தீர்வுகளைத் தேடி
“நிழலைக் குறித்து விவாதிக்கையில் நாம் நிஜத்தைக் காணத் தவறிவிடலாம்” என எழுதினார் ஆங்கில எழுத்தாளரான ஜான் லிலி. அந்தத் தவறைத் தவிர்ப்பதற்கு, இன்று மழைக்காட்டில் பதிந்துள்ள சோகச் சுவடுகள் உண்மையில் ஆழமான பிரச்சினைகளின் விளைவுகள் என்பதையும் அடிப்படை காரணங்கள் சரிசெய்யப்படாவிட்டால் காடு தொடர்ந்து அழிக்கப்படும் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். அந்தக் காரணங்கள் என்ன? “அமேசானின் பாதுகாப்பைக் குலைக்கும் அடிப்படை சக்திகள் வறுமையும் மனித அநீதியும்” என ஐநா-வின் ஆதரவுபெற்ற ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.
பசுமையளிக்காத பசுமைப் புரட்சி
காடுகளின் அழிவு, சில பத்தாண்டுகளுக்கு முன்பு பிரேஸிலின் தென் பகுதியிலும் மத்தியப் பகுதியிலும் ஆரம்பமான பசுமைப் புரட்சி என சொல்லப்படுவதன் விளைவாக ஒருவிதத்தில் இருக்கிறது என சில ஆராய்ச்சியாளர்கள் வாதாடுகின்றனர். அதற்கு முன்பு, சிறு பண்ணைகளை வைத்திருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கு அரிசி, பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை விளைவிப்பதன் மூலமாகவும் அதேசமயத்தில் கால்நடைகளை வளர்ப்பதன் மூலமாகவும் பிழைப்பு நடத்திவந்தனர். அதற்குப் பின் பெரிய அளவில், இயந்திரமயமாக்கப்பட்ட சோயா மொச்சை-வளர்ப்பு செய்முறைகளும் நீர்மின் ஆற்றல் திட்டங்களும் அவர்களது நிலத்தை விழுங்கிவிட்டன; மேலும், தொழில்மயமான நாடுகளுக்கு உணவளிக்கத் தேவைப்படும் வேளாண்மைப் பொருட்களைக்கொண்டு மாடுகளையும் அந்நிலத்தின் பயிர்களையும் அவை மாற்றீடு செய்தன. 1966-க்கும் 1979-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டுமே ஏற்றுமதி பயிர்களுக்காக ஒதுக்கப்பட்ட விவசாய நிலம் 182 சதவீதம் அதிகரித்தது. அதன் விளைவாக, ஒவ்வொரு 12 பரம்பரை விவசாயிகளில் 11 பேர் தங்களது நிலத்தையும் பிழைப்பையும் இழந்தனர். அவர்களுக்கு பசுமைப் புரட்சி பசுமையளிக்காத புரட்சியாகவே இருந்தது.
நிலமில்லாத இந்த விவசாயிகள் எங்கு செல்வர்? அரசியல்வாதிகள், தங்களது சொந்த பிரதேசத்தின் அநீதியான நில பங்கீட்டை சரிப்படுத்த விருப்பமில்லாதவர்களாய், அமேசான் நிலப்பகுதியை “வீடில்லா மனிதருக்கு ஆளில்லா காடு” என அழைத்து அவர்களது பிரச்சினைக்கு வழி காண்பித்தனர். முதல் அமேசான் நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பத்தாண்டுகளுக்குள், தென் பிரேஸிலையும் வறட்சியும் வறுமையும் நிறைந்த வடகிழக்கு பிரேஸிலையும் சேர்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமான ஏழை எளிய விவசாயிகள் அச்சாலை நெடுக ஆயிரக்கணக்கான குடிசைகளில் குடியேறியிருந்தனர். இன்னுமதிகமான சாலைகள் அமைக்கப்பட்டபோது விவசாயம் செய்யும் நோக்கத்தோடு அதைவிட அதிகமானோர் அமேசானுக்குச் சென்று காட்டுநிலத்தை விளை நிலமாக மாற்றத் தயாராயினர். “கிட்டத்தட்ட 50 வருட குடியேற்றத்தை சீர்தூக்கிப் பார்த்தால் விளைவு மோசமானதாகவே இருந்திருக்கிறது” என்பதாக இந்தக் குடியேற்ற முறைகளை ஆராய்ச்சியாளர்கள் அலசிப்பார்த்துச் சொல்கின்றனர். வறுமையும் அநீதியும் “அமேசானை நோக்கி பயணப்பட்டிருக்கின்றன, மேலும் அமேசானில் புதிய பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.”
மூன்று படிகள் முன்னுக்கு
காடுகளின் அழிவிற்கு காரணங்களாய் இருப்பவற்றை சரிசெய்வதற்கும் அமேசான் மழைக் காட்டில் மனிதனின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவிப்பதற்கும், அமேசானுக்கான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆணையம், மற்ற காரியங்களோடு சேர்த்து அமேசானிலுள்ள அரசாங்கங்கள் மூன்று முதற்படிகளை எடுக்க வேண்டுமென பரிந்துரைக்கும் ஒரு பத்திரத்தை வெளியிட்டது. (1) அமேசான் மழைக் காட்டிற்கு வெளியிலுள்ள வறுமைமிக்க பகுதிகளின் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துங்கள். (2) சேதப்படுத்தப்படாத காடுகளைப் பயன்படுத்துங்கள், ஏற்கெனவே அழிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் உபயோகியுங்கள். (3) மனித துன்பத்திற்கும் காடுகளின் அழிவிற்கும் உண்மையான காரணங்களாயுள்ள படுமோசமான சமூக அநீதிகளை சரிக்கட்டுங்கள். இந்த மூன்றுபடி அணுகுமுறையை நாம் சற்று விரிவாக ஆராய்வோமாக.
முதலீடு செய்தல்
சமூக-பொருளாதார பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்துங்கள். “காடுகளின் அழிவைக் குறைப்பதற்கான அதிநவீன வழிகளில் ஒன்று, மக்களை அவர்களது வருங்கால நலனுக்காக அமேசானுக்கு குடிபெயர்ந்துவிடும்படி வற்புறுத்தும் அமேசான் நாடுகளிலுள்ள மிக ஏழ்மையான பகுதிகள் சிலவற்றில் முதலீடு செய்வதாகும்,” என அந்த ஆணையம் குறிப்பிடுகிறது. என்றாலும், “இந்த வழி தேசிய அல்லது வட்டார முன்னேற்றுவிப்பு திட்டங்களில் சிந்திக்கப்படுவதில்லை, அமேசான் காடுகளின் அழிவைப் பெருமளவில் குறைக்க வேண்டுமென வாதாடும் தொழில்மயமான நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதைக் கருதுவதில்லை,” என அந்த ஆணையர்கள் மேலும் சொல்கின்றனர். ஆனாலும், அரசியல் தலைவர்களும் அக்கறையுள்ள அயல்நாட்டு அரசுகளும் தங்களது அறிவுத்திறமையையும் நிதி ஆதரவையும் பயன்படுத்தி, அமேசானின் சுற்றுவட்டாரங்களில் காணப்படும் பற்றாக்குறையான நில பங்கீடு அல்லது நகர வறுமை போன்ற பிரச்சினைகளைத் தீர்த்தால், அமேசானுக்குப் படையெடுக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் காடும் பாதுகாக்கப்படும் என்பதாக அதிகாரிகள் விளக்குகின்றனர்.
ஆனாலும் ஏற்கெனவே அமேசானில் சிறியளவில் விவசாயம் செய்வோரைப் பற்றி என்ன? விவசாயத்திற்கு இலாயக்கில்லாத நிலத்தில் பயிர்களை வளர்த்து அவர்கள் அன்றாடம் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது.
மரங்களுக்காக காடு
காடுகளை உபயோகியுங்கள், மறு உபயோகமும் செய்யுங்கள். “வெப்பமண்டலக் காடுகள் அளவுக்கதிகமாக சுரண்டப்படுகின்றன ஆனால் மிகக் குறைவாகவே உபயோகிக்கப்படுகின்றன. இந்த முரண்பாட்டில்தான் அவற்றின் பிழைப்பு சார்ந்திருக்கிறது” என அழிந்துவரும் காடுகள் (ஆங்கிலம்) என்ற ஐநா பிரசுரம் சொல்கிறது. மரங்களை வெட்டுவதன் மூலம் காடுகளைச் சுரண்டுவதற்குப் பதிலாக அங்கு விளையும் பழங்கள், பருப்புகள், எண்ணெய், ரப்பர், சாறுகள், மருந்து செடிகள், மற்ற இயற்கைப் பொருட்கள் போன்றவற்றை பிரயோஜனப்படுத்திக்கொள்வதன் மூலம் அல்லது எடுத்துக்கொள்வதன் மூலம் காட்டை மனிதன் உபயோகிக்க வேண்டும். அப்படிப்பட்ட பொருட்கள் “அந்தக் காட்டின் பொருளாதார மதிப்பில் 90 சதவீதத்தை” பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதாக சொல்லப்படுகிறது.
நியூ யார்க்கின் தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த டக் டாலி என்பவர், காடுகளை அழிப்பதை விட்டுவிட்டு அவற்றைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள ஆரம்பிப்பது ஞானமுள்ளதென தான் நம்புவதற்கான காரணத்தை விவரிக்கிறார்: “அது அரசாங்கத்தினரை சாந்தப்படுத்துகிறது, ஏனெனில் பொருளாதாரச் சந்தையிலிருந்து அமேசானின் பெரும் பகுதிகள் நீக்கப்படுவதை அவர்கள் பார்ப்பதில்லை. . . . அது மக்களுக்கு வாழ்வளித்து காட்டைப் பாதுகாக்கிறது. அதைப் பற்றி குறைகூறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.”—வனவாழ்வு பாதுகாப்பு (ஆங்கிலம்).
மரங்களுக்காக காட்டைப் பாதுகாப்பது அங்கு வசிப்போரின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவிக்கிறது. உதாரணத்திற்கு, இரண்டரை ஏக்கர் நிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றுவது வருடத்திற்கு வெறுமனே $25 இலாபம்தான் அளிக்குமென வட பிரேஸிலிலுள்ள பெலேமைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். ஆகவே பிரேஸிலின் குறைந்தபட்ச மாதாந்திர சம்பளத்தைப் பெறுவதற்கே ஒரு நபருக்கு 120 ஏக்கர் மேய்ச்சல் நிலமும் 16 கால்நடைகளும் வேண்டியிருக்கும். எனினும், கால்நடைப் பண்ணை வைக்கப்போகிறவர் அந்தக் காட்டின் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியே தேவைக்குமேல் பணம் சம்பாதிக்கலாம் என வேஜா சொல்கிறது. சேகரிக்கப்படுவதற்காக காத்திருக்கும் பொருட்களின் தினுசு ஆச்சரியமானது என்பதாக உயிரியல் நிபுணரான சார்ல்ஸ் க்ளெமென்ட் சொல்கிறார். “விளைவித்து அறுவடை செய்யத்தக்க டஜன் கணக்கான காய்கறிப் பயிர்கள், நூற்றுக்கணக்கான பழமரங்கள், மரப்பிசின்கள், எண்ணெய்கள் ஆகியவை இருக்கின்றன,” என டாக்டர் க்ளெமென்ட் கூறுகிறார். “ஆனால் பிரச்சினை என்னவென்றால், செல்வந்தராவதற்கு இடையூறாக இருப்பதற்கு மாறாக, காடு செல்வ வளத்தின் ஊற்றுமூலமாக திகழ்கிறது என்பதை மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்.”
தரிசு நிலத்திற்கு மறுவாழ்வு
பொருளாதார வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கைகோத்துச் செல்லும் என பிரேஸிலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஷவாயுன் ஃபெராஸ் சொல்கிறார். “ஏற்கெனவே எந்தளவு காடு அழிக்கப்பட்டுள்ளதென்பதை கவனியுங்கள். சேதப்படுத்தப்படாத இன்னுமதிக காடுகளை வெட்டுவதற்கு அவசியமில்லை. அதற்கு மாறாக, ஏற்கெனவே வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை நாம் பண்படுத்தி மறுபடியும் உபயோகப்படுத்தலாம்.” அமேசான் பகுதியில், பண்படுத்தப்பட வேண்டிய பாழ் நிலம் ஏராளமாக இருக்கிறது.
1960-களின் பிற்பகுதி முதற்கொண்டு, காடுகளை மேய்ச்சல் நிலங்களாக்குவதற்கு பெரியளவில் முதலீடு செய்தோரை உற்சாகப்படுத்த அரசாங்கம் பெருமளவு மானியங்கள் அளித்தது. முதலீட்டாளர்களும் அதைச் செய்தார்கள், ஆனால் டாக்டர் ஃபெராஸ் இவ்வாறு விளக்குகிறார்: “மேய்ச்சல் நிலங்கள் ஆறு வருடங்களில் பாழாக்கப்பட்டன. பின்பு, அது ஒரு பெரும் குற்றமென்பதை அனைவரும் உணர்ந்து, ‘சரி, அரசாங்கத்திடமிருந்து போதுமான பணத்தைப் பெற்றுக்கொண்டோம்’ என சொல்லி பண்ணைக்காரர்கள் அவ்விடத்தைவிட்டுச் சென்றனர்.” அதன் விளைவு? “சுமார் 2,00,000 சதுர கிலோமீட்டர் மேய்ச்சல் நிலம் தரிசு நிலமாகிவருகிறது.”
ஆனாலும் இன்று ஃபெராஸைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இப்படிப்பட்ட பாழ் நிலங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். எந்த விதத்தில்? சில வருடங்களுக்கு முன்பு, பயனற்றுக் கிடந்த கால்நடைப் பண்ணையில் அமேசோனியா-கொட்டை மரத்தின் 3,20,000 நாற்றுகளை நட்டார்கள். அந்த நாற்றுகள் இன்று வளர்ந்து கனிதரும் மரங்களாய் நிற்கின்றன. அமேசோனியா-கொட்டை மரங்கள் வேகமாக வளருவதன் காரணமாகவும் கொழுத்த லாபம் ஈட்டுவதன் காரணமாகவும் இப்போது அதன் நாற்றுகள் அமேசானின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களிலும் நடப்படுகின்றன. அங்கு விளையும் பொருட்களை பயன்படுத்துவது, வருடம் முழுவதும் விளையும் பயிர்களை நடும்படி விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுப்பது, காடுகளைச் சேதப்படுத்தாமல் மரக்கட்டைகள் சேகரிப்பதற்கான புதிய வழிகளைத் தெரிந்துகொள்ளுவது, பொட்டல் நிலங்களை விளையும் பூமியாக்குவது ஆகியவை நிபுணர்களின்படி காடுகளைப் பாதுகாத்திட உதவும் ஞானமான மாற்று வழிகள்.—“பாதுகாத்திட உழைத்தல்,” என்ற பெட்டியைக் காண்க.
ஆனாலும், காடுகளைப் பாதுகாத்தல் என்பது பாழ் நிலங்களை திருத்தியமைப்பதைக் காட்டிலும் அதிகத்தை தேவைப்படுத்துகிறது. மனித இயல்பை திருத்தியமைப்பதை அது தேவைப்படுத்துகிறது.
கோணலானதை எவ்வாறு நேராக்குவது
அநீதியை சரிக்கட்டுதல். மற்றவர்களது உரிமைகளை தகர்க்கும் நியாயமற்ற மனித நடத்தை பொதுவாக பேராசையின் விளைவே. பண்டைய தத்துவஞானியான செனெக்கா சொன்ன விதமாகவே, “பேராசையை இயற்கை முழுவதும் ஒருங்கே எதிர்க்க முடியுமா?”—மாபெரும் அமேசான் மழைக்காடு இதற்கு விதிவிலக்கல்ல.
அமேசானில் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் ஏழை விவசாயிகள் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் தங்களது பாக்கெட்டுகளை நிரப்ப காடுகளை அழித்துவருகின்றனர் பெரிய நிலங்களின் சொந்தக்காரர்கள். அதேபோல் அமேசான் காடு பெருமளவில் அழிக்கப்படுவதற்கு கிழக்கத்திய நாடுகள் காரணமாயிருக்கின்றன என அதிகாரிகள் சுட்டிக்காண்பிக்கின்றனர். “செல்வமிக்க தொழில்மயமான நாடுகள் இன்று காணப்படும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு பெருமளவில் காரணமாயிருக்கின்றன” என ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சிக் குழு முடிவுசெய்தது. அமேசானுக்கான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆணையத்தின்படி, அமேசானைப் பாதுகாப்பதற்கு நிச்சயமாகவே தேவைப்படுவது “ஒரு புதிய உலகளாவிய ஒழுக்கநெறி; மனித ஒருமைப்பாடு மற்றும் நீதியின் அடிப்படையில் மேம்பட்ட வளர்ச்சியை உண்டாக்கும் ஓர் ஒழுக்கநெறி.”
எனினும், அமேசானுக்குமேல் தொடர்ந்து காணப்படும் புகை மண்டலம் நமக்கு நினைப்பூட்டுவது இதைத்தான்: உலகெங்கிலும் சுற்றுச்சூழலைக் குறித்து அக்கறைகொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களது முயற்சிகள் மத்தியிலும், புகையைக் கையில் பிடிப்பது எவ்வளவு கடினமோ அந்தளவுக்கு கடினமாயிருந்திருக்கிறது அறிவொளியூட்டப்பட்ட கருத்துக்களை நிஜமாக்குவது. ஏன்?
அமேசான் மரங்களின் வேர்கள் அந்தக் காட்டு நிலத்தில் எவ்வளவு ஆழத்திற்கு சென்றிருக்கின்றனவோ அவற்றைக் காட்டிலும் ஆழமாக பேராசை போன்ற துர்க்குணங்கள் மனித சமுதாய அமைப்பில் வேரூன்றியிருக்கின்றன. காட்டைப் பாதுகாப்பதற்கு நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டியிருந்தாலும், காடுகளின் அழிவிற்குக் காரணமாயுள்ள நாள்பட்ட சிக்கலான பிரச்சினைகளை ஒழித்துக்கட்டுவதில் மனிதர் எவ்வளவு முழு மனதோடு ஈடுபட்டாலும் அவர்கள் அதில் வெற்றிபெறுவர் என எதிர்பார்ப்பது எதார்த்தமாய் இல்லை. மனித இயல்பை கூர்ந்து கவனித்த ஞானமுள்ள பூர்வ ராஜாவாகிய சாலொமோன் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்டது இன்றும் உண்மையாய் இருக்கிறது. மனித முயற்சியினால் மாத்திரமே ‘கோணலானதை நேராக்க முடியாது.’ (பிரசங்கி 1:15) இதைத்தான் போர்ச்சுகல் நாட்டு பழமொழி ஒன்று சொல்கிறது, “O pau que nasce torto, morre torto” (கோணலாய் வளர்ந்த மரம், கோணலாய் சாகிறது). இருந்தபோதிலும், உலகெங்கிலுமுள்ள மழைக்காடுகளுக்கு எதிர்காலம் இருக்கிறது. ஏன்?
அறிவொளி எதிர்காலத்தில்
நூறு வருடங்களுக்கு முன்பு, பிரேஸில் நாட்டின் எழுத்தாளரான ஏயூக்ளிடெஸ் டா கூன்யா அமேசானிலுள்ள ஏராளமான உயிரினங்களால் அந்தளவு கவரப்பட்டதால் அக்காட்டை “பிரசுரிக்கப்படாத தற்காலத்திய ஆதியாகம பக்கம்” என விவரித்தார். அந்தப் ‘பக்கத்தை’ அழுக்காக்கிக் கிழிப்பதில் மனிதன் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும், கட்டுக்கதைகள் இல்லாத அமேசான் (ஆங்கிலம்) என்ற அறிக்கை சொல்லும் விதமாக இப்போதிருக்கும் அமேசான் “படைக்கப்பட்ட அந்தச் சமயத்தில் பூமி எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இருப்பதற்கான நாட்டத்தைத் தூண்டும் ஒரு சின்னமாக” இருக்கிறது. ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு?
இதைச் சிந்தித்துப் பாருங்கள்: டா கூன்யா கூறிய பிரகாரம் அமேசான் மழைக்காடும் உலகின் மற்ற மழைக்காடுகளும் “தனித்தன்மைவாய்ந்த புத்திக்கூர்மைக்கு” அத்தாட்சி அளிக்கின்றன. அடிவேர்கள் முதல் நுனி இலைகள் வரை அக்காட்டின் மரங்கள் கைதேர்ந்த கலைஞரின் திறமையைப் பறைசாற்றுகின்றன. அது அவ்வாறிருக்க, பேராசைமிக்க மனிதர் இந்த மழைக்காடுகளை அழித்து பூமியைக் கெடுப்பதை கைதேர்ந்த இந்தக் கலைஞர் அனுமதிப்பாரா? இல்லை என்ற எதிரொலிக்கும் பதிலை ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் கொடுக்கிறது! அது இவ்வாறு வாசிக்கிறது: “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய [கடவுளுடைய] கோபம் மூண்டது; . . . பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் காலம் வந்தது.”—வெளிப்படுத்துதல் 11:18.
இருந்தாலும் பேராசைமிக்க மக்களை நீக்குவதன் மூலம் சிருஷ்டிகர் இந்தப் பிரச்சினையின் ஆரம்பத்திற்கே சென்று அதைத் தீர்த்துவைக்கப்போவதாக மாத்திரம் இந்தத் தீர்க்கதரிசனம் சொல்வதில்லை ஆனால் அதை அவர் நமது காலத்தில் செய்யப்போவதாகவும் அது சொல்கிறது. நாம் ஏன் இவ்வாறு சொல்லலாம்? ஏனென்றால், மனிதன் பூமியைக் ‘கெடுக்கும்’ காலத்தில் கடவுள் நடவடிக்கை எடுப்பதாக அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அந்த வார்த்தைகள் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட சமயத்தில், மனிதன் அதைச் செய்வதற்கு அதிக எண்ணிக்கையிலும் இல்லை அவனிடம் அதைச் செய்வதற்கான வசதிவாய்ப்புகளும் இல்லை. ஆனால் நிலைமை இப்போது மாறியிருக்கிறது. “சரித்திரத்திலேயே முதன்முறையாக, மனிதவர்க்கம் அதன் சொந்த வாழ்விற்கு அடிப்படையாய் இருப்பவற்றையே அழிப்பதற்கான நிலையில் இன்று இருக்கிறது, அதுவும் குறிப்பிட்ட இடங்களிலோ பகுதிகளிலோ மாத்திரமல்லாமல் உலகளாவிய விதத்தில் அதைச் செய்யும் நிலையில் இருக்கிறது,” என்று வெப்பமண்டலக் காடுகளைப் பாதுகாத்தல்—மிக முக்கிய சர்வதேச வேலை என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது.
ஆகவே ‘பூமியைக் கெடுப்பவர்களுக்கு’ எதிராக சிருஷ்டிகர் நடவடிக்கை எடுப்பதற்கான ‘காலம்’ அருகிலிருக்கிறது. அமேசான் மழைக்காட்டிற்கும் பூமியில் அழிந்துவரும் மற்ற இடங்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. சிருஷ்டிகர் அதை நடத்திக்காட்டுவார்—இது கட்டுக்கதையல்ல, உண்மை.
[பக்கம் 13-ன் பெட்டி]
பாதுகாத்திட உழைத்தல்
மத்திய அமேசானிலுள்ள மனாஸ் நகரின் 4,00,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் மீண்டும் உயிர்பெற்றுள்ள வளமிக்க காட்டில் பிரேஸிலின் சர்வதேச ஆராய்ச்சிக் கழகத்தின் அல்லது INPA-ன் வெவ்வேறு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. சூழலியல், காடுகள் வளர்த்தல், உடலாரோக்கியம் போன்ற 13 வித்தியாசமான இலாகாகளைக் கொண்டுள்ள இந்த 42 ஆண்டுகால ஸ்தாபனம், அந்தப் பகுதியிலேயே மிகப் பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக திகழ்கிறது. அமேசானின் செடிகள், மீன்கள், ஊரும் பிராணிகள், நில நீர்வாழ் உயிரினங்கள், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றின் மிகச் சிறந்த தொகுப்பும் இங்கு இருக்கிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 280 ஆராய்ச்சியாளர்களின் பணி அமேசானின் சூழலியல் அமைப்பின் சிக்கலான தொடர்புகளை மனிதன் இன்னும் நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த நிறுவனத்தைப் பார்வையிட செல்வோர் நம்பிக்கையோடு திரும்புகின்றனர். அதிகாரவர்க்க ஆட்சி மற்றும் அரசியல் தடைகள் மத்தியிலும் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்களும் அந்நிய நாட்டு அறிவியலாளர்களும் உலக மழைக்காடுகளின் மாணிக்கக் கிரீடத்தை—அமேசானை—பாதுகாத்திட உழைப்பதற்கு தீர்மானமாயிருக்கின்றனர்.
[பக்கம் 10-ன் படம்]
காட்டில் மரங்கள் வெட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது
[பக்கம் 11-ன் படங்கள்]
மழைக்காட்டிலிருந்து பெறப்பட்ட பொருட்கள்: பழங்களும் கொட்டைகளும் எண்ணெய்களும் ரப்பரும் இன்னும் எத்தனை எத்தனையோ
[படத்திற்கான நன்றி]
J. van Leeuwen, INPA-CPCA, மனாஸ், பிரேஸில்