இன்டர்நெட்—உங்களுக்கு உண்மையிலேயே தேவையா?
இன்டர்நெட்டை நீங்கள் பயன்படுத்த வேண்டுமா? இது தனிப்பட்ட ஒரு விஷயம் என்பதும், நீங்களாகவே கவனமாய் சிந்திக்க வேண்டிய ஒன்று என்பதும் உண்மையே. என்ன அம்சங்கள் உங்கள் தீர்மானத்தின்மீது செல்வாக்கு செலுத்தலாம்?
தேவையின் செலவை கணக்கிட்டுப் பார்த்திருக்கிறீர்களா?
இன்டர்நெட் சமீப காலத்தில் பிரபலமடைந்திருப்பதற்கு பெரும்பாலான காரணம், வியாபார உலகம், தன்னுடைய வியாபாரத்தைப் பெருக்குவதற்காக எடுக்கும் பலமான முயற்சிகளே. தெளிவாகவே, இன்டர்நெட் தேவை என்ற உணர்வை உருவாக்குவதே அவற்றின் நோக்கம். தேவை என்ற இந்த உணர்வு வளர்க்கப்பட்டதற்குப் பிறகு, உறுப்பினராவதை சில நிறுவனங்கள் அவசியப்படுத்துகின்றன; அல்லது நீங்கள் முன்பு கட்டணமின்றி பயன்படுத்தி வந்த தகவலுக்காகவோ சேவைக்காகவோ ஆண்டு சந்தாக் கட்டணத்தை விதிக்கின்றன. இது, இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதற்கான மாதாந்தர செலவுடன் சேர்த்து விதிக்கப்படும் கட்டணம். இந்தப் பழக்கத்துக்கு பொதுவான உதாரணம், ஆன்லைனிலிருக்கும் சில செய்தித்தாள்கள்.
உங்களுடைய உண்மையான தேவைக்கு எதிராக, இன்டர்நெட் கருவிக்கும் சாஃப்ட்வேருக்கும் ஆகும் செலவைக் கணக்கிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? (லூக்கா 14:28-30-ஐ ஒப்பிடுக.) இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் பொது நூலகங்களோ, பள்ளிகளோ இருக்கின்றனவா? முதலில் இந்தத் தகவல் மூலங்களைப் பயன்படுத்திப் பார்ப்பது, ஒரு தனிப்பட்ட கம்ப்யூட்டருக்காகவும் அதோடு தொடர்புடைய கருவிக்காகவும் மிக அதிகப் பணத்தை முதலீடு செய்யாமலேயே, அவை உங்களுக்குத் தேவைதானா என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். உண்மையிலேயே இப்படிப்பட்ட தகவல் மூலங்கள் எவ்வளவு அடிக்கடி தேவைப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் நிலை வரும்வரையில், தேவைக்கு ஏற்றாற்போல், பொருத்தமான பொது இன்டர்நெட் தகவல் மூலங்கள் பயன்படுத்தப்படலாம். பொதுமக்கள் கேள்விப்படுவதற்கு முன்பே, இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இன்டர்நெட் இருந்திருந்ததை நினைவில் கொள்ளுங்கள்; அப்படியென்றால், அதற்கான தேவையைப் பற்றி உணரும் நாளைப் பற்றி சொல்லத் தேவையில்லை!
அரண்—உங்கள் அந்தரங்கம் அரண் அமைப்பு செய்யப்பட்டிருக்கிறதா?
மற்றொரு முக்கியமான கவலை, இரகசியத்தைக் காப்பாற்றுதல். உதாரணமாக, நீங்கள் அனுப்பும் ஈ-மெய்ல் செய்தியை யாருக்கு அனுப்பினீர்களோ, அவர்கள் மட்டுமே அதைப் பார்க்க வேண்டும். என்றாலும், அந்தச் செய்தி கடந்து செல்கையில், தந்திரமான, விஷமியான ஒரு நபர் அல்லது ஒரு தொகுதி, உங்கள் கடிதத் தொடர்பை தடங்கல் செய்யவோ, நோட்டமிடவோ செய்யலாம். செய்திகளைப் பாதுகாப்பதற்கென்று, அனுப்புவதற்கு முன்பு அந்தக் கடிதத்திலுள்ள இரகசிய பாகத்தைப் பிறர் வாசிக்க முடியாதபடி தாறுமாறாக குழப்புவதற்கான ஈ-மெய்ல் சாஃப்ட்வேர் தயாரிப்புகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். மறுபக்கத்தில், பெறுநராய் இருக்கும் தொகுதியினருக்கு, அந்தச் செய்தியைத் தெளிவாக்குவதற்காக மற்றொரு சாஃப்ட்வேர் தயாரிப்பு தேவைப்படலாம்.
சமீபத்தில், இன்டர்நெட்டில் வணிக நோக்குடன், கிரெடிட் கார்டு மற்றும் குறிப்பிட்டவருக்கு மட்டுமே உரிய தகவல் பரிமாற்றம் பற்றிய பல கலந்தாலோசிப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அடிப்படையான புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், புகழ்பெற்ற கம்ப்யூட்டர் அரண் அமைப்பு ஆராய்ச்சியாளர் டாரத்தி டெனிங் குறிப்பிடுவதாவது: “முற்றிலுமான அரண் அமைப்புகளைப் பெறுவது சாத்தியமல்ல; ஆனால், கம்ப்யூட்டர் புலிகள், இரகசிய செய்திகளை அறிந்துகொள்ளும் நிலையில் இருப்பவர்கள் ஆகியோரால் வரும் அபாயத்தையும், அதே சமயத்தில் சிஸ்டம்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலின் மதிப்பையும் பொருத்து, அபாயத்தைக் கணிசமான அளவுக்கு ஒருவேளை குறைக்கலாம்.” இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டதோ இல்லையோ, எந்தவொரு கம்ப்யூட்டர் அமைப்பிலும் முற்றிலுமான அரண் அமைப்பைப் பெற முடிவதில்லை.
நீங்கள் நேரம் செலவிட முடியுமா?
மற்றொரு முக்கியப் பிரச்சினை, உங்கள் நேரம். இன்டர்நெட்டின் இணைப்பைப் பெறுவதற்கும், அதைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் எவ்வளவு நேரம் எடுக்கும்? மேலும், இன்டர்நெட்டில் மேலெழுந்தவாரி தேடல், “புதிதாய் இன்டர்நெட்டைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் ஒரு நபருக்கு, மிகவும் அடிமைப்படுத்தும், அதிக நேரத்தை எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாய் இருக்கலாம்” என்று அனுபவம் வாய்ந்த இன்டர்நெட் போதனையாளர் குறிப்பிட்டுக் காட்டினார். இது ஏன்?
தெரிந்துகொள்வதற்கென, அதிகமான ஆர்வமூட்டும் பொருட்களும், எண்ணற்ற புதிய விஷயங்களும் இருக்கின்றன. மொத்தத்தில், கண்ணைக் கவரும் பதிப்புகளைக் கொண்ட பல நூலகங்களை உடையதுதான் இன்டர்நெட். அதில் வெறுமனே கொஞ்சத்தை நோட்டமிடுவதுகூட தூக்கத்தைப் பற்றியே நினைத்துப் பார்க்காத அளவுக்கு படிப்படியாக மாலை நேரத்தை எடுத்துக்கொள்கிறது. (பக்கம் 13-ல் “உங்கள் நேரம் எவ்வளவு மதிப்புள்ளது?” என்ற பெட்டியைக் காண்க.) உண்மையில், வலைப்பின்னல் அமைப்பைப் பயன்படுத்தும் அனைவருமே சுயகட்டுப்பாடு இல்லாதவர்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. என்றாலும், வலைப்பின்னலில் மேலெழுந்தவாரி தேடலின்போது, குறிப்பாக இளைஞர்கள், தாங்கள் செலவிடும் நேரத்தையும் பார்க்கும் பொருளையும் கட்டுப்படுத்துவது ஞானமாய் இருக்கும். பல குடும்பத்தினர் தொலைக்காட்சிகளின் விஷயத்திலும் அவ்வாறே செய்கின்றனர். a குடும்பமாக சேர்ந்து செய்யும் நடவடிக்கைகளுக்கும், ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கி வைத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த இது உதவும்.—உபாகமம் 6:6, 7; மத்தேயு 5:3.
நீங்கள் வாய்ப்பை நழுவ விடுகிறீர்களா?
காலப்போக்கில், உலகின் வளர்ந்துவரும் பாகங்களிலெல்லாம் இன்டர்நெட் தொழில்நுட்பம் முழுவதுமாய் பரவிவிடும். என்றாலும், முதல் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவர்களைப் பற்றி திரும்பவும் நினைத்துப் பாருங்கள். அவர்கள் பெற்ற தகவலில் பெரும்பாலானவை, நூலகங்கள், தொலைபேசிகள், தபால்கள், அல்லது செய்தித்தாள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பெற்றிருந்திருக்கலாம். இந்த முறைகளில் சில, அதிக நேரத்தையும் செலவையும் உட்படுத்தலாம் என்பது மெய்யே. என்றாலும், உலகமுழுவதிலுமுள்ள மக்களில் பெரும்பான்மையோருக்கு, மிகவும் பாரம்பரியமான இந்த முறைகள், இன்னும் கொஞ்ச காலத்திற்கு தகவல் பரிமாற்றத்திற்கான அடிப்படை வழியாக தொடர்ந்து இருக்கும் என்றே தோன்றுகிறது.
[அடிக்குறிப்பு]
a “இளைஞர் கேட்கின்றனர் . . . அதிகமாய் டிவி பார்ப்பதை நான் எவ்வாறு நிறுத்த முடியும்?” என்ற பிப்ரவரி 22, 1985 தேதியிட்ட (ஆங்கில) விழித்தெழு! கட்டுரையைக் காண்க.
[பக்கம் 9-ன் படம்]
சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் வலைப்பின்னலில் மேலெழுந்தவாரி தேடல் ஒரு கண்ணியாகலாம்