மேம்பாட்டிற்காக மகத்தான மாற்றம்
“1900-ல், மனித சரித்திரத்தின் மகத்தான மாற்றங்களின் சகாப்தங்களுள் ஒன்றில் தடம்பதிக்க உலகம் தயாராய் இருந்தது. புதிய ஒழுங்கிற்கு பழைய ஒழுங்கு வழிவிட்டது.”—த டைம்ஸ் அட்லஸ் ஆஃப் த டுவென்டியத் செஞ்சுரி.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், “வழக்கத்திற்குமீறிய கொந்தளிப்பும் வன்முறையும் தலைவிரித்தாடும் ஒரு சகாப்தத்திற்குள் இந்த உலகம் அடியெடுத்து வைத்தது” என மேலே குறிப்பிட்டுள்ள அட்லஸ் சுட்டிக்காட்டுகிறது. மற்றெல்லா நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டே அதிகமான யுத்தங்களை கண்டது. 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நூற்றாண்டில்தான், யுத்தங்கள் இதற்குமுன் இல்லாதவிதமாக அதிக அளவில் பொதுமக்களை கொன்று குவித்தன. முதல் உலக யுத்தத்தில் இறந்தவர்களில் 15 சதவீதத்தினர் பொதுமக்களே. ஆனால், சில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்ட போர்வீரர்களைவிட பொதுமக்களே அதிகம். அதுமுதற்கொண்டு போரில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோரில் பெரும்பான்மையர் பொதுமக்களே. இந்த எல்லா வன்முறைச் சம்பவங்களும் பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகின்றன. அது என்ன? “சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்ட, . . . சிவப்பான குதிரைமீது ஏறியிருந்தவ”னைப் பற்றிய தீர்க்கதரிசனமே அது.—வெளிப்படுத்துதல் 6:3, 4; மத்தேயு 24:3-7.
மதிப்பீடுகளில் மாற்றம்
2 தீமோத்தேயு 3:1-5-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை இருபதாம் நூற்றாண்டு நிறைவேற்றி வருகிறது. அது சொல்வதாவது: “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.”
அபூரண மக்கள் இப்படிப்பட்ட குணங்களை எப்போதுமே ஓரளவு காண்பித்திருக்கின்றனர். ஆனால், இந்த இருபதாம் நூற்றாண்டிலோ, இப்படிப்பட்ட மனப்பான்மைகள் தீவிரமாகவும் பரவலாகவும் இருக்கின்றன. முழுக்க முழுக்க துன்மார்க்கர்களாக இல்லாவிட்டாலும், மேலே குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளும் ஆட்கள் ஒருகாலத்தில் சமூகவிரோதிகள் என்று கருதப்பட்டனர். ஆனால் இப்போதோ, “இறைப்பற்று உடையவர்கள்போல்” இருக்கும் ஆட்களும்கூட, இப்படிப்பட்ட குணங்களை சாதாரணமாகவே கருதுகின்றனர்.
ஒருகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்வது கற்பனை செய்து பார்க்கவும் முடியாத பாவம் என மதப்பற்று உடைய மக்கள் கருதினார்கள். ஒத்த பாலினத்தவர் உறவுகளைப்போலவே, திருமணமாகாமலே தாயாவதும் அவமான சின்னமாக எண்ணப்பட்டது. அநேகருக்கு கருச்சிதைவு என்பதே ஏற்கமுடியாததாக இருந்தது. விவாகரத்தும் அதைப்போலவே கருதப்பட்டது. வியாபாரத்தில் மோசடி செய்வது குற்றமாக கருதப்பட்டது. ஆனால், ஒரு புத்தகம் சொல்வதுபோல் இன்றோ “எப்படி வேண்டுமானாலும் இருந்துக்கலாம்” என்ற நிலைதான் நிலவுகிறது. ஏன்? ஒரு காரணம் என்னவென்றால், “இது செய்யக்கூடாது அது செய்யக்கூடாது என்றெல்லாம் மற்றவர்கள் தங்களுக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை என நினைப்போரின் தன்னல ஆசைகளை இது திருப்திப்படுத்துகிறது.”
உயர்ந்த நெறிமுறைகளை கைவிட்டுவிட்டதன் காரணமாக, வாழ்க்கையில் பிரதானமாக வைக்க வேண்டிய காரியங்களிலும் இந்த நூற்றாண்டு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “1900-ல், தேசங்களும் தனிநபர்களும் தங்கள் மதிப்பை பணத்தால் அளக்கவில்லை . . . ஆனால், இந்த நூற்றாண்டின் முடிவிலோ, தேசங்கள் தங்களுடைய வெற்றியை முழுக்க முழுக்க பொருளாலேயே அல்லது பணத்தாலேயே அளக்கின்றன. இதைப்போலவே, சொத்துக்களைப் பற்றிய மக்களின் எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதென” த டைம்ஸ் அட்லஸ் ஆஃப் த டுவென்டியத் செஞ்சுரி விளக்குகிறது. இன்று மிகப் பிரபல்யமாக இருக்கும் சூதாட்டம் பண ஆசையை ஊட்டி வளர்க்கிறது. ரேடியோ, டெலிவிஷன், சினிமாக்கள், வீடியோக்கள் போன்றவையும் பொருளாசையைத்தான் ஊக்குவிக்கின்றன. பணம்தான் எல்லாமே என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் என்ற செய்தியைத்தான் விளையாட்டு, விளம்பரப் போட்டிகளும்கூட பிரபலப்படுத்துகின்றன.
ஒட்டியிருந்தாலும் வெட்டிக்கொள்ளுதல்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், பெரும்பாலான மக்கள் கிராமப்பகுதிகளில்தான் வாழ்ந்தனர். இருபத்திவொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில் வாழ்வர் என்று சொல்லப்படுகிறது. “எதிர்கால தலைமுறையினரை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும்கூட, இன்றைய நகரவாசிகளுக்கு ஏற்ற நடுத்தர வாழ்க்கைத் தரத்தை அளிப்பதென்பது சமாளிக்க முடியாத பிரச்சினையாகவே தோன்றுகிறது” என கிரகத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. “நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. . . . கோடிக்கணக்கானோர் . . . தங்கள் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கும் ஏன் அவர்கள் உயிருக்கே ஆபத்தான நிலைமைகளில் வாழ்கின்றனர்” என உவர்ல்ட் ஹெல்த் என்ற ஐநா பத்திரிகை குறிப்பிடுகிறது.
நகரங்களுக்கு படையெடுக்கும் மக்கள் ஒருவரோடொருவர் நெருங்கி வரும் அதே சமயத்தில் பிளவுபட்டும் இருக்கின்றனர் என்பது ஒன்றோடொன்று எவ்வளவு முரண்பாடாக இருக்கிறதல்லவா! டெலிவிஷன், டெலிஃபோன், இன்டர்நெட், கம்ப்யூட்டர் மூலமே ஷாப்பிங்கை முடித்துக்கொள்ளுதல் எல்லாமே பிரயோஜனமானவைதான். ஆனால், இவை நேருக்கு நேர் உறவுகளை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றன. எனவே, “இருபதாம் நூற்றாண்டு ஜனத்தொகை பெருக்கத்தின் நூற்றாண்டு மட்டுமல்ல, இது தனிமையின் நூற்றாண்டும்கூட” என ஜெர்மானிய செய்தித்தாள் பெர்லீனர் ட்ஸைடுங் தெரிவிக்கிறது.
ஜெர்மனி, ஹாம்பர்க்கில் நிகழ்ந்ததுபோன்ற அவலநிகழ்ச்சிகளுக்கே இது வித்திடுகிறது. அங்கே, தன்னுடைய அபார்ட்மெண்டில் இறந்த ஒரு மனிதனின் சடலம் ஐந்து வருடங்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது! “உறவினர்களோ, அயலகத்தாரோ, அதிகாரிகளோ யாருமே அந்த மனிதனைத் தேடவில்லை” என ஜெர்மானிய பத்திரிகை டேர் ஷ்பீகல் குறிப்பிடுகிறது. “பெரிய நகரங்களில் வாழும் அநேகர் ஒவ்வொரு நாளும் எந்தளவு அனாமதேயமாகவும் சமூகத்தோடு அறவே தொடர்பில்லாமலும் வாழ்கின்றனர் என்பதை இது குறிப்பாக தெரிவிக்கிறது” என அந்தப் பத்திரிகை மேலும் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடிய நிலைமைகளின் குற்றவாளி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மட்டுமே அல்ல. இதற்குக் காரணம் ஜனங்களே. எப்போதும் இல்லாத அளவுக்கு ‘தற்பிரியரையும், பணப்பிரியரையும், . . . நன்றியில்லாதவர்களையும், . . . சுபாவ அன்பில்லாதவர்களையும், இணங்காதவர்களையும், . . . நல்லோரைப் பகைக்கிறவர்களையும், . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியரையும்’ இந்த நூற்றாண்டு பிறப்பித்திருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5.
1914—குறிப்பிடத்தக்க வருடம்
வின்ஸ்டன் சர்ச்சில் கருத்துப்படி, “இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் ஒளிமயமானதாகவும் அமைதியானதாகவும் தோன்றியது.” முன்னொருபோதும் இராத அளவுக்கு சமாதானமும் வளமும் நிறைந்த சகாப்தத்தை உருவாக்கும் என அநேகர் நினைத்தனர். ஆனால், 1905, செப்டம்பர் 1, ஆங்கில காவற்கோபுர இதழ் இவ்வாறாக எச்சரித்தது: “நிறைய போர்கள் விரைவில் வரும்” என்றும் 1914-ல் “மாபெரும் கொந்தளிப்பு” ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டது.
1879-லேயே, 1914 ஒரு குறிக்கப்பட்ட வருடம் என அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியது. பரலோகத்தில் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட வருடம் அதுவே என பைபிள் புத்தகமாகிய தானியேலில் உள்ள தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டியதை பல வருடங்களுக்குப் பிறகு அதே பத்திரிகை தெளிவாக்கியது. (மத்தேயு 6:10) கடவுளுடைய ராஜ்யம், பூமியின் விவகாரங்கள்மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்கும் காலம் 1914 அல்ல. என்றபோதிலும், அதன் ஆட்சியை துவங்குவதற்கான சமயம் அதுவே.
பைபிள் தீர்க்கதரிசனம் இவ்வாறாக முன்னறிவித்தது: “[நம் நாட்களில் இருக்கும்] அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்.” (தானியேல் 2:44) கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட அந்த ராஜ்யம், அதன் குடிமக்களாக இருக்க விரும்பும் கடவுள் பயமுள்ளவர்களை இங்கு பூமியில் கூட்டிச்சேர்க்க ஆரம்பித்துள்ளது.—ஏசாயா 2:2-4; மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 7:9-15.
பரலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கு இணையாக, 1914-ல் இங்கு பூமியில் “கடைசி நாட்கள்” துவங்கின. இப்போது இருக்கும் இந்த ஒழுங்குமுறையின் அழிவோடு ஒரு முடிவுக்கு வரும் காலப்பகுதியின் துவக்கத்தைக் குறிக்கிறது. உலக யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், கொடிய பூமியதிர்ச்சிகள், அக்கிரமம் மிகுதியாதல், கடவுளிடமும் அயலானிடமுமான மக்களின் அன்பு தணிந்துபோதல் போன்றவற்றால் இந்தக் காலப்பகுதியின் ஆரம்பம் அடையாளப்படுத்தப்படும் என இயேசு முன்னறிவித்தார். இவையெல்லாம் “வேதனைகளின் ஆரம்ப”த்திற்கு அடையாளம் என இயேசு சொன்னார்.—மத்தேயு 24:3-12.
புத்தம்புது பூமி விரைவில்
“கடைசி நாட்களின்” காலப்பகுதியில் ஏற்கெனவே 85 ஆண்டுகளை கடந்துவிட்டோம். தற்போதைய அதிருப்தியூட்டும் இந்த ஒழுங்குமுறையின் முடிவை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின்கீழ், கடவுளுடைய ராஜ்யம் விரைவில் “[தற்போது இருக்கும்] அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44; 2 பேதுரு 3:10-13.
பூமியிலிருந்து துன்மார்க்கத்தை கடவுள் துடைத்தழிப்பார். முற்றிலும் புதிய உலகிற்குள் நீதியை நேசிக்கும் மக்களை கூட்டிச் செல்வார். “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22.
என்னே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி! நிச்சயமாகவே, மூலை முடுக்கெல்லாம் அறிவிக்கப்பட வேண்டிய செய்தியே! இருபதாம் நூற்றாண்டு தீவிரப்படுத்தியுள்ள எல்லா பிரச்சினைகளையும் கடவுளுடைய ராஜ்யம் விரைவில் தீர்த்துவிடும்: போர், வறுமை, நோய், அநியாயம், பகை, மதசகிப்பின்மை, வேலையில்லா திண்டாட்டம், குற்றச்செயல், துயரம், மரணம்.—பார்க்க: சங்கீதம் 37:10, 11; 46:8, 9; 72:12-14, 16; ஏசாயா 2:4; 11:3-5; 25:6, 8; 33:24; 65:21-23; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4.
வார்த்தைகளால் விவரிக்க இயலாத சந்தோஷத்தை அள்ளி வழங்கும் நீதியான உலகில் என்றென்றுமாக வாழும் எதிர்பார்ப்பு உங்களை கவர்ந்திழுக்கிறதா? கூடுதல் தகவல்களை யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள். சரித்திரம் படைத்த மாற்றங்களால் தனித்தன்மைப் பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டின் அத்தியாயம் விரைவில் முடியப்போவதையும் அதன்பின் நித்திய ஆசீர்வாதங்களோடு நீங்கள் நீடூழி வாழலாம் என்பதையும் உங்கள் பைபிளில் இருந்தே எடுத்துக்காட்டுவார்கள்!
[பக்கம் 10-ன் படம்]
புத்தம் புது பூமி விரைவில்