அமேசான் மழைக்காடு—கட்டுக்கதைகளின் போர்வையில்
பிரேஸிலிலுள்ள விழித்தெழு! நிருபர்
பெருவிலுள்ள நபோ நதி அருகே வாழ்ந்த இரிமாரை இந்தியர்களால் தங்கள் சொந்தக் கண்களையே நம்ப முடியவில்லை! அவர்கள் சொந்தமாக வைத்திருந்த சிறு படகுகளிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்ட இரண்டு பாய்மரக்கப்பல்கள் அவர்களது கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தன. தாடி வைத்திருந்த வீரர்கள் அந்தக் கப்பல்களில் இருந்தது அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது—அதுவரை அப்படிப்பட்ட வித்தியாசமான இனத்தவரை அவர்கள் பார்த்ததேயில்லை. குழம்பிப்போன இந்தியர்கள், ஒளிந்துகொள்வதற்கான இடத்துக்காக அலைமோதினர்; அதுமட்டுமா, வெள்ளைக்கார அந்நியர்கள் கரையில் குதித்ததையும் கிராமத்தின் உணவுப் பண்டங்களைப் பேராசையோடு வாரி வாரி விழுங்கியதையும் பின்னர் மீண்டும் கப்பலில் ஏறி அங்கிருந்து சென்றதையும் அவர்கள் கண்டு பேந்தப்பேந்த விழித்தனர். ஆண்டிஸ் மலைத்தொடரிலிருந்து அட்லான்டிக் பெருங்கடல் வரை அந்த முழு மழைக்காட்டைச் சுற்றியும் கடும் முயற்சியோடு முதன்முதலில் பயணம் செய்து சாதனை புரிந்ததற்காக புகழ் கிடைக்கும் என்ற எண்ணத்தால் தூண்டப்பட்டு அந்த அந்நியர்கள் அவ்வாறு செய்தனர்.
அந்த ஆண்டான 1542-ல், குறுக்கு வில்களோடும் துப்பாக்கிகளோடும் காணப்பட்ட அந்த ஐரோப்பிய ஆய்வுப் பிரயாணிகள் தென் அமெரிக்க மழைக்காடுகளின் உட்பகுதிகளுக்கு படையெடுத்து செல்லச்செல்ல அப்பகுதிகளிலிருந்த இந்திய இனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இதே விதமாய் அதிர்ச்சிக்குள்ளாயின.
அந்த வெற்றி வீரர்களுக்குப் பொறுப்பாளராயிருந்த ஸ்பானிய கப்பல் தளபதியான ஃப்ரான்ஸிஸ்கோ டெ ஓரெயானா, அவரது படையினர் நடத்திய கொள்ளையையும் துப்பாக்கிச்சூட்டையும் பற்றிய செய்தி அவர்களது இரு பாய்மரக்கப்பல்களைக் காட்டிலும் வேகமாக பயணம் செய்துவிட்டதை விரைவில் அறியவந்தார். இன்னும் சற்று தூரத்திலிருந்த (இன்று பிரேஸிலிலுள்ள மனாஸ் நகரத்திற்கு அருகிலுள்ள இடத்திலிருந்த) இந்திய இனத்தினர், படையெடுத்துவரும் 50-க்கும் அதிகமானோரைத் தாக்குவதற்கு தங்கள் அம்புகளுடன் தயாராக காத்துக்கொண்டிருந்தனர்.
அந்த இந்தியர்கள் அம்பு எய்வதில் அசுரர்களாக இருந்தனர் என்பதாக அந்தப் பயணக் குழுவின் அங்கத்தினரான காஸ்பார் டெ கார்வாச்சால் ஒப்புக்கொண்டார். அவர் தன் சொந்த அனுபவத்தை வைத்தே அதைச் சொன்னார், ஏனென்றால் இந்தியரது அம்பு ஒன்று அவரது விலா எலும்புகளைத் துளைத்திருந்தது. “எனது உடுப்பு மாத்திரம் கெட்டியாக இருந்திருக்காவிட்டால் நான் ஒரேயடியாக போய் சேர்ந்திருப்பேன்,” என எழுதினார் காயமடைந்த அந்தச் சமயத் துறவி.
‘பத்து ஆண்களுக்குச் சமமாக சண்டையிடும் பெண்கள்’
அந்தத் தைரியமான இந்தியர்களைப் பின்னிருந்து ஊக்குவித்தது யாரென்பதை கார்வாச்சால் விளக்க ஆரம்பித்தார். ‘பெண்கள் ஆண்களுக்கு முன்னால் தலைவிகளாக நின்று சண்டைபோட்டதை நாங்கள் பார்த்தோம். இந்தப் பெண்கள் வெள்ளைக்காரிகள், நெட்டையானவர்கள், நீண்ட முடியைப் பின்னி கொண்டை போட்டிருந்தனர். அவர்கள் திடகாத்திரமானவர்கள், கைகளில் வில்லுகளையும் அம்புகளையும் வைத்துக்கொண்டு பத்து ஆண்களுக்குச் சமமாக சண்டைபோடுகிறார்கள்.’
பயணிகள் அந்தப் பெண் வீராங்கனைகளைப் பார்த்தது உண்மையா, அல்லது ஒரு புத்தகம் சொல்கிறபடி, “மலைக்காய்ச்சலால் ஏற்பட்ட வெறும் சித்தபிரமையா” என்பது தெரியவில்லை. ஆனால் சில பதிவுகளின்படி, அந்த மிகப் பெரிய நதி சங்கமமாகும் இடத்திற்கு ஓரெயானாவும் கார்வாச்சாலும் போய்சேர்ந்து அங்கிருந்து அட்லான்டிக் பெருங்கடலுக்கு பயணப்பட்டுச்சென்ற அந்தச் சமயத்திற்குள், அமெரிக்க வடிவில் அமேசானியர்களைப் பார்த்ததாக அவர்கள் நம்பினார்கள்; அமேசானியர்கள், கிரேக்க கட்டுக்கதைகளில் மூர்க்கமான வீராங்கனைகளாக விவரிக்கப்பட்டிருக்கின்றனர். a
சமயத் துறவியான கார்வாச்சால், ஓரெயானாவின் எட்டு மாதச் சுற்றுப்பயணத்தைப் பற்றி எழுதிய கண்கண்ட சாட்சிப் பதிவில் இந்த அமெரிக்க அமேசானியர்களைப் பற்றிய கதையை சேர்த்திருப்பதன் மூலம் எதிர்கால சந்ததியாருக்கு அதைப் பாதுகாத்தார். தளபதி ஓரெயானா, தனது பங்கில், ஸ்பெய்னுக்கு சென்று ரியோ டெ லாஸ் ஆமாசோனாஸ் என அவர் அழைத்த அமேசான் ஆறு நெடுக தான் மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய தெளிவான விவரப்பதிவை அளித்தார். விரைவில், 16-ம் நூற்றாண்டில் நிலப்படம் வரைந்தோர், அப்போதுதானே அரும்பிவந்த தென் அமெரிக்க நிலப்படத்தில் அமேசான் என்ற புதிய பெயரைத் தீட்டினார்கள். ஆக, கட்டுக்கதைகளின் போர்வையில் இருந்த அமேசான் காடு இப்போதோ அப்போர்வை நீங்கிய அதன் உண்மைநிலையில் நம்மைக் கலங்க வைக்கிறது.
[அடிக்குறிப்பு]
a “அமேசான்” என்ற வார்த்தை, “இல்லாத” என அர்த்தப்படுத்தும் அ (a) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தும், “மார்பகம்” என அர்த்தப்படுத்தும் மேசோஸ் (ma·zosʹ) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கிறது. புராணங்களின்படி, வில்லையும் அம்பையும் இன்னும் சுலபமாக கையாளுவதற்கு அமேசானியர்கள் வலது மார்பகத்தை அறுத்து எடுத்துவிட்டனர்.
[பக்கம் 3 படத்திற்கான நன்றி]
மேலுள்ள பின்னணிப் படம்: The Complete Encyclopedia of Illustration/J.