினைப்பார், நெஞ்சார நேசிப்பார். அவளை யெகோவா கொடுத்த பொக்கிஷமாகப் பார்ப்பார். (நீதி. 18:22; 31:10) அதனால், எப்போதும் அவளை மென்மையாக மரியாதையாக நடத்துவார். செக்ஸ் வைத்துக்கொள்ளும்போதுகூட மனைவியைச் சங்கடப்படுத்துகிற மாதிரி, அவளுடைய மனசாட்சி உறுத்துகிற மாதிரி, அவளுக்கு அருவருப்பாக இருக்கிற விதத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்த மாட்டார். இந்த விஷயத்தில், கணவருடைய மனசாட்சியும் யெகோவாவுக்கு முன்னால் சுத்தமாக இருக்க வேண்டும். (அப். 24:16) கணவர்களே, எல்லா சமயத்திலும் மனைவிக்கு மதிப்பு கொடுக்க நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா பார்க்கிறார். உங்களை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறார். மனைவியை மரியாதை இல்லாமல் நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். எப்போதும் மனைவியைப் பாசமாக, மென்மையாக, மரியாதையாக நடத்துங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் அவள்மேல் உயிரையே வைத்திருக்கிறீர்கள், அவள் உங்களுக்கு ரொம்ப முக்கியம் என்பதைக் காட்டுவீர்கள். மனைவிக்கு மதிப்பு கொடுங்கள்; யெகோவாவோடு இருக்கிற பந்தத்துக்குப் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், யெகோவாவோடு இருக்கும் நட்புதான் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியம்.—சங். 25:14. w25.01 13 ¶17-18

சனி, மார்ச் 14

‘கிறிஸ்து நமக்காகத் தன்னையே கொடுத்தார்; இப்படி, நம்மை விடுவித்தார். அதோடு, அவருக்குச் சொந்தமான விசேஷ சொத்தாகவும் நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாகவும் ஆகும்படி நம்மைச் சுத்தமாக்கினார்.’ —தீத். 2:14.

யெகோவாவை வணங்குகிறவர்கள் ஊழியத்தை ரொம்ப ஆர்வத்துடிப்போடு செய்கிறார்கள். பொய்க் கிறிஸ்தவர்களிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒரு முக்கியமான விஷயமே இந்த ஆர்வத்துடிப்புதான். ஊழியத்தை ஆர்வத்துடிப்போடு செய்வதற்கு இயேசுவுடைய உதாரணம் நமக்குக் கைகொடுக்கும். ஊழியத்தில் அவருக்கு இருந்த ஆர்வம் தணியவே இல்லை. சொல்லப்போனால், பூமியில் அவர் இருந்த நாட்கள் குறைய குறைய ஊழியத்தை இன்னும் அதிகமாகச் செய்தார். தான் செய்த ஊழியத்தைப் பற்றி இயேசு ஒரு கதையில் விளக்கினார். அந்தக் கதையில் வருகிற தோட்டக்காரர் ஒரு அத்தி மரத்தை மூன்று வருஷம் பராமரித்தார். ஆனால் அது ஒரேவொரு பழத்தைக்கூட கொடுக்கவில்லை. அதேமாதிரி இயேசுவும் சுமார் மூன்று வருஷம் யூதர்களுக்குப் பிரசங்கித்தார். ஆனாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அவருடைய சீஷர்களாக ஆகவில்லை. அந்தக் கதையில் வந்த தோட்டக்காரர், அத்தி மரத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அதேமாதிரி, இயேசுவும் மக்கள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. ஊழியத்தில் அவருக்கு இருந்த ஆர்வமும் தணிவதற்கு விடவில்லை. (லூக். 13:6-9) இயேசு சொல்லிக்கொடுத்ததிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அவர் செய்த மாதிரியே நாமும் செய்யும்போது ஊழியத்தில் ஆர்வத்துடிப்போடு செயல்பட முடியும். w25.03 14-15 ¶1-4

ஞாயிறு, மார்ச் 15

சாமர்த்தியசாலி அறிவோடு நடந்துகொள்கிறான்.—நீதி. 13:16.

ஒருவரைப் பார்க்கும்போது, ‘இவர் எனக்குப் பொருத்தமானவர்’ என்று தோன்றினால் என்ன செய்வது? உடனடியாக அந்த நபரிடம் போய் ‘உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று சொல்ல வேண்டுமா? ஞானமுள்ள ஒரு நபர், எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வார் என்று பைபிள் சொல்கிறது. அதனால், ஒருவரிடம் நேரடியாகப் போய் பேசுவதற்கு முன் நேரம் எடுத்து அவரைக் கவனியுங்கள். ஆனால், நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அதை எப்படி செய்யலாம்? உதாரணத்துக்கு, கூட்டங்களிலோ கெட்டுகெதரிலோ (get-together) இருக்கும்போது அவர் மற்றவர்களிடம் எப்படிப் பழகுகிறார்... அவரிடம் என்ன மாதிரியான குணங்கள் இருக்கின்றன... ஆன்மீக விஷயங்களை எப்படி செய்கிறார்... என்றெல்லாம் கவனியுங்கள். அவருடைய நண்பர்கள் யார்? அவர் எதைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்? (லூக். 6:45) அவருடைய குறிக்கோள்களும், உங்களுடைய குறிக்கோள்களும் ஒத்துப்போகிறதா என்றும் யோசியுங்கள். அவருடைய சபையில் இருக்கிற மூப்பர்களிடமோ, அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்த முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளிடமோ நீங்கள் அவரைப் பற்றி விசாரிக்கலாம். (நீதி. 20:18) அவர் என்ன மாதிரி பெயரை சம்பாதித்திருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். (ரூ. 2:11) அவரைக் கவனிக்கும்போது, தர்மசங்கடப்படுத்துகிற மாதிரி எதையும் செய்துவிடாதீர்கள். அவருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள். கவனிக்கிறேன் என்ற பெயரில், அவரையே சுற்றி சுற்றி வராதீர்கள். அவரைப் பற்றி ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் நினைக்காதீர்கள். w24.05 22 ¶7-8

திங்கள், மார்ச் 16

கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்.—சங். 32:5.

பாவம் செய்தவர் மனம் திருந்தவே மாட்டார் என்று அவசரப்பட்டு முடிவு செய்யாமல் இருப்பதன் மூலம், மூப்பர்கள் இயேசு மாதிரி நடந்துகொள்கிறார்கள். பாவம் செய்த சிலர், அந்தக் குழுவின் முதல் சந்திப்பிலேயே மனம் திருந்தலாம். ஆனால், வேறு சிலருக்கு இன்னும் நேரம் தேவைப்படலாம். அதனால், மூப்பர்கள் ஒருதடவைக்கும் மேல் அந்த நபரைச் சந்திக்க ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை, முதல் சந்திப்புக்குப் பிறகு, அவர் மூப்பர்கள் சொன்ன விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசிக்க ஆரம்பிக்கலாம். யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டு மனத்தாழ்மையாக ஜெபம் செய்யலாம். (சங். 38:18) அதனால், அடுத்த ஒரு சந்திப்பில், அவரிடம் மாற்றங்கள் தெரியலாம்; முதல் சந்திப்பில் இருந்த மனப்பான்மை மாறியிருக்கலாம். பாவம் செய்தவரை மனம் திருந்தத் தூண்டுவதற்காக மூப்பர்கள் அன்போடும் அனுதாபத்தோடும் நடந்துகொள்கிறார்கள். தாங்கள் எடுக்கிற முயற்சிகளை ஆசீர்வதிக்கச் சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார்கள். பாவம் செய்தவரும் புத்தி தெளிந்து, மனம் திருந்துவார் என்று நம்புகிறார்கள்.—2 தீ. 2:25, 26. w24.08 22-23 ¶12-13

செவ்வாய், மார்ச் 17

“யாரும் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை. அதனால் திருந்தி வாழுங்கள்” என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.—எசே. 18:32.

யாருமே அழிந்துபோகக் கூடாது என்று யெகோவா ஆசைப்படுகிறார். பாவம் செய்தவர்கள் தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்று அவர் ஏங்குகிறார். (2 கொ. 5:20) சரித்திரத்தின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், வழிவிலகிப்போன தன்னுடைய மக்களையும் தனிப்பட்ட நபர்களையும் மனம் திருந்தச் சொல்லியும், தன்னிடம் திரும்பி வரச்சொல்லியும் யெகோவா திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தில், சபை மூப்பர்களும் யெகோவாவோடு தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்கிறார்கள். பாவம் செய்த நபர்களை மனம் திருந்தத் தூண்டுகிறார்கள். (ரோ. 2:4; 1 கொ. 3:9) பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது பரலோகத்தில் எவ்வளவு சந்தோஷம் இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நம்முடைய பரலோக அப்பா யெகோவா, காணாமல்போன ஆடுகள் ஒவ்வொன்றும், சபைக்குத் திரும்பி வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவ்வளவு சந்தோஷப்படுகிறார்! யெகோவாவுடைய கரிசனையையும் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் யோசித்துப் பார்க்கும்போது, அவர்மேல் இருக்கும் அன்பு நமக்கு இன்னும் அதிகமாகத்தான் செய்கிறது.—லூக். 1:78. w24.08 31 ¶16-17

புதன், மார்ச் 18

அவர்கள் வந்து தன்னைப் பிடித்து ராஜாவாக்கப்போகிறார்கள் என்பதை இயேசு தெரிந்துகொண்டு, அந்த இடத்தைவிட்டு மறுபடியும் மலைக்குத் தனியாகப் போனார்.—யோவா. 6:15.

ஒருவேளை இயேசு, தன்னை ராஜாவாக்க இடம் கொடுத்திருந்தால், ரோம ஆட்சிக்குக் கீழிருந்த யூதர்களுடைய அரசியல் விஷயங்களில் அவரும் தலையிடுவதுபோல் ஆகிவிடும். மக்களுடைய எண்ணத்தைத் தெரிந்துகொண்ட இயேசு அந்த இடத்திலிருந்து கிளம்பி ‘மலைக்குப் போனார்’ என்று பைபிள் சொல்கிறது. மக்கள் அவரை வற்புறுத்தினாலும் இயேசு அரசியலில் தலையிடவே இல்லை. இது நமக்கு ஒரு நல்ல பாடம், இல்லையா? அற்புதமாக மற்றவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றோ, வியாதிப்பட்டவர்களைக் குணப்படுத்த வேண்டும் என்றோ, ஒரு ஆட்சியாளராக ஆக வேண்டும் என்றோ யாரும் நம்மிடம் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஓட்டுப் போட சொல்லி நம்மை அரசியலில் ஈடுபட வைக்கலாம். அல்லது, அவர்களுக்குப் பிடித்த தலைவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லி நம்மை வற்புறுத்தலாம். இந்த மாதிரி சூழ்நிலைகளில் இயேசு நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். அவர் அரசியல் விஷயங்களில் தலையிடவில்லை. “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்றுகூட அவர் ஒருசமயம் சொன்னார். (யோவா. 17:14; 18:36) கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் இயேசு மாதிரியே யோசிக்கிறார்கள்; அவர் மாதிரியே நடந்துகொள்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டும் என்று ஜெபம் பண்ணுகிறார்கள், அதை ஆதரிக்கிறார்கள், அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள்.—மத். 6:10. w24.12 4 ¶5-6

வியாழன், மார்ச் 19

என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடப்பவன்தான் என்மேல் அன்பு காட்டுகிறான். என்மேல் அன்பு காட்டுகிறவனிடம் என் தகப்பனும் அன்பு காட்டுவார், நானும் அவன்மேல் அன்பு காட்டி அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.—யோவா. 14:21.

படிக்கிற விஷயங்களின்படி எப்படி நடக்கலாம் என்று யோசியுங்கள். உதாரணத்துக்கு, யெகோவா மாதிரியே எப்படி நீதியாக நடக்கலாம்... பாரபட்சம் காட்டாமல் இருக்கலாம்... என்றெல்லாம் யோசியுங்கள். இயேசு எப்படி யெகோவாமீதும் மற்றவர்கள்மீதும் அன்பு காட்டினாரோ அதேமாதிரி அன்பு காட்டுங்கள். யெகோவாவின் பெயருக்காகக் கஷ்டங்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருங்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதால் உங்களுக்குக் கஷ்டங்கள் வந்தாலும், அதைச் செய்ய தயங்காதீர்கள். இயேசு மாதிரியே ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள். அப்போதுதான் மக்களால் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடியும். அதோடு, அவர் கொடுத்திருக்கிற மீட்புவிலைமீது விசுவாசம் வைத்து நன்மையடையவும் முடியும். மீட்புவிலையைப் பற்றி எந்தளவுக்கு நாம் படித்துத் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு யெகோவாமீதும் இயேசுமீதும் நமக்கு இருக்கிற அன்பு அதிகமாகும்; அவர்களும் பதிலுக்கு நம்மேல் அதிகமாக அன்பைக் காட்டுவார்கள். (யாக். 4:8) அதனால், மீட்புவிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள யெகோவா கொடுத்திருக்கும் கருவிகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். w25.01 25 ¶16-17

வெள்ளி, மார்ச் 20

என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்.—ஏசா. 38:17.

இன்றைய தினவசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை இப்படியும் மொழிபெயர்க்கலாம்: “உங்களுடைய பார்வையில் இருந்து என்னுடைய பாவங்களையெல்லாம் நீக்கிவிட்டீர்கள்.” அப்படியென்றால், மனம் திருந்துகிறவர்களுடைய பாவங்களை யெகோவா கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தூக்கி எறிந்துவிடுகிறார். ஒருவேளை, எசேக்கியா ராஜாவின் வார்த்தைகளை வேறு விதமாக சொன்னால், “நான் பாவமே செய்யாத மாதிரி நீங்கள் என்னை பார்க்கிறீர்கள்” என்று சொல்லலாம். நம்முடைய பாவங்களை யெகோவா எவ்வளவு தூரத்துக்குத் தூக்கிப்போடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள மீகா 7:18, 19-ல் இன்னொரு உதாரணம் இருக்கிறது. அதில், யெகோவா நம்முடைய பாவங்களை ஆழ்கடலில் தூக்கிப்போடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில், ஆழ்கடலில் தூக்கிப்போடப்பட்ட ஒரு பொருளை யாராலும் திரும்ப எடுக்கவே முடியாது. அவ்வளவு தூரத்துக்கு யெகோவா நம்முடைய பாவங்களைத் தூக்கிப்போடுகிறார். யெகோவா நம்மை மன்னிக்கும்போது, பாவம் என்ற சுமையைத் தூக்கிப்போட்டுவிடுகிறார். யெகோவா அந்தச் சுமையைத் தூக்கியப் பிறகு குற்ற உணர்ச்சியால் நாம் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. தாவீது சொன்ன மாதிரியே, “யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் சந்தோஷமானவர்கள். எந்த மனிதருடைய பாவத்தை யெகோவா ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாரோ அவர் சந்தோஷமானவர்.” (ரோ. 4:7) இதுதான் யெகோவா தருகிற உண்மையான மன்னிப்பு! w25.02 9 ¶7-8

சனி, மார்ச் 21

நான் புதிதாகப் படைக்கிறவற்றை என்றென்றும் அனுபவித்து மகிழுங்கள்.—ஏசா. 65:18.

இன்று இந்த உலகத்தில் ஒரு பூஞ்சோலை இருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் அதில் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையான சமாதானத்தை அனுபவிக்கிறார்கள். நல்ல விஷயங்களை சுறுசுறுப்பாக செய்கிறார்கள். அதில் இருப்பவர்கள், அதை விட்டு வெளியே போகக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார்கள். அதோடு, மற்றவர்களையும் எப்படியாவது அதற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், அது நிஜமான ஒரு இடம் கிடையாது. அது என்னவென்று யோசிக்கிறீர்களா? அதுதான் ஆன்மீக பூஞ்சோலை! சாத்தானுடைய கையில் இருக்கிற இந்த உலகம் ரொம்ப ஆபத்தானது. அதில் எங்கே பார்த்தாலும் வெறுப்பும் பகையும்தான் இருக்கிறது. (1 யோ. 5:19; வெளி. 12:12) ஆனால் யெகோவா, இதே உலகத்தில் ஒரு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார். அதில் அவருடைய மக்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருக்க உதவுகிறார். அவர்கள் ஆன்மீக விதத்தில் செழிப்பாக இருப்பதற்குத் தேவையானதையும் தருகிறார். அதனால்தான், இந்த ஆன்மீக பூஞ்சோலையை ஒரு ‘அடைக்கலம்’ என்றும் ‘தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டம்’ என்றும் பைபிள் சொல்கிறது. (ஏசா. 4:6; 58:11) சமாளிக்க முடியாத இந்தக் கடைசி நாட்களிலும், இந்தப் பூஞ்சோலையில் இருப்பவர்கள் யெகோவாவின் உதவியோடு சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.—ஏசா. 54:14; 2 தீ. 3:1. w24.04 20 ¶1-2

ஞாயிறு, மார்ச் 22

‘உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் கடவுளிடம் சொல்லுங்கள்.’—பிலி. 4:6.

நீங்கள் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டால், ஒரு நல்ல துணையைக் கண்டுபிடிக்க உதவ சொல்லி ஜெபம் செய்திருப்பீர்கள். கல்யாணம் பண்ண நினைக்கிறவர்களுக்கு ஒரு துணையைக் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், உங்களுடைய தேவைகளையும் உணர்ச்சிகளையும் அவர் கவனித்துக்கொள்வார். ஒரு பொருத்தமான துணையைக் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சி எடுக்கும்போது அவர் உங்களுக்கு உதவுவார். அதனால், உங்களுடைய மனதில் இருக்கிற எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள். (சங். 62:8) பொறுமையாக இருக்கவும், ஞானமாக நடந்துகொள்ளவும் ஜெபம் செய்யுங்கள். (யாக். 1:5) ஒருவேளை, பொருத்தமான துணையை உங்களால் உடனே கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், உங்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதாகவும் உங்களுக்கு அன்பையும் பாசத்தையும் கொடுப்பதாகவும் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 55:22) ஆனாலும், ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள்: துணையைத் தேடுவதிலேயே மூழ்கிவிடாதீர்கள். (பிலி. 1:10) உண்மையான சந்தோஷம் நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதைப் பொறுத்து இல்லை; உங்களுக்கும் யெகோவாவுக்கும் எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. (மத். 5:3) அதுமட்டுமல்ல, கல்யாணம் பண்ணாமல் தனியாக இருக்கும் சமயத்தில் ஊழியத்தை இன்னும் நிறைய செய்ய சுதந்திரம் இருக்கும். (1 கொ. 7:32, 33) அந்த நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். w24.05 21 ¶4; 22 ¶6

திங்கள், மார்ச் 23

உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.—பிலி. 2:4.

எவ்வளவு நாளுக்கு டேட்டிங் செய்ய வேண்டும்? அவசரப்பட்டு முடிவெடுத்தால், மோசமான விளைவுகள் வரும். (நீதி. 21:5) அதனால், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ளும்வரை நீங்கள் டேட்டிங் செய்ய வேண்டும். அதற்காக, தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே போகக் கூடாது. ஏனென்றால், “எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்குத் தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 13:12) டேட்டிங் செய்கிறவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? அவர்களை சாப்பாட்டுக்கோ, குடும்ப வழிபாட்டுக்கோ கூப்பிடலாம். பொழுதுபோக்குக்காக ஏதாவது பிளான் பண்ணியிருந்தால் அதற்குக்கூட அவர்களைக் கூப்பிடலாம். (ரோ. 12:13) டேட்டிங் செய்கிற இரண்டு பேருக்கு, கூடப் போக யாராவது தேவைப்படுகிறார்களா? காரில் அவர்களைக் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருக்கிறதா? தனியாகப் பேசுவதற்கு அவர்களுக்கு ஒரு இடம் தேவைப்படுகிறதா? இந்த மாதிரி சூழ்நிலைகளில்கூட நாம் அவர்களுக்கு உதவ முடியும். (கலா. 6:10) டேட்டிங் செய்கிற ஒரு தம்பதி உங்களைத் துணைக்குக் கூப்பிட்டால், அதை நண்பர்களுக்கு உதவி செய்ய ஒரு வாய்ப்பாக பாருங்கள். அப்படிப் போகும்போது, தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதற்கு அவர்களுக்கு நேரமும் ஒரு நல்ல சூழலும் தேவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதேசமயத்தில், அவர்கள் தனிமையில் இருக்கிற மாதிரி விட்டுவிடாதீர்கள். w24.05 30 ¶13-14

செவ்வாய், மார்ச் 24

மனம் திருந்த நான் அவளுக்கு அவகாசம் கொடுத்தேன்.—வெளி. 2:21.

பாவம் செய்ய ஒருவருக்கு என்ன சூழ்நிலைகள் காரணமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள மூப்பர்கள் முயற்சி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, தவறாமல் பைபிள் படிக்காததாலோ ஊழியத்துக்கு ஒழுங்காக போகாததாலோ, யெகோவாவோடு அவருக்கு இருக்கிற பந்தம் பலவீனமாகிவிட்டதா? அடிக்கடி ஜெபம் செய்யாமல் போய்விட்டாரா அல்லது வெறுமனே கடமைக்காக ஜெபம் செய்துகொண்டிருந்தாரா? கெட்ட ஆசைகளை எதிர்த்து போராடுவதற்குப் பதிலாக, அதற்கு இடம்கொடுத்துக் கொண்டிருந்தாரா? எப்படிப்பட்ட ஆட்களோடு நேரம் செலவு செய்தார், என்ன மாதிரி பொழுதுபோக்கில் ஈடுபட்டார்? இது எப்படி அவருடைய மனதைப் பாதித்தது? தான் செய்த காரியம் யெகோவாவின் மனதை எப்படிப் பாதித்திருக்கும் என்று உணருகிறாரா? யெகோவாவோடு இருக்கும் பந்தம் பலவீனமானதற்கும் பாவம் செய்ததற்கும் எது காரணமாக இருந்தது என்பதை பாவம் செய்தவர் புரிந்துகொள்ள மூப்பர்கள் அன்பாக உதவ வேண்டும். அதற்கு அர்த்தமுள்ள சில கேள்விகளைக் கேட்கலாம். (நீதி. 20:5) அதேசமயத்தில், தெரிந்துகொள்ள அவசியமில்லாத விஷயங்களைப் பற்றி, ஒருவேளை அவருடைய சில தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி, மூப்பர்கள் கேள்விகள் கேட்க வேண்டியதில்லை. தான் செய்த செயலைப் பற்றியும்... அது ஏன் ஒரு பெரிய பாவம் என்பதைப் பற்றியும்... அவரை யோசிக்க வைப்பதற்கு மூப்பர்கள் உதாரணங்களைப் பயன்படுத்தலாம். ஒருவேளை, முதல் சந்திப்பிலேயே தான் செய்த பாவத்தை நினைத்து அந்த நபர் உண்மையிலேயே வருத்தப்பட ஆரம்பிக்கலாம், மனமும் திருந்தலாம்! w24.08 22 ¶9-11

புதன், மார்ச் 25

நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்.—லூக். 4:43.

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” இயேசு ஆர்வத்துடிப்போடு சொன்னதற்கு காரணம், இந்த வேலையை அவர் செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம் என்பதைத் தெரிந்துவைத்திருந்தார். ஊழியம் செய்வதுதான் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. பூமியில் அவர் வாழ்ந்த கடைசி சில மாதங்களில்கூட “நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும்” போய் எல்லாருக்கும் சொல்லிக்கொடுத்தார். (லூக். 13:22) இந்த வேலையைச் செய்வதற்கு இன்னும் நிறைய சீஷர்களுக்கும் அவர் பயிற்சி கொடுத்தார். (லூக். 10:1) இன்றும்கூட, பிரசங்க வேலைதான் முக்கியமான வேலை. இதைச் செய்ய வேண்டும் என்றுதான் யெகோவாவும் இயேசுவும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். (மத். 24:14; 28:19, 20) மக்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறாரோ அதேமாதிரி நாமும் நினைத்தால் ஊழியத்தில் நம்முடைய ஆர்வம் குறையாமல் இருக்கும். நிறைய பேர் நல்ல செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா நினைக்கிறார். (1 தீ. 2:3, 4) அதனால்தான், உயிர்காக்கும் இந்தச் செய்தியைத் திறமையாகச் சொல்ல நமக்குப் பயிற்சி கொடுக்கிறார். ஒருவேளை, மக்கள் இன்று மாற்றங்கள் செய்யவில்லை என்றாலும், மிகுந்த உபத்திரவம் முடியும்வரை அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. w25.03 15-16 ¶5-7

வியாழன், மார்ச் 26

அவனுக்கு வாழ்த்துச் சொல்கிற ஒருவன் அவனுடைய பொல்லாத செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறான்.—2 யோ. 11.

சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் சபைக் கூட்டங்களுக்கு வரும்போது அவரிடம் எப்படி நடந்துகொள்வது என்ற விஷயத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனசாட்சியைப் பயன்படுத்தி முடிவு செய்ய வேண்டும். அவருக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்பது சிலருக்குப் பிரச்சினையாக இருக்காது. இருந்தாலும், அவரோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம். மற்ற சமயங்களிலும்கூட நாம் அவரோடு சேர்ந்து நேரம் செலவு செய்ய மாட்டோம். ‘அப்படிப்பட்ட ஒருவருக்கு வாழ்த்து சொன்னால், அவருடைய பொல்லாத செயல்களுக்கு நாமும் உடந்தையாகிவிடுவோம் என்று பைபிள் சொல்கிறதே’ என்று சிலர் யோசிக்கலாம். (2 யோ. 9-11) ஆனால் இந்த வசனத்தின் சூழமைவைப் பார்த்தால், இந்த வழிநடத்துதல் விசுவாசதுரோகிகளுக்கும், பைபிளுக்கு எதிரான செயல்களைத் தீவிரமாகப் பரப்பிக்கொண்டு இருப்பவர்களுக்கும் பொருந்துகிறது. (வெளி. 2:20) அதனால், ஒருவர் விசுவாசதுரோக போதனைகளையும் மற்ற தவறான செயல்களையும் தீவிரமாகப் பரப்பிக்கொண்டிருந்தால், மூப்பர்கள் அவரைச் சந்திக்க எந்த ஏற்பாடும் செய்ய மாட்டார்கள். ஆனாலும், அப்படிப்பட்ட ஒரு நபர்கூட மனம் திருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர் அப்படி மனம் திருந்தி வரும்வரை அவருக்கு நாம் வாழ்த்து சொல்ல மாட்டோம்; கூட்டங்களுக்கு அழைக்கவும் மாட்டோம். w24.08 30-31 ¶14-15

வெள்ளி, மார்ச் 27

புரிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய இதயம் மந்தமாகவே இருந்தது.—மாற். 6:52.

அற்புதமாக ரொட்டியை மக்களுக்குக் கொடுத்த பிறகு, இயேசு அவருடைய அப்போஸ்தலர்களை படகில் ஏறி கப்பர்நகூமுக்குப் போகச் சொன்னார். மக்கள் இயேசுவை ராஜாவாக்க முயற்சி செய்ததால், அவர் அவர்களிடமிருந்து விலகி மலைக்குப் போனார். (யோவா. 6:16-20) அப்போஸ்தலர்கள் படகில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் பயங்கரமான புயல் காற்று அடித்தது. அலைகள் படகை அலைக்கழித்தது. அப்போது இயேசு அவர்களிடம் வந்தார். அதுவும் தண்ணீர்மேல் நடந்துவந்தார். அதேபோல் அப்போஸ்தலன் பேதுருவையும் தண்ணீர்மேல் நடந்துவர சொன்னார். (மத். 14:22-31) இயேசு படகில் ஏறிய பிறகு, காற்று அப்படியே அடங்கிவிட்டது. இதைப் பார்த்து அப்போஸ்தலர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள். “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்” என்று சொன்னார்கள். (மத். 14:33) ஆனால், இந்த அற்புதத்துக்கும், இயேசு சற்று முன்பு செய்த அற்புதத்துக்கும் பின்னாலிருந்த முக்கியமான விஷயத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதைப் பற்றி மாற்கு ஒரு விவரத்தைச் சொல்கிறார்: “அதைப் பார்த்து [அப்போஸ்தலர்கள்] மிகவும் பிரமித்துப்போனார்கள். அற்புதமாய் ரொட்டிகளைக் கொடுத்தவரால் இந்த அற்புதத்தையும் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.” (மாற். 6:50-52) அற்புதங்களைச் செய்ய இயேசுவுக்கு யெகோவா எந்தளவுக்கு சக்தி கொடுத்திருந்தார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் போய்விட்டார்கள். w24.12 5 ¶7

சனி, மார்ச் 28

‘எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் கடவுளுடைய விருப்பம்.’—1 தீ. 2:4.

மீட்புவிலையை ஏற்பாடு செய்ததற்காக யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம் என்பதை இந்த நினைவுநாள் சமயத்தில் காட்டலாம். கண்டிப்பாக நாம் எல்லாரும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம். ஆனால் அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதில் கலந்துகொள்ள நிறைய பேரை அழைக்கலாம். அவர்களைக் கூப்பிடும்போது, அந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்பதை விளக்கலாம். அதற்கு, jw.org வெப்சைட்டில் இருக்கிற இயேசு ஏன் இறந்தார்? மற்றும் இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற இரண்டு வீடியோக்கள் ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். செயலற்ற பிரஸ்தாபிகளை அழைப்பதற்கு மூப்பர்கள் கண்டிப்பாக முயற்சி எடுப்பார்கள். தொலைந்துபோன ஒரு ஆடு மறுபடியும் மந்தைக்கு வரும்போது, பரலோகத்திலும், பூமியிலும் எவ்வளவு சந்தோஷம் இருக்கும்! (லூக். 15:4-7) நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு வருகிறவர்களிடமும், புதிதாக வருகிறவர்களிடமும் சந்தோஷமாகப் பேசலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, அவர்களும் நமக்கு முக்கியம் என்பதைக் காட்டுவோம்.—ரோ. 12:13. w25.01 29 ¶15

ஞாயிறு, மார்ச் 29

‘கடவுள், நம்மேல் அன்பு காட்டியதால்தான் நம் பாவங்களுக்குப் பிராயச்சித்த பலியாக தன்னுடைய மகனை அனுப்பினார்.’—1 யோ. 4:10.

யெகோவா நியாயமானவர் என்பதை மட்டுமல்ல, அவர் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதையும் மீட்புவிலை காட்டுகிறது. (யோவா. 3:16; 1 யோ 4:9, 10) மீட்புவிலையை யெகோவா ஏற்பாடு செய்ததற்குக் காரணம் நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தில் ஒருவராக நாம் ஆகவேண்டும் என்பதற்காகவும்தான். ஆதாம் பாவம் செய்தபோது யெகோவா அவனைத் தன்னுடைய குடும்பத்தைவிட்டே அனுப்பிவிட்டார். அதனால், அவனுடைய சந்ததியில் வந்த நாம் எல்லாருமே யெகோவாவுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கிற வாய்ப்பை இழந்துவிட்டோம். ஆனால், மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். யாரெல்லாம் மீட்புவிலையில் விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களைக் காலப்போக்கில் தன் குடும்பத்தில் ஒருவராக ஆக்கிக்கொள்வார். இப்போதுகூட நம்மால் யெகோவாவோடும் அவருடைய மக்களோடும் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. இவையெல்லாமே நமக்குக் கிடைப்பதற்குக் காரணம் யெகோவாவுடைய அன்புதான்.—ரோ. 5:10, 11. w25.01 21 ¶6

நினைவுநாள் பைபிள் வாசிப்பு: (பகலில் நடந்தவை: நிசான் 9) யோவான் 12:12-19; மாற்கு 11:1-11

திங்கள், மார்ச் 30

இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது.—1 யோ. 4:9.

மீட்புவிலை, உண்மையிலேயே நமக்குக் கிடைத்திருக்கும் அருமையான பரிசு. (2 கொ. 9:15) ஏனென்றால், இயேசு நமக்காக அவருடைய உயிரையே கொடுத்ததால்தான் யெகோவாவிடம் நம்மால் நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் என்றென்றும் வாழ்கிற வாழ்க்கையும் கிடைக்கப் போகிறது. நம்மேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதால்தான் யெகோவா இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். (ரோ. 5:8) மீட்புவிலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; அதற்காக எப்போதுமே நன்றியோடு இருக்க வேண்டும். அதனால்தான், தன்னுடைய மரணத்தை வருஷா வருஷம் நினைத்துப் பார்க்க சொல்லி இயேசுவும் சொல்லியிருக்கிறார். (லூக். 22:19, 20) ஏப்ரல் 2, 2026 வியாழக்கிழமை அன்று, நினைவுநாள் நிகழ்ச்சியை அனுசரிப்போம். அதில் நாம் எல்லாருமே கலந்துகொள்வோம் என்பதில் சந்தேகமே இல்லை. நினைவுநாளுக்கு முன்பும் பின்பும் இருக்கிற வாரங்களில் யெகோவாவும் இயேசுவும் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை ஆழமாக யோசித்துப் பார்த்தால் நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். w25.01 20 ¶1-2

நினைவுநாள் பைபிள் வாசிப்பு: (பகலில் நடந்தவை: நிசான் 10) யோவான் 12:20-50

செவ்வாய், மார்ச் 31

வெள்ளிக்குப் பதிலாக என் புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள். சொக்கத்தங்கத்துக்குப் பதிலாக அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.—நீதி. 8:10.

யெகோவாவும் இயேசுவும் செய்திருக்கிற விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்கப் பார்க்க, அவர்கள் நம்மேல் வைத்திருக்கிற அன்பைப் புரிந்துகொள்ள முடியும். இந்த நினைவுநாள் சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு சுவிசேஷ புத்தகங்களைப் படிக்க முயற்சி செய்யுங்கள். நிறைய அதிகாரங்களைப் படித்து முடிக்க வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, நிறுத்தி நிதானமாகப் படியுங்கள். யெகோவாமேலும் இயேசுமேலும் இருக்கிற அன்பை அதிகமாக்கும் குறிப்புகளைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் எவ்வளவு வருஷம் சத்தியத்தில் இருந்தாலும் சரி, கடவுளுடைய நீதி, அன்பு, மீட்புவிலை போன்றவற்றைப் பற்றிப் புதுப்புது விஷயங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும். சொல்லப்போனால், இதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொள்வதற்கு முடிவே இல்லை. அதனால் நம்முடைய பிரசுரங்களில் இருக்கிற தகவல்களை நன்றாகப் படித்துப் பாருங்கள். ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்குப் புரியவில்லையென்றால் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். w25.01 24-25 ¶13-15

நினைவுநாள் பைபிள் வாசிப்பு: (பகலில் நடந்தவை: நிசான் 11) லூக்கா 21:1-36

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்