உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/22 பக். 4-9
  • மழைக்காட்டில் சோக மழை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மழைக்காட்டில் சோக மழை
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தனிமையாக்கப்பட்ட “அழிந்துவரும் உயிர்கள்”
  • கொஞ்சம் வெட்டினாலும் இழப்புதானா?
  • “கம்பளத்தை” சுருட்டிவிடுதல்
  • உயிரினங்கள் அழிகின்றன—அழிந்தால் என்ன?
  • விருந்தும் இல்லை, பஞ்சமும் இல்லை
  • பலன்தரும் செடிகள்
  • தீர்வுகளைத் தேடி
    விழித்தெழு!—1997
  • மழைக்காடுகளை மொட்டையடித்தல்
    விழித்தெழு!—1998
  • மழைக்காடுகளின் பயன்கள்
    விழித்தெழு!—1998
  • மழைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 3/22 பக். 4-9

மழைக்காட்டில் சோக மழை

அமேசான் மழைக்காட்டை விமானத்திலிருந்து பார்க்கும்போது, ஒரு கண்டத்தின் அளவிலான மெத்தென்ற கம்பளம்தான் உங்கள் நினைவுக்கு வரும்; ஓரலானா அதைக் கண்டுபிடித்தபோது இருந்ததைப்போலவே இப்போதும் பச்சைப்பசேலென்றும் புத்தம்புதிதாகவும் காட்சியளிக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த அந்தக் காட்டு நிலத்தில் சிறிய பாலூட்டிகளின் அளவுள்ள பூச்சிகளிலிருந்து விலகி நீங்கள் சிரமத்தோடு நடந்து செல்கையில், நிஜம் எது நிழல் எதுவென வேறுபடுத்திப் பார்ப்பதை நீங்களும் கடினமாகக் காணலாம். உங்கள் கண்களுக்கு இலைகளாக தோன்றியவை உண்மையில் பட்டாம்பூச்சிகளாகவும், லியானா கொடிகளாய் தோன்றியவை உண்மையில் பாம்புகளாகவும் மரக்கட்டைகளாய் தோன்றியவை உண்மையில் திடுக்கிட்டு மிக வேகமாய் தடுமாற்றத்தோடு ஓடும் கொறிவிலங்குகளாகவும் இருக்கின்றன. அமேசான் காடு இன்னமும் உண்மையெது கற்பனையெது என்ற குழப்பத்தை அளிக்கிறது.

“மிகப் பெரிய முரண்பாடு என்னவென்றால், கட்டுக்கதைகள் சித்தரிக்கும் அமேசானைப்போலவே நிஜ அமேசான் நம்பமுடியாததாய் இருக்கிறது,” என ஓர் ஆராய்ச்சியாளர் சொல்கிறார். ஆம், உண்மையிலேயே நம்பமுடியாததுதான்! மேற்கு ஐரோப்பாவின் அளவிற்கு பெரியதாயிருக்கும் ஒரு காட்டை கற்பனை செய்து பாருங்கள். 4,000-த்துக்கும் அதிகமான வெவ்வேறு மரங்களால் அதை நிரப்புங்கள். 60,000-க்கும் அதிகமான வெவ்வேறு அழகிய பூச்செடிகளால் அதை அலங்கரியுங்கள். கண்ணைப் பறிக்கும் நிறங்களிலுள்ள 1,000 கணக்கான பறவைகளால் அதற்கு மெருகூட்டுங்கள். 300 வகை பாலூட்டிகளால் அதற்கு அழகூட்டுங்கள். மீதத்தை பத்து லட்சம் அல்லது ஒருவேளை 20 லட்சம் பூச்சி இனங்களால் நிரப்புங்கள். அமேசான் மழைக்காட்டை விவரிக்கும் எவரும் ஏன் ஒரேயடியாக உயர்த்திப் பேசுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு விளங்கும். பூமியிலுள்ள இந்த மிகப் பெரிய வெப்பமண்டல மழைக்காட்டில் ததும்பும் உயிரினங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையே.

தனிமையாக்கப்பட்ட “அழிந்துவரும் உயிர்கள்”

தொன்னூறு வருடங்களுக்கு முன்பு அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளரான மார்க் ட்வெயின் இருதயங்களைக் கொள்ளை கொள்ளும் இந்தக் காட்டை இவ்வாறு விவரித்தார்: “மனதை மயக்கும் நிலம், வெப்பமண்டல அதிசயங்கள் அபரிமிதமாய் காணப்படும் ஓர் இடம், தனித்தன்மைவாய்ந்த பறவைகளும் பூக்களும் மிருகங்களும் நிறைந்த ஓர் அற்புத இடம், அலிகேட்டரும் முதலையும் குரங்கும் அவற்றின் வீடுகளான மிருகக்காட்சிச் சாலையில் இருப்பதைப் போன்றே சொகுசாக வாழும் ஓர் இடம்.” இன்று, ட்வெயினின் சாதுர்யமான விமர்சனத்தின் அர்த்தம் திரிந்துவிட்டது. அமேசான் வெப்பமண்டலத்தில் பெருகிவரும் அதிசய உயிரினங்களுக்கு விரைவில் அருங்காட்சியகங்களும் மிருகக்காட்சி சாலைகளும் மாத்திரமே வீடுகளாக ஆகலாம். ஏன்?

அதற்கு முக்கிய காரணம், மனிதன் அமேசான் மழைக்காடுகளை வெட்டி வீழ்த்தி, அந்தப் பகுதியின் தாவர வகைகள் மற்றும் மிருக இனங்களின் இயற்கைச் சூழலை அழித்திருப்பதாகும். எனினும், தாவர மற்றும் மிருக இனங்கள் இன்னும் உயிருடன் இருந்தாலும், அதன் உறைவிடங்களை அதிகமாக அழிப்பதினால் மட்டுமல்ல, வெளிப்படையாக தெரியாத மற்ற காரணங்களால் அவை “அழிந்துவரும் உயிர்களாக” ஆகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், இவ்வினங்கள் அழிந்துபோவதை எதுவும் தடுக்க முடியாது என்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள்.

அப்படிப்பட்ட நிலைக்கு ஒரு காரணம் தனிமையாக்கப்படுதல். பாதுகாப்பதில் அக்கறையுள்ள அரசாங்க அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட காட்டுப் பகுதியைச் சேர்ந்த உயிரினங்கள் அழிந்துவிடாமலிருக்க அந்தப் பகுதியில் மரங்கள் வெட்டுவதைத் தடைசெய்யலாம். ஒரு சிறிய காட்டு ஒதுக்கிடம் இந்த உயிரினங்களை இறுதியில் அழித்துவிடும். வெப்பமண்டல காடுகளைப் பாதுகாத்தல்—முதன்மையான சர்வதேச வேலை என்ற ஆங்கிலப் புத்தகம், சிறிய காட்டு ஒதுக்கிடங்கள் ஏன் நீண்ட காலத்திற்கு உயிர்கள் வாழ துணைபுரிவதில்லை என்பதைக் காட்ட ஓர் உதாரணத்தை அளிக்கிறது.

வெப்பமண்டல மர வகைகள், ஆண் மற்றும் பெண் மரங்களைப் பெரும்பாலும் கொண்டுள்ளன. இனப்பெருக்கம் செய்ய, அவை வௌவால்களிடமிருந்து உதவியைப் பெறுகின்றன; வௌவால்கள் ஆண் பூக்களிலிருந்து பெண் பூக்களுக்கு மகரந்தத் தூள்களை எடுத்துச் செல்கின்றன. சந்தேகமில்லாமல், வௌவால்கள் பறக்கும் தூரத்தில் மரங்கள் வளர்ந்தால்தான் இந்த மகரந்தச் சேர்க்கை நடைபெறும். பெண் மரத்திற்கும் ஆண் மரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருந்தால் வௌவால்களால் அந்தளவு தூரத்திற்கு பறக்க முடிவதில்லை; ஒரு காட்டு ஒதுக்கிடம் பரந்த வறண்ட நிலத்தால் சூழப்பட்டிருக்கும்போது இதுதான் நடைபெறுகிறது. அந்த மரங்களில், “நீண்ட கால இனப்பெருக்கம் இனியும் நடைபெற முடியாத காரணத்தால் ‘அழிந்துவரும் உயிர்களாக’ ” ஆகிவிடுகின்றன என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மரங்களுக்கும் வௌவால்களுக்கும் உள்ள இந்தத் தொடர்பு, அமேசானின் உயிரின சூழலியல் அமைப்பை உருவாக்கும் தொடர்புகளில் ஒன்றே ஒன்றுதான். எளிய வார்த்தைகளில் சொன்னால், அமேசான் காடு, வித்தியாசப்பட்டாலும் நெருங்கிய உறவுமுறையைப் பெற்றுள்ள நபர்களுக்கு இடத்தையும் உணவையும் அளிக்கும் ஒரு பெரிய வீட்டைப் போன்றது. இட நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, அந்த மழைக்காட்டு உயிரினங்கள் வித்தியாசமான அடுக்குகளில் வாழ்கின்றன—சில காட்டு நிலத்தில் வாழ்கின்றன, மற்றவை மரங்களின் மேற்பரப்பில் வாழ்கின்றன. அனைத்து காட்டுவாசிகளுக்கும் வேலை இருக்கிறது; அவை இடைவிடாமல் வேலை செய்கின்றன—சில பகலில், மற்றவை இரவில். அனைத்து உயிரினங்களுமே அதனதன் பங்கில் செய்யவேண்டிய வேலையைச் சரியாக செய்யும்படி அனுமதிக்கப்பட்டால், அமேசானின் தாவர மற்றும் மிருக இனங்களின் இந்தச் சிக்கலான சூழலியல் அமைப்பு எந்தப் பிரச்சினையுமின்றி நன்றாக இயங்கும்.

எனினும், அமேசானின் சூழலியல் அமைப்பு (ஆங்கிலத்தில் ecosystem; “eco” என்பது “வீடு” என அர்த்தப்படுத்தும் oi ʹkos என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது) எளிதில் அழியத்தக்கதாக இருக்கிறது. இந்தக் காட்டு சூழலியல் அமைப்பில் மனிதன் தலையிட்டு ஒருசில உயிரினங்களை மாத்திரமே தன்னலத்துக்குப் பயன்படுத்தினாலும், இவ்வாறு அவன் ஒழுங்கைக் குலைப்பது காட்டின் அனைத்து அடுக்குகளில் வாழும் மிருகங்களையும் பாதிக்கிறது. ஒரேவொரு தாவர இனம் அழிந்துபோவது இறுதியில் சுமார் 30 மிருக இனங்கள் அழிந்துபோவதில் விளைவடையலாம் என்பதாக நார்மன் மையர்ஸ் என்ற பாதுகாப்பாளர் குறிப்பிடுகிறார். வெப்பமண்டலத்தைச் சேர்ந்த பெரும்பாலான மரங்கள், அவற்றின் பங்கில், அவற்றின் விதைகள் சிதறடிக்கப்படுவதற்கு மிருகங்களின்மீது சார்ந்திருக்கின்றன; ஆகவே, மனிதன் மிருகங்களை அழிப்பதானது அவற்றால் பயன்பெரும் மரங்கள் அழிவதில் விளைவடைகிறது. (“மரம்-மீன் தொடர்பு” என்ற பெட்டியைக் காண்க.) தனிமையாக்கப்படுதல் போலவே, தொடர்புகளை அறுப்பதும் நிச்சயமாகவே அதிகமதிகமான காட்டு உயிரினங்களை “அழிந்துவரும் உயிர்களாக” ஆக்கும்.

கொஞ்சம் வெட்டினாலும் இழப்புதானா?

விரலில் ஏற்படும் வெட்டுக்காயத்தின்மீது புதுத் தோல் வளருவதுபோலவே, அனைத்து மரங்களும் வெட்டப்பட்ட ஒரு நிலப்பரப்பு மீண்டும் வளம்பெற்று பசுஞ்செடிகொடிகளின் போர்வையை புதிதாக விளைவிக்கும் எனவும் சிலர் நியாயம் பேசி, சிறு காட்டுப் பகுதிகளை அழிப்பது சரியானதென சொல்கின்றனர். அவர்கள் சொல்வது உண்மைதானா? நிச்சயமாகவே இல்லை.

சந்தேகமில்லாமல், மரங்கள் வெட்டப்பட்ட நிலத்தை மனிதன் உபயோகிக்காமல் போதுமான காலத்திற்கு விட்டுவிட்டால் காடு மீண்டும் வளர்ந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால் அதே சமயத்தில், தெளிவான அசல் பத்திரத்திற்கும் தரம் குறைந்த அதன் நகலுக்கும் என்ன வேறுபாடு இருக்குமோ அந்த வேறுபாடுதான் அசல் காட்டிற்கும் புதிதாய் வளரும் காட்டிற்கும் இருக்கும். பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஒரு தாவரவியல் நிபுணரான இமா வ்யேயிரா, அமேசான் பகுதியில், வெட்டப்பட்ட பிறகு மீண்டும் வளர்ந்து ஒரு நூற்றாண்டு காலம் பழமையான ஒரு காட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்; முன்பிருந்த காட்டில் செழிப்பாய் வளர்ந்த 268 தாவர வகைகளில் வெறுமனே 65 மட்டும்தான் இப்போது மீண்டும் வளர்ந்திருக்கின்றன என்பதைக் கண்டார். இதே வித்தியாசம்தான் அந்தப் பகுதியிலுள்ள மிருகங்களைப் பொருத்ததிலும் உண்மையாய் இருக்கிறது என அந்தத் தாவரவியல் நிபுணர் சொல்கிறார். ஆகவே சிலர் சொல்லும் பிரகாரம் மரங்களை வெட்டுவது பசும் காடுகளை வறண்ட பாலைவனங்களாக மாற்றாதபோதிலும், அமேசான் மழைக் காடுகளின் சில பகுதிகளை அசலோடு ஒப்பிடுகையில் தரம் குறைந்த நகலாக்குகிறது.

அதோடுகூட, காட்டின் ஒரு சிறு பகுதியை வெட்டுவதும்கூட வேறெங்கும் இல்லாமல் அப்பகுதியில் மாத்திரமே வளர்ந்து, படர்ந்து/ஊர்ந்து, தொற்றி ஏறும் தாவரங்களையும் மிருகங்களையும் பெரும்பாலும் அழிக்கிறது. உதாரணத்திற்கு, ஈக்வடாரிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், வெப்பமண்டலக் காட்டில் 1.7 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1,025 தாவர வகைகள் இருந்ததைக் கண்டனர். அவற்றில் 250-க்கும் அதிகமான வகைகள் உலகில் வேறெந்த இடத்திலும் வளரவில்லை. “ஒரு உதாரணம், சாயின்-டி-கோலேரா (ஆங்கிலத்தில் pied bare-faced tamarin),” என பிரேஸிலைச் சேர்ந்த சூழலியல் நிபுணரான ரோஸேர்யோ க்ரிபெல் சொல்கிறார்; அது வெள்ளை டீ-ஷர்ட் ஒன்றை அணிந்திருப்பதுபோல் காணப்படும் சிறிய அழகான குரங்காகும். “மீந்திருக்கும் இக்குரங்குகளில் சில, மத்திய அமேசானிலுள்ள மனாஸுக்கு அருகில் உள்ள சிறிய காட்டுப் பகுதியில் மட்டுமே வாழ்கின்றன, ஆனால் அந்தச் சிறிய வாழ்விடத்தை அழிப்பதும்கூட, இந்த உயிரினத்தை என்றென்றும் அழித்துவிடும்,” என்பதாக சொல்கிறார் டாக்டர் க்ரிபெல். கொஞ்சம் வெட்டினாலும் பேரிழப்புதான்.

“கம்பளத்தை” சுருட்டிவிடுதல்

காடுகளை முற்றிலும் அழிப்பதானது, அமேசான் மழைக் காட்டின்மீது பொழியும் அச்சுறுத்தும் சோக மழையாக இருக்கிறது. சாலைகள் அமைப்போரும், மரங்கள் வெட்டுவோரும், சுரங்கத் தொழிலாளிகளும் மற்ற அநேகரும் காட்டை கம்பளத்தைப் போல சுருட்டிவிடுகின்றனர், அதாவது, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சூழலியல் அமைப்பு முழுவதையும் அழித்துவிடுகின்றனர்.

பிரேஸிலில் ஒவ்வொரு வருடமும் அழிக்கப்படும் காடுகளின் அளவின் சரியான புள்ளிவிவரங்களைக் குறித்து பெரும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. மிதமான மதிப்பீடு வருடத்திற்கு 36,000 சதுர கிலோமீட்டர் அழிக்கப்படுவதாய் காண்பிக்கையில், ஏற்கெனவே அழிக்கப்பட்டிருக்கும் அமேசான் மழைக்காட்டின் மொத்த அளவு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம். இது ஜெர்மனியைவிட பெரிய நிலப்பகுதியைக் குறிக்கும். பிரேஸிலின் பேர்பெற்ற வாராந்தர செய்தித்தாளான வேஜா வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டில் சாகுபடிக்காக மரங்களை வெட்டி எரிக்கும் விவசாயிகளால் 1995-ல் சுமார் 40,000 முறை தீவிரமான காட்டுத் தீ ஏற்பட்டது—இது அதற்கு முந்திய வருடத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகும். மனிதன் அந்தளவுக்கு தீவிரமாக காடுகளை தீ வைத்து அழிப்பதால் அமேசானின் சில பகுதிகள் “பசுமையான எல்லைப்புறத்தின் எரிநரகம்” போன்று காட்சியளிப்பதாய் வேஜா எச்சரித்தது.

உயிரினங்கள் அழிகின்றன—அழிந்தால் என்ன?

‘ஆனால் அந்த லட்சக்கணக்கான உயிரினங்கள் நமக்கு தேவையா என்ன?’ என்று சிலர் கேட்கின்றனர். நிச்சயம் நமக்குத் தேவை என வாதாடுகிறார், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பாளரான எட்வர் ஓ. வில்ஸன். “நமது தண்ணீரை சுத்திகரிப்பதற்கும் நம் நிலத்தை வளமூட்டுவதற்கும் நாம் சுவாசிக்கும் காற்றை உற்பத்திசெய்வதற்கும் இயங்கிக்கொண்டிருக்கும் சூழலியல் அமைப்புகளில் நாம் சார்ந்திருப்பதால், உயிரினங்களில் காணப்படும் வகையினம், சந்தேகமில்லாமல், சர்வசாதாரணமாக புறக்கணிக்க வேண்டிய ஒரு காரியமல்ல,” என சொல்கிறார் வில்ஸன். மக்கள், தாவரங்கள் மற்றும் காப்புரிமைகள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மரபியல் வகைகள் ஏராளமாக இருப்பதுதானே மனித வாழ்விற்கு அடிப்படையாக இருக்கிறது. பல்வகையினம் மறைந்துபோனால், நாமும் விரைவில் மறைந்துபோவோம்.”

உண்மையில், உயிரின அழிவின் பாதிப்பு, மரங்கள் வெட்டப்படுவதையும் மிருகங்கள் பயமுறுத்தப்படுவதையும் அவ்விடத்து மக்கள் தொந்தரவுக்குள்ளாவதையும்விட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. (“மனிதரைக் கருத்தில்கொள்கையில்” என்ற பெட்டியைக் காண்க.) காடுகள் அழிக்கப்படுவது உங்களைப் பாதிக்கலாம். இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: மொஸாம்பிக்கில் கசாவா கிழங்குக் குச்சிகளை அறுக்கும் ஒரு விவசாயி, உஸ்பெகிஸ்தானில் கருத்தடை மாத்திரை சாப்பிடும் ஒரு தாய், சரஜெவோவில் மார்ஃபைன் மருந்தளிக்கப்படும் காயமடைந்த ஒரு பையன், அல்லது நியூ யார்க் கடையில் அசாதாரண நறுமணப்பொருளை நுகரும் ஒரு வாடிக்கையாளர்—இந்த அனைத்து நபர்களுமே வெப்பமண்டலக் காட்டில் உருவான பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதாக பானோஸ் இன்ஸ்டிட்யூட் குறிப்பிடுகிறது. பாழ்ப்படுத்தப்படாத காடு இவ்வாறு உங்களையும் சேர்த்து உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் சேவை புரிகிறது.

விருந்தும் இல்லை, பஞ்சமும் இல்லை

அமேசான் மழைக்காட்டினால் உலகிற்கு விருந்தளிக்க முடியாமலிருக்கலாம், ஆனால் உலகளாவிய பஞ்சத்தைத் தடுக்க முடியும். (“நிலவளம் பற்றிய கட்டுக்கதை” என்ற பெட்டியைக் காண்க.) எந்த விதத்தில்? 1970-களில், பெரிய அளவில், அபரிமிதமான விளைச்சல் தரும் சில தாவர வகைகளை மனிதர் நட ஆரம்பித்தனர். அதிக விளைச்சல் தரும் இந்தச் செடிகள் கூடுதலான 50 கோடி மக்களுக்கு உணவளிக்க உதவியிருந்தாலும், ஒரு சிக்கல் இருக்கிறது. அவற்றிற்கு மரபியல் மாறுபாடு இல்லாததன் காரணமாக, அவை பலவீனமாயும் எளிதில் நோயால் தாக்கப்படுபவையாயும் இருக்கின்றன. நாட்டில் அதிக விளைச்சல்தரும் பயிரின் பெரும்பகுதியை ஒரு வைரஸ் கிருமி அழித்து, பஞ்சங்களை உண்டாக்கலாம்.

ஆகவே இன்னும் சத்துள்ள பயிர்களை விளைவிப்பதற்கும் பட்டினியை தவிர்ப்பதற்கும், ஐநா உணவு மற்றும் விவசாய மேம்பாட்டுக் கழகம் (FAO) “பல்வகை மரபியல் பொருட்களை பரந்த அளவில் உபயோகப்படுத்தும்படி” இப்போது உற்சாகப்படுத்துகிறது. இந்த விஷயத்தில்தான் மழைக்காடும் அங்கு வாழும் உயிரினங்களும் பங்களிக்கின்றன.

உலகிலுள்ள தாவர வகைகளில் பாதிக்கும் அதிகமானவை வெப்பமண்டலக் காடுகளில் இருப்பதால் (உணவுப் பயிர்களாக ஆகும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் சுமார் 1,650 வகைகள் உட்பட), காட்டுச் செடிகளைத் தேடும் எந்த ஆராய்ச்சியாளருக்கும் அமேசான் காடு பொருத்தமான இடமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்தக் காட்டில் வசிப்போருக்கு இந்தச் செடிகளை எவ்வாறு உபயோகிப்பதென்பது தெரியும். உதாரணத்திற்கு, பிரேஸிலைச் சேர்ந்த காயாப்போ இந்தியர்கள், புது பயிர் வகைகளை வளர்ப்பது மாத்திரமல்லாமல், மாதிரிக்காக சில வகைகளை மலையோரப் பகுதிகளில் நட்டுவைக்கின்றனர். அப்படிப்பட்ட காட்டுப் பயிர் வகைகளையும் பலவீனமான வீட்டுப் பயிர் வகைகளையும் இனச்சேர்க்கை செய்தால் மனிதன் உண்ணும் பயிர்களின் பலமும் வலுவும் கூடும். அந்த மேம்பாடு அவசரமாக தேவைப்படுகிறது, ஏனென்றால் “அடுத்த 25 வருடங்களில் உணவு உற்பத்தியில் 60% அதிகரிப்பு அவசியம்,” என FAO சொல்கிறது. இப்படியிருந்தும், மரங்களை வெட்டிவீழ்த்தும் புல்டோஸர் இயந்திரம் அமேசான் மழைக்காட்டினுள் பயணத்தைத் தொடருகிறது.

அதன் விளைவுகள் என்ன? மனிதன் மழைக் காட்டை அழிப்பது, ஒரு விவசாயி தனது தானிய விதைகளைச் சாப்பிடுவதற்கு சமமாயிருக்கிறது—அந்த விவசாயி அப்போதைய பசியைத் தீர்த்துக்கொள்கிறார் ஆனால் எதிர்கால பசியைத் தீர்த்துக்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகிறார். பல்வகை உயிர்களின்பேரிலான நிபுணர் குழு ஒன்று, “மீந்திருக்கும் பயிர் வகைகளை பாதுகாத்து விருத்திசெய்வதானது உலகளாவிய அக்கறைக்குரிய முக்கிய காரியம்” என சமீபத்தில் எச்சரித்தது.

பலன்தரும் செடிகள்

இப்போது அந்தக் காட்டு “மருந்துக்கடைக்குள்” நுழையுங்கள், வெப்பமண்டல படரும் கொடிகளோடும் மற்ற செடிகளோடும் மனிதனின் எதிர்காலம் பின்னிப் பிணைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். உதாரணத்திற்கு, அமேசானின் படரும் கொடிகளிலிருந்து எடுக்கப்படும் காரமங்கள் (alkaloids) அறுவை சிகிச்சைக்கு முன்பு தசைகளைத் தளர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன; வெள்ளணுப் புற்றுநோயுள்ள ஒவ்வொரு 5-ல் 4 பிள்ளைகளுக்கு, ரோஸி பெரிவின்க்கில் (rosy periwinkle) என்ற காட்டுப் பூவிலுள்ள இரசாயனங்களைக் கொடுப்பதன் மூலம் வாழ்நாள் நீடிக்கப்படுகிறது. இக்காடு இன்னும் அளிப்பவை: மலேரியாவிற்குக் கொடுக்கப்படும் க்வினைன் மருந்து; இருதய நோயிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் டிஜிடாலிஸ் (digitalis); கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் டையாஸ்ஜெனன் (diosgenin). மற்ற சில தாவரங்கள் எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவற்றை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “அமேசானில் மாத்திரமே, அப்பகுதியைச் சேர்ந்த மக்களால் மருந்துகளாக பயன்படுத்தப்படுபவையும் குணப்படுத்தும் தன்மையுள்ளவையுமான 2,000 வகையான செடிகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன” என ஒரு ஐ.மா. அறிக்கை சொல்கிறது. உலகம் முழுவதும், ஒவ்வொரு பத்துபேரிலும் 8 பேர் தங்கள் வியாதிகளைக் குணப்படுத்த மருந்து செடிகளிடம் திரும்புகின்றனர் என மற்றொரு ஆராய்ச்சி சொல்கிறது.

ஆகவே நம் உயிர் காக்கும் செடிகளை நாம் பாதுகாப்பது நியாயமானது என டாக்டர் ஃபிலிப் எம். ஃபெர்ன்ஸைட் சொல்கிறார். “அமேசான் காடு அழிக்கப்படுவதானது, புற்றுநோயைக் குணப்படுத்த எடுக்கப்போகும் முயற்சிகளுக்கு ஒரு பெரும் தடையாக கருதப்படுகிறது. . . . நவீன மருத்துவத்தின் புகழ்பெற்ற சாதனைகள், பெரும்பான்மையான இந்தத் தாவரங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்கின்றன என்ற கருத்து, அழிவுண்டாக்கும் மிதமிஞ்சிய தற்பெருமையைக் குறிக்கிறது,” என அவர் தொடர்ந்து சொல்கிறார்.

இருந்தபோதிலும், மனிதன் விதவிதமான மிருகங்களையும் தாவரங்களையும் கண்டுபிடித்து அடையாளம் கண்டுகொள்ளுவதைவிட வேகமாக அவற்றை அழித்துக்கொண்டே வருகிறான். இது உங்களை இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகிறது: ‘ஏன் தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுகின்றன? இந்தப் போக்கை மாற்ற முடியுமா? அமேசான் மழைக்காட்டிற்கு நல்லதோர் எதிர்காலம் காத்திருக்கிறதா?’

[பக்கம் 8-ன் பெட்டி]

நிலவளம் பற்றிய கட்டுக்கதை

அமேசான் நிலம் வளமிக்கது என்ற கருத்து “உதறித்தள்ளுவதற்கு கடினமான ஒரு கட்டுக்கதை” என கவுன்டர்பார்ட் என்ற ஆங்கில பத்திரிகை குறிப்பிடுகிறது. 19-வது நூற்றாண்டில், நில ஆய்வாளரான அலெக்ஸான்டர் வோன் ஹம்போல்ட் அமேசானை “உலகின் தானியக் களஞ்சியம்” என விவரித்தார். அதேபோல், ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு ஐ.மா. ஜனாதிபதியான தியாடோர் ரூஸ்வெல்ட், அமேசான் நிலம் விவசாயத்திற்கு ஏற்றவாறு வளம்பெற்றிருப்பதை உணர்ந்தார். “அப்படிப்பட்ட வளம்கொழிக்கும் செழிப்பான நிலம் சும்மா கிடக்கும்படி விடக்கூடாது” என அவர் எழுதினார்.

உண்மையில், இவர்கள் நம்பிய விதமாகவே நம்பும் விவசாயி, ஓரிரண்டு வருடங்களுக்கு அந்நிலம் கணிசமான விளைச்சல் தருவதைக் காண்பார்; ஏனென்றால் எரிக்கப்பட்ட மரம் செடிகளின் சாம்பல் உரமாகின்றன. ஆனாலும் அதன் பிறகு அது தரிசு நிலமாகிறது. அந்தக் காட்டின் பசுமையான மரம் செடிகொடிகள் அதன் நிலம் வளமிக்கதென காட்டினாலும், உண்மையில் அக்காட்டின் பலவீனம் அந்த நிலம்தான். ஏன்?

அமேசான் ஆராய்ச்சிக்கான நாஷனல் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்தவரும் மழைக்காட்டின் நில நிபுணருமான டாக்டர் ஃப்லாவ்யூ ஜே. லூயிஸானோடு விழித்தெழு! நிருபர் பேசினார். இதோ அவர் சொன்ன குறிப்புகளில் சில:

‘மற்ற அநேக காட்டு நிலங்களைப்போல் அல்லாமல், அமேசான் நிலத்தின் பெரும் பகுதி அடிப்பகுதியிலிருக்கும் சிதைவுறும் பாறையிலிருந்து சத்துப் பொருட்களைப் பெறுவதில்லை, ஏனென்றால் மூலப் பாறையில் போஷாக்கு குறைவுள்ளதாய் இருக்கிறது, மேலும் மிகவும் ஆழத்தில் இருக்கிறது. அதற்கு மாறாக கசிவுக்கு உட்பட்ட அந்த நிலம் மேலிருந்து, அதாவது மழையிலிருந்தும் மேற்பரப்பிலுள்ள அழுகிய கரிமப்பொருட்களிலிருந்தும் சத்துப் பொருட்களைப் பெறுகிறது. எனினும், மழைத்துளிகள், கீழேவிழுந்த இலைகள் ஆகிய இரண்டுமே போஷாக்குள்ளவையாய் ஆவதற்கு உதவி தேவைப்படுகிறது. ஏன்?

‘மழைக் காட்டில் நேரடியாக விழும் மழைநீரில் எந்தச் சத்துப் பொருட்களும் இல்லை. எனினும், அது இலைகளில் விழுந்து அடிமரம்வரை ஒழுகும்போது இலைகள், கிளைகள், பாசி, கடற்பாசி, எறும்பு புத்துகள், தூசி ஆகியவற்றிலிருந்து சத்துப் பொருட்களைப் பெறுகிறது. அந்தத் தண்ணீர் நிலத்தில் கசியும்போது அது ஒரு நல்ல தாவர உணவாகிறது. இந்தத் திரவ சத்துப்பொருள் வெறுமனே சிற்றாறுகளில் கலந்துவிடாமலிருக்க, முதல் ஒருசில சென்டிமீட்டர் மேற்பரப்பு மண்ணில் பரவியிருக்கும் மெல்லிய வேர்களின் மூலம் அந்நிலம் சத்துப் பொருட்களை ஈர்த்துக்கொள்கிறது. பிறகு இந்த மழைநீர் சிற்றாறுகளில் போய்சேரும்போது காட்டு நிலத்தைக் காட்டிலும் குறைவான சத்துப் பொருட்களே இருக்கின்றன. ஆக அந்த வேர்கள் சத்துப் பொருட்களை நன்றாக ஈர்த்துக்கொண்டுவிட்டன என்பதற்கு ஆதாரமாக திகழ்கிறது. ஆகவே நீர் சிற்றாறுகளிலோ ஆறுகளிலோ கலப்பதற்குமுன் சத்துப் பொருட்கள் ஆழமான வேர்களுக்கு சென்றுவிடுகின்றன.

‘உணவளிக்கும் மற்றொன்று, கீழே விழும் இலைகள், குச்சிகள், பழங்கள் ஆகிய அழுகிய கரிமப் பொருட்கள் ஆகும். ஒவ்வொரு வருடமும் ஒரு ஹெக்டேர் [இரண்டரை ஏக்கர்] காட்டு நிலப்பரப்பில் சுமார் எட்டு டன் கரிமப் பொருட்கள் சேர்கின்றன. ஆனால் அழுகிய இந்தக் கரிமப் பொருட்கள் நிலத்தடியிலும் பின் செடிகளின் வேர்களுக்குள்ளும் எப்படிச் செல்கின்றன? கரையான்கள் இதற்கு உதவிபுரிகின்றன. அவை இலைகளை வட்டவடிவில் துண்டுகளாக வெட்டி நிலத்தடியிலுள்ள அவற்றின் புற்றுகளுக்கு எடுத்துச் செல்கின்றன. முக்கியமாக ஈர காலத்தில் அவை காட்டு நிலத்திலுள்ள அழுகிய கரிமப் பொருட்களில் 40 சதவீதத்தை ஆச்சரியமான விதத்தில் நிலத்தடிக்கு கொண்டுசெல்லும் சுறுசுறுப்பான கூட்டமாக செயல்படுகின்றன. அங்கே அவை பூஞ்சையை வளர்ப்பதற்கு தோட்டங்கள் உருவாக்க இந்த இலைகளைப் பயன்படுத்துகின்றன. இந்தப் பூஞ்சை அதன் பங்கில் தாவரத்தை அழுகச்செய்து செடிகளுக்குத் தேவையான சத்துப் பொருட்களான நைட்ரஜனையும் ஃபாஸ்ஃபரஸையும் கால்சியத்தையும் பிற தனிமங்களையும் வெளியேற்றுகிறது.

‘இதனால் அந்தக் கரையான்களுக்கு என்ன நன்மை? உணவு. அவை பூஞ்சைகளை சாப்பிட்டு இலைகளின் சில துண்டுகளையும் விழுங்கலாம். அடுத்தது, கரையான்களின் குடல்களிலுள்ள நுண்ணுயிர்கள், கரையான்களின் உணவை வேதி மாற்றம் செய்வதில் மும்முரமாக ஈடுபடுகின்றன. அதன் விளைவாக அந்தப் பூச்சியின் கழிவு ஊட்டச்சத்து நிறைந்த தாவர உணவாகிறது. ஆகவே மழையும் கரிமப் பொருட்களின் மறுசுழற்சியும்தான் மழைக்காடு தொடர்ந்து இருப்பதற்கும் வளருவதற்கும் உதவும் இரு காரியங்களாகும்.

‘நீங்கள் காட்டை முழுவதும் அழித்து எரித்துவிடும்போது என்ன நடக்கிறதென்பதைப் புரிந்துகொள்வது சுலபம். மழையை இடைமறிப்பதற்கு இனியும் அங்கு மரங்களின் மேற்பரப்பு இல்லை, மறுசுழற்சி செய்யப்படுவதற்கு இனியும் அங்கு அழுகிய கரிமப் பொருட்கள் இல்லை. அதற்கு மாறாக கன மழை கரிசல் நிலத்தில் நேரடியாக பலத்த விசையோடு விழுகிறது, அதனால் அந்த நிலம் கடினமாகிறது. அதேசமயத்தில், நிலத்தில் நேரடியாக படும் சூரியவொளி அந்த நிலப்பரப்பின் தட்பவெப்பத்தை அதிகரித்து நிலத்தை இறுகச்செய்கிறது. விளைவு என்னவென்றால், மழைநீர் நிலப்பரப்பில் ஓடி இவ்வாறு நிலத்திற்குள் செல்லாமல் ஆறுகளில் கலந்துவிடுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்ட நிலத்தில் ஊட்டச்சத்து அந்தளவுக்கு குறைவதனால் அந்தப் பகுதிகளுக்கருகில் உள்ள ஓடைகளில் ஊட்டச்சத்துகள் அளவுக்கதிகமாகி நீரில் வாழும் உயிரினங்கள் அழிந்துபோவதில் விளைவடைகிறது. சந்தேகமில்லாமல், சேதப்படுத்தப்படாத காடு தன்னைத்தானே பராமரித்துக்கொள்கிறது. ஆனால் மனிதனின் தலையீடுதானே பேரழிவை ஏற்படுத்துகிறது.’

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

மனிதரைக் கருத்தில்கொள்கையில்

சூழியல் அமைப்பைக் குலைப்பதும் காடுகளை அழிப்பதும் தாவரங்களுக்கும் மிருகங்களுக்கும் மாத்திரமல்ல ஆனால் மனிதர்களுக்கும்கூட தீங்கு விளைவிக்கின்றன. பிரேஸிலின் அமேசான் பகுதியில் முன்பு வாழ்ந்துவந்த 50,00,000 இந்தியர்களில் மீதியானோரான சுமார் 3,00,000 இந்தியர்கள், இன்னமும் தங்களது காட்டு சுற்றுச்சூழலோடு சேர்ந்து வாழ்கின்றனர். இந்த இந்தியர்களை “வளர்ச்சிக்கான இடைஞ்சல்கள்” என கருதும் மரம் வெட்டுவோரும், தங்கம் சுரண்டுவோரும், இன்னும் மற்றவர்களும் அவர்களை அதிகமாக தொந்தரவுபடுத்துகின்றனர்.

பின் வெள்ளைக்காரர்கள் மற்றும் இந்தியர்களது கலப்பினமான காபோக்லஸ் இருக்கின்றனர்; கட்டுறுதிவாய்ந்த இந்த மக்களின் முற்பிதாக்கள் சுமார் 100 வருடங்களுக்கு முன் அமேசானில் குடியேறினர். ஆறுகள் நெடுக கம்புகளின்மீது கட்டப்பட்ட வீடுகளில் தங்கியிருக்கும் காபோக்லஸ் இனத்தவர் “சூழியல் அமைப்பு” என்ற பதத்தையே ஒருபோதும் கேட்டிருக்கமாட்டார்கள், ஆனால் அவர்கள் காட்டை அழிக்காமலேயே அதிலிருந்து வாழ்வாதாரம் பெறுகின்றனர். இருந்தபோதிலும், அவர்களது அன்றாட பிழைப்பு அவர்களது வீடான காட்டினுள் புதிதாய் அலையலையாய் குடிபுகுந்துவருவோரால் பாதிக்கப்படுகிறது.

உண்மையில், அமேசான் மழைக்காடு முழுவதிலும், அக்காட்டின் இயற்கைச் சுழற்சிகளோடும் ஆறுகளின் நீர் ஏற்ற இறக்கங்களோடும் இணக்கமாக வாழ்ந்துவரும் கொட்டைகள் சேகரிப்போர், ரப்பர் வடிப்போர், மீன் பிடிப்போர், அவ்விடத்தில் குடியிருக்கும் மற்றோர் ஆகிய சுமார் 20,00,000 பேரின் எதிர்காலம் சூனியமாய் இருக்கிறது. காட்டைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், வெறுமனே ஒருவித வெப்பமண்டல (மஹோகனி) மரங்களையும் வெப்பமண்டல தாவரங்களை உண்டு வாழும் (மானாடீ) மிருகங்களையும் பாதுகாப்பதைவிட அதிகத்தை அர்த்தப்படுத்துகின்றன என்பதை அநேகர் நம்புகின்றனர். அவர்கள் காடுகளில் வசிக்கும் மனிதர்களையும் பாதுகாக்க வேண்டும்.

[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]

மரம்-மீன் தொடர்பு

மழைக்காலத்தின்போது அமேசான் ஆறு மேலெழும்பி, காடுகளின் பள்ளத்தில் வளரும் மரங்களை மூழ்கடித்துவிடுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இந்தக் காட்டு மரங்களில் பெரும்பான்மையானவை கனிகள் தந்து அவற்றின் விதைகளை கீழே விழச்செய்கின்றன—ஆனால் சந்தேகமில்லாமல் அவற்றை சிதறச்செய்வதற்கு கொறிவிலங்கினங்கள் அத்தண்ணீரில் இல்லை. கூரிய நுகரும் உணர்வைப் பெற்றிருக்கும் மிதக்கும் நட்கிராக்கர்போன்ற டாம்பாக்கி மீன் (Colonnonea macropomum) இங்கு அதன் கைவரிசையைக் காட்டுகிறது. மூழ்கியிருக்கும் மரங்களின் கிளைகளுக்கிடையே நீந்திச்சென்று விதைகளை உதிர்த்தும் தறுவாயில் இருக்கும் மரங்களை மோப்பம்பிடிக்கிறது இந்த மீன். விதைகள் தண்ணீருக்குள் விழும்போது, அந்த மீன் அதன் பலமுள்ள வாயினால் ஓடுகளை நொறுக்கி விதைகளை விழுங்கி, அவற்றைச் சுற்றியுள்ள சதைப்பற்றுள்ள பழத்தை ஜீரணிக்கிறது, பின் விதைகள் கழிவாக காட்டு நிலத்தில் விழுந்து, நீர் வற்றிய பிறகு முளைவிடுகின்றன. மீனும் மரமும் பயன்பெறுகின்றன. டாம்பாக்கி கொழுப்பை சேகரித்துக்கொள்கிறது, மரம் இனவிருத்தி செய்கிறது. அந்த மரங்களை வெட்டுவது டாம்பாக்கி மீனும் பழம்-உண்ணும் இனங்களைச் சேர்ந்த மற்ற 200 வகை மீன்களும் அழிந்துபோவதில் விளைவடையும்.

[பக்கம் 5-ன் படம்]

ஆண் மலர்களிலிருந்து பெண் மலர்களுக்கு வௌவால்கள் மகரந்தத்தை எடுத்துச்செல்கின்றன

Rogério Gribel

[பக்கம் 7-ன் படம்]

உங்களது செடிவளர்ப்பு இடமும் மருந்துக்கடையும்

[பக்கம் 7-ன் படம்]

நெருப்பு அந்தப் பசுமையான எல்லைப்புறத்தை அச்சுறுத்துகிறது

[படத்திற்கான நன்றி]

Philip M. Fearnside

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்