உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 6/22 பக். 8-11
  • விடையைக் கீழே அல்ல, மேலே பாருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விடையைக் கீழே அல்ல, மேலே பாருங்கள்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மிருகத்தின் ஜீன்களா, குறைபாடுள்ள ஜீன்களா?
  • நாம் சாவை வெறுக்க காரணம்
  • நிரந்தரமாக வாழவே உருவாக்கப்பட்டோம்
  • அன்பென்னும் அச்சாணியில் சுழலும் புதியதோர் உலகம்
  • மரணமே வாழ்க்கையின் முடிவா?
    விழித்தெழு!—2007
  • நித்திய ஜீவன் உண்மையிலேயே சாத்தியமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • மனிதன் என்ற அற்புதம்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • இந்தப் பூமியில் உங்களால் என்றென்றும் வாழ முடியும்!
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2018
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 6/22 பக். 8-11

விடையைக் கீழே அல்ல, மேலே பாருங்கள்

தொடர்ந்து மெல்ல மாற்றங்கள் ஏற்பட்டதால் இப்போது நாம் உயர்வகை விலங்காக இருக்கிறோம் என்பது பரிணாமம் சொல்லித்தரும் பாடம். இது ஒருபுறம் இருக்க, நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டு, எந்தவித குறைபாடும் இல்லாமல் முதலில் இருந்தோம், ஆனால் அதன்பின் கொஞ்ச காலம் கழித்தே குறைபாடு நுழைந்தது, மனிதவர்க்கம் மெல்ல மெல்ல சீரழிய ஆரம்பித்தது என பைபிள் சொல்கிறது.

நம்முடைய ஆதி பெற்றோர் ஆதாமும் ஏவாளும்தான் நம் சீரழிவுக்குக் காரணம். ஏனென்றால் ஒழுக்கநெறி விஷயத்தில் அவர்கள் தங்கள் இஷ்டப்படி நடக்க விரும்பினார்கள், வேண்டுமென்றே கடவுளின் பேச்சை கேட்காமல், மனசாட்சியை குழி தோண்டி புதைத்தார்கள். பாதுகாப்பு வேலியை வேண்டுமென்றே உடைத்தெறிந்து, மேலிருந்து பள்ளத்தில் உருண்டு விழும் ஒரு வண்டியைப்போல், அவர்கள் கடவுளுடைய சட்டம் என்ற பாதுகாப்பு வேலியை உடைத்தெறிந்து நம்மை இந்த நிலைக்கு, அதாவது வியாதியும், முதுமையும், மரணமும் வாட்டியெடுக்கும் பள்ளத்தில் உருட்டி விட்டார்கள். போதாக்குறைக்கு இனப் பகை, மத வெறுப்பு, கொடூர போர்கள் வேறு நம்மை வதைக்கின்றன.—ஆதியாகமம் 2:17; 3:6, 7.

மிருகத்தின் ஜீன்களா, குறைபாடுள்ள ஜீன்களா?

ஆதாமும் ஏவாளும் தப்புசெய்த பிறகு, குறைபாடே இல்லாதிருந்த அவர்களின் உடல்களுக்குள் என்ன மாற்றம் நடந்தது என்பதை அறிவியல் ரீதியில் பைபிள் விளக்குவதில்லை என்பதென்னவோ உண்மைதான். காரின் சொந்தக்காரரிடத்தில் காரைப் பற்றிய கையேடு இருக்கும், ஆனால் அது வாகனங்களைப் பற்றிய இன்ஜீனியரிங் பாடப்புத்தகம் அல்ல. அதேபோல் பைபிளும் அறிவியல் புத்தகம் அல்ல. காரின் சொந்தக்காரர் வைத்திருக்கும் கையேடு கட்டுக்கதை அல்ல, திருத்தமான புத்தகம். அதேபோல் பைபிளும் கட்டுக்கதை அல்ல, திருத்தமான புத்தகம்.

கடவுளுடைய சட்டம் என்னும் பாதுகாப்பு கம்பிகளை நொறுக்கிவிட்டு ஆதாமும் ஏவாளும் போனபோது, அவர்களின் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு, அவர்கள் மெல்ல மெல்ல சாவை நோக்கி பயணித்தார்கள். பரம்பரையாக கைமாறி வரவேண்டும் என்ற சட்ட விதிப்படி அவர்களிடமிருந்த குறைபாடு இந்த முழு மனித சமுதாயத்திற்கும் கைமாறி வந்தது. எனவே இவர்களும் சாகிறார்கள்.—யோபு 14:4; சங்கீதம் 51:5; ரோமர் 5:12.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், நமக்கு கடத்தப்பட்ட குறைபாட்டில் பாவம் செய்யும் மன இயல்பும் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதுதான். இது சுயநலம், ஒழுக்கக்கேடு போன்ற செயல்கள் மூலம் வெளியே தலைக்காட்டும். கௌரவமான தாம்பத்திய உறவில் தவறேதும் இல்லை. கடவுள் முதல் மனித ஜோடியைப் பார்த்து: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்று கட்டளையிட்டார். (ஆதியாகமம் 1:28) அவர் அன்புள்ள படைப்பாளர். அதனால்தான் அவர் கொடுத்த இந்தக் கட்டளையை கணவனும் மனைவியும் நிறைவேற்றும்போது இருவருக்கும் சுகம் கிடைக்கும்படி செய்தார். (நீதிமொழிகள் 5:18) ஆனால் மனிதனிடத்தில் இருந்த குறைபாடு, பாலுறவு விஷயத்தில் அவனை தாறுமாறாக நடந்துகொள்ளும்படி செய்தது. சொல்லப்போனால், இந்தக் குறைபாடு நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. இது நம் மனதையும், உடலையும்கூட விட்டுவைக்கவில்லை என்பதும் நமக்கு தெரியும்.

ஆனாலும் ஒழுக்கநெறியைப் பற்றி நம்மிடமிருக்கும் உணர்வை இந்தக் குறைபாடு முற்றிலுமாக அழித்துவிட வில்லை. நாம் விரும்பினால், வாழ்க்கை என்னும் வண்டியின் “ஸ்டியரிங் வீலை” கெட்டியாக பிடித்துக்கொண்டு, வாழ்க்கையில் எதிர்படும் படுகுழிகளை தவிர்க்கவும் முடியும், தவறுசெய்ய தூண்டும் இயல்பை எதிர்த்து போராடவும் முடியும். ஆனால் குறைபாடுள்ள எந்த மனிதனாலும் பாவத்தை முற்றிலுமாக எதிர்த்து, வெற்றிகாண முடியாது. இது கடவுளுக்கும் தெரியும். அதனால்தான் அவர் நம்மீது இரக்கப்படுகிறார்.—சங்கீதம் 103:14; ரோமர் 7:21-23.

நாம் சாவை வெறுக்க காரணம்

மரணம் என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது என்று தோன்றினாலும், மனிதன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். ஏன்? இதற்கு திருப்திகரமான விளக்கத்தை பரிணாமத்தால் அளிக்க முடியவில்லை. ஆனால் பைபிள் விளக்கம் தருகிறது.

கடவுள் பேச்சை கேட்காமல் போனதால் வந்த விளைவுதான் இந்த மரணம் என்கிறது பைபிள். நம் ஆதி பெற்றோர் மட்டும் சொன்னபடி கேட்டு நடந்திருந்தால், அவர்களும் சரி, அவர்களுடைய பிள்ளைகளும் சரி, சாகாமல் காலம் காலமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இதற்காகத்தான் கடவுள் மனிதனின் மனதில் நிரந்தரமாக வாழணும் என்கிற ஆசையை வைத்தார். நியூ இன்டர்நேஷனல் வர்ஷன் என்ற பைபிளில் பிரசங்கி 3:11 இவ்வாறு சொல்கிறது: “அவர் மனிதனுடைய இருதயங்களில் நித்தியத்துவத்தை வைத்தார்.” இவ்விதத்தில் மனிதன் படைக்கப்பட்டதால், மரணம் விதிக்கப்பட்டதும் அதை அவன் உள்ளம் ஏற்க மறுத்து போராடுகிறது. இவ்வாறு முன்னுக்கு பின் முரண்படுவது இன்னும் தொடர்கிறது.

இந்த முரண்பாட்டை சரிசெய்யவும், நிரந்தரமாக வாழ ஆசைப்படும் ஏக்கத்தை தீர்க்கவும் மனிதர்கள் எக்கச்சக்கமான நம்பிக்கைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆத்துமா சாவதில்லை என்ற கோட்பாடு முதல் மறுஜென்மம் கோட்பாடு வரை நிறையவே உருவாக்கிவிட்டார்கள். ஏன் வயதாகிறது என்பதை விஞ்ஞானிகளும் ஆராய்கிறார்கள். ஏனென்றால் மரணத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கும் இருக்கிறது. அதை கொஞ்ச நாளைக்காவது தள்ளிப்போடலாமே என்ற ஆதங்கமும் இருக்கிறது. பரிணாமத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அல்லது சூழ்ச்சியின் காரணமாக நித்தியகாலம் வாழவேண்டும் என்கிற ஆசை மனிதர்களுக்கு வந்தது என்கிறார்கள் கடவுளை மறுக்கும் பரிணாமவாதிகள். ஏனென்றால் அவர்கள் மனிதர்களை வெறுமனே உயர்வகை விலங்குகளாக கருதுவதால், அவர்களுடைய இந்தக் கருத்துக்கும் நிரந்தரமாக வாழவேண்டுமென்ற ஆசைக்கும் ஒத்துப்போவதில்லை. நிரந்தரமாக வாழ நமக்கு இருக்கும் ஆசைக்கு எதிராய் மரணம் செயல்படுகிறது. மரணத்தை விரோதி என்று பைபிள் அழைப்பது ரொம்ப ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 15:26.

நாம் நிரந்தரமாக வாழவே படைக்கப்பட்டோம் என்பதற்கு நம் உடலில் ஏதாவது க்ளூ கிடைக்குமா? ஆஹா, இருக்கிறது! இப்போது நாம் வாழும் ஆயுட்காலத்தைவிட ரொம்ப காலத்திற்கு வாழும்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம். இதற்கு நமது மூளையே ஆதாரம். அது நம்மை அப்படியே அசத்திவிடுகிறது.

நிரந்தரமாக வாழவே உருவாக்கப்பட்டோம்

மூளையின் எடை சுமார் 1.4 கிலோகிராம் இருக்கும். இதில் 1,000 கோடி முதல் 10,000 கோடி வரை நியூரான்கள் உள்ளன. இரண்டு நியூரான்கள் ஒரேமாதிரி இருப்பதில்லை என்று வேறு சொல்கிறார்கள். ஒவ்வொரு நியூரானாலும் கிட்டத்தட்ட 2,00,000 வேறு நியூரான்களோடு தொடர்பு கொள்ள முடியும், மூளைக்குள் எண்ணற்ற பல்வேறு சுற்றுப்பாதைகளை அல்லது பாதைகளை அமைத்துக்கொள்ள முடியும். போதாக்குறைக்கு, “ஒவ்வொரு நியூரானும் சிக்கலான ஒரு கம்ப்யூட்டர்” என்கிறது சயன்டிபிக் அமெரிக்கன்.

ஒருவித இரசாயன திரவத்தில் மூளை மிதந்துகொண்டிருக்கிறது. நியூரான்களை செயல்பட தூண்டுவது இந்தத் திரவமே. மகா சக்திபடைத்த கம்ப்யூட்டரில் இருக்கும் சிக்கல்களைவிட மூளையில் எக்கச்சக்கமான சிக்கல்கள் இருக்கின்றன. “ஒவ்வொரு தலைக்குள்ளும் பிரமிக்க வைக்கும் ஒரு மின்நிலையம் [மூளை] இருக்கிறது. ஆற்றல்மிக்க, கையடக்கமான இந்த உறுப்பு செயல்படும் விதத்தைப் பற்றி படிக்க படிக்க, அது முடிவில்லாமல் நீண்டுக்கொண்டே போகிறது” என்று எழுதியவர்கள் டோனி புஸானும், டெரன்ட்ஸ் டிக்ஸனும். மேலும் பேராசிரியர் பாட்டர் ஆனோகின் சொன்னதையும் இவர்கள் பின்வருமாறு மேற்கோள் காட்டினார்கள்: “தன்னுடைய மூளையை முழுமையாக பயன்படுத்தும் அளவுக்கு எந்தவொரு மனிதனும் இதுவரை இருந்ததில்லை, ஆகவேதான், மனித மூளைக்கு இவ்வளவுதான் வரம்புகள் என்று எப்படியெல்லாமோ தோராயமாக கணக்குப்போட்டு கொடுத்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு வரம்பே கிடையாது.”

இத்தகைய பிரமிப்பூட்டும் உண்மைகள் பரிணாமக் கொள்கைக்கு முன் பூதாகரமாக நிற்கின்றன. அன்று இருந்த சாதாரண குகைவாழ் மக்களுக்கோ, இன்று இருக்கும் நன்றாக படித்த மக்களுக்கோ இப்படிப்பட்ட அபார திறன்படைத்த ஓர் உறுப்பை எதற்காக பரிணாமம் “உருவாக்க” வேண்டும்? இதன் செயலாற்றும் திறன் மனிதனின் ஆயுட்காலத்தைவிட பத்து லட்சம் அல்லது நூறு கோடி மடங்கு அதிகமாக உள்ளதே எதற்காக? உண்மையில், மனிதன் நிரந்தரமாக வாழ்வதற்காக படைக்கப்படவில்லை என்றால் எங்கேயோ உதைக்கிறது இல்லையா! சரி இப்போது நம் உடம்புக்கு வரலாம். அதில் என்ன அதிசயம் அடங்கியுள்ளது?

ரிப்பேர் அண்டு ரினிவல்—ஜர்னி துரு தி மைண்டு அண்டு பாடி என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “எலும்புகள், திசுக்கள், உறுப்புக்கள் அடிப்பட்டால் அவை தானாகவே ஆறிவிடுகின்றன. இதை உண்மையில் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். சற்று உன்னிப்பாகப் பார்த்தால், நம்முடைய தோல், முடி, நகம், உடலின் இன்னும் பிற உறுப்புகள் எல்லாம் மெல்ல புதுப்பித்துக்கொள்வது தெரியவரும். இதில் இன்னும் என்ன வியப்பு என்றால், இப்படி நடப்பது இரண்டொருனாள் அல்ல, காலங்காலமாகத் தொடர்கிறது. உயிர்-வேதியல் அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் இவை நம்மை ரீமேக்கப் செய்கின்றன [மறுபடியும் புதுப்பிக்கின்றன]; இந்த ரீமேக்கப்பை நம்முடைய ஆயுட்காலத்தில் பலமுறை செய்துவிடுகின்றன.”

கடவுளுடைய ஏற்றக்காலம் வரும். அப்போது இப்படி அற்புதமாக புதுப்பித்துக்கொள்ளும் செயல் நிரந்தரமாக நடைபெற எந்தத் தடையும் இருக்காது. அப்பாடா! “ஒழிக்கப்படுங் கடைசி சத்துரு மரணம்.” (1 கொரிந்தியர் 15:26, தி.மொ.) ஆனால் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க நமக்கு நித்திய வாழ்க்கை மட்டும் போதாது. அதைவிட அதிகம் தேவை. நமக்கு சமாதானம் தேவை. அதுவும் கடவுளோடும், சக மனிதர்களோடும் நிலவும் சமாதானம் தேவை. ஒருவர்பேரில் ஒருவர் உண்மையான அன்பு வைத்திருந்தால் மாத்திரம் இந்தச் சமாதானம் கிடைக்கும்.

அன்பென்னும் அச்சாணியில் சுழலும் புதியதோர் உலகம்

“தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்கிறது 1 யோவான் 4:8. அன்புக்கு அபார சக்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, யெகோவா தேவனின் அன்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதனால்தான் நாம் நிரந்தரமாக வாழும் வாய்ப்பை அவர் தருவார் என்கிற நம்பிக்கை நமக்கு பிறக்கிறது. “[தேவன்] இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்கிறது யோவான் 3:16. அதனால் கடவுள், ‘தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளினார்.’

நித்திய ஜீவனா! அடேயப்பா, இப்படி ஓர் அரிய வாய்ப்பா! ஆனால் நாம் எல்லாம் பரம்பரை பரம்பரையாக பாவத்தை சுமந்துகொண்டிருப்பதால், இந்த நித்திய ஜீவனை பெற எந்த உரிமையும் இல்லை. “பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது பைபிள். (ரோமர் 6:23) ஆனால் கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்து நம்மீது அன்பு வைத்திருந்ததால், நமக்காக உயிர் நீத்தார் என்பதைக் குறித்து சந்தோஷப்படலாம். இயேசுவைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: ‘அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்.’ (1 யோவான் 3:16) உண்மைதான், களங்கமே இல்லாத மனிதராய் தமது உயிரை “அநேகரை மீட்கும்பொருளாக” கொடுத்தார். இதன்விளைவாக, யாரெல்லாம் அவர்மீது நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்களுடைய பாவங்கள் எல்லாம் நீங்கி, நித்திய ஜீவனை அனுபவிக்க முடியும். (மத்தேயு 20:28) பைபிள் இவ்வாறு விளக்கம் தருகிறது: ‘தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினார்.’—1 யோவான் 4:9.

கடவுளும் அவருடைய மகனும் நம்மீது காட்டியிருக்கும் அன்புக்கு நாம் எப்படி கைமாறு செய்வது? பைபிள் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறது: “பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.” (1 யோவான் 4:11) நாம் அன்புகாட்ட கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் கடவுள் கொண்டுவரவிருக்கும் புதிய உலகில் அன்புதான் அச்சாணியாக இருக்கப்போகிறது. இன்று நிறையபேர் அன்பு என்னும் பண்பை போற்றுகிறார்கள். அதுவும் யெகோவா தேவன் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் வலியுறுத்துகிறபடியே தங்கள் போற்றுதலை தெரிவிக்கிறார்கள்.

அன்பு கிடைக்காத “பிள்ளைகள் இறந்தும் போகலாம்” என்று குறிப்பிடுகிறது அன்பும், இயற்கையில் அதன் இடமும் (Love and Its Place in Nature) என்ற ஆங்கில புத்தகம். ஆட்கள் வளர்ந்து விட்டாலும் அன்புக்குரிய தேவை இருக்கத்தான் செய்கிறது. புகழ்பெற்ற மனிதவியல் நிபுணர் (anthropologist) ஒருவர் அன்பைப் பற்றி இவ்வாறு கூறினார்: “நம்முடைய சூரிய குடும்பத்தில் எப்படி சூரியன் நடுநாயகமாக நிற்கிறதோ அதேபோல் மனித தேவைகளில் நடுநாயகமாக நிற்கிறது அன்பு . . . அன்பு கிடைக்காத ஒரு பிள்ளை அன்பு கிடைத்த ஒரு பிள்ளையைக் காட்டிலும் உயிர்வேதியல் ரீதியில், உடல் ரீதியில், மன ரீதியில் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அதோடு அந்தப் பிள்ளை முற்றிலும் வித்தியாசமாகவும் வளரும்.”

பூமியில் உள்ள அனைவரும் உண்மையான அன்பைக் காட்டினால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கற்பனைசெய்ய முடிகிறதா? அப்பாடா, இனி யாரும் நாடு, இனம், நிறம் என்று வித்தியாசம் பார்த்து, வெறுப்பை காட்டமாட்டார்கள்! கடவுளால் நியமிக்கப்பட்ட அரசராக இயேசு கிறிஸ்து இருப்பார். அவருடைய நிர்வாகத்தின்கீழ், பூமியில் அமைதியும், அன்பும் பொங்கி வழியும். இது பைபிளில், சங்கீதம் என்ற புத்தகத்தில் தேவ ஆவியால் எழுதப்பட்ட வார்த்தையின் நிறைவேற்றமாக இருக்கும்:

“தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளை . . . கொடுத்தருளும். ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, . . . இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.”—சங்கீதம் 72:1, 4, 7, 8, 12, 13.

கடவுளுடைய புதிய உலகில் கெட்டவர்களுக்கு வாழ அனுமதி கிடையாது. பைபிளில் வேறொரு சங்கீதத்தில் இதைப் பற்றி வாக்குக்கொடுக்கப்பட்டிருக்கிறது: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:9-11.

அப்போது, கடவுளுடைய பேச்சை கேட்டு நடக்கும் அனைவரும் தங்களுடைய மனங்களிலும், உடல்களிலும் உள்ள குறைபாடுகள் நீங்கி குணமடைவார்கள். இறந்து போனவர்களுக்கு உயிர் அளிக்கப்பட்டு, கல்லறையிலிருந்து வெளிவருவார்கள். அவர்களும் இவ்வாறே குணமடைவார்கள். இறுதியாக, உயிரோடு இருக்கும் எல்லாரும் கடவுளுடைய சாயலை, அதாவது அவருடைய குணங்களை அப்படியே வெளிக்காட்டுவார்கள். அப்பாடா, நல்லதை செய்ய நமக்குள் ஏற்படும் மனப்போராட்டத்திற்கும் விடிவுகாலம் வந்துவிடும். இன்று, வாழ ஆசை இருந்தும், மரணத்தை சந்திக்க வேண்டிய யதார்த்தநிலை இருக்கிறது. இந்த முரண்பாடும் நீங்கிவிடும்! ஏனென்றால், அன்பே உருவான நம் கடவுள் அறுதியிட்டு கூறிய சத்தியம் இது: “இனி மரணமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:4; அப்போஸ்தலர் 24:15.

எனவே, நல்லது செய்ய ஏற்படும் மனப்போராட்டத்தில் ஒருபோதும் தோல்விக்கு இடம் தரவேண்டாம். கடவுள் தரும் பின்வரும் அறிவுரையை கேளுங்கள்: “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்.” கடவுளுடைய புதிய உலகில் வாழப்போகும் வாழ்க்கையே “உண்மையான வாழ்க்கை” என்கிறது பைபிள்.—1 தீமோத்தேயு 6:12, 19, NW.

பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் பின்வரும் உண்மையின் மதிப்பை உணர்ந்துகொள்ளுங்கள்: “யெகோவாவே கடவுளென்று அறிந்துகொள்ளுங்கள்; நாம் அல்ல அவரே நம்மை உண்டாக்கினார்.” இந்த உண்மையை மதித்துணருவது மிக மிக முக்கியம். ஏனென்றால் அப்போதுதான் யெகோவா தேவன் கொண்டுவரவிருக்கிற, அன்பும், நீதியும் நிலவும் புதிய உலகில் வாழும் தகுதியைப் பெறமுடியும்.—சங்கீதம் 100:3, தி.மொ.; 2 பேதுரு 3:13.

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

கடவுளுடைய புதிய உலகில் வாழப்போகும் வாழ்க்கையே “உண்மையான வாழ்க்கை” என்கிறது பைபிள்.—1 தீமோத்தேயு 6:19, NW

[பக்கம் 9-ன் படம்]

கடவுளுடைய சட்டம் என்ற பாதுகாப்பு வேலியை மனிதர்கள் உடைத்ததால் இந்த அவலங்கள்

[பக்கம் 10-ன் படம்]

அமைதியே உருவான புதிய உலகை கடவுள் ஆளுகை செய்ய, மனிதர்களோ மகிழ்ந்திருப்பர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்