உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 4/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • காசை கறந்திடும் போதைப் பழக்கம்
  • பத்துக் கட்டளைகள் மறந்துபோனதோ
  • குஞ்சுகுளுவான்களுக்கு ஆரம்பத்திலேயே IQ தேர்வு
  • கண்ணுங்கருத்துமாக பிரதி எடுத்தவர்கள்
  • கொஞ்சம்கூட கேஃபினே இல்லையா?
  • உலகெங்கும் காடுகள் அழிப்பு
  • திருட்டுப்போன அரியப்பொருட்கள்
  • பாவமன்னிப்பு கேட்கிறது கத்தோலிக்க சர்ச்
  • நாசம் விளைவிக்கும் வண்டுகள்
  • வயதான தொழிலாளிகளால் கிடைக்கும் லாபம்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1996
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 4/22 பக். 28-29

உலகை கவனித்தல்

காசை கறந்திடும் போதைப் பழக்கம்

1995-ல் அமெரிக்கர்கள் சட்டவிரோத போதைப் பொருட்களை வாங்குவதற்காக 5,730 கோடி டாலரை செலவிட்டார்கள் என்று யு.எஸ். அரசு அறிக்கை ஒன்று காட்டுகிறது. மூன்றில் இரண்டு பங்கு கொக்கெய்ன் விற்பனை ஆகும். மீதி ஒரு பகுதி ஹெராயின், கஞ்சா, மற்ற போதைப் பொருட்களின் விற்பனையாகும். இந்தப் போதைப் பொருளுக்கு செலவிடப்பட்ட பணத்தைக் கொண்டு நான்கு ஆண்டு கால கல்லூரி படிப்பை 10 லட்சம் பேருக்கு அளிக்க முடியும் அல்லது 8,300 கோடி லிட்டர் பால் வாங்கி, சத்துணவு கிடைக்காத குழந்தைகளுக்கு கொடுக்க முடியும் என்று பாரி மெக்காஃப்ரீ என்பவர் கூறியதாக அசோஸியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது. இவர் வெள்ளை மாளிகையின் தேசிய போதை மருந்து கட்டுப்பாட்டு கொள்கையின் இயக்குநர் ஆவார். மேலும், கணக்கிடப்பட்ட இத்தொகையில் சமூகத்திற்கு இழைக்கப்படும் நஷ்டங்கள் சேர்க்கப்படவில்லை. அதாவது வன்முறை அதிகரிப்பு, ஒருவருடைய சொந்த அமைதி கெடுவதோடு, குடும்ப அமைதி பறிபோதல், ஹிப்படைட்டிஸ், எய்ட்ஸ் போன்ற வியாதிகள் பரவுதல் ஆகியவற்றால் ஏற்படும் நஷ்டங்கள் சேர்க்கப்படவில்லை.

பத்துக் கட்டளைகள் மறந்துபோனதோ

பைபிளில் உள்ள பத்துக் கட்டளைகளை உங்களில் எத்தனை பேரால் ஒப்பிக்க முடியும்? ரியோ டி ஜனரியோவில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில், பிரேஸில் நாட்டவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு பத்துக் கட்டளைகளில் ஒரு கட்டளையைக்கூட சொல்ல முடியவில்லை! ஒரு கட்டளை மாத்திரமாவது அறிந்திருந்தவர்களின் வரிசையில், “கொலை செய்யாதிருப்பாயாக” அல்லது “களவு செய்யாதிருப்பாயாக” என்று சொன்னவர்கள் 42 சதவீதம். கட்டளையை சொன்ன மற்றவர்கள், “பிறனுடைய மனைவியை . . . இச்சியாதிருப்பாயாக” (38 சதவீதம்), “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (22 சதவீதம்), “பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக” (14 சதவீதம்) என்று அறிவிக்கிறது வேஜா என்ற பத்திரிகை. “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக” என்ற மூன்றாவது கட்டளை வெறும் 13 சதவீதம் ஆட்களுக்கு மாத்திரம் நினைவிருந்தது.

குஞ்சுகுளுவான்களுக்கு ஆரம்பத்திலேயே IQ தேர்வு

குழந்தை பிறந்தது முதல் அதற்கு மூன்று வயது ஆகும் வரை அதன் மூளையில் ரொம்ப முக்கியமான வளர்ச்சி ஏற்படுகிறது என்று மனித அறிவாற்றலை ஆராயும் விஞ்ஞானிகள் இப்போது நம்புகிறார்கள். இந்தக் காலகட்டத்தில்தான், மூளையின் தூண்டுதலுக்கு ஏற்ப செயல்பட்டு, நிரந்தரமான நரம்பு இணைப்புகள் உண்டாகின்றன என்றும் நம்பப்படுகிறது. எனவே, சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற உதவுவதற்காக, அந்தப் மழலைப் பிஞ்சுகள் மழலையர் பள்ளியில் காலெடுத்து வைக்கும் முன்பே அறிவுத்திறன் (IQ) தேர்வுகளை வைக்கிறார்கள் என்று மார்டன் மெச்சுரிட்டி பத்திரிகை அறிவிக்கிறது. ஆனால் தங்கள் குழந்தையை ஒரு “சூப்பர் பேபி” ஆக ஆக்கிடும் முயற்சியில், “எப்பப்பார்த்தாலும் ஓயாது அக்குழந்தைக்கு ‘தூண்டுதலை’ அளிக்கவேண்டும் என்ற மன அழுத்தத்தில்” இருப்பதாக உணரும் பெற்றோர்களைப் பற்றி டாக்டர் பாரி ட்ஸூகெர்மேன் கவலை தெரிவித்தார். இவர் பாஸ்டன் யூனிவர்சிட்டி ஆஃப் மெடிசின்-ல், குழந்தை மருத்துவ பிரிவின் சேர்மேனாக இருக்கிறார். குழந்தை மனநல மருத்துவ பேராசிரியர் ரிச்சர்டு வைன்பர்க் என்பவர் இவ்வாறு கூறினார்: “ரொம்ப சின்ன வயசிலேயே போட்டியிடும்படி பிள்ளைகளை அவசரப்படுத்தினால், அது பெரும்பாலும் நமக்கே வினையாக முடியும். குழந்தைகள் அவர்கள் பிள்ளைப் பருவத்தை அனுபவித்து மகிழட்டும்; அவர்களை விட்டுவிடுங்கள்.”

கண்ணுங்கருத்துமாக பிரதி எடுத்தவர்கள்

பைபிளில் உள்ள கிரேக்க வேதாகம உரைகள் கண்ணுங்கருத்துமாக பிரதி எடுக்கப்பட்டு, ரொம்ப ஜாக்கிரதையாக வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார் டாக்டர் பார்பாரா ஆலாண்ட். இவர் ஜெர்மனியில், ம்யூனிச் என்ற இடத்திலுள்ள புதிய ஏற்பாட்டின் (New Testament) ஆராய்ச்சி கழகத்தின் தலைவராக இருக்கிறார். “பிழைகளோ இறையிலாளர்களின் தூண்டுதலால் செய்யப்பட்ட மாற்றங்களோ அரிதாகவே காணப்படுகின்றன” என்று வெஸ்ட்ஃபாலிஷா நாக்ரிக்டென் செய்தித்தாள் அறிவிக்கிறது. 5,000-க்கும் அதிகமான கைப்பிரதிகளை இக்கழகம் 1959 முதற்கொண்டு ஆராய்ந்து வந்துள்ளது. இந்தக் கைப்பிரதிகள் இடைக்காலத்தையும், பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத்தையும் சேர்ந்தவை. இந்தக் கைப்பிரதிகளில் சுமார் 90 சதவீதம் மைக்ரோ பிலிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பைபிளைக் கைப்பட பிரதி எடுத்தவர்கள் பிழையே ஏற்படக்கூடாது என்பதில் ஏன் இவ்வளவு கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள்? ஏனென்றால் அவர்கள், “தங்களை ‘பிரதி எடுப்பவர்கள்’ என்று நினைத்தனரே தவிர ஆசிரியர்களாக நினைக்கவில்லை” என்கிறது அந்தச் செய்தித்தாள்.

கொஞ்சம்கூட கேஃபினே இல்லையா?

கேஃபின் ஒத்துக்கொள்ளாதவர்கள், பெரும்பாலும் நாடுவது கேஃபின் இல்லாத பானங்களை. ஆனால், கேஃபின் இல்லாத காபியை கேட்டால், கொஞ்சம்கூட கேஃபினே இல்லாத காபி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி வாய்ப்பு விகிதம் சுமார் மூன்றுக்கு ஒன்று. காபியில் இரண்டு முதல் ஐந்து மில்லிகிராம் கேஃபின் இருந்தால் அதை கேஃபின் நீங்கிய காபி என்று வரையறுக்கிறது யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகம். ஆனால், நியூ யார்க் நகரில் 18 ஹோட்டல்களிலிருந்து சாம்பிளுக்காக 5 அவுன்ஸ் காப்பியை வாங்கி பார்த்ததில், கேஃபினின் அளவு ஹோட்டலுக்கு ஹோட்டல் வேறுபட்டது, 2.3 மில்லிகிராம் முதல் 114 மில்லிகிராம் வரை வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! நேஷனல் காபி அசோஸியேஷன் கருத்துப்படி, சாதாரணமாக காபி அருந்தும் ஒரேயளவான கோப்பையில் 60 முதல் 180 மில்லிகிராம் கேஃபின் இருக்கிறது.

உலகெங்கும் காடுகள் அழிப்பு

“பூமியை போர்வைப்போல் மூடிக்கொண்டிருக்கும் காடுகளில் மூன்றில் இரண்டு பங்கை ஏற்கெனவே அழித்தாயிற்று” என்று அறிக்கையிடுகிறது ஜர்னர்னல் டா டார்டெ. முன்பு பூமியில் எட்டு கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவாக இருந்த காடுகள், இன்றோ வெறும் மூன்று கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவாக உள்ளன. 88 சதவீதம் காடுகளை அழித்து, காட்டை அழிப்பதில் ஆசியா கண்டமே முதலிடத்தில் நிற்கிறது என்பதை உலக வனவிலங்கு வாழ்வு நிதியம் (World Wildlife Fund [WWF]) கண்டுபிடித்திருக்கிறது. அழிவின் அளவுகள் ஐரோப்பாவில் 62 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 45 சதவீதமும், லத்தீன் அமெரிக்காவில் 41 சதவீதமும், வட அமெரிக்காவில் 39 சதவீதமும் உள்ளன. உலகிலேயே மிகப் பெரிய வெப்பமண்டல மழைக்காடாக திகழும் அமேசோனாஸில் மட்டும் முதலிலிருந்த பரப்பளவில் 85-க்கும் அதிக சதவீதம் எஞ்சியுள்ளது. “மற்ற காடுகளுக்கு நேர்ந்த கதி தன் காடுகளுக்கும் நேராமல் தடுக்கும் வாய்ப்பு பிரேஸில் வசம் இருக்கிறது” என்று WWF-வை சேர்ந்த கார்ரோ பாட்மான்யன் என்பவர் சொன்னதாக ஆ எஸ்டாடொ ட எஸ். பவ்லூ மேற்கோள் காட்டுகிறது.

திருட்டுப்போன அரியப்பொருட்கள்

“1991-ல் நடந்த பாரசீக வளைகுடா போருக்குப்பின், பாதுகாப்பு இல்லாமல் அம்போவென்று கிடக்கும் மெசப்படோமியாவின் பொக்கிஷங்கள் மீது அகில உலக திருட்டு கும்பல் குறிவைக்கிறது” என்று கனடாவிலிருந்து வெளியான சமீப செய்தி ஒன்றை உவல்டு பிரஸ் ரிவ்யூ அறிக்கை செய்கிறது. 1996-ல், திருடர்கள் பட்டப்பகலிலேயே பாபிலோன் மியூஸியத்தில் புகுந்து, கியூனீஃபாம் என்ற ஆப்புவடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட உருளைகளையும், மண் பலகைகளையும் திருடிவிட்டார்கள். அந்த அரிய பழம்பெரும் பொருட்கள் சில, இரண்டாம் நேபுகாத்நேசார் அரசாண்ட காலத்தை சேர்ந்தவை. அகில உலக கலைப் பொருட்கள் சந்தையில் அவை 7,35,000 டாலருக்கு மேல் விலைபோகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திருடர்கள் குறிவைத்திருக்கும் இன்னொரு பண்டைய நகரம் அல்ஹாடர். மீதி இருக்கும் பொக்கிஷங்களையாவது பாதுகாக்க வேண்டுமென்று, நகரின் கதவுகள், பாதைகள் ஆகியவற்றை செங்கல்லையும், காரையையும் கொண்டு அடைத்துவிட்டது அந்த அரசாங்கம் என்று குறிப்பிட்டது அப்பத்திரிகை.

பாவமன்னிப்பு கேட்கிறது கத்தோலிக்க சர்ச்

பிரான்ஸில் விச்சி என்னுமிடத்தில் ஜெர்மன் கட்டுப்பாட்டிலிருந்த அரசாங்கம் உலகப்போர் நடந்த சமயத்தில் யூதர்களைக் கொடுமை செய்தது. அதைக் கண்டும் “மெத்தனமாக” நடந்துகொண்டது ரோமன் கத்தோலிக்க சர்ச். அதற்காக இப்போது கடவுளிடத்திலும், யூத மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்டு, ‘பாவமன்னிப்பு அறிக்கையை’ சர்ச் முறையாக வெளியிட்டுள்ளது. 1940 முதல் 1944 வரை, 75,000-க்கும் அதிகமான யூதர்கள் கைதுசெய்யப்பட்டு, பிரான்ஸிலிருந்து நாஸி மரண முகாம்களுக்கு நாடுகடத்தப்பட்டனர். தலைமைப் பேராயர் ஆலிவியர் பெர்ராங்ஜேர் அவர்கள் ஓர் அறிக்கையை வாசித்தார். அந்த அறிக்கையில் ‘ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை மதிக்க வேண்டும் என்று பைபிள் வலியுறுத்தும் கடமையை [சர்ச் தன் சுயநலத்திற்காக] தவறவிட்டதை’ ஒத்துக்கொண்டதாக லி மாண்டி தெரிவிக்கிறது. பிரான்ஸிலிருந்த ஒருசில பாதிரிமார்கள் யூதர்களுக்கு சாதகமாக பேசினாலும், பெரும்பான்மையினர் விச்சி அரசாங்கத்தையும், அதன் கொள்கைகளையும் ஆதரித்தனர். அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிடுகிறது: “யூதர்களைக் கொடுமைப்படுத்துவதிலும், அதிலும் குறிப்பாக செமிட்டிக் இனத்தவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பல்வேறு அரசு ஆணைகளிலும் விச்சி அரசாங்கத்திற்கு [அவர்கள்மீது] இருந்த கடும் வெறுப்பே வெளிப்பட்டதை சர்ச் மறுக்க முடியாது. என்ன கொடுமை நடந்தாலும் மௌனம் சாதிப்பதே [சர்சின்] வழக்கமாக இருந்தது; அநியாயமாக பலியாகுபவர்களுக்கு சாதகமாக அரிதாகவே வாய் திறந்தது . . . அப்படி மௌனமாய் இருந்தது தவறு என்று இன்று ஒத்துக்கொள்கிறோம். பிரான்ஸில் இருந்த சர்ச், மக்கள் மனசாட்சியை நல்வழிப்படுத்தும் தனது கடமையிலிருந்து தவறியதையும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.”

நாசம் விளைவிக்கும் வண்டுகள்

பனை வண்டு எனப்படும் சிகப்பு நிற சிறு வண்டு, அரேபிய தீபகற்பத்தில் காலடி வைத்து, 20 வருடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகிறது, அதற்குள் இது ஆயிரக்கணக்கான பேரீச்ச மரங்களை துளையிட்டு, ஏராளமான நாசத்தை விளைவித்துள்ளது. “5,000 வருடங்களாக அரேபியாவின் ‘உயிர் கனி’ ஆக இருந்துவரும் பேரீச்சம்பழங்களும் அழிந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது” என்று அறிக்கை செய்கிறது த எக்கானமிஸ்ட் என்ற பத்திரிகை. வெறும் இரண்டே அங்குலம் அளவான இந்த வண்டு, பேரீச்ச மரத்தின் தண்டுப்பகுதியில் வரிசையாக துளைகளைப் போட்டுக்கொண்டே மெல்ல மெல்ல மரத்தையே சாகடித்துவிடுகின்றது. பூச்சி மருந்துகளால்கூட இதை அவ்வளவாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது நாடெங்கும் மடமடவென்று தொடர்ந்து பெருகி வருகிறது.

வயதான தொழிலாளிகளால் கிடைக்கும் லாபம்

47 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளிகளை அவர்களோடு வேலைபார்க்கும் இளம் வயது தொழிலாளிகளோடு ஒப்பிடுகையில், வயதான தொழிலாளிகளே காலை நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, அதிக திறமையோடும் வேலைசெய்கிறார்கள் என்று அறிவிக்கிறது தி டைம்ஸ் ஆஃப் லண்டன். ஆனால் இப்படி இருப்பது மதியவேளை வந்ததும் அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறது. எனவே முதலாளிகள், மதிய ஷிப்டிற்கும், மாலை ஷிப்டிற்கும் இளம் தொழிலாளிகளைப் போட்டுவிட்டு, வயதான தொழிலாளிகளை காலை ஷிப்டிற்கு மாற்றலாம் என்ற ஆலோசனையை தருகிறார் டாம் ரைலி என்பவர். இவர் லிவர்பூல் ஜான் மோர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர். சூப்பர் மார்கெட்களிலும், சுய-சேவை ஸ்டோர்களிலும் பெரும்பாலும் வயதானவர்களையே வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள் என்று வயதாவதைப் பற்றி பிரிட்டிஷ் மெடிக்கல் அசோஸியேஷன் நடத்திய மாநாட்டில் பேசியவர்கள் தெரிவித்தார்கள். ஏன்? ஏனென்றால் வாடிக்கையாளர்களிடம் இவர்கள் அக்கறை காட்டுகிறார்கள், பொருட்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று எழுதப்படாமல் இருந்தால் இவர்கள் அவற்றை உபயோகிக்க சொல்லித்தருகிறார்கள். “கம்பெனி வைத்திருந்த தார்மீக தராதரங்களை, கம்பெனியே கைவிட்டிருந்தாலும்” இவர்கள் அவற்றை கைவிடுவதில்லை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்