உறைய வைத்த பேரழிவு
“இந்நாட்டு சரித்திரத்திலேயே படுமோசமான இயற்கை பேரழிவு.” ஜனவரி பனிப் புயலை இப்படித்தான் அழைத்தது த டோரன்டோ ஸ்டார். அது கனடாவின் மாகாணங்களாகிய ஒன்டாரியோ, க்யுபெக், நியூ ப்ருன்ஸ்விக்கை நாசமாக்கியது. மெய்ன், நியூ ஹாம்ப்ஷயர், வெர்மான்ட் பகுதிகள் மற்றும் நியூ யார்க்கின் வடபகுதிகளை பேரழிவுக்குள்ளான பகுதிகள் என அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ட்டன் அறிவித்தார்.
சுமார் 35 பேரை அந்தப் புயல் வாரிக்கொண்டு போனதாக சொல்லப்படுகிறது; அதோடு ஐந்து நாட்களாக உறை மழை பெய்தது. பொதுவாக சில மணிநேரங்களே இத்தகைய மழை தலைகாட்டிவிட்டுச் செல்லும்; ஆனால் இத்தருணமோ காற்றின் கதகதப்பான மேலடுக்கு, குளிர்ந்த காற்று மண்டத்தின்மீது டேரா அடித்துவிட்டது. ஆகவே, மைதானத்தை மழைத்துளி முத்தமிட்ட மாத்திரத்தில் உறைந்துவிட்டது. இது எட்டு சென்டிமீட்டர் வரை அடுக்கடுக்காக பனிக்கட்டி பாளங்களை பாவியது. பனிக்கட்டியின் பாரத்தால், பல மரங்களும் பவர் லைன்களும் கம்பங்களும் டிரான்ஸ்மிஷன் டவர்களும் படுத்துவிட்டன; அதன் விளைவுகளோ குலைநடுங்க வைத்தன.
க்யுபெக்கில், நூற்றுக்கணக்கான பிரமாண்டமான ஸ்டீல் டிரான்ஸ்மிஷன் டவர்கள் அப்பளம் போல நொறுங்கி விழுந்தன. பயணித்துகொண்டிருந்த ஒருவர் கவலையுடன் சொன்னார்: “ஒரு [டவர்] என் கண் முன்னாடியே பிளாஸ்டிக் மாதிரி வளைந்து விழுவதை பார்த்தேன். அது இரண்டாக வளைந்து, ஒரு பந்து போலாகி, சின்னாபின்னமாக நொறுங்கியது. நெடுஞ்சாலை நெடுக கம்பிமயம்தான். ஒன்று குடைசாய்ந்த பின், அடுத்தடுத்து மூன்று கம்பங்கள் குடைசாய்ந்தன.”
1,20,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம்வரை பவர் லைன்களை பனிக்கட்டி குவியல் மாய்த்துவிட்டது; இந்தப் பவர் லைன்கள் இப்பூமியை மூன்று முறை சுற்றுமளவு நீளமானவை. கனடாவில், 30 முதல் 40 லட்ச மக்களுக்கு மூன்று வாரங்களுக்கும் மேல் கரண்ட்டும் இல்லை, கதகதப்பும் இல்லை.
ஆளுநராகிய அங்கஸ் கிங் நெருக்கடி நிலையை அறிவித்த மெய்னில் 2,00,000-க்கும் அதிகமானோர் கரண்ட் இல்லாமல் தவித்தார்கள். “இந்த மாநிலத்தை உலுக்கிய பேரழிவிலேயே இதுதான் மாபெரும் பேரழிவு” என்று சொன்னார் அந்த ஆளுநர். “நகரங்களில் எந்த ஏரியாவிலும் பவரே இல்லை” என அறிவித்தார் நியூ யார்க் நகர ஆளுநர் பட்டாக்கி.
செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் தென் கரை நெடுக அணிவகுத்திருந்த சுமார் 30,000 எலக்ட்ரிக் மரக் கம்பங்களை அந்தப் புயல் சாய்த்துவிட்டது. 17 மணிநேர உறை மழைக்குப் பிறகு, வட நியூ யார்க்கிலுள்ள அந்த ஆற்றின் அருகில் வாழும் ஜிம் கெல்லி இவ்வாறு எழுதினார்: “ஜன்னல்களுக்கு வெளியே எங்களால் எதையுமே பார்க்க முடியவில்லை. அது உறைபனியோ மூடுபனியோ அல்ல, பனிக்கட்டி. வீட்டின் நாலாபுறமும் ஒரே சத்தம்தான்.”
கெல்லி விளக்கினார்: “எங்கேயோ துப்பாக்கி வெடிப்பது போன்ற சத்தம். முதலில் டமால்ன்னு! அப்புறம் நிசப்தம். மறுபடியும் டமால்ன்னு! சற்று நிசப்தம். பிறகு டமால் டுமீல்!” அது மரங்கள் முறிந்ததாலும் தந்திக் கம்பங்கள் சடசடவென்று நொடிந்ததாலும் ஏற்பட்ட சத்தம் என்பதை பின்பு அவர் அறிந்துகொண்டார்.
ஒருபுறம் அழிவு அதன் கோர முகத்தை காட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் எழில் கொஞ்சும் இயற்கை காட்சியோ தன் இனிய முகத்தை காட்டி ஜொலித்தது. ஒன்டாரியோ இரண்டு கோடி மேப்பில் மரங்களை இழந்திருக்கலாம், இது மேப்பில்-சிரப் தொழிலை பாதிக்கலாம் என்ற பயம் சிலரை கவ்விக்கொண்டது. அந்த மரம் வளர்க்கும் ஒருவர் புலம்பினார்: “இந்த மரங்கள் வெறும் குச்சி குச்சியாய் வானளாவ உயர்ந்து நின்றுகொண்டிருக்கின்றன.”
“ஓர் அழகிய போர்க்களம்”
கனடாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகிய மான்ட்ரீலை இப்படித்தான் வர்ணித்தது டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளின் தலைப்புச் செய்தி. “இங்குள்ள வீதிகளெல்லாம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டதுபோல் காட்சியளிக்கின்றன!” என்று வியந்து கூறினார் அந்த ஊர் வாசி. மான்ட்ரீல் பகுதியில் மாத்திரமே 50 கோடி டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் கணக்கிடப்பட்டது.
ஒன்டாரியோவிலுள்ள பெலிவிலியைச் சேர்ந்த ஒருவர் சொன்னார்: “அது அணு ஆயுதப் போர் நடந்து ஓய்ந்த மாதிரி காட்சியளிக்கிறது. எல்லாவற்றின் மேலும் வெள்ளை தூசி, அது திகிலூட்டுவதாய் இருக்கிறது.” அதை அவர் “திகிலூட்டும் அழகு” என அழைத்தார்.
புயலுக்குப் பின்வந்த வாரத்தில், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தைக் காலிசெய்து புகலிடங்களுக்கு செல்லும்படி போலீஸார் சொன்னார்கள். ஏனென்றால் அந்தச் சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள் இன்னும் கரண்ட் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள், கடுங்குளிரும் வாட்டிக்கொண்டிருந்தது. ஒரு அதிகாரி கேட்டார்: “காலிசெய்யும்படி நாம் அவர்களிடம் தயவாய் சொல்வதா அல்லது ஆணை பிறப்பிப்பதா?”
“அவர்கள் கண்டிப்பாக வெளியேற வேண்டும். ஆனால் கொஞ்சம் நாசூக்காக சொல்லுங்கள்” என்று பதிலளித்தார் ஓர் உயர் அதிகாரி. அவர் மேலும் சொன்னார்: “நாமெல்லாரும் போர்க் காலத்தில் இருப்பது மாதிரி தோன்றுகிறது.”
மயிரிழையில் பேராபத்துகள்
மான்ட்ரீலில் கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள் கண்மூடி விட்டன, சுரங்கப்பாதை போக்குவரத்தும் மூடப்பட்டுவிட்டது. புயல் வீசிய கடைசி நாளுக்குள், நகரிலிருந்த ஐந்து டிரான்ஸ்மிஷன் ஸ்டேஷன்களில் நான்கு மடிந்துவிட்டன அல்லது தகர்ந்துவிட்டன. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்?
“மான்ட்ரீலில் மத்தியானத்திற்குப் பிறகு இருளில் மூழ்கிவிடும் பிரமையில் இருந்தோம்—தண்ணீரும் இல்லை” என்று விளக்கினார் க்யுபெக்கின் பிரதமரான லூஸியன் பூஷர். “தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை முடங்கிவிட்டதால் மிஞ்சிப்போனால் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு மட்டும்தான் தண்ணீர் சப்ளை என்ற நிலை.” எல்லா வீடுகளிலும் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்க, தண்ணீர் வேறு சுத்தமாய் நின்றுபோகும் நிலையில், மக்களையே எரித்துவிடும் பேராபத்துக்கான சாத்தியமும் இருந்தது.
சுமார் இரண்டு வாரத்திற்குப் பின்பு, ஜனவரி 24 அன்று வட்டார மாநாட்டுக்காக யெகோவாவின் சாட்சிகளுடைய மான்ட்ரீல் மாநாட்டு மன்றத்தில் 1,889 பேர் கூடியிருந்த சமயத்தில், மற்றொரு ஆபத்துக்கு அணை போடப்பட்டது. ஒரே இராத்திரியிலேயே பனி 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவு மான்ட்ரீலை போர்வைபோல் போர்த்தியிருந்தது; காலை நிகழ்ச்சிநிரலின்போது, சுவர்களிலும் கூரைகளிலும் ஏற்பட்ட சேதம் கண்டுபிடிக்கப்பட்டது. பிற்பகல் நிகழ்ச்சிநிரல் ரத்துசெய்யப்பட்டது; வீட்டுக்குச் சென்று தங்களுடைய உடைகளை மாற்றிக்கொண்டு வேலைசெய்ய வரும்படி ஆஜராயிருந்தவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
ஒரு மணிநேரத்திற்குள் 300 தொண்டர்கள் மண்வெட்டிகளோடும் குத்துக் கோடாரிகளோடும் மற்ற சாதனங்களோடும் தயாராக இருந்தார்கள்; 7,100 சதுர மீட்டர் அளவுள்ள பிரமாண்டமான கூரையை அவர்கள் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். மேற்பரப்புப் பனியை நீக்கியப்பின், அநேக இடங்களில் பனிக்கட்டி 60 சென்டிமீட்டருக்கும் அதிகளவு பருமனாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! அறுக்கும் மெஷின்களைப் பயன்படுத்தி பனிக்கட்டியை சதுர பாளங்களாக வெட்டினார்கள்; பின்பு அவற்றை கூரை விளிம்பிற்கு இழுத்து வந்து கீழே தள்ளினார்கள். ஏறக்குறைய 1,600 டன் பனிக்கட்டி நீக்கப்பட்டன! இதனால் அந்தக் கூரைகள் சட்டென்று அதனதன் இடத்தில் பொருந்திக்கொண்டன, சுவர்களில் இருந்த விரிசல்களும் அடைபட்டுவிட்டன என்பதை பிற்பாடு செய்யப்பட்ட ஆய்வு காட்டியது. அந்த நிகழ்ச்சிநிரல் ஞாயிறு காலை இனிதே ஆரம்பமானது.
அவர்கள் தோள்கொடுத்தனர்
எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்பதற்கேற்ப, மழையும் குளிரும் இருந்த சமயத்தில் சில ஆட்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிக்கொண்டிருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் முதல் நூற்றாண்டைப் போல, அநேகர் “பாராட்டின அன்பு கொஞ்சமல்ல.” (அப்போஸ்தலர் 28:2) மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஓடோடி வந்த யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நியூ யார்க்கிலுள்ள ரோமிலிருந்து வெளிவரும் டெய்லி சென்ட்டினல் இவ்வாறு சொன்னது: “காரியங்களை ஒழுங்கமைப்பதற்காக அந்த ஆட்கள் வாட்டர்டவுனிலுள்ள ராஜ்ய மன்றத்தில் ஒன்றுகூடினார்கள்; பின்பு அங்கிருந்து பல்வேறு அங்கத்தினர்களுடைய வீடுகளுக்கு அவர்களை பிரித்தனுப்பினார்கள். என்றபோதிலும், தெருவில் அங்குமிங்கும் இருந்த தங்களுடைய அக்கம்பக்கத்தாருக்கும் அவர்கள் கைகொடுத்து உதவினார்கள்.”
“ஆடம்ஸ், பாட்ஸ்டம், மலோன், ஆக்டன்ஸ்பர்க், பிளாட்ஸ்பர்க், மஸீனா, கவன்யூர், எலன்பர்க் போன்ற பகுதிகளிலுள்ள” மக்களுக்கும் இந்த நிவாரண உதவி கிடைக்கும்படி செய்யப்பட்டது என்று அந்தக் கட்டுரை விளம்பினது. தொண்டர்கள் சிலர், உலைகளை இயங்க வைப்பதற்கு ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி சில மணிநேரங்கள் வீடுகளுக்கு வெப்பமூட்டினார்கள். வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், புயலுக்குப்பின் பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழே சென்றுவிட்டது.
ஒரு சமயம், வீடுவீடாக சாட்சிகள் செல்வதைப் பார்த்து போலீஸார் அவர்களை திருடர்களென தவறாக எடைபோட்டு விட்டார்கள். தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சாட்சிகள் விளக்கிக் கூறினார்கள்; அப்போது ஒரு போலீஸ்காரர், மான்ட்ரீலில் வசிக்கும் தன் அப்பா சாட்சியாக இல்லாதபோதிலும்கூட, புயலுக்குப்பின் அவருக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவினார்கள் என்று சொன்னார். செய்த உதவிக்காக அந்த மகன் நன்றி நவில்ந்தார்.
முக்கியமாக சுமார் 100 டவுன்கள் புயலால் கடும் தாக்குதலுக்குள்ளாயின; அவை மான்ட்ரீலுக்கு தெற்கிலுள்ள “இருண்ட முக்கோணம்” என்றழைக்கப்பட்ட பகுதியில் இருந்தன. புயல் ஏற்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகும் இந்த டவுன்களில் கரண்ட் இல்லை. சொல்லப்போனால், அநேகர் ஒரு மாசத்திற்கும் மேல் கரண்ட் இல்லாமல் திண்டாடினார்கள். டோரன்டோவுக்கு அருகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம், இப்பகுதியிலுள்ள மக்களுக்கு உதவிபுரிய விசேஷ சந்திப்புகளுக்காக ஏற்பாடுகள் செய்தது. விளக்கு எரிக்கும் எண்ணெய், பாட்டரிகள், டார்ச் லைட்கள் ஆகியவை ட்ரக் மூலம் நியமிக்கப்பட்ட விநியோகிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டன; அங்கிருந்து தேவைப்பட்டோருக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
இப்பகுதியில் வசிப்பவர்களுடைய தேவைகளை கிறிஸ்தவ மூப்பர்கள் அறிந்துகொள்வதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மூப்பர் தெகுதி ஒன்று 11 சபைகளை ஒரே வாரத்தில் சந்தித்து, உற்சாகமூட்டும் அநேக கூட்டங்களை நடத்தியது. ஆவிக்குரிய உற்சாகம் அளிக்கப்பட்ட இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, யாருக்கும் வீட்டிற்குப் போக மனமில்லை. அவர்கள் அங்கேயே மணிக்கணக்காக உரையாடிக்கொண்டும், ஒவ்வொருவருடைய கதைகளை கேட்டுக்கொண்டும், சகோதர கூட்டுறவில் குளிர்காய்ந்துகொண்டும் இருந்தார்கள். சொல்லப்போனால், கூட்டங்களுக்கு வருவோரின் வழக்கமான எண்ணிக்கை, புயலுக்குப் பின்வந்த வாரங்களில் என்றுமில்லாத உச்சநிலையை எட்டியது.
விறகு அடுப்பு அல்லது ஜெனரேட்டர் வைத்திருந்த அநேகர், எந்தவொரு வெப்பமூட்டும் சாதனமும் இல்லாதவர்களுக்கு தங்களுடைய வீடுகளில் அடைக்கலம் அளித்தார்கள். சாட்சிகள் சிலர் தங்களுடைய வீட்டில் 20 பேர் வரைக்கும் தங்கவைத்தார்கள். கரண்ட் இல்லாத அந்தப் பகுதிக்கு வெளியிலிருந்த பலரும் இடவசதி அளித்தார்கள். உதாரணமாக, “இருண்ட முக்கோணத்திலிருந்து” சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் ஸ்டெப்-லெஸ் நகரம் உள்ளது; அங்குள்ள சாட்சிகள் 85 குடும்பங்களுக்கு தஞ்சம் அளித்தார்கள்.
ரிமோஸ்கி போன்ற தொலைதூர கிராமப்புறங்களில் வாழும் சாட்சிகள், விறகுக் கட்டைகளை அனுப்பினார்கள். சிலர் அந்தக் கட்டைகளில் வேதவசனங்களையும் எழுதி அனுப்பினார்கள். ஒரு சாட்சி தனக்கு அன்பளிப்பாக கிடைத்த விறகுக் கட்டையை சாட்சியல்லாத அண்டை வீட்டுக்காரர் ஒருவருக்கு கொடுத்தார்; அவருக்கு கிடைத்த அந்தக் கட்டையில் சங்கீதம் 55:16 (NW) எழுதப்பட்டிருந்தது: “யெகோவா என்னை இரட்சிப்பார்.” கட்டையை கையில் பிடித்துக்கொண்டு, “யெகோவாவே, உமக்கு நன்றி” என்று கண்களை வானத்துக்கு ஏறெடுத்து சொன்னார்.
அனைவருக்கும் இதிலிருந்து என்ன பாடம்?
மின்சக்தி நிலையானதே இல்லை, அதை எப்போதும் நம்பியிருக்க முடியாது என்ற உண்மை புரிந்து அநேகர் அதிர்ந்துபோனார்கள். “நான் புதுசா ஒரு வீடு கட்றேன்னு வச்சுக்குங்க, நிச்சயமா அங்கு ஒரு விறகு அடுப்பு இருக்கும், ஒரு ஜெனரேட்டர் இருக்கும், . . . ஒரு கேஸ் அடுப்பும் இருக்கும்” என்று ஒருவர் சொன்னார்.
புயலுக்குப் பின் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் கழித்து, அதைப் பற்றி உரையாளர் ஒருவர் தெரிவித்தார்: “பனிக்கட்டிக்கும் பஞ்சமில்லை, இருளுக்கும் பஞ்சமில்லை, சிந்திக்க கிடைத்த நேரத்திற்கும் பஞ்சமில்லை, ஏனென்றால் டெலிவிஷன்தான் இல்லையே.” பின்பு அவர் குறிப்பிட்டார்: “இயற்கை சீற்றங்களால் எவ்வளவு எளிதில் பாதிக்கப்படுகிறோம் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறோம்.”
முன்பு ஒருமுறை இவ்வுலகை படைப்பாளர் அழித்ததுபோலவே, இந்தக் காரிய ஒழுங்குமுறையை அழித்தப் பின்பு இந்தப் பூமியை ஒரு பூகோள நந்தவனமாய் மாற்றப்போவதாக அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதியை பைபிள் மாணாக்கர்கள் சிந்தித்துப்பார்க்கிறார்கள். (மத்தேயு 24:37-39; 2 பேதுரு 2:5) கடவுள் தம்முடைய சக்திவாய்ந்த படைக்கலச் சாலையைச் சுட்டிக்காட்டி கேட்பதாவது: ‘ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் வைத்துவைத்திருக்கிற உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?’—யோபு 38:22, 23.
[பக்கம் 17-ன் படம்]
அப்பளம் போல் நொறுங்கி விழுந்த டிரான்ஸ்மிஷன் டவர்கள்
[பக்கம் 18-ன் படம்]
மாநாட்டு மன்றத்தின் கூரையிலிருந்து பனியையும் பனிக்கட்டியையும் தொண்டர்கள் நீக்கியதால் பேரழிவு தவிர்க்கப்பட்டது
[பக்கம் 18-ன் படம்]
புயலால் பாதிக்கப்பட்டோருக்கு விறகுக் கட்டைகள்