எமது வாசகரிடமிருந்து
சிங்கப்பூர் இந்த நவீன அரசாங்கம் அமைதியை விரும்பும் கிறிஸ்தவர்களை எப்படியெல்லாம் படுமோசமாக நடத்துகிறது என்பதை “சிங்கப்பூர்—ஆசியாவின் ஒளியிழந்த இரத்தினம்” (ஜூன் 8, 1997) என்ற கட்டுரை பிட்டு பிட்டு வைத்தது. அங்கிருக்கும் நிறைய கிறிஸ்தவ ஆண்களையும் பெண்களையும் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். அவர்கள் ரொம்ப நல்லவர்கள், அன்பானவர்கள். கொடுமைப்படுத்தினாலும் அவர்கள் யெகோவாவை சேவித்து வருகிறார்கள் என்பதை அறிந்து ஆறுதலடைகிறேன்.
ஐ. ஓ., மலேசியா
கோபம் “உங்கள் கோபத்தை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?” (ஜூன் 8, 1997) என்ற கட்டுரையில் சீமோனும், லேவியும் தங்கள் தகப்பனால் சபிக்கப்பட்டார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு, அவர்களுடைய கோபத்தைத்தான் யாக்கோபு சபித்தார் என்று எங்கேயோ படித்திருக்கிறேன்.
எஸ். எல்., அமெரிக்கா
எமது வாசகர் சொன்ன இந்தக் குறிப்பு சரியே. ஜூன் 15, 1962, ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு விளக்கம் தந்தது: “யாக்கோபு சாகும் தருணத்தில், சீமோனையும் லேவியையும் சபிக்கவில்லை. அவர்களுடைய கோபத்தையே சபித்தார், ஏனென்றால் அது ‘உக்கிரமாக’ இருந்தது. அவர்களது மூர்க்க கோபத்தை சபித்தார், ஏனென்றால், அது ‘கொடுமையாக’ நடந்துகொள்ளும்படி செய்தது.”—ED.
உணவு “உங்கள் உணவு—உங்களுக்கே விஷமாகுமா?” (ஜூன் 22, 1997) என்ற கட்டுரை என் உயிரையே காப்பாற்றியது. அந்தக் கட்டுரை என்னுடைய நிலைமையை அப்படியே படம்பிடித்து காட்டியது. அதைப் படித்ததும், உடனே டாக்டருக்கு போன் செய்யும்படி என் மனைவியிடம் சொன்னேன். என்னுடைய டாக்டர் என்னை பரிசோதித்தப்பின், அடுத்த நாளே எனக்கு ஆபரேஷன் செய்ய நேரம் குறித்துவிட்டார். அன்று இரவுவரைகூட நான் பிழைப்பது கஷ்டம் என்று பயந்த டாக்டர் என்னை உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மூன்று இருதய மாற்று வழி (bypass) அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, இப்போது வீட்டில் குணமடைந்து வருகிறேன்.
எப். எஸ்., அமெரிக்கா
சிலநேரங்களில், என்னாலும் என் கணவராலும் சாப்பிடும்போது ஆசையைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. உணவு பழக்கத்தைப் பற்றி நான் மற்ற கட்டுரைகளை படித்திருக்கிறேன், ஆனால் இந்தக் கட்டுரை விஷயங்களை சுலபமாகவும் நடைமுறையாகவும் விளக்கியிருந்தது. நீங்கள் கொடுத்திருக்கும் ஆலோசனைகளை பின்பற்றினால், நாங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று முழுமையாக நம்புகிறேன்.
வி. ஏ., பிரேஸில்
“உங்கள் உணவு—ஏன் கவனத்திற்குரியது” என்ற தொடர் கட்டுரைகளுக்காக நன்றி. அதிக குண்டாக இருப்பதன் ஆபத்தை உணர்ந்துகொள்ள எனக்கு இது உதவியது. அதில் உள்ள ஆலோசனைகளை நான் பின்பற்ற தொடங்கிவிட்டேன். யெகோவாவின் உதவியால் சாப்பாட்டின் அளவை என்னால் கட்டுப்படுத்த முடியும்.
வி. ஒய். டி., லைபீரியா
தும்பிகள் ஆற்றங்கரை மணிகள்” (ஜூன் 22, 1997) என்ற கட்டுரைக்காக நன்றி. இது மனதார படித்து மகிழக்கூடிய ஒரு கட்டுரை. காற்றில் களிநடனம் புரியும் உயிரினங்களில் தும்பியையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தோட்டத்தில் நான் வேலைசெய்யும்போது, எப்போதுமே என் தலைக்குமேல் ஒரு தும்பி வட்டமடித்துக்கொண்டிருக்கும் அல்லது பக்கத்தில் எங்கேயாவது அமர்ந்துகொள்ளும். இது ஏன் இப்படி செய்கிறது என்று தோட்டம் அமைக்கும் ஒருவரிடத்தில் கேட்டேன். அதற்கு அவர், தும்பி கொசுக்களையும் சாப்பிடும், மனித வாசனைக்கு கொசுக்கள் ஈர்க்கப்படுவதால், தும்பி வருகிறது என்றார். ஆகவே, இப்போது இந்த வண்ணமிகு உயிரினத்தை பார்க்கும்போது, என்னுடைய பாடிகார்டாக நினைக்கத் தோன்றுகிறது!
ஜே. எப்., அமெரிக்கா
நீதிக்கான தேடுதல் “நீதிக்கான எங்கள் தேடுதல்” (ஜூன் 22, 1997) என்ற கட்டுரை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அநீதியைக் கண்டு, மனம் குமுறி, குரலெழுப்பும் மக்களை, கடவுளுடைய நீதியான குணங்கள் நிச்சயம் கவர்ந்திழுக்கின்றன. அநீதியைக் கண்டால் என்னால் பொறுக்க முடியாது; கடவுளுடைய தராதரங்களுக்கு ஏற்றப்படி என்னுடைய கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் மாற்ற வேண்டும். அதற்காக நான் உண்மையில் கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டும்.
டி. எல்., தைவான்
கட்டுரையின் முன்னுரையை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆலாமோவுக்காக போரிட்ட டெக்ஸஸை சேர்ந்தவர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகையில், அவர்கள் மெக்ஸிக்கோவுக்கு சொந்தமான இடத்தை பறித்துக்கொள்ள முயன்ற கொள்ளையர்கள் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்.
ஏ. சி., மெக்ஸிகோ
ஆலாமோவில் நடந்த போரில் உட்பட்டிருந்த சிக்கலான விஷயங்களைப் பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அதற்கும் ஆனாடோன்யோ வீல்யா என்பவரின் சுயசரிதைக்கும் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை. ஆனாலும், மே 22, 1971 என்று தேதியிட்ட எங்களுடைய ஆங்கில விழித்தெழு! இவ்வாறு குறிப்பிட்டது: “சான் அன்டோனியோ ஒருகாலத்தில் மெக்ஸிக்கோவின் பாகமாக இருந்ததை நிறைய அமெரிக்கர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது அவர்களுக்கு தெரியாமலேபோனது. மெக்ஸிக்கோவை பொருத்த மட்டும், அந்தப் போர், அதன் பிராந்தியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த கலகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி. அமெரிக்கா . . . மெக்ஸிக்கோவில் அத்துமீறி நுழைந்ததற்கு இதை சாக்காக . . . பயன்படுத்திக்கொண்டது.”—ED.