மெய்க்கடவுளைக் கண்டுபிடிக்குமுன்பு, பற்பல கடவுட்கள்
நான் 1921-ல், இங்கிலாந்திலுள்ள க்ராய்டன் என்ற இடத்தில், மூன்று பெண்பிள்ளைகள், இரண்டு ஆண்பிள்ளைகளில், மூத்தவளாகப் பிறந்தேன். எனக்கு மூன்று வயதாய் இருந்தபோது, பிள்ளைகளாகிய எங்களில் ஓரிருவருக்கு தொண்டை அடைப்பான் நோய் (diphtheria) வந்துவிட்டது. நான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். என் தம்பி ஜானீ இறந்துவிட்டான்; அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்காமல் இருந்ததால் சவ அடக்கப் பூசையை நடத்த அந்த ஆங்கிலிகன் சர்ச் மறுத்தது. இதனால் என் அப்பா மிகவும் மனமுடைந்தவராய், ஜானீயின் சவப்பெட்டியைக் குழிக்குள் இறக்குவதற்கு முன்பு ஜெபம் செய்யும்படி ஒரு மதத் தலைவரிடம் கேட்டுப்பார்த்தார். அவரோ மறுத்துவிட்டார்.
என் அப்பாவுக்கு நிரந்தரமாய் மதத்தில் பற்று இல்லாமல் போய்விட்டதற்கு இதையே காரணமாக என் அம்மா சொன்னார்கள். எனக்கோ, என் தங்கைகளுக்கோ ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்று அவர்கள் மிகவும் பயப்பட்டதால், என் அப்பாவுக்குத் தெரியாமலே, எங்களை அந்தச் சர்ச்சுக்குக் கூட்டிச்சென்று ஞானஸ்நானம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். என் அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு முக்கிய நபராகிவிட்டார்; ஹக்ஸ்லீ, லெனின், மார்க்ஸ் ஆகியோரால் எழுதப்பட்ட புத்தகங்கள் உட்பட, பொருள்வாதக் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி வாசிக்கும்படி எங்களை உற்சாகப்படுத்தினார். வீட்டில், கடவுள் இல்லையென்று அப்பா சொல்லும் சந்தர்ப்பத்தைத் தவிர கடவுளைப் பற்றிய பேச்சே இருக்கவில்லை.
1931-ல், கிட்டத்தட்ட எனக்குப் பத்து வயதானபோது, என் அப்பாவின் பெற்றோரைப் பார்த்துவருவதற்காக சில சமயங்களில் நான் தெருவழியே நடந்துசெல்வேன். தாத்தா பிறரால் அடிக்கடி கேலி செய்யப்பட்டார்; ஆனால் அவருடைய அழகிய நீலநிறக் கண்களில் ஒளி பிரகாசித்தது, அவர் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருந்தார். நான் வீட்டுக்குத் திரும்பி நடந்துவரும்போது, ஏதாவது மிட்டாயையும், வாசிக்க எதையாவதும் கொடுப்பார். நான் அந்த மிட்டாயைத் தின்றுவிடுவேன்; வாசிக்கக் கொடுத்தவற்றையோ அப்படியே போட்டுவைத்துவிடுவேன். ஏன் மற்றவர்கள் அவரைப் பற்றிக் குறையாகவே சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்று அப்போது எனக்குப் புரியவில்லை.
நான் டீனேஜில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் இளைஞர் அணியில் சேர்ந்தேன்; கொஞ்சநாள் கழித்து, அதன் செயலராகவும் ஆனேன். நகர்ப்புற அரசு அலுவலகக் கட்டடத்தில் நடைபெறும் கூட்டங்களில் உரையாற்றினேன்; செவிகொடுத்துக் கேட்பவர்களிடம் சேலஞ்ச் என்ற செய்தித்தாளை தெருவில் அளித்துவரும் வேலையையும் செய்தேன். அந்தச் சமயத்தில், கறுப்புச்சட்டைக்காரர்கள் என அழைக்கப்பட்ட பாசிசத் தொகுதியினர் (Fascist group) மிகவும் தீவிரமாய் செயல்பட்டு வந்தனர்; அதோடு, கம்யூனிஸத்தை வன்மையாக எதிர்த்துவந்தனர். நான் சாலை நடைபாதையில் நின்றுகொண்டு சேலஞ்ச் செய்தித்தாளை அளித்துவந்தபோது, கறுப்புச்சட்டைக்காரர்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்னிடம் வந்து பேச்சுக்கொடுத்துவிட்டு, எனக்கு சன்ஷைன் (Sunshine) என்ற பட்டப்பெயரைச் சூட்டியிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. பாசிசத் தொகுதியினர், கைமுட்டியில் கட்டிக்கொள்ளப்படும் உலோக உறை இணைக்கப்பட்ட கருவியால் (knuckle-dusters) என்னை வெளுத்துவாங்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததை, நான் தொடர்புகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நெடுநாளைய உறுப்பினர்கள் எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர்; ஆகவே அவர்கள் எனக்குத் துணையாக எவரையாவது அனுப்பிவைக்க ஆரம்பித்தனர்.
ஒரு சந்தர்ப்பத்தில், அந்தப் பாசிசத் தொகுதியினர் லண்டனைச் சேர்ந்த ஈஸ்ட் என்ட் என்ற பேரூரின் (அப்போது பெரும்பாலும் யூதர்கள் அதில் வசித்துவந்தனர்) வழியாக வலம் வரப்போகின்றனர் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்களை எதிர்த்துச்செல்லும்படியும், எங்களுடன் கோலிக்குண்டுகள் நிறைந்த பைகளை எடுத்துச்செல்லும்படியும் எங்களுக்குச் சொல்லப்பட்டது; அவை எதற்கென்றால், அந்த போலீஸ்காரர்களின் குதிரைகள் எதிர்க்கட்சிக்காரர்களை விரட்டுவதற்காகத் தாக்கும்போது, அவற்றின் குளம்புகளுக்கடியில் வீசியெறியும்படிக்கே. அன்று பலர் கைதுசெய்யப்பட்டனர்; ஆனால் சந்தோஷகரமாக, நான் கைதுசெய்யப்படவில்லை, ஏனெனில் அன்று போகவேண்டாம் என்று நான் தீர்மானித்திருந்தேன்.
என் மனசாட்சி நெருடுவதாகிறது
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில், உண்மையல்லாததாய் எனக்குத் தெரிந்திருந்த ஏதோவொன்றைக் கூறும்படி எனக்குச் சொல்லப்பட்டது. நான் மறுத்துவிட்டேன்; “நம்முடைய கொள்கையை பிறருக்கு புரியவைப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்பதாக பிறகு என்னிடம் கேட்கப்பட்டது. என் வாழ்வின் இந்தக் கட்டத்தில்தான், என் மனசாட்சி என்னை நெருட ஆரம்பித்தது; எண்ணற்ற விஷயங்களைப் பற்றிய சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன.
நான் டீனேஜின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தபோது, சர்ச்சில் நடக்கும் பூசையொன்றுக்கு ஆஜராகும்படியும், அங்கு என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்க வரும்படியும் என் அம்மா என்னை உற்சாகப்படுத்தினார்கள். பீடத்துக்குச் சென்று என் பாவங்களை அறிக்கைசெய்யும்படி எனக்குச் சொல்லப்பட்டது நினைவிருக்கிறது. அங்கிருந்தபோது, அந்தப் பீட விரிப்பின்மேல் போடப்பட்டிருந்த எம்ப்ராய்ட்டரி வேலைப்பாடு ஒன்றில், மூன்று வளையங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருந்ததைக் கவனித்தேன். அவை எதைக் குறித்துக்காட்டுகின்றன என்று விசாரித்துப் பார்த்தபோது, அவை, “புனித திரித்துவத்தை—பிதாவாகிய கடவுள், குமாரனாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள்” என்ற போதகத்தை—குறித்துக்காட்டியதாய் எனக்குச் சொல்லப்பட்டது. ‘இது என்னடாப்பா, நூதனமா இருக்கு, அவங்க மூணு கடவுள்கள் இருக்குங்கறாங்க, எங்கப்பாவோ, ஒரு கடவுள்கூட இல்லைங்கறாரு!’ என்று நான் நினைத்தேன். இன்னும் சில கேள்விகளைக் கேட்டபோது, ஒரு முட்டையில் மூன்று பாகங்கள் இருந்தாலும், அது உண்மையில் ஒரே ஒரு முட்டையே என்று எனக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த விளக்கமும் என்னைத் திருப்திப்படுத்தவில்லை. பிறகு, நான் நிறைய கேள்விகள் கேட்பதாக என்னிடம் சொல்லப்பட்டது. நான் வீட்டுக்குச் சென்றேன்; இனிமேல் சர்ச்சுக்குப் போகப்போவதில்லை என்று என் அம்மாவிடம் சொன்னேன். அத்தோடு சரி, நான் அதற்குப் பிறகு சர்ச்சுப் பக்கமே போகவில்லை!
இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, இனிமேலும் கம்யூனிஸ்ட் இளைஞர் அணியில் நான் உறுப்பினராய் இருக்கவில்லை. இராணுவத்தில் பணிபுரிந்துவந்த ஒரு கனடா தேசத்தவரை நான் மணந்தேன்; எங்களுக்கு ஒரு மகன் இருந்தான். லண்டனில், நாங்கள் முதலாவதாகக் குடியிருந்த வீட்டில் குண்டுவீசப்பட்டது. நானும் என் மகனும் வீட்டிலிருக்கையில், வி-1 ஏவுகணையொன்று, எங்கள் வீட்டுக்கு முன்னால் விழுந்து வெடித்தது. எங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டோம்; ஆனால் நாங்கள் அதிசயமாய் உயிர்ப்பிழைத்தோம். அப்போது என் கணவர் பிரான்ஸிலுள்ள நார்மன்டியில் இருந்தார்.
அந்தச் சமயத்தில், இரண்டு இளம்பெண்களிடம் பேசுகையில், “கடவுள் ஒருவர் இருந்தால், இந்தத் துன்பங்களையெல்லாம் ஏன் அனுமதிக்கிறார்?” என்று நான் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. இந்த உலகத்தின் கடவுளாக இருக்கும் சாத்தானைப் பற்றி ஏதோ அவர்கள் சொன்னார்கள். “ஐயையோ, எனக்குத் தெரிந்திராத இன்னொரு கடவுளா!” என்று நான் நினைத்தேன். பிறகு, ஓர் இளைஞர் வந்தார். அவரிடம் கேள்விக்குமேல் கேள்வி கேட்டேன்; அவரோ, தான் வெள்ளாடுகளையல்ல செம்மறியாடுகளையே தேடிக்கொண்டிருப்பதாய்க் கூறினார். இயேசுவின் உவமைகளைத் தெரிந்திராத நான், அவர் ஓர் ஊழியரா, அல்லது ஒரு பண்ணையாரா என்று கேட்டேன். இன்னும் சில ஆண்டுகள் கழிந்தன; இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. சஸ்கட்டூனின் எளிய ஆயுதந்தாங்கிய தரைப்படை வீரர்களில் 95 சதவீதத்தினர் கொல்லப்பட்டதைக் கண்ணாரக் கண்டபிறகு என் கணவர் வீடுதிரும்பினார். க்ராய்டனில் வேறொரு வீட்டில் நாங்கள் குடியேறினோம்.
சாட்சிகள் சந்திக்க வருகின்றனர்
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை, யெகோவாவின் சாட்சிகளில் இருவர் வந்து எங்கள் காலிங்பெல்லை அழுத்தினர். என் கணவர் கதவைத் திறந்தார்; அவர்களுடன் நெடுநேரமாய்ப் பேசிக்கொண்டிருந்தார். போரின்போது அவர் நேருக்குநேர் பார்த்திருந்த மாய்மாலத்தினால் எல்லா மதங்களையுமே வெறுத்துவிட்ட நிலையில் இருந்தார். சாட்சிகள் நடுநிலை வகித்திருந்த விஷயமே அவரைக் கவர்ந்தது. அந்த இருவரையும் பைபிள் கலந்தாலோசிப்புக்காக மீண்டும் வரும்படி அழைப்பு விடுத்ததாக என்னிடம் சொன்னார். எனக்கு ரொம்ப கவலையாகிவிட்டது; நான் என்னதான் செய்வது என்று என் அப்பாவிடம் கேட்டேன். அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என்றும், அப்படியே என் கணவர் விடாப்பிடியாய் இந்தப் பித்துப்பிடித்த மதத்தில் ஒட்டிக்கொண்டால், நான் மணவிலக்கு செய்ய மனுகொடுப்பதே சிறந்தது என்றும் சொன்னார்.
அந்தக் கலந்தாலோசிப்புகள் எதைப் பற்றித்தான் இருக்கின்றன என்று பார்ப்பதற்காக அவற்றுள் ஒன்றில் நான் கலந்துகொள்ளத் தீர்மானித்தேன். நாங்கள் அனைவரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம்; அப்போது அந்தச் சாட்சி சொன்னதாவது: “இது நடக்கப்போகிற காலத்தில், இப்போது ஒரு நாயின் கழுத்தைச் சுற்றி உங்கள் கையைப் போடுவது போலவே, ஒரு சிங்கத்தின் கழுத்தைச் சுற்றி உங்கள் கையைப் போட்டாலும், அது உங்களை ஒன்றுமே செய்யாது.” “அடடா, இதுங்க சரியான பித்துப்பிடித்ததுங்கதான் போலிருக்கு,” என்று நான் நினைத்துக்கொண்டேன். அந்த மாலைப்பொழுதில் அதைத் தொடர்ந்து சொல்லப்பட்ட எதையுமே என்னால் கவனிக்க முடியவில்லை. பிறகு, அவர்கள் திரும்பிவருவதை நான் விரும்பவில்லை என்று என் கணவரிடம் தெரிவித்தேன். நாங்கள் நெடுநேரமாய் அழுத பிறகு, மணவிலக்கு ஒன்றைப் பெறுவதைப் பற்றிக் கலந்தாலோசித்தோம்.
இதற்குப் பின்பு சீக்கிரத்தில், மற்றொரு சாட்சி வந்தார். அவர் ஒரு வட்டாரக் கண்காணி என்றும், உள்ளூர் சபைகளை அவர் விஜயம் செய்துவருகிறார் என்றும், அப்படியே எங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தார் என்றும் எங்களுக்குப் பின்பு தெரியவந்தது. அவரை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அவர் நீலநிறக் கண்களுடையவராயும், மிகவும் தயவும் பொறுமையுமான சுபாவமுள்ளவராயும் இருந்தார். அவர் என்னுடைய தாத்தாவை எனக்கு நினைப்பூட்டினார். நான் எழுதிவைத்திருந்த 32 கேள்விகளைக் கொண்ட ஒரு பட்டியலை வெளியில் எடுத்தேன். “நாம் அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாகப் பேசுவோம்” என்று சொன்னார்; அவ்வாறே நாங்கள் செய்துவந்தோம். பைபிள் சொல்லும் விஷயத்தை முழுமையாய்ப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நான் அதை வாசிக்கவும் படிக்கவும் வேண்டும் என்று உணர்ந்துகொள்ள அவர் எனக்கு உதவினார். எங்கள் வீட்டுக்கு எவராவது ஒருவரை வரும்படி செய்து, அவருடன் சேர்ந்து நாங்கள் கிரமப்படி பைபிளைப் படிக்கும்படியான ஏற்பாட்டைச் செய்யும்படி அவர் ஆலோசனை கூறினார். நான் அதற்கு ஒத்துக்கொண்டேன்.
நம் படைப்பாளராகிய யெகோவா தேவனைப் பற்றி படிப்படியாக நான் புரிந்துகொண்டபோது, என் கண்கள் கண்ணீர்மழை சொரிந்தன. பெட்ரூமுக்குள் சென்று, என்னைத் தயவுசெய்து மன்னித்துவிடும்படியும், பைபிளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும்படியும் யெகோவாவிடம் ஜெபித்தது எனக்கு நினைவிருக்கிறது. நானும், என் கணவரும், என் மகனும் 1951-ல் முழுக்காட்டுதல் பெற்றோம். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட என் அப்பாவுக்கு மன அமைதி இல்லாமற்போய்விடவே, என்னை யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாகப் பார்ப்பதைவிட, இறந்து போய்விட்டதாக எண்ணுவதையே மேலானதாய் நினைப்பதாகச் சொன்னார்.
தேவை அதிகமிருக்கும் இடத்தில் சேவை
என் கணவர் கனடாவுக்குத் திரும்பிவிடத் தீர்மானித்தார்; 1952-ல் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவருக்கு நாங்கள் இடம் மாறிச்சென்றோம். எங்களை வழியனுப்ப என் அப்பா மறுத்துவிட்டார்; நானும், அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவோ, அவரைப்பற்றிய எந்தவொரு தகவலையும் கேள்விப்படவோ இல்லை. வான்கூவரில் பல ஆண்டுகள் வசித்துவந்ததற்குப் பிறகு, தேவை அதிகமிருக்கும் இடத்தில் சேவை செய்வதற்கான அழைப்பு வந்தது; விசேஷமாக, யெகோவாவின் சாட்சிகளிடம் ஹிட்லரைப் போன்ற அதே மனோபாவத்தையே கொண்டிருந்தவரான, முதலமைச்சர் ட்யூப்லேஸீ இருந்த மாநிலமான க்யுபெக் போன்ற இடங்களுக்குச் செல்லும்படியாக அழைப்பு வந்தது.
1958-ல், உலகப்பிரகாரமான எங்கள் உடைமைகள் அனைத்தையும் பேக் செய்து காருக்குள் போட்டுக்கொண்டு, நியூ யார்க்கில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிற்கு சென்றோம். அங்கிருந்து, க்யுபெக்கைச் சேர்ந்த மான்ட்ரீலுக்கு சென்றோம்; அங்கே, வீல் ட ஸாக்கார்ட்யாவிலுள்ள ஒரு பிரெஞ்ச் சபைக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். க்யுபெக்கில் யெகோவாவைச் சேவித்துவருகையில் எங்களுக்குப் பல நல்ல அனுபவங்கள் கிடைத்தன. ஒரு சமயம், எங்கள் கார் உருட்டிவிடப்பட்டது; எங்களைக் குறிபார்த்து கற்கள் வீசப்பட்டன; ஒரு பெண், எங்கள்மேல் தெறிக்கும்படியாக, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேகமாய்த் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டாள். இது, மாகோகு என்றழைக்கப்பட்ட ஓர் இடத்தில் நடந்தது.
மற்றொரு சமயத்தில், ஜனங்கள் கூட்டங்கூட்டமாக வரிசையாய் வெளியே வந்தநேரம்பார்த்து, நானும் என் கூட்டாளியாய் இருந்த சகோதரியும் ஒரு சர்ச்சைக் கடந்துசென்றோம். யாரோ எங்களை அடையாளம் கண்டுகொண்டு, “டேம்வெண் ட ஸேயோவா!” (“யெகோவாவின் சாட்சிகள்!”) என்று கத்தினார்கள். அதைத்தொடர்ந்து, மதகுருவால் ஏவிவிடப்பட்டவர்கள் எங்களைத் துரத்திப் பிடிக்கவந்தனர்; நாங்களோ அந்தக் கூட்டத்தைவிட வேகமாய் ஓட்டம்பிடித்துவிட்டோம். பல தடவை நாங்கள் கைதுசெய்யப்பட்டோம். என்றாலும், யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ளப் பலருக்கு உதவிய மகிழ்ச்சி எனக்கு இருந்தது; அவர்களில் பலர் இன்னும் சுறுசுறுப்பாய் அவரைச் சேவித்து வருகின்றனர்.
1960-களின் ஆரம்பத்தில், என் கணவரை வேலைக்கு அமர்த்தியிருந்தவர் அவரை லாஸ் ஏஞ்சலிஸுக்கு மாற்றினார்; அங்கு ஒரு சபையில் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நாங்கள் சேவை செய்தோம். பூமியின் எல்லா பாகங்களிலுமிருந்து லாஸ் ஏஞ்சலிஸுக்கு இடம்மாறி வந்திருந்த ஜனங்களிடம் சத்தியத்தைப் பற்றிப் பேசுவது எப்பேர்ப்பட்ட ஆனந்தமாய் இருந்தது! லெபனான், எகிப்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, இன்னும் இதுபோன்ற பல நாடுகளிலிருந்து வந்திருந்த ஜனங்களுடன் படிப்பு நடத்தும் சிலாக்கியம் எனக்கிருந்தது. ஆங்கிலமே பேசத்தெரியாத ஓர் இளம்பெண்ணைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது—நல்ல வேளை, அவளுடைய கணவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஆகவே, அவர்களுடன் சேர்ந்து நானும் என் கணவரும் படிப்பு நடத்தினோம். காலப்போக்கில் நான் அவளுடன் தனியாக படிப்பு நடத்தினேன். ஆங்கிலத்தில், கடவுளே சத்தியபரராக விளங்கச் செய்யுங்கள் என்ற புத்தகத்தை நான் வைத்துக்கொள்வேன்; அவள் தன்னுடைய சீன மொழி பைபிளில் அந்த வேதவசனங்களை எடுத்துப் பார்த்து சீன மொழியிலேயே பதில் சொல்வாள். பிறகு, அந்தப் பதிலை நான் ஆங்கிலத்தில் சொல்வேன்; அவள் அதை மறுபடியும் ஆங்கிலத்தில் சொல்வாள். காலப்போக்கில், பிரிட்டிஷ் மொழிநடையில் பேசினாலும், அவள் சரளமாக ஆங்கிலம் பேசுபவளாகிவிட்டாள்; அவளும் அவளுடைய கணவரும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக இப்போது சேவைசெய்து வருகின்றனர் என்பதைச் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி.
நாங்கள் சமீபத்தில் அரிஜோனாவிலுள்ள டக்ஸனுக்கு மாறிச்சென்றோம்; அங்கு, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்—நம் மகத்தான படைப்பாளராகிய யெகோவாவைப் பற்றி போதிக்கப்பட்டுவரும் எங்கள் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உட்பட அனைவரும்—யெகோவாவை உண்மையுடன் சேவித்து வருவதைக் காணும் கூடுதல் சிலாக்கியமும் எங்களுக்கிருக்கிறது.
இதற்கிடையில், ஒளி பிரகாசிக்கும் நீலநிறக் கண்களுடைய என் தாத்தா யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தார் என்பதை நான் க்ராய்டனிலுள்ள சகோதரர்களிடமிருந்து தெரிந்துகொண்டபோது கிளர்ச்சியுற்றேன்.—கேஸீ பிரைட்டால் கூறப்பட்டது.