பிரசங்கிக்கும் உரிமைக்காக நாங்கள் பட்ட பாடு
கிரேஸ் மார்ஷ் என்பவரால் சொல்லப்பட்டது
சில ஆண்டுகளுக்கு முன், பேராசிரியை நியூட்டன், 50 வருடங்களுக்கு முன் நடந்த காரியங்களைப் பற்றி என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார்; அப்போது அவர் அலபாமா, மான்ட்கோமரியில் இருந்த ஹன்டிங்டன் கல்லூரியில் பணியாற்றி வந்தார். ஐக்கிய மாகாணங்களின் உச்சநீதி மன்றம், யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக நான் செய்த ஊழியம் தொடர்பான ஒரு வழக்கிற்கு 1946-ல் தீர்ப்பு வழங்கியது. என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதில் பேராசிரியை நியூட்டன் காண்பித்த ஆர்வத்தால், என் மனதில் அநேக நினைவுகள் மலர்ந்தன. சின்ன வயதிலிருந்தே என் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறேன்.
என் குடும்பத்தார் நான்கு தலைமுறையாக பைபிள் மாணாக்கர்களாய்—இன்றைய வழக்கில், யெகோவாவின் சாட்சிகளாய்—இருந்தனர்; அந்தக் கடைசி தலைமுறையைச் சேர்ந்த நான் அ.ஐ.மா-வின் அலபாமாவிலுள்ள ரான்டால்ஃபில் 1906-ல் பிறந்தேன். என் கொள்ளுத்தாத்தா லூயி வால்ட்ரோபும் என் தாத்தா சிம் வால்ட்ரோபும் 1800-களின் பிற்பகுதியில் பைபிள் மாணாக்கர்களாய் முழுக்காட்டப்பட்டனர்.
சிம் வால்ட்ரோபுக்கு பிறந்த ஜோசப் தான் என் அப்பா. எரிநரகத்தைப் பற்றி சர்ச் கற்பித்தவை பொய்யென நிரூபித்த ஒரு சிறு புத்தகத்தை, பெல் என்ற பெண்ணிற்கு ஜோசப் கொடுத்தார்; அது அவள்மீது பாதிப்பை ஏற்படுத்தியது. அதைப் படித்த பிறகு, அந்தளவுக்கு பிடித்துப்போய்விட்டதால் பெல் அந்தப் புத்தகத்தை தன் அப்பாவிற்கும் கொடுத்தாள். அவருக்கும் ரொம்ப பிடித்துப்போய்விட்டது. அதன்பின் ஜோசப்பும் பெல்லும் மணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அதில் நான் இரண்டாவது.
ராத்திரி ஆனால் போதும், அப்பா எங்கள் எல்லாரையும் ஹாலில் சுற்றிவர உட்கார வைத்து பைபிளையும் காவற்கோபுர பத்திரிகையையும் சப்தமாக படிப்பார். படித்து முடித்தவுடன் உருக்கமாய் ஜெபம் செய்வார்; அப்போது நாங்கள் எல்லாரும் முழங்கால் படியிட்டிருப்போம். வாராவாரம், பைபிள் மாணாக்கர்களது கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக சிம் தாத்தா வீட்டிற்கு குதிரை வண்டியில் நிறைய கிலோமீட்டர் பயணம் செய்வோம்.
ஸ்கூலில் மற்ற பிள்ளைகள் எங்களை ரஸலைட்ஸ் என்று சொல்லி அடிக்கடி கேலி செய்வார்கள். மனதை புண்படுத்த வேண்டுமென்றே அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தாலும் அவர்கள் ஆசை பலிக்கவில்லை. ஏனென்றால் சார்ல்ஸ் டேஸ் ரஸல்மீது எனக்கு மதிப்பு ஜாஸ்தி. அவர் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியின் முதலாவது பிரெஸிடன்ட். அலபாமா, பர்மிங்ஹாமில் 1914-ல் நடந்த மாநாட்டில் அவரை நேருக்குநேர் பார்த்தபோது எனக்கு தலைகால் புரியவில்லை! அவர் மேடையில் நின்றுகொண்டு ‘சிருஷ்டிப்பின் புகைப்பட-நாடகம்’ என்ற படம் போட்டு விளக்கியது இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.
1920-ல் நாங்கள் குடும்பமாக ராபர்ட்ஸ்டேலுக்கு குடிமாறிச் சென்றோம்; அது, அலபாமாவிலுள்ள மொபைலுக்கு கிழக்கே அமைந்திருந்த ஒரு சின்ன பட்டணம். ஐந்து வருடங்கள் கழித்து ஹர்பர்ட் மார்ஷ் என்பவரை கல்யாணம் செய்துகொண்டேன். அவரும் நானும் சிகாகோ, இல்லினாய்ஸுக்கு குடியேறினோம். சிறிது காலத்திற்குள் அங்கு எங்கள் மகன் ஜோசப் ஹரால்ட் பிறந்தான். வருத்தகரமாக, என் மதத்தில் எனக்கு ஈடுபாடு தணிந்துவிட்டது, ஆனாலும் என் இதயத்தில் அதற்கென தனி இடம் இருந்தது.
பைபிள் சத்தியத்திற்காக நான் எடுத்த நடவடிக்கை
1930-ம் ஆண்டில் ஒருநாள், நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு பைபிள் மாணாக்கரை கோபமாக படிக்கட்டில் தள்ளிவிட்டதைப் பார்த்தபோதுதான் சத்தியத்தின் முக்கியத்துவம் பளிச்சென்று எனக்கு உதித்தது. செம கோபத்தில் அவரிடம்போய், அப்படிச் செய்தது கொஞ்சம்கூட நல்லாயில்லை என்று சொன்னேன். அவர் சொன்னார், இனி மறுபடியும் இந்த ஆளை அப்பார்ட்மெண்டிற்குள் வரவழைத்தால் உன் புருஷனும்சரி நீயும்சரி இங்கே தங்கமுடியாது என்று. சொல்லவா வேணும், உடனடியாக நான் அந்த பைபிள் மாணாக்கரை டீ சாப்பிட வீட்டிற்கு அழைத்தேன்.
அந்த ஞாயிற்றுக்கிழமை என் கணவரும் நானும் பைபிள் மாணாக்கர்களின் கூட்டத்திற்குச் சென்றோம். ரஸலுக்கு பின் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடன்டாய் பதவி ஏற்றிருந்த ஜோசப் எஃப். ரதர்ஃபர்டை சந்தித்ததில் எங்களுக்கு கொள்ளை மகிழ்ச்சி. ரதர்ஃபர்டு அந்தச் சமயத்தில் சிகாகோ வந்திருந்தார். இந்தச் சம்பவங்கள், மறுபடியும் கிறிஸ்தவ ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபட எனக்கு தூண்டுகோலாய் அமைந்தன. அதன்பின் சீக்கிரத்திலேயே அலபாமாவிலுள்ள ராபர்ட்ஸேலுக்கே திரும்பவும் குடிசென்றோம்.
1937-ல் கொலம்பஸ், ஒஹாயோவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், பயனியர் சேவை செய்ய முடிவெடுத்தேன்; யெகோவாவின் சாட்சிகளது முழுநேர ஊழியர்கள் அப்படித்தான் அழைக்கப்படுகிறார்கள். காலப்போக்கில் என் கணவர் ஹர்பர்ட் முழுக்காட்டப்பட்டார்; அதன்பின் கொஞ்ச காலத்திற்குள் ராபர்ட்டேல் சபையில் நடத்தும் கண்காணியாய் பணியாற்ற ஆரம்பித்தார். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பெரும்பாலும் என்னோடு வந்தது என் மகன் ஹரால்ட்தான்.
1941-ல், மிஸ்ஸிஸிபியிலுள்ள ப்ருக்ஹேவனில் விசேஷ பயனியர் சேவை செய்வதற்கு எனக்கு அழைப்பு வந்தது. நியூ ஆர்லியன்ஸைச் சேர்ந்த வையலட் பாபன் என்ற கிறிஸ்தவ சகோதரிதான் என்னுடைய பார்ட்னர். நாங்கள் சவாலை ஏற்றுக்கொண்டோம்; ப்ருக்ஹேவனில் சத்தியத்திற்கு அடிக்கல் நாட்ட, வீடும் வாகனமும் சேர்ந்த டூ இன் ஒன் ட்ரெய்லரை எடுத்துச் சென்றோம். பிள்ளைகளையும் எங்களோடு அழைத்துச் சென்றோம். எங்கள் கணவர்கள் பின்னர் எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளவிருந்தனர்.
முதலில் ஊழியம் நன்கு பலன்தந்தது. வையலட்டின் மகளும் ஹரால்டும் ஸ்கூலில் நல்ல பெயர் எடுத்தார்கள். ஆனால், 1941-ம் ஆண்டு டிசம்பரில் பர்ல் ஹார்பர்மீது ஜப்பானியர்கள் குண்டு போட்டு, பின் ஐக்கிய மாகாணங்கள் போரை அறிவித்த பிறகு எங்கள் ஊழியத்திற்கு கிடைத்த பிரதிபலிப்பே வேறு. அளவுக்குமீறிய நாட்டுப்பற்றும் சதித்திட்டத்தைக் குறித்த பயமும் நிலவியது. அரசியலில் நாங்கள் நடுநிலைமை வகித்ததால் மக்கள் எங்களை சந்தேகப்பட்டார்கள்; ஜெர்மானிய வேவுக்காரர்கள் என்ற பழியையும் எங்கள்மேல் போட்டார்கள்.
ஹரால்ட் கொடி வணக்கம் செய்யாததால் அவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஹரால்ட் ரொம்ப புத்திசாலி என்றும் தங்கமான பையன் என்றும் அவனது டீச்சர் என்னிடம் சொன்னார். ஆனால் அவன் கொடிக்கு சல்யூட் அடிக்காததால் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரியாய் இருப்பான் என்று பிரின்ஸிபல் நினைத்தார். பள்ளிகளின் நிர்வாகத் தலைவருக்கு பிரின்ஸிபல்மேல் அவ்வளவு கோபம். இந்த விஷயத்தில் பள்ளிக் குழுமம் எடுத்த முடிவும் அவருக்கு பிடிக்கவில்லை. ஆகவே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியார் பள்ளியில் ஹரால்டை தானே படிக்கவைப்பதாக சொன்னார்.
ரௌடிகளிடமிருந்து எங்களுக்கு தினந்தினம் மிரட்டல் வரும். போலீஸ், ஒருசமயம் ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து எங்களை வெளியே இழுத்துத் தள்ளி, எங்கள் போனோகிராஃப்களை மரத்தின்மீது வீசியெறிந்து, பைபிள் பேச்சுக்கள் பதிவுசெய்யப்பட்ட ரெக்கார்டுகளை உடைத்தெறிந்து, பைபிள்களையும் மற்ற புத்தகங்களையும் சுக்குநூறாக கிழித்தெறிந்து, கடைசியில், கைப்பற்றிய எல்லாவற்றையும் தீ வைத்து கொளுத்தினர். பொழுது சாய்வதற்குள் நாங்களாகவே அங்கிருந்து சென்றுவிட வேண்டும், இல்லையென்றால் ஒரு ரௌடிக் கூட்டத்தை வைத்தே விரட்டியடிக்கப்படுவோம் என்று சொன்னார்கள். நாங்கள் உடனடியாக பாதுகாப்பைக் கேட்டு பட்டணத்து அதிகாரிகளுக்கு கடிதங்கள் எழுதி, நேரிலேயே சென்று கொடுத்தோம். ஆனால் அவர்களோ உதட்டைப் பிதுக்கினார்கள். மிஸ்ஸிஸிபி, ஜாக்ஸனிலுள்ள புலனாய்வுத் துறையின் தலைமை செயலகத்தோடும் தொடர்புகொண்டு, உதவி கேட்டேன். அந்தப் பட்டணத்திலிருந்து சென்றுவிடுவதுதான் நல்லது என அவர்களும் சொன்னார்கள்.
அதே ராத்திரி, சுமார் நூறு ஆட்கள் ஆக்ரோஷமாக எங்கள் ட்ரெய்லரைச் சுற்றி திரண்டு வந்தார்கள். உள்ளுக்குள் நாங்கள் இரண்டே பெண்கள், பிள்ளைகளுடன். கதவுகளைப் பூட்டிக்கொண்டு, லைட்டுகளை அணைத்துவிட்டு, யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்தோம். கடைசியில், எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் அந்தக் கூட்டம் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டது.
இதெல்லாம் நடந்ததால், உடனடியாக ப்ருக்ஹேவனுக்கு புறப்பட்டு வந்துவிடும்படி ஹர்பர்ட் முடிவுசெய்தார். ஹரால்டை திரும்பவும் அவனது தாத்தா பாட்டியிடம் ராபர்ட்ஸ்டேலுக்கு அழைத்துச் சென்றோம். அங்கே, உள்ளூர் பள்ளியின் பிரின்ஸிபல் அவனை அங்கு கண்டிப்பாய் சேர்த்துக்கொள்வதாய் எங்களிடம் சொன்னார். நாங்கள் ப்ருக்ஹேவனுக்கு திரும்பியபோது, ட்ரெய்லரை நாசம் செய்திருந்தார்கள்; உள்ளுக்குள், அரெஸ்ட் வாரண்டை சுவரில் ஆணியடித்து மாட்டியிருந்தார்கள். எதிர்ப்பின் மத்தியிலும், நாங்கள் உறுதியாயிருந்து தொடர்ந்து ஊழியம் செய்தோம்.
கைதும், துன்புறுத்தலும்
1942-ம் ஆண்டு பிப்ரவரியில் ஹர்பர்டும் நானும் ஒரு சின்ன எளிமையான வீட்டில் பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டோம். நாங்கள் அப்படி நடத்தப்பட்டதால் அந்த வீட்டுக்காரருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது; சுவரில் தொங்கிக்கொண்டிருந்த துப்பாக்கியை எடுத்து அந்தப் போலீஸ்காரரை சுட்டுவிடுவதாக மிரட்டினார் என்றால் பாருங்களேன்! சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டோம்; அடுத்த நாள் விசாரணையில் குற்றவாளிகளாய் தீர்க்கப்பட்டோம்.
குப்பையும் தூசியும் நிறைந்த சிறையில் குளிரில் 11 நாட்கள் கிடந்தோம். உள்ளூரைச் சேர்ந்த ஒரு பாப்டிஸ்ட் மதகுரு எங்களை அங்கு வந்து சந்தித்தார். அந்தப் பட்டணத்தைவிட்டு போக நாங்கள் சம்மதித்தால், தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எங்களை விடுவித்துவிடுவதாக உறுதி அளித்தார். என்ன ஒரு கேலிக்கூத்து என்று நினைத்தோம், ஏனென்றால் நாங்கள் சிறையில் போடப்பட்டதற்குக் காரணமே அவரது செல்வாக்குதான்.
எங்கள் சிறையின் ஒரு ஓரத்தில்தான் முன்பு கழிப்பிடம் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் மூட்டைப் பூச்சிகள். கழுவாத பிசுபிசுப்பான தகரத் தட்டுகளில் சாப்பாடு கொடுத்தார்கள். இந்த எல்லா காரணங்களாலும் சீதசன்னி (pneumonia) வந்து படுத்துவிட்டேன். என்னைப் பார்க்க ஒரு டாக்டரை வரவழைத்தார்கள், அதன்பின் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். அந்த ராத்திரி எங்கள் ட்ரெய்லரைச் சுற்றி ரௌடிக் கூட்டம் கூடியது; ஆகவே விசாரணை முடியும்வரை ராபர்ட்ஸ்டேலுக்கே திரும்பினோம்.
விசாரணை
எங்கள் விசாரணைக்காக அந்த நாட்டிலிருந்து எல்லா பாப்டிஸ்டுகளும் ப்ருக்ஹேவனுக்கு வந்தார்கள்; நாங்கள் கைது செய்யப்படுவதற்கு காரணமாயிருந்த அந்த பாப்டிஸ்ட் மதகுருவுக்கு ஆதரவு கொடுக்க வந்திருந்தார்கள். வைராக்கியமான பாப்டிஸ்ட் உதவிக்குருவாயிருந்த என் மச்சான் ஆஸ்கர் ஸ்கூக்லன்டிற்கு கடிதம் எழுதும்படி இது என்னைத் தூண்டியது. கடிதத்தை உணர்ச்சிபொங்க எழுதினேன், ஆனால் அவ்வளவு சாதுரியமாக எழுதவில்லை. என்றாலும், நான் நடத்தப்பட்ட விதமும் நான் எழுதிய கடிதமும் ஆஸ்கர்மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்; ஏனென்றால் சிறிது காலத்திற்குள்ளாகவே அவர் வைராக்கியமான யெகோவாவின் சாட்சியாய் ஆனார்.
எங்கள் வழக்கறிஞர்களான ஜி. சி. க்ளார்க் மற்றும் விக்டர் ப்ளாக்வெல் யெகோவாவின் சாட்சிகளாய் இருந்தனர்; ப்ருக்ஹேவனில் எங்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்பதில் அவர்களுக்கு சந்தேகமே இல்லை. ஆகவே மறுப்புகள் தெரிவித்தே வழக்கை தள்ளுபடி செய்ய அவர்கள் தீர்மானித்தார்கள். எதிர்தரப்பு வக்கீல் வாயைத் திறந்தாலே போதும், எங்கள் வக்கீல்களில் ஒருவர் மறுப்பு தெரிவிப்பார். குறைந்தது 50 தடவையாவது மறுப்பு தெரிவித்திருப்பார்கள். கடைசியில் நீதிபதி குற்றச்சாட்டுகள் எதுவும் செல்லாது என்று சொல்லிவிட்டார்.
ஒரு புதிய பிரசங்க நியமிப்பு
நன்கு ஓய்வெடுத்து மீண்டும் தெம்பு பெற்ற பிறகு, என் மகன் ஹரால்டோடு திரும்ப பயனியர் செய்ய ஆரம்பித்தேன். 1943-ல் எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த விஸ்லரிலும் சிகாஸோவிலும் பிரசங்கிக்கும்படி நியமிக்கப்பட்டேன்; அலபாமாவிலுள்ள மொபைலுக்கு அருகேயுள்ள சிறிய ஊர்கள் அவை. இந்தப் புதிய பிராந்தியங்களில் அந்தளவு ஆபத்து இருக்காது என நான் நினைத்தேன்; ஏனென்றால் சமீபத்தில்தான் ஐ.மா. உச்சநீதி மன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆதரவாக அநேக தீர்ப்புகளை வழங்கியிருந்தது, எங்கள் ஊழியத்திற்கு பொது மக்கள் ஆதரவு காண்பிக்கவும் ஆரம்பித்திருந்தனர்.
விரைவிலேயே விஸ்லரில் பைபிள் மாணாக்கர்களின் ஒரு தொகுதி உருவானது. கூட்டம் நடத்த எங்களுக்கு சொந்தமாக ஒரு இடம் தேவைப்பட்டது. வெறுமனே சுத்தியை கையில் எடுக்க தெரிந்த ஆட்களெல்லாம் சேர்ந்து ஒரு சிறிய ராஜ்ய மன்றத்தைக் கட்டினோம்; எங்களது முதல் கூட்டத்திற்கு 16 பேர் ஆஜராயிருந்தார்கள். ஆனால் சிகாஸோவில் நடந்ததே வேறு. ஏனென்றால் அது கல்ஃப் ஷிப் பில்டிங் கார்பரேஷனுக்கு சொந்தமான ஒரு கம்பெனி காலனி. ஆனாலும், வியாபார சந்தை, தபால் நிலையம், ஷாப்பிங் சென்டர் ஆகியவற்றோடு அது மற்ற சிறிய பட்டணங்களைப் போல்தான் காட்சியளித்தது.
1943-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் பயனியர் சகோதரியான ஐலின் ஸ்டீபன்ஸும் நானும் சிகாஸோவில், வழியே சென்றவர்களுக்கெல்லாம் சமீபத்திய பைபிள் பத்திரிகைகளைக் கொடுத்தோம். அப்போது, அது தனியார் இடமாக இருந்ததால் அங்கு பிரசங்கிப்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லை என துணைத் தலைவரான சாத்தம் சொன்னார். நாங்கள் விற்பனைக்காக வரவில்லை, ஆனால் மதச் சேவை செய்துவந்தோம் என்றும் அது ஐ.மா. சட்டத்தின் முதலாம் சீர்திருத்தத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தது என்றும் நாங்கள் விளக்கினோம்.
கைதும் சிறைக்காவலும் தொடர்ந்தன
அதற்கடுத்த வாரம் ஐலினும் நானும் ஈ. பி. பிபல்ஸ் அவர்களை சந்தித்தோம்; அவர்தான் கல்ஃப் ஷிப் பில்டிங்கின் துணைத் தலைவர். மத சம்பந்தமான எங்கள் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அவரிடம் விளக்கினோம். சிகாஸோவில் பிரசங்கிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி இல்லை என அவர் எங்களை எச்சரித்தார். அங்கிருந்தோர் சந்தோஷமாக எங்களை வீட்டிற்குள் வரவேற்றார்கள் என அவரிடம் சொன்னோம். பைபிளைப் படிக்க அவர்களுக்கு இருக்கும் உரிமையை இவர் பறிக்க முடியுமா? எரிச்சலடைந்து, விதியை மீறியதற்காக எங்களை சிறையில் தள்ளப்போவதாய் மிரட்டினார்.
நான் திரும்பத் திரும்ப சிகாஸோ சென்றேன்; ஒவ்வொரு முறையும் கைதானேன். ஆனால் அந்த ஒவ்வொரு முறையும் அபராதம் செலுத்தி விடுதலையானேன். இறுதியில் அபராதம் பயங்கரமாய் உயர்த்தப்பட்டது, ஆகவே தேவையான பணத்தை ஈட்டும்வரை அதிகமதிகமான காலத்தை சிறையில் கழித்தேன். சிறையில் சுகாதாரமே இல்லை; கழிப்பறை இல்லை, விரிப்புகள் இல்லாத அழுக்கு மெத்தைகள், போர்த்திக்கொள்வதற்காக ஒரு அழுக்கு கம்பளம். இதனால் மறுபடியும் என் உடல்நிலை சீரழிய ஆரம்பித்தது.
1943-ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று ஆறு சாட்சிகள் கைதுசெய்யப்பட்டது சம்பந்தமான வழக்குகள், ஜனவரி 27, 1944-ல் ஒருசேர விசாரணைக்கு வந்தன. என் சாட்சியம், குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களின் சார்பாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான பேதம் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், நான் குற்றவாளியாய் தீர்க்கப்பட்டேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தோம்.
ஜனவரி 15, 1945-ல், முறையீட்டு மன்றம் தீர்ப்பு வழங்கியது; நான் அத்து மீறியதற்காக குற்றவாளியாய் தீர்க்கப்பட்டேன். அதுமட்டுமல்லாமல், அலபாமா உச்சநீதி மன்றம் என் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது. மே 3, 1945-ல், துணிவும் சுறுசுறுப்பும் நிறைந்த வக்கீல் ஹேடன் கவிங்டன், ஐ.மா. உச்சநீதி மன்றத்திற்கு மேல்முறையீடு கோரி மனுச்செய்தார்; அவரும் ஒரு யெகோவாவின் சாட்சி.
ஐலனும் நானும் உச்சநீதி மன்ற தீர்ப்புக்காக காத்திருக்கையில், குற்றம் சுமத்தியவர்கள்மீது உரிமையியல் வழக்கு தொடுத்தோம்; ஷெரிஃபின் டிப்பார்ட்மெண்ட்டில் ஈ. பி. பெபில்ஸுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிராக இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தோம். அத்து மீறினோம் என்று முதலில் சொன்னவர்கள், இப்போது அதை மாற்றி, போக்குவரத்தைத் தடைசெய்தோம் என்று சொல்லி குற்றம் சுமத்தினார்கள். ஆனால் நான் ஜெயிலில் இருந்த சமயம், துணைத் தலைவர் சாத்தம் கையெழுத்திட்டிருந்த ஒரு தாளை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்திருந்தேன்; அதில், நாங்கள் அத்துமீறியதாய் குற்றம்சாட்டப்பட்டு எழுதப்பட்டிருந்தது. இந்த சான்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது ஷெரிஃப் ஹோல்கூம் திடுமென எழுந்து நின்று, சிகரெட்டை ஏறக்குறைய விழுங்கியேவிட்டார்! அந்த விசாரணை பிப்ரவரி 1945-ல் தீர்ப்பளிக்கப்படாமல் முடக்கப்பட்டது.
உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது
ஐ.மா. உச்சநீதி மன்றம் என் வழக்கில் அக்கறை காண்பித்தது. ஏனென்றால் தனியார் இடத்தில் அத்துமீறி நடப்பதென்பது, மத சுயாதீனத்தின்பேரில் ஒரு புதிய கோணத்தில் கேள்வி எழுப்பியது. சிகாஸோவின் சட்டம், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உரிமைகளை மாத்திரம் அல்ல ஆனால் முழு சமுதாயத்தின் உரிமைகளையும் மீறியது என கவிங்டன் நிரூபித்தார்.
ஜனவரி 7, 1946-ல், ஐ.மா. உச்சநீதி மன்றம் கீழ்மன்ற தீர்ப்பை மாற்றியமைத்து, எங்கள் சார்பாக புரட்சிகரமான தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ப்ளாக் உரைத்த தீர்ப்பின் சில வார்த்தைகள் இவை: “ஒரு கம்பெனி காலனியில் மத பிரசுரங்களை விநியோகித்ததற்காக மேல்முறையீட்டாளர் [க்ரேஸ் மார்ஷ்] மீது [அலபாமா] மாநிலம் குற்றத் தண்டனை விதிக்க முயற்சி செய்திருக்கிறது, ஆனால் அதன் நடவடிக்கை செல்லுபடியாகாது.”
முடிவடையாத பாடு
ஹர்பர்ட்டும் நானும் இறுதியில் அலபாமாவிலுள்ள ஃபார்ஹோப்பில் குடியேறிவிட்டோம். அதுமுதல் பல வருடங்களாக ராஜ்ய அக்கறைகளுக்காக தொடர்ந்து சேவை செய்துவந்தோம். 1981-ல் நான் என் கணவரை இழந்தேன், ஆனால் இருவரும் சேர்ந்து சந்தோஷமாய் கழித்த நாட்கள் இன்னும் நினைவிலிருந்து மறையவில்லை. முதலில் யெகோவாவை சேவித்துவந்த என் மகன் ஹரால்ட், பின்னர் பின்வாங்கிவிட்டான்; அதன்பின் கொஞ்ச காலத்திற்குள், 1984-ல் இறந்துவிட்டான். என் வாழ்க்கையிலேயே இதுதான் மிகப் பெரிய இடி.
ஆனால் ஹரால்டும் அவன் மனைவி எல்ஸியும் மூன்று அருமையான பேத்திகளை எனக்குக் கொடுத்ததற்காக சந்தோஷப்படுகிறேன்; இப்போது என் பேத்திகளின் பிள்ளைகளும் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாய் இருப்பதால் எனக்கு கூடுதலான மகிழ்ச்சி. என் மூன்று சகோதரிகளான மார்கரெட்டும், எலன் ஜோவும், க்ரிஸ்டலும் இன்னும் உயிரோடிருக்கிறார்கள், தொடர்ந்து யெகோவாவை உண்மையோடு சேவிக்கிறார்கள். க்ரிஸ்டல், லைமன் ஸ்விங்கிள் என்பவரை மணம் செய்துகொண்டாள்; அவர் இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஓர் அங்கத்தினர். நியூ யார்க்கிலுள்ள புரூக்ளினில் அமைந்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளது உலக தலைமை அலுவலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் க்ரிஸ்டல் தொடர்ந்து சிறந்த முன்மாதிரியாகவே இருந்து, எனக்கு ஊக்கமளித்திருக்கிறாள்.
இந்த 90-க்கும் அதிகமான ஆண்டுகளில், மனிதன் என்ன செய்வானோ என்று அஞ்சவேகூடாது என்பதை கற்றுக்கொண்டிருக்கிறேன்; ஏனென்றால் ஷெரிஃப் ஆகட்டும் நீதிபதி ஆகட்டும் எந்த மனுஷன் ஆகட்டும், யெகோவாவிற்கு அவர்கள் வெறும் கால்தூசு. நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, ‘சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதில்’ பங்குபெறும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்ததை உயர்வாய் மதிக்கிறேன்!—பிலிப்பியர் 1:7.
[பக்கம் 20-ன் படம்]
என் தாத்தா சிம் வால்ட்ரோபுடன்
[பக்கம் 23-ன் படம்]
இன்று கிரேஸ் மார்ஷ்