உயிரின் மறுபக்கம்
டிஎன்ஏ மூலக்கூறு செய்யும் வேலையைக் கேட்டால் நம் தலையே சுற்றிவிடும்! மரபியல் பண்புகள் சம்பந்தமாக செல்கள் செய்யவேண்டிய இரண்டு வேலைகளுமே அதிலுள்ள டிஎன்ஏ-வை வைத்துத்தான் நடக்கிறது. அவற்றில் ஒன்று, ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்கு தகவல் கடத்தப்படுவதற்காக டிஎன்ஏ-வின் நகல் துல்லியமாக எடுக்கப்படுவது. மற்றொன்று, அந்த செல் எப்படி மாறவேண்டும் என்றும் என்ன வேலையைச் செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கும் வகையில், டிஎன்ஏ-வின் அமைப்புக்கு ஏற்றாற்போல் புரோட்டீன் தயாரிக்கப்படுவது. என்றாலும், இந்த வேலைகளையெல்லாம் டிஎன்ஏ தனித்துச் செய்வதில்லை. பல்வேறு பிரத்தியேக புரோட்டீன்களும் சேர்ந்துதான் செய்கின்றன.
டிஎன்ஏ தனித்துநின்று உயிரை உருவாக்க முடியாது. மாறாக, ஒரு செல் உயிருடன் இருப்பதற்கு அத்தியாவசியமான எல்லா புரோட்டீன்களையும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் கட்டளைகள் அதில் அடங்கியுள்ளன. அடுத்தடுத்து செல்கள் பிரிவதற்காக டிஎன்ஏ-வை நகல் எடுக்கவும், புதிய புரோட்டீன்களைத் தயாரிக்க டிஎன்ஏ-வுக்கு உதவவும் தேவையான கட்டளைகளும்கூட இவற்றில் அடங்கும். இத்தனை கட்டளைகள் டிஎன்ஏ-ஜீன்களில் சேமிக்கப்பட்டு இருந்தாலும், அந்தக் கட்டளைகளைப் “புரிந்து” அதற்கேற்றாற்போல் செயல்படக்கூடிய, ரிபோசோம்கள் உள்ளிட்ட பிரத்தியேக புரோட்டீன்களும் ஆர்என்ஏ-வும் இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை.
அதைப்போலவே புரோட்டீன்கள் தனித்துநின்று உயிரை உருவாக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட வகை புரோட்டீனை அதிகமாய் உற்பத்தி செய்யும்படியாக, மரபியல் விதியைப் பெற்றுள்ள ஜீனை ஒரு தனி புரோட்டீன் உருவாக்க முடியாது.
உயிர்ப் புதிரை விடுவித்திருப்பதிலிருந்து என்ன தெரிவிக்கிறது? டிஎன்ஏ, ஆர்என்ஏ-வுக்கும் புரோட்டீனுக்கும் இடையில் மிகவும் சிக்கலான, ஒன்றையொன்று சார்ந்த தொடர்புகள் இருப்பதற்கு நவீன மரபியலும் மூலக்கூறு உயிரியலும் எக்கச்சக்கமான அத்தாட்சி அளிக்கின்றன. இந்த எல்லாப் பொருட்களும் ஒரே சமயத்தில் இருப்பதில்தான் உயிர் சார்ந்திருக்கிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நினைத்த நேரத்தில் தற்செயலாக உயிர் தோன்றியிருக்கவே முடியாது.
நியாயமாய் சொன்னால், மகா புத்திசாலியான படைப்பாளர் டிஎன்ஏ-வில் கட்டளைகளை வகுத்து வைத்து, முழு உருவிலான புரோட்டீன்களையும் ஒரே சமயத்தில் படைத்துள்ளார் என்பதே சரி. அவற்றுக்கு இடையிலான செயல்பாடுகள் அவ்வளவு துல்லியமாய் வகுத்து வைக்கப்பட்டுள்ளதால், ஒரு தடவை ஆரம்பித்த இந்தச் செயல் தொடர்ந்து நடைபெறும்படி பார்த்துக்கொள்ளப்படுகிறது. அதாவது, அதிகமதிகமாய் ஜீன்களை உற்பத்தி செய்வதற்காக புரோட்டீன்கள் டிஎன்ஏ-வின் நகலை எடுத்துக்கொண்டே இருப்பதும், அந்த ஜீன்களிலுள்ள மரபியல் கட்டளைகளைப் புரிந்துகொண்ட பிற புரோட்டீன்கள் இன்னும் அதிக புரோட்டீன்களை தயாரிப்பதுமே.
உயிரின் பிரமிக்கத்தக்க இச்சுழற்சியை ஆரம்பித்து வைத்தவர் கைதேர்ந்த திட்டமைப்பாளரான யெகோவா தேவனே என்பது தெளிவு.
அதிசயமாய் உண்டாக்கப்பட்டது
பைபிள் ஓர் அறிவியல் புத்தகம் அல்ல. இருந்தாலும் உயிர் தோன்றுவதற்கான கட்டளைகளை வகுத்து வைத்த படைப்பாளரின் செயலைப் பற்றி ஓரளவு விஷயத்தைத் தெரிவிக்கிறது. இன்றைய மரபியல் ஆராய்ச்சி பற்றி ‘அ’ என்ற அட்சரம்கூட அறிந்திராத இஸ்ரவேல் ராஜா தாவீது, சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தன்னைப் படைத்தவரைப் பற்றி இவ்வாறு பாடினார்: “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர் [உண்டாக்கியவர், (பொ.மொ.)]; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் [‘புதிராய்,’ (ஜெரூசலேம் பைபிள்)] உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.”—சங்கீதம் 139:13-15.
ஆகவே, மறுபடியும் கண்ணாடிக்கு முன்னால் நின்று உங்களை நன்றாக உற்றுப் பாருங்கள். உங்கள் கண்களின் நிறம் என்ன? முடியின் தன்மை என்ன? தோலின் நிறம்? உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது? இப்பண்புகள் கடந்த தலைமுறையிலிருந்து எவ்வாறு கடத்தப்பட்டுள்ளது என்றும் உங்கள் வம்சத்தினருக்கு எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதையும் சற்று நினைத்துப் பாருங்கள். பிறகு, இந்த அற்புதமான செயலை ஒழுங்கமைத்தவரைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். என்ன சொல்லத் தோன்றுகிறது? அப்போஸ்தலன் யோவான் எழுதி வைத்ததைத்தான் திரும்பவும் சொல்லவேண்டியிருக்கிறதல்லவா! அவர் எழுதினார்: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 4:11.
[பக்கம் 10-ன் பெட்டி/படங்கள்]
குருட்டாம்போக்கான தற்செயலா?
மரபியல் கூறு தற்செயலாய் நிகழ்வதில்லை என்று இரண்டு பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ள ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. “[இந்த மரபியல் கூறு] 100 கோடியின் 100 கோடி மடங்கான பிற கூறுகளிலேயே மிகச் சிறந்த கூறு என்பதாக அவர்களது ஆய்வு காட்டியுள்ளது” என நியூ சைன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. குத்துமதிப்பாக எடுத்துக்கொண்டாலுமே, சாத்தியமான 1020 (1-ஐ அடுத்து 20 பூஜ்ஜியங்கள்) மரபியல் குறியீடுகளில் ஒன்றே ஒன்று மட்டும் உயிர் தோன்றிய ஆரம்பத்தில் தெரிவு செய்யப்பட்டது. ஏன் இந்த குறிப்பிட்ட ஒரு மரபியல் கூறை தெரிவு செய்திருக்க வேண்டும்? ஏனென்றால் புரோட்டீன் தயாரிக்கப்படும்போது ஏற்படும் தவறுகளையோ, மரபியல் மாற்றங்களால் ஏற்படும் தவறுகளையோ இது குறைக்கிறது. அதாவது, இக்குறிப்பிட்ட குறியீடு, பரம்பரைப் பண்பு சார்ந்த விதிகள் அச்சுப்பிசகாமல் பின்பற்றப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ‘இப்படித்தான் தெரிந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால்’ தான் இந்த மரபியல் கூறு சார்ந்த தெரிவு நிகழ்கிறது என்று சிலர் சொன்னாலும், ‘இந்தளவுக்கு செயல்திறன் படைத்த குறியீடு தற்செயலாக தோன்றுவதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது’ என இவ்விரண்டு ஆய்வாளர்களும் இறுதியாகக் கூறுகின்றனர்.