“இயற்கைப் படுகொலை”
அயர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
பேராசை உங்கள் வசிப்பிடத்தை அச்சுறுத்துகிறது. பிழைப்பதற்கு நம் எல்லாருக்கும் தேவைப்படும் உணவையும் இருப்பிடத்தையும் அளிக்க பூமிக்கிருக்கும் திறனை அது பலவீனப்படுத்துகிறது. பேராசை எந்தளவுக்கு பூமியை நாசமாக்குகிறது என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் இதோ, நினைவூட்டும் சில குறிப்புகள்.
கிரகத்தைப் பாழாக்குதல்
1962-ல், உயிர்க்கொல்லிகளாலும் விஷக் கழிவுகளாலும் பூமியைப் பாழாக்குவதைக் குறித்து சைலன்ட் ஸ்பிரிங் என்ற புத்தகத்தில் ரேச்சல் கார்சன் என்பவர் எச்சரித்தார். “மனிதவர்க்கமே அதன் சுற்றுச்சூழலைப் பாழாக்கியது; சொந்த வீட்டையே குப்பைமேடாக்கியது; இது உயிரினங்கள் அழிந்துபோவதற்கு அறிகுறி” என த நேக்கட் சேவேஜ் என்ற புத்தகம் சொல்கிறது. இன்னும் மனிதர்கள் பேராசையோடு கிரகத்தை நாசமாக்கிவருகிறார்கள். “மிகக் குறைந்த நேரத்தில் மிகப் பெரிய லாபத்தைப் பெற, பெருமளவில் சாகுபடி செய்வோர், நிலத்தையும் தண்ணீரையும் இரசாயனங்களையும் அளவுக்கதிகமாக பயன்படுத்த விரும்புகின்றனர்; அவ்வாறு செய்வது நிலத்தை அரித்து, நிலத்தடி நீரை வற்றச்செய்து, சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை,” என்பதாக உலகப் பசி: பன்னிரண்டு கட்டுக்கதைகள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.
உலகிலுள்ள மதிப்புமிக்க மழைக்காடுகள், பூமி நிலைத்திருப்பதற்கு அத்தியாவசியமானவை; அவற்றைப் பாதுகாப்பதற்குப் பதிலாக முன்னொருபோதும் இல்லாத வேகத்தில் மனிதர் அவற்றை அழித்துவருகின்றனர். “இந்தச் சுரண்டல் இதே வேகத்தில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த ஐம்பது வருடங்களுக்குள்ளாக எல்லா செழுமையான வெப்பமண்டலக் காடுகளும் மறைந்துவிடும்,” என்பதாக பரதீஸுக்கு வெகு தூரத்தில்—சுற்றுச்சூழலின்பேரில் மனிதனின் பாதிப்பைப் பற்றிய பதிவு (1986), என்ற ஆங்கில புத்தகத்தின் எழுத்தாளர்கள் சொல்கிறார்கள்.
பவழப் பாறைகளைச் சுற்றி மீன்களைப் பிடிப்பதற்காக மதியற்ற மீனவர்கள் வெடியையோ இரசாயன விஷங்களையோ பயன்படுத்துகின்றனர். பவழப் பாறைகள் ஏராளமான உயிரினங்களுக்கு இடமளிப்பதால் “வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு ஈடான கடல் பிராணிகள்” என்பதாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற கொடூரமான மீன் பிடிக்கும் முறைகளும் புத்தியில்லாமல் இரசாயனத்தால் தூய்மைக்கெடுப்பதும் உயிருள்ள பவழங்கள் அநேகத்தை “பேரளவில் அழித்திருக்கின்றன.”—தி டோரன்டோ ஸ்டார்.
“நம் வினையாலேயே நம்மைச் சுட்டுக்கொள்கிறோம்”
1991-லிருந்து 1993 வரை IUCN-உலக இயற்கை வளவாய்ப்பு பாதுகாப்பு யூனியனின் பிரஸிடென்ட்டாக இருந்த ஷிரிடாத் ராம்ஃபால், பூமியின் வளங்களை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை “இயற்கைப் படுகொலை” என்பதாக விவரிக்கிறார். அது உண்மையில் எந்தளவுக்கு மோசமாயிருக்கிறது? ஒரு உதாரணத்தைச் சொல்லி ராம்ஃபால் இவ்வாறு எழுதுகிறார்: “பெருவாரியான இந்திய ஆறுகள், வெறுமனே நகர்ப்புறங்களிலிருந்தும் கிராமப்புறங்களிலிருந்தும் வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை கடலுக்குள் கலக்கும் திறந்தவெளி சாக்கடைகள்தான்.” அவர் முடிவாக சொல்வதென்ன? “நம் வினையாலேயே நம்மைச் சுட்டுக்கொள்கிறோம்.”
பேராசையானது பல நூற்றாண்டுகளாக மனித சரித்திரத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, ஆனால் இந்தக் கிரகம் நிலைத்திருப்பதானது இன்று அதிகளவில் அச்சுறுத்தப்படுகிறது. ஏன்? ஏனெனில் அழிப்பதற்கு மனிதனுக்கிருக்கும் திறன் இப்போது வெகுவாக அதிகரித்திருக்கிறது. “கடந்த ஐம்பது ஆண்டுகளில்தான், நமது கிரகத்திலுள்ள மற்ற உயிரினங்களை திறம்பட அழிப்பதற்கு தேவையான இரசாயனங்களையும் இயந்திரங்களையும் நாம் பெற்றிருக்கிறோம். . . . ஹோமோ சேபியன்ஸ் [லத்தீனில், புத்தியுள்ள மனிதன்] என்று தன்னையே கர்வத்தோடு அழைத்துக்கொள்ளும் மனிதன், கிட்டத்தட்ட முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டு எந்தவொரு கட்டுப்பாட்டுடனும் இருக்க தவறிவிட்டான்,” என்பதாக பரதீஸுக்கு வெகு தூரத்தில் புத்தகம் சொல்கிறது. சமீபத்தில் க்ரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு இவ்வாறு கடுமையாக குற்றஞ்சாட்டியது: “நவீன நாளைய மனிதன் பரதீஸை [பூமியை] குப்பைக்கூளமாக்கி இருக்கிறான் . . . இப்போதோ உயிர்வாழ்வதற்கான இந்த இடம் . . . அழிந்துபோகிற இந்தத் தறுவாயிலில் . . . ஒன்றும்தெரியாத பாப்பாவைப்போல் நின்றுகொண்டிருக்கிறான்.”
இந்தக் கிரகத்தின் நீண்ட-நாளைய எதிர்பார்ப்புகளை மாத்திரம் பேராசை அச்சுறுத்துவதில்லை. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தினருடைய இப்போதைய சந்தோஷத்தையும் பாதுகாப்பையும்கூட அது அச்சுறுத்துகிறது. ஏன் இப்படிச் சொல்லலாம்? அடுத்த கட்டுரையை வாசியுங்கள்.