உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 9/8 பக். 26-27
  • பைபிளின் கருத்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிளின் கருத்து
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அது கடவுளுடைய பெயரை மேன்மைப்படுத்துகிறது
  • அது சபையை பாதுகாக்கிறது
  • தனிப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பு
  • கடவுளிடம் திரும்புங்கள்
  • சபைநீக்கம் செய்வது ஒரு அன்பான செயல் என்று எப்படி சொல்கிறோம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • சமாதான பலனைத் தரக்கூடிய சிட்சை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • யெகோவாவின் சிட்சையை எப்போதும் ஏற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • சபைநீக்கம்செய்தல் ஓர் அன்பான ஏற்பாடா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 9/8 பக். 26-27

பைபிளின் கருத்து

சபைநீக்கம் செய்வது ஏன் அன்பான ஓர் ஏற்பாடு

தள்ளிவைத்தல் என்ற எண்ணம்தானே மதப்பற்றுள்ள அநேக மக்களுக்கிடையே பலதரப்பட்ட உணர்ச்சிகளை தூண்டுகிறது. a மதங்களுக்கு ஏதோவொரு வகையான சிட்சை அவசியம் என்பதை பெரும்பாலான மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அநேகர் தள்ளிவைத்தலை பழங்காலத்திய பழக்கமாக—ஐயுறவு வேட்டைகளையும் (witch-hunts) கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையையும் ஞாபகப்படுத்தும் கடுமையான பாணியில் அமைந்த சிட்சையாக—கருதுகிறார்கள்.

சமயச் சார்பற்ற உலகத்தின் எங்கும் நிரம்பியுள்ள செல்வாக்கு, பிரச்சினையை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு, பெரும்பாலான கிறிஸ்தவமண்டல மதங்கள், பாவத்தை அதிகமாக சகித்துக்கொள்ளும் மனநிலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால், எபிஸ்கோப்பேலியன் ஊழியர் ஒருவர் இவ்வாறு சொன்னது ஆச்சரியமல்லவே: “தள்ளிவைத்தல் என்பது எங்கள் பாரம்பரியத்தின் ஒரு பாகம், ஆனால் இந்த நூற்றாண்டில் அது அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.”

எனினும், யெகோவாவின் சாட்சிகளுக்கிடையே சபைநீக்கம் (தள்ளிவைத்தலுக்கு இணையானது) முக்கியமானதாக கருதப்படுகிறது என்பதை கற்றுக்கொள்வதில் அநேக ஜனங்கள் ஒருவேளை ஆச்சரியமடையலாம். அது ஒரு சுலபமான நடவடிக்கை அல்ல என்பது உண்மைதான், ஆனால் அது ஓர் அன்பான ஏற்பாடு. அதெப்படி?

அது கடவுளுடைய பெயரை மேன்மைப்படுத்துகிறது

யெகோவா பரிசுத்தமான கடவுள். தம்மை வணங்குவதாக சொல்லிக்கொள்பவர்களால் வேண்டுமென்றே செய்யப்படும் பாவத்தை அவர் பொறுத்துக்கொள்வதில்லை. அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.” (1 பேதுரு 1:15, 16) ஆகவே மனந்திரும்பாத பாவிகளை சபைநீக்கம் செய்வது கடவுளுடைய பரிசுத்த பெயரை மேன்மைப்படுத்துகிறது; அது அந்தப் பெயரின்பேரில் அன்பைக் காண்பிக்கிறது.—எபிரெயர் 6:10-ஐ ஒப்பிடுக.

ஒரு கிறிஸ்தவர் பலவீனத்தோடு இணங்கிச் சென்றுவிட்டாலோ அல்லது வினைமையான பாவத்திற்குள் இடறிவிழுந்தாலோ, இயல்பாகவே சபையிலிருந்து நீக்கப்படுவார் என்பதை இது அர்த்தப்படுத்துமா? நிச்சயமாகவே இல்லை! யெகோவா இரக்கமற்ற சர்வாதிகாரர் அல்ல. அவர் இரக்கமுள்ளவர், புரிந்துகொள்பவர். நாம் அபூரணர் என்பதை அவர் நினைவுகூருகிறார். (சங்கீதம் 103:14) “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறோம் என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். (ரோமர் 3:23) ஒரு கிறிஸ்தவர் “குற்றத்தில் அகப்பட்டால்” அல்லது ஒரு வினைமையான பாவத்தை செய்தால்கூட, சாந்தமுள்ள ஆவியோடே அவர் அன்பாக ‘சீர்பொருந்தப்படுவதற்கு’ சபைக்குள் ஆவிக்குரிய உதவியைப் பெறுவதற்கான ஏற்பாட்டை கடவுள் செய்துள்ளார். (கலாத்தியர் 6:1) கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆலோசனையை ஏற்றுக்கொள்வதன் மூலமும் இருதயப்பூர்வமான துயரத்தையும் உண்மையான மனந்திரும்புதலையும் வெளிக்காட்டுவதன் மூலமும், நீதியின் வழியிலிருந்து விலகிச்சென்றிருக்கும் ஒருவர் ஆவிக்குரிய விதமாக ‘சொஸ்தமடைய’ முடியும்.—யாக்கோபு 5:13-16.

எனினும், முழுக்காட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவர் வினைமையான தவறை செய்திருந்து, அவரை சீர்பொருந்தப்பண்ணுவதற்கான எல்லா முயற்சிகளும் வெற்றியடையாமல் போனால் என்ன செய்வது? வேறு விதமாகச் சொன்னால், அவர் தனது பாவத்திற்குரிய போக்கை சரிப்படுத்திக்கொள்ள பிடிவாதமாக மறுத்துவிட்டால் அப்போது என்ன?

அது சபையை பாதுகாக்கிறது

பைபிள் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகிறது: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.”—1 கொரிந்தியர் 5:11.

இந்த பைபிள் கட்டளை கடுமையானதாகவும் இழிவானதாகவும் இருக்கிறதா? இதைச் சிந்தித்துப் பாருங்கள்: சட்டத்தை மீறியதற்காக கல்நெஞ்சமுள்ள ஒரு குற்றவாளி சிறைக்கு அனுப்பப்படும்போது, அது கடுமையானதாகவோ இரக்கமற்றதாகவோ கருதப்படுகிறதா? இல்லை, ஏனெனில் சமுதாயத்தின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக்கொள்வதற்கு பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது. செயல்முறையளவில், தன் சிறைவாச காலப்பகுதியின்போது அந்தக் குற்றவாளி சட்டத்தைப் பின்பற்றும் சமுதாயத்திலிருந்து நீக்கப்படுகிறான்.

அதேவிதமாக, மனந்திரும்பாத குற்றவாளிகளை தன் நடுவேயிருந்து வெளியேற்றுவதில் கிறிஸ்தவ சபையும் நியாயப்படுத்தப்படுகிறது. ஏன்? ஏனெனில், ஒழுக்கக்கேடான நாசக்காரர்களும் பாவத்தை வேண்டுமென்றே பழக்கமாக செய்துவரும் மற்றவர்களும் இல்லாத ஒரு புகலிடமாக சபை இருக்க வேண்டும்.

“பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்” என்பதை உணர்ந்தவராக, அப்போஸ்தலனாகிய பவுல் உடன்விசுவாசிகளுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.” (பிரசங்கி 9:18; 1 கொரிந்தியர் 5:13) இந்தச் செயல், பாவி சபையில் சீர்கேட்டை பரப்புவதிலிருந்து தடுத்து, சபையின் நல்ல பெயரைப் பாதுகாக்கிறது.—1 தீமோத்தேயு 3:15-ஐ ஒப்பிடுக.

தனிப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பு

சபைநீக்கம் செய்வது சபையிலுள்ள தனிப்பட்ட அங்கத்தினர்களையும் பாதுகாக்கிறது. உதாரணத்தோடு நாம் இவ்வாறு விளக்கலாம்: கார் ஹாரன் அல்லது கார் அலாரத்தின் பேரிரைச்சலினால் தூக்கத்திலிருந்து எழுவதை கற்பனை செய்துபாருங்கள். காதைத் துளைக்கும் சப்தம் புறக்கணிக்கப்பட முடியாதது; உண்மையில், அது உங்களை திடுக்கிடச் செய்கிறது! அதே விதமாக, சபையிலிருந்து எவராவது நீக்கப்படும்போது, அந்த நடவடிக்கை மந்தையின் ஒவ்வொரு அங்கத்தினருடைய கவனத்தையும் ஈர்த்துப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது அவர்களது உணர்ச்சிகளை கலக்குகிறது. அது புறக்கணிக்கப்பட முடியாது. இது எவ்வாறு ஒரு பாதுகாப்பாக இருக்கலாம்?

“எவரோ ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்பதை முதன்முதலில் ராஜ்ய மன்றத்தில் கேட்டபோது, என் முதல் பிரதிபலிப்பு அதிர்ச்சியாக இருந்தது,” என்பதாக ஒரு சாட்சி சொன்னார். “பின்பு அது என்னை மனத்தாழ்மையடையச் செய்தது. நானும்கூட விழுந்துவிடலாம் என்பதை நான் உணரும்படிச் செய்தது.” அவரது வார்த்தைகள் காண்பிக்கும் விதமாக, சபைநீக்கம், மற்றவர்கள் தங்களது நடத்தையை மதிப்பிட தூண்டுவிக்கும்.—1 கொரிந்தியர் 10:12.

‘என் வாழ்க்கையில் நான் ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாக இருக்கும் சில அம்சங்கள் ஏதாவது இருக்கின்றனவா?’ போன்ற கேள்விகளை நம்மைநாமே கேட்டுக்கொள்வதன் மூலம் கடவுளோடுள்ள நமது நிலைநிற்கையை நாம் ஆராய்ந்து பார்க்க உதவப்படுவோம். இந்த முறையில், நாம் தொடர்ந்து ‘அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவோம்.’—பிலிப்பியர் 2:12.

கடவுளிடம் திரும்புங்கள்

“கடுமையாக இருந்தாலும், அந்த சிட்சை அவசியமானதாகவும் அதிகம் தேவைப்படுவதாகவும் இருந்தது; உயிரைக் காக்கக்கூடியதாகவும் இருந்தது” என்பதாக ஒரு சமயத்தில் சபைநீக்கம் செய்யப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பெண் சொன்னாள். இது சபைநீக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சத்தை சிறப்பித்துக் காண்பிக்கிறது. முன்பு மனந்திரும்பாத பாவிகள் மீண்டும் கடவுளிடம் திரும்புவதற்கான முதல் நடவடிக்கையை எடுக்க அது அவர்களைத் தூண்டும்.

‘கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை சிட்சிக்கிறார்’ என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (எபிரெயர் 12:6) “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்” என்பது உண்மையாயிருந்தாலும், “பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”—எபிரெயர் 12:11.

அதுதான் ரிச்சர்டுக்கு நடந்தது. சபைநீக்கம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவர் மனந்திரும்பி, கடவுளை அவமதிக்கும் நடத்தையை சரிப்படுத்திக்கொண்டார்; மீண்டும் கிறிஸ்தவ சபைக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கடந்த காலத்தை எண்ணிப்பார்த்து, இவ்வாறு தன் அனுபவத்தைச் சொல்கிறார்: “நான் சபைநீக்கம் செய்யப்பட வேண்டுமென்றும் அது முழுமையாகவே எனக்கு தகுந்த ஒன்று என்றும் நான் உணர்ந்தேன். அது உண்மையிலேயே தேவையானதாக இருந்தது; என் போக்கு எவ்வளவு வினைமையானது என்பதையும் யெகோவாவின் மன்னிப்பை நாடவேண்டிய தேவையையும் உணர அது எனக்கு உதவியது.”

சிட்சை சகித்துக்கொள்வதற்கு சுலபமானதாக இல்லாமலிருக்கலாம். அதை ஏற்றுக்கொள்வதற்கு மனத்தாழ்மை தேவைப்படுகிறது, ஆனால் அதிலிருந்து கற்றுக்கொள்கிறவர்கள் அளவுகடந்த பலனை அறுவடை செய்வார்கள்.

ஆகவே, சபைநீக்கம் செய்வது கடவுளுடைய பரிசுத்த பெயரை மேன்மைப்படுத்துவதாலும் பாவத்தின் சீரழிவுண்டாக்கும் செல்வாக்கிலிருந்து சபையை பாதுகாப்பதாலும் ஓர் அன்பான ஏற்பாடாக இருக்கிறது. மேலும், குற்றவாளி மனந்திரும்புவதற்கும் ‘கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கு, . . . [தனது] பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு மனந்திரும்பிக் குணப்படுவதற்கும்’ உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர் மீது அன்பை வெளிக்காட்டுவதாய் உள்ளது.—அப்போஸ்தலர் 3:20.

[அடிக்குறிப்பு]

a தள்ளிவைத்தல் என்பது ஒரு மதத்தின் அங்கத்தினராக இருப்பதிலிருந்து நீக்கப்படுவதில் விளைவடையும் ஒழுங்கு நடவடிக்கையாகும்.

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

The New Testament: A Pictorial Archive from Nineteenth-Century Sources, by Don Rice/Dover Publications, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்