போர் என்ற பயங்கரம்
இங்கிலாந்து, லண்டனில் உள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தை பார்க்க வருபவர்களால், அங்கிருக்கும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த கடிகாரத்தையும் எண்காட்டியையும் பார்த்து ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை. ஆனால், இது ஒரு நேரங்காட்டும் கடிகாரம் அல்ல. இந்த நூற்றாண்டை அதிகமாக பாதிக்கும் ஒரு முக்கிய அம்சத்தின் ஆழத்தை மக்கள் புரிந்து கொள்ள உதவிசெய்வதே இந்த கடிகாரத்தின் நோக்கம். அதுவே போர். அந்த கடிகாரத்தின் முள் சுற்றிவர, ஒவ்வொரு 3.31 வினாடிகளுக்கும் ஒரு எண்ணை எண்காட்டி கூட்டிக்கொள்கிறது. அதில் கூட்டப்படும் ஒவ்வொரு எண்ணும் இந்த இருபதாம் நூற்றாண்டில் போரின் விளைவாக இறந்திருக்கும் ஒரு ஆண், பெண் அல்லது குழந்தையை குறிக்கிறது.
இந்த எண்காட்டி ஜூன் 1989-ல் தன் வேலையைத் துவங்கியது. இந்த வேலையை 1999, டிசம்பர் 31-ன் நள்ளிரவில் முடிக்கும். அப்போது, கடந்த 100 ஆண்டுகளாக போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குறைந்தபட்ச மதிப்பீடாக சுமார் பத்து கோடியை பதிவு செய்திருக்கும்.
சற்று கற்பனை செய்து பாருங்கள்—பத்து கோடி மக்கள், சாதாரண விஷயமா என்ன! அந்த எண்ணிக்கை ஏறக்குறைய இங்கிலாந்தின் ஜனத்தொகையைவிட இருமடங்கிற்கும் அதிகம். இருப்பினும், அந்த புள்ளிவிவரம் போரில் பலியானவர்கள் அனுபவித்த பீதியையோ வேதனையையோ ஒன்றையுமே சொல்வதில்லை. இவ்வாறு பலியானவர்களின் உறவினர்கள்—எண்ணிலடங்கா கோடிக்கணக்கான அம்மாக்கள், அப்பாக்கள், சகோதரிகள், சகோதரர்கள், விதவைகள், அனாதைகள் அனுபவிக்கும் கடுந்துயரத்தை துன்பத்தை பற்றியும்கூட இப்படிப்பட்ட புள்ளிவிவரம் ஒன்றுமே விவரிப்பதில்லை. ஆனால் இந்த புள்ளிவிவரம் நமக்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறது: நம் நூற்றாண்டு, மனித சரித்திரத்திலேயே மிக உயர்ந்த, அதிகபட்ச அழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காட்டுமிராண்டித்தனத்திற்கு நிகரே இல்லை.
உயிர் குடிக்கும் கலையில் மனிதகுலத்தவர் எந்தளவுக்கு வல்லுநர்களாகி இருக்கிறார்கள் என்பதற்கு நம்முடைய இருபதாம் நூற்றாண்டே ஓர் அத்தாட்சி. கடந்த கால சரித்திரத்தினூடே ஆமை வேகத்தில் இருந்த புதிய போர்க் கருவிகளின் கண்டுபிடிப்பு, இந்த 20-ஆம் நூற்றாண்டில் மின்னல் வேகத்தில் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவு போர்க்கருவிகள் குவிக்கப்பட்டுள்ளன. 1914-ல் முதல் உலக யுத்தம் துவங்கியபோது, ஐரோப்பிய இராணுவப் படையில் குதிரை வீரர்கள் இருந்தனர்; அவர்கள் கையிலோ ஈட்டிதான் இருந்தது. ஆனால் இன்றோ சாட்டிலைட் சென்சார்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதவியால் இயக்கப்படும் ஏவுகணைகள் உலகத்தின் எந்த மூலைமுடுக்காக இருந்தாலும், வியக்கவைக்கும் விதத்தில் துல்லியமாக அதன் இலக்கை தாக்கி மரணத்தை பரிசாக கொடுக்கும். துப்பாக்கிகள், டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள், நோய் கிருமிகளைப் பரப்பும் ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள், அனைவரும் அறிந்த “அணுகுண்டு” போன்ற இவற்றின் முன்னேற்றத்தையும் திறமையையும் இந்த இடைப்பட்ட ஆண்டுகள் பார்த்திருக்கின்றன.
இதில் வேடிக்கை என்னவெனில், மனிதகுலத்தவர் போர் செய்வதில் வல்லுநர்களாக ஆகிவிட்டனர்; அதனால் போர் என்ற வெறிபிடித்த விளையாட்டை மனிதவர்க்கத்தால் தாங்க முடியாத நிலை இப்போது ஏற்பட்டுவிட்டது. ஃபிரேங்கென்ஸ்டேயின் என்ற கற்பனை கதையில், ஒரு கோர மிருகம் அதை உருவாக்கியவரையே அழித்துவிடுகிறது. அதுபோலவே இன்றும், போருக்கு அவ்வளவு சக்தியை கொடுத்தவர்களையே, போர் அழித்துவிடுவேன் என்று பயமுறுத்துகிறது. இந்த போர் எனும் கொடிய அரக்கனை கட்டுப்படுத்த அல்லது அழிக்க முடியுமா? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்வியை ஆராயும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo
U.S. Coast Guard photo
By Courtesy of the Imperial War Museum