உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 6/22 பக். 3-4
  • மனிதர்களே—நாம் யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனிதர்களே—நாம் யார்?
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வாழ்க்கை இலட்சியம் என்ன?
  • நம் நம்பிக்கை வாழ்க்கையையே மாற்றிவிடும்
  • கடவுளின் சாயலா விலங்கின் சாயலா?
    விழித்தெழு!—1998
  • பரிணாமம்—ஏன் கருத்து வேறுபாடுகள்?
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • ஒரு புத்தகம்—உலகை
    விழித்தெழு!—1995
  • பரிணாமம் விசாரணையில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 6/22 பக். 3-4

மனிதர்களே—நாம் யார்?

தான் யாரென்று அடையாளம் தெரியாமல் மனிதன் விழிப்பதாக தெரிகிறது. ரிச்சர்டு லீக்கி என்கிற ஒரு பரிணாமவாதி இவ்வாறு கூறுகிறார்: “மனிதநேயத்தைப் பற்றி நிறைய விஷயங்களை தத்துவஞானிகள் பல நூற்றாண்டுகளாக சொல்லி வந்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தக் குணம் உடையவனே மனிதன் என்று அவர்களால் ஒருமித்த கருத்தோடு உறுதியாய் சொல்ல முடியவில்லை.”

ஆனால் கோபன்ஹாகனில் உள்ள மிருகக்காட்சி சாலை, குரங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திலேயே ஓர் ஆய்வை மேற்கொண்டு, இந்த விஷயத்தின் பேரில் தைரியமாக தன் கருத்தை வெளியிட்டது. 1997 பிரிட்டானிக்கா புக் ஆஃப் த இயர் இவ்வாறு விளக்குகிறது: “டென்மார்க் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி, வாலில்லா குரங்குக்கும் மனிதருக்கும் இருக்கும் நெருக்கத்தை பார்வையாளர்களுக்கு காட்டுவதற்காக குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் தற்காலிகமாக தங்கினார்கள்.”

இவ்வாறு ஒருசில விலங்குகளுக்கும் மனிதனுக்கும் நெருக்கமான சொந்தம் இருப்பதாக என்ஸைக்ளோப்பீடியாக்களும் எடுத்துரைக்கின்றன. உதாரணத்திற்கு தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “பாலூட்டிகளின் மூதாதைகள் (primates) என்று எடுத்துக்கொண்டால், அந்த வரிசையில் மனிதர்களோடு வாலில்லா குரங்குகளும், லெமூர் குரங்குகளும், குரங்குகளும், தேவாங்குகளும் இடம்பெறுகின்றன.”

ஆனால், மனிதனிடத்தில் மனிதனுக்கே உரிய சிறப்பான குணங்கள் நிறைய இருக்கின்றன. அந்தக் குணங்களோ மிருகங்களுக்கு இல்லை. அன்பு, மனச்சாட்சி, ஒழுக்கம், ஆன்மீகம், நீதி, கருணை, நகைச்சுவை, கலைத்திறன், காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு, தன்னைப் பற்றிய விழிப்புணர்வு, அழகை ரசிக்கும் குணம், வருங்காலத்திற்காக கவலைப்படும் குணம், காலங்காலமாக அறிவைத் தேடி சேமித்துவைக்கும் திறமை, மரணம் வாழ்க்கையின் நிரந்தர முடிவு அல்ல என்ற நம்பிக்கை ஆகியவை அவனிடத்தில் காணப்படும் எத்தனையோ குணங்களில் ஒருசில குணங்களாகும்.

இத்தகைய குணங்களை மிருகங்களுக்கு பொருத்திப் பார்க்க, சிலர் evolutionary psychology எனப்படும் பரிணாம மனோவியலை சுட்டிக்காட்டுகிறார்கள். இவல்யூஷன் சைக்காலஜி என்பது பரிணாமம், மனோவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்றும் கலந்த கலவை. மனித குணங்களை புரிந்துகொள்வதில் உள்ள குழப்பத்தை இந்தப் பரிணாம மனோவியல் தீர்த்து வைத்திருக்கிறதா?

வாழ்க்கை இலட்சியம் என்ன?

ராபர்ட் ரைட் என்ற பரிணாமவாதி இவ்வாறு கூறுகிறார்: “பரிணாம மனோவியல் எளிய அடிப்படை விஷயத்தை கொண்டிருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் மற்ற உடல் உறுப்புகளைப் போலவே மனித மனமும் ஓர் உறுப்பு; மரபணுக்களை [ஜீன்களை] தலைமுறை தலைமுறையாக கடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக மனம் வடிவமைக்கப்பட்டுள்ளது; [இந்த அடிப்படை விஷயத்தின்] மூலம் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.” வேறுவிதமாக சொன்னால், நம்முடைய மரபணுக்கள் பிறப்பிக்கும் கட்டளைப்படி நம் மனம் செயல்படுகிறது. நம் மனம் சொல்கிறபடி இனப்பெருக்கம் செய்யவேண்டும். இதுவே வாழ்க்கையின் முழு அர்த்தம்.

உண்மையில் இந்தப் பரிணாம மனோவியல், “மனிதனின் இயல்பை பெருமளவுக்கு மாற்றி, மரபணுவின் சுய-விருப்பம் என்ற கொடிய வட்டத்துக்குள் அவனை முடக்கிவிடுகிறது.” சமூக விலங்கு என்கிற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “இயற்கை தெரிவில் (Natural selection) ஆண்கள் நிறைய பெண்களோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்பது ‘விதி.’” அப்படியென்றால், இந்தப் பரிணாமக் கொள்கையின்படி, பெண்கள் சில சந்தர்ப்பங்களில் ஒழுக்கம் தவறி நடந்தாலும் இயற்கை என்றுதான் எடுத்துக்கொள்வார்கள். பெற்றோரின் பாசத்தைக்கூட வம்சத்தை தழைக்க செய்யும் ஒருவழியாக நோக்குகிறார்கள். முக்கியமாக, மனித குடும்பம் காலங்காலமாக வாழவேண்டும் என்பதற்காகவே மரபணுக்கள் இப்படி வழிவழியாக வருகிறது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

இப்போது, இந்தப் பரிணாம மனோவியலைப் பற்றி எக்கச்சக்கமான கைடுகள் புதிது புதிதாக வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. இத்தகைய துணைப் புத்தகங்களில் ஒன்று, மனிதனின் குணத்துக்கும், “சிம்பன்ஸி குரங்கின் குணத்துக்கும், கொரில்லா குரங்கின் குணத்துக்கும், அல்லது பப்பூன் குரங்கின் குணத்துக்கும் ரொம்ப ஒன்றும் வித்தியாசம் இல்லை” என்று விவரிக்கிறது. அது மேலும் இவ்வாறு விவரிக்கிறது: “பரிணாமம் என்று எடுத்துக்கொண்டால், . . . அதில் இனப்பெருக்க செயல்தான் மிகமிக முக்கியம்.”

இது ஒருபுறம் இருக்க, கடவுள் மனிதனை வெறும் இனப்பெருக்கம் செய்வதற்காக அல்ல, ஆனால் அதைவிட மேலான இலட்சியத்திற்காக படைத்தார் என்று பைபிள் போதிக்கிறது. நாம் எல்லாரும் கடவுளின் ‘சாயலில்’ உருவாக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய குணங்களை, அதிலும் குறிப்பாக அன்பு, நீதி, ஞானம், சக்தி ஆகிய குணங்களை வெளிக்காட்டும் திறனோடு படைக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் குணங்களையும், நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட மனிதனுக்கே உரிய சிறப்பான குணங்களையும் கவனித்தால், விலங்குகளைவிட மனிதன் உயர்ந்தவன் என்று பைபிள் சொல்வதன் காரணம் நன்றாக புரியும். பார்க்கப்போனால், நிரந்தரமாக வாழ்வதற்கான ஆசையோடு மட்டும் கடவுள் மனிதனை படைக்கவில்லை, அவனுடைய இந்த ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக நீதியான ஓர் புதிய உலகையும் அவர் தயார் செய்யவிருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 1:27, 28; சங்கீதம் 37:9-11, 29; பிரசங்கி 3:11, NW; யோவான் 3:16; வெளிப்படுத்துதல் 21:3, 4.

நம் நம்பிக்கை வாழ்க்கையையே மாற்றிவிடும்

உண்மையில் நாம் யார் என்று சரியாக தீர்மானிக்கும் விஷயம் ஏட்டு அளவில் நின்றுவிடுவதில்லை. ஏனென்றால் நமது பரம்பரையைப் பற்றி நாம் என்ன நம்புகிறோமோ, அதன்படி நம் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது. 1859-ல் சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார். அன்று முதல் எப்படிப்பட்ட தீர்மானங்களை எல்லாம் பலர் எடுத்தார்கள் என்று வரலாற்று ஆசிரியர் ஹெச். ஜி. வெல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை தலைவிரித்தாடியது. . . . 1859-க்குப் பிறகு நம்பிக்கை என்ற குணம் தொலைந்தே போய்விட்டது. . . . பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், பலவான்களே வாழ்க்கைப் போராட்டத்தில் பிழைக்க முடியும் என்று பலசாலிகள் நினைக்கத் தொடங்கினார்கள். இக்கருத்துப்படி பலவான்கள் சாதுக்களையும், தந்திரம் மிகுந்தவர்கள் அப்பாவிகளையும் வெல்லுவார்கள். . . . கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடும் இந்திய செந்நாய் (காட்டு நாய்) போல மனிதனும் ஒரு சமூக விலங்கு என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். . . . எனவே எப்படி பெரிய பலமுள்ள நாய்கள் [சாதுவான மற்ற நாய்களை] தாக்கி அடிபணிய வைக்கின்றனவோ, அதேபோல் மனிதர் கூட்டத்திலும் பலவான்கள் அப்பாவிகளை அடிபணிய செய்வது தவறு அல்ல என்றும் அவர்கள் நினைத்தார்கள்.”

இதையெல்லாம் பார்த்தால், உண்மையில் நாம் யார் என்று சரியாக அறிந்துகொள்வது ரொம்ப அவசியம். ஏனென்றால், ஒரு பரிணாமவாதி இவ்வாறு கேட்கிறார்: “டார்வினுடைய பழைய சாதாரணமான கொள்கையே மேற்கத்திய சமுதாயத்தின் ஒழுக்கநெறியை சின்னாபின்னம் ஆக்கியது என்றால், இந்தப் புதிய கொள்கை [பரிணாம மனோவியல்] பரவலாக அறியப்பட்டால் இன்னும் என்ன ஆகுமோ?”

இந்த முழு கேள்வியையும் நாம் கவனமாக ஆராய்வது முக்கியம். ஏனென்றால் நம்முடைய பிறப்பின் மூலத்தைப் பற்றி நாம் என்ன நம்புகிறோம் என்பதை பொருத்தே, வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை கருத்தும், எது சரி, எது தவறு என்ற கருத்தும் உருவாகின்றன.

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

1859-ல் சார்லஸ் டார்வினுடைய உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகம் வெளியானது முதல் எத்தகைய தீர்மானங்களை பலர் எடுத்தார்கள் என்பதைப் பற்றி வரலாற்று ஆசிரியர் ஹெச். ஜி. வெல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை தலைவிரித்தாடியது. . . . 1859-க்குப் பிறகு நம்பிக்கை என்ற குணம் தொலைந்தே போய்விட்டது”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்