இன்டர்நெட்—சேவைகளும் தகவல்மூலங்களும்
மெய்ல் என்று அழைக்கப்படும் மின்னணு அஞ்சலை அனுப்புவதும் பெறுவதுமான ஓர் உலகளாவிய ஏற்பாடு, இன்டர்நெட்டால் அளிக்கப்படும் ஒரு பொதுவான தகவல்மூலம் ஆகும். உண்மையில், எல்லா இன்டர்நெட் போக்குவரத்திலும் ஒரு மிகப் பெரிய பகுதியை ஈ-மெய்ல் குறிப்பிட்டுக் காட்டுகிறது; பலருக்கு இது, இன்டர்நெட்டின் ஒரே தகவல்மூலமாகவும் இருக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது? இந்தக் கேள்விக்கு பதிலளிக்க, சாதாரணமாக அஞ்சல் அமைப்பு வேலை செய்யும் விதத்தை முதலில் மறுபார்வையிடுவோம்.
நீங்கள் கனடாவில் வசித்து வருவதாகவும், மாஸ்கோவில் வசித்து வரும் உங்கள் மகளுக்கு ஒரு கடிதம் அனுப்ப நீங்கள் விரும்புவதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அஞ்சல் உறையில் சரியான முகவரியிட்ட பின்பு, நீங்கள் அதை அஞ்சல் செய்கிறீர்கள்; அதன் மூலம் அந்த அஞ்சலின் பயணத்தைத் தொடக்குகிறீர்கள். தபால்நிலையம் ஒன்றில், அதையடுத்து இருக்கும் நிலையத்திற்கு அந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. அந்த நிலையம் ஒருவேளை ஒரு வட்டார அல்லது தேசிய விநியோகிப்பு மையமாக இருக்கலாம். அதன் பிறகு, உங்கள் மகள் வசிக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் ஓர் உள்ளூர் தபால் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈ-மெய்ல் அனுப்பும்போதும் அப்படித்தான் நடக்கிறது. உங்களுடைய கம்ப்யூட்டரில் கடிதத்தைத் தொகுத்த பிறகு, உங்கள் மகளை அடையாளம் காட்டும் ஓர் ஈ-மெய்ல் முகவரியை நீங்கள் குறிப்பிட வேண்டும். இந்த மின்னணு கடிதத்தை நீங்கள் ஒரு தடவை அனுப்பிய பிறகு, அது உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, பெரும்பாலும் மோடம் என்ற ஒரு கருவியின் வழியாக பயணிக்கிறது. அந்தக் கருவி, தொலைபேசி வலைப்பின்னல் இணைப்பின் மூலமாக இன்டர்நெட்டுடன் உங்கள் கம்ப்யூட்டரை இணைக்கிறது. அதன் பயணம் ஆரம்பிக்கிறது. உள்ளூர் மற்றும் தேசிய அஞ்சல் வழியனுப்பு நிலையங்களாக செயல்படும் வெவ்வேறு கம்ப்யூட்டர்களுக்குச் செல்லுகிறது. அந்தக் கடிதம் போய்ச்சேரவிருக்கும் கம்ப்யூட்டரை அடைவதற்குத் தேவையான போதியளவு தகவல் அவற்றில் அடங்கியிருக்கும்; அந்தக் கம்ப்யூட்டரிலிருந்து அந்தக் கடிதத்தை உங்கள் மகள் பெற்றுக்கொள்ளலாம்.
ஈ-மெய்ல், வழக்கமாக அனுப்பும் அஞ்சலைப் போல் அல்லாமல், பொதுவாக அது போய்ச் சேரவேண்டிய இடத்தை, வலைப்பின்னல் அமைப்பின் ஏதோவொரு பகுதியில் அதிக தடங்கல் இருந்தாலோ, அல்லது தற்காலிகமாய் சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ தவிர, மற்ற கண்டங்களாக இருந்தாலும்கூட, சில நிமிடங்களிலோ அல்லது அதற்கும் குறைவான நேரத்திலோ போய்ச் சேர்ந்துவிடுகிறது. உங்கள் மகள் தன்னுடைய மின்னணு தபால் பெட்டியைப் பார்வையிடும்போது, நீங்கள் அனுப்பியிருந்த ஈ-மெய்லைக் கண்டுபிடிப்பார். ஈ-மெய்லின் வேகமும், உலகமுழுவதிலுமுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பெறுநருக்கும்கூட சிரமமின்றி அது அனுப்பப்படுவதும், அதை பிரசித்திபெற்ற ஒரு தகவல் தொடர்பு முறையாக ஆக்கியிருக்கிறது.
செய்திக் குழுக்கள்
பிரசித்திபெற்ற மற்றொரு சேவை, யூஸ்நெட் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்புகளில் குழுக்களாக கலந்தாலோசிப்பு நடத்துவதற்காக செய்திக் குழுக்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் யூஸ்நெட் உதவுகிறது. சில செய்திக் குழுக்கள், பல்வேறு நுகர்வோர் பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் கவனம் செலுத்துகின்றன. ஆயிரக்கணக்கில் அப்படிப்பட்ட செய்திக் குழுக்கள் இருக்கின்றன; அதோடு, ஒரு நபர் யூஸ்நெட்டைப் பயன்படுத்துவதற்கென்று ஒரு தடவை அனுமதி பெற்றுவிட்டாரென்றால், அவற்றிற்கென்று சந்தா கட்டணம் கட்டத் தேவையில்லை.
தபால்தலை சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு செய்திக் குழுவில் ஒரு நபர் புதிதாய்ச் சேர்ந்திருக்கிறார் என்று கற்பனை செய்துகொள்வோம். இந்த விருப்ப வேலையைப் (hobby) பற்றிய புதுப்புது செய்திகள், இதே குழுவில் சந்தாதாரராக இருப்பவர்களால் அனுப்பப்படுகையில், இப் புதிய உறுப்பினருக்கு அந்தச் செய்திகள் கிடைக்கக்கூடியதாகின்றன. இந்த நபர், இந்தச் செய்திக் குழுவுக்கு எவரோ ஒருவர் அனுப்பியிருக்கும் செய்தியை மட்டும் அல்லாமல், மற்றவர்கள் அதற்கு விடையாக எழுதி அனுப்பியிருக்கும் தகவல்களையும் மறுபார்வை செய்கிறார். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தபால்தலைத் தொடரைப் பற்றிய தகவலை எவரோ ஒருவர் கேட்டிருந்தாரென்றால், கொஞ்ச நேரத்திற்குள் அதற்கான விடைகள் பல, உலகமுழுவதிலுமிருந்து வந்து சேரலாம்; அந்தத் தகவல் இந்தச் செய்திக் குழுவுக்கு சந்தாதாரராய் இருக்கும் எல்லாருக்கும் உடனே கிடைக்கக்கூடியதாய் இருக்கும்.
இந்தத் திட்டத்தில் சற்று மாறுபட்டிருப்பது, செய்தி இதழ்ப்பலகை அமைப்பு (Bulletin Board System [BBS]). BBS-கள், யூஸ்நெட்டைப் போன்றவையே; ஆனால் வித்தியாசம் என்னவென்றால், பொதுவாக ஒரு தனி நபராலோ அல்லது தொகுதியாலோ பராமரிக்கப்படும் ஒரு தனி கம்ப்யூட்டரில் எல்லா ஃபைல்களும் வைக்கப்பட்டிருக்கும். செய்திக் குழுக்களால் கலந்தாலோசிக்கப்படும் விஷயங்கள், அவற்றைப் பயன்படுத்துவோரின் வெவ்வேறு விருப்புவெறுப்புகளையும், நோக்குநிலைகளையும், ஒழுக்க மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துவதால் விவேகம் தேவை.
ஃபைல் பகிர்வும் தலைப்புவாரி தேடலும்
முதன்முதலில் இன்டர்நெட்டின் முக்கிய நோக்கங்களாய் இருந்த பலவற்றில் ஒன்று, உலகளாவிய தகவல் பகிர்வு. முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆசிரியர், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட விவரமான பாடங்களின் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவராய் இருந்த மற்றொரு ஆசிரியரை இன்டர்நெட்டில் கண்டுபிடித்தார். 3,200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோதிலும், சில நிமிடங்களுக்குள் அந்த ஃபைல்கள் இடம் மாற்றப்பட்டன.
இன்டர்நெட்டுக்குள்ளேயே, ஒரு பொருள் இருக்கும் இடத்தை அறியாதிருக்கையில் ஒரு நபருக்கு என்ன உதவி இருக்கிறது? டெலிபோன் டைரக்டரி ஒன்றைப் பயன்படுத்தி ஒரு தொலைபேசி எண்ணை நாம் கண்டுபிடிப்பதைப் போலவே, இன்டர்நெட்டில், தேடல் மையங்கள் (search sites) என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, ஆர்வத்தைத் தூண்டும் பொருட்கள் இருக்கும் இடத்தை ஒருவர் கண்டுபிடிக்கலாம். இன்டர்நெட்டைப் பயன்படுத்துபவர், தேடிக்கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய ஒரு வார்த்தை அல்லது ஒரு சொற்றொடரை டைப் செய்கிறார்; அந்த மையம், தகவல் காணப்படும் இன்டர்நெட் இடங்களின் ஒரு பட்டியலைக் காட்டுவதன் மூலம் விடையளிக்கிறது. பொதுவாக, இந்தத் தேடல் இலவசமே; இதற்கு ஒரு சில விநாடிகளே எடுக்கும்!
முன்பு குறிப்பிடப்பட்டிருந்த அந்த விவசாயி, கம்ப்யூட்டர்களையும் செயற்கைக் கோள் வரைபடங்களையும் பயன்படுத்தும், துல்லியமான விவசாயம் (precision farming) என்ற ஒரு புதிய உத்தியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார். அந்தச் சொற்றொடரை, ஒரு தேடல் மையத்தில் டைப் செய்வதன் மூலம், அந்த உத்தியைப் பயன்படுத்தி வரும் விவசாயிகளின் பெயர்களும், அந்த உத்தியைப் பற்றிய விவரமான தகவலும் அவருக்குக் கிடைத்தன.
உலகளாவிய வெப்
உலகளாவிய வெப் (அல்லது, வலைப்பின்னல்), அடிக்குறிப்புகளைப் பற்றிய பழைய பாணியிலமைந்த ஒரு முறையை ஒரு புதிய வகையில் பயன்படுத்த எழுத்தாளர்களை அனுமதிக்கிறது. பத்திரிகைக் கட்டுரை அல்லது புத்தகம் ஒன்றின் எழுத்தாளர் ஒருவர் ஓர் அடிக்குறிப்பு குறியீட்டைப் புகுத்துகையில், அந்தப் பக்கத்தின் அடிப்பாகத்தை நாம் உன்னிப்பாய்ப் பார்க்கிறோம்; அப்போது, மற்றொரு பக்கத்தையோ அல்லது புத்தகத்தையோ பார்க்கும்படி நமக்குச் சொல்லப்படுகிறது. இன்டர்நெட் கம்ப்யூட்டர் பதிப்புகளில் எழுத்தாளர்களாய் இருப்பவர்கள் அடிப்படையில் அதையே செய்கின்றனர்; ஆனால், தங்களுடைய பதிப்பில் இடம்பெறும் ஒரு வார்த்தையையோ, ஒரு சொற்றொடரையோ, அல்லது ஒரு படத்தையோ அடிக்கோடிடும், அல்லது முக்கியப்படுத்திக் காட்டும் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
முக்கியப்படுத்திக் காட்டப்பட்ட வார்த்தை அல்லது படம், அதோடு தொடர்புடையதாய் உள்ள, பெரும்பாலும் மற்றொரு பதிப்பாக இருக்கும் ஓர் இன்டர்நெட் தகவல்மூலம் இருப்பதைப் பற்றிய ஒரு துப்பை வாசகருக்குத் தருகிறது. இந்த இன்டர்நெட் தகவல்மூலம், உடனே வாசகருக்காக எடுக்கப்பட்டு காட்டப்படலாம். அந்தப் பதிப்பு, மற்றொரு நாட்டிலிருக்கும் வேறொரு கம்ப்யூட்டரிலும்கூட இருக்கலாம். இந்த முறை, “அந்தப் பதிப்புகளின் பெயரைக் காட்டுவது மட்டுமின்றி, மெய்யாக அந்தப் பதிப்புகளையே உங்களுடைய கம்ப்யூட்டருடன் இணைக்கிறது” என்று இன்டர்நெட்டைப் பயன்படுத்திக்கொள்ளுதல்! என்ற ஆங்கில புத்தகத்தின் எழுத்தாளர் டேவிட் பில் குறிப்பிடுகிறார்.
படங்களையும், வரைகலைகளையும், இயங்கும் கார்ட்டூன்களையும், வீடியோக்களையும், ஒலிகளையும் சேமித்துவைத்து திரும்பப் பெறுவதையுமோ, அல்லது அவற்றைப் போட்டுப் பார்ப்பதையும், கேட்பதையுமோ வலைப்பின்னல் சாத்தியமாக்குகிறது. முந்தின கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட குடும்பத்தலைவியான லோமா, அண்டத்தைப் பற்றிய தற்போதைய கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட சுருக்கமான, வண்ண திரைப்படத்தைப் பெற்று அதைப் போட்டுப் பார்த்தார். அந்தச் சொற்பொழிவை தன்னுடைய கம்ப்யூட்டரின் ஆடியோ அமைப்பின் மூலம் கேட்டார்.
இன்டர்நெட்டில் மேலெழுந்தவாரி தேடல்
வலைப்பின்னல் ப்ரௌஸரைப் பயன்படுத்தி, வெவ்வேறான பல நாடுகளிலிருக்கும் கம்ப்யூட்டர்களில் ஒருவேளை சேமிக்கப்பட்டிருக்கும் தகவலையும், கண்ணைக் கவரும் வண்ண வரைகலைகளையும் ஒரு நபர் எளிதாகவும் சீக்கிரமாகவும் பார்வையிட முடியும். வலைப்பின்னல் ப்ரௌஸரைப் பயன்படுத்துவது, சில வழிகளில் உண்மையிலேயே பயணிப்பதை ஒத்திருக்கலாம்; ஆனால் அதைக் காட்டிலும் எளிதானது. வலைப்பின்னலில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கும் சவக்கடல் சுருள்களையோ, சர்வநாச நினைவு அருங்காட்சியகத்தையோ ஒரு நபர் பார்வையிடலாம். இவ்வாறு, இன்டர்நெட் மையம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு முன்னும் பின்னுமாக வேகவேகமாய் மாறும் திறம், மேலெழுந்தவாரி தேடல் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
வாணிக நிறுவனங்களும் மற்ற அமைப்புகளும், தங்களுடைய உற்பத்திப் பொருள்களையோ, சேவைகளையோ விளம்பரப்படுத்துவதற்கும், வேறு வகைகளில் தகவல் அளிப்பதற்கும் வலைப்பின்னலைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். அவர்கள், மின்னணு சேமிப்பு ஜன்னலைப் (electronic storefront window) போன்ற வெப் பக்கம் ஒன்றை உருவாக்குகின்றனர். ஒரு நிறுவனத்தின் வெப் பக்க முகவரியைத் தெரிந்து வைத்துக்கொண்ட பிறகு, வாடிக்கையாளர்களாகவிருப்பவர்கள் ஒரு ப்ரௌஸரை “ஷாப்பிங்” போய்வரும்படி பயன்படுத்தலாம், அதாவது அதைப் பற்றிய தகவலை ப்ரௌஸ் செய்யலாம். என்றபோதிலும், எந்தவொரு சந்தைவெளியிலும் இருப்பதைப் போலவே, இன்டர்நெட்டிலும், எல்லா பொருட்களுமோ, சேவைகளுமோ, அல்லது அளிக்கப்பட்டிருக்கும் தகவலுமோ தரமானவையல்ல.
ரகசிய மற்றும் பாதுகாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் பற்றிய விஷயங்களைப் பாதுகாக்கும் அளவிற்கு இன்டர்நெட்டை ஆக்கும்படி ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். (பாதுகாப்பு பற்றி நாம் பின்பு பேசுவோம்.) இந்த வணிக நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக, மற்றொரு உலகளாவிய இன்டர்நெட்—இன்டர்நெட் II என்று சிலரால் அழைக்கப்படுவது—கண்டுபிடிப்பில் இருக்கிறது.
“உரையாடல்” என்பது என்ன?
இன்டர்நெட்டின் மற்றொரு பொது சேவை, இன்டர்நெட் அஞ்சல் உரையாடல், அல்லது உரையாடல் என்பது. ஒரு தொகுதியான ஆட்கள், மறுபெயர்களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் உடனுக்குடன் செய்திகளை அனுப்புவதற்கு உரையாடல் அனுமதிக்கிறது. வெவ்வேறு வயது வரம்பையுடையவர்களால் பயன்படுத்தப்பட்டாலும், பிரத்தியேகமாக இளைஞர்களுக்கு மத்தியில் இது பிரபலமடைந்து வருகிறது. இணைக்கப்பட்ட பிறகு, உலகமுழுவதிலும் இதைப் பயன்படுத்தும் எண்ணற்ற மற்றவர்களுடன், இதைப் பயன்படுத்துபவர் தொடர்புக்குள்ளாக்கப்படுகிறார்.
விஞ்ஞான புனை கதை, திரைப்படங்கள், விளையாட்டுகள், அல்லது காதல் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட தலைப்பை முக்கியப்படுத்திக் காட்டும் உரையாடல் அறைகள் அல்லது உரையாடல் இணைப்புகள் என்று அழைக்கப்படுபவை உருவாக்கப்படுகின்றன. ஓர் உரையாடல் அறைக்குள் டைப் செய்யப்படும் எல்லா செய்திகளும், கிட்டத்தட்ட அந்த உரையாடல் அறையில் பங்கேற்கும் எல்லாருடைய கம்ப்யூட்டர் திரைகளிலும் ஒரே நேரத்தில் தோன்றும்.
ஓர் உரையாடல் அறை, ஒரு தொகுதியான ஆட்கள், ஒரே பொதுவான நேரத்தில் ஒருவரோடொருவர் கலந்து பேசிக்கொண்டு இருப்பதைப் போலவே பெரும்பாலும் இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால், எல்லாருமே சுருக்கமான செய்திகளை டைப் செய்கிறார்கள். உரையாடல் அறைகள் பொதுவாக 24 மணிநேரமும் இயங்குகின்றன. மெய்யாகவே, 1 கொரிந்தியர் 15:33-ல் காணப்படுவதைப் போன்ற, கூட்டுறவைப் பற்றிய பைபிள் நியமங்கள், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பொருந்துவதைப் போலவே உரையாடல் அறைகளில் பங்கேற்பதிலும் பொருந்துவதாக கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர். a
இன்டர்நெட்டுக்குப் பணம் கட்டுவது யார்?
‘இன்டர்நெட்டில் ஒரு நபர் தொலைதூரம் பயணிப்பதற்கெல்லாம் யார் பணம் கட்டுகிறார்?’ என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு ஆகும் செலவு, இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் நிறுவனமானாலும் சரி தனிநபரானாலும் சரி, எல்லாராலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. என்றாலும், இன்டர்நெட்டைப் பயன்படுத்துபவர், சர்வதேச மையங்கள் பலவற்றைப் பயன்படுத்தியிருந்தபோதிலும்கூட, ஒரு தொலைதூர தொலைபேசி கட்டணத்தைக் கட்டும்படி கேட்கப்படுவதில்லை. இன்டர்நெட்டைப் பயன்படுத்துபவர்களில் பலர், வணிக ரீதியில் இன்டர்நெட் சேவை அளிக்கும் ஓர் உள்ளூர் நிறுவனத்துடன் கணக்கு வைத்திருக்கின்றனர்; இந்த நிறுவனமே பல சந்தர்ப்பங்களில், இன்டர்நெட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட மாதக் கட்டணத்தை விதிக்கிறது. அதிகப்படியான தொலைபேசி கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக, சேவை அளிக்கும் நிறுவனங்கள், பொதுவாக ஓர் உள்ளூர் எண்ணை அளிக்கின்றன. சாதாரணமாய், பயன்படுத்துவதற்கான மாதக் கட்டணம் தோராயமாக 20 டாலர் (ஐ.மா.).
பார்த்தீர்களா, இன்டர்நெட்டின் மூலமாக எண்ணற்ற சாத்தியங்கள் நிகழுகின்றன. ஆனால், இந்த இன்ஃபர்மேஷன் சூப்பர்ஹைவேயில் நீங்களும் செல்ல வேண்டுமா?
[அடிக்குறிப்பு]
a உரையாடல் அறைகள் சம்பந்தப்பட்ட எச்சரிக்கைக்கான தேவை பின்பு கலந்தாலோசிக்கப்படும்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
இன்டர்நெட் முகவரிகள் அவை என்ன?
இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் நபர்களை அடையாளம் கண்டுகொள்வது, ஈ-மெய்ல் முகவரிகளால் நிறைவேற்றப்படுகிறது. ஈ-மெய்லில் drg@tekwriting.com. என்ற முகவரியைக் கொண்ட ஒரு நண்பருக்கு ஈ-மெய்ல் அனுப்ப நீங்கள் விரும்புவதாக கற்பனை செய்துகொள்வோம். b இந்த உதாரணத்தில், அந்த நபரின் அடையாளம், அல்லது லாகின், “drg” என்று இருக்கிறது. ஆட்கள் பொதுவாக தங்கள் பெயரின் முதலெழுத்துக்களையோ, அல்லது முழுப் பெயரையோ தங்களுடைய லாகின்-ஆக பயன்படுத்துகின்றனர். “@” என்ற அடையாளத்தைத் தொடர்ந்து வரும் பதம், தங்களைப் பணியில் அமர்த்தியிருப்பவரையோ, தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தையோ, அல்லது தங்களுக்கு ஈ-மெய்ல் சேவை அளிக்கும் நிறுவனத்தையோ குறிக்கலாம். இந்த உதாரணத்தில், “tekwriting” என்பது, அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தைக் குறித்துக் காட்டுகிறது. முகவரியின் கடைசி பாகம், உங்கள் நண்பர் லாகின் வைத்திருக்கும் நிறுவனத்தின் வகையைக் குறித்துக் காட்டுகிறது. இந்த உதாரணத்தில், “com” என்பது, ஒரு வணிக நிறுவனத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. கல்வி நிறுவனங்களும் அதைப் போன்ற ஒரு பெயரிடும் முறையையே வைத்திருக்கின்றன. ஆனால் இவை “edu” என்றும், லாபம் கருதாத நிறுவனங்கள் “org” என்றும் முடிகின்றன. மற்றொரு ஈ-மெய்ல் ஸ்டான்டர்ட், அந்த நபரின் நாட்டுக் குறியீட்டுடனும் முடிகிறது. உதாரணமாக, lvg@spicyfoods.ar என்ற முகவரி, “lvg” என்ற லாகின்னை உடைய இந்த நபர் அர்ஜன்டினாவில் “spicyfoods” என்ற பெயருடைய ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது.
மற்றொரு வகையிலான முகவரி, இன்டர்நெட்டில் வெப் பதிப்புகளைக் கண்டுபிடிக்கிறது. மழைக் காடுகளைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புத் தகவல் வெப் பதிப்பில் http://www.ecosystems.com/research/forests/rf என்ற மையத்தில் காணப்படலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். “http” (ஹைப்பர்டெக்ஸ்ட் டிரான்ஸ்பர் புரோட்டோகோல்) என்ற எழுத்துக்கள், வெப் பதிப்பின் ஒரு வகையைக் கையாளுவதற்கான விதிகளின் தொகுப்பைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது; “www.ecosystems.com” என்பது, வெப் சர்வரான (Web server) கம்ப்யூட்டரின் பெயரைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த உதாரணத்தில், “ecosystems” என்ற ஒரு வணிக நிறுவனம் இது. வெப் பதிப்பை மட்டுமே குறிப்பிட்டுக்காட்டுவது, அந்த முகவரியின் கடைசி பாகமே. அதாவது, “/research/forests/rf” என்பது. வெப் முகவரிகள் ஒரே விதமான தகவல்மூலக் கண்டுபிடிப்பாளர்கள், (Uniform Resource Locators) அல்லது சுருக்கமாக URL-கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.
[அடிக்குறிப்பு]
b கொடுக்கப்பட்டிருக்கும் இன்டர்நெட் முகவரிகள் கற்பனையானவை.