இரத்தமில்லா அறுவை சிகிச்சை—அதன் நன்மைகள் பாராட்டைப் பெறுகின்றன
யெகோவாவின் சாட்சிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான சட்டத்தொகுப்பு என்ற ஆங்கில சிறுபுத்தகத்தை 1996-ம் வருடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் வெளியிட்டது. அந்தச் சிறுபுத்தகத்தில் அறுவை மருத்துவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்: “இரத்தமேற்றுவதால் வரும் ஆபத்துக்களைப் பார்க்கையில் சாத்தியமானபோதெல்லாம் மாற்றுவழிகளை பயன்படுத்துவதைக் குறித்து தீவிரமாக சிந்திப்பது நன்மையாகத் தோன்றுகிறது.”
அமெரிக்க மருத்துவ சங்கத்தால் பிரசுரிக்கப்படும் எஹெச்எ நியூஸ் இரத்தமில்லா அறுவை சிகிச்சையின் நன்மைகள் ஏன் இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதன் பேரில் அறிக்கை வெளியிட்டது. “மத நம்பிக்கையாக தொடங்கியது, இன்று மருத்துவ முன்னுரிமையாகவும் முன்னேற்றமடையும் தொழில்நுட்பமாகவும் மாறி வருகிறது” என்று அந்த வாராந்தர இதழ் குறிப்பிட்டது. “ஓரளவுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய கொள்கைகளின் காரணமாக தூண்டுவிக்கப்பட்ட இரத்தமில்லா மருத்துவமும் அறுவை சிகிச்சையும், அந்த ஆன்மீக சமூகத்தினரின் தேவைகளையும் தாண்டி இப்போது தேசம் முழுவதிலுமுள்ள ஆபரேஷன் தியேட்டர்களுக்குள் நுழைந்திருக்கிறது.”
பெருவாரியான டாக்டர்கள் ஏன் இரத்தமில்லா அறுவை சிகிச்சையை ஆதரிக்கிறார்கள் என்பதே 1997-ன் கடைசி காலாண்டில் வந்த டைம் பத்திரிகையின் துணை இதழில் சிறப்பிக்கப்பட்ட கட்டுரையின் பொருளாகும். “எய்ட்ஸ் பயம் அதற்கு ஒரு காரணம்தான்” என்று அந்த கட்டுரை சொன்னது. எங்கல்வுட் மருத்துவமனையைச் சேர்ந்த இரத்தமில்லா மருத்துவத்தையும் அறுவை சிகிச்சையையும் முன்னேற்றுவிப்பதற்கான நியூ ஜெர்ஸி இன்ஸ்டிட்யூட், நியூ ஜெர்ஸி, எங்கல்வுட்டில் உள்ளது. அங்கு நடைபெறும் வேலையைக் குறித்தே அந்தக் கட்டுரை குறிப்பாக அறிக்கை செய்தது.
டைம் குறிப்பிட்டதாவது: “இப்போது ஐக்கிய மாகாணங்களில் இரத்தமில்லா அறுவை சிகிச்சை செய்துவரும் 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த இன்ஸ்டிட்யூட் முதன்மையாக திகழ்கிறது. தானம் செய்யப்பட்ட இரத்தத்தை இவர்கள் பயன்படுத்துவதே இல்லை. சாதாரணமாக இரத்தமேற்றி செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சைகளுக்கு பதிலாக, பல்வேறு வகையான அறுவை சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, இரத்த இழப்பை மிக அதிகமாக குறைத்துவிடுகிற அல்லது முற்றிலும் கட்டுப்படுத்துகிற தொழில் நுணுக்கங்களையும் பயன்படுத்துகிறார்கள்.”
பயனுள்ளதும் பாதுகாப்பானதும்
ஹென்றி ஜேக்ஸன் என்பவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை டைம் கட்டுரையின் முன்னுரை எடுத்துக் காட்டியது. அவர் உடலுக்குள் ஏற்படும் தீவிர இரத்தக்கசிவால் துன்புற்றார். அதனால் அவருடைய உடலின் இரத்த அளவு 90 சதவீதம் குறைந்தது. ஹீமோகுளோபின் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 1.7 கிராம் என குறைந்தது. இதனால் அவர் உயிர் ஊசலாடும் நிலையில் இருந்தார். அவருக்கு நியூ ஜெர்சியிலுள்ள மற்றொரு மருத்துவமனை இரத்தமேற்றாமல் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டது. அதன் காரணமாக, எங்கல்வுட் மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்பட்டார்.
எங்கல்வுட் மருத்துவமனையில், டாக்டர் ஆரியே ஷான்டர் என்பவரின் கவனிப்பில் “இரும்புச் சத்துக்களும் விட்டமின்களும் அடங்கிய அதிக ஆற்றலுள்ள மருந்தும், இரத்தத்தை ஊறச்செய்வதற்கான வீரியமுள்ள மருந்தும், அதாவது சின்தடிக் எரித்திரோபோயட்டின்னும் கொடுக்கப்பட்டது. இது எலும்பு மச்சையில் சிவப்பு ரத்த அணுக்கள் உருவாவதை தூண்டுகிறது. கடைசியாக, அவர் உடலில் எஞ்சியிருந்த சிறிதளவு இரத்தப் போக்குவரத்தை தூண்டுவிக்க ரத்த நாளங்கள் வழியாக திரவங்கள் செலுத்தப்பட்டன.”
சில நாட்களுக்கு பின்பு, “ஜேக்ஸன் இறந்துவிட்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அந்த மருத்துவமனையிலிருந்து போன் வந்தது. ஒளிவுமறைவற்ற திருப்தியுடன் ஷான்டர் அவர்களிடம் பதிலளித்தார், ‘அவர் சாகாம இருக்கிறது மட்டுமல்ல, அவர் நல்லாயிட்டார், டிச்சார்ஜூக்கு தயாராயிட்டார், சீக்கிரமே அவரோட அன்றாட வேலையை அவரே செய்துகொள்வார்’” என்பதாக டைம் எழுதியது.
இரத்தமில்லா அறுவை சிகிச்சையைப் பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு வளர்ந்தது என்பதைக் குறித்து டாக்டர் எட்வின் டைச் விளக்கினார். அவர் நியூ ஜெர்சி, நீவார்க்கிலுள்ள யுனிவர்சிட்டி ஹாஸ்பிடலின் இரத்தமில்லா சிகிச்சைக்கான மெடிக்கல் டைரக்டராக இருக்கிறார். நவம்பர் 28, 1997, அன்று டிவிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்: “யெகோவாவின் சாட்சிகள் . . . இரத்தமில்லாமல் அறுவை சிகிச்சை செய்பவர்களை கண்டுபிடிப்பதற்காக பெரும் முயற்சி எடுத்தனர். இரத்தமேற்றிக் கொண்ட நபர்களை சாட்சிகளோடு ஒப்பிடுகையில், சாட்சிகள் எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் முன்னேறினர் என்பதை அதன்பின் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் காட்டின.”
டாக்டர் டைச் தொடர்ந்து சொன்னார்: “இரத்தம் ஏற்றிக்கொள்வது உடலின் நோய்த்தடுப்பாற்றல் சக்தியைக் குறைக்கலாம், ஆபரேஷனுக்கு பின்புவரும் தொற்றுநோய்களுக்கு காரணமாகவும் ஆகலாம். கேன்சர் இருந்தவருக்கு அது மீண்டும் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, இரத்தம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருந்தாலும்கூட, விரும்பத்தகாத நிலைமைகளை ஏற்படுத்துகிறது.” இரத்தமில்லா அறுவை சிகிச்சையைக் குறித்து டாக்டர் டைச் முடிவாக கூறினார்: “நோயாளியின் நிலைமையில் குறைந்தளவு சிக்கலுடன் நல்லவிதமான முன்னேற்றம் ஏற்படுகிறது, [அதற்கு] ஆகும் செலவுகளும்கூட குறைவே. அதனால், எல்லா சூழ்நிலைமைகளிலும் இதுவே வெற்றிவாகை சூடுகிறது.”
ஆகவே டைம் பத்திரிகை சொன்னவிதமாக, “இரத்தமேற்றுவதைக் காட்டிலும் பாதுகாப்பானதும் அதிக திறன் வாய்ந்ததுமான ஒரு சிகிச்சைதான் வேண்டுமென அதிகமதிகமான நோயாளிகள் வற்புறுத்துகின்றனர்.” அந்தப் பத்திரிகை தொடர்ந்து குறிப்பிட்டது: “ஐக்கிய மாகாணங்களில் நடக்கும் 25 சதவீத இரத்தமேற்றுதல்கள் அவசியமற்றது என்பதாக ஒருசில கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. தேவை என்று முன்பு எண்ணிய அளவு ஹீமோகுளோபினை நோயாளிகளால் தாங்கமுடிவதில்லை என்றும்கூட சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பிரத்யேகமாக இளைஞர்களை எடுத்துக் கொண்டால், இரத்தம் அவர்களுடைய உடலில் சேமிப்பில் இருக்கிறது . . . பெரும்பாலான நோயாளிகளுக்கு இரத்தமேற்றாமல் இருப்பதே சிறந்ததாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கிறதென [ஷான்டர்] பலமாக நம்புகிறார்.”
இரத்தமேற்றுவதால் வரும் தொற்று நோய்கள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன என்றாலும் இன்னும் அதிக ஆபத்துக்களும்கூட இருக்கின்றன. டாக்டர் ஷான்டர் இவ்வாறு விளக்கினார்: “பதப்படுத்தப்பட்டு இரத்த வங்கியில் சேமிக்கப்பட்ட இரத்தத்திற்கு உடலில் உள்ள இரத்தத்தில் இருப்பதுபோல் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்வதற்கான ஆற்றல் இல்லை. இரத்தமேற்றும்போது உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இப்போதுதான் நாம் புரிந்துகொள்ள தொடங்கியிருக்கிறோம்.”
“பொன் திட்டம்”
“கடைசியாக, இதற்கான செலவுகளை கவனிப்போம்: ஒவ்வொரு முறை இரத்தமேற்றுவதற்கும் சுமார் 500 டாலர் செலவாகிறது. அதோடு இதர நிர்வாக செலவுகளையும் சேர்த்துக்கொண்டால், வருடத்திற்கு, ஒட்டுமொத்தமான பில் 100 கோடி டாலரிலிருந்து 200 கோடி டாலர் வரையாக ஆகியிருக்கிறது. மாற்றுமருந்துகளைக் குறித்து சிந்திப்பதற்கு இதைவிட ஒரு நல்ல காரணம் வேண்டுமா என்ன” என்று டைம் தன்னுடைய முடிவுரையில் எழுதியது. இரத்தமேற்றுதலின் தலை சுற்றவைக்கும் செலவுகளே இன்று இரத்தமில்லா அறுவை சிகிச்சை இவ்வளவு பிரபலமானதற்கு மிகப்பெரிய காரணமாகத் தோன்றுகிறது.
ஒஹாயோ, கிளீவ்லாண்டில் உள்ள செயின்ட் வின்சென்ட் சாரிட்டி ஹாஸ்பிடலில் இரத்தமில்லா மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான மையம் உள்ளது. அதன் டைரக்டர் ஷேரன் வெர்னான் இரத்தத்தை பயன்படுத்தாமல் சிகிச்சைப் பெறும் நோயாளிகளைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “செலவை குறைக்கும் சூழ்நிலைகளில் இரத்தமில்லா மருத்துவமே பொன் திட்டமாக இருக்கிறது. இதை மருத்துவர்கள் புரிந்துவருவதே இது அதிகரிப்பதற்கான காரணமாகும். சாதாரணமாக எங்களோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளாத இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும்கூட மக்களை எங்களிடம் அனுப்புகின்றன என்பதை நாங்கள் காண்கிறோம். ஏனென்றால் இவ்வாறு செய்வது அவர்களுடைய பணத்தை மிச்சப்படுகிறது.”
இரத்தமில்லா அறுவை சிகிச்சை மருத்துவ சமுதாயத்தில் வேகமான அங்கீகாரத்தைப் பெறுவது தெளிவாக இருக்கிறது. அதற்கு அநேக காரணங்களும் இருக்கின்றனவே.
[பக்கம் 11-ன் பெட்டி]
சமீபகால நீதிமன்ற தீர்ப்புகள்
1997 நவம்பரிலும் டிசம்பரிலும் ஐ.மா.-விலுள்ள இல்லினாய்ஸ் நகரில் இரண்டு வழக்குகளுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை. முதலாவதாக, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான மேரி ஜோன்ஸுக்கு 1,50,000 டாலர் நஷ்டயீடு வழங்கப்பட்டது. இரத்தமேற்றிக் கொள்ளமுடியாது என்பதை தெளிவாக கூறியிருந்தபோதிலும் 1993-ல் இரண்டு யூனிட் இரத்தம் அவருக்கு கட்டாயமாக செலுத்தப்பட்டது. விருப்பமற்ற இரத்தமேற்றுதலின் விளைவாக ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வமான தீங்கிற்காக ஒரு சாட்சியால் பெறப்பட்ட அதிகமான தொகை இதுவே.
இரண்டாவது வழக்கு, அச்சமயம் கருவுற்றிருந்த சாட்சியான டார்லின் பிரெய்ன் தொடுத்தது. 34 வார கருவினிமித்தமாக அவருக்கு இரத்தம் பலவந்தமாக ஏற்றப்பட்டது. டிசம்பர் 31, 1997 அன்று இல்லினாய்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை இவ்வாறு விளக்கியது: “இரத்தமேற்றுதல் வயதுவந்தவரின் உடல்சம்பந்தமான உரிமையில் தலையிடும் பலவந்தமான மருத்துவ சிகிச்சை.” மேல்முறையீட்டு நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை இவ்வாறு தொகுத்துரைத்தது: “இந்த நாட்டின் சட்டத்தின்படி, . . . கர்ப்பமாயிருக்கும் பெண்ணிடம் ஒரு பலவந்த மருத்துவ சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும்படி சட்டத்தை உபயோகித்து கட்டாயப்படுத்த முடியாது.”
மிசாயே டாகிடாவுக்கு 1992-ல் நடந்த ஒரு அறுவை சிகிச்சையில் டாக்டர் இரத்தமேற்றியது சரியே என்ற ஒரு கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிப்ரவரி 9, 1998 அன்று டோக்கியோ உயர்நீதிமன்றம் செல்லாததாக்கிற்று. “சிகிச்சையைத் தெரிந்தெடுப்பதற்கான நோயாளியின் உரிமை மதிக்கப்பட வேண்டும். இரத்தமேற்றியது சட்டப்படி குற்றமே” என உயர் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. மிசாயே டாகிடாவுக்கு 5,50,000 யென் (4,200 டாலர்) நஷ்டயீடு வழங்கப்பட்டது.