போர் எதிர்காலத்தில் என்ன செய்யும்?
“கடந்த 4,000 வருடகாலமாக நடத்தப்பட்ட சோதனைகளினாலும் திரும்பத் திரும்ப நடந்ததாலும் போர் செய்தல் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது” என்று இராணுவ வரலாற்றாசிரியர் ஜான் கீகன் தெரிவித்தார். இந்த பழக்கத்தை வேரோடு பிடுங்கி எறிய முடியுமா? இந்தக் கொடுமையான போர்கள் எண்ணிலடங்கா உயிர்களை கபளீகரம் செய்துவிட்டன. அளவுக்கதிகமான ஆற்றலும், அதிகளவான வளங்களும் இந்த போர்களை தாலாட்டி சீராட்டி வளர்த்துள்ளன. உயிர்களை கொல்லுவதற்கும் அழிப்பதற்கும் புதிய புதிய சிறந்த முறைகளை கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அநேக அறிவாளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே சமயத்தில், மனிதர்கள் சமாதானத்தை முன்னேற்றுவிக்க இதே ஆர்வத்தைக் காட்டுகிறார்களா? இல்லை என்பதே பதில்! இருப்பினும், எப்படியும் கடைசியில் நன்மையே விளையும் என்பதற்கு ஓரளவான ஆதாரங்கள் இருப்பதாக அநேகர் கவனமாக நியாயம் காட்டுகிறார்கள்.
விரயத்திற்கு மறுபெயர்—போர்
அவர்களுடைய இந்தக் கருத்து, நாகரிகமான மக்கள் முன்பு போரை கருதியது போல இன்று கருதுவதில்லை என்ற நம்பிக்கையின் பேரில் சார்ந்துள்ளது. “ஒருவனுடைய எதிரிகளை வீழ்த்துவதிலும், அவர்களை விரட்டியடிப்பதிலும், அவர்களுடைய சொத்துக்களை அபகரித்துக்கொள்வதிலும், அவர்களுடைய துன்பத்தில் சந்தோஷப்படுவதிலும், அவர்களுடைய மனைவிகளையும் பெண்களையும் கற்பழிப்பதிலுமே மகிழ்ச்சியுள்ளது” என்று 13-ம் நூற்றாண்டின், மங்கோலிய வீரனான செங்கிஸ் கான் சொன்னதாக பதிவுகள் காட்டுகின்றன.
இன்று எந்த உலகத் தலைவராவது இப்படிப்பட்ட ஒரு கூற்றைச் சொல்வாரா? அதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது! எ ஹிஸ்டரி ஆஃப் வார்ஃபேர் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது: “போர் என்ற செயல் நியாயப்படுத்தக்கூடியதே என்ற கருத்துக்கு நியாயமான ஆதாரங்களை இன்று கொடுப்பது மிக அரிது. அது உலகத்தின் எந்த பாகமாக இருந்தாலும் சரி.” போர் ஏதோ இயற்கையான, இயல்பான, மதிப்பிற்குரிய அல்லது உயர்வான ஒன்றாக இன்று கருதப்படுவதில்லை. மணல் தரைகளை இரத்த ஆறாக மாற்றியிருக்கும் இந்த 20-ம் நூற்றாண்டு போர்கள், மனிதவர்க்கத்தை திகிலில் ஆழ்த்தியிருப்பது மட்டுமல்லாமல், மனிதரின் கடும் வெறுப்பையும் சம்பாதித்துள்ளன. வன்முறைமீதுள்ள இந்த கடும் வெறுப்பு, அநேக நாடுகளில் மரண தண்டனையை முற்றிலுமாக நீக்கியிருப்பதிலும், இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்பவர்கள்மீது அனுதாபத்தையும் அதிகரித்திருக்கிறது என ஒரு எழுத்தாளர் விளக்கினார்.
மனிதர்கள் கொன்று குவிக்கப்படுவது பற்றிய கடும் வெறுப்பு மட்டுமே மக்களுடைய எண்ணங்களின் மாற்றத்திற்கான ஒரே காரணம் அல்ல. முக்கியமான ஒன்றாகிய தற்காப்பு உணர்வும் ஒரு காரணமாகும். நவீன ஆயுதங்களாகிய அணு ஆயுதங்கள் அல்லது அவையல்லாத மற்ற ஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவுகள் மிக பயங்கரமானவை. இன்று இரண்டு பெரிய வல்லரசு நாடுகளுக்கிடையில் இந்த ஆயுதங்களைக் கொண்டு போர் நடக்குமேயானால் அவை ஒருவேளை பரஸ்பர அழிவிலேயே முடிவடையும். பெரிய அளவிலான போர்களை துவக்குவது உண்மையில் பைத்தியக்காரத்தனம், தற்கொலைக்கு சமம். அந்த நம்பிக்கையே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தியிருக்கிறது என அநேகர் வாதாடுகிறார்கள்.
எதிர்காலத்தைப் பற்றி சிலர் வேறுவிதமாய் சிந்திப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இப்படிப்பட்ட பெரிய அளவிளான போர்கள் வெறும் விரையமே என்ற கருத்துக்கான காரணம் எல்லாவற்றையும் இழந்து விடக்கூடும் என்பதால் மட்டுமல்ல ஆனால் இந்த போர்களினால் கிடைக்கும் வெற்றி சாதிப்பது மிகக் குறைவே என்பதால். இப்படிப்பட்ட பெரியளவான போர்களை எதிர்த்து பொருளாதாரமும் குரல் கொடுக்கிறது. அதன் விவாதத்தை சற்று கேளுங்கள்: உலகத்திலுள்ள பணக்கார நாடுகளும் வல்லரசு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பினால் பெரிதும் பலனடைகின்றன. சாதாரணமாக சமாதானம் இருக்கும்போது, இந்த தேசங்கள் அனுபவிக்கும் பொருளாதார நன்மைகள் ஏராளம்; அவற்றை போர்களால் வரும் எதனுடனும் ஒப்பிடவே முடியாது. ஆகவே, வளமுள்ள சக்தி படைத்த நாடுகள் தங்களுக்குள் சமாதானத்தை காத்துக்கொள்ள நியாயமான காரணம் இருக்கிறது. கூடுதலாக, சிறிய நாடுகளுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு அதனால் இப்போது இருந்துவரும் பொருளாதார நிலை பயமுறுத்தப்பட்டால் இந்த நாடுகள் உடனே கூட்டு சேர்ந்து நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்ட வேண்டும்.
சமாதானத்திற்கு உலகளாவிய முயற்சி
போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற விருப்பம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஆரம்ப குறிப்புரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே உறுப்பு நாடுகள் எடுத்துக்கொண்ட தீர்மானத்தை நாம் இவ்வாறு வாசிக்கிறோம் “நம் வாழ்நாளில் இருமுறை [இரண்டு உலக யுத்தங்களினால்] மனிதகுலத்தை சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கிய போர்ப்பிணியினின்று வருங்கால சந்ததியினரை மீட்க” வேண்டும். போரிலிருந்து வருங்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டும் என்ற தீர்மானம், கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் கோட்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டது— வம்புச்சண்டைக்கார நாடு என்று முத்திரை குத்தப்படும் நாட்டிற்கு எதிராக மற்ற நாடுகளை கூட்டுவதே இந்த அமைப்பின் நோக்கம். ஆக, எந்த நாடாவது போரை ஆரம்பிக்க விரும்பினால், அது சர்வதேச சமுதாயத்தின் கோபத்திற்கு இரையாகும்.
இதன் நோக்கம் என்னவோ எழுத்து வடிவில் எளிமையாகவும் நியாயமாகவும் இருந்தபோதிலும், அதை செயல்படுத்துவது என்பது இயலாத விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது: “இந்த கூட்டுப் பாதுகாப்புக் குழு, பல்வேறுபட்ட அம்சங்களில் செயல்பட்டிருக்கிறது. சர்வதேச சங்கத்தின் ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய பாகத்தை வகித்திருக்கிறது, அதேபோல ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் இருந்து வந்திருக்கிறது, ஆனால் எந்த பயனுமில்லை இந்த இரண்டு அமைப்புகளிலும் இது தோல்வியையே தழுவியது. பிரச்சினைகளை குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமுடைய ஒரு சர்வதேச அரசாங்கம் இல்லாததால், போர் மூளுவதற்கு காரணமான நாடு இதுதான் என்று தீர்மானிக்கும் காரணக்கூறுகளை நாடுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளவேயில்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் சரி அவர்களுடைய சண்டைபோடும் சுபாவத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படாததால், சாசனத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு அந்த சர்வதேச கூட்டு பாதுகாப்புக் குழு வெற்றியடையவில்லை.”
இருப்பினும், சமாதானத்தை முன்னேற்றுவிக்க, தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்கும் எண்ணம் மனித விவகாரங்களில் ஒரு வித்தியாசமான புதிய முயற்சியாகும். சமாதானத்திற்காக வழிமீது விழி வைத்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நீல நிற தொப்பியணிந்திருக்கும் ஐநா அமைதிகாக்கும் குழுவின் வீரன் ஒரு நம்பிக்கை சின்னமாகவே இருந்து வருகிறான். “சமாதானத்தின் வீரன் சண்டைக்கு பெயர்போன இடங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பது, சண்டைபோட அல்ல ஆனால் சமாதானத்தை முன்னேற்றுவிக்கவே, எதிரிகளுடன் போராட அல்ல ஆனால் நண்பர்களுக்கு உதவவே” என்று பாராட்டிய ஒரு எழுத்தாளரின் உணர்வுகளையே அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
பனிப்போர் அநேக பத்தாண்டுகளாக ஐநாவை இரண்டு பெரிய சக்திவாய்ந்த கூட்டணிகளாக பிரித்திருக்கிறது. இவற்றில் ஒன்று எதை சாதிக்க முயற்சிக்கிறதோ அதை முறியடிப்பதே மற்றதன் நோக்கமாக இருந்திருக்கிறது. இந்தப் பனிப்போரின் முடிவு தேசங்களிடையே உள்ள சண்டைகளையும், அவநம்பிக்கைகளையும், சந்தேகங்களையும் குழி தோண்டி புதைக்கவில்லை என்றபோதிலும், ஐநா எந்த நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டதோ அதன்படி செயல்பட இன்றுள்ள அரசியல் செயல்பாடுகள் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இப்போது வாய்ப்புகளை கொடுக்கிறது என்று அநேகர் நம்புகின்றனர்.
இந்த இருபதாம் நூற்றாண்டின் மற்ற வளர்ச்சிகளும்கூட சமாதானத்திற்காக தவமிருப்பவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. உதாரணமாக, உலகளாவிய நல்லுறவின் அடிப்படை இலக்கு நாடுகளுக்கிடையேயுள்ள சச்சரவுகளை சமாதானமாக தீர்த்துக்கொள்வதே ஆகும். மனிதாபிமான உதவிகள், அநேக தேசங்கள் மற்ற மோசமான நிலையிலுள்ள நாடுகளை சீர்படுத்தி முன்னிலைக்கு கொண்டுவரவும் மேலும் போர் என்ற சூறாவளியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு சிறந்த உதவியாகவும் இருந்திருக்கின்றன. சமாதானத்தை உண்டுபண்ணுதலும் மனிதாபிமானமும் அயல்நாட்டுக் கொள்கையின் ஆக்கக்கூறுகளாக இருக்கின்றன. சமாதானத்தை முன்னேற்றுவிப்பவர்கள் இப்போது அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.
எதிர்காலப் போரின் நிஜ உருவம்
எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தாலும், இருட்டான அதன் மறுபக்கத்தையும் பார்த்து உங்கள் நம்பிக்கையை அத்துடன் சமநிலைப்படுத்த வேண்டும். 1989-ல் பனிப்போர் முடிவடைந்தபோது அநேகர் சமாதானமான உலக நிலை வருமென்று நம்பிக்கையாய் இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது, போர் தொடர்ந்தது. அதற்கு அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே கணக்கிடப்பட்ட சுமார் 101 சண்டைகள் வெவ்வேறு இடங்களில் சீறி எழுந்தன. அவற்றில் பெரும்பாலான போர்கள் நாடுகளுக்கிடையே அல்ல ஆனால் நாடுகளுக்குள்ளேயே நடந்தவை. அவை சாதாரண போர்க் கருவிகளைக் கொண்டு எதிரி குழுக்களால் நடத்தப்பட்ட சண்டைகளேயாகும். உதாரணமாக ருவாண்டாவில், பெரும்பாலான கொடுங்கொலைகள் சாதாரண வெட்டுக் கத்திகளாலேயே நடந்தவை.
பெரும்பாலும் இப்போதுள்ள நகரங்களும் கிராமங்களுமே இக்காலத்து போர்க்களங்கள், இப்போது போர் வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் ஒருசில வித்தியாசங்களே இருக்கின்றன, சில சமயம் வித்தியாசங்களே இல்லாமல் ஆகிவிடுகின்றன. சர்வதேச சமாதானத்தை உண்டுபண்ணும் மையத்தின் இயக்குநர் மிகேல் ஃஹார்போட்டில் எழுதுகிறார்: “முற்காலங்களிலெல்லாம் சண்டைகள் மூளுவதற்கான அறிகுறிகளையும் காரணங்களையும் முன்னதாகவே ஒருவேளை சொல்லக்கூடும், ஆனால் இப்போதோ அவை மிக குழப்பமாயும் கட்டுப்படுத்துவதற்கு மிகக் கடினமாயும் இருக்கின்றன. இந்த சண்டைகள், தன்னுடன் கூடவே கூட்டிவரும் உயிர்த்தோழனான வன்முறையின் அளவை நினைத்துக்கூட பார்க்க முடியாததாயும் மொத்தத்தில் முட்டாள்தனமானதாயும் இருக்கிறது. மரணத்தின் வாசலில் நின்று போர்புரியும் வீரர்களைப்போலவே பொது மக்களும் கொல்லப்படும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.” இப்படிப்பட்ட சாதாரண கருவிகளைக் கொண்டு நடக்கும் சண்டைகள் முடிவுறுவதற்கு மிகக் குறைவான அறிகுறிகளே உள்ளன.
அதே சமயத்தில், உலகிலுள்ள செல்வச் செழிப்பான நாடுகளில், நவீன தொழில்நுட்பமிக்க ஆயுதங்கள் தொடர்ந்து வேகமாய் வளர்ந்து வருகின்றன. சென்சார்கள்—காற்றில் பறந்து கொண்டிருந்தாலும், விண்ணில் தவழ்ந்து கொண்டிருந்தாலும், கடலில் மிதந்து கொண்டிருந்தாலும், தரையில் நின்று கொண்டிருந்தாலும் எங்கிருந்தாலும் சரி—அடர்ந்த காடுகளைப் போன்ற கடுமையான நிலப் பகுதிகளைக்கூட இக்காலத்து போர்ப் படையினர் முன்பு எப்பொழுதையும்விட இப்போது மிக விரைவாகவும், மிகத் துல்லியமாகவும் பார்க்க உதவுகின்றன. சென்சார்கள் தன் இலக்கை குறிபார்த்த பிறகு ஏவுகணைகள், நீர்மூழ்கிக்குண்டு, அல்லது லேசர் மூலம் இயக்கப்படும் வெடி குண்டுகள் அந்த இடத்தை துல்லியமாக தாக்கி அழித்துவிடும். இந்தப் புதிய தொழில் நுட்பங்கள் முழுமையாக்கப்பட்டும் ஒருங்கிணைக்கப்பட்டும் இருப்பதால், “தொலைதூர போர்” உண்மையிலேயே நடைபெறும் ஆபத்து நெருங்கி வருகிறது. இதனால் ஒரு போர்ப் படை எல்லாவற்றையும் பார்க்கவும், எல்லாவற்றையும் தாக்கவும், அதன் எதிரியிடமிருக்கும் அநேகத்தை அழிக்கவும் வாய்ப்புகளை அளிக்கும்.
எதிர்காலத்தில் போர் நடக்கும் ஆபத்தைப்பற்றி நாம் சிந்திக்கும்போது, பயங்கரமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது. த ஃப்யூச்சரிஸ்ட் என்ற பத்திரிகை இவ்வாறு முன்னறிவிக்கிறது: “அணு ஆயுதங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால் அடுத்த 30 ஆண்டுகளில் ஒருவேளை ஒன்று அல்லது அதற்கு அதிகமான அணு ஆயுதப்போர்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கூடுதலாக, அணு ஆயுதங்களை தீவிரவாதிகள்கூட பயன்படுத்தக்கூடும்.”
பிரச்சினைதான் என்ன?
உலகளாவிய சமாதானத்தை அடைய எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றையும் எது தோற்கடித்திருக்கிறது? இதற்கான ஒரு முக்கிய காரணம் மனித குடும்பம் பிரிவுற்றிருப்பதேயாகும். ஒன்றுக்கொன்று அவநம்பிக்கை, வெறுப்பு அல்லது பயம் போன்றவற்றை கொண்டிருக்கும் தேசங்களும் பண்பாடுகளுமாக மனிதகுலம் சுக்கு நூறாக சிதறியிருக்கிறது. ஒன்றோடொன்று ஒத்துப்போகாத பண்புகளும் உள்ளுணர்வுகளும் நோக்கங்களும் ஜனங்களிடம் இருக்கின்றன. கூடுதலாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேசிய அக்கறைகளை முன்னேற்றுவிக்க இராணுவ பலத்தை பயன்படுத்துவதே நியாயமான வழியாக கருதப்பட்டுவருகிறது. இந்த நிலையை ஒத்துக்கொண்ட பிறகு, ஐ.மா. இராணுவ படைக்களப் பயிற்சிக் கல்லூரியின் போர் சார்ந்த கல்வி மையத்தின் ஒரு அறிக்கை சொல்கிறது: “ஒரு உலக அரசாங்கம் வந்தால்தான் சமாதானம் வரும் என்று இந்த சூழ்நிலை அநேகரை உணரச்செய்திருக்கிறது.”
ஒருவேளை ஐக்கிய நாடுகள் அந்த ஒரே அரசாங்கமாக இருக்கலாம் என்று சிலர் நினைத்திருக்கின்றனர். ஆனால் ஐநா ஒரு உலக அரசாங்கமாக அதன் உறுப்பு நாடுகளைவிட அதிகமான வல்லமையுடையதாக இருக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கப்பட்டதேயில்லை. அதன் உறுப்பு நாடுகள் அதற்கு எவ்வளவு வல்லமை கொடுக்கிறார்களோ அவ்வளவே அதன் வல்லமை. அந்த உறுப்பு நாடுகளுக்கிடையில் சந்தேகங்களும் கருத்து வேறுபாடுகளும் இன்னும் நிலவி வருவதால் ஐநா-விற்கு அவர்கள் கொடுக்கும் வல்லமை மிகக் குறைவே. அதனால், இந்த ஐநா சர்வதேச அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக, அதன் பிரதி பிம்பமாக மட்டுமே செயல்படுகிறது.
எப்படியிருந்தாலும், உலகளாவிய சமாதானம் இந்த பூமியில் நிச்சயம் வரும். அது எப்படி நடக்கும் என்பதை அடுத்த கட்டுரை சொல்லும்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“மனிதவர்க்கம் போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லது போர் மனிதவர்க்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.”—ஜான் எஃப். கென்னடி
[பக்கம் 7-ன் படம்]
ஐநா ஓர் உலக அரசாங்கமாக ஆகவில்லை
[படத்திற்கான நன்றி]
UN photo