உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 6/22 பக். 5-7
  • கடவுளின் சாயலா விலங்கின் சாயலா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளின் சாயலா விலங்கின் சாயலா?
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விலங்குகளிடமிருந்து நாம் வேறுபடும் அம்சங்கள்
  • இணைக்க முடியாத மாபெரும் இடைவெளி?
  • ஆட்டம் காணும் கொள்கை
  • அவலங்கள்
  • படைப்பை வழிபடுவதா படைப்பாளரை வழிபடுவதா?
  • பரிணாமம் விசாரணையில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • மனிதர்களே—நாம் யார்?
    விழித்தெழு!—1998
  • பரிணாமம்—ஏன் கருத்து வேறுபாடுகள்?
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 6/22 பக். 5-7

கடவுளின் சாயலா விலங்கின் சாயலா?

முதல் மனிதன் ஆதாம், “கடவுளின் குமாரன்” என்று அழைக்கப்பட்டான். (லூக்கா 3:38, திருத்திய மொழிபெயர்ப்பு) இப்படிப்பட்ட உயர்ந்த அந்தஸ்து எந்தவொரு விலங்குக்கும் கிடைக்கவில்லை. ஆனால், மனிதனுக்கும் விலங்குக்கும் நிறைய விஷயங்கள் பொதுவாக இருப்பதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, மனிதர்களையும் விலங்குகளையும் நேபெஷ் என்ற எபிரெய வார்த்தையால் பைபிள் குறிப்பிடுகிறது. அதற்கு சுவாசிக்கும் உயிரினம் என்று அர்த்தம்.

விலங்குகளைப் பற்றி ஆதியாகமம் 1:24, (NW) இவ்வாறு கூறுகிறது: “பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய [“நேபெஷ்”] நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.” ஆனால் மனிதர்களாகிய நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்வதன் மூலம் பைபிள் நம்மை கௌரவிக்கிறது. மனிதனுக்கும் விலங்குக்கும் வேறொரு விஷயத்திலும் ஒற்றுமை இருக்கிறது.

அதை பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “மனிதருக்குச் சம்பவிப்பதே மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் சம்பவிப்பது ஒன்றே; இவைகள் சாவதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; . . . மிருகத்திலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; . . . எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலிருந்து உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.” ஆகவே, மனிதனுக்கும் மரணம் நேரிடுகிறது, மிருகத்திற்கும் மரணம் நேரிடுகிறது. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, “பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால்” மறுபடியும் ‘மண்ணுக்குத் திரும்பும்’ நிலை உள்ளது.—பிரசங்கி 3:19, 20, தி.மொ.; ஆதியாகமம் 3:19.

ஆனால், மனிதர்களால் மட்டும் ஏன் மரணத்தின் துயரை தாங்கிக்கொள்ள முடிவதில்லை? காலம் காலமாக வாழவேண்டும் என்று ஏன் ஏங்குகிறோம்? வாழ்க்கை என்றால் இலட்சியம் இருக்க வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? கண்டிப்பாக, நாம் விலங்குகளிடமிருந்து ரொம்பவும் வேறுபடுகிறோம் என்பதை இவையெல்லாம் தெரியப்படுத்துகின்றன அல்லவா!

விலங்குகளிடமிருந்து நாம் வேறுபடும் அம்சங்கள்

சாப்பிடுவது, தூங்குவது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய இவற்றைத் தவிர வாழ்க்கையில் ஒரு இலட்சியமும் கிடையாது என்றால் உங்களுக்கு வாழத்தான் பிடிக்குமா? ஆனால் பரிணாமக் கொள்கையில் ஊறிப்போனவர்களால்கூட இப்படி வாழவேண்டும் என்ற எண்ணத்தை ஜீரணிக்க முடிவதில்லை. பரிணாமவாதி, டி. டாப்ஸான்ஸ்கி என்பவர் இவ்வாறு எழுதினார்: “இந்தக் காலத்து மனிதன், கடவுளை நம்பவில்லை என்றாலும் சரி அல்லது கடவுளே இல்லை என்று சொன்னாலும் சரி, காலம் காலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இரகசியமாகவாவது விடையைத் தெரிந்துகொள்ள விரும்புவான். அந்தக் கேள்விகள்: உயிரோடு இருந்து, வம்சத்தை தழைக்க செய்வது மட்டும்தானா என் வாழ்க்கையின் அர்த்தம்? அதைவிட சிறந்த இலட்சியம் ஏதும் கிடையாதா? நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்கிறது?”

வாழ்க்கையின் அர்த்தம்தான் என்னவென்று காணத் துடிக்கும் மனிதனிடம் வெறுமனே கடவுள் இல்லை என்று சொல்வதால் மட்டுமே அவனுடைய ஆர்வம் அடங்கிவிடாது. வரலாற்று ஆசிரியர் ஆர்னல்டு டாயின்பி சொன்னதை ரிச்சர்டு லீக்கி என்பவர் இவ்வாறு எழுதுகிறார்: “[மனிதனுக்கு] இருக்கும் இந்த ஆன்மீகம், அவன் பிறந்த இப்பிரபஞ்சத்தோடு இசைந்து வாழவேண்டும் என்ற மனப்போராட்டத்தை வாழ்நாள் காலமெல்லாம் அவனுக்குள் தோற்றுவிக்கிறது.”

ஆனாலும், மனிதனின் இயல்பைப் பற்றியும், நம்முடைய பிறப்பைப் பற்றியும், நமது ஆன்மீகத்தைப் பற்றியும் எழுகிற அடிப்படையான கேள்விகள் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. எவ்வளவு தூரத்திற்கு இந்த இடைவெளி இருக்கிறது?

இணைக்க முடியாத மாபெரும் இடைவெளி?

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரும் இடைவெளி இருப்பது பரிணாம கொள்கைக்கு பெரும் தலைவலியாக உள்ளது. உண்மையில் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது? இதைப் பற்றி பரிணாமவாதிகள் சொன்ன ஒருசில விஷயங்களைப் பார்க்கலாம்.

19-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பரிணாமவாதி தாமஸ் ஹெச். ஹக்ஸ்லி என்பவர் இவ்வாறு எழுதினார்: “மனிதனுக்கும் மிருகங்களுக்கும் . . . மாபெரும் இடைவெளி இருப்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் கிடையாது. . . . மனிதனுக்கு மாத்திரம் அறிவுத்திறன் இருக்கிறது, அவனால் மாத்திரம் பேச்சை புரிந்துகொள்ள முடிகிறது . . . இதனால்தான் அற்ப விலங்குகளுக்கு முன் அவன் மலை என உயர்ந்து நிற்கிறான்.”

பரிணாமவாதி மைக்கேல் சி. கார்பாலெஸ் இவ்வாறு கூறுகிறார்: “மனிதர்களுக்கும், அவர்களின் மூதாதை என்று சொல்லப்படும் விலங்குகளுக்கும் உள்ள இடைவெளி பயங்கரமாக இருக்கிறது . . . ‘நம் மூதாதையாக நினைத்துக்கொண்டிருக்கும் [விலங்கினுடையதைவிட] நம்முடைய மூளை மூன்று மடங்கு பெரிதாக உள்ளது.’” நரம்பியல் நிபுணர் ரிச்சர்டு எம். ரெஸ்டாக் இவ்வாறு விளக்கம் தருகிறார்: “நமது பிரபஞ்சத்தில், தன்னையே புரிந்துகொள்ள முயலும் ஒரேயொரு உறுப்பு [மனிதனின்] மூளையே.”

லீக்கி இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “[மனிதனிடம் இருக்கும்] விழிப்புணர்ச்சி என்ற குணத்தைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்; சிலர் இதற்கு விடை காண முடியாது என்று நினைக்கின்றனர். நம் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. இதுவே எச்சரிக்கையாய் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்பட நமக்கு அறிவொளி ஊட்டுகிறது.” அவர் மேலும் கூறியதாவது: “இயற்கை உலகில், ஹோமோ சேப்பியன்ஸுக்கும் (Homo sapiens) [மனிதர்களுக்கும்] மற்ற உயிரினங்களுக்கும் இடையே உண்மையில் மொழிதான் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.”

மனிதனுடைய மனம் செய்கிற இன்னொரு அற்புதத்தைப் பற்றி பீட்டர் ரஸல் இவ்வாறு எழுதினார்: “மனிதனிடம் உள்ள ஆற்றல்களில் மிகமிக முக்கியமானது ஞாபகசக்தியே என்றால் அது மிகையாகாது. [ஞாபகசக்தி] மட்டும் இல்லையென்றால், எதையும் கற்றுக்கொள்ள முடியாது . . . அறிவோடு செயல்படவும் முடியாது, மொழியும், மனிதனுக்கே உரிய குணங்களும் வளர்ச்சி அடையாது.”

மேலும், எந்த விலங்கும் கடவுளை வழிபடுவதில்லை. எனவேதான், எட்வர்டு ஓ. வில்சன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மனித மனதில் நன்றாக வேரூன்றியிருக்கும் மத நம்பிக்கை மிகவும் சிக்கலாக இருப்பதோடு, அவனை உந்தும் பெரும் சக்தியாகவும் இருக்கிறது. இது மனிதனோடு ஒன்றர கலந்துவிட்டதால், என்னதான் செய்தாலும் அவனிடத்திலிருந்து பிரிக்க முடியாது.”

“மனிதனுடைய நடவடிக்கையில் அடங்கியிருக்கும் நிறைய புதிர்களைப் பரிணாமக் கொள்கையால் தீர்க்க முடியவில்லை. மனிதனுக்கு நகைச்சுவை உணர்வும், சிரிப்பும் எதற்காக உள்ளன என்று சொல்ல முடியுமா? தங்கள் வாழ்நாளில் செய்த தப்புகளை எல்லாம் சாகும் நேரத்தில் கொட்டிவிடுகிறார்களே, எதற்காக? . . . எதற்காக துக்கம் ஏற்படுகிறது? . . . இறந்துபோனவருக்காக துக்கப்படுவதால் இனப்பெருக்கத்துக்கு எந்தவிதத்தில் லாபம்?” என்ற கேள்விக் கணைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் பரிணாமவாதி ராபர்ட் ரைட்.

பரிணாமவாதி இலேன் மார்கன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மனிதரைப் பற்றி முக்கியமாக நான்கு புதிர்கள் உள்ளன. அவையாவன: (1) அவர்கள் ஏன் இரண்டு கால்களில் நடக்கிறார்கள்? (2) அவர்களுடைய ரோமம் எங்கே போனது? (3) எவ்வாறு அவர்களுடைய மூளை இவ்வளவு பெரிதாய் வளர்ந்தது? (4) அவர்கள் மட்டும் ஏன் பேச கற்றுக்கொண்டார்கள்?”

இத்தகைய கேள்விகளுக்கு பரிணாமவாதிகள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள்? மார்கன் தந்த விளக்கம்: “இத்தகைய கேள்விகளுக்கு அவர்கள் ஒருமனதாக தரும் பதில்கள்: (1) ‘இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.’ (2) ‘இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.’ (3) ‘இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.’ (4) ‘இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.’”

ஆட்டம் காணும் கொள்கை

“காலத்தின் ஊடே மனித பரிணாமம் நிகழ்ந்ததற்கு பொதுவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்பதே தனது குறிக்கோளாய் இருந்தது என்பதாக த லாப்சைடடு ஏப் என்ற புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: “[பரிணாமம்] இப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என்று ஊகித்து நிறைய முடிவுகள் செய்யப்பட்டன. முக்கியமாக ஒருசில பற்களையும், எலும்புகளையும், கற்களையும் வைத்து ஊகங்கள் செய்யப்பட்டன.” உண்மையில் சொல்லப்போனால், டார்வினுடைய அசல் கொள்கையையே நிறையபேர் ஏற்றுக்கொள்வதில்லை. ரிச்சர்டு லீச்சி இவ்வாறு கூறுகிறார்: “நாம் எப்படி பரிணமித்தோம் என்ற டார்வினுடைய கொள்கைக்கு முக்கிய ஆதாரமாக, ஒருசில வருடங்களுக்கு முன்புவரை புதைபடிவ அறிவியல் இருந்து வந்தது. ஆனால் இப்போது அது பொய்யென்று நிரூபணம் ஆகியுள்ளது.”

“முப்பது வருடங்களுக்கு முன் தங்களுக்கு விடைகள் தெரியும் என்று நினைத்திருந்த [பரிணாமவாதிகள் பலர்] இன்று நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்” என்கிறார் இலேன் மார்கன். ஆகவே, பரிணாமவாதிகள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்த ஒருசில கோட்பாடுகள் ஒன்றுமில்லாமல் பிசுபிசுத்து போனதில் ஆச்சரியம் இல்லை.

அவலங்கள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவ அளவுகளில் வித்தியாசம் இருப்பதால் ஒரு ஆண் விலங்கு நிறைய பெண் விலங்குகளோடு இணைசேருகிறது என்ற உண்மை ஒருசில ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்தது. இதன் காரணமாக மனிதர்களும் சிம்பன்ஸி குரங்குகளைப் போலவே இணைசேரவேண்டும் என்ற முடிவுக்கே ஒருசிலர் வந்துவிட்டார்கள். ஏனென்றால் சிம்பன்ஸி குரங்குகளைப் போல் மனிதர்களில் பெண்களைவிட ஆண்களே உருவத்தில் பெரியவர்கள். ஆகவே சிம்பன்ஸி குரங்குப்போல் ஒன்றுக்கு மேற்பட்ட துணையோடு உடலுறவு கொள்ள மனிதர்களை அனுமதிக்க வேண்டும் என்று சிலர் வக்காலத்துவேறு வாங்குகிறார்கள். இப்படி பலர் செய்யவும் செய்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பல பெண் குரங்குகளோடு இணைசேருவதால் சிம்பன்ஸி குரங்குக்கு ஒன்றும் ஆகாமல் இருக்கலாம். ஆனால் அதையே மனிதன் செய்யும்போது பயங்கரமான ஆபத்தில் போய் முடிகிறது. பலரோடு உடலுறவு கொள்வதால் ஏற்படும் கொடூரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. குடும்பம் சிதறுதல், கருச்சிதைவுகள், வியாதிகள், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஏற்படும் வேதனை, பொறாமை, குடும்பத்தில் கைகலப்பு போன்ற அவலங்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம். மேலும் இவ்வாறு தகாத முறையில் பிறக்கும் பிள்ளைகளை கைகழுவி விடுகிறார்கள். அந்தப் பிள்ளைகளோ நெறி கெட்ட முறையில் வளரலாம். அவர்களும் இதேவிதமான தப்புகளை செய்தால் மேற்கூறிய அவலங்கள் சுழற்சியென மீண்டும் மீண்டும் தலைதூக்கும். மிருகமும் நாமும் ஒன்று என்றால், இத்தகைய அவலங்கள் நமக்கு மட்டும் ஏன் வேதனையை அளிக்கின்றன?

மனித உயிரை புனிதமாக கருதுகிறோம். இதுவும்கூட பரிணாமத்தின் பேரில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஒருபுறம், கடவுளே இல்லை என்கிறோம்; மனிதர்கள் விலங்குகளைவிட சற்றே உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறோம். அப்படியென்றால் எதன் அடிப்படையில் நாம் மனித உயிரை புனிதமாக கருதுகிறோம்? ஒருவேளை நமக்கு அறிவு வளர்ந்துவிட்டதால் இப்படி புனிதமாக கருதுகிறோமா? அப்படியென்றால், மனித வேறுபாடு என்ற ஆங்கில புத்தகம் எழுப்பிய பின்வரும் கேள்வி ரொம்ப பொருத்தமாக இருக்கும்: “மனிதர்களாகிய நமக்கு ஏதோ அதிர்ஷ்டவசமாக [பரிணாமம் நிகழ்ந்துவிட்டதால்] நாய்கள், பூனைகள் ஆகியவற்றைவிட அதிக மதிப்போடு நம்மை நடத்துவது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?”

இந்தப் புதிய பரிணாமக் கொள்கையின் கருத்து பரவ பரவ, “கண்டிப்பாக ஒழுக்க நெறி பயங்கரமாய் சீரழிந்துவிடும்” என்கிறது சமூக விலங்கு என்கிற ஆங்கில புத்தகம். ‘இயற்கை தெரிவின்’ அடிப்படையில் ஒழுக்கநெறி இருந்தால் மகா கொடூரமாக இருக்கும். ஹெச். ஜி. வெல்ஸ் கூறுவதைப்போல் “பலவான்கள் சாதுக்களையும், தந்திரம் மிகுந்தவர்கள் அப்பாவிகளையும் வெல்லுவார்கள்.”

புதிய சிந்தனையாளர்கள் பலர் தோன்றுவதற்குள் இத்தகைய பரிணாமக் கொள்கைகள் பல ஒழுக்கநெறியை கொஞ்சம் கொஞ்சமாக வருடக்கணக்கில் அழித்துவிட்டன. இத்தகைய கோட்பாடுகளால் ஏற்பட்ட கோரமான விளைவுகளை இன்னும் கண்கூடாகக் காண்கிறோம்.

படைப்பை வழிபடுவதா படைப்பாளரை வழிபடுவதா?

ஒழுக்கநெறிகளுக்கும், வாழ்க்கையின் இலட்சியத்திற்கும் விடைகள் காண ஒருவர் விரும்பினால், குனிந்து கீழே இருக்கும் படைக்கப்பட்ட பொருள்களில் அவ்விடைகளைத் தேடும்படி சொல்கிறது பரிணாமம். மேலே இருக்கும் படைப்பாளரை அது கண்டுகொள்வதில்லை. ஆனால் விடைகள் வேண்டுமென்றால் உண்மை கடவுளிடமாக மேல்நோக்கி கேட்கும்படி சொல்கிறது பைபிள். தப்பை தடுக்க நம் மனம் எதற்காகப் போராடுகிறது? மரணத்தின் துயரத்தை மனிதர்களால் மட்டும் ஏன் தாங்க முடியவில்லை? இப்படிப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பைபிள் விளக்கம் தருகிறது. மனிதனுடைய மனதில் ஏன் தவறுசெய்யும் எண்ணம் வருகிறது என்பதற்கும் அது விளக்கம் தருகிறது. வாருங்கள், இதற்கெல்லாம் திருப்திகரமான விளக்கத்தை கொஞ்சம் சிந்திக்கலாம்.

[பக்கம் 7-ன் படங்கள்]

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு பெரியது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்