பூமியின்மீது எனக்கிருக்கும் காதல் என்றென்றும் நிறைவேறும்
டாரத்தி கான்லி கூறியபடி
நான் சிறுபெண்ணாக இருந்தபோது, பழங்குடி இனத்தை சேர்ந்தவளாக இருந்ததால் நரகத்திற்குத்தான் போவேன் என்று சொன்னார்கள். பல வருடங்கள் கழித்து, 1936-ல் பைபிள் சொற்பொழிவு ஒன்றின் ரெக்கார்டிங்கை கேட்டேன். அது நரகத்தின் நெருப்பில் தண்ணீர் பாய்ச்சி என் இதயத்தில் நம்பிக்கை ஒளிவீசச் செய்தது. அந்த ஒளி முன்பு இருந்ததைவிட இப்போது அதிக பிரகாசமாக இருக்கிறது. என்ன காரணம் என்று விளக்குவதற்கு முன்பு என்னைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.
நான் ஏறக்குறைய 1911-ல் பிறந்தேன். “ஏறக்குறைய” என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது; ஏனென்றால் அந்தக் காலங்களில், பழங்குடியினர் தேதிகளைப் பற்றியோ பிறப்பு சான்றிதழ்களைப் பற்றியோ கொஞ்சம்கூட கவலைப்பட்டதே கிடையாது. என் பெற்றோர் கடின உழைப்பாளிகளாகவும் கடவுள் பயமுள்ளவர்களாகவும் இருந்தனர். நாங்கள் ஸ்பிரிங்சுர் என்ற சிறிய நகரில் வாழ்ந்து வந்தோம். அது, ஆஸ்திரேலியாவிலுள்ள மத்திய க்வீன்ஸ்லாந்தில் கரடுமுரடான, எழில் கொஞ்சுகிற கார்னார்வன் மலைத்தொடருக்கு அருகில் இருக்கிறது.
என் அப்பா, ஒரு வெள்ளைக்கார குடும்பத்தாரால் ரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார். இருந்தாலும், பழங்குடியினராக இருந்த என் பெற்றோர் தங்களுடைய பழக்க வழக்கங்களையும் பூமியின்மீது அவர்களுக்கிருந்த காதலையும் எனக்குள் பதிய வைத்தனர். கங்காருக்கள், ஈமூக்கள், ஆமைகள், பாம்புகள் ஆகியவற்றை வேட்டையாடினோம்; மீன்களையும் விட்செட்டி கிரப்புகளையும் (பெரிய, சாப்பிடக்கூடிய கம்பளிப் பூச்சிகளையும்) பிடித்தோம். ஆனால் நான் ஈமூவை ஒருநாளும் சாப்பிட்டதில்லை. எங்கள் குடும்பத்தில் அது என்னுடைய சொந்த குலக்குறியாக (personal totem) இருந்ததால் நான் மட்டும் அதை சாப்பிடக்கூடாது என்று தடை செய்யப்பட்டேன். பழங்குடியினர் மரபு அல்லது “கனவுலகம்” என்பதின்படி அந்தக் குலத்தின் ஒவ்வொரு நபருக்கும் சொந்தமான குலக்குறி ஒன்று உண்டு; அந்தப் பொருளின் மீதான தடையை குடும்பத்தாரும் குலத்தாரும் ஒவ்வொருவர் மீதும் திணித்தனர்.
குலக்குறி வழிபாடு மூடநம்பிக்கையில் சார்ந்திருந்தபோதிலும் இந்தச் சமூகக் கட்டுப்பாடு உயிரின் பரிசுத்த தன்மையை நினைப்பூட்டியது. பழங்குடியினர் பொழுதுபோக்கிற்காக ஒருபோதுமே வேட்டையாட மாட்டார்கள். ஒருமுறை, சிறுமியாக இருந்தபோது உயிருள்ள வெட்டுக்கிளிகளின் கால்களை ஒவ்வொன்றாக பிய்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அப்பாவுக்கு வந்த கடுங்கோபத்தில் நடுநடுங்கிப் போனேன். “இதென்ன அக்கிரமம்! கொடுமை செய்றது கடவுளுக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா? உன்னை யாராச்சும் இப்படி செஞ்சா உனக்கு எப்படி இருக்கும்?” என்று சத்தம் போட்டார்.
எங்களுக்கு அநேக மூடநம்பிக்கைகள் இருந்தன. உதாரணமாக, வில்லி வாக்டெயில் (ஒரு சிறிய பறவை) எங்கள் கூடாரத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தால் ஏதோ துர்ச்செய்தி என்று அர்த்தம்; அல்லது பகல் நேரத்தில் ஒரு ஆந்தை பக்கத்திலுள்ள மரத்தில் உட்கார்ந்திருந்தால் யாரோ சாகப்போகிறார்கள் என்று நாங்கள் நம்பினோம். சில கனவுகளும்கூட சகுனங்களாக கருதப்பட்டன. உதாரணமாக, கனவில் கலங்கலான தண்ணீரைப் பார்த்தால் குடும்பத்தில் யாரோ ஒருவர் வியாதியாய் இருக்கிறார் என்று அர்த்தம். ஆனால் மண்ணும் தண்ணீரும் கலந்து கசிந்துகொண்டிருந்தால் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்று அர்த்தம். நாங்கள் கத்தோலிக்கராக தான் இருந்தோம்; ஆனாலும் எங்கள் பழங்குடி மூடநம்பிக்கைகள் எல்லாம் நீங்கியபாடில்லை.
எங்கள் குடும்பத்தில் பழங்குடியினர் மொழியையே தொடர்ந்து பேசினோம். ஆனால், இன்று அழியும் நிலையிலிருக்கும் அநேக மொழிகளில் அதுவும் ஒன்று. இருந்தாலும் பைபிளைப் பற்றி மற்றவர்களோடு பேசுகையில் எப்போதாவது அதை உபயோகிப்பதுண்டு. பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது ஆங்கிலம் கலந்த உள்ளூர் மொழியிலேயே பேசுகிறேன்.
ஆரம்பகால மதிப்புமிக்க பயிற்சி
எனக்கு ஏறக்குறைய பத்து வயதாக இருந்தபோது ஸ்பிரிங்சுரிலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பண்ணையில் அல்லது ராஞ்சில் எங்கள் குடும்பம் வாழ்ந்து வந்தது. கொஞ்சம் தூரத்திலிருந்த பண்ணை வீட்டில் வேலை செய்வதற்காக ஒவ்வொரு நாளும் நடந்து செல்வேன். ஒரு பில்லி (சிறிய குவளை) பாலும் ஒரு ரொட்டித் துண்டும்தான் என்னுடைய ஒருநாள் சம்பளம். பழங்குடியினரின் வாழிடமாகிய மரப்பட்டையாலான குடிசைகளில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். மழை பெய்யும்போது அருகிலுள்ள குகைகளில் இரவைக் கழித்தோம். இந்த எளிமையான வாழ்க்கை முறையைக் கஷ்டமான ஒன்றாக கருதினேனா? இல்லை. பல நூற்றாண்டுகளாக இதுவே பழங்குடியினரின் வாழ்க்கை முறையாக இருந்து வந்தது; நாங்களும் இதை ஏற்றுக்கொண்டோம்.
உண்மையைச் சொன்னால், ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாக நான் வளர்க்கப்படாததற்கு சந்தோஷப்படுகிறேன். எனக்கு அன்பான பெற்றோர் இருந்தனர்; தேவையான சிட்சை கொடுத்து, கடினமாக வேலைசெய்ய வைத்து, நிலத்தின் வருமானத்தில் வாழ அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்ததால் சந்தோஷப்படுகிறேன். 1934-ல் க்வீன்ஸ்லாந்திலுள்ள ஊரபின்டாவுக்கு அருகிலிருக்கும் ஒதுக்கீட்டுப்பகுதிக்கு நாங்கள் சென்ற பிறகு கொஞ்ச நாள் கழித்து, முதல் முறையாக வீட்டைவிட்டு வெளியே சென்று வேலை செய்தேன். பண்ணை வீடுகளில் வேலைக்காரியாக வேலை செய்வதற்காக மேற்கு பகுதிக்கு சென்றேன். கடைசியில், வேலையின் காரணமாக கிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரமாகிய ராக்ஹாம்ப்டனுக்கு அருகில் செல்ல வேண்டியிருந்தது. அங்குதான் மறைந்த என் கணவர் மார்டின் கான்லியைச் சந்தித்தேன்; அவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர். நாங்கள் 1939-ல் திருமணம் செய்துகொண்டோம்.
பைபிள் சத்தியத்தை படித்தல்
ஆரம்பத்திலிருந்தே எனக்கு பைபிளிடம் ஆழ்ந்த பயபக்தி இருந்தது. நான் சிறுமியாக இருக்கையில் அந்தப் பண்ணையின் எஜமானியம்மாள், பழங்குடியினரின் பிள்ளைகளையும் வெள்ளைக்காரரின் பிள்ளைகளையும் ஒன்றாகக் கூட்டி இயேசுவைப் பற்றிய கதைகளைச் சொல்வார்கள். ஒருமுறை, ‘சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதை தடைபண்ணாதிருங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்தார். (மத்தேயு 19:14) நரகத்திற்குத்தான் செல்வேன் என்று சபிக்கப்பட்ட சமயத்திற்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக என் மனதில் நம்பிக்கை துளிர்விட்டது.
அதன் பிறகுதான், நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நரகம் நெருப்பெரிகிற இடமல்ல என்ற ரெக்கார்டு செய்யப்பட்ட பேச்சைக் கேட்டேன். அது என்னைச் சிந்திக்க வைத்தது உண்மைதான் என்றாலும் 1949-ம் ஆண்டுவரை யெகோவாவின் சாட்சிகளோடு எனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ராக்ஹாம்ப்டனுக்கு மேற்கில் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எமரால்டு நகரில் அப்போது நாங்கள் வாழ்ந்து வந்தோம். ஆர். பென்னட் பிரிக்கெல்a என்பவர் எங்களைச் சந்தித்து பைபிளைப் பற்றி பேசினார். அதற்கு பிறகு பென் அங்கு வரும்போதெல்லாம் எங்கள் வீட்டில்தான் தங்குவார். மார்டினுக்கும் எங்கள் நான்கு பிள்ளைகளுக்கும், ஏன் எங்கள் அனைவருக்குமே பென்மீது அதிக மதிப்பு இருந்தது. மார்டினுக்கு பைபிளின் செய்தியில் கொஞ்சம்கூட அக்கறை இருக்கவில்லை; ஆனாலும் சாட்சிகளிடம் முக்கியமாக பென்னிடம் அவர் எப்போதும் தயவாகவும் இருந்தார், உபசரிக்கவும் செய்தார்.
பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ள உதவும் அநேக புத்தகங்களை பென் எனக்கு கொடுத்தார்; ஆனால் எனக்கு வாசிக்கத் தெரியாதது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆகவே பென், பைபிள் மற்றும் பைபிள் சார்ந்த புத்தகங்களை பிள்ளைகளுக்கும் எனக்கும் பொறுமையாக வாசித்து விளக்கினார். பாதிரிமாரோடு ஒப்பிடுகையில் அவர் அவ்வளவு உதவியாக இருந்தது எவ்வளவு சந்தோஷத்தை ஏற்படுத்தியது; பாதிரிகள், மத சடங்குகளை முடித்தபிறகு எங்களுக்கு வாசிக்க கற்றுத்தருவதற்காக ஐந்து நிமிடம்கூட செலவழித்தது கிடையாதே! என் சொந்த ஜனம் உட்பட மனிதவர்க்கம் முழுவதையும் அடிமைப்படுத்தியிருந்த அநேக மூடநம்பிக்கைகளுக்கு சாத்தானும் அவனுடைய பேய்களுமே காரணகர்த்தாக்கள் என்று பைபிளிலிருந்து பென் எங்களுக்கு காண்பித்தார். அதனால், “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற இயேசுவின் வார்த்தைகளை நான் எவ்வளவு அதிகம் போற்ற ஆரம்பித்தேன்!—யோவான் 8:32.
கடவுளுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்காக பூமியை பரதீஸாக மாற்றுவதே அவருடைய நோக்கம் என்பதை அறிந்தபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. எல்லாவற்றையும்விட மரித்தோரின் உயிர்த்தெழுதலுக்காக நான் அதிகம் ஏங்கினேன்; ஏனென்றால் அம்மா 1939-லும் அப்பா 1951-லும் இறந்துபோனார்கள். அவர்களுக்கு அந்தளவு பிரியமாயிருந்த இதே பூமியில் அவர்களை மறுபடியும் வரவேற்று தழுவிக்கொள்ளும் அந்த நாளுக்காக நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். அதுமட்டுமா, யெகோவா தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றி அவர்களுக்கு போதிப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கும்!
படிப்பறிவில்லாத பிரசங்கி
பைபிளைப் பற்றி அதிகத்தை கற்றுக்கொண்டபோது அதை மற்றவர்களுக்கு சொல்ல ஆசைப்பட்டேன். என் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசினேன் என்பது உண்மைதான், ஆனாலும் என் சேவையை விரிவாக்க விரும்பினேன். ஆகவே பென் அடுத்தமுறை எமரால்டுக்கு வந்தபோது, பிள்ளைகளை அரக்கப்பரக்க கிளம்ப வைத்து, பிரசங்கிப்பதற்காக அனைவரும் அவரோடு சென்றோம். அவர் சில எளிய பிரசங்கங்களை எனக்கு நடித்துக் காண்பித்து ஜெபத்தில் யெகோவாமீது சார்ந்திருக்க கற்றுக்கொடுத்தார். என்னுடைய பிரசங்கம் அவ்வளவு ஒன்றும் நன்றாக இல்லைதான், ஆனாலும் அது என் இதயத்திலிருந்து வந்தது.
எனக்கு வாசிக்க தெரியாது என்பதை நான் சந்திக்கும் வீட்டுக்காரரிடம் முதலிலேயே சொல்லிவிடுவேன்; பிறகு நான் காண்பித்த பைபிள் வசனங்களை வாசிக்கும்படி அவர்களிடம் கூறுவேன். இந்த வசனங்களை நான் ஏற்கெனவே மனப்பாடம் செய்திருந்தேன். வெள்ளைக்காரர்கள் நிறைந்த இந்த நகரில் சிலர் என்னை ஆச்சரியத்தோடு பார்த்ததுண்டு; ஆனால் அநேகமாய் ஒருவருமே அநாகரிகமாக நடந்துகொண்டதில்லை என்று சொல்லலாம். காலப்போக்கில் நான் வாசிக்க கற்றுக்கொண்டேன். இதனால் என் தன்னம்பிக்கையும் ஆவிக்குரிய தன்மையும் எவ்வளவு அதிகரித்தன தெரியுமா!
நான் சென்ற முதல் மாநாடு
மார்ச் 1951-ல் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த பிறகு என் வாழ்க்கையில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன; அவை, தண்ணீர் முழுக்காட்டுதலும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டிற்கு நான் முதல் முறையாக சென்றதுமே. ஆனால் அதற்காக சிட்னி மாநகருக்கு செல்லவேண்டும். ஒரு கிராமத்து பெண்ணுக்கு அதை நினைத்தாலே பயமாக இருக்கும். அதுமட்டுமல்ல, டிரெயினில் செல்வதற்கு என்னிடம் பணமும் இல்லை. ஆகவே நான் என்ன செய்வேன்?
பயணத்திற்கு தேவையான பணத்தைப் பெறுவதற்காக சூதாடலாம் என்று முடிவு செய்தேன். ‘இத யெகோவாவுக்காக தானே செய்றேன் அதனால நான் ஜெயிக்க அவர் நிச்சயமா உதவுவாரு’ என்று எனக்குநானே நியாயம் சொல்லிக் கொண்டேன். சீட்டாட்டத்தில் சில ரவுண்டுகளுக்கு பிறகு, போய்வருவதற்கு போதுமான பணம் கிடைத்ததால் அவர் எனக்கு உதவி செய்தார் என்றே நினைத்தேன்.
நான் சிட்னிக்கு செல்ல திட்டமிடுகிறேன் என்பதை பென் அறிந்திருந்தார்; ஆகவே அடுத்தமுறை சந்தித்தபோது என்னிடம் போதுமான பணம் இருக்கிறதா என்று கேட்டார். “ஓ, இருக்கே! டிரெயின் செலவுக்கு தேவையான பணத்தை சீட்டாட்டத்துல ஜெயிச்சேன்” என்று சொன்னேன். அவர் முகம் ஜிவ்வென்று சிவந்தது; ஏதோ தவறாக சொல்லிவிட்டேன் என்பதை உடனே புரிந்துகொண்டேன். அதனால், “ஏன், என்ன ஆச்சு உங்களுக்கு? நான் ஒன்னும் அதை திருடலியே!” என்று உடனே கூறினேன்.
பென்னுடைய முகம் பழைய நிலைக்கு வந்தபிறகு, கிறிஸ்தவர்கள் ஏன் சூதாடுவது இல்லை என்பதை பொறுமையோடு விளக்கினார். பின்னர், “அது உங்க தவறு இல்ல. நான்தான் அதப்பத்தி உங்ககிட்ட சொல்லவே இல்லையே” என்று ஆதரவான குரலில் கூறினார்.
வரவேற்கப்பட்டவளாக உணர்ந்தேன்
மார்ச் 22-25, 1951-ல் நடந்த அந்த நான்கு நாள் மாநாட்டில்தான் இவ்வளவு அதிகமான சாட்சிகளை முதல் முறையாக சந்தித்தேன். பென்னையும் இன்னும் சில சாட்சிகளையும் மட்டுமே அறிந்திருந்த எனக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்குமோ என்ற சந்தேகத்தோடு இருந்தேன். அதனால், என்னுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளாய் ஆகப்போகிறவர்கள் என்னை மனமாற வரவேற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சியை உங்களால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறதல்லவா! அவர்கள் இம்மியளவுகூட பட்சபாதம் காட்டவில்லை. நான் அவர்கள் மத்தியில் அதிக சௌகரியமாக உணர்ந்தேன்.
பாட்டனி பேயில் முழுக்காட்டப்பட்ட 160 பேரில் நானும் ஒருத்தியாக இருந்ததால் அந்த மாநாடு என் மனத்திரையில் இன்றும் தெளிவாக இருக்கிறது. ஆஸ்திரேலிய பழங்குடியினரில் முதலாவதாக யெகோவாவின் சாட்சிகள் ஆனவர்களுள் நானும் ஒருத்தி. என் புகைப்படம், ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளிலும் சினிமா தியேட்டர்களில் காட்டப்பட்ட நியூஸ்ரீலிலும் வந்தது.
நகரத்தின் ஒரே சாட்சி
சிட்னியிலிருந்து வீடுதிரும்பிய பின் ஒருமாதம் கழித்து, க்வீன்ஸ்லாந்திற்கு வடமேற்கில் இருக்கும் சுரங்கத் தொழில் நகரமாகிய மௌண்ட் ஐஸாவிற்கு நாங்கள் குடிமாறி சென்றோம். நகரத்திற்கு சற்று வெளியே இருந்த பெரிய நிலம் ஒன்றின் காவலாளர்களாக ஒரு ஷெட்டில் ஆறு வருடம் வாழ்ந்தோம். அருகிலிருந்த காட்டுச் செடிகளிலிருந்து வெட்டி எடுத்த மரத்தை அதன் சுவர்களாக நிறுத்தினோம். பழைய தார் டிரம்களை வெட்டி தட்டையாக அடித்து அவற்றால் கூரையைப் போட்டோம். மார்டினுக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது, ஆனால் அவருடைய குடிப்பழக்கம் கடைசியில் அவர் உடலை சீரழித்தது. அதற்குப்பிறகு குடும்பத்தை கவனிக்க வேண்டிய முழு பொறுப்பும் என் தலையில் விழுந்தது. அவர் 1971-ல் இறந்தார்.
ஆரம்பத்தில், மௌண்ட் ஐஸாவில் இருந்த ஒரே சாட்சி நான்தான். மௌண்ட் ஐஸாவும் பென்னுடைய பரந்த பிராந்தியத்தின் பாகமாக இருந்ததால், அவர் சுமார் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்து சந்திப்பார். இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு சமயத்தில் அவர் நகரத்தில் இருந்தால் என் குடும்பத்தோடுதான் அதை ஆசரிப்பார்; சில சமயங்களில் ஒரு மரத்தடியில்கூட ஆசரிப்பார். பென்னுக்கு பரலோக நம்பிக்கை இருந்ததால் அந்த நிகழ்ச்சி அவருக்கு அவ்வளவு முக்கியமானதாய் இருந்தது.
பொதுவாக பென் அதிக நாட்கள் தங்கமாட்டார். ஆகவே நானும் பிள்ளைகளுமே ஊழியத்தை தனியாக செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் தனியாகத்தான் இருந்தோம்; ஆனால் யெகோவாவின் ஆவியும் அவருடைய அன்புள்ள அமைப்பும் எங்களைப் பலப்படுத்தின. பல வருடங்களாக எங்கள் தொகுதி மிகவும் சிறியதாக இருந்தது; ஆனாலும் உண்மையுள்ள பயண கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் கொளுத்தும் வெயில், ஈக்கள், புழுதி, குண்டும் குழியுமான ரோடுகள் ஆகியவற்றோடு போராடி மௌண்ட் ஐஸாவிற்கு வந்து எங்களை உற்சாகப்படுத்தினர். அதுமட்டுமல்ல, 1,200-க்கும் அதிகமான கிலோமீட்டர் தொலைவிலுள்ள டார்வினில் சமீபத்தில் உருவாகியிருந்த சபையின் சாட்சிகளும் எப்போதாவது எங்களை வந்து சந்திப்பார்கள்.
ஒரு சபை உருவானது
டிசம்பர் 1953-ல் மௌண்ட் ஐஸாவில் ஒரு சபை உருவானது. பென் அதன் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அப்போது என் மகள் ஆனும் நானும் மட்டும்தான் ஊழியத்தில் பங்குகொண்டோம். ஆனால் சீக்கிரத்திலேயே மற்ற சாட்சிகள் இந்நகரத்திற்கு குடிமாறி வந்தனர். எங்கள் பிராந்தியத்திலும் சீஷர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது. காலப்போக்கில் அநேக பழங்குடி மக்களும் சேர்ந்துகொண்டனர்.
சபைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் கூட்டங்களை நடத்துவதற்கு எங்களுக்கு ஒரு ராஜ்ய மன்றம் தேவை என்பதை சீக்கிரத்தில் உணர ஆரம்பித்தோம். மே 1960-ல் கடின முயற்சிக்கு பிறகு எங்கள் புதிய மன்றத்தைக் கட்டி முடித்தோம். அடுத்த 15 வருடங்களில் அதை இரண்டு முறை பெரிதாக்கினோம். மத்திப 1970-களுக்குள் சுமார் 120 பேர் ஊழியத்தில் பங்குகொண்டனர்; ஆதலால் மன்றத்தை மறுபடியும் பெரிதாக்க வேண்டிய தேவை இருந்தது. ஆகவே, 250 பேர் அமரக்கூடிய ஓர் அருமையான ராஜ்ய மன்றம் கட்டப்பட்டு 1981-ல் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கூடுதலான ஆட்கள் அமர அனுமதிக்கும் அதன் அமைப்பின் காரணமாக பெரிய கூட்டங்களாகிய வட்டார மாநாடுகள் நடத்துவதற்கும் அந்த மன்றத்தை உபயோகிக்க முடிந்திருக்கிறது.
பழங்குடியினர் மத்தியில் வளர்ச்சி
1996-ல், பழங்குடியினரும் தீவுவாசிகளும் கொண்ட ஒரு தொகுதி ஏற்படுத்தப்பட்டது என்னை மெய் சிலிர்க்க வைத்தது; அது மௌண்ட் ஐஸா சபையோடு தொடர்புடையதாய் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள தீவுகளில் வாழ்ந்த பழங்குடியினரே தீவுவாசிகள் ஆவர். பழங்குடியினருக்கு இன்னும் திறம்பட்ட விதத்தில் சாட்சி கொடுப்பதே இந்தத் தொகுதியினரின் முக்கிய நோக்கமாகும். ஏனென்றால் பழங்குடியினரில் சிலர் வெள்ளைக்கார ஆட்கள் இருக்கையில் சங்கோஜப்படுவர்.
பழங்குடியினர் அடங்கிய இப்படிப்பட்ட ஏறக்குறைய 20 தொகுதிகள் ஆஸ்திரேலியா முழுவதும் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, அடிலெய்ட், கைர்ன்ஸ், இப்ஸ்விச், பெர்த், டௌன்ஸ்வில் ஆகிய இடங்களிலும் பழங்குடியினர் சபைகள் உருவாயின. இந்தத் தொகுதிகளிலும் சபைகளிலும் என் சொந்த குடும்பத்தினரில் சிலர் உட்பட சுமார் 500 பேர் ஆஜராகின்றனர். பழங்குடி பிரஸ்தாபிகளில் ஏறக்குறைய 10 சதவிகிதத்தினர் பயனியர்களாக அல்லது முழுநேர ஊழியர்களாக சேவிக்கின்றனர்!
1975-ல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டேன். அநேக பழங்குடியினரைத் தாக்கும் இந்த நோய் காலப்போக்கில் என்னை உருக்குலைத்தது. வாசிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் யெகோவா என்னைத் தொடர்ந்து தாங்கி சந்தோஷத்தை அளிக்கிறார்.
எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் சேவைசெய்த தைரியமுள்ள ஊழியர்களுக்காக நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். அவர்கள் க்வீன்ஸ்லாந்தின் தொலைதூர பகுதிகளில், புழுதிபடிந்த தனிமையான ரோடுகளில் சைக்கிள்களில் பயணம் செய்தனர்; கொழுந்துவிட்டு எரியும் அவர்களுடைய வைராக்கியமும் அன்பும் அவர்கள் எடுத்துவந்த ஆவிக்குரிய பொக்கிஷங்களுமே பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள எங்களுக்கு உதவின. இப்போது, பூமியின் மீது எனக்கிருக்கும் காதல் என்றென்றும் நிறைவேறும் அந்தக் காலத்திற்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
[அடிக்குறிப்புகள்]
a பென் பிரிக்கெலின் தனிச்சிறப்பு வாய்ந்த வாழ்க்கைச் சரிதை, செப்டம்பர் 1, 1972, தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 533-6-ல் காணப்படுகிறது.
[பக்கம் 15-ன் வரைப்படம்/படம்]
பெர்த்
இன்று டாரத்தி
டார்வின்
கைர்ன்ஸ்
டௌன்ஸ்வில்
மௌண்ட் ஐஸா
ராக்ஹாம்ப்டன்
எமரால்டு
ஸ்பிரிங்சுர்
ஊரபின்டா
இப்ஸ்விச்
அடிலெய்ட்
சிட்னி
[பக்கம் 13-ன் படம்]
மத்திப 1950-களில் பென் பயிற்சி அளிக்கிறார்