உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 12/8 பக். 7-10
  • நல்லதோர் வாழ்க்கையைத் தேடி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்லதோர் வாழ்க்கையைத் தேடி
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘முன்பு எப்படி தாக்குப்பிடித்தீர்கள் . . . ?’
  • இன்பத்தை நாடி
  • “கேளிக்கைகளில் மிதமிஞ்சிய நாட்டம்”
  • “மின்னுவதெல்லாம் . . . ”
  • மேம்பாட்டிற்காக மகத்தான மாற்றம்
    விழித்தெழு!—1999
  • ‘அழியா தடம்பதித்த மாற்றம்’
    விழித்தெழு!—1999
  • சுற்றுலா—உலகம் சுற்றும் துறை
    விழித்தெழு!—2002
  • ரொம்ப சீக்கிரமா அல்லது ரொம்ப தாமதமா?
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 12/8 பக். 7-10

நல்லதோர் வாழ்க்கையைத் தேடி

“இருபதாம் நூற்றாண்டில், அநேக ஜனங்களின் அனுதின வாழ்க்கையில் . . . விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றங்களால் மாற்றங்கள் ஏற்பட்டன.”—த ஆக்ஸ்ஃபோர்ட் ஹிஸ்டரி ஆஃப் த டுவென்டியத் செஞ்சுரி.

இந்த சகாப்தத்தின் மிகப் பெரிய மாற்றங்களுள் ஒன்று மக்கள் தொகையில் அடைந்துள்ள உச்சநிலையே. உலக மக்கள் தொகையில் இந்தளவு உச்சநிலையை வேறெந்த நூற்றாண்டும் காணவில்லை. 1800-களின் ஆரம்பத்தில் 100 கோடியை தொட்டது. 1900-⁠ல் 160 கோடி என்ற எல்லையை தொட்டது. 1999-⁠ல், உலக மக்கள் தொகை 600 கோடி என்ற கொடுமுடியை எட்டியது! பெருகி வரும் இந்த மக்கள் தொகையின் பெரும்பகுதியினர் நல்லதோர் வாழ்க்கையையே நாடுகின்றனர்.

மருத்துவத்துறையில் முன்னேற்றமும் சுகாதார வசதிகள் தாராளமாக கிடைப்பதுமே மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணங்கள். ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய மாகாணங்கள் போன்ற இடங்களில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது 50 வருடங்களாக இருந்தது. இப்போதோ, 70 வருடங்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், மற்ற இடங்களில் இந்தளவு அதிகரிப்பு இல்லை. குறைந்தது 25 நாடுகளில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 50 அல்லது அதற்கும் குறைவான வருடங்களாகவே இருக்கிறது.

‘முன்பு எப்படி தாக்குப்பிடித்தீர்கள் . . . ?’

விமானங்கள், கம்ப்யூட்டர்கள், டெலிவிஷன்கள் போன்றவை இன்று சர்வ சாதாரணமாக கருதப்படுகின்றன. ஏன், சில பணக்கார நாடுகளில் இவை அத்தியாவசியமானவையாகவும் கருதப்படுகின்றன. ஆனால், இவை இல்லாமல் தங்களுடைய தாத்தா பாட்டிமார்கள் எப்படித்தான் தாக்குப்பிடித்தார்களோ என இளைஞர்கள் சில சமயங்களில் ஆச்சரியப்படுகின்றனர். உதாரணமாக, வாகனங்கள் நம் வாழ்க்கையை எந்தளவு மாற்றியிருக்கின்றன என்பதை சற்று சிந்தியுங்கள். 19-⁠ம் நூற்றாண்டின் இறுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் டைம் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “துவக்கம் முதல் முடிவு வரை இருபதாம் நூற்றாண்டை வேறுபடுத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்று வாகனம்.”

மோட்டார் வாகனங்கள் திடீரென இல்லாமல் போனால், வேலைக்கு செல்லும் ஐரோப்பியர்களில் பத்து பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் வேலை இழப்பர் என 1975-⁠ல் கணக்கிடப்பட்டது. மோட்டார் வாகன தொழிற்சாலை பெருமளவு பாதிக்கப்படும். அதுமட்டுமன்றி, வங்கிகள், ஷாப்பிங் சென்டர்கள், ட்ரைவ்-இன் ரெஸ்டாரண்டுகள், மற்றும் பல ஸ்தாபனங்கள் தங்கள் பிஸினஸை இழுத்துமூட வேண்டியதுதான். இவை அனைத்தும் வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்களைச் சார்ந்தே இருக்கின்றன. மேலும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை மார்கெட்டிற்கு கொண்டுபோக முடியாமல், உணவு விநியோகமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஸ்தம்பித்துவிடும். நகரங்களுக்கு சென்று வேலை செய்யும் புறநகர்வாசிகள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் போய்விடும். இயற்கை வனப்புமிக்க நகர்ப்புறங்களின் மத்தியில் குறுக்கும்நெடுக்குமாக செல்லும் நெடுஞ்சாலைகள் உபயோகமில்லாமல் போகும்.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், மோட்டார் வாகனங்களின் உற்பத்தியை பெருக்கி, செலவைக் குறைக்க, சங்கிலி முறை உற்பத்தி (Assembly Line) அறிமுகப்படுத்தப்பட்டது. இது, இன்று அநேக தொழிற்சாலைகளில் பிரபலமாக இருக்கிறது. (சமையலறை சாதனங்கள் உட்பட பல பொருட்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவதை இம்முறை சாத்தியமாக்கியுள்ளது.) இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், பணக்கார சிறுபான்மையோரின் ஆடம்பர, டாம்பீக பொருளாகவே மோட்டார் வாகனம் கருதப்பட்டது. ஆனால், இன்றோ உலகின் பல பாகங்களில் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் போக்குவரத்து சாதனமாக இது இருக்கிறது. “மோட்டார் வாகனம் இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கவே முடியாது” என ஓர் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

இன்பத்தை நாடி

நீங்கள் எங்கு போக வேண்டுமோ அங்கு போவதே பிரயாணம் என்பதாக கருதப்பட்டது. ஆனால், இருபதாம் நூற்றாண்டின்போதோ, முக்கியமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்நிலை மாறிவிட்டது. நிறைய சம்பளம் தரும் வேலைகள் அதிகம் கிடைக்க ஆரம்பித்தன. வேலை மணிநேரம் ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக்கப்பட்டன. ஆகவே, மக்களிடம் பணம் புரள ஆரம்பித்தது, பிரயாணம் செய்ய நேரமும் கிடைத்தது. இப்போது, நீங்கள் எங்கு போக வேண்டுமென விரும்புகிறீர்களோ அங்கு போவதே பிரயாணம் என கருதப்படுகிறது. வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கும் சென்று பொழுதுபோக்குவதை கார்கள், பஸ்கள், விமானங்கள் ஆகியவை சுலபமாக்கியுள்ளன. சுற்றுலாத்துறை மிகப் பெரிய அளவு வளர்ந்துள்ளது. இன்று இது பெரிய வியாபாரமாக மாறியுள்ளது.

த டைம்ஸ் அட்லஸ் ஆஃப் த டுவென்டியத் செஞ்சுரி-⁠ன்படி, “சுற்றுலாப் பயணிகளின் நாடுகளிலும்சரி, அவர்களை வரவேற்கும் நாடுகளிலும்சரி குறிப்பிடத்தக்க பாதிப்புகளை உடையனவாய் இருக்கின்றன.” இந்த பாதிப்புகளில் சில பாதகமானவை. எதை கண்டு களிக்க சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப்பட்டனரோ, அவற்றின் அழகைக் கெடுப்பதிலேயே பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் பாகம் வகித்திருக்கின்றனர்.

இப்போது விளையாடுவதற்கு அதிக நேரமும் ஜனங்கள் கைவசம் இருக்கிறது. அநேகர் விளையாட்டு வீரர்களாக மாறியிருக்கின்றனர். மற்றவர்களோ, தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுக் குழுக்கள், விளையாட்டு வீரர்களின் ஆர்வமிக்க ரசிகர்களாக, சில சமயங்களில் வெறித்தனமான ரசிகர்களாக மாறியிருக்கின்றனர். டெலிவிஷன் வந்த பிறகு, கிட்டத்தட்ட எல்லாருமே விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பது சாத்தியமாகி இருக்கிறது. தேசிய, சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகள் லட்சக்கணக்கான ஆர்வமுள்ள டெலிவிஷன் ரசிகர்களையும் தேடித்தந்திருக்கின்றன.

“இப்போது, மிக அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும், அதிக லாபம் ஈட்டும் வியாபாரங்களுள் ஒன்றாகிய பொழுதுபோக்குத்துறையை விளையாட்டுத்துறையும் சினிமாத்துறையும் சேர்ந்து பிரமாண்டமான அளவில் நிறுவியுள்ளன” என த டைம்ஸ் அட்லஸ் ஆஃப் த டுவென்டியத் செஞ்சுரி குறிப்பிடுகிறது. அநேகருக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்காகிய சூதாட்டம் உட்பட இப்படிப்பட்ட கேளிக்கைகளுக்கு மக்கள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் செலவழிக்கின்றனர். உதாரணமாக, ஐரோப்பிய சமுதாயத்தின் 12-வது மிகப் பெரிய தொழில்துறை சூதாட்டமே என 1991-⁠ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு பட்டியலிட்டுள்ளது. இத்துறையில் மட்டுமே, ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 5,700 கோடி டாலர் பணம் புரளுகிறது.

பொழுதுபோக்கு என்பது இப்போது சர்வசாதாரணமாக ஆகிவிடவே, ஜனங்கள் மெய்சிலிர்க்க வைக்கும் புதுப்புது சாதனைகளை படைப்பதில் இறங்கியுள்ளனர். உதாரணமாக, புதிதாக அறிமுகப்படுத்திய போதைப்பொருட்களின் பிரயோகம் அந்தளவு பிரபலமாகிவிட்டதால், 1990-களின் மத்திபத்திற்குள், அது 50,000 கோடி டாலர் மதிப்புள்ள சட்டவிரோதமான வியாபாரமாக உருவெடுத்தது. ஒரு குறிப்பு சொல்கிறபடி, “உலகிலேயே, மிக அமோக லாபம் ஈட்டித் தரும் ஈடிணையற்ற வியாபாரத்துறையாக” வடிவெடுத்திருக்கிறது.

“கேளிக்கைகளில் மிதமிஞ்சிய நாட்டம்”

உலகையே ஒரு சிறு கிராமம் போல் மாற்றியிருக்கிறது தொழில்நுட்பம். அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், இப்போது உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்களை உடனுக்குடன் பாதிக்கின்றன. “மற்ற நூற்றாண்டுகளிலும் அதிரடி மாற்றங்கள் நேரிட்டன என்பது மெய்யே” என 1970-⁠ல், பேராசிரியர் ஆல்வின் டாஃப்ளர், எதிர்கால திகில் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். “ஆனால், இந்த அதிர்ச்சிகளும் அதிரடி மாற்றங்களும் அந்தச் சமுதாயத்தின், அல்லது அதற்கு அருகில் இருந்த சமுதாயத்தின் எல்லைகளுக்குள்ளேதான் ஏற்பட்டன. அதன் விளைவுகள் அந்த எல்லையை தாண்டி செல்ல தலைமுறைகள், ஏன் நூற்றாண்டுகளும் எடுத்தன. . . . ஆனால், இன்றோ மனித சமுதாயம் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக பின்னிப்பிணைந்து இருக்கிறது. அதனால், ஓர் இடத்தில் ஏற்படும் மாற்றம் உடனடியாக உலகம் முழுவதும் தொற்றுநோய் போல் பரவிவிடுகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களை பாதிப்பதில், சாட்டிலைட் டெலிவிஷன், இன்டர்நெட் போன்றவை பெரும்பங்கு வகிக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் பெரும் செல்வாக்குமிக்க தகவல் தொடர்பு சாதனம் டெலிவிஷனே என சிலர் சொல்கின்றனர். “டெலிவிஷனில் வரும் நிகழ்ச்சிகளைக் குறித்து சிலர் குறைகூறி விமர்சித்தாலும், அதன் சக்தியைக் குறித்து எவருமே தர்க்கம் செய்வதில்லை” என ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டெலிவிஷன் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் ஆட்களைவிட அவை மேம்பட்டவையல்ல. நன்மையான காரியங்களுக்கு ஒருவரை உந்துவிக்கும் சக்தியுடையதாய் இருக்கும் அதேசமயத்தில் தீமையான காரியங்களுக்கும் அது ஒருவரை உந்துவிக்கக்கூடும். வன்முறையும் ஒழுக்கக்கேடும் நிறைந்த ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிகள் ஒருவேளை மக்களுடைய ரசனைக்கேற்றவாறு இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மனித உறவுகளை ஸ்திரமாக்குவதில் தோல்வியே கண்டிருக்கின்றன. மேலும், இவை அநேக சமயங்களில் மனித உறவுகளை துண்டித்து விட்டிருக்கின்றன.

கேளிக்கைகளில் மிதமிஞ்சிய நாட்டம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் நீல் போஸ்ட்மன் மற்றொரு அபாயத்தைக் குறிப்பிடுகிறார்: “கேளிக்கை நிகழ்ச்சிகளை டெலிவிஷன் நமக்கு அளிப்பதில் ஏதும் பிரச்சினையில்லை. ஆனால், கேளிக்கைக்காக தயாரிக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் . . . என்ன நிகழ்ச்சிகளாய் இருந்தாலும்சரி அல்லது எந்தக் கருத்தில் காட்டப்பட்டாலும்சரி, அவை அனைத்தும் நம் இன்பத்திற்காகவும் கேளிக்கைக்காகவும் என்ற நோக்கத்தோடு மட்டுமே அளிக்கப்படுகின்றன.”

ஜனங்கள் இன்பத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்க கொடுக்க, ஆன்மீக காரியங்களுக்கான மதிப்பும் ஒழுக்கமும் தலைகுப்புற சரிந்துவிட்டன. “இருபதாம் நூற்றாண்டின்போது, உலகின் பெரும்பாலான பகுதிகளில் பிரசித்திப் பெற்ற மதம் தன் ஆதிக்கத்தை இழந்திருக்கிறது” என த டைம்ஸ் அட்லஸ் ஆஃப் த டுவென்டியத் செஞ்சுரி குறிப்பிடுகிறது. ஆன்மீக காரியங்களில் ஆர்வம் தணிந்து போகவே, அளவுக்கு அதிகமாக, மிதமிஞ்சிய வகையில் இன்பத்தை நாடுதல் வாழ்க்கையின் பிரதான நோக்கமாயிற்று.

“மின்னுவதெல்லாம் . . . ”

ஆக்கபூர்வமான மாற்றங்கள் அநேகம் இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு அம்சம். ஆனால், ஒரு பழமொழி சொல்லுகிறபடி, “மின்னுவதெல்லாம் பொன்னல்ல.” மனிதனின் ஆயுட்காலம் அதிகமாகி இருப்பதால் அநேகர் நன்மை அடைந்திருக்கின்றனர். ஆனால், அதேசமயம் உலக மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, மலைபோன்ற புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. “புதிய ஆயிரமாண்டில் கால்பதிக்க இருக்கும் இந்த சமயத்தில், ஒருவேளை நாம் எதிர்ப்படும் மிக முக்கியமான பிரச்சினை மக்கள் தொகை பெருக்கமே” என நேஷனல் ஜியோக்ராஃபிக் பத்திரிகை சமீபத்தில் குறிப்பிட்டது.

மோட்டார் வாகனங்களை வைத்திருத்தல் பயன் அளிப்பவை, மகிழ்ச்சி அளிப்பவை. ஆனால், அதேசமயம் ஆபத்தானவையும்கூட. உலகம் முழுவதும் விபத்துகளில் ஆண்டொன்றுக்கு 2,50,000 பேர் சாகின்றனர் என்ற கணக்கெடுப்பே இதற்கு தகுந்த நிரூபணம். தூய்மைக்கேடு என்பது “இப்போது உலகப் பிரச்சினை. அது, ஒரு துருவத்தில் இருந்து மறு துருவம் வரையாக சுற்றுப்புறச் சூழலை அழிக்கிறது அல்லது அதன் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது” என கிரகத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்கள் சொல்கின்றனர். “வெறுமனே சுற்றுப்புறச் சூழலை மட்டுமே நாசப்படுத்துவதற்கும் மிஞ்சி காரியம் சென்றுவிட்டது. மனித இனமே இந்த பூமியில் வாழமுடியாத அளவுக்கு இயற்கையின் சுழற்சியே இப்போது தகர்த்தெறியப்பட்டு இருக்கிறது” என அவர்கள் விளக்குகின்றனர்.

முந்தைய நூற்றாண்டுகள் மிக அரிதாக அறிந்த தூய்மைக்கேடு எனும் பிரச்சினை இருபதாம் நூற்றாண்டின்போது மாபெரும் அளவில் தலைதூக்கி இருக்கிறது. “சமீப காலம் வரை, மனித செயல்கள் இந்த பூமியை உலகளாவிய விதத்தில் இந்தளவு பாதிக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை” என நேஷனல் ஜியோக்ரஃபிக் குறிப்பிடுகிறது. “ஆனால், சரித்திரத்திலேயே முதன்முறையாக இப்போதுதான் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றனவென சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.” மேலும் “மனித குலத்தின் தாக்குதல் சுற்றுப்புறச் சூழல்மீது அந்தளவு பயங்கரமாக இருப்பதால், ஒரே ஒரு தலைமுறையிலேயே எல்லா உயிரினங்களும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடலாம்” என அந்தப் பத்திரிகை எச்சரிக்கிறது.

இருபதாம் நூற்றாண்டு, உண்மையிலேயே ஈடிணையற்ற ஒரு நூற்றாண்டுதான். மக்கள் நல்லதோர் வாழ்க்கையை அனுபவித்து மகிழ முன்னொருபோதும் இராத அளவு வாய்ப்புகளை இந்த நூற்றாண்டு அள்ளித்தந்திருக்கிறது. ஆனால், இப்போதோ வாழ்க்கையே ஆபத்தில் இருக்கிறது அல்லது அதோகதியாகி விட்டது!

[பக்கம் 8, 9-ன் அட்டவணை/படங்கள்]

(For fully formatted text, see publication)

1991

அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்ற முதல் ரேடியோ அலைகளை மார்கோனி அனுப்புதல்

1905

ஐன்ஸ்டீன் தன்னுடைய சிறப்புமிக்க சார்பியல் கோட்பாட்டை பிரசுரித்தல்

1913

ஃபோர்ட் தன்னுடைய மாடல்-T கார் தொழிற்சாலையில் சங்கிலிமுறை உற்பத்தியை துவக்குதல்

1941

வர்த்தக டெலிவிஷன் ஜனித்தல்

1969

சந்திரனில் மனிதன்

மெகா சைஸ் சுற்றுலாத்துறை மெகா பிஸினஸ் ஆகுதல்

இன்டர்நெட் சாம்ராஜ்யம்

1999

உலக மக்கள் தொகை 600 கோடியை எட்டுதல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்