ஜீன்கள், டிஎன்ஏ-க்கள், நீங்கள்
எங்கே, கண்ணாடிக்கு முன்னால் நின்று உங்கள் தலைமுதல் கால்வரை நன்றாக உற்றுப் பாருங்கள்! உங்கள் கண்களின் நிறம் என்ன? முடியின் தன்மை என்ன? தோலின் நிறம்? உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது? உங்களுக்கு என்னென்ன திறமைகள் உள்ளன? அதுசரி, ஏன் உங்கள் தோற்றம் இப்படி இருக்கிறது? உங்களுக்கே உரிய குறிப்பிட்ட பண்புகளும் திறமைகளும் ஏன் உள்ளன? பாரம்பரிய குணாதிசயங்களைப் பற்றிய ஆய்வான மரபியல், சுற்றுச்சூழலின் பாதிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் இக்காலத்தில் இந்தப் புதிர் விடுவிக்கப்பட்டு வருகிறது.
“என்ன, ‘மரபியலா?’ ” என்று நீங்கள் ஒருவேளை மலைக்கலாம். “அப்பப்பா, அது விஞ்ஞான பாடமாச்சே, அதையெல்லாம் புரிந்துகொள்வது ரொம்ப கஷ்டம்!’ என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால், நீங்கள் யாரையாவது பார்த்து, ‘அவ கண்ணைப் பாரு, அப்படியே அவ அப்பாவோட கண்ணைப்போல பச்சை நிறம்! அவளோட சிவந்த முடியையும், உடம்பெல்லாம் இருக்கும் புள்ளிகளையும் பார்த்தால் அவ அம்மாவைப் போலவே இருக்கு’ என்று எப்பொழுதாவது சொன்னதுண்டா? அப்படியென்றால், மரபியலின் அடிப்படையான ஓர் அம்சம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அதாவது, உடல் தோற்றம் பெற்றோரிடமிருந்து பிள்ளைக்குக் கடத்தப்படுகிறது என்பதுதான் அது. அத்துடன், இந்த அம்சமே, மனிதன் எப்படி வந்தான்—பரிணாமத்தாலா படைப்பாலா என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்வதற்கான ஆரம்பம் என்பதைக் காட்டுகிறது. முதலில், பரம்பரைப் பண்புகள் எவ்வாறு வழிவழியாக கடத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
செல்கள் என்றழைக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணியவையும், உயிருள்ளவையுமான பொருட்களால் ஆனதுதான் உங்கள் உடல். சராசரியாக 1,00,00,000 கோடி செல்கள் நம் ஒவ்வொருவர் உடலிலும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லின் உட்புறத்திலும் நியூக்ளியஸ் என்ற கரு உள்ளது. அந்தக் கருவினுள் ஆயிரக்கணக்கான ஜீன்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தனித்தனி பரம்பரைப் பண்புகள் அமைந்துள்ளன. இவைதான் செல்லின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, உங்கள் தனிப்பண்புகள் சிலவற்றை நிர்ணயம் செய்கின்றன. அநேக ஜீன்கள் உங்கள் இரத்தத்தின் குரூப்பையும் நிர்ணயிக்கலாம். மற்றவை உங்கள் தலைமுடியின் தன்மையையும், உங்கள் கண்களின் நிறத்தையும், இவைபோன்ற இன்னும் சிலவற்றையும் நிர்ணயிக்கலாம். ஆகவே, ஒவ்வொரு செல்லிலும் ஜீன்களடங்கிய குட்டிக்குட்டி திட்ட வரைபடம் அல்லது விதிகளின் தொகுப்பு இருக்கிறது. இதில்தான் உங்கள் உடல் வளர்வதற்கும், சரிசெய்துகொள்வதற்கும், செயல்படுவதற்கும் தேவையான கட்டளைகள் அடங்கியுள்ளன. (பக்கம் 5-ல் உள்ள படத்தைக் காண்க.) இவையெல்லாம் தற்செயலாக நேர்ந்திருக்க முடியுமா?
இந்தப் புதிரை விடுவித்த விதம்
ஒருவரது உடல் தோற்றம் இரத்தத்தின் மூலமே கடத்தப்படுகிறது என்று பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிஸ்டாட்டில் விளக்கம் அளித்தார். இதுவே ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக நம்பப்பட்டு வந்தது. அக்காலத்தில் இது அந்தளவுக்கு மனதில் பதிந்துவிட்டதால், மக்கள் ஆங்கில மொழியில் இரத்த வழி, இரத்த உறவு என்றெல்லாம் பேசுகின்றனர்.
17-வது நூற்றாண்டில் விஞ்ஞானிகள் முட்டை அணுக்களையும் விந்தணுக்களையும் கண்டறிந்தனர். ஆனால் அவை செய்யும் வேலையையோ தவறாக புரிந்துகொண்டனர். முட்டையிலோ விந்துவிலோ சின்னஞ்சிறியவையாய் முழு உருவத்தையும் பெற்றிருக்கும் பிராணிகள் இருந்தன என்றுதான் அவர்கள் நினைத்தனர். ஆனால், ஒரு முட்டையும் ஒரு விந்துவும் சேர்ந்துதான் கருவே உருவாகிறது என 18-ம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் சரியாக கண்டறிந்துவிட்டனர். என்னதான் இருந்தாலும் பரம்பரை பண்பு கடத்தப்படுவது எவ்வாறு என்பதைப் பற்றிய மிகத் தெளிவான விளக்கம் அப்போது கிடைக்கவில்லை.
கிரெகோர் மென்டல் என்ற ஆஸ்திரிய நாட்டுத் துறவி இவ்விஷயத்தைப் பற்றி ஆராய்ந்து 1866-ல் முதன்முதலாக மரபுவழியைப் பற்றிய சரியான கோட்பாட்டினை வெளியிட்டார். அவர் பட்டாணித் தாவரத்தை வைத்து ஆய்வு செய்தார். அவர், “ஒருவகை பரம்பரை மூலகங்கள்” இனவிருத்தி செல்களில் மறைந்திருப்பதைக் கண்டறிந்தார். மேலும், பண்புகள் கடத்தப்படுவதற்கு இவையே காரணம் என்பதையும் உறுதியுடன் கூறினார். இந்த “ஒருவகை பரம்பரை மூலகங்கள்” தான் ஜீன்கள் என்று இப்போது அழைக்கப்படுபவை.
1910-ம் ஆண்டு வாக்கில், இந்த ஜீன்கள், செல்லில் அமைந்துள்ள குரோமோசோம்கள் எனப்படும் பொருட்களில் இருப்பதாக கண்டறிந்தனர். புரோட்டீனும் டிஎன்ஏ-வுமே (டியாக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம்) குரோமோசோம்களில் அடங்கிய முக்கியப் பொருட்கள். செல்லின் பிற செயல்பாடுகளில் புரோட்டீன் வகிக்கும் முக்கிய பங்கு என்னவென்று விஞ்ஞானிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததால், குரோமோசோம்களிலுள்ள புரோட்டீன்கள்தான் மரபியல் தகவலைக் கடத்துகின்றன என ஆண்டாண்டுக் காலமாய் நம்பிவந்தனர். பிறகு 1944-ல், ஜீன்களில் புரோட்டீன்கள் அல்ல, டிஎன்ஏ இருக்கிறது என்பதற்கான முதல் அத்தாட்சியை கண்டறிந்து வெளியிட்டனர்.
1953-ல், ஜேம்ஸ் வாட்ஸனும் பிரான்சிஸ் கிரிக்கும் டிஎன்ஏ-வின் வேதியியல் அமைப்பைக் கண்டறிந்தனர். டிஎன்ஏ மூலக்கூறுகள், சுருள் சுருளாக நூலேணி போன்றிருந்தன. இதைக் கண்டறிந்த பின்புதான், உயிர் பற்றிய புதிரை விடுவிக்க மனிதன் எடுத்த முயற்சியில் ஒரு மாபெரும் வெற்றி கிட்டியது.