இளைஞர் கேட்கின்றனர். . .
நான் எப்படி கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்?
“நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு வேலை எனக்கு வேண்டும்.”—டான்யா.
அநேக இளைஞர்கள் டான்யாவைப் போலவே சிந்திக்கிறார்கள். “ஒரு ஸ்கூட்டர் வாங்க, கடைக்குப் போய் துணிமணி வாங்க எனக்கு பணம் வேண்டும்” என்று சொல்கிறார் ராஜூ என்ற பெயருடைய ஓர் இளைஞர். “தொட்டதற்கெல்லாம் அப்பா அம்மாவிடமே கேட்க எனக்கு விருப்பமில்லை.” இளம் சோனியா வேலை செய்வதற்கும் இதுவே காரணம். “நான் ஒரு பெண், கடைக்குப் போய் எனக்கு வேண்டியதை நானே வாங்கிக்கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்கிறாள்.
அப்படியானால், யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் பத்திரிகை சொல்கிறபடி, “[ஐக்கிய மாகாணங்களிலுள்ள] மேல்நிலை பள்ளி மாணவர்களில் நான்கில் மூன்று பேர், பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் சனி ஞாயிறு அன்றும் சுயமாக சம்பாதிப்பதற்காக வேலைக்கு சென்றுவிடுகின்றனர்.” இது ஓரளவுக்கு, சமநிலையற்ற விதத்தில் “பண ஆசை” இருப்பதை காட்டுகிறது. பொருளாசைமிக்க இன்றைய உலகில் இது எங்கும் காணப்படுகிறது. (1 தீமோத்தேயு 6:10) ஆனால், பணம் சம்பாதிக்க விரும்பும் எல்லா இளைஞரும் பொருளாசைக்கு அடிபணிந்து விடுவதில்லை.
‘திரவியம் கேடகம்’ என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:12) ஒரு கிறிஸ்தவ இளைஞனாக, நீங்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க விரும்புவதற்கு அநேக நியாயமான காரணங்கள் இருக்கலாம்.a உதாரணமாக, வாரத்தில் இரண்டு நாள் வேலை செய்வதற்கான காரணத்தை இளம் ஏவியன் விளக்குகிறான்: “ஓர் ஒழுங்கான பயனியராக [முழுநேர ஊழியனாக] என்னை நான் ஆதரித்துக்கொள்ள முடிகிறது.”
நீங்கள் ஏன் பகுதிநேர வேலையை விரும்புகிறீர்கள் என்பதற்கு இதுபோன்ற காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை கிறிஸ்தவ மாநாட்டிற்கு ஆஜராக நீங்கள் இலக்கு வைத்திருக்கலாம். அல்லது சபை கூட்டங்களில் அணிந்துகொள்வதற்கு தகுந்த உடை கூடுதலாக உங்களுக்கு தேவைப்படலாம். எப்படியிருந்தாலும், இவற்றை வாங்க உங்களுக்குப் பணம் வேண்டும். ‘ராஜ்யத்தை முதலாவது தேடுகிறவர்களுக்கு’ தேவையானதை கடவுள் கொடுப்பார் என்று இயேசு வாக்குறுதி அளித்தார் என்பதில் சந்தேகமேயில்லை. (மத்தேயு 6:33) ஆனால், நீங்கள் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிட்டால் போதும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. (அப்போஸ்தலர் 18:1-3-ஐ ஒப்பிடுக.) அப்படியானால், கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் எடுக்க வேண்டிய நடைமுறையான நடவடிக்கைகள் சில யாவை?
வேலை தேடுவதற்கு முன்
நீங்கள் வேலை செய்வதில் உங்களுடைய பெற்றோருக்கு ஆட்சேபணை இல்லையென்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் உங்களுடைய அக்கம்பக்கத்தாரையும் ஆசிரியர்களையும் உறவினர்களையும் அணுகி நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதாகும். நீங்கள் அவர்களிடம் நேரடியாக சொல்ல தயங்குவீர்களானால், அவர்கள் சின்ன வயசில் வேலைக்காக என்ன செய்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு பயனுள்ள சில யோசனைகளை சொல்லலாம். நீங்கள் வேலை தேடுவதை எவ்வளவு அதிகம் பேர் தெரிந்திருக்கிறார்களோ அவ்வளவு அதிகம் பேரிடமிருந்து உங்களுக்கு பயனுள்ள தகவல்களும் வாய்ப்புகளும் வந்து குவியும்.
அடுத்ததாக, செய்தித்தாள்களில் ‘ஆட்கள் தேவை’ பகுதிகளிலிருந்தும், கடைகளில், உங்களுடைய பள்ளியில், மற்ற பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளிலிருந்தும் உங்கள் வேலைதேடும் படலத்தை தொடரலாம். “அப்படித்தான் எனக்கு வேலை கிடைச்சுது” என்று சொல்கிறார் டேவ் என்ற ஓர் இளைஞன். “நான் நியூஸ் பேப்பரை புரட்டினேன், பின்பு ஃபேக்ஸ் மூலம் அவர்களுக்கு ஒரு பையோ-டேட்டா அனுப்பினேன், பின்பு அவர்களுக்கு போன் செய்தேன்.” ஆனால், அநேக வேலைகள் விளம்பரம் செய்யப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? செவன்டீன் என்ற பத்திரிகையின்படி, “பத்தில் மூன்று வேலைகள், ஒருவர் வந்து கேட்கிறவரைக்கும் இருப்பதில்லை.” உங்களுக்காக ஒரு வேலைபோட்டு தரும்படி ஒரு முதலாளியை நீங்கள் இணங்க வைக்கலாம்!
ஆனால் எப்படி? ‘எனக்கு கொஞ்சம்கூட அனுபவம் கிடையாது’ என்று நீங்கள் நினைக்கலாம். சரி, மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய பெற்றோர் இல்லாத சமயத்தில் நீங்கள் உங்களுடைய தம்பி தங்கையை கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் பொறுப்புள்ளவர் என்பதை இது காட்டுகிறது. உங்கள் அப்பாவுடைய ஸ்கூட்டரை ரிப்பேர் செய்ய உதவி செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு மெக்கானிக்கல் திறமை இருக்கிறது என்பதை அது காட்டுகிறது. எப்படி டைப் அடிப்பது அல்லது ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியுமா? புதிய புராஜெக்ட் எதிலாவது நீங்கள் நல்ல மதிப்பெண் பெற்றீர்களா? இவையெல்லாம் உங்களுடைய வருங்கால முதலாளியை நம்பவைப்பதற்கு நல்ல குறிப்புகள்.
உங்களுடைய ஹாபியையும் விருப்பங்களையும் புறக்கணித்துவிடாதீர்கள். உதாரணமாக, உங்களுக்கு இசைக்கருவி ஒன்றை இசைக்கத் தெரியுமானால், மியூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்டோரில் வேலை கிடைக்குமா என்று பாருங்கள். விற்பனை பொருள்களில் உங்களுக்கு நிச்சயமாய் விருப்பமிருக்கும், வாடிக்கையாளரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் தகுதியானவர்களாய் இருப்பீர்கள்.
ஒரு வேலைக்காக விண்ணப்பித்தல்
ஒரு இண்டர்வியூவிற்காக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுடைய உடையும் சிகை அலங்காரமும் உங்களைப் பற்றி பறைசாற்றுவதால் அவற்றிற்கு கவனம் செலுத்துங்கள். “பொறுப்புள்ளவர், சுத்தமானவர், ஒழுங்கானவர்” என்று அது சொல்லலாம், அல்லது இதற்கு நேர்மாறானதை சொல்லலாம். கிறிஸ்தவ பெண்கள், “தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், . . . தங்களை அலங்கரிக்க வேண்டும்” என்று பைபிள் சொல்லும்போது அது நடைமுறையானதாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 2:10) அது ஆண்களுக்கும் பொருந்துகிறது. இண்டர்வியூவிற்கு செல்லும்போது, அந்த வேலை எப்படிப்பட்டதாக இருந்தாலும்சரி, ஒருபோதும் நவீன பாணியிலோ அலங்கோலமான உடைகளை அணிந்துகொண்டோ செல்லாதீர்கள்.
உங்களுடைய மனப்பான்மையும் நடத்தையும்கூட உங்களைப் பற்றி நிறைய பேசுகின்றன. பொன்விதியை கடைப்பிடியுங்கள்: உங்களை நடத்த விரும்புகிறபடி மற்றவர்களையும் நடத்துங்கள். (மத்தேயு 7:12) உங்களை வரச்சொன்ன நேரத்திற்கு சரியாக அங்கிருங்கள். உற்சாகமாகவும் சூட்டிப்பாகவும் இருங்கள். நல்நடத்தையைக் கடைப்பிடியுங்கள். பெருமை பீத்திக்கொள்ளாமல் அல்லது மிகைப்படுத்தாமல், அந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என நினைப்பதற்கான காரணத்தை விளக்குங்கள். திட்டவட்டமாக பேசுங்கள்.
தெளிவான, தகவலடங்கிய பையோ-டேட்டாவை கொண்டு செல்லும்படி (அல்லது முன்னதாகவே அனுப்பிவைக்கும்படி) சில நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதில் உங்களுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண், வேலைசெய்வதற்கான நோக்கம், கல்வித் தகுதி (விசேஷ பாடங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்), முன்பு வேலைசெய்த அனுபவம் (சம்பளத்திற்கு செய்த வேலையையும், வாலண்டியராக செய்த வேலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்), விசேஷ திறமைகள், தனிப்பட்ட விருப்பங்கள், ஹாபி (இவை உங்களுடைய திறமைகளைப் பற்றி விவரிக்கலாம்) ஆகியவற்றையும் தேவைப்பட்டால் நற்சான்றிதழ்களை அனுப்பிவைப்பதாகவும் குறிப்பிடுங்கள். அந்த வேலைக்காக உங்களைப் பரிந்துரைக்கும் சில நபர்களுடைய பெயர்களையும் விலாசங்களையும் தொலைபேசி எண்களையும் ஒரு தனித்தாளில் நீங்கள் எழுதலாம். இதற்கு அவர்களுடைய அனுமதியை முன்னதாகவே பெற்றுக்கொள்ள மறவாதீர்கள். முன்னாள் முதலாளிகள், ஆசிரியர், பள்ளி ஆலோசகர், வயதில் மூத்த நண்பர்—உங்களுடைய திறமைகளுக்கு அல்லது தனிப்பட்ட பண்புகளுக்கு சான்றளிக்கும் எவரையும்—இவற்றில் நீங்கள் குறிப்பிடலாம்.
சுயதொழில் செய்தல்
நீங்கள் படாத பாடுபட்டும் வேலை கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? இது அநேக நாடுகளில் பொதுவாக இருக்கும் பிரச்சினை. ஆனால் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். நீங்கள் சொந்தமாக தொழில் ஆரம்பிப்பதே அதற்கான விடை. அதனால் வரும் பலன்கள்? உங்களுக்கென்று ஓர் அட்டவணை போட்டுக்கொண்டு நீங்கள் விரும்புகிறபடி அதிக நேரமோ குறைந்த நேரமோ வேலை செய்யலாம். நிச்சயமாகவே, சுய வேலைவாய்ப்புக்கு சுய-தூண்டுதலும், கட்டுப்பாடும், முன்முயற்சி எடுப்பதற்கான விருப்பமும் தேவை.
ஆனால் எப்படிப்பட்ட தொழிலை நீங்கள் ஆரம்பிக்கலாம்? உங்களுடைய சுற்றுவட்டாரத்தை யோசித்துப் பாருங்கள். வேறு எவரும் விற்காத பொருட்களோ செய்யாத தொழில்களோ இருக்கின்றனவா? உதாரணமாக, இயற்கையின்மீது உங்களுக்கு விருப்பம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்யலாம் என்றால், சம்பளத்திற்கு உங்கள் அக்கம்பக்கத்தாருடைய தோட்டத்தை கவனித்துக்கொள்ளலாம் அல்லது அழகுபடுத்தலாம். அல்லது உங்களுக்கு இசைக்கருவி ஒன்றை இசைக்கத் தெரியலாம். ஒருவேளை மற்றவர்களுக்கு நீங்கள் சொல்லித்தர முடியுமா? அல்லது பொதுவாக மற்றவர்கள் முகம் சுளிக்கிற வேலையை, அதாவது வீட்டை கழுவுவது அல்லது சுத்தம் செய்வது போன்ற மற்ற வேலையை செய்யலாம். தன் கைகளின் பிரயாசத்தால் வேலைசெய்வதற்கு ஒரு கிறிஸ்தவர் வெட்கப்பட மாட்டார். (எபேசியர் 4:28) நீங்கள் ஒரு புதிய திறமையை வளர்த்துக்கொள்ளவும் முயற்சிசெய்யலாம். இதற்கு வழிகாட்டும் புத்தகங்களை நூலகத்தில் ஆராய்ந்து பாருங்கள், அல்லது உங்களுக்கு சொல்லித்தர ஒரு நண்பனிடம் கேளுங்கள். உதாரணமாக, இளம் யோசுவா ஆர்ட்டிஸ்ட் வேலைக்கு படித்தார். திருமணங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கான அழைப்பிதழ்களுக்கு டிஸைன் செய்து தரும் சிறுதொழிலை ஆரம்பித்தார்.—“சுயதொழில்கள்” என்ற பெட்டியைக் காண்க.
ஓர் எச்சரிக்கை: எல்லா நெளிவுசுளிவுகளையும் அறிந்துகொள்வதற்கு முன்பு எந்தவொரு தொழிலிலும் அவசரப்பட்டு கால்வைத்து விடாதீர்கள். (லூக்கா 14:28-30) முதலாவதாக, உங்களுடைய பெற்றோருடன் கலந்துபேசுங்கள். மேலும், இதுபோன்ற தொழில்களை நடத்தியிருப்பவர்களுடன் பேசுங்கள். நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருக்குமா? நீங்கள் லைசென்ஸ் பெற வேண்டியிருக்குமா? விவரங்களுக்கு உள்ளூர் அதிகாரிகளை அணுகுங்கள்.—ரோமர் 13:1-7.
சமநிலையைக் காத்துக்கொள்ளுங்கள்!
உங்கள் சக்திக்கும் மிஞ்சி வேலையை இழுத்துப் போட்டுக்கொள்வதில் ஆபத்து உள்ளது. வேலைசெய்யும் சில இளைஞர்களைப் பற்றி சோனியா சொன்னார்: “அவர்கள் சரியாக ஹோம்வொர்க் செய்வது கிடையாது, வகுப்பில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு அதிக களைப்படைந்து விடுகிறார்கள்.” உலகின் சில பாகங்களில், இளைஞர்கள் தங்களுடைய குடும்பங்களைக் காப்பாற்ற நீண்ட நேரம் வேலைசெய்வதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் இல்லையென்றால், ஏன் அளவுக்கு மீறி செல்ல வேண்டும்? பெற்றோர்கள் பெரும்பாலானோர் சொல்கிறபடி, பள்ளிக்கு செல்கையில் வாரத்திற்கு 20 மணிநேரங்களுக்கு மேல் வேலைசெய்வது ரொம்ப ஜாஸ்தி, கெடுதலே விளைகிறது. வேலைசெய்வதற்கு ஒரு வாரத்தில் எட்டு முதல் 10 மணிநேரங்களுக்கும் மேல் ஒதுக்காதவாறு பார்த்துக்கொள்ளும்படி சிலர் ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.
பள்ளிக்கூடம் முடிந்து வேலைக்காக நீங்கள் அதிக நேரத்தையும் சக்தியையும் கவனத்தையும் பயன்படுத்தினால், உங்களுடைய ஆரோக்கியமும் மதிப்பெண்ணும் குறையும், முக்கியமாக உங்களுடைய ஆவிக்குரியத்தன்மை பலவீனமாகும். ஆம், “ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும்” நெருக்கிப்போடுவதற்கு அனுமதித்திருப்பவர்கள் பெரியவர்கள் மட்டுமல்ல. (மாற்கு 4:18) ஆகவே, உங்களுடைய சமநிலையைக் காத்துக்கொள்ளுங்கள். மிதமிஞ்சி வேலைசெய்வதற்கு எதிராக எச்சரித்து சாலொமோன் சொன்னதாவது: “காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.”—பிரசங்கி 4:6, திருத்திய மொழிபெயர்ப்பு.
ஆம், பணம் சம்பாதிப்பது அவசியமாக இருக்கலாம். இவ்வாறு செய்வதற்கான உங்களுடைய நோக்கங்கள், முன்பு குறிப்பிடப்பட்ட இளம் ஏவியனைப் போன்று சரியானதாயும் தேவபக்திக்குரியதாயும் இருந்தால், உங்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். என்றபோதிலும், “அதிமுக்கியமான காரியங்களை,” அதாவது ஆவிக்குரிய காரியங்களை மறந்துவிடும் அளவுக்கு வேலையே கதி என்றில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். (பிலிப்பியர் 1:10, NW) பணம் ‘கேடகமாய்’ இருக்கலாம் என்றாலும், கடவுளோடுள்ள உங்களுடைய உறவே உங்களை உண்மையில் வெற்றிபெறச் செய்யும்.—பிரசங்கி 7:12; சங்கீதம் 91:14.
[அடிக்குறிப்புகள்]
a நவம்பர் 22, 1990; டிசம்பர் 8, 1990; (ஆங்கிலம்); செப்டம்பர் 22, 1997 ஆகிய விழித்தெழு! இதழ்களில் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரைகள் பள்ளி நேரத்திற்குப்பின் செய்யும் வேலைகளால் வரும் லாப நஷ்டங்களை சீர்தூக்கிப் பார்க்கின்றன.
[பக்கம் 22-ன் பெட்டி]
சுயதொழில்கள்
• வீட்டை சுத்தம் செய்தல்
• செய்தித்தாள்களை விற்றல் அல்லது விநியோகித்தல்
• கணக்கு எழுதும் வேலை
• தோட்ட வேலை அல்லது புல்வெட்டுதல்
• ஈவ்னிங் (டிஃபன்) ஸ்டால்
• பைண்டிங் செய்தல்
• ஷூ பாலிஷ் போடுதல்
• துணிகளை தைத்தல் அல்லது இஸ்திரிபோடுதல்
• காய்கறி வளர்த்து அவற்றை விற்றல்
• கோழி வளர்த்தல் அல்லது முட்டைகளை விற்றல்
• டைப் அடித்தல் அல்லது உவர்டு புராஸஸிங்
• எடுபிடி வேலை செய்தல்
• டெலிவரி செய்தல்
• மியூஸிக் கற்றுக்கொடுத்தல் அல்லது டியூஷன் நடத்துதல்
[பக்கம் 21-ன் படம்]
மிதமிஞ்சி வேலைசெய்வது உங்களுடைய மதிப்பெண் குறைந்துபோகும்படி செய்யலாம்