பைபிளின் கருத்து
உத்தம குடிமகன் யார்?
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு, ஐரோப்பாவிலும் ஜப்பானிலும், தான் சட்டத்திற்கு கீழ்ப்படியும் ஒரு நல்ல குடிமகன் என்று நினைத்துக் கொண்டிருந்த அநேகர் போர்க் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டனர். அவர்களுள் உயர்ந்த பதவிகளில் இருந்த இராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள் ஆகியோரும் உள்ளடங்குவர். இந்த குற்றவாளிகள் தாங்கள் செய்ததை நியாயப்படுத்தும் முயற்சியில், ஒரு நல்ல குடிமகனிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதை போலவே தாங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவுகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்ததாக விளக்கம் அளித்தனர். இருப்பினும், இவர்கள் தங்களை நல்ல குடிமகன்கள் என்று உரிமை பாராட்டிக்கொண்டு செய்த கொடூரமான செயல்கள், மனிதவர்க்கத்திற்கு எதிரான பயங்கர குற்றங்கள் என நிரூபிக்கப்பட்டன.
ஆனால் மறுபக்கத்தில், அவர்கள் இருக்கும் நாட்டினுடைய அதிகாரத்தை கொஞ்சம்கூட மதிக்காத ஆட்களும் இருக்கின்றனர். சிலர் வெளிப்படையாகவே அரசாங்க அதிகாரங்களை மீறுகின்றனர், இன்னும் சிலர் தாங்கள் மாட்டிக்கொள்ள அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாதபோது சட்டங்களை மீற காத்துக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அதிகாரங்களுக்கு கீழ்ப்படியவில்லை என்றால் ஒழுங்கின்மையும் குழப்பமுமே மிஞ்சும், அதனால் கீழ்ப்படிதல் தேவை என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றனர். இந்த உண்மையை மறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும், இப்போது கேள்வி என்னவெனில், ஒருவன் குடிமகனுக்குரிய கடமைகளை எந்தளவுக்கு நிறைவேற்ற வேண்டும், சட்டங்களுக்கு எந்தளவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதே. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், அவர்கள் இருந்த நாட்டிற்குரிய கடமைகளை பற்றி சமநிலையான கருத்தை கொண்டிருந்தனர், அவ்வாறு இருப்பதற்கு அவர்களுக்கு உதவிய சில அடிப்படை நியமங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
அதிகாரங்களுக்கு கிறிஸ்தவ கீழ்ப்படிதல்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ‘மேலான அதிகாரங்களுக்கு’—அப்போது இருந்த அரசியல் ஆட்சிகளின் சட்டங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் தங்களை மனமுவந்து கீழ்ப்படுத்தினார்கள். (ரோமர் 13:1) “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிரு”ப்பது சரியானதே என கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். (தீத்து 3:1) அவர்கள் கிறிஸ்துவை தங்களுடைய பரலோக ராஜாவாக ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், அந்த மனித ஆட்சியாளர்களின் சட்டங்களுக்கு கீழ்ப்படியும் குடிமக்களாக, தாங்கள் இருந்த நாட்டின் பாதுகாப்பை எந்தவிதத்திலும் அச்சுறுத்தாதவர்களாக இருந்தனர். அவர்கள் எப்பொழுதும் “ராஜாவைக் கனம்பண்ணு”ம்படியாகக்கூட உற்சாகப்படுத்தப்பட்டனர். (1 பேதுரு 2:17) அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.”—1 தீமோத்தேயு 2:1, 2.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடம் எந்தவிதமான வரி கேட்கப்பட்டபோதிலும், சில சமயம் அந்த வரி, கட்டுவதற்கு மிக பாரமான சுமையாக இருந்தபோதிலும் தங்களுடைய மனசாட்சிக்கிணங்க அதைக் கட்டினார்கள். இந்த விஷயத்தில் பவுல் கொடுத்த ஏவப்பட்ட வழிநடத்துதலை அவர்கள் பின்பற்றினார்கள்: “யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியை செலுத்துங்கள்.” (ரோமர் 13:7) இயேசுவின் சீஷர்களுடைய கண்ணோட்டத்தில், அந்த ரோம அரசாங்கமும் அதன் உயர் அதிகாரிகளும் கடவுளின் அனுமதியின் அடிப்படையில் ஆண்டுவந்தனர். வேறுவிதத்தில் சொல்லப்போனால் சமுதாயத்தில் ஓரளவுக்கு அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொடுக்கும் ‘கடவுளுடைய பொது ஊழியர்களாக’ சேவை செய்தனர்.—ரோமர் 13:6, NW.
‘சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தம்’
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இருந்த நாடுகளின் அரசாங்கங்கள் அவர்கள் மீது சுமத்திய கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு உற்சாகப்படுத்தப்பட்டனர். அரசாங்க அதிகாரங்கள் அவர்களிடம் குறைவாக கேட்டாலும்கூட கேட்டதைவிட அதிகத்தை செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கும்படி இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு அறிவுறுத்தினார். ‘அதிகாரத்திலுள்ள ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வந்து சேவை செய்ய பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ’ என்று சொன்னார். (மத்தேயு 5:41, NW) இந்த அறிவுரையை பின்பற்றி, தாங்கள் இந்த சமுதாயத்திற்காக எதையுமே செய்யாமல் இந்த நாகரிகமான சமுதாயத்தில் வாழ்ந்து நன்மைகளை அனுபவிக்க விரும்பவில்லை என்பதை கிறிஸ்தவர்கள் தங்களுடைய நடத்தையில் காட்டினார்கள். அவர்கள் எப்பொழுதும் “சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிரு”ந்தார்கள்.—தீத்து 3:1; 1 பேதுரு 2:13-16.
அவர்களுடைய அயலகத்தார் மீது உண்மையான அன்பை வெளிப்படுத்தினர், அவர்களுக்கு உதவி செய்ய ஆவலாய் இருந்தனர். (மத்தேயு 22:39) இந்த உண்மையான அன்பினாலும், உயர்ந்த ஒழுக்க தராதரத்தை உறுதியாய் கடைப்பிடித்ததாலும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அந்த சமுதாயத்தின்மீது நன்மைக்கேதுவான முறையில் செல்வாக்கு செலுத்தினர். அவர்களுடைய அயலகத்தார், ஒரு கிறிஸ்தவரின் பக்கத்து வீட்டுக்காரன் என்று சொல்லி பூரிப்படைவதற்கு அநேக காரணங்கள் இருந்தன. (ரோமர் 13:8-10) வெறும் தீமை செய்யாமல் இருந்துவிடுவதைவிட அதிகத்தை செய்வதன் மூலம் கிறிஸ்தவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். இயேசு கிறிஸ்து செய்ததைப்போல, அவர்கள் முன்சென்று “யாவருக்கும் [விசுவாச குடும்பத்தாருக்கு மட்டுமல்ல] நன்மை செய்ய” மற்றவர்களைப் பற்றிய எப்போதும் அக்கறை காட்ட உற்சாகப்படுத்தப்பட்டனர்.—கலாத்தியர் 6:10.
மனுஷரைப்பார்க்கிலும் தேவனுக்கே கீழ்ப்படியுங்கள்
இருப்பினும், இவ்வுலக அதிகாரங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிவதில் வரம்புகளும் இருந்தன. தங்களுடைய மனசாட்சிக்கு எதிராகவோ அல்லது கடவுளோடு தங்களுக்கு இருக்கும் உறவை பாதிக்கும் எதையுமே அவர்கள் செய்யமாட்டார்கள். உதாரணமாக அப்போஸ்தலர்கள், எருசலேமிலிருந்த மதத்தலைவர்கள் இயேசுவைப் பற்றி பிரசங்கிப்பதை நிறுத்தும்படி உத்தரவிட்டபோது, அதற்கு இணங்க மறுத்துவிட்டனர். “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று அவர்கள் தைரியமாய் முழங்கினார்கள். (அப்போஸ்தலர் 5:27-29) கிறிஸ்தவர்கள், விக்கிரகாராதனையான பேரரசர் வணக்கத்தில் ஈடுபட உறுதியாய் மறுத்துவிட்டனர். (1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 5:21; வெளிப்படுத்துதல் 19:10) அதன் விளைவுகள் என்ன? “ கண்டனங்கள் அவர்களை நிழலாய் தொடர்ந்தன, அது அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததனால் அல்ல, ஆனால் சட்டம் கட்டளையிட்டதை செய்ய மறுத்ததே அதற்கு காரணம்” என்கிறார் வரலாற்றாசிரியர் ஜே. எம். ராபர்ட்ஸ்.—ஷாட்டர் ஹிஸ்டரி ஆஃப் த உவர்ல்ட்.
அவர்கள் இந்த சமயத்தில் ஏன் ‘சட்டம் கட்டளையிட்டதை செய்ய மறுத்தனர்’? “மேலான அதிகாரங்கள்” கடவுளுடைய அனுமதியால் அதிகாரத்தை பெற்றுக் கொண்டு சட்டத்தையும் ஒழுங்கையும் காத்துவர “தேவ ஊழியக்காரராக” சேவை செய்கின்றனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். (ரோமர் 13:1, 4) இருப்பினும் கிறிஸ்தவர்கள், கடவுளுடைய சட்டங்கள் அவற்றைவிட உயர்வானது என்றே கருதினர். இயேசு தம்மை பின்பற்றுபவர்களுக்காக இந்த சமநிலையான பிரமாணத்தை நிறுவினார் என்பதை அவர்கள் நினைவில் கொண்டிருந்தனர்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மத்தேயு 22:21) இராயன் வற்புறுத்தி கேட்கும் காரியங்களைவிட கடவுளுக்கு செய்ய வேண்டிய கடமைகளே அவர்களுக்கு முதலிடத்தில் இருக்க வேண்டும்.
கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டியவர்கள் இந்த அருமையான நியமங்களை பின்பற்ற தவறியதால் வேதனை மிக்க விளைவுகள் ஏற்பட்டன; அதினால், உண்மை கிறிஸ்தவர்கள் பின்பற்றியதே சரியான பாதை என்பது தெளிவானது. உதாரணமாக, விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டல மதத்தலைவர்கள் “உள்நாட்டு அரசின் கைப்பாவையாகவே இருந்திருக்கிறார்கள், முக்கியமாக இராணுவப் படைகளை உருவாக்குவதிலும் பாதுகாப்பதிலும் அவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் இராணுவ வரலாற்றாசிரியர் ஜான் கீகன். இதன் காரணமாகத்தான் அவர்களைப் பின்பற்றினவர்களும், அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்துகொண்டு லட்சக்கணக்கான அப்பாவிகளின் இரத்தத்தை ருசிபார்த்த போர்களில் ஈடுபட்டனர். “மக்கள் இரத்த வெறி பிடித்து அலைமோதியபோது, கடவுளின் சட்டங்கள் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல் இருந்தன” என்கிறார் கீகன்.
இருப்பினும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சரியான சமநிலையை காத்து, வைரம்போல் மின்னும் சிறந்த முன்மாதிரியை வைத்துள்ளனர். அவர்கள் நல்ல பிரஜைகளாக தங்களை நிரூபித்தனர். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்றினர். இருப்பினும் அவர்கள் இந்த தெளிவான பைபிள் நியமங்களை உறுதியாய் மனதில் கொண்டு, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி நடந்தார்கள்.—ஏசாயா 2:4; மத்தேயு 26:52; ரோமர் 13:5; 1 பேதுரு 3:16.
[பக்கம் 26-ன் படம்]
‘இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்’