மெகா சைஸ் குட்டி சைஸ்
“அந்துப்பூச்சியாக இருந்தாலும்சரி பட்டாம்பூச்சியாக இருந்தாலும்சரி கொல்லாதே.” வில்லியம் ப்ளேக் (1757-1827).
வானவில்லின் சிதறல்களாக சுற்றி பறந்து காண்போர்களின் கண்களில் தூண்டில் போடும் வண்ண வண்ண பட்டாம்பூச்சியின் மேனியழகில் மெய்மறந்திருக்கிறீர்களா? இந்த மென்மையான பூச்சியின் அழகையும் நேர்த்தியையும் ரசிக்காதோரும் உண்டோ? உலகம் முழுதும் இவை பெரிதும் சிறிதுமான வண்ணத்தூறல்களாக உல்லாசமாய் சுற்றித்திரிகின்றன. கொஞ்சநஞ்சமல்ல, 15,000 முதல் 20,000 வகைகள்!
நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் மிகப் பெரிய பட்டாம்பூச்சி எது? பாப்புவா நியூ கினியில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால், க்வீன் அலெக்ஸாண்ட்ரா எனும் உலகிலேயே மிகப் பெரிய பட்டாம்பூச்சியை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கலாம். இதன் இறக்கையின் மொத்த நீளம் சுமார் 280 மில்லிமீட்டர். உங்கள் சொந்தநாடு வட அல்லது மத்திய அமெரிக்கா என்றால், ஹோமரஸ் ஸ்வாலோடெய்ல் எனும் பட்டாம்பூச்சியை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கும். இதன் இறக்கையின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 150 மில்லிமீட்டர். ஆப்பிரிக்க ஜயன்ட் ஸ்வாலோடெய்லே ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய பட்டாம்பூச்சி. இதன் இறக்கையின் மொத்த நீளம் சுமார் 230 மில்லிமீட்டர்.
பட்டாம்பூச்சிகளில் மிகச் சிறியவை உண்டா? அவற்றை எங்கே பார்க்கலாம்? “வட அமெரிக்காவின் பிக்மி ப்ளூ, ப்ரிஃபீடியம் எக்ஸிலிஸ், உலகிலேயே மிகச் சிறிய பட்டாம்பூச்சியாக இருக்கலாம். இதன் இறக்கையின் நீளம் 15-19 மில்லிமீட்டர் (1/2-3/4 அங்குலம்)” என டாக்டர் ஜான் ஃபெல்ட்வெல்லின் தி இல்லஸ்ட்ரேடட் என்ஸைக்ளோபீடியா ஆஃப் பட்டர்ஃப்ளைஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மில்லிமீட்டர் நீளமுடைய இறக்கைகளைக் கொண்ட ஸ்மால் ப்ளூதான் பிரிட்டனின் மிகச் சிறிய பட்டாம்பூச்சி.
உலகின் பல பாகங்களில், பட்டாம்பூச்சி பண்ணைகள் இருக்கின்றன. அவற்றைச் சுற்றி பார்க்கும்போது, எழில்மிகு இறக்கைகளை உடைய இந்தப் பூச்சிகள் உங்கள் மேல் வந்து அமர, அடடா! சுகமான அனுபவம் அது. இந்த அருமைமிகு படைப்பைப் பற்றியும் அதன் வாழ்க்கை சுழற்சியைப் பற்றியும் நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ளலாம். சின்னஞ்சிறு முட்டையில் இருந்து கம்பளிப்புழுவாகவும், கூட்டுப்புழு பருவத்தில் இருந்து ஒரு பட்டாம்பூச்சியாகவும் ஆகும் இதன் உருமாற்றத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம். அடுத்த தடவை ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறப்பதை நீங்கள் பார்த்தால், ஒருகணம் நின்று, அதன் அழகை அள்ளிப் பருகுங்கள். மெகா சைஸோ குட்டி சைஸோ, ஓர் அதிசயத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்!
[பக்கம் 24, 25-ன் படம்]
க்வீன் அலெக்ஸாண்ட்ராவின் மெகா சைஸ் பட்டாம்பூச்சி பர்ட்விங்கும், குட்டி சைஸ் பட்டாம்பூச்சியான வடஅமெரிக்காவின் பிக்மி ப்ளூவும் (இரண்டும் உண்மையான அளவு)
[படத்திற்கான நன்றி]
பட்டாம்பூச்சிகள்: Allyn Museum of Entomology, Florida Museum of Natural History