இன்டர்நெட்—என்பது என்ன?
இன்டர்நெட்டைப் பயன்படுத்தி, ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஓர் ஆசிரியரான டேவிட், பாடங்களின் விரிவுரைக்கான தகவல்களைப் பெற்றார். கனடாவைச் சேர்ந்த ஒரு தகப்பனார், ரஷ்யாவிலுள்ள தன் மகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டேயிருப்பதற்காக இன்டர்நெட்டைப் பயன்படுத்தினார். ஒரு குடும்பத் தலைவியான லோமா, அண்டம் தோன்றியது முதலான ஆரம்ப கால விஷயங்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சி பற்றி தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அதைப் பயன்படுத்தினார். செயற்கைக் கோள்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்யும் புதிய முறைகளைப் பற்றிய தகவலைக் கண்டறிய ஒரு விவசாயி அதைப் பயன்படுத்தினார். வாடிக்கையாளர்களாகவிருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களையும் தங்களுடைய சேவைகளையும் பற்றி விளம்பரப்படுத்துவதற்கு தொழில் நிறுவனங்கள் அதனிடமாக ஈர்க்கப்படுகின்றன. அறிக்கை, தகவல் ஆகியவை சம்பந்தமான அதன் விரிவான சேவைகளின் உதவியால் தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச செய்தியை பூமி முழுவதிலுமுள்ள மக்கள் வாசிக்கின்றனர்.
இன்டர்நெட், அல்லது சர்வதேச மின்னணு வலைப்பிணைப்பு எனப்படும் இந்தக் கம்ப்யூட்டர் அம்சம் என்ன? தனிப்பட்ட வகையில் உங்களுக்கு அது தேவையா? நீங்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு, அதைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள விரும்பலாம். அளவுக்கு மிஞ்சின வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டாலும், எச்சரிக்கையுடன் இருப்பதற்கான காரணங்கள் இருக்கின்றன; குறிப்பாக, வீட்டில் சிறார்கள் இருந்தால், அவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.
அது என்ன?
ஓர் அறை, ஏராளமான சிலந்திப்பூச்சிகளால் நிறைந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவை ஒவ்வொன்றும் அதனதன் வலையைப் பின்னிக்கொள்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த வலைப்பின்னலுக்குள் சிலந்திப்பூச்சிகள் எளிதாகப் போய்வருமளவிற்கு வலைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவையாய் இருக்கின்றன. இன்டர்நெட்டைப் பற்றிய எளிதாக்கப்பட்ட ஒரு காட்சியை இப்போது நீங்கள் கற்பனை செய்துகொள்ள முடிகிறது—அதாவது, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல்வேறு வகையான கம்ப்யூட்டர்கள் மற்றும் கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களின் ஓர் உலகளாவிய தொகுப்பு. உலகின் மற்றொரு பகுதியிலுள்ள தொலைபேசி வைத்திருக்கும் எவருடனாவது நீங்கள் பேசுவதற்கு ஒரு தொலைபேசி உங்களுக்கு உதவுவதைப் போலவே, ஒருவர் தன்னுடைய கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, உலகின் எந்தவொரு இடத்திலாவது இருக்கும் மற்ற கம்ப்யூட்டர்களுடனோ, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுடனோ தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள இன்டர்நெட் அவருக்கு உதவுகிறது.
சிலர், தகவல் சம்பந்தமான மேம்பட்ட நெடுஞ்சாலை (இன்ஃபர்மேஷன் சூப்பர்-ஹைவே) என்று இன்டர்நெட்டைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். ஒரு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுவர ஒரு சாலை உதவுவதைப் போலவே, பின்னிப்பிணைந்துள்ள பல்வேறு வகையான கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களில் தகவல்கள் பரிமாறப்பட இன்டர்நெட் உதவுகிறது. செய்திகள் பயணமாகையில், அவை போய்ச்சேரும் ஒவ்வொரு வலைப்பின்னலிலும், அதையடுத்த வலைப்பின்னலுடன் இணைப்பதற்கு உதவுகிற தகவல் இருக்கிறது. முடிவாகப் போய்ச்சேருமிடம், வேறொரு நகரத்திலோ அல்லது நாட்டிலோ இருக்கலாம்.
இன்டர்நெட் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பொதுவான சட்டதிட்ட தொகுப்பின் மூலம், ஒவ்வொரு வலைப்பின்னலும், அதையடுத்து அமைந்திருக்கும் வலைப்பின்னலுடன் “பேச” முடியும். உலகளவில், எத்தனை வலைப்பின்னல்கள் இணைக்கப்பட்டுள்ளன? சில மதிப்பீடுகளின்படி, அவை 30,000-க்கும் மேற்பட்ட இணைப்புகள். சமீபத்திய சுற்றாய்வுகளின்படி, இந்த வலைப்பின்னல்கள், உலகமுழுவதிலுமுள்ள 1,00,00,000-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களையும், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் சுமார் 3,00,00,000 பேரையும் இணைக்கின்றன. இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்காகி வருவதாக கணக்கிடப்படுகிறது.
இன்டர்நெட்டில் எப்படிப்பட்ட தகவலை மக்கள் கண்டுபிடிக்க முடியும்? வேகமாய் அதிகரித்து வரும் தகவல் தொகுதியை அது அளிக்கிறது; அந்தத் தொகுதியில், மருத்துவம் முதல் அறிவியல், தொழில்நுட்பம் வரை வெவ்வேறான விஷயங்கள் அடங்கியுள்ளன. பல்வேறு கலைகள் பற்றிய முழுமையான தகவலையும் முக்கியப்படுத்திக் காட்டுவதோடு, மாணவர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட தகவலையும், பொழுதுபோக்கு, கேளிக்கை, போட்டி விளையாட்டுகள், ஷாப்பிங், வேலைவாய்ப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் அடக்கியுள்ளது. பஞ்சாங்கங்கள், அகராதிகள், களஞ்சியங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பையும் இன்டர்நெட் அளிக்கிறது.
என்றாலும், தொல்லைக்குள்ளாக்கும் சில அம்சங்களைப் பற்றியும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. இன்டர்நெட்டில் அடங்கியுள்ள எல்லா தகவல்களுமே தரமானவை என்று கருத முடியுமா? இன்டர்நெட் எப்படிப்பட்ட சேவைகளையும் தகவல்மூலங்களையும் அளிக்கிறது? என்ன வகையான முன்னெச்சரிக்கைகள் பொருத்தமாய் இருக்கின்றன? இந்தக் கேள்விகள் பின்வரும் கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படும்.
[பக்கம் 4-ன் பெட்டி]
இன்டர்நெட்டின் ஆரம்பமும் வடிவமைப்பும்
இன்டர்நெட், ஐ.மா. பாதுகாப்புத் துறையால் 1960-களில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையாக ஆரம்பித்தது. நெடுந்தொலைவிலுள்ள வெவ்வேறு இடங்களிலிருக்கும் விஞ்ஞானிகளும் மற்ற ஆய்வாளர்களும், அரிதாயும், செலவுபிடிப்பதாயும் இருக்கும் கம்ப்யூட்டர்களையும் அவற்றின் தகவலடங்கிய எலக்ட்ரானிக் ஃபைல்களையும் பொதுவாக பயன்படுத்திக்கொண்டு, ஒருவருக்கொருவர் சேர்ந்து உழைப்பதில் அவர்களுக்கு உதவவே அவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்கு, ஓர் ஒத்திசைவான அமைப்பைப் போல் வேலை செய்யவிருக்கும், இணைக்கப்பட்ட வலைப்பின்னல்களின் ஒரு தொகுதி தேவைப்பட்டது.
பனிப்போர், “குண்டு துளைக்காத” ஒரு வலைப்பின்னலை உருவாக்குவதில் கவனம் செலுத்தச் செய்தது. வலைப்பின்னலின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதாக எடுத்துக்கொண்டாலும், மீந்திருக்கும் பாகங்களின் உதவியுடன், அனுப்பப்படும் தகவல் (data), அது போய்ச்சேரும் இடத்தை எப்படியாவது அடைந்துவிடும். வலைப்பிணைப்பு சம்பந்தமான பரிசோதனைகளின் பயனால் ஏற்பட்ட இன்டர்நெட்டில், செய்தி செல்ல வேண்டிய மார்க்கத்தின் பொறுப்பு, ஓரிடத்தில் மட்டும் குவியச் செய்வதற்கு மாறாக, அந்த வலைப்பின்னல் முழுவதிலும் இவ்வாறு பரவும்படி செய்யப்படுகிறது.
பெரும்பாலும், ப்ரௌஸர்களைப் (browsers) பயன்படுத்துவதால், இப்போது இருபது ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இன்டர்நெட்டின் பிரசித்தி அதிகரித்திருக்கிறது. ப்ரௌஸர் என்பது, ஒரு மென்பொருள் (software) கருவி. அது, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் இன்டர்நெட்டில் வெவ்வேறு இடங்களுக்குச் “செல்லும்” முறையைப் பெருமளவில் எளிதாக்குகிறது.