காட்டில் இசைநாடக அரங்கு
பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்
விமானத்தின் ஜன்னல்கள் வழியாகப் பார்க்கையில், இரண்டு நதிகள்—பொன்னிற சூலீமோய்ன்ஸும் ப்ரௌன்நிற நீக்ரோவும்—ஒன்றையொன்று சந்திப்பதை நாங்கள் பார்க்கிறோம். அவை சங்கமமாகும்போது, பாய்ந்தோடும் திசையில், பத்து கிலோமீட்டர் தூரம் வரையிலும் ஒன்றோடொன்று இரண்டறக் கலக்க மறுக்கின்றன. அருகில், பிரேஸிலின் அமேசோனாஸ் மாநிலத்தின் தலைநகரான மனாஸில் விமானம் தரையிறங்குகிறது.
“இங்கு இரண்டு பருவங்கள் மாறிமாறி வருகின்றன” என்று மனாஸ் மக்கள் கூறுகின்றனர். “ஒவ்வொரு நாளும் மழைபெய்கிறது; அல்லது ஒருநாள் முழுவதும் மழைபெய்கிறது.” ஆனால் முரண்பட்ட இயற்கை அமைப்புகளைக் கொண்ட இந்நகரில் வசிக்கும் 15 லட்சம் பேரும், இங்குமங்குமாய் பகட்டாக நடந்துகொண்டிருப்பதை இம் மழை தடை செய்வதில்லை. அகன்ற சாலைகளிலுள்ள தொழில்நுட்பம் மிகுந்த தொழிற்சாலைகளையும், மேட்டுத் தெருக்களிலுள்ள அடுக்குமாடி கட்டடங்களையும் கடந்துசென்று, அந் நகரின் நெரிசல்மிகுந்த மத்திபப் பகுதிக்கு நாங்கள் விரைந்திருக்கிறோம்; அங்கே வானளாவும் கட்டடங்களும் அரண்மனையை ஒத்த நினைவுக்கட்டடங்களும் எங்கள் கவனத்தைக் கவருகின்றன. மனாஸ் ஒருகாலத்தில் காட்டின் பாரிஸ் என்று அழைக்கப்பட்டது ஏன் என்பதை எங்களால் பார்க்க முடிகிறது. என்றாலும், ஓர் அழகிய கட்டடம்—இசைநாடக அரங்கு—எங்கள் கண்களுக்குத் தெள்ளத்தெளிவாய்த் தெரிகிறது.
“பல இடங்களில் இசைநாடக அரங்குகள் இருந்தாலும், டியாட்ரூ அமேசோனாஸ் சற்று வேறுபட்டது. இது ஓர் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கிறது” என்று இந்த அரங்கின் இயக்குநரான ஈனஸ் லீமா டாவ் கூறுகிறார். உலகிலேயே மிகப் பெரிய மழைக்காட்டுப் பகுதியின் மத்தியில் அப்படிப்பட்ட ஓர் அழகிய இசைநாடக அரங்கு வந்தது எப்படி?
ரப்பர் தொடர்பு
1669-ல், ஃபார்ட்லேஸா டி சௌன் ஸூஸே டூ ரியோ நீக்ரோ என்ற பெயருடைய காட்டுக் கோட்டை ஒன்றுக்கு, போர்த்துகீசிய கேப்டன் ஃபிரான்சிஸ்கூ ட மோட்ட ஃபால்கௌன் அடிக்கல் நாட்டினார். அதன் பெயரைப் பலவாறாக மாற்றினதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்தியப் பழங்குடியினரான மானாவோஸ் என்போரின் பெயரை வைத்து, 1856-ல் அதற்கு மனாஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது. 1900-ம் ஆண்டுவாக்கில், 50,000 பேர் மனாஸுக்குத் திரண்டுவந்திருந்தனர். அந்தக் கூட்டத்தை ஈர்த்தது எது? அமேசான் நதிப்படுகையைச் சேர்ந்த ஹெவியா பிரேஸிலியன்சிஸ் (Hevea brasiliensis) அல்லது ரப்பர் மரம்.
அந்த மரங்களிலிருந்து வடிக்கப்பட்ட ரப்பர் பாலிலிருந்து செய்யப்பட்ட கனமான பந்துகளை வைத்து இந்தியர்கள் விளையாடிக்கொண்டிருந்ததை அந்தப் போர்த்துகீசிய குடியேற்றக்காரர்கள் கவனித்தனர். காலப்போக்கில், அந்த ரப்பர் பாலின் மற்றொரு உபயோகத்தையும் அந்தக் குடியேற்றக்காரர்கள் கண்டனர். 1750-ல், போர்த்துகீசிய அரசர் டோங் ஸூஸே, தன்னுடைய பூட்ஸ்களுக்குள் நீர் புகாமல் இருக்கும்படி செய்ய அவற்றை பிரேஸிலுக்கு அனுப்பிவந்தார். 1800-ம் ஆண்டுவாக்கில், வட அமெரிக்காவிலுள்ள நியூ இங்கிலாந்துக்கு ரப்பர் ஷூக்களை பிரேஸில் ஏற்றுமதி செய்துவந்தது. என்றபோதிலும், 1839-ல் சார்ல்ஸ் குட்யியரின் வல்கனைசேஷன் கண்டுபிடிப்பும், 1888-ல் ஜான் டன்லப்பின் காற்றடிக்கப்படும் டயருக்கான தனியுரிமைச் சான்றிதழும், ‘ரப்பர் மோகத்தைத்’ தூண்டுவித்தன. உலகில் ரப்பருக்கான மவுசு ஏறிவிட்டது.
அதற்குப் பிறகு விரைவிலேயே, கிட்டத்தட்ட 2,00,000 பிரேஸில் நாட்டவர்கள் செரிங்கேரோக்களாக அல்லது ரப்பர் வடிப்பவர்களாக வேலை பார்த்துவந்தனர்; அவர்கள் மனாஸைச் சுற்றி இங்குமங்குமாய் இருந்த மழைக் காட்டின் எட்டுக் கோடி ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர் பால் வடித்தனர்.
செல்வத்தினால் ஏற்பட்ட மகிழ்ச்சி தாண்டவமாடிய ஆண்டுகளில், மின்சக்தி, தொலைபேசி ஆகியவற்றோடுகூட, நகருக்குச் செல்வதற்கு டிராம் இருப்புப்பாதையும்—முதன்முதல் தென் அமெரிக்காவில் போடப்பட்டதாய் இருந்த இருப்புப்பாதை—போடப்பட்டது. ரப்பர் சீமான்கள் மாளிகைகளைக் கட்டி, அயர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேஜை விரிப்புகளைப் பயன்படுத்தினர்; அவர்களுடைய குடும்பத்தினர் ஐரோப்பிய கலாச்சாரத்தை—இசைநாடகம் உட்பட—மகிழ்ந்தனுபவிப்பதற்காக ஐரோப்பாவுக்குப் போவதும் வருவதுமாய் இருந்தனர். விரைவில், ஐரோப்பாவிலுள்ள இசைநாடக அரங்கைப் போன்றதோர் அரங்கு தங்களுக்கும் வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
ஐரோப்பியப் பொருட்களை இடமாற்றம் செய்தல்
சர்ச்சை அடுத்தும், காடால் சூழப்பட்டும் இருக்கும்படி, இரண்டு உபநதிக்கும் இடையிலான ஒரு குன்றில் ஓர் இடத்தை அந்த நகரத்தார் தெரிந்தெடுத்தபோது, அந்த இலட்சியக்கனவு 1881-ல் நனவாக ஆரம்பித்தது. பிறகு, கட்டுமானப் பொருட்களை ஏற்றிவந்த கப்பல்கள் மனாஸுக்கு வருவதற்காக, அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து, இன்னும் 1,300 கிலோமீட்டர் தூரம் அமேசான் நதியில் பயணத்தைத் தொடர்ந்தன.
ஆனால், கொஞ்சம் பொறுங்களேன்! பழைய பாணி கலந்த இந்தக் கட்டடத்தின் மேற்பகுதியில், ஒரு குவிமாடம் இருப்பது ஏன்? உண்மைதான், முதலில் இக் கட்டடம் கட்டப்பட்டபோது இந்தக் குவிமாடம் இருக்கவில்லை; ஆனால், பொறியியலாளர்களில் ஒருவர் பிரான்ஸில் நடந்த ஒரு கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது ஒரு குவிமாடத்தைப் பார்த்தார்; அது அவருக்குப் பிடித்திருந்ததால், அதை விலைகொடுத்தே வாங்கிவிட்டார். அந்தக் குவிமாடத்தை அலங்கரிக்க, பச்சை-மஞ்சள் நிறம் கலந்த சுமார் 36,000 ஜெர்மன் டைல்கள் பயன்படுத்தப்பட்டன.
குதிரைலாடம் போன்ற அந்த அரங்கின் அடித்தளத்தில், பிரம்பால் ஆன 700 சாய்வு நாற்காலிகளும், அதிகாரிகள் அமரக்கூடிய ஒரு சிறிய ஒதுக்குப்பகுதியில் 12 சாய்வு நாற்காலிகளும், மேலே பால்கனியில் தனித்தனியே இருந்த 90 இருக்கைப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஐந்தைந்து இருக்கைகளும் போடப்பட்டன. இருக்கைப் பகுதிகளைப் பிடித்துக்கொள்வதற்காக, பணக்காரக் குடும்பங்கள், வார்ப்பிக்கப்பட்ட 22 கிரேக்க முகமூடிகளை நன்கொடையாகக் கொடுத்தன; ஐரோப்பாவைச் சேர்ந்த பாடல் இயற்றுநர்கள், இசையமைப்பாளர்கள், நாடக ஆசிரியர்கள் ஆகியோரை கௌரவப்படுத்தின அந்த முகமூடிகள், அத் தூண்களுக்கு மேலாக வைக்கப்பட்டன.
அந்த இசைநாடக அரங்கு விளக்கால் ஒளியூட்டப்பட்டிருப்பது, அதை எடுப்பாக உயர்த்திக்காட்டுகிறது. அந்த அரங்கின் நடுவில் வெண்கலத்தால் ஆன பெரிய அலங்கார கொத்து விளக்கு ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. அது பிரான்ஸில் செய்யப்பட்டு இத்தாலிய படிகக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள பல்புகளை மாற்றுவதற்கோ, அதைத் துடைத்து சுத்தம் செய்வதற்கோ அவ்வப்போது கீழே இறக்கிக் கொள்ளலாம். வெண்கலத்தை அடிப்பாகமாகக் கொண்ட 166 விளக்குகள், ட்யூலிப் வடிவ 1,630 கண்ணாடிக் கூரைகள் அமைக்கப்பெற்றுள்ளதால், சுவரில் வரையப்பட்டுள்ள சித்திரங்களை எடுப்பாய் எடுத்துக்காட்ட உதவுகின்றன.
பாரிஸில் வசித்துவந்தவரும், இத்தாலியில் கல்வி பயின்றவருமான, கிறிஸ்பீங் டூ ஆமாரால் என்ற, 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த பிரேஸில் நாட்டு ஓவியர், அந்த அரங்கின் உள்பக்கத்து உச்சிப்பகுதியில், தன்னுடைய பிரஷ்ஷினால் நான்கு காட்சிகளை ஓவியம் தீட்டினார். அவையாவன: இசைநாடகம், நடனம், இசை, சோகநாடகம். ஈஃபல் டவருக்குக் கீழே நீங்கள் நிற்பதுபோன்ற ஒரு கற்பனைக் காட்சியை உங்களுக்கு அளிப்பதில் அவர் வெற்றிகண்டிருக்கிறார். கேன்வாஸால் ஆன மேடையின் மூடுதிரையில், புதுவிதமான ஓர் அர்த்தத்தைச் சித்தரித்துக்காட்டும் ஒரு காட்சியை—அமேசானை உருவாக்கும் இரண்டு நதிகளின் சங்கமத்தை—ஓவியமாய்த் தீட்டினார். அந்த 100 வயது மூடுதிரை, உருட்டிச் சுற்றப்படாமல் அப்படியே நேராய் அந்தக் குவிமாடத்துக்குள் உயர்த்தப்படும்படி செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படுவதன் மூலம் அந்த ஓவியம் சிதைவுறுவது குறைக்கப்படுகிறது.
நடன அரங்கு இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது; அந்த அரங்கின் இரு முனைகளிலுள்ள உட்புறச் சுவர்களிலும் வைக்கப்பட்டுள்ள, பிரெஞ்சுப் படிகத்தாலான உயரமான கண்ணாடி, இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட 32 அலங்கார கொத்துவிளக்குகளையும் பிரதிபலிக்கிறது. அந்தப் பிரகாசமான ஒளி, இத்தாலிய ஓவியர் டோமேனிக்கோ டெ ஆன்செலீஸ் தீட்டியுள்ள அமேசானைச் சேர்ந்த தாவர, விலங்கு வகைகளின் ஓவியங்களுக்கு ஒளியூட்டுகிறது. அபாரமான ஒரு காட்சியை அளிப்பதற்காக, வார்ப்பிரும்புத் தூண்கள் வைக்கப்பட்டு பளிங்கைப் போல் காட்சியளிக்கும்படி, அவற்றுக்கு வண்ணம் தீட்டப்பட்டது. பளிங்கைப் போல் காட்சியளிக்கும் பால்கனியின் கைப்பிடிச் சுவரைச் சற்று தட்டிப்பார்த்தால், அது மரத்தால் ஆனது என்று தெரியவரும். வழவழப்பாக்கப்பட்ட தரை, பிரெஞ்சு முறையில் போடப்பட்டது; அதாவது, ஆணியையோ பசையையோ பயன்படுத்தாமலே, 12,000 மரத்துண்டுகளை ஒன்றாக இணைத்துப் போடப்பட்டது. தரை, மேஜை நாற்காலி ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட்ட மரம் ஒன்றுதான் பிரேஸிலிய அம்சமாய் இருந்தது. ஒவ்வொருவரும் சௌகரியமாயும், குளுகுளுவென்றும் உணர்ந்திருந்திருப்பர் என்பதை எங்களால் கற்பனை செய்ய முடிந்தது. குளுகுளுவென்று இருந்திருப்பதாக ஏன் சொல்லமுடிகிறது?
கொத்தனார்கள், அந்த அரங்கைச் சுற்றிலுமுள்ள தெருக்களின் நடைபாதைத் தளக் கற்களை, ரப்பர் பால் கலந்த பொருளால் பாவியுள்ளனர். இது, பிந்தி வருபவர்களின் குதிரைவண்டிகளால் எழுப்பப்படும் ஓசையை திறமையாய் உள்ளடக்கிக்கொண்டது. இது, அந்தக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கவும், வெளிக்காற்று உள்ளே வந்து, பிரம்பாலான சாய்வு நாற்காலிகளின் வழியாக வருடி, வெப்பத்தின் கொடுமையைத் தணிக்கவும் அனுமதித்தது.
ஒளிவீசும் வெண்ணிற திராட்சைமதுவிலிருந்து கெட்டகாலத்துக்கு
1896-ல் திறப்புவிழா நடைபெற்ற இரவுநேரத்தில், கதவுகள் விசாலமாய்த் திறந்துவைக்கப்பட்டபொழுது, இந்த அரங்குக்கு முன்னாலிருந்த செயற்கை நீரூற்றில், முதல்தர ஒயின் பாய்ந்தோடியது. இந்தக் கட்டுமானத் திட்டத்தின் பணிக்காக 15 ஆண்டுக்கால வேலை நடந்துள்ளது; 1 கோடி டாலர் பணம் செலவழிந்துள்ளது. பிரசித்திபெற்ற குரல்களுக்கான பிரமாண்டமான அரங்காய் அது இருந்தது. இத்தாலி, பிரான்ஸ், போர்த்துகல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலிருந்து, ஆண்டுகளினூடே, தனிப்பாடகர்களும் தொகுதிப் பாடகர்களும், பூச்சினியின் லா போவாம், வியர்டியின் ரீகோலெட்டோ, ஈல் ட்ரோவாடோரி ஆகியவற்றை நிகழ்த்த வந்தனர். காலரா, மலேரியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற வெப்ப மண்டல நோய்கள், சில பாடகர்கள் மனாஸ்ஸுக்கு வந்து அந்த அரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தடைசெய்தபோதிலும், அந்த அரங்கைப் பயமுறுத்தும் மற்றொரு விஷயம் எழுந்தது; அதுவே, ரப்பருக்கு இருந்த மவுசின் முடிவு. மனாஸுக்கு கெட்டகாலம் வந்தது.—“ரப்பர் மவுசைக் கொன்று இசைநாடகத்தை நிறுத்திய அந்தக் கடத்தல்” என்ற பெட்டியைக் காண்க.
1923-ல், பிரேஸிலின் ரப்பருக்கான பிரத்தியேக உரிமை குறைந்தது. மனாஸை, களைமண்டியிருக்கும் பிற்பட்ட கலாச்சாரப் பகுதியாக ஆக்கிவிடும் வகையில், தொழில் அதிபர்களும், துணிச்சல் முதலீட்டு வியாபாரிகளும், வேசிகளும் தங்கள் மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, நகரைவிட்டு வெளியேறினர். அந்த இசைநாடக அரங்கைப் பற்றியென்ன? அந்த அரங்கின் சார்புக் கட்டடங்கள், ரப்பர் சேமிப்புக் கிடங்குகளாக மாறின; அந்த மேடையோ, கால்பந்தாட்ட உள் விளையாட்டு அரங்கமாகப் பயன்படுத்தப்பட்டது!
மீண்டும் ஒளிமயமான காலங்கள்
அதற்குப் பிறகு, மழைக் காடுகளின் ரகசியங்களைத் துருவி ஆராயவந்த சுற்றுச்சூழலியல் வல்லுநர்களின் ஆரம்ப இடமாக மனாஸ் மாறியது. மற்றவர்கள், பாம்பைப் பிடித்துப் பார்ப்பதற்கும், கிளிக்கு உணவூட்டுவதற்கும், தேவாங்கு போன்ற பாலூட்டி விலங்கு ஒன்றைத் தடவிப்பார்ப்பதற்கும் சில நாட்களைச் செலவிடுவதற்காக வந்தனர். அந்த இசைநாடக அரங்கு மீண்டும் புதுப்பிக்கப்படுவது, மனாஸை ஒரு வேறுபட்ட விதமான கவர்ச்சியூட்டும் தலமாக்கும்!
ஆகவே, 1974-ல், அந்த அரங்கின் ஆரம்ப அழகைக் காக்கவும், தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றங்களைச் செய்யவும் வேண்டி அந்த அரங்கு, பெரும் செலவில் புதுப்பிக்கப்பட்டது. அங்குள்ள விளக்குகள், கண்ணாடிகள், மேஜை நாற்காலிகள் ஆகியவை துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டன. அந்த இசைக்கருவி இயக்குநரின் அரைவட்ட மேடைப் பகுதி மேலும்கீழுமாக ஏறியிறங்க, நீராற்றலால் இயக்கப்படும் ஓர் அமைப்பைத் தொழில் வல்லுநர்கள் பொருத்தினர். அந்த மேடையின் தரையைப் புதிதுபடுத்தி, மேடையின் பின்புறத்திலுள்ள ஒலி, ஒளி அமைப்புகள், வீடியோ சாதனங்கள் ஆகியவற்றைப் புதிதுபடுத்தினர். அடித்தளத்தில், நாற்காலிக்கு அடிப்பகுதியில் ஏர் கண்டிஷனிங் செய்தனர்.
ரியோ டி ஜனீரோவிலிருந்து வந்த ஒத்திசைவான இசைக்கருவி இயக்குநர் குழு, அந்தக் கலாச்சாரத்தை அரங்கிற்குள் மீண்டும் கொண்டுவந்தது. பிறகு, கூட்டு நடனம் ஆடும் புகழ்வாய்ந்த பெண்ணான, மார்கோ ஃபாண்ட்டின் என்பவர், அன்ன ஏரி (Swan Lake) என்ற நடனத்தை ஆடிக்காட்டி, அந்த மேடையைக் கௌரவித்தார்; அதோடு, அவருடைய நடன ஷூக்களையும் அந்த அரங்கின் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கும்படி கொடுத்துவிட்டார்.
அதிக சௌகரியம், அழகு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு கூடுதலான திருத்தும் வேலைகள் செய்யத் தேவைப்பட்டது. களைப்பூட்டும் ஆராய்ச்சிக்கும் கவனமான திட்டமிடுதலுக்கும் பின்பு, நான்காண்டுகளாய், 600 பணியாட்களும் 30 தொழில்நுட்பக் கலைஞர்களும் அந்த அரங்கில் வந்து மொய்த்தனர். பெயிண்ட்டின் எட்டு அடுக்குக்குக் கீழே முதன்முதலாக அடித்திருந்த ரோஸ் நிறத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்தக் குவிமாடத்து விளிம்பில் மறு-ஒப்பனை செய்ய வேண்டியிருந்தது. பழைய டைல்கள் நீக்கப்பட்டன. அவற்றைப் போன்றே பிரேஸிலில் செய்யப்பட்ட புதிய டைல்கள் பதிக்கப்பட்டன. நாற்காலிகளுக்கு பிரெஞ்சு வெல்வெட் துணியால் தைக்கப்பட்ட திண்டுறைகள் இணைவிக்கப்பட்டன. நுணுக்கமான கலை வேலைப்பாடுகளிலும் ஓவியங்களிலும் திருத்தும் வேலைக்காக அறுவைக்கத்தியும் (scalpel) பிரஷ்ஷும் பயன்படுத்தப்பட்டன. எதிர்பாராவிதமாக, நடைக்கூடங்களில் வரையப்பட்டிருந்த அந்தக் கலை வேலைப்பாடுகள் ஈரப்பதத்தால் சேதப்படுத்தப்பட்டிருந்ததால், ஜேட் கல்லைப் போன்ற பச்சைநிற சீன சித்திரவேலைப்பாடு கொண்ட பட்டுத்துணியால், அந்த மரப்பலகைகள் மூடப்பட்டன. அதோடு, மரத்தூண்களையும் பால்கனியின் கைப்பிடிச் சுவர்களையும் கறையான்கள் அரித்திருந்தன. அவற்றை ஒழித்துக்கட்டுவதற்காக, அவற்றுக்கு 13,777.4 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டது.
1990-ல், மீண்டும் ஒரு பிரமாண்டமான அரங்கில் பிரசித்திபெற்ற குரல்கள் கேட்கப்பட்டன. மேல்ஸ்தாயியில் பாடும் பிரேஸில் நாட்டவரான செலீனி ஈம்பர்ட்டின் பாடல்வகையும், நெல்ஸன் ஃபிரேரேயின் பியானோ வாத்தியங்களும் அந்த அரங்கை மேன்மையுறச் செய்தன.
அது என்ன, மணியோசையா? ஆம். இன்னும் ஐந்து நிமிடங்களுக்குள் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்பதைத் தெரிவிக்கும் மணியோசை.
“டியாட்ரூ அமேசோனாஸின் 100-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதற்காக, உச்சஸ்தாயியில் பாடும் பிரசித்திபெற்ற ஹோஸே கார்ரெராஸை அழைத்திருந்தோம். அவர் அந்த அரங்கின் ஓசை ஆய்வியல் அம்சங்களைக் (‘கச்சிதமாய்’ இருப்பதாகப்) பரிசோதித்துக் கண்டுணர்ந்தார்” என்று அரங்கின் இயக்குநர் டாவ் கூறுகிறார். அந்த நடன அரங்கில் ஒரு நாட்டியத்தோடு அந்த மாலைப்பொழுது முடிவடைந்தது. நடத்துநர் ஸூபின் மேத்தா, உச்சஸ்தாயியில் பாடும் பாடகர் லூச்சானோ பாவாராட்டே, கார்மென் என்ற வெவ்வேறு வித இசைநாடகத்தை அளித்த அர்ஜன்டினாவைச் சேர்ந்த நாடகக் குழு ஆகியோரின் வருகையால் அவ் விழாக்கள் தொடர்ந்தன.
அது மூன்று நிமிட மணியோசை. நாங்கள் எங்கள் இருக்கைகளில் அமர்வது சிறந்தது.
நாள்முழுக்க, 60 பணியாளர்கள், நிகழ்ச்சிநிரலை அளிக்கும்பொருட்டு திரைகளுக்குப் பின்னால் இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அதோடு, இசைமேளக் குழுக்கள், கிராமியக் காட்சிகள், நாடகங்கள் ஆகியவையும் நடைபெறவிருந்தன. ஆனால் இன்று நடைபெறவிருந்தது, ஒரு கூட்டு நடனம்.
ஒரு நிமிட மணியோசை. உஷ்.
ஆகவே, காட்டிலுள்ள இசைநாடக அரங்கைக் காண எப்பொழுது நீங்கள் வருகிறீர்கள்?
[பக்கம் 17-ன் பெட்டி/படம்]
“ரப்பர் மவுசைக் கொன்று இசைநாடகத்தை நிறுத்திய அந்தக் கடத்தல்”
1876-ல், ஹென்றி விக்கம் என்ற ஓர் இளம் ஆங்கிலேய சாதனையாளர், ஒரு சதித்திட்டம் தீட்டியதால், பிரேஸிலின் ரப்பருக்கிருந்த மவுசு குறைந்துவிட்டது. இந்தியர்களின் உதவியுடன், அமேசானியக் காடுகளிலிருந்து முதல் தரமான, 70,000 ஹெவியா பிரேஸிலியன்சிஸ் நாற்றுகளை அவர் “கடத்தினார்;” அவற்றை ஒரு நீராவிப்படகில் ஏற்றி, பிரேஸிலிய வணிக இலாகாவின் விதிமுறைகளை மீறி, “விக்டோரியா மகாராணிக்கு அனுப்பப்படும் அரிய தாவர சேம்ப்பில்கள்” என்ற சாக்கில் அவற்றைக் கடத்தினார். அட்லான்டிக்கின் வழியே செல்லும் படகில் அவற்றைப் பாதுகாத்து, இங்கிலாந்து தேசத்து க்யூ நகரிலுள்ள ராயல் பொட்டானிக் கார்டன்ஸ்-ன் கண்ணாடிக்கூடுகளில் வைப்பதற்காக, வாடகைக்கு அமர்த்தப்பட்ட பிரத்தியேக ரயிலில் வேகமாய் அனுப்பிவைத்தார்; அங்கே, சில வாரங்களுக்குப் பின்பு அந்த நாற்றுகள் துளிர்த்தன. அங்கிருந்து, அவை ஆசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, இலங்கையிலும் மலேய தீபகற்பத்திலுமுள்ள சதுப்புநில மண்ணில் நட்டுவைக்கப்பட்டன. 1912-ம் ஆண்டுவாக்கில், கடத்தப்பட்ட அந்த நாற்றுகள் நோயற்ற ரப்பர் தோட்டங்களாக வளர்ந்திருந்தன; அவை மரங்களாக வளர்ந்து ரப்பர் பாலை உற்பத்தி செய்ய ஆரம்பித்தபோது, “பிரேஸிலின் ரப்பருக்கிருந்த மவுசு என்றென்றுமாய்ச் சரிந்துவிட்டிருந்தது” என்று ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது.
[பக்கம் 14-ன் வரைப்படம்]
மனாஸ்
Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.
[பக்கம் 15-ன் படம்]
சங்கமிக்க மறுக்கும் இரண்டு நதிகள்
[பக்கம் 15-ன் படம்]
அரங்கின் குவிமாடம்—ஒரு சௌகரியமான அடையாளக்குறி
[பக்கம் 16-ன் படம்]
மழைக் காட்டிலுள்ள அழகிய கட்டடம்
[பக்கம் 17-ன் படம்]
மீண்டும் ஒரு பிரமாண்டமான அரங்கு