உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 8/22 பக். 8-9
  • விளம்பர அலையின் வேகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விளம்பர அலையின் வேகம்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வாங்குவோரின் கலாச்சாரம்
  • உங்கள் மீது அவற்றின் செல்வாக்கு
  • திக்குத் தெரியாத விளம்பர அலைகளில்
    விழித்தெழு!—1998
  • விளம்பரம் சக்திவாய்ந்த தூண்டுகோல்
    விழித்தெழு!—1989
  • விளம்பர அலையின் கைவண்ணங்கள்
    விழித்தெழு!—1998
  • விளம்பரம் எந்தளவுக்கு அவசியம்?
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 8/22 பக். 8-9

விளம்பர அலையின் வேகம்

கொஞ்ச காலத்திற்கு முன்பு டெலிவிஷன் நிகழ்ச்சிகளின் இடையிடையே, “எங்கள் ஸ்பான்ஸர்களிடமிருந்து வார்த்தை துளிகள்” என்பதாகக் குறிப்பிடுவர். தங்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக, ஒலி(ளி)பரப்பு நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்யும் கம்பெனிகளே ஸ்பான்ஸர்கள். ஆனால் இப்போதோ, “வார்த்தை துளிகள்” என்ற நிலை மாறி வார்த்தை பிரளயம் என்ற நிலை வந்துவிட்டது. இன்றும் டெலிவிஷன், பத்திரிகைகள், செய்தித்தாள், ரேடியோ போன்றவற்றில் செய்திகளையும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் விளம்பரதாரர்களே பண உதவியளித்து ஆதரிக்கின்றனர். ஆகவே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் எந்தத் தகவல் வரலாம் எது வரக்கூடாது என்பதன்பேரில் ஸ்பான்ஸர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர்.

ஜெர்மனியில் உயர்தர கார் உற்பத்தி செய்யும் ஒரு கம்பெனியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். தங்கள் கார் விளம்பரம் பத்திரிகையில் “பளிச்சென்று கண்ணில் படும் இடத்தில் மட்டுமே வரவேண்டும்” என்று அவர்கள் 1993-ஆம் ஆண்டு 30 பத்திரிகைகளுக்கு உத்தரவிட்டனர். அதேபோல் அந்தப் பத்திரிகைகளில் தங்களுடைய காரை, ஜெர்மன் பொருட்களை, அல்லது ஜெர்மனியை குறைகூறும் எந்தக் கட்டுரையும் இடம் பெறக்கூடாது என்றனர். ஆம், பத்திரிகை விளம்பரத்திற்காக 15 மில்லியன் டாலர் செலவு செய்யும் இந்தக் கம்பெனி தங்கள் விளம்பரம் “பளிச்சென்று கண்ணில் படும் இடத்தில் மட்டுமே வரவேண்டும்” என்று எதிர்பார்ப்பது நியாயமே.

மணப்பெண்ணின் உடைகளை விளம்பரப்படுத்தும் ஒரு பத்திரிகை, செகண்ட்-ஹான்ட் மணப்பெண் உடைகளின் விளம்பரத்தை ஏற்றுக்கொள்ளாது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. அதைப்போலவே வீடுகள் வாங்குவது விற்பது தொடர்பான புரோக்கர்களைப் பற்றி விளம்பரப்படுத்தும் ஒரு செய்தித்தாள் புரோக்கர் இல்லாமல் எவ்விதம் வீட்டை வாங்கலாம் என்பதை எடுத்துச் சொல்லாது. அதைப்போலவே சிகரெட்டுகள் அல்லது லாட்டரிகளை விளம்பரப்படுத்தும் மீடியாக்கள் புகைத்தலையோ அல்லது சூதாட்டத்தையோ கண்டிக்காது என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வாங்குவோரின் கலாச்சாரம்

ஆகவே விளம்பரத்தின் செல்வாக்கு பொருட்களை வியாபாரம் செய்வதோடு நின்றுவிடுவதில்லை. அது பொருளாதார வாழ்க்கைப் பாணியை முன்னேற்றுவிக்கிறது. அதாவது, மக்கள் பொருட்களையே மையமாக கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைக்கும் ஓர் உலகளாவிய கலாச்சாரத்தை முன்னேற்றுவிக்கிறது.

அதில் ஏதாவது தவறு இருக்கிறதா? இதற்கு பதில், நீங்கள் யாரைக் கேட்கிறீர்கள் என்பதைப் பொருத்ததே. ஜனங்கள் பொருட்களை வாங்க அதிக ஆவலாக இருக்கின்றனர்; ஆகவே விளம்பரங்கள் இந்தத் தேவையை பூர்த்தி செய்கின்றன என்பதாக விளம்பரதாரர்கள் நியாயப்படுத்துகின்றனர். விளம்பரங்கள் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன, விளையாட்டுகளையும் கலை நிகழ்ச்சிகளையும் ஸ்பான்ஸர் செய்கின்றன, அவரவருக்குக் கட்டுப்படியாகும் பொருட்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன, போட்டியை உற்சாகப்படுத்துகின்றன, பொருட்களின் தரத்தை உயர்த்துகின்றன, விலைவாசியை கட்டுப்பாட்டில் வைக்கின்றன, தகவலறிந்து வாங்க ஜனங்களுக்கு உதவுகின்றன என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜனங்கள், திருப்தியிழந்து, எல்லை இல்லா ஆசைகளை வளர்த்துக்கொண்டு, தங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று நினைப்பதற்குக் காரணம் விளம்பரங்களே என்று மற்றவர்கள் சாடுகின்றனர். ஆராய்ச்சியாளர் ஆலன் டியூரிங் இவ்விதம் எழுதினார்: “நம் காலத்தைப் போன்றே விளம்பரங்களும் படுவேகமாக மாறுகின்றன, வாழ்க்கை இன்பம் அனுபவிப்பதற்கே என்ற நினைப்பை ஏற்படுத்துகின்றன, பிரபல நட்சத்திரங்களை மாடல்களாக காண்பிக்கின்றன. அதோடு மாறிக்கொண்டேயிருக்கும் பேஷனின் பின்னால் அலையவைத்து, தனி நபர்களை நட்சத்திரமாக்கி, ஷாப்பிங் செய்வதால் மட்டுமே வாழ்க்கையில் திருப்தி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, தொழில் வளர்ச்சியே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அடிப்படை என்ற நினைப்பையும் ஏற்படுத்திவிடுகின்றன.”

உங்கள் மீது அவற்றின் செல்வாக்கு

இப்படிப்பட்ட விளம்பரங்கள் நாம் யார் என்பதையும் எதை விரும்புகிறோம் என்பதையும் மாற்றி விடுகின்றனவா? ஒருவேளை மாற்றிவிடலாம். நம்மீது உள்ள அப்படிப்பட்ட செல்வாக்கு அதிகமா அல்லது குறைவா என்பது மற்ற செல்வாக்குகளின் அடிப்படையில் இருக்கக்கூடும்.

நாம் பைபிள் நியமங்கள் மற்றும் மதிப்பீடுகளின்படி வழிநடத்தப்படுவோமென்றால் பொருட்களை வைத்திருப்பது தவறல்ல என்பதை உணர்ந்திருப்போம். ஆபிரகாம், யோபு, சாலொமோன் போன்ற பலருக்கு கடவுளே ஏராளமான பொருட்களை அளித்து ஆசீர்வதித்தார்.

அளவில்லாமல் பொருட்களை சேர்த்து அதன் மூலம் சந்தோஷத்தையும் திருப்தியையும் தேடும் ஜனங்களின் மனப்பான்மையைத் தவிர்ப்பதற்கு பைபிள் நியமங்களை பொருத்தி பிரயோகிப்பது உதவியாக இருக்கும். பைபிள், ‘களைத்துப்போகும் வரை ஷாப்பிங் செய்’ என்று சொல்லவில்லை. அதற்கு பதில் அது இவ்விதம் குறிப்பிடுகிறது:

தேவனிடம் நம்பிக்கையாக இருங்கள். “இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.”—1 திமொத்தேயு 6:17, பொது மொழிபெயர்ப்பு.

திருப்தியுடன் இருங்கள். “உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.”—1 திமொத்தேயு 6:7, 8, பொ.மொ.

அடக்கமாக இருங்கள். “பெண்கள் பின்னற்சடை, பொன், முத்து, விலையுயர்ந்த ஆடைகள் ஆகியவற்றால் தங்களை அணிசெய்து கொள்ளாமல், நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் ஏற்புடைய ஆடைகளை அணியவேண்டும். கடவுள் பற்று உள்ளவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பெண்களுக்கு ஏற்ற அணிகலன்கள் நற்செயல்களே.”—1 திமொத்தேயு 2:9, 10, பொ.மொ.

தேவ ஞானம் செல்வத்தைவிட சிறந்தது என்பதை உணருங்கள். “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.”—நீதிமொழிகள் 3:13-18.

தாராளமாக வழங்குங்கள். “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.”—அப்போஸ்தலர் 20:35.

இந்தக் கட்டுரைகள்கூட ஒருவிதமான விளம்பரமே என்பதாகவும், இவற்றில், பொருளாதாரக் காரியங்களுக்காக ஆவிக்குரிய மதிப்பீடுகளை தள்ளி வைத்துவிடக்கூடாது என்ற கருத்தை நீங்கள் “வியாபாரம் செய்கிறீர்கள்” என்பதாகவும் ஒருவர் வாதிடலாம். இந்த முடிவை மறுக்க முடியாது என்பது உண்மைதான்.

[பக்கம் 9-ன் பெட்டி]

தேவனுடைய ராஜ்யத்தை விளம்பரம் செய்தல்

மனதைத் தூண்டும் ஒரு செய்தியை ஜனங்களிடம் சொல்வதற்கு சிறந்த வழி என்ன? விளம்பரப்படுத்துதல்: தத்துவங்களும் செயல்முறைகளும் என்ற ஆங்கில புத்தகம் இவ்விதம் சொல்கிறது: “தலைசிறந்த ஓர் உலகம் என்பது, ஒவ்வொரு உற்பத்தியாளனும், வாங்குவோரிடத்தில் நேரிடையாக தனது பொருளைப் பற்றியும் அதற்கு அளிக்கும் சர்வீஸ் குறித்தும் மனம்விட்டுப் பேசும் சூழலுள்ள உலகமாகும்.” உண்மை கிறிஸ்தவர்கள் இந்த முறையில் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து கடந்த சுமார் 2,000 வருடங்களாக விளம்பரப்படுத்தி வந்திருக்கின்றனர். (மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 20:20) ஏன் வாணிகத்திலும் இதே முறையைப் பயன்படுத்தி அதிக ஜனங்களைக் கவரக்கூடாது? அந்தப் புத்தகம் பின்வருமாறு விவரிக்கிறது: “அது மிக அதிகமாக செலவு பிடிக்கும் விஷயம். சொல்லப்போனால், ஒருவரை நேரடியாக பார்ப்பதற்கே 150 டாலருக்கும் அதிகமாக செலவாகலாம்.” கிறிஸ்தவர்கள் மனமுவந்து தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து “விளம்பரப்படுத்துகின்றனர்.” அது அவர்களது வணக்கத்தின் ஒரு பாகம்.

[பக்கம் 8-ன் படங்கள்]

‘களைத்துப்போகும் வரை ஷாப்பிங் செய்’ என்பது பைபிளின் செய்தி அல்ல

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்