இளைஞர் கேட்கின்றனர்
என் காதலை நிராகரித்து விட்டால் . . . ?
“எனக்கு கவலையாவும் குழப்பமாவும் இருக்கு. நான் அவரை காதலிக்கிறேன். ஆனா அவர் என்னை விரும்புறாரானு தெரியலை. நான் என்ன செய்யறது? என்னோட விருப்பத்த அவர்கிட்ட சொல்லிடவா? ஐயோ, அது என்னால முடியவே முடியாது! மத்தவங்க என்னப் பத்தி என்ன சொல்வாங்க?”—ஹூடா. a
லெபனான் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஹூடா ஒருவரை காதலித்தாள்; ஆனால் அந்த நபரோ அவளைக் காதலிக்கவில்லை. இது எல்லா இடங்களிலும் உள்ள பிரச்சினைதான். சேனா என்ற மற்றொரு இளம் பெண்ணுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது. அவள் இவ்வாறு நினைவுகூர்ந்து சொல்கிறாள்: “அவர் என் வீட்டுக்கு பக்கத்துல இருந்தாரு, நான் அவரை தினமும் பார்ப்பேன். அவர் பார்க்கறதுக்கு ரொம்ப கவர்ச்சியா, அழகா இருப்பாரு. அதனால நான் அவரை காதலிக்க ஆரம்பிச்சேன்.”
சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவர் மணந்து கொள்வதற்கு தகுதியான நபர்தான் என்ற நினைப்பில் ஒருவரிடம் பலமான உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. (நீதிமொழிகள் 5:15; 1 கொரிந்தியர் 7:39) அதேபோல, திருமண வயதை அடைந்த பெண் திருமணம் செய்யவும், குடும்பம் நடத்த ஆசைப்படுவதிலும் தவறில்லை. தகுதியுள்ள ஒரு நபரைத்தான் நீங்கள் காதலிக்கிறீர்கள்; ஆனால் அவரோ உங்களுடைய காதலை அறியாதவராக, உங்கள்மேல் காதல் கொள்ளாதவராக இருந்தால் அப்போது என்ன செய்வது?
காதல் தரும் துயரம்
ஹூடாவைப் போல, நீங்களும்கூட உணர்ச்சி ரீதியிலான சூறாவளியில் சிக்கியிருப்பதைப் போல உணரலாம். ஒரு நிமிடம் உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பீர்கள்; அதற்கு அடுத்த நிமிடமே சோகத்தின் அடித்தளத்தில் முடங்கிப்போவீர்கள். சேனா இவ்வாறு சொன்னாள்: “சில சமயங்களில் இந்த உலகத்திலேயே நான்தான் சந்தோஷமான மனுஷினு நினைச்சேன், ஆனா சிலநேரத்தில அப்படியே சோகத்துல ஆழ்ந்து போயிட்டேன்.” ஒருதலைக் காதலால் கவலை, தூக்கமில்லா இரவுகள், இன்னும் மனச்சோர்வும்கூட ஏற்படலாம்.
நீதிமொழிகள் 13:12-ல் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்.” அதிலும், உங்கள் மனக்கோட்டைகள் சுக்குநூறாகும்போது அவை நெஞ்சை பிளப்பவையாய் இருக்கலாம்! உங்கள் நினைவெல்லாம் எப்பொழுதும் அந்நபரைச் சுற்றியே இருக்கலாம்; அவரைப் பற்றிய விஷயங்களைக் கேட்பதற்கு மனம் ஏங்கலாம். ஒருவேளை, அவர் பார்வை உங்கள்மேல் படும்படி ஏதாவது செய்வீர்கள், அல்லது அவர் இருக்குமிடத்தில் இருப்பதற்கு ஏதாவது சாக்குப்போக்கை சொல்வீர்கள். அதோடு அவர் மத்தியில் இருக்கும்போது, சகஜமாக இருக்க முயன்று தோற்றுப்போவீர்கள்.
உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் அந்நபர் எப்போதாவது உங்களிடம் அதிக அக்கறையாயிருப்பதுபோல நடக்கலாம்; ஆனால் மற்ற சமயங்களில் நீ யாரோ, நான் யாரோ என்பதுபோல கண்டுகொள்ளாமல் இருக்கலாம்; அவ்வாறெனில் நீங்கள் அதிக குழப்பமடையலாம். அவர் வேறு யார்மீதாவது அன்பை பொழிவதை பார்த்தாலோ மற்றவர்களிடம் சாதாரணமாக இரக்கத்துடனும் கரிசனையுடனும் நடந்து கொண்டாலோ, அது உங்களுக்குள் பொறாமை என்னும் தீயை மூட்டலாம். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?”—நீதிமொழிகள் 27:4.
ஹூடா இவ்வாறு ஒத்துக்கொண்டாள்: “சொல்லமுடியாத அளவுக்கு பயங்கர பொறாமை எனக்குள்ள பீறிட்டது. என்னோட மனநிலையை நான் மாத்தாம இருந்திருந்தேன்னா, எனக்கு பைத்தியமே பிடிச்சிருக்கும்.” இதன் விளைவாக உங்களை நீங்களே வெறுக்கத் தொடங்கிவிடுவீர்கள். ஹூடா சொன்னாள்: “என்னை காதலிக்காத ஒருத்தரை காதலிச்சு, என்னை நானே துன்பப்படுத்திக்கிட்டதுக்காக நான் என்னையே நொந்துகிட்டேன்.”
மேற்கத்திய நாடுகளில் ஒருவேளை, ஒரு இளம் பெண் தயக்கமின்றி ஒரு இளைஞரை அணுகவும் தன்னுடைய உணர்ச்சிகளை தெரிவிக்கவும் முடிகிறபோதிலும்கூட, எல்லா இளம் பெண்களும் அவ்வாறு செய்வதற்கு மனமுள்ளவர்களாக இல்லை. இன்னும்சில கலாச்சாரங்களில், இது ஒரு பெண் செய்யக்கூடாத ஒன்றாகவும் அதிர்ச்சியூட்டும் செயலாகவும் கருதப்படுகிறது. அப்படியென்றால், நீங்கள் காதலிக்கும் அந்நபர் உங்கள் காதலை நிராகரித்துவிட்டால் அப்போது என்ன செய்வது?
உங்களுடைய உணர்ச்சியை கவனமாக சீர்தூக்கிப்பாருங்கள்.
முதலாவது, உங்களுடைய உணர்ச்சிகளை அமைதியாகவும் அதன் உண்மை நிலையிலிருந்தும் சீர்தூக்கிப் பார்க்க முயலுங்கள். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்.” (நீதிமொழிகள் 28:26) ஏன்? ஏனென்றால், நம் இருதயத்தின் தீர்ப்பு பெரும்பாலும் தவறாக இருக்கிறது. (எரேமியா 17:9) காதல் என நாம் நினைப்பது வேறு எதுவாகவோ மாறிவிடுகிறது. ஹூடா இவ்வாறு ஒத்துக்கொள்கிறாள்: “எனக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்பட்டுச்சு. என்னை நேசிச்சு, அக்கறை காட்டுற ஒருத்தருக்காக ஏங்கினேன், சின்னவயசுல இருந்தே எனக்கு அன்பு கிடைக்கலை. அது என்னை ஆழமாக பாதிச்சது.” அன்பற்றவர்களாகவோ மோசமாக நடத்துகிறவர்களாகவோ இருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தால், நீங்களும் இதுபோலவே அன்புக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் ஏங்கலாம். ஆனால் இதற்கு காதல் உறவுதான் அவசியமான தீர்வா?
விசனகரமாக, எப்போது பார்த்தாலும் சோகமாகவும் தனிமையாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் சரியான மணத்துணைவர்களாக இருப்பதில்லை. அத்தகையோர் தங்களுக்கு உடனடியாக தேவைப்படுகிற ஒன்றை பெற்றுக் கொள்வோம் என்கிற எதிர்பார்ப்பில் திருமண பந்தத்துக்குள் நுழைகிறார்கள். இருப்பினும், பெற்றுக் கொள்வதிலிருந்தல்ல, கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது. (அப்போஸ்தலர் 20:35) ஒரு பெண் தன்னைப் பற்றி ஓரளவு நன்றாக உணருகிறவளாக, ‘தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குபவளாக’ இருந்தால்தானே மண வாழ்க்கையை நடத்துவதற்கு நன்கு ஆயத்தமானவளாக இருப்பாள்.—பிலிப்பியர் 2:4.
திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற நெருக்கடி உங்களுக்கு ஏற்பட்டால், எதிர்பாலார் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்கூட எளிதாக மனதைப் பறிகொடுத்துவிட முடியும். சிலசமயங்களில், நண்பர்களும் குடும்பத்தினரும் காதல் வயப்படுவதற்கான ஒரு இளம் பெண்ணின் ஆவலை அதிகமாக்குகின்றனர். சில சமுதாயங்கள் பெண்ணுக்கு, திருமண வயதை எட்டியவுடனேயே திருமணம் செய்துவிடவேண்டும் என்ற விஷயத்தில் அளவுக்கு மீறிய அழுத்தத்தை வைக்கின்றன. மத்திய கிழக்கில் பெண்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஒரு பெண் கிட்டத்தட்ட முப்பது வயதாகியும், இன்னும் மணமாகாதிருந்தால், அவளுடைய குடும்பத்துக்கு பாரமாக ஆகிறாள்.” குடும்பத்தின் கௌரவமும் இதில் உட்படுவதால், தகப்பன் தன் பெண் பிள்ளைகளுக்கு முடிந்தளவு சீக்கிரமாகவே திருமணம் செய்ய முயலலாம்.
இருந்தபோதிலும், பைபிள் நியமங்கள் கலாச்சாரங்களைக் காட்டிலும் முதலிடம் பெற வேண்டும். இளைஞர்கள் திருமணத்துக்கு முன்பு, ‘கன்னிகைப்பருவம் கடந்துபோகும்வரை’ காத்திருக்க வேண்டுமென பைபிள் துரிதப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 7:36) எனவே, உங்கள் நண்பர்களோ, பெற்றோரோ திருமணம் செய்து கொள்ளுமாறு அளவுக்குமீறி கட்டாயப்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால் அப்போது என்ன செய்வீர்கள்? பக்தியுள்ள சூலேமிய பெண், ‘காதலை, அதுவாக எழும்வரை அதை எழுப்பாதீர்’ என தன்னுடைய தோழிகளிடம் தீர்மானமாக சொன்னதாக பைபிள் நமக்கு சொல்கிறது. (உன்னதப்பாட்டு 2:7, NW) ஒருவேளை, உங்களைப் பற்றியும் இதே விதமான, திடமான கருத்தை தெரிவிப்பீர்களென்றால், உங்கள் பெற்றோர் கடவுள் பயமுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில், அது பலன்தரத்தக்கதாக இருக்கும்.
உண்மையை எதிர்ப்படுதல்
இன்னும்கூட, நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும் அந்நபரைப் பற்றிய உண்மைகளை எதிர்ப்பட்டே ஆக வேண்டும். அது அவ்வளவு சுலபமாக இருக்காது; அதோடு அது அதிக வேதனையளிப்பதாக இருக்கும். ஆனால் வேதவசனங்கள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே.” (நீதிமொழிகள் 23:23) உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ‘நான் காதல் கொள்வதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கிறதா? அந்த நபரைப் பத்தி எனக்கு உண்மையா எந்தளவுக்கு தெரியும்? அவரோட எண்ணங்கள், உணர்ச்சிகள், கருத்துக்கள், பழக்கவழக்கங்கள், மதிப்பீடுகள், திறமைகள், ஆற்றல்கள், வாழ்க்கைபாணிகள் இதைப் பத்தியெல்லாம் எனக்கு என்ன தெரியும்?’
நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், அந்நபர் உங்கள்மீது உண்மையிலேயே அக்கறையிருப்பதுபோல நடந்திருக்கிறாரா என்பதே. பெரும்பாலான சமயங்களில், இயல்பான கரிசனையோ நட்போகூட தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. ஹூடா சொல்கிறாள்: “அவர் என்கிட்ட கரிசனையோடு நடக்க ஆரம்பிச்சாரு. நானும் என்கிட்ட அக்கறை காட்டுற ஒருத்தருக்காக ஏங்கினேன்; அதனால் அவர் பேசினதையும் பழகினதையும் தப்பா புரிஞ்சுகிட்டேன். அவருக்கு என்மேல இஷ்டமில்லனு தெரிஞ்சவுடனே, எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு. அவரோட அன்பை பெற்றுக்கொள்ள எனக்கு தகுதியில்லனு நெனச்சேன்; என்கிட்டே ஏதோ குறையிருக்குன்னு தோணிச்சு.”
ஒருவேளை, உங்கள் வாழ்க்கையிலும்கூட இது நடந்திருக்கலாம்; நீங்களும்கூட இவ்வாறு உணர்ந்திருக்கலாம். இருப்பினும், இதைப் புரிந்துகொள்ளுங்கள்: ஒரு நபருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதுதானே, வேறு எவருக்கும் உங்களை பிடிக்காது என அர்த்தப்படுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த உலகத்திலேயே இந்த இளம் மனிதர் மட்டும்தான் இருக்கிறாரா என்ன!
மனப்புண்ணை ஆற்றுதல்
இருந்தாலும்கூட, உங்கள் மனப்புண் ஆறுவதற்கு சிறிதுகாலம் எடுக்கத்தான் செய்யும். எது உங்களுக்கு உதவி செய்யும்? “உண்மையான நண்பர்” ஒருவரிடத்தில், அதாவது, உங்களுக்கு செவிகொடுத்து கேட்கிற முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரிடம் மனம்விட்டு பேசுவது ஒரு வழியாக இருக்கிறது. (நீதிமொழிகள் 17:17, NW) ஒருவேளை சபையிலுள்ள வயது முதிர்ந்த சகோதரியிடம் பேசலாம். உதவியையும் ஆதரவையும் அளிப்பதில் கிறிஸ்தவ பெற்றோர் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றனர். சேனா நினைவுகூர்ந்து சொல்கிறாள்: “சபையிலிருக்கிற ஒரு சகோதரி நான் சோகமாயிருக்கிறத கண்டுபிடிச்சிட்டாங்க, எனக்கு உதவி செய்யற அளவுக்கு அவங்க முதிர்ச்சியானவங்களா இருந்தாங்க. அவங்ககிட்ட பேசறது எனக்கு சுலபமா இருந்தது, எல்லாத்தையுமே அவங்ககிட்ட சொல்லிட்டேன். என்னோட பெற்றோர்கிட்ட பேசும்படி அவங்க என்னை உற்சாகப்படுத்தினாங்க. அதனால நான் அவங்ககிட்ட பேசினேன், அவங்களும் என்னை புரிஞ்சுகிட்டு எனக்கு உதவி செய்தாங்க.”
ஜெபத்தின் வல்லமையையும்கூட மறந்துவிடாதீர்கள். (சங்கீதம் 55:22) ஹூடா சொல்கிறாள்: “யெகோவா தேவன்கிட்ட ஜெபம் பண்ணினது, என்னோட வேதனையை போக்கறதுக்கு ரொம்ப உதவியா இருந்தது. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளை வாசித்ததும்கூட எனக்கு உதவி செய்தது.” இன்னும் சொல்லப்போனால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ரொம்ப முக்கியம். (நீதிமொழிகள் 18:1) எல்லாரோடும் சகஜமாக பழகுங்கள். சேனா இவ்வாறு நினைவுகூருகிறாள்: “எனக்கு உதவி செஞ்ச இன்னொரு விஷயம், என்னை நானே சுறுசுறுப்பாக வெச்சுகிட்டதுதான்; அதோட ஒரு பயனியராகவும் [முழுநேர சுவிசேஷகர்] ஆனேன். சபையிலுள்ள மற்ற பெண்களுடன் என்னோட கூட்டுறவை அதிகரிச்சுக்கிட்டேன். இது ஆவிக்குரியவிதமாக முன்னேறுவதற்கு எனக்கு உதவி செய்தது.”
“சிநேகிக்க ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது; ஒருவேளை அத்தகைய ஒரு காலத்தில் உங்களுடைய காதலை ஏற்றுக்கொள்கிற ஒருவரை நீங்கள் சந்திக்கலாம். (பிரசங்கி 3:8) திருமண பந்தத்திலுள்ள அன்பால் விளையும் இன்பத்தை அனுபவிக்கும் ஆசையுடன் யெகோவா தேவன் மனிதர்களைப் படைத்தார்; மகத்தான சிருஷ்டிகரின் இந்த சிறந்த ஏற்பாட்டை நீங்களும்கூட காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள், அதுவரையிலுமாக, அப்போஸ்தலன் பவுல் சொல்கிறவிதமாக, ‘கவலைகள் இல்லாத’ விவாகமற்ற வாழ்க்கையை நீங்கள் ஏன் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? (1 கொரிந்தியர் 7:32-34) எப்படியிருந்தாலும்சரி, “நீர் [யெகோவா] உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்” என்ற பைபிளின் வாக்குறுதி நிறைவேறுவதில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—சங்கீதம் 145:16, NW.
[அடிக்குறிப்புகள்]
a சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்க விஷயத்தை பாதுகாப்பதற்காக பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 13-ன் படம்]
சிலசமயங்களில், கரிசனை தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது