யெகோவாவின் சாட்சிகள்—கிரீஸில் அடைந்த வெற்றி
விழுத்தெழு! நிருபர்
கிரீட்டனிலுள்ள கேஸி என்னும் கிராமத்தில், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பாதிரி தன்னுடைய பிரசங்கத்தில் இவ்வாறு கூறினார்: “யெகோவாவின் சாட்சிகள், நம்ம கிராமத்திலேயே ஒரு மன்றத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை ஒழித்துக்கட்ட எனக்கு உங்களுடைய உதவி தேவை.” சில நாட்களுக்குப்பின், ஒரு மாலைவேளையில், அடையாளம் தெரியாத ஆட்களால், ராஜ்ய மன்ற ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன, மன்றத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கி தோட்டாக்கள் பறந்தன. இவ்வாறாக மத சுயாதீனத்தின் பேரில் மறுபடியும் சர்ச்சை எழுந்தது கிரீஸில்.
இந்தச் சம்பவங்களின் காரணமாக, உள்ளூரைச் சேர்ந்த நான்கு சாட்சிகள், கிரியாகோஸ் பாக்ஸேவானிஸ், வாஸிலிஸ் ஹாட்ஸாகிஸ், காஸ்டாஸ் மாக்ரிடாகிஸ், டிடாஸ் மானூஸாகிஸ் ஆகியோர் மத கூட்டங்களை நடத்த அனுமதி கோரி ஒரு மனுவை கல்வி மற்றும் மத நடவடிக்கைகளின் அமைச்சரிடம் சமர்ப்பித்தார்கள். அனுமதி கிடைத்தால், மெல்லமெல்ல போலீஸ் பந்தோபஸ்தையும் பெறமுடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபத்தில் கிடைக்கவில்லை.
இராக்லியன் என்னுமிடத்தில் அமைந்திருந்த பாதுகாப்பு போலீஸாரின் தலைமையகத்திற்கு அந்தப் பாதிரி ஒரு கடிதத்தை அனுப்பி, தன் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் அமைந்திருந்த ராஜ்ய மன்றத்திற்கு அதிகாரிகளுடைய கவனத்தைத் திருப்பினார். சாட்சிகளுடைய கூட்டங்களைத் தடைசெய்யும் விதத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி கோரினார். இவ்வாறாக போலீஸார் புலன் விசாரணை செய்வதற்கும், கேள்விக்கணைகளைத் தொடுப்பதற்கும் இது வழிவகுத்தது. கடைசியில், வழக்குத்தொடுத்தவர் சாட்சிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்கைப் போட்டுவிட்டார், வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அக்டோபர் 6, 1987-ல் இராக்லியன் குற்றவியல் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நான்கு பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து, இவ்வாறு கூறியது: “அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு அவர்கள் பொறுப்பில்லை, ஏனென்றால் மத அங்கத்தினர்கள் தாராளமாக தங்கள் கூட்டங்களை நடத்தலாம் . . . அதற்கு அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.” இருந்தபோதிலும், வழக்குத்தொடுத்தவர் இரண்டு நாட்களுக்குப்பின் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பிப்ரவரி 15, 1990-ல் இந்த நீதிமன்றம் சாட்சிகளுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனையும் சுமார் $100 அபராதமும் வழங்கியது. இந்த ஆணையை எதிர்த்து அந்த நான்குபேரும் கிரேக்க உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார்கள்.
மார்ச் 19, 1991-ல், உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை தள்ளுபடிசெய்து, கீழ் நீதிமன்றம் வழங்கிய குற்றத்தீர்ப்பை உறுதிசெய்தது. இரண்டு வருடங்களுக்குப்பின், செப்டம்பர் 20, 1993-ல், உச்ச நீதிமன்றம் தன் முடிவை அறிவித்தபோது, போலீஸார் ராஜ்ய மன்றத்திற்கு சீல் வைத்தார்கள். கிரீட்டின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுதான் இந்தச் செயலுக்குப் பின்னால் இருந்தது என்பதை போலீஸாரின் தஸ்தாவேஜு காட்டியது.
மத சுயாதீனத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, 1938-ல் போடப்பட்ட சில சட்டங்கள் கிரீஸில் இன்னும் நடைமுறையில் இருந்ததே இந்த நிலைமைக்கு காரணம். அச்சட்டங்கள் விதித்த நிபந்தனையின்படி, ஒரு தனி நபர் வழிபாட்டுக்காக ஓர் இடத்தை உபயோகிக்க விரும்பினால், அவர் கல்வி மற்றும் மத நடவடிக்கைகளின் அமைச்சரிடமிருந்தும், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் உள்ளூர் பிஷப்பிடமிருந்தும் அனுமதி பெறவேண்டும். காலம் கடந்துபோன அச்சட்டங்கள் பல பத்தாண்டுகளாகவே யெகோவாவின் சாட்சிகளுக்கு பல இடையூறுகளை கொண்டுவந்தன.
மத சுயாதீனமும் மனித உரிமைகளும்
தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்ததை அறிந்தபோது, அந்த நான்கு சாட்சிகளும் பிரான்ஸில், ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள மனித உரிமைகளின் ஐரோப்பிய கமிஷனுக்கு (European Commission of Human Rights) ஆகஸ்ட் 7, 1991-ல் ஒரு மனுவை சமர்ப்பித்தார்கள். எண்ணம், மனசாட்சி, மதம் ஆகியவற்றின் பேரில் ஒருவருக்கு இருக்கும் சுதந்திரத்தையும் அவர் விரும்பும் மதத்தையும் தனியாக அல்லது சமூகத்திலுள்ள மற்றவர்களோடு சேர்ந்து, பொது இடத்தில் அல்லது தனி இடத்தில் அப்பியாசிப்பதற்கு அவருக்கு இருக்கும் உரிமையையும் ஐரோப்பிய கமிஷனின் சட்டக்கூறு எண் 9 பாதுகாக்கிறது என்றும், தங்கள்மீது திணிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பால் இந்தச் சட்டக்கூறு மீறப்பட்டிருக்கிறது என்றும் மனுதாரர்கள் முறையிட்டார்கள்.
மே 25, 1995-ல், ஐரோப்பிய கமிஷனின் சட்டக்கூறு எண் 9-ஐ கிரீஸ் மீறிவிட்டது என்ற ஒருமனதான தீர்மானத்தை 25 அங்கத்தினர்களைக் கொண்ட கமிஷன் எடுத்தது. வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பு மத சுயாதீனத்தின் இயல்போடு ஒத்துப்போகவில்லை என்று அதன் தீர்ப்பு பற்றிய அறிக்கை கூறியது. அத்தகைய குற்றத்தீர்ப்பு ஜனநாயக சமுதாயத்திற்கு அவசியமில்லை என்றும் அது கூறியது. வழக்கின் ஏற்பு தன்மையைக் குறித்து இத்தீர்மானம் மேலும் குறிப்பிட்டதாவது: “இந்த மனுதாரர்கள் . . . ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தின் அங்கத்தினர்கள். அவர்களுடைய மத வழிபாட்டு முறைகளும் பழக்கவழக்கங்களும் பரவலாக அறியப்பட்டிருப்பவை. பல ஐரோப்பிய நாடுகளில் அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.” கடைசியில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை கமிஷன் அனுப்பிவைத்தது.
யெகோவாவின் சாட்சிகளைத் தடுத்து நிறுத்த முடியாது
1996, மே மாதம் 20-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதி மன்றத்தில் 200 பேருக்கு மேல் கூடியிருந்தார்கள். இவர்களில் உள்ளூர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகை நிருபர்கள்கள், கிரீஸ், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த அநேக யெகோவாவின் சாட்சிகள் என பலரும் அடங்கியிருந்தனர்.
தேசிய அதிகாரிகள் கடைப்பிடித்த கொள்கையும், அவர்கள் வழங்கிய தீர்ப்புகளும் ஐரோப்பிய கமிஷனை மாத்திரம் அல்ல, ஆனால் கிரீஸ் நாட்டின் அரசியலமைப்பையும்கூட மீறிவிட்டன என்று ஓய்வுபெற்ற பேராசிரியரும், சாட்சிகளின் வழக்கறிஞருமான மிஸ்டர் ஃபிதொன் விக்லரீஸ் உறுதிப்படுத்தினார். “ஆகவே, இது ஒரு தேசிய சட்டம்; அதன் செயலாக்கத்தை நீதிமன்றம் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.”
கிரேக்க அரசாங்கத்தின் வழக்கறிஞராக மாகாண கவுன்சிலை சேர்ந்த நீதிபதி இருந்தார். அவர் வழக்கின் உண்மைகளை விவாதிக்கவில்லை. அதற்கு பதிலாக, கிரீஸில் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு இருக்கும் செல்வாக்கையும், அது அரசாங்கத்துடனும் மக்களுடனும் கொண்டிருக்கும் நெருக்கத்தையும், மற்ற மதங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சர்ச்சு சொல்லும் நொண்டிச் சாக்கையும் அலசினார். மேலும் 1960-லிருந்து யெகோவாவின் சாட்சிகள் வெகுவாக எண்ணிக்கையில் பெருகுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். வேறு வார்த்தையில் சொல்லப்போனால் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் முழு உரிமையும் பறிபோய்விட்டது என்றாரா!
மத சுயாதீனம் நிலைநாட்டப்பட்டது
செப்டம்பர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருந்தது. எதிர்பார்ப்பின் பரபரப்பு எங்கும் காணப்பட்டது, யெகோவாவின் சாட்சிகளுக்கோ சொல்லவே வேண்டாம். சேம்பரின் பிரஸிடென்ட்டாக இருக்கும் மிஸ்டர் ரூடால்ஃப் பெரன்ஹார்டிட் தீர்ப்பை இவ்வாறு வாசித்தார்: ஐரோப்பிய கமிஷனின் சட்டக்கூறு எண் 9-ஐ கிரீஸ் மீறிவிட்டது என்ற ஒருமனதான தீர்ப்பை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழு வழங்கியது. மேலும், ஏற்பட்ட செலவை ஈடுசெய்ய சுமார் $17,000-ஐ மனுதாரர்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டது. அதிமுக்கியமாக, மத சுயாதீனத்திற்கு சாதகமான பல முக்கிய விவாதங்கள் அந்தத் தீர்ப்பில் அடங்கி இருந்தன.
“அரசியல், நிர்வாகம், மதம் ஆகிய துறைகளின் தலைவர்கள் அளவுக்கு அதிகமாக மத சுயாதீனத்தில் தலையிட” கிரேக்க சட்டம் அனுமதிப்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அந்த மாகாணம் மற்ற மதத்தினர் அனுமதி பெற எடுக்கும் நடவடிக்கையை “ஆர்த்தடாக்ஸ் அல்லாத சில இயக்கங்களுடைய, குறிப்பாக யெகோவாவின் சாட்சிகளுடைய மத நம்பிக்கைகளின் பேரில் கடுமையாக அல்லது தடைசெய்யும் நிபந்தனைகளை விதிக்க” ஓர் ஆயுதமாக பயன்படுத்தியது என்று அது கூறியது. இத்தனை வருடங்களாக ஆர்த்தடாக்ஸ் சர்ச் பயன்படுத்தி வந்த பயங்கரமான சூழ்ச்சி தந்திரங்களை இந்தச் சர்வதேச நீதிமன்றம் வெட்டவெளிச்சம் ஆக்கியது.
“மத நம்பிக்கைகள் அல்லது அந்த நம்பிக்கைகளை வெளிக்காட்டும் முறைகள் சட்டப்படி செல்லுபடி ஆகுமா ஆகாதா என்று தீர்மானம் செய்யும் கிரேக்க மாகாணத்தின் உரிமை, [ஐரோப்பிய] கமிஷனால் உறுதிசெய்யப்பட்ட மத சுயாதீன உரிமையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது” என்பதை அந்த நீதிமன்றம் வலியுறுத்தியது. அது மேலும் குறிப்பிட்டதாவது, “ ‘அறியப்பட்டுள்ள மதம்’ என்று கிரேக்க சட்டம் வறையறுக்கும் பட்டியலில் யெகோவாவின் சாட்சிகளுடைய மதமும் அடங்கியுள்ளது . . . மேலும் இதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.”
கிள்ளுக்கீரை என்று நினைக்காதீர்
அடுத்து சில நாட்களுக்கு, பெரும்பாலான பெரிய பெரிய கிரேக்க செய்தித்தாள்கள் அந்த வழக்கைப் பற்றி எழுதி தள்ளின. 1996, செப்டம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை அன்று வெளிவந்த காத்திமரினி இவ்வாறு சொன்னது: “ ‘கிள்ளுக்கீரையாக நினைத்து’ சும்மா ஏய்த்துவிடலாம் என்று கிரேக்க மாகாணம் எவ்வளவுதான் முயன்றாலும், ஒவ்வொரு முறையும் ‘அவமானத்தால் மூக்கை உடைத்துக்கொள்கிறது.’ ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றத்தில் அதற்கு விழுந்த அடியே அது மூக்கை உடைத்துக்கொண்டதற்கு உண்மையான சாட்சியம்; அதுவும் சர்வதேச அளவில் பதிவுசெய்யப்படவேண்டிய சாட்சியம். மனித உரிமைகள் கமிஷனின் சட்டக்கூறு எண் 9-ஐ மீறிவிட்டதை நீதிமன்றம் கிரீஸுக்கு ஞாபகப்படுத்தியது. அது ஒருமனதாக கிரேக்க சட்டத்தை கண்டனம் செய்தது.”
ஆதன்ஸின் செய்தித்தாள் இத்நாஸ், செப்டம்பர் 28, 1996-ல் இவ்வாறு எழுதியது, ஐரோப்பிய நீதிமன்றம் “கிரீஸை கண்டனம் செய்து, யெகோவாவின் சாட்சிகளாக இருந்ததன் ஒரே காரணத்திற்காக இடையூறுகளால் துன்பப்பட்ட அதன் குடிமக்களுக்கு நஷ்ட ஈட்டையும் வழங்கும்படி உத்தரவிட்டது.”
மனுதாரர்களுக்காக வழக்காடிய வழக்கறிஞர்களில் மிஸ்டர் பானஸ் பீட்ஸாகீஸ் என்பவரை ஒரு ரேடியோ நிகழ்ச்சிக்காக பேட்டி கண்டார்கள். அவர் கூறியதாவது: “நாம் 1996-ல், அதாவது 21-ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒரு காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்போதுபோய், மத சுயாதீனத்திற்கான அடிப்படை உரிமையை கடைப்பிடிப்பது பற்றி, நிர்வாகம் பாகுபாடு பார்ப்பது, தொந்தரசெய்வது, சம்பந்தம் இல்லாமல் மூக்கை நுழைப்பது போன்றவற்றை செய்யக்கூடாது என்பது ரொம்பவும் தெளிவாய் இருக்கிறது. . . . அரசாங்கம் தன் கொள்கையை மறுபரிசீலனை செய்வது நல்லது. இப்படி புத்திகெட்டு பாகுபாடு பார்ப்பதை நிறுத்தவேண்டும், அதுவும் இந்தக் காலத்தில் இப்படி நடந்துகொள்வது கொஞ்சம்கூட பொருத்தமில்லை.”
மானூஸாகிஸும் மற்றவர்களும் Vs. கிரீஸ் என்ற வழக்கின் தீர்ப்பு, ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்புக்கு இசைவாக கிரேக்க மாகாணம் தன்னுடைய சட்டத்தை மாற்றக்கூடும் என்ற எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. அப்படியென்றால், கிரீஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளால், நிர்வாகத்தின், போலீஸின் அல்லது சர்ச்சின் தலையீடில்லாமல் மத சுயாதீனத்தை அநேகமாக அனுபவிக்க முடியும். மேலும், இது மத சுயாதீன விவகாரத்தில் கிரேக்க நீதித்துறைக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய இரண்டாவது தீர்ப்பு. a
கடவுளுடைய வார்த்தையோடு முரண்படாத எல்லா விஷயங்களிலும், அரசாங்கத்தில் “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு” யெகோவாவின் சாட்சிகள் கீழ்ப்படிவது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. (ரோமர் 13:1, 7) அவர்கள் எந்தவிதத்திலும் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதில்லை. அதற்குமாறாக, எல்லாரையும் சட்டத்திற்கு பணிந்து செல்லும் குடிமகனாக இருக்கவும், அமைதியான வாழ்க்கை வாழவும் அவர்களுடைய பிரசுரங்களும், மக்களுக்கு அவர்கள் செய்யும் ஊழியமும் ஊக்குவிக்கின்றன. நேர்மையான, நன்கு நிலைநாட்டப்பட்ட மதத்தை சேர்ந்தவர்கள் அவர்கள். அதன் அங்கத்தினர்கள் தங்களுடைய அக்கம் பக்கத்தாரின் நலனுக்காக பாடுபடுகின்றனர். பைபிளின் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் காட்டும் உறுதி, விசேஷமாக பைபிளை போதிக்கும் வேலையில் அயலாருக்கு அவர்கள் காட்டும் அன்பு ஆகியவை அவர்கள் வாழும் 200-க்கும் மேற்பட்ட தேசங்களில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் கிரீஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கும் மற்ற சிறுபான்மையான மதத்தொகுதியினருக்கும் இன்னும் அதிக சுதந்திரம் கிடைக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[அடிக்குறிப்பு]
a முதல் தீர்ப்பு, கோக்கீனாக்கீஸ் Vs. கிரீஸ் என்ற வழக்கில், 1993-ல் வழங்கப்பட்டது.—காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கம் 27-ஐக் காண்க.
[பக்கம் 15-ன் படம்]
செப்டம்பர் 20, 1993-ல் போலீஸார் சீல் வைத்த முதல் ராஜ்ய மன்றம்
[பக்கம் 15-ன் படம்]
ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம்
[பக்கம் 16-ன் படம்]
வழக்கில் உட்பட்ட யெகோவாவின் சாட்சிகள்: டி. மானூஸாகிஸ், வா. ஹாட்ஸாகிஸ், கா. மாக்ரிடாகிஸ், கி. பாக்ஸேவானிஸ்