உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 9/8 பக். 11-14
  • அவை வானில் பவனிவர என்ன தேவை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவை வானில் பவனிவர என்ன தேவை?
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விமானங்கள் தயார் நிலையில் எப்படி வைக்கப்படுகின்றன
  • D வகைப் பராமரிப்பு
  • பறப்பதற்கு தயார்
  • பத்திரமான விமானப் பயணத்திற்கு
    விழித்தெழு!—2000
  • விமானங்கள்—பாதுகாப்பானவையா?
    விழித்தெழு!—1999
  • அனுபவமுள்ள விமானியிடமிருந்து பயண டிப்ஸ்
    விழித்தெழு!—2003
  • விமானத்தின் ஜனனம்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 9/8 பக். 11-14

அவை வானில் பவனிவர என்ன தேவை?

“லேடீஸ் அண்ட் ஜென்டில்மென், நியூ யார்க் நகரத்தின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.” விமான நிலையத்திற்குள் காலடியெடுத்து வைக்கும் அனைத்து பயணிகளையும் இனிமையான குரல் வரவேற்கிறது. விமானத்தில் வந்தவர்கள் நிதானமாக வெளியேற, விமானத்தின் உள்ளேயும் அதற்கு வெளியேயும் அமளிதுமளியான வேலை ஆரம்பமாகிறது. உங்களை சொகுசாக சுமந்து வந்த விமானத்திற்கு என்ன உபச்சாரம் நடக்கிறதென்பதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

வெறுமனே தரையில் பொம்மையைப்போல் நின்று கொண்டிருக்கும்போதல்ல, பயணிகளை அல்லது சரக்குகளை ஏற்றிக்கொண்டு அங்கும் இங்கும் வானில் பவனிவரும்போதே விமானங்கள் லாபத்தை அள்ளிக்கொட்டுகின்றன. எனவே, விமானத்தின் உரிமையாளர்கள் தங்கள் விமானங்களை எப்போதும் ஆகாயத்திலேயே வலம்வந்து கொண்டிருக்கச் செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். பயணிகள் தங்களுடைய லக்கேஜுகளுக்காக காத்திருக்கையில், மீண்டும் நீலவானில் நீந்துவதற்கு விமானம் அதிவிரைவாக ஆயத்தமாக்கப்படுகிறது. மெக்கானிக்குகள் பம்பரமாக சுழல்கின்றனர். முந்தின பயணத்தின்போது, ஏதாவது இயந்திரக்கோளாறு ஏற்பட்டதாகப் குறிப்புகள் இருக்கிறதாவென விமானப் பயணப்பதிவை அவர்கள் பார்வையிடுகின்றனர். விமானம் பாதுகாப்பாக பறப்பதற்கு தடையாக இருக்கும் எந்தக் கோளாறும் சரி செய்யப்படுகிறது.

விமானத்தின் சக்கரங்கள், டயர்கள், பிரேக்குகள், இன்ஜின் ஆயில் அளவு எல்லாம் சரி பார்க்கப்படுகிறது. பயணிகள் அமரும் இருக்கைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. சமையல் பிரிவுக்குத் தேவையான உணவுப்பொருட்களும் குடிப்பதற்கு தேவையான பானங்களும் நிரப்பப்படுகின்றன. இறக்கையில் உள்ள டாங்குகளில் பயணத்திற்கு தேவையான எண்ணெயும் நிரப்பப்படுகிறது. அடுத்த பயணத்திற்காக விமானம் கிளம்புவதற்குமுன், விமான சிப்பந்திகள் விமானத்தைச் சுற்றி நடந்து பார்வையிடுகின்றனர். பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதாவென ஆராய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட சீராக்கப் பணியும் உடனடி பராமரிப்பும் ஆயிரக்கணக்கான விமானங்களுக்கு செய்யப்படுகிறது. ஆனால், ஒரு பெரிய பயணிகள் விமானம் பாதுகாப்பாக பறப்பதற்கு செய்யப்படும் பல காரியங்களில் இது மிகச் சின்னஞ்சிறியதே. வாகனங்களை அவ்வப்பொழுது சர்வீஸ் செய்வதுபோலவே விமானங்களுக்கும் விரிவான, பெருஞ்செலவு பிடிக்கும் ‘சர்வீஸ்’ ஒழுங்காக செய்யப்படவேண்டும். இவற்றை யார் செய்கிறார்கள்? இந்த வேலை எப்படி செய்யப்படுகிறது?

விமானங்கள் தயார் நிலையில் எப்படி வைக்கப்படுகின்றன

ஐக்கிய மாகாணங்களில், பயணிகள் மற்றும் சரக்குகள் உட்பட 95 சதவீதத்திற்கும் அதிகமான போக்குவரத்தை ஏர்லைன்ஸ்கள் மேற்கொள்கின்றனவென ஐ.மா. ஆகாயப் போக்குவரத்து சங்கம் குறிப்பிடுகிறது; இந்த ஏர்லைன்ஸ்கள் எல்லாம் இந்த அமைப்பின் அங்கத்தினர்கள். 1997-⁠ல், இந்த ஏர்லைன்ஸ்கள் 65,500 விமான மெக்கானிக்குகளை வேலைக்கு வைத்திருந்தன. பொறியியலாளர்கள், பராமரிப்பு பணியாளர்களோடு, விமான மெக்கானிக்குகளும் பணியில் ஈடுபடுகின்றனர். விமானங்களைப் பறப்பதற்கு தகுதியானவையாகவும் பிரயாணிகளுக்கு வசதி செய்து தருவதுமே இவர்களின் பணி. கண்காணித்தல், பழுதுபார்த்தல், விமானமெனும் இயந்திரப் பறவையில் இருக்கும் விசேஷ இயந்திரங்கள a புதுப்பித்தல் போன்றவையே இதில் அடங்கும். விமானம் பாதுகாப்பாக பறக்க உதவுபவை இவையே. நான்கு டன்னுக்கும் அதிக எடையுள்ள ஜெட் இன்ஜின்களை பழுதுபார்ப்பது முதல் கேபினில் இருக்கும் கிழிந்துபோன தரைவிரிப்பை மாற்றுவது உட்பட அனைத்துமே இந்தப் பராமரிப்பு வேலையில் அடங்கும்.

இயந்திரக் கோளாறுகளில் பெரும்பாலானவை உடனுக்குடன் கவனிக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், மற்ற பராமரிப்புகளை விமான பராமரிப்பு திட்டம் அட்டவணைப்படுத்துகிறது. இவை, இதுவரை எத்தனை மைல்கள் விமானம் பறந்தது என்பதன் அடிப்படையில் அல்ல. மாறாக, ஒவ்வொரு விமானமும் எத்தனை மாதங்கள் பறந்தன அல்லது எத்தனை சுழற்சிகள் b சென்றன என்பதன் அடிப்படையிலும் எத்தனை மணிநேரங்கள் பறந்தது என்பதன் அடிப்படையிலுமே பராமரிப்பு கொடுக்கப்படுகிறது. விமானத்தை தயாரித்தவர்களால் அதை இயக்குபவர்களுக்கு பராமரிப்புக்கான பரிந்துரை அளிக்கப்படுகிறது. இந்தப் பராமரிப்பு சரியாகத்தான் செய்யப்பட்டதா என்ற அரசாங்க ஆய்வும் இதில் உள்ளடங்கும். ஒவ்வொரு விமானத்திற்கும் ஒரு பராமரிப்பு திட்டம் இருக்கிறது. இது சிறிய அளவிலான பராமரிப்பு முதல் நடுத்தர, பெரிய அளவிலான பராமரிப்புகளை உட்படுத்துகிறது. இவை, A, B, C, D, L, அல்லது Q போன்ற எழுத்துக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஒரு 747—200 விமானம், 36,000 மணிநேரங்கள் பறந்த சாதனையை அடைய சுமார் எட்டு வருடங்கள் எடுத்தன. அப்படி சாதனையை அடைந்ததும், பெரிய அளவிலான பராமரிப்புக்காக ஷெட்டுக்கு போகவேண்டியதாயிற்று. இவ்வகை பராமரிப்பு சில சமயங்களில் D வகை என அழைக்கப்படுகிறது. சிக்கலான, நிறைய நேரம் பிடிக்கும் இந்தப் பராமரிப்பைப் பற்றி ஓவர்ஆல் அண்ட் மெய்ண்டனன்ஸ் என்னும் ஆகாயப் போக்குவரத்து-நிர்வாகம் பற்றிய பத்திரிகை பின்வருமாறு குறிப்பிடுகிறது: “முடிந்தவரை விமானத்தை புதுப்பிக்கப்பட்ட நிலைக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கம். . . . D வகை பராமரிப்பு, 15,000 முதல் 35,000 மணிநேர கடின உழைப்பை உட்படுத்துகிறது. இதனால், 15 முதல் 30 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக விமானத்தை ஷெட்டில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. 4 கோடி முதல் 8 கோடி ரூபாயை இது விழுங்கிவிடும்.” “70% கடின உழைப்பும் 30% மூலப்பொருட்கள் அடங்கியதே D வகை பராமரிப்பு” என விண்வெளி-நிர்வாகம் பற்றிய தகவல்களை அளிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த ஹால் கிறிஸ்மேன் குறிப்பிடுகிறார். இச்செலவில் கொஞ்சம் உங்கள் டிக்கெட் விலையில் சேர்க்கப்பட்டிருக்கிறதென்பது தெரிந்த விஷயமே.

D வகைப் பராமரிப்பு

பராமரிப்புக்கான விசாலமான ஷெட்டில் ஒரு விமானம் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறதென்றால், பராமரிப்புக் குழு பணியில் உடனே முழு மூச்சில் இறங்குகின்றது; இவர்களிடம் உதிரி பாகங்களை சப்ளை செய்யும் டிபார்ட்மெண்டுகளும் இந்தப் பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிடங்குகளும் இருக்கின்றன. வேலை செய்வதற்கான மேசைகள், தளங்கள், மேடைகள் ஆகியவை ஆயத்த நிலையில் வைக்கப்படுகின்றன. விமானத்தின் எட்டமுடியாத பாகங்களையும் இவற்றின் உதவியால் சென்றெட்ட முடியும். இருக்கைகள், தரை, சுவர், கூரைச் சட்டங்கள், சமையல் பிரிவுகள், கழிவறைகள், மற்றும் பல சாதனங்கள் விமானத்தில் இருந்து கழற்றப்படுகின்றன. அதாவது, விமானத்தின் ஒவ்வொரு பாகமுமே அக்குவேறு ஆணிவேராக பிரித்து எடுக்கப்படுகிறது. இதன் மூலம் விமானத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ஜாக்கிரதையாக பார்வையிட முடியும். இப்படி எல்லாக் குறிப்புகளும் படிப்படியாக பின்பற்றப்படுகிறது. தகடுகளில் விரிசல்கள், துருபிடிப்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா எனவும் பரிசோதிக்கப்படுகிறது.

இவ்வகை பராமரிப்பில், விமானம் தரையிறங்க பயன்படும் கருவிகள், ஹைட்ராலிக் அமைப்புகள், இன்ஜின்கள், மற்ற பல பாகங்கள் முழுவதுமாகவே மாற்றப்படலாம். இன்ஜினியர்களின் திறமைகள், தொழில்நுட்பம் சார்ந்த பராமரிப்பிற்கு செயல்முறைகளை எழுதுபவர்கள், தரக்கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர்கள், ஏவியானிக்ஸ் c தொழில்நுட்ப வல்லுநர்கள், தகடு வேலையாட்கள், விமானம் மற்றும் இன்ஜின் மெக்கானிக்குகள் d தேவைப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசாங்க லைசென்ஸ் பெற்றவர்கள். விமான உள்அறை மெக்கானிக்குகள், பெயிண்டர்கள், கிளீனர்கள் ஆகியோரை சேர்த்தால், பராமரிப்பு பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100-⁠க்கும் அதிகமாக ஆகிறது. சாதனங்கள், உதிரி பாகங்களை வழங்குவோரும், இந்தப் பராமரிப்பு வேலையை துல்லியமாக நிறைவேற்றும் இன்னும் பலரும் இந்த எண்ணிக்கையோடு சேர்க்கப்பட வேண்டும்.

பறக்கும்போது ஏற்படும் அதிர்வுகள், விமானத்தின் உள்ளே ஏற்படும் அழுத்தம், ஒவ்வொரு தடவை விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் ஏற்படும் அதிர்வுகள் காலப்போக்கில் விமானத்தின் தகடுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்சினையை மேற்கொள்ள, மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிற நோய்கண்டுபிடிப்பு முறைகளையே ஆகாயப் போக்குவரத்துத் துறையும் பயன்படுத்துகிறது. மனிதக் கண்களுக்கு புலப்படாதவற்றை கண்டுபிடிக்க, கதிரியக்கம், அல்ட்ராசோனிக், என்டோஸ்கோபி முறைகளையே இரு துறைகளும் பயன்படுத்துகின்றன.

சாதாரண மருத்துவ எக்ஸ்-ரே முறையில், நிழற்பட ஃபிலிமிற்கும் எக்ஸ்-ரே கதிர்களுக்கும் இடையே நோயாளி நிறுத்தப்படுகிறார். இந்த முறையை பயன்படுத்தி, தரையிறங்க உதவும் சாதனங்கள், இறக்கைகள், ஜெட் இன்ஜின்கள் ஆகியவற்றை பராமரிப்பு மேற்பார்வையாளர்கள் எக்ஸ்ரே எடுக்கின்றனர். உதாரணமாக, மேற்பார்வை செய்யப்பட வேண்டிய இன்ஜினின் வெளிப்புறத்தின்மேல் எக்ஸ்-ரே நிழற்படத்தகடு ஒன்று வைக்கப்படுகிறது. அடுத்ததாக, இன்ஜினில் இருக்கும் ஊதுலையின் உள்ளே நீளமான உலோகக் குழாய் ஒன்று வைக்கப்படுகிறது. முடிவாக, பென்சில் ரப்பர் அளவான, சிறிய கதிரியக்கமுடைய இரிடியம் 192​—⁠சக்திவாய்ந்த ஓரகத்தனிமம், இந்தக் குழாயினுள் செலுத்தப்படுகிறது. எக்ஸ்ரே நிழற்படத் தகட்டின்மேல் ஒளி விழும்படி இது செய்கிறது. இன்ஜின் பழுதுபார்க்கப்படுவதை அல்லது மாற்றப்படுவதை தேவைப்படுத்தும் குறைகள், விரிசல்களை வெளிப்படுத்த இந்த நிழற்படம் உதவுகிறது.

D வகை பராமரிப்பின்போது, விமானத்தின் எரிபொருள், அதன் ஹைட்ராலிக் திரவங்களில் கொஞ்சமும் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படுகிறது. மனித உடலில் நுண்ம உயிரினங்கள் இருந்தால், அவற்றைக் கொல்ல ஆண்டிபயாடிக்குகள் கொடுக்கப்படுகின்றன. அதேபோல ஜெட்-எரிபொருளில் இருக்கும் நுண்ம உயிரினங்களைக் கொல்ல, பையோஸைடு எனப்படும் உயிரியக் கொல்லி கொடுக்கப்படுகிறது. தண்ணீர், காற்று, எரிபொருள் மூலம் பூஞ்சை, பாக்டீரியாக்கள் போன்றவை ஜெட் விமானத்தின் எரிபொருள் டாங்குகளில் சென்றுவிடுகின்றன. இந்த ‘சிகிச்சைமுறை’ மிக முக்கியமானது. ஏனென்றால், நுண்ம உயிரினங்களின் கழிவுகள், எரிபொருள் டாங்குகளின் உட்புற மேற்பரப்பில் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணப்பூச்சை அரித்துவிடக்கூடும். இதன் விளைவாக, எரிபொருள் அளவை காட்டும் கருவிகள் பாதிக்கப்படக்கூடும். எனவே, இக்கருவிகள் தவறான அளவை பைலட்டுகளுக்கு தரக்கூடும்.

தேய்மானம், அதிர்வுகள், எரிபொருள் டாங்குகளின் உட்புறத்தில் ஏற்படும் சேதம் காரணமாக அவற்றில் கசிவுகள் ஏற்படலாம். D வகைப் பராமரிப்பை மேற்கொள்ளும் பணியாளர்களின் குழுவைப் பார்த்து மேற்பார்வையாளர் பின்வருமாறு கேட்கிறார்: “உங்களில் யாருக்காவது ‘நீச்சல்வீரனாக’ ஆசையா?” சந்தோஷமற்ற, ஆனால் முக்கியமான இந்த வேலை அன்று ஜானின் தலையில் விழுந்தது. தண்ணீருக்கடியில் நீந்தும் ஸ்க்யூபா டைவரைப் போலக் காட்சியளிக்கும் ஜான், பருத்தியாலான பிரத்தியேக ஆடையை அணிந்துகொள்கிறார்; அவரது கால்களில் நீருக்கடியில் நீந்துவதற்கான ஷூ மட்டுமே இல்லை! வெளிக்காற்றை சுவாசிப்பதற்கு தேவையான இணைப்போடு கூடிய ரெஸ்பிரேட்டரை மாட்டிக்கொள்கிறார். உபகரணங்களையும், கசிவை அடைப்பதற்குப் பயன்படும் வஸ்துவையும் பாதுகாப்புக்காக ஒரு விளக்கையும், எடுத்துக்கொள்கிறார். விமானத்தின் இறக்கையின் அடிப்பாகத்தில் இருக்கும் சிறிய ஓட்டை மூலம் காலி டாங்கினுள் நுழைகிறார். எரிபொருள் டாங்கின் கசிவுக்கு காரணமான இடத்தைக் கண்டுபிடிக்கிறார். அதை அடைக்கிறார்.

போயிங் 747-⁠ன் எரிபொருள் டாங்க் மிகப் பெரியது. பல அறைகளைக் கொண்ட பிரமாண்டமான இந்த டாங்குகள் விமானத்தின் இறக்கைகளில் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சிறிய திறப்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. சிறிய அல்லது மூடப்பட்ட இடத்தில் இருக்க நடுங்குபவர்களுக்கு ஏற்றதல்ல இந்த டாங்குகள். போயிங் 747-400-⁠ன் டாங்கு 2,10,000 லிட்டருக்கும் அதிகமான எண்ணெயை கொள்ளக்கூடியது. அதனால், நடுவில் எங்கும் நிறுத்தாமல், அ.ஐ.மா., கலிஃபோர்னியாவிலிருக்கும் சான் ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து, 12,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னிவரை செல்லும் நீண்ட பயணம் செய்யமுடிகிறது. அதிக அளவிலான எரிபொருள் சேமிப்பு இப்படிப்பட்ட தூர பயணத்தையும் சாத்தியமாக்குகிறது.

தரையில் இருந்து மூன்று மாடி உயரத்தில் இருக்கும் விமானத்தின் உள்அறையில், வானிலை பற்றிய குறியீடுகளைத் தரும் டிவியைப் போன்ற ரடார் திரையை ஏவியானிக்ஸ் தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் மேற்பார்வையிடுகிறார். 500 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்படப் போகும் இடியுடன்கூடிய புயலையும், கடும் காற்றுகொந்தளிப்பையும் கண்டுபிடிக்க பைலட்டுகளுக்கு உதவுபவை இந்தக் கருவிகளே. எனவே, “ஸீட் பெல்ட்டை அணிந்துகொள்ளுங்கள்” என்ற சிக்னல் பைலட்டிடம் இருந்து வந்தால், அவர் தன்னுடைய ரடார் திரையில் கடும் காற்றுகொந்தளிப்பை பார்த்திருக்க வேண்டும் என்பதே அர்த்தம். இருந்தாலும், காயமேற்படுவதைத் தவிர்க்க, பயணிகள் எப்போதுமே ஸீட் பெல்ட்டை அணிந்திருக்க வேண்டும் என பல ஏர்லைன்ஸ்கள் வேண்டுகோள் விடுக்கின்றன. அந்த சிக்னலை கேப்டன் அணைத்துவிட்டாலும்கூட, பயணிகள் அதை அணிந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனென்றால், காற்றுமண்டலத்தில் உண்டாகும் மாற்றங்களால், மேகமற்ற இடங்களிலும் கடும் காற்று கொந்தளிப்பு திடுமென ஏற்படுகிறது. இது, பைலட் சிக்னல் கொடுப்பதற்கு முன்னமே ஏற்படலாம்.

D வகை பராமரிப்பின்போது, உயிர்காப்பு உடைவகைகள், எமர்ஜென்சி லைட் உட்பட பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது. பிரயாணிகளுக்கான எமர்ஜென்சி ஆக்ஸிஜன் அமைப்பை சரி பார்க்கும்போது, இந்த ஆக்ஸிஜன் முகமூடிகள் மரக்கிளைகளில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஆரஞ்சுப் பழங்களைப் போல் காட்சியளிக்கின்றன. ஜெட் விமானங்கள் வழக்கமாக தரையிலிருந்து 6-11 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கின்றன. இந்த உயரத்தில் உயிரோடு இருப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவும் காற்றுமண்டலத்தின் அழுத்தமும் இருப்பதில்லை. இந்தப் பிரச்சினை எப்படி தீர்க்கப்படுகிறது? விமானத்தில் இருக்கும் அழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பு, வெளியில் இருக்கும் காற்றை உள்ளிழுக்கிறது. பின், அதை அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது. பின்னர் இந்தக் காற்றை, பயணிகள் அறைக்கு தேவையான உஷ்ணத்தில் அனுப்புகிறது. உள்அறையில் உள்ள காற்றின் அழுத்தம் பாதுகாப்பான அளவைவிட குறைந்தால், பிரயாணிகளின் தலைக்குமேல் இருக்கும் பகுதியிலிருந்து ஆக்ஸிஜன் முகமூடிகள் தானாகவே கீழே வரும். பிரயாணிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அது கொடுக்கும். எமர்ஜென்சி ஆக்ஸிஜனுக்கு அவசியம் இல்லாத உயரத்திற்கு விமானம் இறங்கும்வரை இந்த எமர்ஜென்சி ஆக்ஸிஜன் அமைப்பு செயல்படும். சில விமானங்களில், இந்த ஆக்ஸிஜன் முகமூடிகள், பிரயாணிகளின் தலைக்குமேல் அல்ல, இருக்கைக்கு பின்னால் வைக்கப்பட்டிருக்கும். எனவேதான், விமானம் புறப்படுவதற்குமுன் கொடுக்கப்படும் பிரயாணிகளுக்கான குறிப்புகளுக்கு கவனம் கொடுக்க வேண்டும். அப்போதுதான், ஆக்ஸிஜன் முகமூடிகள் எங்கே வைக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

பெரிய அளவிலான பராமரிப்பு வேலை செய்யும்போது, உள்அறைக்கு புதிய சுவர் பொருத்தப்படுதல், புதிய கூரைச் சட்டங்கள் அமைத்தல், தரை விரிப்புகள், திரைகள், ஸீட் குஷன் மேலுறை மாற்றுதல் போன்றவையும் செய்யப்படுகின்றன. சமையல் பிரிவிலுள்ள சாதனங்கள் எல்லாம் அக்குவேறு ஆணிவேறாக பிரிக்கப்பட்டு, நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்படுகிறது.

பறப்பதற்கு தயார்

மேற்பார்வை செய்தல், செக்பண்ணுதல், பழுதுபார்த்தல் போன்ற பெரிய அளவிலான பராமரிப்பு வேலை 56 நாட்களுக்கு நடந்த பிறகு, பழுதுபார்க்கும் ஷெட்டில் இருந்து வெளியே வரவும், பிரயாணிகளையும் சரக்குகளையும் ஏற்றி பறக்க விமானம் தயார். பராமரிப்பு வேலைகளின் ஒரு சிறு பகுதியே இங்கு விளக்கப்பட்டது. ஆனால், விமானம் பறப்பதற்குமுன், எல்லா சாதனங்களும் சரியாக இயங்குகின்றனவா என்பது உறுதிசெய்யப்படுகிறது. ஒரு விசேஷ பைலட் குழு சோதனை ஓட்டமாக விமானத்தில் பறந்து இதை உறுதிசெய்கிறது. விமானத்தை பறப்பதற்கு தயாராக வைப்பதற்கு தொழில் திறமையும் தொழில்நுட்பமும் எவ்வளவு அவசியம் என்பதை சுருக்கமாக சிந்தித்தது உங்கள் பயணத்திற்கு உறுதியளிக்கிறதல்லவா!

விமானங்களை தயார் நிலையில் வைப்பதற்கு மிகச் சிறந்த ஓர் உபகரணம் இருக்கிறது. அது என்ன? மனிதனே! கூரிய பார்வையும் எச்சரிப்புடன் இருக்கும் மனதும். நன்கு பயிற்சி பெற்ற இந்தப் பணியாளர்கள் தங்கள் பணியை மிகவும் ஜாக்கிரதையாகவே செய்கின்றனர். பராமரிப்பு வேலையின் தரம் குறைந்தால், மிகப் பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அவர்களும் அறிந்திருக்கின்றனர். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பத்திரமாகவும் விரைவாகவும் சொகுசாகவும் உங்களை கொண்டு செல்வதே அவர்கள் நோக்கம்.—ஐ.மா. ஆகாயப் போக்குவரத்து பாதுகாப்பு மேற்பார்வையாளரால் அளிக்கப்பட்டது.

[அடிக்குறிப்புகள்]

a போயிங் 747—400 விமானம், 60 லட்சம் உதிரிபாகங்களை உடையது. இணைப்பதற்கு உதவும் ரிவிட்டுகளும் போல்ட்டுகளும், மற்றும் 275 கி.மீ நீளமுடைய எலெக்ட்ரிகல் வயர்களுமே இவற்றில் பாதி.

b ஒரு சுழற்சி என்பது ஒருமுறை நிலத்திலிருந்து உயரப் பறந்து தரையிறங்குவதையே குறிக்கிறது.

c “ஏவியானிக்ஸ்” என்பது ஏவியேஷன் எலக்ட்ரானிக்ஸ் என்பதன் சுருக்கமே.

d விமானம், இன்ஜின் பராமரிப்பு சர்டிஃபிகேட்டுகளை உடைய மெக்கானிக்குகள், விமானத்தின் குறிப்பிட்ட பாகங்களை பழுதுபார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

[பக்கம் 12-ன் படங்களுக்கான நன்றி]

Courtesy of Pan Am Historical Foundation

Archives and Special Collections, University of Miami Library

[பக்கம் 13-ன் படங்களுக்கான நன்றி]

Courtesy of United Airlines

Courtesy of United Airlines

Courtesy of United Airlines

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்