மைக்ரோஸ்கோப் பார்வை
உயிரின் அடிப்படைக் கூறு என்றே செல் அழைக்கப்பட்டுள்ளது. தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள் என உயிருள்ள யாவுமே செல்களால் ஆனவைதாம். செல்லுக்குள் என்னதான் நடக்கிறது என காலங்காலமாய் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்திருக்கின்றனர். மூலக்கூறு உயிரியல், மரபியல் ஆகியவை பற்றி அநேக புதிர்களை விடுவித்துள்ளனர். இப்போது செல்களை கொஞ்சம் கவனித்துப் பார்ப்போம். ஏனெனில் வியக்க வைக்கும் அளவிற்கு இவை மிகச் சிறிய உயிர்க் கூறுகள். விஞ்ஞானம் இவற்றைப் பற்றி என்னதான் கண்டறிந்துள்ளது என காண்போம்.
செல்களை ஆற அமர ஆராய்தல்
செல்கள் பற்பல வடிவுடையவை. செவ்வக, சதுர, வட்ட வடிவிலும் முட்டை வடிவிலும் காணப்படுகின்றன. சில வடிவமில்லாதவை. அமீபாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு-செல் பிராணி. இதற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமே இல்லை. இது நகர்வதற்கேற்ப இதன் வடிவமும் மாறும். ஆனால் செல்லைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றும் செய்யும் வேலைக்கேற்ப வடிவமும் அவற்றுக்கு உண்டு. உதாரணமாக, தசை செல்களை எடுத்துக்கொள்வோம். அவை நீளமாய் ஒல்லியாக இருக்கும். அவற்றின் வேலையைச் செய்யும்போது சுருங்கும். உடல் முழுவதிலும் செய்திகளைக் கடத்தும் நரம்பு செல்களோ நீள நீள கிளைகளைக் கொண்டவை.
செல்கள் உருவ அளவிலும் வேறுபடுகின்றன. பெரும்பாலானவை வெறும் கண்களால் பார்க்க முடியாதளவிற்கு மிக மிகச் சிறியவை. அதாவது, ஒரு சராசரி செல்லின் உருவத்தை நீங்கள் புரிந்துகொள்வதற்கு, இந்த வாக்கியத்தின் முடிவில் வைக்கப்பட்டுள்ள நிறுத்தக்குறியை சற்று உன்னிப்பாய் பாருங்கள். சராசரி உருவம் கொண்ட 500 செல்களை இந்த மிகச் சிறிய புள்ளிக்குள் அடக்கிவிடலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இதுவே இவ்வளவு சிறியதென்றால், இதைவிட 50 மடங்கு சிறிதான பாக்டீரியா செல்கள் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். மிகப் பெரிய செல்லின் உருவம் எப்படியிருக்கும்? பேஸ்பால் அல்லது கிரிக்கெட் விளையாட்டின் பந்து எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிதான ஒற்றைச் செல் “ராட்சதன்” நெருப்புக் கோழியின் முட்டையிலுள்ள மஞ்சள் கரு!
பெரும்பாலான செல்களை வெறும் கண்களால் பார்க்க முடியாததால், மைக்ரோஸ்கோப் போன்ற நுண்ணோக்கி கருவிகளின் உதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். a அப்படியுமே ஒரு செல்லின் நுட்பவிவரங்கள் சிலவற்றை முழுவதுமாய் கண்டறிய முடிவதில்லை. இதை சற்று யோசித்துப் பாருங்களேன்: ஓர் எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் ஒரு செல்லை அதன் உருவத்தைக் காட்டிலும் 2 லட்சம் மடங்கு பெரிதாக காட்ட முடியும். இது, ஒரு எறும்பின் நீளத்தை 800 மீட்டருக்கும் மேலாக காட்டுவதற்குச் சமம். இத்தனைப் பெரிதாகக் காட்டினாலுமே, செல்லின் சில விவரங்களைக் காண முடிவதில்லை!
இவ்வாறு, செல்கள் நம்மை மலைக்கச் செய்யுமளவுக்கு சிக்கலானவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஐந்தாம் அற்புதம் என்ற தனது ஆங்கில புத்தகத்தில் இயற்பியல் வல்லுநர் பால் டேவிஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஏதோ ஒரு எஞ்சினியர் எழுதிவைத்த விதிகளின்படி ஒழுங்காக அமைக்கப்பட்டது போலவே ஒவ்வொரு செல்லினுள்ளும் ஏராளமான குட்டி குட்டி பாகங்கள் திட்டமாய் அமைக்கப்பட்டுள்ளன. சிறு இடுக்கிகள், கத்தரிக்கோல்கள், பம்புகள், மோட்டார்கள், நெம்புகோல்கள், வால்வுகள், பைப்புகள், சங்கிலிகள் போன்ற அமைப்பையும் ஏன் வாகனங்களைப் போன்ற அமைப்பையும்கூட இவற்றில் ஏராளமாய் காணலாம். ஆனால் இப்படிப்பட்ட கருவிகளை தன்னகத்தே அடக்கியுள்ள ஒரு பையைப் போல மட்டுமே செல் செயல்படுவதில்லை. ஒரு பெரிய தொழிற்சாலையில் புரொடக்ஷன் லைனில் வேலைகள் சுமுகமாக நடப்பதைப்போலவே, செல்லிலுள்ள வெவ்வேறு பாகங்கள் ஒன்றாக சேர்ந்து வேலைசெய்து, அந்த செல் சுமுகமாக செயல்பட உதவுகின்றன.”
டிஎன்ஏ—பரம்பரைப் பண்பின் மூலக்கூறு
ஓர் ஒற்றைச் செல்லிலிருந்தே மனிதர்களும் பலசெல் தாவரங்களும் விலங்குகளும் தோன்றுகின்றன. அதற்குப் பிறகு அந்தச் செல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பெரிதாகிறது. பின்பு அது பிரிந்து இரண்டு செல்களாக மாறுகிறது. இவ்விரண்டு செல்களும் பிரிந்து நான்கு செல்களாகின்றன. இவ்வாறு பிரிந்து பிரிந்து ஒரு கட்டத்தில், அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டு வெவ்வேறு வேலையைச் செய்யும்படி பிரத்தியேக செல்களாக உருமாறுகின்றன. அதாவது, தசை செல்கள், நரம்பு செல்கள், தோல் செல்கள் இவைபோன்ற இன்னும் வெவ்வேறான செல்களாக மாறிவிடுகின்றன. இப்படிப்பட்ட வழிமுறை தொடரும்போது பல செல்கள் ஒன்றுசேர்ந்து திசுக்களாகின்றன. உதாரணமாக, தசை செல்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தசை திசுக்களாக மாறுகின்றன. வெவ்வேறு திசுக்கள் வெவ்வேறு உறுப்புகளாக மாறுகின்றன. அப்படி உருவாகும் உறுப்புகள்தான் இருதயம், நுரையீரல்கள், கண்கள் போன்றவை.
ஒவ்வொரு செல்லிற்கும் மெல்லிய வெளிப்படலம் ஒன்று உள்ளது. இப்படலத்துக்கு உள்ளே சைட்டோபிளாசம் எனப்படும் ஜெல்லி போன்ற திரவம் உள்ளது. அதையடுத்து, நியூக்ளியஸ் அமைந்துள்ளது. இதைச் சுற்றி ஒரு மெல்லிய சவ்வு உள்ளது. இதுவே சைட்டோபிளாசத்திலிருந்து இதைப் பிரிக்கிறது. இந்த நியூக்ளியஸ்தான் செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் கிட்டத்தட்ட செல்லின் எல்லா செயல்களையுமே இதுதான் கட்டுப்படுத்துகிறது. நியூக்ளியஸின் உட்புறம் டிஎன்ஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் டியாக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம் உள்ளது. இதில்தான் செல்லின் மரபியல் பண்புகள் பொதிந்துள்ளன.
உங்கள் செல்லிலுள்ள குரோமோசோம்களில்தான் நெருக்கமாக சுருண்டிருக்கும் டிஎன்ஏ மூலக்கூறுகள் அமைந்துள்ளன. டிஎன்ஏ மூலக்கூறுகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்தால் தென்படுவது ஜீன்களே. இந்த ஜீன்களில்தான் நீங்கள் எப்படிப்பட்டவராய் இருப்பீர்கள் என்பதை நிர்ணயிக்கத் தேவையான தகவல்கள் அனைத்தும் அடங்கியுள்ளன. “டிஎன்ஏ-வில் உள்ள இந்த மரபியல் அமைப்புதான் ஒவ்வொரு உயிரையும் தனித்தனியே மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுகிறது” என த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விளக்கமளிக்கிறது. “இந்த அமைப்பின் காரணமாகத்தான், நாய் மீனிலிருந்து வித்தியாசமாகவும், வரிக்குதிரை ரோஜாவிலிருந்து வித்தியாசமாகவும், வில்லோ எனப்படும் மரம் குளவியிலிருந்து வித்தியாசமாகவும் இருக்கிறது. இவ்வுலகிலுள்ள வேறு எவரிலிருந்தும் நீங்கள் வித்தியாசப்பட்டவராக இருப்பதற்கும் காரணம் இதுவே.”
உங்கள் உடலிலுள்ள ஒரே ஒரு செல்லின் டிஎன்ஏ-வில் அடங்கியுள்ள தகவல் எவ்வளவு இருக்கும் எனக் கேட்டால் ஸ்தம்பித்து விடுவீர்கள். ஏனெனில், இதுபோன்று சுமார் பத்து லட்சம் பக்கங்களில் உள்ள ஏராளமான விஷயங்கள் அந்த ஒரு செல்லில் அடங்கும்! ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்கு பரம்பரைப் பண்புகளை வழிவழியாய் கடத்துவது டிஎன்ஏ-வின் வேலை. எனவே, அது அனைத்து உயிரின் வழிகாட்டி என அழைக்கப்படுகிறது. ஆனால் பார்ப்பதற்கு டிஎன்ஏ எப்படி இருக்கும்?
வளைந்த மாடிப்படிகள் அல்லது குறுக்குச் சட்டம் அமைக்கப்பட்ட திருகிய ஏணி எப்படி காணப்படுமோ, அப்படியே இரண்டு இழைகள் ஒன்றோடொன்று பின்னிக் காணப்படுவதுதான் டிஎன்ஏ. இவ்விரண்டு இழைகளும் மென்காரங்கள் என்றழைக்கப்படும் நான்கு பொருட்களால் இணைக்கப்படுகின்றன. ஓரிழையிலுள்ள ஒவ்வொரு மென்காரமும் மற்றொரு இழையிலுள்ள மென்காரத்துடன் இணைகிறது. இந்த மென்கார இணைகளே திருகியுள்ள டிஎன்ஏ ஏணியின் குறுக்குச் சட்டத்தை அல்லது படிகளை உருவாக்குகின்றன. டிஎன்ஏ மூலக்கூறிலுள்ள மென்காரங்கள் எந்த வரிசையில் அமைந்திருக்கின்றனவோ, அந்த வரிசையே கடத்தப்படும் மரபியல் தகவலை நிர்ணயிக்கிறது. எளிதாக சொன்னால், உங்கள் முடியின் நிறத்திலிருந்து மூக்கின் தோற்றம் வரை கிட்டத்தட்ட உங்களைப் பற்றிய எல்லா ரிக்கார்டுகளையும் இந்த வரிசைதான் நிர்ணயிக்கிறது.
டிஎன்ஏ, ஆர்என்ஏ, புரோட்டீன்
செல்களில் ஏராளமாய் காணப்படும் பெரிய பெரிய மூலக்கூறுகள் புரோட்டீன்களே. பெரும்பாலான உயிரினங்களின் உலர் எடையில் பாதியளவுக்கும் மேற்பட்டது புரோட்டீன்களின் எடைதான் என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது! புரோட்டீன்கள் அவற்றைவிடச் சிறிய மூலக்கூறுகளான அமினோ அமிலங்கள் ஒன்றோடொன்று இணைவதால் உருவாகின்றன. இவற்றில் சிலவற்றை உங்கள் உடலே தயாரிக்கிறது. மற்றவற்றை நீங்கள் உட்கொள்ளும் உணவிலிருந்து உடல் பெற்றுக்கொள்கிறது.
புரோட்டீன்கள் நிறைய வேலைகளைச் செய்கின்றன. உதாரணமாக, இரத்த சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபீன் என்ற புரோட்டீனை எடுத்துக்கொண்டால், உங்கள் உடல் முழுவதற்கும் ஆக்ஸிஜனை அதுதான் எடுத்துச்செல்கிறது. நோய் எதிர்ப்புப் பொருள்கள் எனப்படும் புரோட்டீன்களோ உங்கள் உடல் நோய்களை விரட்டியடிக்க உதவுகிறது. இன்சுலின் போன்ற பிற புரோட்டீன்கள், உணவை எரித்து சக்தியளிப்பதற்கும் செல் வெவ்வேறு வேலைகளைச் செய்வதற்கும் உதவுகின்றன. மொத்தத்தில், உங்கள் உடலில் வெவ்வேறு வகை புரோட்டீன்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். அவற்றில் நூற்றுக்கணக்கானவை ஒரு செல்லில் மட்டுமே இருக்கலாம்!
ஒவ்வொரு புரோட்டீனும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்கிறது. இதை நிர்ணயிப்பது அதன் டிஎன்ஏ ஜீன்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட புரோட்டீன் உருவாவதற்குரிய மரபியல் தகவல்களை அந்த டிஎன்ஏ ஜீனிடமிருந்து செல் எப்படி பெற்றுக்கொள்கிறது? “புரோட்டீன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன” என்ற படத்தில் காட்டப்பட்டுள்ளதைப்போல், டிஎன்ஏ-வில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மரபியல் தகவல் முதலில் செல்லிலுள்ள நியூக்ளியஸிலிருந்து சைட்டோபிளாசத்திற்கு கடத்தப்பட வேண்டும். அங்குதான் புரோட்டீன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என்றழைக்கப்படும் ரிபோசோம்கள் அமைந்துள்ளன. ரிபோநியூக்ளிக் அமிலம் (ஆர்என்ஏ) என்ற நடுவர் போன்று செயல்படும் திரவத்தின் மூலமாகவே இது கடத்தப்படுகிறது. சைட்டோபிளாசத்தில் உள்ள ரிபோசோம்கள் இந்த ஆர்என்ஏ எடுத்துச்செல்லும் கட்டளைகளை “புரிந்துகொண்டு” அமினோ அமிலங்களை முறைப்படி வரிசைப்படுத்துகையில், ஒரு குறிப்பிட்ட புரோட்டீன் உருவாகிறது. இவ்வாறு டிஎன்ஏ, ஆர்என்ஏ-க்கும், புரோட்டீன் தயாரிப்புக்கும் இடையில் ஒன்றையொன்று சார்ந்த தொடர்பு உள்ளது.
உயிர் எங்கு ஆரம்பித்தது?
ஆண்டுக்கணக்கில் செய்யப்பட்ட மரபியல், மூலக்கூறு உயிரியல் பற்றிய ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இவற்றுக்குப் பின்னால் ஒரு படைப்பாளர் இருக்கிறாரா என்பதை இயற்பியல் வல்லுநர் பால் டேவிஸ் சந்தேகிக்கத்தான் செய்கிறார். இருந்தாலும், “இந்த ஒட்டுமொத்த திட்டத்தில், ஒவ்வொரு மூலக்கூறுக்கும் ஒரு குறிப்பிட்ட வேலை இருக்கிறது; குறிப்பிட்ட இடமும் இருக்கிறது. அதனால்தான் செல்லுக்குள் சரியான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் செல்லிலுள்ள பொருட்கள் இங்குமங்குமாக நகர்ந்துசெல்கின்றன. செல் முழுக்க மூலக்கூறுகள் பயணிக்கின்றன. அப்போதுதான் மற்ற பொருட்களை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்தித்து அவை தத்தம் வேலைகளைச் செய்துமுடிக்க முடியும். இதைச் செய் அதைச் செய் என்றும், இங்கு வா அங்கு போ என்றும் அதட்டி வேலை வாங்குவதற்காக எந்தவொரு தலைவனும் இல்லாமலே வேலை நடக்கிறது. அவற்றின் வேலையை கண்காணிக்க எந்தவொரு சூப்பர்வைஸரும் இல்லை. மூலக்கூறுகள் செய்ய வேண்டிய வேலையை மூலக்கூறுகளே செய்கின்றன. அதாவது, எல்லா பக்கமும் சுற்றிவந்து, தன்னிச்சையாக ஒன்றோடொன்று மோதியும் விலகியும் ஒன்றையொன்று ஏற்றுக்கொள்கின்றன. . . . மொத்தத்தில், சிந்தனைத் திறனில்லா இவ்வணுக்கள் ஒன்றுசேர்ந்து மிக துல்லியமாக கலைநயத்துடன் உயிரெனும் நடனமாடுகின்றன” என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
ஆகவே செல்லிற்குள் நடக்கும் வேலைகளை ஆராய்ந்துள்ள அநேகர், புத்திநுட்பமுள்ள ஒரு சக்தியே படைப்புக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவது நியாயம்தான். அது ஏன் எனக் காண்போம்.
[அடிக்குறிப்புகள்]
a செல்களின் பண்புகளையும் அவற்றிலுள்ள வேதிப்பொருட்களையும் ஆராய்வதற்காக, விஞ்ஞானிகள் மையவிலக்கியையும் பயன்படுத்துகின்றனர். இது, அவற்றிலுள்ள முக்கியப் பொருட்களைப் பிரிக்க பயன்படும் ஒரு கருவியாகும்.
[பக்கம் 5-ன் பெட்டி/வரைப்படம்]
செல்லுக்குள் ஒரு நோட்டம்
ஒவ்வொரு செல்லினுள்ளும் ஒரு நியூக்ளியஸ் உள்ளது.—இதுவே அந்த செல்லின் கட்டுப்பாட்டு மையம். குரோமோசோம்கள் நியூக்ளியஸினுள் அமைந்துள்ளன. இவற்றில்தான் நெருக்கமாக சுருண்டுள்ள டிஎன்ஏ மூலக்கூறுகளும் புரோட்டீனும் உள்ளன. இந்த டிஎன்ஏ மூலக்கூறுகளின் மேல் ஜீன்கள் அமைந்திருக்கும். புரோட்டீன்களை உற்பத்தி செய்யும் ரிபோசோம்கள், செல்லில் நியூக்ளியஸுக்கு வெளியிலுள்ள சைட்டோபிளாசத்தில் அமைந்துள்ளன.
[வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இந்த அடிக்குறிப்பு தமிழில் இல்லை
செல்
ரிபோசோம்கள்
சைட்டோபிளாசம்
நியூக்ளியஸ்
குரோமோசோம்கள்
டிஎன்ஏ—உயிர் ஏணி
[பக்கம் 7-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இந்த அடிக்குறிப்பு தமிழில் இல்லை
டிஎன்ஏ எவ்வாறு பெருகுகிறது
பார்ப்பதற்கு எளிதாக இருப்பதற்காக, முறுக்கிய டிஎன்ஏ சுருள் தட்டையாக காட்டப்பட்டுள்ளது.
1. செல் பிரிந்து அடுத்தடுத்த செல்களை உற்பத்தி செய்வதற்கு முன்பு, மற்றொரு டிஎன்ஏ-வை அது உருவாக்க (அந்தச் செல்லின் டிஎன்ஏ-வை நகல் எடுக்க) வேண்டும். முதலில், டிஎன்ஏ-வின் இரட்டை இழைகளை புரோட்டீன்கள் பிரித்துவிடுகின்றன. அது ஜிப்பைத் திறப்பதுபோல் இருக்கும்.
புரோட்டீன்
2. பின்பு, மென்காரங்கள் எவ்வாறு இணைய வேண்டும் என்பதற்கான விதிகளை தப்பாது அப்படியே பின்பற்றி, செல்லில் (இருக்கும்) தனித்தனி மென்காரங்கள், பிரிந்துள்ள இழைகளுடன் இணைகின்றன.
தனி மென்காரங்கள்
3 கடைசியாக, விதிகளடங்கிய தொகுப்பும் இரட்டிக்கிறது. ஆகவே, செல் பிரிகையில், புதிதாக உருவான ஒவ்வொரு செல்லும் அதே டிஎன்ஏ தகவல் தொகுப்பைப் பெறுகிறது.
புரோட்டீன்
புரோட்டீன்
டிஎன்ஏ மென்காரங்கள் இணைவதற்கான விதி:
A எப்பொழுதும் T-யுடன்
A T தைமைன்
T A அடினைன்
C எப்பொழுதும் G-யுடன்
C G குவானைன்
G C சைட்டோஸைன்
[பக்கம் 8, 9-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
புரோட்டீன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன
எளிதாய் புரிந்துகொள்வதற்காக, 10 அமினோ அமிலங்கள் இணைந்து உருவான ஒரு புரோட்டீனைப் படத்தில் விளக்கியுள்ளோம். பெரும்பாலான புரோட்டீன்கள் 100-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் இணைந்து உருவாகும்
1 ஒரு குறிப்பிட்ட புரோட்டீன், ஜிப்பைத் திறப்பதுபோல் டிஎன்ஏ இழைகளை பிரித்துவிடுகிறது
புரோட்டீன்
2 தனித்து இருக்கும் ஆர்என்ஏ மென்காரங்கள், இரண்டாகப் பிரிந்த இழைகளிலுள்ள டிஎன்ஏ மென்காரங்களுடன் இணைந்து, ஆர்என்ஏ இழையொன்றை உருவாக்குகின்றன. இது செய்தி எடுத்துச்செல்லும் ஆர்என்ஏ எனப்படுகிறது
ஆர்என்ஏ தனி மென்காரங்கள்
3 புதிதாக உருவான, செய்தி எடுத்துச்செல்லும் இந்த ஆர்என்ஏ மட்டும் கழன்று ரிபோசோம்களிடம் சென்றுவிடுகிறது
4 அவ்வாறு கழன்றுசென்ற ஆர்என்ஏ ரிபோசோம்களிடம் செல்கையில் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தையும் தன்னுடன் எடுத்துச்செல்கிறது
ரிபோசோம்
கழன்றுசென்ற ஆர்என்ஏ
5 செய்தி எடுத்துச்சென்ற அந்த ஆர்என்ஏ-வை நோக்கி ரிபோசோமும் வேகமாக நகரும்போது, அமினோ அமிலங்கள் ஒன்றோடொன்று இணைந்து, ஒரு சங்கிலி உருவாகிறது
அமினோ அமிலங்கள்
6 இவ்வாறு புரோட்டீன் சங்கிலி முழு உருவைப் பெற்றபின், மடிப்பு மடிப்பாக மாறி அதன் வேலையைச் செய்வதற்கேற்ற உருவைப் பெறுகிறது. பிறகு அது ரிபோசோமால் விடுவிக்கப்படுகிறது
கழன்றுசென்ற ஆர்என்ஏ-வில் இரண்டு முக்கிய முனைகள் உள்ளன:
செய்தி எடுத்துச்செல்லும் ஆர்என்ஏ விதியை ஒரு முனை புரிந்துகொள்கிறது
சரியான அமினோ அமிலத்தை மற்றொரு முனை எடுத்துச்செல்கிறது
கழன்றுசென்ற ஆர்என்ஏ
ஆர்என்ஏ மென்காரங்கள் T-யைக் காட்டிலும் U-வையே பயன்படுத்துவதால், U A-யுடன் இணைகிறது
A U யுராஸில்
U A அடினைன்