உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 6/22 பக். 16-18
  • ஆற்றங்கரை மணிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆற்றங்கரை மணிகள்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தும்பி பறக்கும் விதம்
  • கண்கள் நிறைந்த தலை
  • வாழ்க்கை பாணியில் ஒரு மாற்றம்
  • பரிணாமத்திற்கு எதிரான ஆதாரம்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • பூச்சிகளின் விந்தை உலகம்
    விழித்தெழு!—2000
  • கடவுளைப் பறைசாற்றும் படைப்புகள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • பூச்சி பறப்பதன் புதிர் விடுவிக்கப்பட்டது
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 6/22 பக். 16-18

ஆற்றங்கரை மணிகள்

ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்

ஆற்றங்கரை அல்லது குளத்தின் ஓரமாக சாவகாசமாக நடக்கும்போதெல்லாம், என்னுடைய இஷ்டமான மணிகள் ஒன்றிற்காக நான் வழக்கமாக தேடுவதுண்டு—அது சிவப்பாக, நீலமாக, அல்லது பச்சையாக இருக்கலாம். சில சமயங்களில் இலைமீது அசைவற்றுக் கிடக்கும் ஒன்றை நான் கண்டுபிடிப்பேன்; மற்றொன்று தண்ணீரின் மேலே வட்டமடித்துக் கொண்டிருப்பதையோ அல்லது என் முன்னே விருட்டென்று கடந்து செல்வதையோ நான் காண்பேன். நான் தேடும் அந்த மணி தும்பியே—பூச்சி உலகின் மினுமினுக்கும் “ஹெலிகாப்டர்.”

இந்தப் பறக்கும் இரத்தினங்கள், அநேக வருடங்களுக்கு முன்பு காட்டு மரங்களினூடாக சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஓடைக்கருகே நான் தற்செயலாக கடந்து சென்ற போது என் கவனத்தைக் கவர்ந்தன. சூரியவெளிச்சத்திற்கு இங்கும் அங்குமாக அநேக தும்பிகள் பறந்து கொண்டிருந்தன—சில உலோகத்தைப் போல பிரகாசிக்கும் நீலநிறத்திலும், மற்றவை ஜொலிக்கும் பொன் மஞ்சளிலும். அந்தக் காட்டினிடையேயுள்ள வனப்பரப்பை ஒரு சிறிய நடன அரங்காக மாற்றிய அவற்றினுடைய திறந்தவெளி நடனத்தை கவனித்தவாறே நான் ஒரு மணிநேரத்தைச் செலவழித்தேன். அப்போது முதற்கொண்டு அவை என்னுடைய ஆர்வத்துக்குரியவையாக இருந்துள்ளன.

தும்பிகளைக் குறித்து நான் எந்தளவுக்கு படிக்க ஆரம்பித்தேனோ அந்தளவுக்கு அவற்றின் அழகையும் மதிப்பையும் போற்ற ஆரம்பித்தேன். தும்பிகளுக்கும் ஊசித்தும்பிகளுக்கும் இடையே வித்தியாசமுள்ளது என்பதே என்னுடைய முதல் கண்டுபிடிப்பாக இருந்தது. தும்பிகள் ஆற்றலுடன் பறக்கும் பூச்சிகளாகவும், மேலும் இயல்பாகவே பெரியவையாகவும் இருக்கையில் ஊசித்தும்பிகளோ—அவற்றின் பெயரே குறிப்பாக உணர்த்துவது போல—அதிக பயத்துடன் பறக்கும் வலுவற்ற பூச்சிகளாக உள்ளன. ஒரு முக்கியமான வேறுபாடு அவை தம் சிறகுகளை வைத்துக் கொள்ளும் விதத்தில் உள்ளது. ஒரு தும்பி ஓய்வெடுக்கும் போது பொதுவாக தன்னுடைய இரண்டு ஜோடி சிறகுகளையும் ஒரே கிடைமட்டத்தில் வைத்திருக்கும், ஆனால் ஒரு ஊசித்தும்பியோ அவற்றை ஒன்றாக மடக்கி தன் உடம்புக்கு மேலே வைக்கும். a

இந்த தும்பிகள் இத்தனை மேலோட்டமான எளிய விதத்தில் காற்று வெளியிலிருந்து கொசுக்களை எப்படி பிடிக்க முடிகிறது என்று நான் வியக்க ஆரம்பித்தேன். சமையலறை சுவர்மீது குளிர்காய்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய ஈயை அடிப்பதுகூட என்னால் முடியாத காரியம் என்று நான் அறிந்தேன். ‘என்னிடம் இல்லாத எது தும்பியிடம் உள்ளது?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இரண்டு காரியங்கள்: பார்த்துக் கொண்டிருக்கிறவர்களைப் பொறாமைப்பட வைக்குமளவுக்கு காற்றின் மீதான அதன் முழு கட்டுப்பாடும் மற்றும் அதன் கண்களுமே.

தும்பி பறக்கும் விதம்

தும்பியை ஹெலிகாப்டர் என்று அழைப்பது—ஸ்பெய்னில் பொதுவான விளையாட்டுப் பெயராக இருக்கிறது—அதை மதிப்புக் குறைவாக ஒப்பிட்டதைப் போல உள்ளது. காற்றிலே குட்டிக்கரணமடித்து அது செய்யும் சாகசங்கள் அத்தனை வேகமாக இருப்பதால் சில சமயங்களில் பார்வையிலிருந்து தப்பவிடாமல் அவற்றைப் பின்தொடர்வது முடியாததாக உள்ளது. ஒரு சிறிய திடீர் பாய்ச்சலில் அதன் சில வகைகளால் சுமார் மணிக்கு 96 கிலோமீட்டர் என்ற உச்ச வேகத்தை அடைய முடியும். அவற்றால் ஆகாயத்தில் சிறகடித்து வட்டமிட்டுப் பறக்கவும் அல்லது எளிதில் மிக வேகமாக பின்னோக்கியோ, முன்னோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ பறக்கவும் முடியும். இதற்கும் மேலாக, ஒரு தும்பி ஆகாயத்தில் திடீரென்று திசையை மாற்றும் போது அதனால் விசையில் 2.5 G வரை தாக்குப்பிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.

தும்பிகள் எளிதில் வளைந்து கொடுக்கிற, லேஸ் போன்ற இரண்டு ஜோடி சிறகுகளைக் கொண்டிருக்கின்றன. இந்தச் சிறகுகள் பலமற்றதாகத் தோன்றினாலும்கூட, நொடிக்கு 40 தடவை வரையிலுமாக அவற்றால் சிறகடிக்க முடியும், மேலும் சிறிதளவான சேதத்துடன் மோதல்களைத் தாங்க முடியும். உயிரியலர் ராபன் ஜெ. வூட்டன் இவற்றை, “அறிவுத்திறமையுடன் வடிவமைக்கப்பட்ட சிறிய தலைச்சிறந்த படைப்புக்கள்” என்று விவரிக்கிறார்.

அவர் தொடர்கிறார்: “பூச்சிகளுடைய சிறகுகளின் இயக்கத்தை எவ்வளவு நன்றாக நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவதிகமாக அவற்றின் வடிவமைப்பிலுள்ள அழகும் அறிவுத்திறனும் தெரிய வரும். . . . அவற்றிற்கு இணையான தொழில் நுட்பங்கள் இருந்தாலும் அவை வெகு சொற்பமே.” வானூர்திக்கலைப் பொறியாளர்கள், தும்பியின் பறக்கும் நுணுக்கங்களை தற்போது ஆராய்ந்தறிவது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

கண்கள் நிறைந்த தலை

தும்பியின் பறக்கும் விதமே அசாதாரணமாக இருப்பதால், அதன் கண்பார்வையைக் குறித்தும் குறைவாக சொல்ல முடியாது. இரண்டு பெரிய கூட்டுக் கண்கள் கிட்டத்தட்ட தும்பியின் தலை முழுவதையும் நிரப்பி விடுகின்றன. ஒரு கண்ணுக்குள் சிறிய கண்கள் இருப்பதைப் போல, இந்தக் கண்களில் ஒவ்வொன்றும் 30,000 அறுகோண அலகுகள் வரைக் கொண்டிருக்கிறது. அதனால் ஒவ்வொன்றும் ஒரு தனி பிம்பத்தை மூளைக்கு அனுப்புகிறது. இருப்பினும், ஒரு தும்பி ஆயிரக்கணக்கான வித்தியாசமான படங்களை எல்லாம் ஒரே சமயத்தில் பார்க்கிறது என்று இது அர்த்தப்படுத்துகிறதில்லை. நம்மைப் போல, ஒரு முழு படத்தைப் பார்ப்பதற்கு மாறாக, அது அசைவுகளையும், வடிவங்களையும், வேறுபாடுகளையும், உருவங்களையும் உணர்ந்து கொள்கிறது.

இந்தப் பிம்பங்கள் எல்லாமே பகுத்தாராய்வதைத் தேவைப்படுத்துகின்றன. எனவே, ஒரு தும்பியின் 80 சதவீத மூளையானது படக்காட்சி குறிப்புகளை மதிப்பிடுவதற்கே அர்ப்பணிக்கப்படுகிறது. ஒரு தும்பியால் சுமார் 20 மீட்டர் தூரத்தில் இருக்கும் கொசுவையும் கண்டுபிடிக்க முடியும்—ஒளியியல் அமைப்புகளில்கூட சில தான் இந்தளவுக்கு நுட்பமாக உள்ளன. அந்தி சாய்ந்த வேளைகளில், வெளிச்சம் மங்கலாக இருக்கும் சமயத்திலும்கூட, கவனித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கும் சிறு பூச்சிகளைக் கண்டுபிடிப்பது கடினமாக ஆகும் போது, வெப்பமண்டல தும்பிகள் அவற்றை எளிதாகப் பிடித்துவிடுகின்றன.

ஒரு தும்பிக்கு ஆற்றோர பயிர்களினூடே, வேகமான விருட்டென்று பறக்கும் போது, அது நூற்றுக்கணக்கான தீர்மானங்களை மிகவும் விரைவில் எடுப்பதை தேவைப்படுத்துகிறது. இத்தகைய கடினமான முயற்சியை இதனால் செய்ய முடிவதற்கான காரணம், ஒரு நொடியில் வேறுபட்ட நூற்றுக்கணக்கான பிம்பங்கள் வரை, அதாவது நம்மைவிட ஐந்து மடங்கு அதிகமாக, அவற்றால் பார்க்க முடியும். எனவே, ஒரு நொடிக்கு 24 பிம்பங்களை திரையில் விழும்படிச் செய்யும் ஒரு திரைப்படம்கூட, ஒரு தும்பிக்கு வெறும் வரிசையான இயங்கா நிழற்படங்களாகவே தெரியும்.

வாழ்க்கை பாணியில் ஒரு மாற்றம்

ஒரு தும்பி தன் வாழ்க்கையைத் தொடங்கும் போது, கவர்ச்சிகரமான, சாதனை படைக்கும் பூச்சியாக, பின்னால் ஆகப்போவதைப் பற்றிய எந்த அறிகுறியும் இருப்பதில்லை. முட்டையினின்று வெளிப்பட்ட பிறகு, நீருக்கருகில் வளர்கிற லார்வா, குளம் அல்லது ஓடையில் ஓரளவு அசைவில்லாமல் கிடந்து தனக்கு எட்டும் தூரத்திலிருக்கும் உணவைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறது. தோலில் ஏற்படும் அநேக மாற்றங்களுக்கு பிறகு—சில வகைகளின் விஷயத்தில் அநேக மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகின்றன—அந்த லார்வா நாணல்களின் மேலே ஏறத் துவங்குகிறது. அங்கே, ஒரு அசாதாரணமான உருமாற்றம் நடைபெறுகிறது.

மார்புக் கூட்டினருகே தோல் பிளந்து திறப்புண்டாகி, அதிலிருந்து முழு உருப்பெற்ற தும்பி வெளி வருகிறது. வண்ணத்துப் பூச்சியைப் போலவே, இந்த முதிர்ந்த, புதிதாக வெளிவந்த பூச்சியும், தன்னுடைய சிறகுகள் உறுதியாவதற்கும் ஒரு புதிய வாழ்க்கையை துவங்குவதற்கும் முன்பாக, சில மணிநேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சில நாட்களில், அதன் இயற்கையான ஞானம் வெற்றிகரமாக வேட்டையாடவும், பறக்கும் வித்தைகளைக் கரைத்துக் குடிக்கவும் உதவுகிறது.

சீக்கிரத்தில், இந்த இளம் தும்பி, பறந்து கொண்டே ஈக்களையும், கொசுக்களையும் பிடிப்பதில் கைதேர்ந்ததாகி விடுகிறது. ஒவ்வொரு நாளும், தன்னுடைய அதே எடையளவுள்ள பூச்சிகளை விழுங்குவதன் மூலமாக, அது ஒரு மதிப்பிடமுடியாத சேவையைச் செய்கிறது. தங்களுக்கு தொடர்ந்து உணவு கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, அநேக ஆண் தும்பிகள் சிறிய பிராந்தியங்களைத் தங்களுடைய எல்லைகளாக உரிமை கோரிக் கொண்டு விழிப்புடன் அவற்றை காவல் புரிகின்றன.

சில வகை தும்பிகள் செடிப்பேன்களை அல்லது வண்டுகளை வேட்டையாடுகின்றன, மற்றவை சிறு தவளைகளைப் பிடிக்கின்றன; மேலும் வெப்பமண்டல ஊசித்தும்பி ஒன்று சிலந்திகளைக்கூட தின்கிறது. இது ஓர்ப் (orb) என்ற பெரிய சிலந்தியின் வலையருகே வட்டமிட்டுக் கொண்டிருந்து, அந்த வலையின் சொந்தக்காரர் விட்டுச் சென்றிருக்கும் மீந்த உணவுத் துணிக்கைகளை உண்பதற்காக அங்கு வரும் சிறிய சிலந்திகளை விழுங்குகிறது.

பரிணாமத்திற்கு எதிரான ஆதாரம்

அநேக பரிணாம அறிவியல் வல்லுநர்கள், தும்பிகள்தான் ஆரம்பகால பறக்கும் பூச்சிகளாக இருந்திருக்கும் என கருதுகின்றனர். பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைபடிவத்தில் 75 சென்டிமீட்டர் சிறகுச்சாணளவைக் கொண்ட ஒரு தும்பியின் சிறகுகளுடைய முத்திரை இருந்தது! உயிர்வாழும் எந்தத் தும்பியின் அளவையும்விட, மூன்று மடங்கு அதிகமானதாக, அறியப்பட்டதிலேயே மிகப் பெரிய பூச்சியாக உள்ளது.

‘மனிதன் அறிந்திருக்கிறவற்றில் மிகச் சிக்கலான, நேர்த்தியாக, மேம்படுத்தப்பட்ட பறக்கும் நுட்பங்களில் ஒன்று வெறுமனே தோன்றியது என்பது எப்படி சாத்தியமாகும்?’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். “பூச்சிகளின் புதைபடிவங்களில் சிறகற்ற மற்றும் சிறகுள்ள நிலைகளுக்கு இடையே இடைப்பட்டவை இல்லை,” என்று அபூர்வ சாம்ராஜ்யம்—பூச்சிகளின் வாழ்க்கையில் ஒரு ஆராய்ச்சி (ஆங்கிலம்) என்ற புத்தகம் ஒத்துக் கொள்கிறது. தும்பிகள், ஒரு அறிவுக்கூர்மையுள்ள கைதேர்ந்த வடிவமைப்பாளரின் கைவேலைப்பாடாக உள்ளன என்பது நிரூபணமாயுள்ளது.

தும்பிகள் கிட்டத்தட்ட பூமியின் எல்லா பகுதிகளிலுமே வெற்றிகரமாக குடியேறியுள்ளன. அவை தங்களுக்குரிய வீடுகளை ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஒரு ஏரிக்கருகிலோ, பூமத்தியரேகைக்கருகான ஒரு சதுப்புநிலத்திலோ, அல்லது ஒரு புறநகர் நீச்சல் குளத்திலோகூட ஏற்படுத்திக்கொள்கின்றன.

நான் தும்பிகளைக் கூட்டமாக ஆப்பிரிக்காவின் உஷ்ணமான கடற்கரைகளிலும் அதே சமயத்தில் தனித்த ராஜ தும்பிகளை அவற்றிற்கு பிடித்தமான ஐரோப்பிய குளத்தைக் கடுமையாக காவல் காப்பதையும் கவனித்திருக்கிறேன். மேலும் பிலிப்பீன்ஸில், இலைகள் சூழ்ந்த மலைக் காற்றோடை வழியாக சிறு படகிலே சென்றுகொண்டிருக்கும்போது, ஒளிவீசும் ஊசித்தும்பிகள் வழிகாட்டியாக செயல்பட்டு, ஆடையில்லாத என் புஜங்களிலும்கூட வந்து இறங்கின.

தும்பிகள் பூமியிலுள்ள பறக்கும் இயந்திரங்களில் மிகவும் நுணுக்கமானதாக இருந்தாலும்கூட, அவற்றின் பறக்கும் திறமைகளையும்விட, அவற்றின் எளிய வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையும், அழகுமே என்னை எப்போதும் கவர்ந்துள்ளன. அவை அங்கிருப்பதே நம்முடைய குளங்களுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் விசேஷ பிரகாசத்தைக் கூட்டுகின்றன. இவை உயர்ந்த மணிகளாக—எப்போதும் மகிழ்விப்பதற்காக அங்கிருக்கின்றன.

[அடிக்குறிப்பு]

a எப்பொழுதாவது, தும்பிகள் தங்களுடைய சிறகுகளை கீழ்நோக்கி சாய்த்து தங்களுடைய உடலை சூரியனுக்கு நேராக உயர்த்தி வைக்கும். அப்போது சூரிய ஒளி உடற்பகுதிகளில் குறைவாக படும்படி வைப்பதால் தங்களை குளிர்ச்சிப்படுத்திக்கொள்ள இந்த நிலையில் வைத்துக் கொள்கின்றன.

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

தங்களுடைய சிறகுகளை கிடைமட்டமாக்கி வைத்துக்கொள்ளும் தும்பிகள், தங்களுடைய சிறகுகளை மடக்கி தங்கள் உடம்புக்கு மேலே உயர்த்தி வைக்கும் ஊசித்தும்பிகளைவிட, இயல்பாகவே மிகப் பெரியவை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்