‘அது தேனை உண்ணுவதுபோல் இருந்தது’
அது 1993-வது வருடத்தின் மத்திபபகுதி, இடம் அமெரிக்கா, ஒக்லஹாமாவிலுள்ள அல்டஸ். அவர் ஐ.மா. விமானப்படையில் முதல் சார்ஜென்டாக பணியாற்றி வந்தார். தன் மகளுடைய நிலையை நினைத்து கவலையுடன் ஜெபம் செய்தார்; அவளுடைய மணவாழ்வில் பிரச்சினைகள் இருந்தன, விவாகரத்து பெற்றுக்கொள்வதை குறித்து எண்ணிக்கொண்டிருந்தாள். அடுத்தநாள் காலை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவருடைய வீட்டிற்கு வந்து, “மணவிலக்கு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு நுழைவாயிலா?” என்று தலைப்பிடப்பட்ட அக்டோபர் 8, 1993, விழித்தெழு! பிரதியை அளித்தார்.
அவருக்கு யெகோவாவின் சாட்சிகளென்றால் பிடிக்கவே பிடிக்காது, எப்பொழுதும் அவர்கள் வரும்போது அவர்களுடைய செய்தியை கேட்கவேமாட்டார், ஆனால் இந்த விழித்தெழு! பத்திரிகையை உடனடியாக வாங்கிப் படித்தார். பிறகு அவருடைய மகளிடம் வேதவசனங்களையும் சில குறிப்புகளையும் அதிலிருந்து எடுத்துப் பேசினார். விழித்தெழு! பத்திரிகையோடு தான் பெற்றுக்கொண்ட காவற்கோபுரம் பிரதியையும் வாசித்தார். அதிலிருந்த ஒரு கட்டுரை அவருடைய நீண்டநாள் திரித்துவ நம்பிக்கையைப்பற்றி ஆழமாக யோசிக்க அவருக்கு உதவியது. அவர் தன் மகளைக்குறித்து உதவிக்காக செய்த ஜெபம் பதிலளிக்கப்பட்டது என்பதை உணர்ந்தார், ஆனால் திரித்துவத்தை நம்பாத ஆட்களை உபயோகித்து, கடவுள் தன் ஜெபத்திற்கு ஏன் பதிலளித்தார் என்று ஆச்சரியப்பட்டார். அவர்கள் சத்தியத்தை போதிக்கவில்லை என்றால் அப்படிப்பட்டவர்களை உபயோகித்து கடவுள் ஜெபத்திற்கு பதிலளிக்கமாட்டாரே என்று ஆழ்ந்து எண்ணிப்பார்த்தார்.
இதன் விளைவாக யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு போன் செய்து திரித்துவத்தைப்பற்றிய அவர்களுடைய நம்பிக்கைகளை விளக்கும் புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டார். அந்தச் சமயத்தில் கிறிஸ்தவ மூப்பர்களுக்கான கூட்டத்தில் பங்குபெற்ற ஒருவர் இவருக்கு போனில் பதிலளித்தார். அந்த விமானப்படை சார்ஜென்ட் உடனடியாக ராஜ்ய மன்றத்திற்கு சென்றார், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தையும் நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா? என்ற சிற்றேட்டையும் அங்கே பெற்றுக்கொண்டார்.
அன்று இரவே அவர் அந்த முழு சிற்றேட்டையும் படித்தார். அதைப் படிக்கும்போது எவ்வளவு கிளர்ச்சியடைந்தார் என்பதை பின்னர் இவ்வாறு விவரித்தார்; படிக்கும்போது இடையில் நிறுத்தி தனக்குத்தானே, ‘கொஞ்சம் மெதுவா படிப்பா; இது உண்மையிலே சாத்தியமா; இது ரொம்ப நல்லாயிருக்கே’ என்று சொல்லிக்கொண்டார். இதைப் படித்தபோது, இந்தச் சிற்றேடு திரித்துவ போதகத்திற்கு எதிரான பைபிளின் அத்தாட்சிகளை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியது என்பதாக குறிப்பிட்டு, அதைக் குறித்து இவ்விதம் விவரித்தார், “அது தேனை உண்ணுவதுபோல் இருந்தது.” அதற்கு அடுத்த நாள் மாலையில் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்கு முதல் தடவையாக சென்று அங்கு கேட்ட விஷயங்களால் மிகவும் சந்தோஷப்பட்டார்.
யெகோவாவின் சாட்சிகளோடு அவர் முதல் முறையாக பைபிளைப் படித்த அன்றே, புகைப்பிடிப்பதைப் பற்றிய பைபிளின் நோக்குநிலை என்ன என்பதைத் தெளிவாக கலந்தாலோசித்து எல்லா சிகரெட்டுகளையும் அழித்தார்; அதன்பின் அவற்றைத் தொடவேயில்லை. அவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டு வாரத்தில் பலமுறை நடந்தது. திரித்துவம் சிற்றேட்டைப் படித்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின் அவரும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மற்ற சாட்சிகளோடு ஈடுபட்டார். அதன்பின் மூன்று மாதங்களுக்குப் பிறகு யெகோவா கடவுளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததை முழுக்காட்டுதல் மூலம் காண்பித்தார். இப்பொழுது அவர் ஒரு முழு நேர ஊழியராக சேவை செய்கிறார்.