உலகை கவனித்தல்
நோயாளிக்கு நஷ்ட ஈடு
ஒன்றல்ல இரண்டல்ல, 385 இரத்த ஒழுக்கு நோயாளிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ரோமின் சட்ட நீதிமன்றம் கோரியது. யாருக்கு அவ்வாறு கட்டளையிட்டது? இத்தாலிய நலவாழ்வு அமைச்சகத்துக்கு. அது, “விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்தத் தவறினது” மேலும், “[தொற்று ஏற்பட்டிருந்த] பொருட்களை தூக்கியெறிய தாமதித்தது” என்பதே அதன்மீதான குற்றச்சாட்டு. இந்நோயாளிகளுக்கு ஹிப்படைட்டிஸ் அல்லது எய்ட்ஸ் வைரஸ் நோய் தொற்றியது. நோய் தொற்றப்பட்டிருந்த இரத்தப் பொருட்களை நோயாளிகளின் உடலில் செலுத்தியதே இதற்குக் காரணம். இதனால் அவர்களில் மூன்றில் ஒருவர் என்ற வீதத்தினர் ஏற்கெனவே சவக்குழிக்குச் சென்றுவிட்டனர். “இத்தாலிய அரசு அதன் முட்டாள்தனத்தால் இழைத்துள்ள குற்றமே இந்நோயாளிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு காரணம் என்பதை இத்தீர்ப்பு தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது” என வழக்குரைஞர் மார்யோ லானா அடித்துக் கூறுகிறார். இவர் இத்தாலியைச் சேர்ந்த மனித உரிமைகள் பாதுகாப்பின் மருத்துவம் சார்ந்த சட்ட ஆய்வுத்துறை சங்கத் தலைவராக பணியாற்றுகிறார். இத்தாலியில், சுமார் 2,000 இரத்த ஒழுக்கு நோயாளிகளை எய்ட்ஸ் வைரஸ் பதம்பார்த்துள்ளது. கிட்டத்தட்ட 5,000 பேரிடம் ஹிப்படைட்டிஸ்-சி வைரஸ் குடிகொண்டுள்ளது. இதுபோன்று நோய் தொற்றப்பட்ட இரத்தப் பொருட்களை நோயாளிகளுக்கு செலுத்தியதன் விளைவாக, இத்தாலியர்களில் ஏற்கெனவே கல்லறைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 1,246.
காலராவின் வெறியாட்டம்
ஜாம்பியாவைச் சேர்ந்த லுஸாகா நகரெங்கும் கடந்த பிப்ரவரியில் உயிரைக் குடிக்கும் காலரா பரவியது. இதனால் அந்நகர மன்றம், “தெருவில் விற்கும் உணவுப் பண்டங்களுக்கு” தடை விதித்தது என டைம்ஸ் ஆஃப் ஜாம்பியா செய்தித்தாள் அறிக்கை செய்தது. அதுமட்டுமின்றி, “அத்தலைநகரில் மட்டுமே காலராவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரிக்கவே, ஓட்டல்களையும் ரெஸ்டாரண்டுகளையும் 24 மணிநேர கண்காணிப்பில்” வைக்கும்படி உத்தரவிடப்பட்டது என்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. “நாட்டின் பிற பகுதிகளிலும் அதிகரித்துவந்த” இந்நோய் குறித்து உடல்நல அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இந்நோய் பரவாது தடுப்பதற்காக, உடல்நல கல்வி அமைச்சக அதிகாரிகள், காலரா தடுப்புக் குழு ஒன்றை ஏற்பாடு செய்தனர். இக்குழு, குப்பைக்கூளங்களை அகற்றும் பணிக்கென கூடுதலாக கூலித் தொழிலாளர்களை நியமித்தது. அத்துடன், அதிக ஆழமற்ற கிணற்று நீருடன் நிலமட்டத்திலுள்ள நீர் சேர்ந்துவிடும் பட்சத்தில், எளிதில் அசுத்தமாகிவிடும் வாய்ப்புள்ளதால், அப்படிப்பட்ட கிணற்று நீரில் குளோரினைக் கலந்தது. “எப்படியாவது இந்தக் கொள்ளைநோயைப் பரவவிடாமல் தடுக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என்று லுஸாகா நகர சட்ட மன்றப் பிரதிநிதியான டேனியல் எம்சோக்கா கூறினார்.
கண்டுகொள்ளப்படாத இதயங்கள்
“தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்குப் பதில் கனடாவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் இதய நலத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலையின்றி இருக்கின்றனர்” என த நேஷனல் போஸ்ட் செய்தித்தாள் கவலை தெரிவிக்கிறது. கனடாவைச் சேர்ந்த இதய நல மற்றும் வாதநோய் மருத்துவ சங்கத்தின் சார்பில், அங்குள்ள 400 பெண்களிடம் சமீபத்தில் ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது. அப்பெண்களின் வயது 45 முதல் 74. இந்தச் சுற்றாய்வு என்ன காட்டியது? “அவர்களில் 30 சதவீதத்தினருக்கு மட்டுமே எடை நார்மலாக இருந்தது. 36 சதவீதத்தினர் மட்டுமே சுறுசுறுப்பாக காணப்பட்டனர். ஆனால் 74 சதவீதத்தினர், எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வதனால் மனதளவில் பாரமடைந்திருந்தனர்.” கடைசியில் அச்சங்கத்துப் பெண் பிரதிநிதியான எலிஸா ஃப்ரீமேன் கூறினதாவது: “பெண்கள் தங்களைக் கவனித்துக்கொள்வதைக் காட்டிலும் தங்கள் கணவன்மார்களைத்தான் அதிக அக்கறையாக கவனித்துக்கொள்கிறார்கள்.” அந்த அறிக்கையின்படி பார்த்தால், “பெண்களில் 40 சதவீதத்தினரின் உயிரைக் காவுகொள்வது இந்த இதய நோயும் வாதநோயும்தான். ஏனெனில் ஒரு வருடத்தில் 41,000 பேருக்கும் அதிகமானோர் இறப்பதாக இது காட்டுகிறது.”
அதிகரிக்கும் ஆண்மைக் குறைவு!
“அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வசிக்கும் ஆண்களின் உடலிலுள்ள சராசரி விந்து எண்ணிக்கை 1935-க்குப் பிறகு ‘தடாலென’ 50 சதவீதத்துக்கும் கீழே சரிந்துவிட்டது” என உவர்ல்ட் வாச் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “ ஆண்மைக் குறைவு அதிகரித்துக்கொண்டு வருகிறதே என்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்கள் இதற்கான காரணமாய் இருக்குமோ என்றும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், ஆமாம், அதேதான் என்று அடித்துச்சொல்லும் வண்ணமாக இந்தக் கண்டுபிடிப்பு ஆதரவு தருகிறது.” 14,000-க்கும் மேற்பட்டோரை உட்படுத்திய, 1938 முதல் வெளியிடப்பட்ட 61 ஆய்வு அறிக்கைகளை வைத்து எடுக்கப்பட்ட முடிவுதான் இது. உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், இனப்பெருக்கம் ஆகியவற்றை நம் உடலிலுள்ள நாளமில்லா சுரப்பிகளே கட்டுப்படுத்துகின்றன. இவற்றின் திறனையும், இவை செய்யும் வேலையையும் சுற்றுப்புறத்திலுள்ள குறிப்பிட்ட சில இரசாயனங்கள் பாதிப்பதாக கருதப்படுகிறது. இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் 60 மோசமான இரசாயனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், “இன்று உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் மொத்த எண்ணிக்கை 80,000 என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் துளியளவான இரசாயன வகைகளையே ஆய்வுசெய்து நாளமில்லா சுரப்பியின் வேலையை பாதிக்கும் இரசாயனம் என்று கண்டறிந்திருக்கின்றனர்” என்பதாக அந்தப் பத்திரிகை அறிவிக்கிறது.
“மௌன நோய்”
“வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள சுமார் 1.5 முதல் 1.8 கோடி சிறுபிள்ளைகளின் உடலிலுள்ள இரத்தத்தில் எக்கச்சக்கமான காரீயம் கலந்திருக்கிறது” என சுற்றுச்சூழல் செய்திச் சேவை அறிக்கை செய்கிறது. உதாரணமாக, இந்தியாவிலுள்ள சிறுவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களது இரத்தத்தில் எந்தளவுக்கு காரீயம் கலந்துள்ளதோ அந்தளவுக்கு அவர்களது அறிவுத்திறனும் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “காரீயத்தையே சதா சுவாசிக்க சுவாசிக்க, . . . சிறுவர்களின் மூளை பாதிக்கப்பட்டு, அவர்களது அறிவுத்திறனும் இழக்கப்படுகிறது” என டாக்டர் ஆபிரகாம் ஜார்ஜ் கருத்து தெரிவிப்பதாக தி இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இந்திய நகரங்களில் இந்தக் காரீய நச்சு எங்கிருந்து வருகிறது? இங்குள்ள வாகனங்களில் பெட்ரோலுடன் இன்னும் காரீயம் கலக்கப்பட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம். இது வெளியில் தெரிவதில்லை. ஆகவே வறுமை, பசி போன்ற கொடுமைகளோடு ஒப்பிட, இந்தக் காரீய நச்சுக் கொடுமை மறைந்திருந்தே சாதித்துவிடுவதால் இதை டாக்டர் ஜார்ஜ் “மௌன நோய்” என்று அழைக்கிறார்.
திருப்தியடையாத இன்ஃப்ளுயன்ஸா!
சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமையகத்தில் பிரபல இன்ஃப்ளுயன்ஸா நோய் நிபுணர்களில் 300 பேருக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கூடினர். எதற்காக? இக்கொடிய நோயை சமாளிப்பது எப்படி என்பதைக் கலந்தாராயவே. இந்நோயை கட்டுப்படுத்துவதில் கடந்த 50 ஆண்டுகளில் ஏராளமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும், திருப்தியடையாத இன்ஃப்ளுயன்ஸா, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோரை இன்னும் கொல்லத்தான் செய்கிறது என்பதாக ஐக்கிய நாட்டு பொதுத் தகவல் துறை அறிக்கை செய்கிறது. இன்ஃப்ளுயன்ஸா நோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் போடப்பட்டுள்ள திட்டத்தை WHO வெளியிடும். இது, “இறுதிக்கட்ட இன்ஃப்ளுயன்ஸா கொள்ளைநோய்” என்ற நிலையை சமாளிக்க உதவும். “இன்ஃப்ளுயன்ஸா நோயின் கிளையிலிருந்து ஒரு புதிய குருத்து தோன்றுவதைக் கண்டுபிடிப்பதற்கும் அக்குருத்து செழித்தோங்கிய மரமாக வளர்ந்து, கொள்ளைநோயாக மாற ஆரம்பிப்பதற்கும் இடையில் அதைத் தடுப்பதற்கான நேரம் குறைவாகவே இருக்கும்” என WHO-வின் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றிவரும் பெண்மணியான டாக்டர் கிரோ ஹார்லம் பிரண்ட்லான் தெரிவித்தார்.
‘பறந்தே’ போய்விடும் பட்டுப்பூச்சிகள்!
இலையுதிர் காலந்தோறும் லட்சக்கணக்கான மொனார்க் பட்டுப்பூச்சிகள் கனடாவிலிருந்து 3,200 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரத்திற்கு இடம்பெயர்ந்து பறந்துசெல்கின்றன. அப்போது கனடாவிலிருந்து அவற்றின் குளிர்கால வாசஸ்தலம் அமைந்துள்ள கலிபோர்னியாவுக்கும் மத்திய மெக்ஸிகோவைச் சேர்ந்த சியர்ரா மாடரே மலைகளுக்கும் இவ்வாறு பறந்துசெல்கின்றன. என்றாலும் சமீப காலங்களில், மெக்ஸிகோவிலுள்ள மொனார்க் பட்டுப்பூச்சியின் சரணாலயங்கள் நில அரிப்பால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றன; அத்துடன் ஃபர் மரவகையான ஒயாமெள் (இந்த மரம் அபிட்டாசியே வகையைச் சேர்ந்தது) மரங்கள் கள்ளத்தனமாக வெட்டி அழிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, “கடந்த இரண்டு ஆண்டுகளாக, குளிர்கால வாசஸ்தலத்துக்கு வந்து தங்கும் மொனார்க் பட்டுப்பூச்சிகளில் 70 சதவீதம் குறைந்துவிட்டது” என மெக்ஸிகோ நகரில் வலம்வரும் த நியூஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. உள்ளூர்வாசிகளுக்கு டூரிஸ்ட் தொழிலால் வருமானம் கிடைக்கிறது. ஆனால், மற்றவர்களோ வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட மரங்களை வெட்டி இரவோடு இரவாக வண்டி வண்டியாய் கடத்தி பிழைப்பு நடத்துகின்றனர். “இந்தக் கபளீகரம் தொடர்ந்தால், வட அமெரிக்காவின் கோடைகால மொனார்க்குகள் ஒரேயடியாக ‘பறந்தே’ போய்விடலாம்” என த நியூஸ் புலம்புகிறது.
முள்ளில் படர்ந்த முல்லைகள்
காரகாஸில் வெளியாகும் எல் யுனிவர்ஸல் செய்தித்தாள் அறிக்கை செய்வதன்படி, வெனிசுவேலாவில் மட்டுமே கெடுக்கப்பட்ட பிள்ளைகளின் வீதம் 1980-ல் 10-க்கு ஒன்று என்றிருந்தது; இன்றோ, அது 10-க்கு மூன்று என்றிருக்கிறது. அதைப்போலவே, கெடுக்கப்பட்ட பிள்ளைகளின் சராசரி வயதும் 1980-ல், 12-க்கும் 14-க்கும் இடைப்பட்ட வயதுதான். இன்றோ, இப்பிள்ளைகளின் வயதைக் கேட்டால் நமக்கு அதிர்ச்சிதான் காத்திருக்கும்; பெரும்பாலும் அது மூன்று வயதுக்கும் குறைவே! இக்கொடுங் குற்றச்செயலைச் செய்யும் கயவர்கள் யார்? இவர்கள் பள்ளி விளையாட்டு மைதானங்களில் பதுங்கிப் பதுங்கி, கையில் மிட்டாயை வைத்து பிள்ளைகளை ஆசைகாட்டி மோசம்போக்குவார்கள் என்ற கருத்து முன்பு நிலவியது. இப்போது அந்தக் கருத்தெல்லாம் மலையேறிவிட்டது. இவர்களில் 70 சதவீதத்தினர் சொந்தக்காரர்கள் அல்லது குடும்ப நண்பர்கள்தான். அவர்களில் பாதிப்பேர் ஒன்றுவிட்ட தாய் தந்தையர்கள். மீதிப்பேர் அண்ணன்மார், மாமா-அத்தை பையன்கள், வாத்தியார் என பொறுப்பான நிலையிலுள்ளவர்கள்தான் என்பதாக எல். யுனிவர்ஸல் விளக்கம் கூறுகிறது.
கார் பைத்தியம்
அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்படி, மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்வதில் ஐக்கிய மாகாணங்கள் சமீபத்தில் 10 கோடி இலக்கை எட்டிவிட்டன. “இவற்றில் முதல் 10 லட்ச மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்ய 25 ஆண்டுகள் எடுத்தது” என கம்ப்ரஸ்ட் ஏர் பத்திரிகை அறிக்கை செய்தது. ஆனால் இன்றோ, “தற்போது ஒரு வேலைநாளில், நிமிடத்துக்கு 30 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதைப்போலவே, டிரக்குகளும் பஸ்களும் சேர்ந்து நிமிடத்துக்கு 10 என்ற கணக்கில் உற்பத்தி செய்யப்படுகின்றன.” அசெம்பிள் செய்யும் தொழிற்சாலைகள், உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், சேல்ஸ் மற்றும் சர்வீஸ்தாரர்கள், திறமையான டிரைவர்கள் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமே அந்நாட்டின் சம்பள வேலையாட்களில் சுமார் 7-க்கு ஒருவர் என்ற வீதத்தினரை வேலைக்கு அமர்த்துகின்றன. ஐக்கிய மாகாணங்களில் சுமார் 4 கோடி வாகனங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கல்லாதோர் கடலளவு
“வளர்ந்துவரும் நாடுகளில் கல்வி பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஏனெனில் 12.5 கோடி சிறுபிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. இவர்களில் பெரும்பான்மையர் சிறுமிகளே. அத்துடன், 15 கோடிப் பேர் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன்பே பள்ளிக்குச் செல்லாதவாறு நிறுத்திவைக்கப்படுகின்றனர்” என இங்கிலாந்தின் நியூஸ் அன்லிமிட்டட் அறிக்கை செய்கிறது. தற்போது, வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள பெரியவர்களில் 4-க்கு ஒன்று என்ற வீதத்தினருக்கு, அதாவது, 87.2 கோடி மக்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. பிரச்சினை இத்துடன் நின்றுவிடவில்லை. கல்வியறிவில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நாடுகள் பணக்கார நாடுகளிடம் கடன்வாங்கும்போது இந்தப் பிரச்சினை இன்னும் சிக்கலாகிவிடுகிறது. எப்படி? கல்விக்கென செலவிடப்பட வேண்டிய பணம் அனைத்தும் கடன்களை அடைப்பதற்கென அடிக்கடி செலவிடப்பட்டு விடுகிறது. இவ்வாறு, கல்வியறிவின்மை என்ற சக்கரம் மறுபடியும் சுழல ஆரம்பித்து வறுமையை தொடரச் செய்கிறது.