என் தோழி தரும் தொல்லையை தாங்குவது எப்படி?
“என் தோழி, என்னவோ நான் அவளுக்கே சொந்தம் என்பதுபோல நடந்துகிட்டா. அவ என்னை மூச்சுவிடக்கூட விடாம தொணதொணத்துக்கிட்டே இருந்தா.”—ஹாலீ.
சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு” என்கிறது, ஒரு ஞானப் பழமொழி. (நீதிமொழிகள் 18:24) உங்களுக்கு ஒரு சிநேகிதன் இருந்து, நீங்கள் நம்புவதையே அவனும் நம்புகிறான் என்றும், உங்கள் நகைச்சுவை உணர்வே அவனுக்கும் இருக்கிறது என்றும், உங்களுக்கு அக்கறையூட்டும் விஷயங்களே அவனுக்கும் அக்கறையூட்டுகின்றன என்றும் வைத்துக்கொள்ளுங்கள்; அப்பொழுது நீங்கள் இயல்பாகவே அவனுடன் எப்போதும் சேர்ந்து இருக்க விரும்புவீர்கள். கேரலைன் என்ற இளம்பெண் சொல்வதாவது: “கிறிஸ்தவ சபையிலுள்ள சிலரோடு என் நட்பு நெருக்கமானது எதனாலன்னா, ஊழிய நடவடிக்கைகள்ல நாங்க சேர்ந்து செயல்பட்டதனாலதான்.” ஒரு யெகோவாவின் சாட்சியாக, கேரலைன் ஒரு குறிப்பிட்ட மாதத்தில், பிரசங்க ஊழியத்திற்காக 60 மணிநேரம் செலவிட திட்டமிட்டாள். இந்த வேலையில் அவளுக்கு உதவி செய்யும்பொருட்டு, அவளது சிநேகிதிகளும் தங்கள் வேலைகளையெல்லாம் ஒழுங்குபடுத்தினர்!
சேர்ந்து வேலை செய்வதால் கிடைக்கும் பலன் ஒருபுறமிருக்க, சிலசமயங்களில் அது மிதமிஞ்சிப் போவதாகத் தோன்றலாம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஹாலீ, தன் சிநேகிதிகளில் ஒருத்தி தரும் தொல்லை தாங்கமுடியவில்லை என உணர்கிறாள். இவ்வாறு உணருவது அவள் மட்டுமல்ல. ஹாலீ குறிப்பிடுவதாவது: “மற்ற பிள்ளைங்களுக்கும் இப்படி நடந்ததா தோணுது. அவங்களுக்குள்ள சண்டை வர்ற வரைக்கும் ஒரேயடியா குழைவாங்க; அப்புறம் வாரக்கணக்கில ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கக்கூட மாட்டாங்க.”
பிரச்சினை என்னவென்றால், உங்களுக்கு மூச்சு திணறுவதுபோல இருக்கிறது எனவும், கொஞ்சநேரமாவது உங்களைத் தனிமையில் இருக்கவிட்டால் நன்றாய் இருக்கும் எனவும், ஒரு நண்பரிடம் சொல்வது எளிதல்ல. உங்கள் நண்பரின் மனதைப் புண்படுத்தி விடுவீர்களோ என நீங்கள் பயப்படலாம். அத்துடன், உங்கள் நட்பைக் கெடுத்துக்கொள்வீர்களோ என்றும்கூட நீங்கள் ஒருவேளை பயப்படலாம். என்றாலும், ஒரு நட்பில் நியாயமான அளவு இடைவெளி வைத்துக்கொள்வது, மனதைப் புண்படுத்துவதற்குப் பதிலாக உதவியையே செய்யும் எனலாம்.
இதை விளக்குவதற்கு: ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியிலிருக்கும் ஒரு பொதுப் பூங்காவில், ஒரு பெரிய மரத்தை சங்கிலி வைத்து சுற்றிலும் வேலியிட வேண்டியிருந்தது. ஏன்? ஏனெனில், ஏராளமான பார்வையாளர்கள், கொஞ்சம்கொஞ்சமாக மண்ணை அழுத்தி, அம்மரத்தின் வேர்களை நெருக்கி வந்தனர். பாதுகாப்பிடாமல் விட்டிருந்தால், அந்த மரம் பட்டுப் போயிருக்கும்.
நட்புகளின் விஷயத்திலும் இதுவே உண்மையாய் இருக்கலாம். ஒரேயடியாக குழைவது ஓர் உறவை நெருக்கிவிடலாம். சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.”—நீதிமொழிகள் 25:17.
தனி நேரத்திற்கும் தனிமைக்குமான தேவை
சாலொமோன் ஏன் இவ்வாறு சொன்னார்? ஒரு காரணம், நம் எல்லாருக்குமே, தனிப்பட்ட காரியங்களுக்காக கொஞ்ச நேரமும், தனிமையும் தேவை. இயேசு கிறிஸ்துவுக்கும்கூட இப்படிப்பட்ட தேவை இருந்தது. தம் சீஷர்களுடன் எவ்வளவுதான் அவர் நெருங்கி இருந்தபோதிலும், அவ்வப்பொழுது அவர், “தனித்து ஜெபம்பண்ண” பிரிந்து செல்வார். (மத்தேயு 14:23; மாற்கு 1:35) தெய்வபயமிகுந்த ஈசாக்கும் அவ்வாறே தனிமையில் இருக்க நேரத்தை ஒதுக்கினார். (ஆதியாகமம் 24:63) வீட்டுப்பாடம், வீட்டுவேலைகள், தனிப்பட்ட பைபிள் படிப்பு போன்றவற்றைச் செய்வதற்காக உங்களுக்கும் ஓரளவு தனிப்பட்ட நேரம் தேவை. இந்த விஷயத்தில், உங்கள் தேவையைக் கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல், கரிசனையின்றி உங்கள் சிநேகிதர்கள் நடந்துகொண்டால், திடுதிப்பென மனக்கசப்பு ஏற்பட்டுவிடலாம்.
ஆகவே, நீங்கள் தனித்திருக்க கொஞ்ச நேரம் தேவைப்படும்போது, உங்கள் சிநேகிதரிடம் அந்த விருப்பத்தை வெளிப்படையாய் தெரியப்படுத்த தயங்காதீர்கள். கிறிஸ்தவ அன்பு, “தன் சொந்த அக்கறையையே பாராது” என்பதால், பொதுவாக ஓர் உண்மையான சிநேகிதன், புரிந்துகொள்ளும் இயல்புடையவனாகவே இருப்பான். (1 கொரிந்தியர் 13:4, 5, NW; நீதிமொழிகள் 17:17) “என் முழுப்பரீட்சை முடியும் வரைக்கும், என் சிநேகிதிங்க எனக்கு ரொம்ப உதவியா, என்னைப் புரிஞ்சு நடந்துகிட்டாங்க. படிக்கிறதுக்கு எனக்கு நேரம் தேவைப்பட்டப்போ, என்னை விட்டுப் போயிடுமாறு அவங்கள கேட்டுக்கிறதுக்கு எனக்கு சங்கடமாவே இல்ல. என் சிநேகிதிங்ககிட்ட நேர்மையா நடந்துக்கிறது சுலபம்; நம் எல்லாருக்குமே பொறுப்புகள் இருக்குதுன்னு அவங்களுக்குத் தெரியும்” என ஓர் இளம்பெண் எழுதுகிறாள்.
பொன்விதிப்படி, உங்கள் நண்பர்களுக்கும் அதேபோல் நீங்கள் கரிசனை காட்ட வேண்டும் என்பதே உண்மை. (மத்தேயு 7:12) தாமாரா என்ற இளம்பெண் இவ்வாறு எழுதுகிறாள்: “எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறதனால, என் சிநேகிதிக்கும் நேரம் தேவைப்படுங்கறத நல்லா புரிஞ்சுக்கிறதுக்கு அது எனக்கு உதவியிருக்கு.” தாமாராவுக்கு வீட்டில் வேலைகள் இருக்கும்போது, அவற்றை வேகவேகமாய் செய்துமுடித்துவிடவோ, அல்லது அப்புறமாய் நேரந்தாழ்த்தி செய்துகொள்ளும்படியோ, அவளது சிநேகிதிகள் வற்புறுத்துவதில்லை. மாறாக தாமாரா சொல்வதாவது, “முதல்ல என்னோட வேலையை முடிச்சிட்டு அப்புறம் அவங்களோடு நேரத்தைச் செலவழிக்கும்படி, என்னோடு கூடமாட சேர்ந்து வேலை செய்வாங்க.” இப்படிப்பட்ட தன்னலமற்ற நண்பர்கள் எப்பேர்ப்பட்ட பொக்கிஷமாய் உள்ளனர்—அதிலும், சேர்ந்து செலவிடும் நேரமும் எவ்வளவு பொன்னானது!
விசாலம் அடையுங்கள்’
நட்பில் ஓரளவு இடைவெளி வைத்துக்கொள்வது ஏன் ஞானமானது என்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நாம் நட்புகொள்ளும் ஒருவருக்காகவே நம் நேரத்தையும் உணர்ச்சியையும் கொட்டுகையில், பிற முக்கிய உறவுகளை—நம் பெற்றோருடனும், உடன்பிறந்தவர்களுடனும், மற்ற கிறிஸ்தவர்களுடனும் இருக்கும் உறவுகளை—நிராகரிக்க வேண்டிய மனப்போக்கு நமக்கு ஏற்படலாம். உணர்ச்சிப்பூர்வமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும்கூட நம் வளர்ச்சியை பெரிதும் குறைத்துக்கொள்கிறோம். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.” (நீதிமொழிகள் 27:17) ஒரேவொரு நபருடன்—குறிப்பாக உங்கள் வயதில் உள்ளவருடன்—தோழமை கொள்வதன் மூலம் மிகக் கொஞ்சமாகவே “கருக்கிடும்” வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே, நண்பர்களைத் தெரிவுசெய்யும் விஷயத்தில், குறிப்பிட்டவர்களோடு மட்டுமே நன்றாக பழகும் பழக்கத்தையோ, மட்டுப்படுத்திக்கொள்வதையோ, அல்லது அந்தஸ்தின் அடிப்படையில் தெரிவுசெய்வதையோ பைபிள் உற்சாகப்படுத்துவதில்லை. ‘விசாலம் அடையும்படி’ அது நம்மை துரிதப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 6:13, NW) “எவருடனாவது பிரத்தியேக உறவு வைத்திருந்தாலும்கூட, மற்ற நண்பர்களைப் பார்க்கவும் நேரம் ஒதுக்குவது முக்கியம்” என மூட்ஸ் அண்ட் ஃபீலிங்ஸ் என்ற புத்தகம் ஆலோசனை கூறுகிறது.
இப்படிப்பட்ட ஆலோசனைப்படி நடப்பது எப்பொழுதுமே எளிதல்ல. மைக்கல் என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவ இளைஞர் இவ்வாறு சொல்கிறார்: “சபையிலேயும் பொதுவாகவும், நானும் ட்ராயும் எதைச் செய்தாலும் சேர்ந்தே செய்துவந்தோம். நாங்க இணைப்பிரியா நண்பர்களாய் இருந்தோம். அப்புறம் இன்னொரு இளம் சாட்சி எங்க சபைக்கு மாறி வந்தாரோ இல்லையோ, அவரும் நானும் சேர்ந்து முழுநேர ஊழியர்களாக சேவை செய்ய ஆசைப்பட்டோம்; அதனால நாங்க இரண்டுபேருமே எப்பவும் சேர்ந்து இருந்தோம்.” இதன் விளைவு? “ட்ராய் என்னோடு பேசுறதையே நிறுத்திட்டான்” என மைக்கல் சொல்கிறான். “காரியங்களை சரிசெய்ய எடுத்த முயற்சியெல்லாம் வீணாயிட்டதுக்குப் பின்ன, நானும் அவங்கிட்ட பேசுறத நிறுத்திட்டேன். இப்படியே ஒரு வருடம் கடந்துடுச்சு.” அவர்களது நட்பை, “பொறாமையுடன் சொந்தம் கொண்டாடும்” இயல்புடையதாக அவன் விவரிக்கிறான்.
என்றபோதிலும், ஆரோக்கியமான நட்பில், சிநேகிதர்கள் ஒருவரையொருவர் தங்களுக்குத்தான் சொந்தம் என்பதுபோல் நடத்துவதில்லை. ஆகவே விசாலம் அடையும்படி நீங்கள் எடுக்கும் முயற்சியை ஒரு சிநேகிதர் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், நீங்கள் அவரிடம் மனம்விட்டுப் பேசவேண்டும். ஒருவேளை நீங்கள் அவனுடைய அல்லது அவளுடைய நட்பை மதிப்புவாய்ந்ததாக எண்ணுகிறீர்கள் என்பதற்கான உறுதி மட்டுமே மறுபடியும் அவருக்குத் தேவைப்படலாம். நீங்கள் தொடர்ந்து அவருடன் சேர்ந்தே காரியங்களைச் செய்வீர்கள் என்பதை அவருக்குத் தெளிவாக்குங்கள்.
ஒத்துக்கொள்ளும் வகையில், இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மாற்றிக்கொள்வதற்கு உங்கள் நண்பருக்கு சற்று காலம் எடுக்கலாம். உதாரணமாக, தன் அருமை தோழி பிறருடன் நேரத்தைச் செலவிட ஆரம்பித்தபோது, பொறாமையால், பதினாறு வயது ஜேனட்டாவுக்கு தேள் கொட்டியதுபோல் ஆயிற்று. ஆனால் இந்த உணர்வுகளை, “ஜெபம் மற்றும் தனிப்பட்ட படிப்பின் உதவியால்” தான் மேற்கொண்டதாக ஜேனட்டா சொல்கிறாள். இவ்வாறு தன் சிநேகிதியுடன் ஒரு நெருங்கிய நட்பை அவளால் காத்துக்கொள்ள முடிந்தது. மைக்கலின் நண்பன் ட்ராயும் ஆரம்பத்தில் எழுந்த பொறாமையெனும் அலையை அடக்கி, மீண்டும் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். உங்கள் சிநேகிதரும் ஒருவேளை அவ்விதமே செய்யலாம். உண்மையில், விசாலம் அடைவது, காலப்போக்கில் அனைவருக்குமே பலன் தருகிறது. பதினேழு வயது டெபீ, தன் சிநேகிதிகள் புதுப்புது சிநேகிதிகளைப் பிடித்துக்கொள்ளும்போது, “அவர்கள் அனைவருமே எனக்கும் சிநேகிதிகள் ஆகிவிடுகின்றனர்” என்பதாக காண்கிறாள்.
ஆனாலும், உங்களது உறவில் இப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள உங்கள் சிநேகிதி வெறுமனே மறுக்கையில், அப்போது என்ன செய்வது? தனித்தனியே பிரிந்துசெல்வதைவிட வேறு வழியில்லை. என்றாலும், உங்கள் நட்பு முறிந்துபோய்விட்டது என முடிவுசெய்வதற்கு முன்பு, இந்த விஷயத்தில் உங்கள் பெற்றோரது கருத்துக்கள் என்ன என்பதை ஏன் கேட்கக்கூடாது? தெய்வபயமுள்ள பெற்றோர் உண்மையில் உங்களது நெருங்கிய நண்பர்கள்தானே. இடைவெளி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நியதியை விட்டுக்கொடுக்காமலே, முறிந்துவிடாமல் நட்பைக் காத்துக்கொள்ள உதவுவதற்காக அவர்களிடம் நடைமுறையான ஆலோசனைகள் ஏதாவது இருக்கலாம்.
சரியான நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்
ஓர் எச்சரிக்கை: விசாலமடைவது, எப்படிப்பட்டவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வதை அர்த்தப்படுத்தவில்லை. நட்பைப் பற்றி ஒரு புத்தகம் சொல்வதாவது: “நீங்கள் யாருடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறீர்களோ, அவர்களைப் போல் ஆவது இயல்பானதே. சிலசமயங்களில் உங்களுக்குத் தெரியாமலேயே இவ்வாறு நிகழலாம். நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்து அல்லாமலே, உங்கள் சக நண்பர்களைப் போலவே நீங்களும், நினைக்கவும் செயல்படவும் ஆரம்பிக்கலாம். இவ்வாறு, உங்கள் சக நண்பர்களின் தொகுதி, உங்களை ஆட்டிப்படைக்கலாம்.” ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பின்வருமாறு சொன்னபோது பைபிளும் இதே குறிப்பையே வலியுறுத்தியது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
நீங்கள் பள்ளியில் படித்துக்கொண்டோ, வேலை பார்த்துக்கொண்டோ இருக்கையில், யெகோவாவைச் சேவிப்பதில் விருப்பமில்லாத ஜனங்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டியதாய் இருக்கலாம். ஆனால் நெருங்கிய நண்பர்களைத் தெரிவுசெய்கையில், பின்வரும் பைபிள் ஆலோசனையை நினைவில் வைத்திருங்கள்: “கெட்ட நண்பர்கள் நல்ல பண்பைக் கெடுப்பர்.”—1 கொரிந்தியர் 15:33, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்.
நம் சிருஷ்டிகரான யெகோவா தேவனுடன் வைத்திருக்கும் நட்பே எந்தவொரு மனித நட்பையும்விட ஒருவருக்கு மிக முக்கியமானது என்பதை நினைவில் வையுங்கள். முன்பு சொல்லப்பட்ட டெபீக்கு பல நல்ல சிநேகிதிகள் இருந்தனர். ஆனாலும், “யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்” என்பதே அவளது ஆலோசனை. பண்டைய விசுவாசியான ஆபிரகாம் அவ்வாறே செய்தார்; யெகோவாவும், ‘என் சிநேகிதனான ஆபிரகாம்’ என்று அவரை விசேஷமாக அழைத்தார். (ஏசாயா 41:8) மேலும் இதை நினைத்துப் பாருங்கள்: தம்மை நேசிக்கும் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் நேரத்தைச் செலவிடுவதைப் பார்க்கும் யெகோவா பொறாமைப்படுவதில்லை; உண்மையில், அவர் அதை ஊக்குவிக்கிறார். எப்பேர்ப்பட்ட உண்மையான நண்பர் அவர்!
[பக்கம் 18-ன் படம்]
தனிப்பட்ட நேரத்திற்கான ஒவ்வொருவரின் தேவையை உண்மை நண்பர்கள் புரிந்துகொள்கின்றனர்