ப்யூமா—எதிர்பாராமல் தோன்றுவதும் மறைவதும்
பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்
தென் அமெரிக்காவின் மழைக்காடுகளுக்கு மேல் தெரியும் வானத்தின் வண்ணக்கோலம், வெப்பமண்டல இரவு எங்கும் பரவி, இருள்மயமாவதற்கு சற்று முன்பு, வர்ணிக்க முடியாத வண்ணத்தில் மாறிமாறி காட்சியளித்தது. அப்போது, திடுதிப்பென்றும், சலனமின்றியும் வந்து நின்றது, அந்தப் ப்யூமா! காட்டு மரங்களும் கொப்புகளும் அகற்றப்பட்ட நிலப்பகுதிக்குள் பம்மி பம்மி அடியெடுத்து வைத்திருந்த அது, அப்படியே நின்றுவிட்டது.
அந்தப் பெரிய பூனை ஒரு கணம் சலனமின்றி நின்றது; அதன் வால் மட்டும், மெது வேகத்தில் அசையும் காற்றுக்காப்பு துடைப்பானைப் போல இங்குமங்குமாய் மெதுவாக ஆடிக்கொண்டு இருந்தது. பின்பு, தன்னை நோட்டம் விடுகிறார்கள் என்பது தெரிந்ததும், அந்தப் ப்யூமா அந்த நிலப்பகுதியில், இங்கிருந்து அங்குத் தாவி ஒரே ஓட்டமாய் ஓடிச்சென்று காட்டுக்குள் மறைந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு நடந்த அந்தப் பிற்பகலில், ஓட்டப்பந்தய விளையாட்டு ஷூக்கள், அதிவிரைவு ஆட்டோ வாகனங்கள், போர் விமானங்கள் ஆகியவையெல்லாம் ஏன் அதன் பெயரைத் தாங்கி இருந்தன என்பதை என்னால் காணமுடிந்தது. ப்யூமா அல்லது க்யூகர், அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பூனை; இதன் உடலமைப்பு வேகமாய் ஓடுவதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது தெளிவாய் இருக்கிறது. a
தசை மூட்டை
ப்யூமாவின் புள்ளியற்ற, பழுப்புநிறத்தின் காரணமாக, அது உங்களுக்கு ஒரு பெண்சிங்கத்தைப் போல காட்சியளிக்கலாம். என்றாலும், அதன் தலையின் முன்பகுதி, ஆப்பிரிக்க பெண்சிங்கத்தின் தலையைப் போல செவ்வக வடிவில் காணப்படுவதில்லை. அதற்கு மாறாக, ப்யூமாவின் தலை வட்டவடிவிலும், சிறுத்தும் காணப்படுகிறது; அதன் உச்சியில் இருக்கும் காதுகளும் அதைப் போலவே வட்டவடிவிலும் சிறுத்தும் காணப்படுகின்றன. பக்கவாட்டில் பார்த்தால், அதன் தலை, துப்பாக்கி குண்டைப்போல, காற்றைக் கிழித்துச் செல்லும் அமைப்புடனும், நீண்டும் காணப்படுகிறது. அது பெரிய பச்சை நிற விழிகளால், வைத்த கண் வாங்காமல் உங்களையே பார்க்கிறது. அதன் வாயைச் சுற்றிலும் உள்ள வெண்ணிற உரோமப் பட்டை, ஒரு பாத்திரத்தில் இருந்த பாலுக்குள் மூக்கை முக்கிவிட்ட ப்யூமா, துடைக்க மறந்துவிட்டதோ என நினைக்கவைக்கிறது. அதன் உடல், வளையும் தன்மை உடையதாயும், ஒல்லியாயும் இருக்கும்; அதன் வால், பருத்தும் நுனிப்பகுதியில் மட்டும் கறுத்தும் இருக்கும். அதன் நீளமோ, வாலைச் சேர்க்காமல், ஒன்றரை மீட்டர் அல்லது அதற்குச் சற்று அதிகமாக இருக்கிறது.
தோளைவிட பிட்டம் சற்று உயர்ந்திருப்பதற்குக் காரணம், சற்று உயரமானதும் உறுதியானதுமான அதன் பின்னங்கால்களே. வலிமைமிக்க அந்தக் கால்களே, தரையிலிருந்து ஒரு ராக்கெட்டைப் போல மேலெழும்பும், 60 கிலோ எடையுள்ள இந்தத் தசை மூட்டைக்கு வேண்டிய உந்தும் சக்தியைக் கொடுக்கின்றன. ப்யூமாக்கள், ஒரே தாண்டாக ஐந்து மீட்டர் உயரத்திற்கு செங்குத்தாக தாவுவதாக காணப்பட்டிருக்கின்றன. அது, கோல் ஒன்றும் இல்லாமலேயே, கோலூன்றித் தாண்டுதல் செய்துகாட்டுவது போன்று இருக்கிறது!
அதைப்போலவே, கீழ்நோக்கி குதிக்கும்போதும், ப்யூமா பிரமிக்க வைக்கிறது. 18 மீட்டர் உயரத்திலிருந்து தரையைநோக்கி பறப்பது போன்று குதிப்பதாக அறியப்பட்டிருக்கிறது. இது, ஒலிம்பிக் விளையாட்டில் பிளாட்ஃபார்மிலிருந்து டைவ் அடிப்பவர்களது மேடைகள் அமைக்கப்பட்டு இருப்பதைப்போல் கிட்டத்தட்ட இரு மடங்கு உயரமாகும்; ஆனால் அடிபடாமல் காக்கும்படி, கீழே அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் இராத ஒரே குறைதான். அப்படியிருந்தாலும், இந்தப் பூனை தரையில் குதித்ததோ இல்லையோ, ஏதோ ஸ்பிரிங் கட்டிலின் மேல் குதித்ததைப் போல், உடனே ஒரே தவ்வாக குதித்து எழுகிறது.
“இது வலிமைமிக்க, பயங்கரமான ஒரு விலங்கு” என வனவிலங்கு உயிரியலாளர் கென்னத் லோகன் கூறுகிறார். “இந்தப் பூனைகள் எப்படி உயிர்வாழ்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், அடேயப்பா, இவற்றுக்கு அளவுகடந்த மரியாதை காட்ட ஆரம்பித்துவிடுவீர்கள்.” குறிப்பிடத்தக்க வகையில், அவை எங்கும் காணப்படுவது போலவும் அதே சமயத்தில் எங்குமே காணமுடியாதது போலவும் இருக்கும்.
எங்கும் இருப்பவை, என்றாலும் பதுங்கியே இருப்பவை
மேற்கு அரைக்கோளத்தில் மக்கள் முதன்முதலாக குடியேறி காலனியை உருவாக்கியபோது, ப்யூமாவின் நடமாட்ட எல்லை, அட்லாண்டிக்கிலிருந்து அக் கண்டம் முழுவதிலுமாக, பசிபிக் வரை விரிந்து பரந்து இருந்தது. அது, மலைகள் என்றும், சதுப்புநிலங்கள் என்றும், புல்வெளிகள் என்றும், காடுகள் என்றும் பாராமல், எல்லா இடங்களிலும் வாழ்ந்துவந்தது. இக்காலத்தில், வேட்டையாடுபவர்களும் விவசாயிகளும் வட அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்து ப்யூமாவை ஒழித்துக்கட்டியபோதிலும், அது அமெரிக்க கண்டம் முழுவதிலும் தென்படும் பூனையாக, இன்னும் கனடா முதல் தென் அமெரிக்க முனை வரை அலைந்து திரிகிறது. இன்று ஒரு விலங்கின் வெற்றியை, அது பூகோள ரீதியிலும், எங்கும் பரவலாய் காணப்படுவதன் அடிப்படையிலும் கணித்தீர்கள் என்றால், ப்யூமா அமெரிக்காவுக்குச் சொந்தமான பாலூட்டிகளில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாக இருக்க வேண்டும். அதன் வெற்றியின் இரகசியம் என்ன?
ப்யூமா உயிர்வாழ்வதற்கு ஏற்றவாறு நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்லைத் தின்றாலும் செரித்துவிடும் என்பது போன்ற வயிறு அதற்கு இருக்கிறது; பல்வேறு முறைகளில் வேட்டையாடுகிறது. தான் வசிக்கும் பகுதியிலேயே கிடைக்கும் எந்த உணவையும் உண்டு வாழ்வதற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்கிறது. “உருவில் தன்னைவிட ஐந்து மடங்கு பெரிய விலங்கையும் அதால் கொன்று இழுத்துவர முடியும்; அதே சமயம், சுற்றிமுற்றி எதுவும் கிடைக்காவிட்டால், வெட்டுக்கிளிகளைக்கூட தின்கிறது” என பிரேஸிலில் கொல்லப்பட்ட பல ப்யூமாக்களின் வயிற்றை ஆய்வு செய்திருக்கும் கால்நடை நிபுணர் ஒருவர் கூறுகிறார். “உணவைப் பொருத்தவரை, மற்ற பூனை இனங்களைவிட ப்யூமா வெவ்வேறு வகை உணவை உட்கொள்கிறது.”
ப்யூமா வெவ்வேறு வகை உணவை உட்கொள்கிறது என்றால், அதற்கு வெவ்வேறு முறையில் வேட்டையாட தெரிந்திருக்கவும் வேண்டும். ஒரு பறவையைப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; அதற்குத் தேவைப்படும் திறமை, ஒரு மானின்மீது பாய்வதற்குத் தேவைப்படும் திறமையிலிருந்து வேறுபடுகிறது. ப்யூமா அதை எவ்வாறு செய்கிறது? பிரேஸிலைச் சேர்ந்த அட்லாண்டிக் காட்டில், டினாமஸ் பறவை கத்துவதைப் போலவே கூச்சலிட்டு, அதைக் கவர்கிறது. “அசல் அந்தப் பறவையேதான்” என ஓர் ஆய்வாளர் கூறுகிறார். “டினாமஸ் சில தடவை மட்டும் கத்துகிறது; ஆனால் ப்யூமாவோ 10 அல்லது 20 தடவை தொடர்ந்து சீட்டி அடித்துக்கொண்டே இருக்கிறது.” இருந்தபோதிலும், அதற்குப் பலன் கிடைக்கிறது. கூச்சல்போடும் ஆண் பறவையொன்று தன் எல்லையை முற்றுகை செய்துவிட்டது என டினாமஸ் நினைத்துக்கொள்கிறது; சற்று கிட்டப்போய், போட்டிப் பறவையை ஒற்றைக்கு ஒற்றை பார்த்துவிட தீர்மானிக்கிறது—அந்தோ பரிதாபம்; அதன் உயிருக்கே வினை வந்துவிடுகிறது.
வட, மத்திப, தென் அமெரிக்க கண்டம் முழுவதிலும் நீங்கள் ப்யூமாவைத் தேடினாலும், எங்கும் நிறைந்தும் அதே சமயம் மறைந்தும் இருக்கும் காற்றைப்போல, பெரும்பாலும் இது எவர் பார்வையிலும் படாமலேயே இருக்கிறது. ப்யூமாவைப் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பெயரடைகளாவன: “மர்மமானவை, நழுவும் தன்மையுள்ளவை, வினாவுள்ளவை.” வேட்டைக்காரர் ஒருவர், சுமார் 70 ப்யூமாக்களைக் கொன்றபிறகு, “நாய்கள் ப்யூமாக்களை விரட்டிச் சென்று, அவை மரத்தின் மேல் ஏறுவதற்கு முன்பு ஒன்றைக்கூட தான் பார்த்ததேயில்லை” என ஒத்துக்கொண்டார். விரக்தியுற்ற ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பூனையை, “கிறுகிறுப்பூட்டுமளவு நழுவிச்செல்லும் தன்மையுள்ளது” என அழைப்பதில் ஆச்சரியமில்லை!
பூனை ஒன்றே, பெயர்களோ பற்பல
அமெரிக்க கண்டம் முழுவதிலும் காணப்படும் இப்பூனையைக் கண்டுபிடிப்பது மட்டும் கடினமல்ல, வரையறுப்பதும் கடினம்தான். த கின்னஸ் புக் ஆஃப் அனிமல் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகம், ப்யூமாவைப் பற்றி சொல்வதாவது: “உலகின் பாலூட்டிகள் எவற்றைக் காட்டிலும் பற்பல பெயருடைய பாலூட்டி இதுதான்.” ஆங்கிலத்தில் 40-க்கும் அதிகமான பெயர்களோடுகூட, “தென் அமெரிக்க உள்ளூர் மொழிகளில் 18 பெயர்களும், வட அமெரிக்க உள்ளூர் மொழிகளில் 25 பெயர்களும் இதற்கு உள்ளன.”
விலங்கியலாளர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ப்யூமா என்ற பெயர், பெருவின் மொழியான குவச்வாவிலிருந்து வருகிறது. மலை சிங்கம், ஐரோப்பிய காட்டுப்பூனை, சிறுத்தை, பெயின்ட்டர், செம்புலி, மான் புலி ஆகியவை இந்தப் பூனைக்குக் கொடுக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயர்கள்.
சாவோ பாலோ மிருகக் காட்சிசாலையின் காப்பாட்சியரும் ப்யூமாக்களின் சரித்திரத்தை நன்கு அறிந்தவருமான, டாக்டர் ஃபைஸால் ஸீமோன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “பெரும்பாலும், நடத்தை மற்றும் உடல் ரீதியிலான திறமைகளில், ப்யூமாவுக்கும் மற்ற பெரிய பூனைகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.” இது உண்மையிலேயே வித்தியாசப்பட்ட பூனை இனம்; இது உருவத்திலும் நிறத்திலும் வேறுபடுகிறது. அமெரிக்க கண்டம் முழுவதிலும் கிட்டத்தட்ட 30 கிளை இனங்கள் அறியப்பட்டுள்ளன; அவற்றுள் 6 கிளை இனங்கள் பிரேஸிலில் உள்ளன.
இவற்றை ஒழித்துக்கட்ட வேண்டுமா?
பிரேஸில் நாட்டிலும் பிற நாடுகளிலும், மாடு வளர்க்கும் பல பண்ணையாளர்களுக்கு, ப்யூமா தீங்கு செய்யும் விலங்கைப் போன்று தோன்றுகிறது; ஆகவே இவற்றைக் கண்டதும் சுடவேண்டும் என தோன்றலாம்; ஆனால், மாடுகளை விடாப்பிடியாய் தொடர்ந்து கொல்வதற்கு ப்யூமா பேர்போன விலங்கு என்பது உண்மைதானா? “காட்டு விலங்குகள் கிடைத்தால், மாடுகளை ப்யூமா அரிதாகவே கொல்கிறது” என்று விளக்குகிறார் டாக்டர் ஸைமன். “ஓரிரு தடவை இவ்வாறு நிகழ்வதன் காரணமாக, இந்த விலங்கை படிப்படியாக அழிப்பது முறையாகாது. உண்மையில், ப்யூமாக்களைச் சுடுவதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக்கொள்கிறார்கள்.” எப்படி?
உதாரணமாக, எண்ணற்ற மாடுகள் தாராளமாய் சுற்றித்திரியும் பகுதியும், தென் கொரியாவைக் காட்டிலும் பரந்த சதுப்புநிலமுமான, பிரேஸிலில் உள்ள பான்ட்டானாலில், விவசாயிகள் ப்யூமாக்களைக் கொல்கின்றனர். இதன் விளைவாக, ப்யூமா விரும்பி உண்ணும் ஆர்மிடில்லோக்களின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்து வருகிறது என்று விவரிக்கிறார், டாக்டர் ஸைமன். ஆர்மிடில்லோக்கள் ஆயுதம் மூடிய பாலூட்டிகள்; இவை உருவில் முயல்களைப் போன்று இருக்கின்றன; வளைதோண்டும் இயல்புடையன. சுற்றிமுற்றி ப்யூமாக்கள் இராதபடியால், ஆர்மிடில்லோக்கள், பான்ட்டானாலின் மேய்ச்சல் நிலங்களைக் கொலைக்களங்களாக மாற்றிவருகின்றன. எவ்வாறு?
மாடுகள் எதிர்பாராமல் வளைகளில் காலை விட்டு உடைத்துக்கொள்வதால் மடிகின்றன. “அந்த விவசாயிகள் இப்போது முன்பைவிட அதிக மாடுகளை இழக்கின்றனர்; ஏனெனில் அவர்கள் ப்யூமாக்களைக் கொன்றுவிட்டனர்” என்கிறார் டாக்டர் ஸைமன். “மனிதன் இயற்கையில் தன் மூக்கை நுழைக்கும்போது என்ன நடக்கிறது என்பதற்கான வெறும் ஓர் உதாரணமே இது.”
அமெரிக்க கண்டங்களில் ப்யூமாவைப் பாதுகாக்க வேண்டும் என அதிகமானோர் விரும்புகின்றனர். இவ்வாறு, வட அமெரிக்காவின் சில பகுதிகளைச் சேர்ந்த அதிகார வட்டாரங்கள், ப்யூமாவின்மீது அக்கறை காட்டும் சட்டங்களை இயற்றியிருக்கின்றன. இச்சட்டங்களுக்கு இசைய, வேட்டையாடுவது கட்டுப்படுத்தப்பட்டு, இந்தப் பூனையின் இயற்கை வாழிடம் காக்கப்படுகிறது.
இதன் விளைவாக, ஐக்கிய மாகாணங்களின் மேற்குப்பகுதியில், ப்யூமா மறுபடியும் தோன்றுகிறது, முன்னாள் வாழிடங்களில் அதிக எண்ணிக்கையாகி பெருகி வருகிறது. இது எல்லாருக்கும் விருப்பமாய் இராது என்பது உண்மையாய் இருந்தாலும், பலருக்கு இதில் விருப்பமுண்டு. ப்யூமா, “மிகக் குறைந்த காலப்பகுதிக்குள், தீங்கு செய்யும் விலங்கிலிருந்து அபிமான விலங்காக இனிதாய் மாறியிருக்கிறது” என ஸ்மித்சோனியன் பத்திரிகை குறிப்பிடுகிறது.
இயற்கைப் பிரியர்களுக்கும் வேட்டையாடிகளுக்கும் ப்யூமா ஓர் அபிமான விலங்காகும். இயற்கைப் பிரியர்களுக்கு காட்டின் கம்பீர சின்னமாகவும், வேட்டையாடிகளுக்கோ வெற்றிச் சின்னமாகவும் இந்தப் பூனை திகழ்கிறது. கேள்வி என்னவென்றால், எவ்வளவு காலத்திற்கு ப்யூமா இரண்டு வித சின்னங்களாகவும் இருக்க முடியும்?
[அடிக்குறிப்புகள்]
a அமெரிக்க கண்டங்களில் உள்ள மிகப்பெரிய பூனை ஜாகுவார்; விழித்தெழு!, பிப்ரவரி 8, 1992, பக்கங்கள் 26-28-ஐக் காண்க.
[பக்கம் 26-ன் பெட்டி]
“நீயும் வாழ் மற்றவரையும் வாழவிடு”?
ஐக்கிய மாகாணங்களின் மேற்குப்பகுதியில், ப்யூமா, அல்லது க்யூகர் பாதுகாப்பு சட்டம், ப்யூமா எண்ணிக்கையை அதிகரித்திருப்பது மட்டுமின்றி, ப்யூமாக்களுக்கும் மனிதருக்கும் இடையே மோதல்களுக்கும் வழிநடத்தியிருக்கிறது. காரணமோ வெகு தெளிவானது: காட்டுப்பகுதியின்—ப்யூமாக்கள் தேசத்தின்—ஓரத்தில் அதிகமதிகமானோர் குடியேறுகின்றனர்; இது பொதுமக்கள் பாதுகாப்பு பிரச்சினைக்குக் காரணமாகிறது. அப்படியிருந்தாலும், ப்யூமா தாக்குதல்கள் அரிதாகவே நிகழ்கின்றன.
ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் 1890 முதல் 65 ப்யூமா தாக்குதல்கள் நடந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஆவண வடிவில் எழுதிவைத்துள்ளனர்; இது, ஐந்து ஆண்டுகளுக்கு 3 தாக்குதல்கள் என்பதற்குச் சமானமாகும். அந்த 65-ல், ஒருவேளை 10 தாக்குதல்கள்தான் மரணத்துக்கு ஏதுவானவையாய் இருந்தன. இத்துடன் ஒப்பிடுகையில், ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஓர் ஆண்டுக்கு சுமார் 40 பேர் தேனீ கொட்டுவதால் இறக்கின்றனர்.
“கிடைத்திருக்கும் அத்தாட்சிகளின் அடிப்படையில் பார்த்தால், ப்யூமாக்கள் மக்களைத் தாக்குவது அரிதாக இருக்கிறது என்பதே உண்மை; இது, க்யூகர் குறைந்தபட்சம் மனிதருடன் வைத்திருக்கும் உறவிலாவது, ‘நீயும் வாழ் மற்றவரையும் வாழவிடு’ என்னும் கொள்கையில் அதிகமான விருப்பம் தனக்கிருப்பதாகக் காட்டுகிறது” என்று குறிப்பிடுகிறார், வனவிலங்கு உயிரியலாளர் கெவன் ஹேன்ஸன்.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
படங்கள்: Courtesy São Paulo Zoo