ரப்பர் வடித்தல்—உங்கள் வாழ்வைப் பாதிக்கும் ஒரு தொழில்
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
காலை ஐந்து மணிக்கு, அந்த நைஜீரிய மழைக் காடு இருட்டாயும், குளிர்ச்சியாயும் இருக்கிறது. அக் காட்டின் நடுவிலுள்ள, களிமண்-பாளங்களால் கட்டப்பட்ட ஒரு வீட்டில், ஜான் விழித்தெழுந்து, தன் உடைகளைத் தலைவழியே போட்டுக்கொள்கிறார். பிறகு அவர், ஓர் அரிக்கன் விளக்கு, ஒரு பிளாஸ்டிக் வாளி, வளைந்த வெட்டுவாய்ப்பகுதியுடைய ஒரு குட்டையான கத்தி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, அந்த இருட்டுக்குள் செல்கிறார். அடுத்த நான்கு மணிநேரமாக, அவர் மரத்துக்கு மரம் செல்கிறார், அப்போது அறுவை மருத்துவத்தில் செய்வது போல, ஒவ்வொரு மரத்தின் பட்டையையும் கீறுகிறார்.
காலப்போக்கில் உங்கள் வாழ்வைப் பாதிக்கக்கூடிய ஒரு நீண்ட தொடர் நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி இது. எவ்விதத்தில்? ஏனெனில் ஜான் கீறும் மரங்கள் ரப்பர் மரங்கள். பென்சில் குறிகளை அழிக்கும் (rub) அதன் திறத்தால் அவ்வாறு பெயரிடப்பட்ட அழி ரப்பர், மிகவும் மதிப்புடைய, மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் வள ஆதாரங்களில் ஒன்று.
ஆயிரக்கணக்கான பொருட்கள்
உங்கள் வாழ்வில் ரப்பர் வகிக்கும் பாகத்தைப் பற்றி சற்று சிந்தியுங்கள். உங்கள் ஷூக்களின் அடிப்பாகம் மற்றும் குதிகால் பாகங்கள் ரப்பரிலிருந்து தயாரிக்கப்படலாம். நீங்கள் விரித்திருக்கும் கம்பளத்தின் அடிப்பகுதியிலும் தட்டுமுட்டுப் பொருள்களிலும் ஃபோம் ரப்பர் அடங்கியிருக்கலாம். உங்கள் உடையிலுள்ள எலாஸ்டிக் ஒருவேளை ரப்பரால் செய்யப்பட்டிருக்கலாம். மழை பெய்துகொண்டிருக்கையில், ரப்பரால் செய்யப்பட்ட மழைக்கோட்டு ஒன்றையும், பூட்ஸையும் நீங்கள் எடுக்கலாம். நீந்தச் செல்கிறீர்களா? ஈரத்துக்கேற்ற சூட்டுகள், ரப்பர் ஃபிரேம்களைக் கொண்ட பாதுகாப்புக் கண்ணாடிகள், துடுப்பு போன்ற அமைப்பையுடைய தட்டையான ஷூக்கள் ஆகியவற்றில் ரப்பர் அடங்கியுள்ளது. உங்களுக்கு நீந்த விருப்பமில்லையா? ஒருவேளை ரப்பராலான ஒரு தெப்பத்தின்மீது வெறுமனே மிதக்க, அல்லது கடற்கரையில் பயன்படுத்தும் ரப்பராலான ஒரு பந்தை வைத்து விளையாட நீங்கள் விரும்பலாம். ஒருவேளை உங்கள் வீட்டிலேயே இங்குமங்கும் ரப்பர் பேண்டுகள், ரப்பர் அழிப்பான்கள், ரப்பர் ஒட்டுப்பொருள்கள் ஆகியவை இருக்கும். இன்று இரவு நீங்கள் உறங்குகையில், ரப்பர் பொருட்களாலான ஒரு மெத்தை மற்றும் ஒரு தலையணை மீது நீங்கள் படுக்கலாம். உங்களுக்குக் குளிரடித்தால், ரப்பராலான ஒரு வெந்நீர் கலத்தை வைத்து நீங்கள் சுருண்டு படுக்கலாம்.
அவையனைத்தையும் தவிர, ரப்பராலான பாகங்கள் இல்லாவிட்டால் நிச்சயமாகவே நன்றாக வேலைசெய்யாத பல பொருட்கள்—வாஷர்கள், பெல்ட்டுகள், காஸ்கெட்டுகள், ரப்பர் குழாய்கள், ரோலர்கள், அல்லது வால்வுகள்—உள்ளன. எடுத்துக்காட்டாக, சாதாரணமாய் பயன்படுத்தப்படும் காரில், சுமார் 600 ரப்பர் பாகங்கள் உள்ளன. மொத்தத்தில், தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுவதன்படி, 40,000-க்கும் 50,000-க்கும் இடைப்பட்ட ரப்பர் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
ரப்பரை அவ்வளவு பயனுடையதாய் ஆக்குவது எது? அது நீடித்து உழைக்கும் தன்மையுடையது, வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடையது, எலாஸ்டிக் பண்புள்ளது, நீர் புகாதது, காற்றுப்புகாதது, மற்றும் அதிர்ச்சி-உறிஞ்சி. ஒரு சைக்கிளாகவோ, ஒரு மோட்டார் சைக்கிளாகவோ, அல்லது ஓர் ஆகாய விமானமாகவோ இருக்கட்டும், அதன் டயரை எண்ணிப்பாருங்கள். ஒரு டயர் ரப்பராய் இருக்கும் காரணத்தால், தொடர்ந்து சாலையைத் தொட்டுக்கொண்டிருப்பதால், அது சீக்கிரத்தில் தேய்வுறுவதில்லை, தொடர்ந்து உராய்வதால் அது எரிந்துவிடுவதும் இல்லை. நீங்கள் சேற்றுப்பகுதிகளில் ஓட்டிச் செல்கையில், டயர் குழகுழப்பாகி, கெட்டுப்போய்விடுமோ என்று பயப்படத் தேவையில்லை; அது அரிக்கவும் படாது. ரப்பர் டயருக்குள்ளே நீர் புகாதவாறு தடுப்பது மட்டுமின்றி, அழுத்தப்பட்டிருக்கும் காற்றை உள்ளிருந்து வெளியே கசியாதவாறும் தடுக்கிறது. மேலும், நீங்கள் போய்க்கொண்டேயிருக்கையில், உங்கள் டயரிலுள்ள ரப்பரின் அதிர்ச்சி-உறிஞ்சும் தன்மை, சாலையிலுள்ள மேடுபள்ளங்களால் உங்களுக்கு பாதிப்பு வராதபடி காக்க உதவுகிறது. உண்மையிலேயே, ரப்பர் இல்லாமல், ஒரு டயரை தயாரிக்க உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமப்பட்டிருப்பர்.
ஆகவே ரப்பர் வடிக்கும் ஜானைப் போன்றவர்கள் நம் வாழ்வை நல்ல விதத்தில் பாதிக்கும் ஒரு மதிப்புமிக்க சேவை செய்கின்றனர் என்பதை நீங்கள் ஒருவேளை ஒத்துக்கொள்வீர்கள். எல்லா ரப்பரும் மரங்களிலிருந்து கிடைப்பதில்லை என்பது மெய்யே. வேதிப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை ரப்பர், இத் துறையில் ஒரு பெரும் பங்கை ஏற்கிறது. ரப்பரின் இரண்டு விதங்களும் அதனதன் நல்ல பண்புகளையும், குறைபாடுகளையும் கொண்டுள்ளன. பல பொருட்கள் இரண்டில் ஏதாவதொன்றிலிருந்து தயாரிக்கப்படலாம், அதைத் தெரிவு செய்வது நடப்பு விலையால் தீர்மானிக்கப்படுகிறது. பிற பொருட்கள் இயற்கை மற்றும் செயற்கை ரப்பர் சேர்மானத்தைப் பயன்படுத்துகின்றன. ஆட்டோமொபைலில் பயன்படுத்தப்படும் மிகப் பெரும்பாலான டயர்களில் இயற்கை ரப்பரைவிட செயற்கை ரப்பரே அதிகமாய் உள்ளது. என்றபோதிலும், வெப்பம் அதிகரிக்கையில் செயற்கை ரப்பரால் குறைந்தளவு மட்டுமே அதைத் தாங்கும் பண்புள்ளதால், பந்தயக் கார்கள், டிரக்குகள், பேருந்துகள், ஆகாயவிமானங்கள் ஆகியவற்றின் டயர்களில் அதிகளவு இயற்கை ரப்பர் பயன்படுத்தப்படுகிறது.
மரத்திலிருந்து வடித்தல்
ரப்பர் மரங்கள், நிலநடுக்கோட்டுக்கு அருகில், வெப்பமான, மற்றும் ஈரமான தட்பவெப்பநிலைகளில் மிக நன்றாய் வளருகின்றன. உலகின் இயற்கை ரப்பரின் பெருமளவு, தென்கிழக்கு ஆசியா, விசேஷமாக மலேசியா மற்றும் இந்தோனீஷியாவில் செய்யப்படும் தொழில்முறை விவசாயத்திலிருந்து கிடைக்கிறது. மீதியானது தென் அமெரிக்காவிலிருந்தும், மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்தும் கிடைக்கிறது.
ஒரு மரத்திற்கு ஆறு வயதாகும்வரை அதிலிருந்து ஜான் ரப்பரை வடிப்பதில்லை. அதன் பிறகு அந்த மரம், அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளுக்கு ரப்பரை உற்பத்தி செய்யும்; சுமார் 20 மீட்டர் உயரம் வரை வளரும். ரப்பர் மரம் ரப்பரை உற்பத்தி செய்வதிலிருந்து “ஓய்வு” பெறும்பொழுது, 40 மீட்டர் உயரம்வரை அது தொடர்ந்து வளரலாம், மேலும் நீண்ட காலமாய், 100 ஆண்டுகள் வரை, அல்லது அதைவிட நீண்ட காலமாகவும் அது வாழலாம்.
மரத்திலிருந்து நேரடியாக எடுக்கப்படும் ரப்பர், ஒரு காரின் டயரைப் போலிராமல், பெரும்பாலும் பாலைப் போலவே காணப்படுகிறது. இப் பால்போன்ற பொருள், லேட்டக்ஸ் என்றழைக்கப்படுகிறது. இதில், ரப்பரின் நுண்ணிய துகள்கள் அடங்கியுள்ளன. இந்த லேட்டக்ஸின் சுமார் 35 சதவீதம் ரப்பர். மீதியானது, பெரும்பாலும் நீர்.
லேட்டக்ஸை வடிக்க, பட்டையில், ஒரு சரிவான கீறலை ஜான் கீறுகிறார். இந்தக் கீறல் மரத்தின் சுற்றளவில் பாதிவரை நீளுகிறது. இந்தக் கீறல் மிகவும் ஆழமாய்ச் சென்றுவிடாதவாறு அவர் கவனத்துடன் இருக்கிறார், ஏனெனில் அது மரத்தைச் சேதப்படுத்திவிடும். கீறப்பட்டவுடனேயே லேட்டக்ஸ் வடிய ஆரம்பிக்கிறது; அக்கீறலால் உண்டாக்கப்பட்ட பட்டையின் (groove) வழியே அது ஒழுகி, அம்மரத்துடன் ஜான் இணைத்துள்ள மூங்கில் கிண்ணத்தில் போய்ச் சேருகிறது. இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்கு அவ்வொழுகல் தொடருகிறது; பிறகு அது நின்றுவிடுகிறது.
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு, அடுத்த தடவை ஜான் அம்மரத்திலிருந்து வடிக்கையில், அந்த முதல் கீறலையடுத்துக் கீழே மற்றொரு கீறல் கீறுவார். அதற்கடுத்த தடவை அந்தக் கீறலுக்குக் கீழே கீறுவார். காலப்போக்கில், அம்மரத்தின் பட்டையில் ஒரு தொகுதியாகக் கீறல்கள் இருக்கும். இப்போது ஜான் அம் மரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து வடிக்க ஆரம்பிப்பார், எப்பொழுதாவது எதிர்காலத்தில் அத்தொகுதியிலிருந்து வடிப்பதற்காக அதை முற்றிலும் ஆற விட்டுவிடுவார்.
ஜான் வேகவேகமாக வேலை செய்கிறார், அந்த அமைதியான காட்டில் தனியே நடமாடிக்கொண்டு, லேட்டக்ஸ் வடியும்படி மரங்களை வெட்டிக்கொண்டிருக்கிறார். பிறகு, ஒவ்வொரு மரத்தையும் அவர் மறுபடியும் பார்வையிட்டு, சேர்ந்துள்ள லேட்டக்ஸைத் தனது வாளியில் சேகரிக்கிறார். அடுத்து, லேட்டக்ஸோடு ஃபார்மிக் அமிலத்தையும், நீரையும் ஜான் சேர்க்கிறார். இது, பெரும்பாலும் காடியானது பாலை தயிராக்குவது போலவே, கெட்டியாக்கி, உறையச் செய்கிறது. பிறகு ஜான் லேட்டக்ஸ் நிறைந்த வாளியைத் தன் தலைமேல் வைத்துக்கொண்டு மெயின் ரோட்டிற்கு எடுத்துச் செல்கிறார், அங்கு அது அருகிலிருக்கும் ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு டிரக்கின் மூலமாக சேகரிக்கப்படுகிறது.
ஜான் இப்போது குளிக்கவும், சாப்பிடவும், பிறகு ஓய்வெடுக்கவும் வீடு திரும்புகிறார். பிந்திய பிற்பகலில், திரும்பவும் தன் வீட்டை விட்டுச் செல்கையில், அவர் நேர்த்தியாக உடை அணிந்திருக்கிறார், ஒரு பிரீஃப்கேஸைத் தன் கையில் எடுத்துச் செல்கிறார். இம்முறை அவர் மரத்திற்கு மரம் செல்வதற்கல்ல, ஆனால் வீடுவீடாய்ச் செல்லப்போகிறார். ஓர் ஒழுங்கான பயனியராக, பிரசங்க மற்றும் சீஷராக்கும் வேலையில் ஜான் ஒரு முழுப் பங்கைக் கொண்டிருக்கிறார்.
அந்நாளின் முதல் வேதப்படிப்பை ஜான் நடத்தும்போது, அவர் சேகரித்த லேட்டக்ஸ் அந்த ரப்பர் தயாரிப்புத் தொழிற்சாலையை அடைந்திருக்கும். அங்கு, ரப்பர் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு, கப்பலில் அனுப்பப்படுவதற்காகப் பெருங்கட்டுகளாக அழுத்தப்படும். விரைவில் அது இங்கிலாந்து, ஜப்பான், அல்லது ஐக்கிய மாகாணங்களுக்குப் போகும் வழியில் இருக்கும். உலகளாவிய இயற்கை ரப்பர் தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் ஐம்பது லட்சம் டன்னுக்கும் மேலான ரப்பரை உற்பத்தி செய்கிறது. அவ்வாறு நிகழ வாய்ப்பில்லாதிருந்தாலும், நீங்கள் அடுத்ததாக வாங்கி அணியப்போகும் ஷூக்களின் அடிப்பாகத்திலுள்ள ரப்பர் ஜான் வடித்தெடுத்த ஒரு மரத்திலிருந்து வரும் சாத்தியம் இருக்கிறது.
[பக்கம் 18-ன் படம்]
ஜான் ரப்பர் மரங்களிலிருந்து வடித்தெடுக்கும் அவரது வேலையில் இருக்கிறார்
[பக்கம் 20-ன் படம்]
ஜான் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குபெறுகிறார்